Advertisement

அத்தியாயம் 3
யுவன் வெட்ஸ் பூங்கோதை என்ற பெரிய பேனர் அந்த கல்யாண மண்டபத்தின் வாசலில் கம்பீரமாக நின்றிருக்க வந்தோரை வரவேற்றுக்கொண்டிருந்தார் கண்ணபிரான். கூடவே! வசந்தும் நின்றிருக்க, தனது மகன் என்ற அறிமுகம் வேறு வருவோருக்கு செய்யப்பட வசந்த் புன்னகை முகமாக நின்றிருந்தான்.
மண்டபத்தில் கூட்டம் நிறைந்து வழிந்தது. கண்ணபிரானின் மற்றும் கயந்திகாவின் சொந்தபந்தங்கள் மற்றுமன்றி அபரஞ்சிதாவின் சொந்தங்கள் என்று சொந்தபந்தங்களும், கண்ணபிரானின் மற்றும் யுவனின் தொழில் சார்ந்தவர்களும் மண்டபத்தில் கூடி இருக்க, யுவன் மணமேடையில் அமர்ந்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவன் அருகில் நின்னிருந்த கயந்திகாவும் ராதையும் கூட இன்முகமாகத்தான் நின்றிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யுவன். அறையில் அடைத்த உடன் அக்காவின் மேல் பாய்ந்திருந்தான் யுவன்
“அறிவிருக்கா உனக்கு. காரியத்தையே! கெடுத்திடுவ போல இருக்கே! இந்த கல்யாணமே! எதுக்கு நடக்குதுன்னு மறந்து போச்சா? சொத்து வேணாமா?  கல்யாணம் நடந்தா தானே! சொத்தை எழுதி வாங்க முடியும். பாதி சொத்தையும் தூக்கிக் கொடுத்துட்டு நிக்க போறியா? எபோலா இருந்து புருஷன் மேல பாசம் பிச்சிட்டு வந்தது? புருஷன ஒழுங்கா கவனிச்சிருந்தா அந்தாளு எதுக்கு இன்னொரு பொம்பளைய தேடி போகப்போறான்”
“மாமா…” ராதை கத்த
“என்ன டி மாமா… நிச்சயதார்தத்துக்கு இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து நீயும் பார்த்துகிட்டு தானே! இருக்க? உங்கப்பாக்கு வேர்த்தாலும் அந்தம்மா எப்படி துடிக்கிறாங்கனு. என்னமோ! உங்கப்பா ஏசியிலையே! பொறந்து வளர்ந்தா மாதிரி. ஒருநாளாவது உங்கம்மா உங்கப்பாவுக்கு சாப்பாடு பரிமாறி நீ பாத்திருக்கியா? உங்கப்பாவோட பேவரிட் டிஸ் என்னனு கூட உங்கம்மாக்கு தெரியாது. பெத்த பொண்ணு நீ உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்னு கூட உங்கம்மாக்கு தெரியல, புருஷனுக்கு உடம்பு முடியலைன்னா எந்த மாதிரியான சாப்பாடு கொடுக்கணும்னு கூட தெரியல. உங்க அப்பாவும் சமையல்காரம்மா சமைக்கிறத சாப்பிட்டுட்டு போறாரு. உங்கப்பாக்கு தக்காளி சாப்பிட்டா அலர்ஜி ஆகும்னு நமக்கு தெரியுமா? அந்தம்மா இன்னக்கி சொல்லித்தானே! தெரியுது? இது எல்லாம் உங்கம்மா தெரிஞ்சி வச்சிருந்தா உங்கப்பா எதுக்கு இன்னொரு பொம்பள….” என்றவன் ராதையின் அதிர்ந்த முகம் கண்டு பேச்சை பாதியிலையே! நிறுத்தி “சரி அத விடு சொத்து வேணாமா? வேணுமா? அப்படியே விட்டுடலாமா? ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. வந்ததுக்கு அப்பொறம் எனக்கு கால் பண்ணுங்க” என்றவன் கதைவடைத்து சென்று விட்டான்.
யுவன் பேசியதெல்லாம் கயந்திகாவின் மண்டைக்குள் ஏறவில்லை. அவள் எண்ணமெல்லாம் கோதை மற்றும், வசந்தின் பெயரில் இருக்கும் சொத்தின் மீது இருக்க,  கணவனின் விவகாரம் ஊரு உலகத்துக்கு தெரிந்தால் அசிங்கம்தான். அதற்காக தனது தந்தை சம்பாதித்ததை யாரோ! ஒருத்தி பெத்த பிள்ளைகளுக்கு கொடுப்பதா? என்ன செய்வது? யுவன் சொல்வது போல் இந்த கல்யாணம் தான் ஒரே தீர்வு. இரண்டு மனைவியோடும் கண்ணபிரான் எந்த பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதாக காட்டவும், இரண்டு குடும்பங்கள் இருந்தாலும் இரண்டு குடும்பங்களையும் சரிசமமாக நடத்துவதாகவும், இரண்டு குடும்பங்களும் ஒத்துமையாக இருப்பதாக காட்டவும் இந்த கல்யாணம்தான் ஒரே வழி.
வேறு வழியில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கல்யாணத்தில் கலந்து கொண்டுதான் ஆக வேண்டும். அபரஞ்சிதாவுக்கு முன்னுரிமை கொடுத்துதான் ஆக வேண்டும் என்று புரிந்துகொண்ட கயந்திகா சொத்தை மீளப்பெற ஒதுங்கி இருப்பதாக முடிவெடுத்து தம்பியோடு மணமேடையில் நின்று கொண்டு மகளையும் தன்னோடு இருத்திக்கொண்டாள்.
கயந்திகாவின் தந்தைவழி தாய்வழி உறவுகள் என்று அனைவரும் வந்து கேள்வி மேல் கேள்வி கேட்டாலும் “இது எங்க குடும்ப விவகாரம். எங்களுக்கு பல வருடங்களாகவே! தெரியும் நாங்க ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். யாரும் நடுவில் வந்து நாட்டாமை செய்ய தேவை இல்லை” இருவரின் பதிலும் ஒரே மாதிரியாக இருக்க, அக்காவும் தம்பியும் அசராததால் உறவினர் கூட்டம் அபரஞ்சிதாவை நாடினர்.
அபரஞ்சிதாவை யாரும் எதுவும் பேசி விடக் கூடாது என்று வடிவும் குஞ்சை அடைகாக்கும் கோழி போல் மகளோடு ஒட்டிகிட்டே! திரிய, அபரஞ்சிதாவிடம் கேள்வி கேட்டவர்களையும், புறணி பேச வந்தவர்களையும் வடிவு பேசி துரத்தி இருந்தார்.
“வாங்க டி இதுதான் வர்ர நேரமா?” பாலர் பெண்களின் வசமாகி இருந்தவாறே! தோழிகளை கடிந்தாள் கோதை.
“என்ன டி நீ… அவசர அவசரமா கல்யாணம் பண்ணுற, உன் அவசரத்துக்கு நாங்க வர முடியுமா?” என்று கவி எனும் கவிதா சொல்ல,
“ஆமாம்மா.. நாங்க மேற்படிப்பு என்ன படிக்கலாம்னு யோசிக்கிறப்போ! இங்க ஒருத்தி கல்யாணத்த பத்தி யோசிச்சி இருக்கா” என்று கலா எனும் சித்ரகலா KGF ஸ்டைலில் சொல்லி சிரிக்க,
“என்னங்க டி.. என்ன ஒட்டுறதுக்குன்னே! வந்தீங்களா?” என்று தோழிகளை முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக முறைத்தாள் கோதை.
“யார் டி இவ நாங்க வந்து அரை மணித்தியாலமாக போகுது குடிக்க ஏதாச்சும் கொடுக்காம, தொண்ட தண்ணி வத்தும் வரைக்கும் பேச வைக்கிறியே!” என்றாள் இன்பா.
“இவ ஒருத்தி தீனி பண்டாரம் வரும் வழியெல்லாம் வண்டிய நிறுத்த சொல்லி சாப்பிட்டுக்கிட்டே! வந்தா. உனக்கு இருக்குறது வயிறா டி இங்க வந்தும் ஆரம்பிச்சிட்ட..” என்றாள் கவி.
“ஆமா நான் வாங்கினதுல பாதிய முழுங்கிட்டு பேசுறா பாரு” என்று இன்பா நொடிக்க அங்கே! குட்டி கலாட்டாவோடு சிரிப்பலை பரவிக்கொண்டிருக்க, அவர்களுக்கு குடிக்க குளிர்பானமும் வந்து சேர, அதை பற்றி பேச ஆரம்பித்தனர் தோழிகள்.
இப்படி இவர்கள் இருக்கும் இடம் மறந்து தலைப்பை மாற்றியவாறு மணமகள் அறைக்குள் பேசிக்கொண்டே! சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
வெளியே! அந்த கல்யாண மண்டபத்தையே! பரபரப்புக்கு உள்ளாக்கியவாறு தொழித்துறை அமைச்சரை வரவேற்று கண்ணபிரான் முன் வரிசையில் அமர்த்த அவரோடு வந்தவர்களும், அவருடைய பாதுகாப்பு படையினரும் அவரை சுற்றி அமர்ந்து கொண்டனர்.
அவருக்கும், அவருடைய கூட்டத்துக்கும் உபசரிப்புகள் நடைபெற, அவர்கள் அதை தொட்டு கூட பார்க்கவில்லை. வெளி இடங்களில் சாப்பிடுவது ஆபத்து விளைவிக்கும். பாதுகாப்பை கருதியே! இந்த முறையை கையாளுகின்றனர்.
அதை புரிந்துக்கொண்ட கண்ணபிரான் அவர்கள் முன்னிலையிலையே! சோடா பாட்டில்களை உடைத்துக் கொடுக்கும்படி கூற அதன் பின்தான் குளிர் பானத்தை வாயில் சரித்துக்கொண்டனர் அமைச்சரும் அவரது ஆட்களும்.
“எங்க டா இருக்க? ஒழுங்கா… என் கூடயே! வந்திருக்கலாம்ல” அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி யாரையோ! அமைச்சர் திட்ட
“போகும் போது பிரைவசி வேணாமா அதான் என் வண்டியிலையே! வந்தேன். உன் பின்னாடிதான் இருக்கேன்” என்றவாறு அமைச்சரின் அருகில் வந்தமர்ந்தான் அவன்.
“உன்ன எப்படி டா உள்ள விட்டாங்க” கல்யாண மாப்பிள்ளைக்கு கொஞ்சமும் குறையாது பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தவனை ஆச்சரியமாக அமைச்சர் பார்க்க
“இங்க இருக்கிறவங்களுக்கு என்ன யார்னே! தெரியாது. இது கல்யாண மண்டபம் வேற, வரவன செக் பண்ணிட்டா விடுவாங்க. நீ வேற. கல்யாணத்த கவனி..” என்றவன் மனமேடையை பார்கலானான்.
“நீ நடத்துடா.. என்ன நடக்க போகுதோ…” அமைச்சர் அச்சப்பட்டவாறாக சொல்ல
“உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லைனு சொல்லிடு” என்று சிரித்தான் அவன் அமைச்சரின் தம்பி.
“போடா..” என்ற அமைச்சர் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அமைதியானார்.
“பொண்ண அழைச்சுண்டு வாங்கோ…” ஐயர் மணமகளின் அறையின் பக்கம் பார்த்துக் கூற அபரஞ்சிதா மகளை அழைத்து வரும்படி பூங்கோதையின் தோழி ஒருத்தியை அனுப்பி வைத்தாள். 
தோழிகள் புடை சூழ புன்னகை முகமாக கோதை நடந்து வர யுவன் ஆவென அவளை பாத்திருக்க, 
“என்னமா… மாமா அவள இப்படி பார்த்து வைக்கிறாரு? சொத்து நமக்கு கிடைக்குமா? ராதை சந்தேகமாக அன்னையை நோக்க
“நான் தான் சொன்னேன் பாக்குறவங்க இது ஏதோ! கட்டாயத்துல நடக்குற கல்யாணம் மாதிரி இருக்கக் கூடாது இஷ்டப்பட்டு கட்டிக்கிறது போல இருக்கணும்னு” கயந்திகா தம்பியின் பார்வையை சந்தேகப்படாமல் பெருமையாக சொல்ல
“இருந்தாலும் மாமா ரொம்பதான் வழியிறான்” என்றாள் ராதை.
மணமேடைக்கு வந்துகொண்டிருந்த கோதையை தோழிகள் கிண்டல் செய்தவாறே வர, நாணத்தில் முகம் சிவந்திருந்தவளை ரசித்தவன் அவள் மணமேடை ஏறும் முன் அவளருகில் சென்று அவள் கையை பற்றி தரதரவென இழுத்துக்கொண்டு மணமேடையில் முன்னால் வந்து நின்று அங்கிருந்தவர்கள் என்னதான் நடக்கிறது என்று பார்த்திருந்தவேளை தன் கையிலிருந்த தாலியை அவள் கழுத்துக்கு முன் நீட்டி எந்த பதட்டமும் இல்லாம மூன்று முடிச்சுக்களை கட்டி முடித்திருந்தான் அமைச்சரின் தம்பி.
கோதை அதிர்ச்சியின் உச்சத்தில் விழி விரித்து நிற்கும் நேரம் “சொன்னபடியே சொன்ன நேரத்துக்கு மாமன் வந்துட்டேன்” என்று கிருஷ்ணா கண்சிமிட்ட 
“டேய் என்ன டா பண்ணுற?” அவன் குரலில் தன்னை மீட்டவள் வாய் திறந்திருந்தாள்.
“நீ ஊமை இல்லையா?” அவளை அதிசயமாக பார்த்தான் கிருஷ்ணா.
“நான் ஊமைனு எப்போ சொன்னேன்?”
“அன்னக்கி…” என்று கிருஷ்ணா ஏதோ சொல்ல முனைய
“டேய்..” என்றவாறு யுவன் மணமேடையிலிருந்து தாவி இறங்க அமைச்சர் அருள்வேல் ராஜாவின் ஆட்கள் அவனை பிடித்துக்கொள்ள
கண்ணபிரான் பதட்டமாக வந்து “அமைச்சரே என் பொண்ணு கல்யாணம். ஏதோ! தப்பு நடக்குது. யாரு இந்த பையன்” குழம்பியவாறே கிருஷ்ணாவை ஏறிட 
“இவன் என் ஒரே தம்பி. உங்க பொண்ணு மேல ஆச பட்டுட்டான். பொண்ணு கேட்டா கொடுக்க மாட்டேன்னு சொல்லவா போறீங்க? ஆனா பாருங்க எங்க வீட்டுல எங்க அப்பாவ சம்மதிக்க வைக்க ரொம்ப கஷ்டம். லவ் பண்ணுற பசங்கள பிரிக்கக் கூடாது மிஸ்டர். கண்ணபிரான்” என்று அருள்வேல் முடிக்க,
“என்னது லவ்வா?” கண்ணபிரான் அதிர்ச்சியாக கேட்டார்.
நடக்க இருக்கும் திருமணத்தை எவனோ! ஒருத்தன் நிறுத்தி தன் மகளின் கழுத்தில் தாலி கட்டி விட்டான் என்ற அதிர்ச்சியில் இருந்தவருக்கு, அமைச்சர் தடுப்பது தாலி கட்டி முடித்ததால் தானோ! என்று எண்ணி பேச அது அமைச்சரின் தம்பி என்பது மட்டுமன்றி தனது சின்ன மகள் காதலிப்பது என்பது முற்றிலும் புதிய செய்தி. 
“பாத்தீங்களா? என் பொண்ணு மாப்புள யார்னு கூட கேக்கல கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டானு பெருமையா பீத்தினீங்களே! இப்போ தெரியுதா உங்க வைப்பாட்டி பெத்தவ லட்சணம்” மேடையிலிருந்து கத்தியவாறு கயந்திகா இறங்கி வர
“வாய மூடு யாரை பார்த்து என்ன வார்த்த சொல்லுற அவ என் பொண்டாட்டி” கயந்திகாவை கண்ணபிரான் சீற
கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, கோதை கிருஷ்ணாவை முறைக்க ஆரம்பித்தாள்.
“டேய் ஏற்கனவே! குழம்பின குட்ட டா.. நீ வேற வந்து குழப்பி விட்டிருக்க, என்ன டா பண்ணி வச்சிருக்க?”  
கோதை கிருஷ்ணாவிடம் பேச்சு வார்த்தை ஆரம்பித்திருக்கும் வேளை கோதையை தன் பக்கம் இழுத்து அறைந்த அபரஞ்சிதா “எத்தன நாளா எங்களை அவமானப்படுத்த இப்படி திட்டம் தீட்டின? உன் கிட்ட கேட்டுத்தானே! அப்பா கல்யாண ஏற்பாடு பண்ணாரு? நீ இந்த பையன லவ் பண்ணுறியா?” கண்களில் நீர் தேக்கியவாறு கேட்டாலும் அவளால் கோதை இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பாள் என்று நம்ப முடியவில்லை.
தான் காதலித்து ஓடி போய் விட்டதால் எவ்வளவு பிரச்சினைகள் என்று தன்னை தூற்றுபவள் நிச்சயமாக இப்படி நடு சபையில் குடும்பத்தை அவமானப்படுத்த மாட்டாள் என்று மகளிடம் தன்மையாக விசாரிக்க, எண்ணம் இருந்தாலும் கயந்திகா “வைப்பாட்டி” என்றதில் கட்டுக்கடந்தாத ஆத்திரம் அதை யார் மேல் காட்டுவது என்று கூட புரியாமல் அபரஞ்சிதா கோதையை அறைந்திருந்தாள்.
அன்னை அறைந்ததில் கோதை தடுமாற, அவளை கிருஷ்ணா இழுத்து தன் பக்கம் நிறுத்தி இருக்க, “இவன் வேற” என்று கிருஷ்ணாவின் செய்கைகளால் கோதை தினறி என்ன நடக்கிறது என்று ஒரு கணம் புரியாது திகைக்க,  அவளிடம் பதில் வராமல் போக உடைந்தழுதாள் அபரஞ்சிதா.
அன்னையை சமாதானப்படுத்த ஆரம்பித்த வசந்த கோதையை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“அதான் நைட்டு முழுக்க போன நோண்டிகிட்டே! சிரிப்பாளே! வேறென்ன இவன் கூடத்தான் கொஞ்சிகிட்டு இருப்பா…” கழுத்தை நொடித்தார் வடிவு
அன்னை அறைந்தது தான், கிருஷ்ணாவின் கைவளைவில் இருக்கின்றோம் என்பது கூட மறந்து வடிவு சொன்னது மட்டும் காதில் விழ,  “அடிப்பாவி கிழவி நைட்டுல தூங்கக் கூடாதுனு மீம்ஸ் பார்த்து சிரிச்சிகிட்டு இருந்தேன் டி…” கோதையின் மைண்ட் வாய்ஸ் எகிறி குதிக்க,
“ஆ… நேத்து நைட்டு கூட இந்த கல்யாணம் நடந்தா சந்தோசமானு கேட்டாளே! அப்போ.. திட்டம் போட்டு இவன வர சொல்லித்தான் தாலிய கட்டிக்கிட்டு இருப்பா…” என்று வடிவு குதிக்க கோதையின் கோபம் எல்லைக் கடந்தது.
என்னதான் அனுபவம் இருந்தாலும் கோபத்தில், யோசிக்காமல் என்ன பேசுகின்றோம், எங்கே இருந்து பேசுகின்றோம் என்று சில நேரம் மறந்து விடுவது மனித இயல்பு. அதைத்தான் வடிவும் செய்தார்.
“நம்ம குடும்பத்தை அவமானப்படுத்த வெளி ஆட்கள் தேவ இல்ல. இந்த கிழவியே! போதும். நான் பண்ணது பண்ணாது என்று எல்லாத்தையும் சொல்லும். நானா திட்டம் போட்டு உன்ன வர சொன்னேன்” என்று கிருஷ்ணாவிடம் கேட்க
கோதையின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு இருந்தவனின் பக்கம் அவள் திரும்பியதில் அவள் முற்றாக அவன் பக்கம் சாய்ந்திருக்க, கிருஷ்ணா கோதையை அணைத்திருப்பது போன்ற தோற்றம்தான்.
அதை கோதை உணரவில்லை. அவள் மேனி உரச நின்றவனுக்குத்தான் இடம், பொருள் ஏவல் எல்லாம் மறந்து போக திருதிருவென முழிக்கலானான்.
“டேய் ஏற்கனவே! குழம்பின குட்டைல நீ வந்து மீன் பிடிக்க பாக்குறியா? யார் டா நீ… உன்ன அப்பொறம் கவனிச்சிக்கிறேன்” அவள் விலகவும்தான் அவள் சொன்னது மண்டையில் உரைத்தது. “இவள் சொல்லித்தானே! வந்தேன் இவள் என்ன சொல்லுறா….”
“இப்போ பாரு எப்படி சிட்டுவேஷண மாத்துறேன்னு” என்ற கோதை சேலை முந்தியை இடுப்பில் சொருகிக்கொள்ள “என்ன இவ ரௌடி மாதிரி பண்ணுறா?” கிருஷ்ணா மிரண்டான்.
“ஆமா கிழவி… உன் பொண்ணு மட்டும் காதலிச்சவன கூட்டிகிட்டு ஓடிப்போலாம் நான் மட்டும் காதலிச்சவன கல்யாணம் பண்ண கூடாதோ!” வடிவின் காதுக்குள் கூறியவாறே “எங்கம்மா சக்களத்தி தொம்பியதான் கட்டிக்கணுமா? எந்த ஊரு நியாயம் இது? இதோ! இந்தம்மா” என்று கயந்திகாவை கைகாட்டியவள் “தான் ஒரே பொண்ணுக்கு ஒரே தம்பிய கட்டிக் கொடுக்காம எதுக்கு எனக்கு கட்டிக் கொடுக்க நினைக்கணும். அதுல ஏதோ! உள்குத்து இருக்கும் இல்ல. ஏய் அம்மாச்சி…… நீயும் தானே! சொன்ன இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காத, அந்த பொம்பள ஏதோ! சதி செய்யுது, மாட்டிக்காதான்னு” வடிவுப் பாட்டியை கோர்த்து விட கயந்திகா வடிவை முறைக்க, வடிவு கழுத்தை நொடித்தார். 
“ஆ… இவ என்ன இப்படி பேசுறா?” ஆச்சரியமாக பார்த்தது வசந்த் தான்.
“ஏய் என்ன டி பேசுற? அதுக்காக இப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சு. ஊராக் கூட்டி நடு சபைல உங்க அப்பாவ அவமதிப்பியா?” அபரஞ்சிதா கையை ஒங்க,
“இந்தா இந்த அடிக்கிற வேலையெல்லாம் வச்சிக்காத…” என்று அபரஞ்சிதாவை மிரட்டிய கோதை “யோவ் தாலிய கட்டிட்டு மரம் மாதிரி நிக்குற உன்னால அடியெல்லாம் வாங்க முடியாது கவர் பண்ணிக்கையா? பேசி முடிக்கணும்” என்று கிருஷ்ணாவை முறைக்க,
“யார் டி நீ…” என்ற பார்வை தான் அவனிடம்.  அவன் மைண்ட் வாய்சோ “ஊமைனு காதலிச்சா.. இப்படி பஜாரியா இருக்கா.. ஆள் மாத்தி தாலி கட்டிட்டேனா?”  
“டேய் தம்பி நீ லவ் பண்ணுற பொண்ணு ரொம்ப அமைதியானவனு சொன்னியே! இந்த கிழிகிழிக்கிறா… எங்க அம்மாங்க பாவண்டா… ஆனா அப்பாவ சமாளிப்பா” அருள்வேல் கிருஷ்ணாவின் முதுகை சுரண்டி காதில் ரகசியம் பேச
அண்ணனை முறைத்தவன் “நானே! காண்டுல இருக்கேன். பேசாம போ…” பற்களை நறநறவென கடித்தான் கிருஷ்ணா.
அவன் பிரச்சினை அவனுக்கு. ஊமை என்று எண்ணி காதலித்தவள் என்ன இப்படி எல்லாம் பேசுகிறாள் என்ற குழப்பம் வேறு. 
“பின்ன நான் காதலிக்கிறேன்னு சொன்னா.. அதுவும் மினிஸ்டரோட தம்பிய காதலிக்கிறேன்னு சொன்னா பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு கட்டி வச்சிட மாட்டீங்க? இல்ல அப்பா…” என்று பாசமாக கண்ணபிரானை ஏறிட மகளின் இந்த அவதாரத்தில் முற்றாக குழம்பினார் கண்ணபிரான்.
“நீ ஆசைப்பட்டா கட்டி வச்சிருப்பேன் மா… இதுல பையன் யாரு என்னனு முக்கியமில்லை. நல்லவனா இருந்தா போதும்” கண்ணபிரான் மகளின் சந்தோசம்தான் முக்கியம் என்று பேச
“எப்படி உங்கள மாதிரியா?” என்று கேட்க
அவள் கேட்ட தொனியில் “ஏய்..” என்ற அபரஞ்சிதா மீண்டும் அடிக்க பாய்ந்திருக்க, கிருஷ்ணா அனிச்சையாக கோதையை தன் பக்கம் இழுக்க, கண்ணபிரான் அபரஞ்சிதாவை தடுத்திருந்தார். 
“ஆஹா… இவ சும்மாவே! ஆடுவா ஆளாளுக்கு எடுத்து வேற கொடுக்குறாங்களே! இனி.. சுத்தி சுத்தி ஆடுவாளே!” வசந்தின் மைண்ட் வாய்ஸ் சிரிக்க ஆரம்பித்தது.
“என்னம்மா இவ அப்பாவ நிக்க வச்சி இப்படி பேசிகிட்டு இருக்கா?” ராதை அதிர்ந்த முகபவானியில் அன்னையிடம் வினவ,
“ஏதோ! திட்டம் போட்டுத்தான் டி பண்ணி இருக்கா.. நாமதான் அது தெரியாம வசமா மாட்டிகிட்டோம்” என்று கயந்திகா கையை பிசைய
“கல்யாண பேச்சை எடுத்து திட்டம் போட்டு கொடுத்ததே! நீயும் மாமாவும்தான். அவ நல்லா ஆடுறா” கிண்டலாக சிரித்தாள் ராதை.
“என்ன அம்மா.. கத்துற? அப்பா ரொம்ப நல்லவரா இருக்கப் போய் தானே! ரென்று பொம்பளைங்கள கல்யாணம் பண்ணிகிட்டாரு. இல்லனா ஒருத்திய கட்டிக்கிட்டு, இன்னொருத்திய வச்சிக்கிட்டு இல்ல இருந்திருப்பாரு” கோதை சொன்னதைக் கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் குசுகுசுவென பேச ஆரம்பித்திருக்க,
“அடங்கொய்யால ரெண்டு பொண்டாட்டி கட்டுறவனெல்லாம் ரொம்ப நல்லவனுங்கனு இப்போதான் தெரியுது. நம்ம குடும்பக் கத உன் பொண்டாட்டிக்கு தெரியல போல. நீ சொல்லலையா? வரட்டும், வரட்டும் வீட்டுக்கு வந்த உடனே! தெரிஞ்சிக்க போறா.. உன் சட்டையை கிழிக்க போறா..” அருள்வேல் தம்பியின் காதைக் கடிக்க
“டேய் அடங்குடா…” கிருஷ்ணா நொந்த குரலில் சொல்ல, அவனின் நிலையறியாமல் கேலியாக சிரித்தான் அருள்வேல்.
அவ்வளவு நேரம் அமைதியாக அங்கே என்ன நடக்கிறது என்று பாத்திருந்த யுவனுக்கு கோதையின் திட்டம் புரிய “அப்போ என்ன கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லி எங்க சொந்தபந்தம், உன் அம்மாவோட சொந்தபந்தம், உன் அப்பாவோட சொந்தபந்தம், தொழிப்பாக்குறவங்கனு எல்லாரையும் ஒரே இடத்துல கூட வச்சி. உங்க அம்மாவ உங்க அப்பா வச்சிக்கல, கல்யாணம் பண்ணி இருக்காருன்னு சொல்ல வரியா?” கோபம் கணக்க ஏறிட
யுவனுடனான திருமணம் முறையாக நடந்திருந்தாலே! அவன் இப்பொழுது சொன்னவைகளோடு குடும்பத்தில் எந்த பிரச்சினைகளும் இல்ல. நாம ஒத்துமையாகத்தான் இருக்கின்றோம் என்று சேர்த்தே கூறி இருக்கலாம். கிருஷ்ணா செய்த குழறுபடியால் கோதை என்ன பதில் சொல்வாள்.
“இங்க பாருங்க ப்ரோ… உங்கள அவமானப்படுத்தனும் என்கிறது எங்களோட நோக்கமல்ல. நான் நேத்துதான் அமெரிக்கால இருந்து வந்தேன். எங்க அப்பாக்கு தெரிஞ்சா என்னால நான் காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது. அந்த பிரச்சினையை பத்தி விலாவாரியா இப்போ பேச முடியாது. இவ எத்தனை பேரைத்தான் தனியா சமாளிப்பா சொல்லுங்க? லவ் பண்ணுறவங்கள கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க” காதல் மன்னனாக மாறி கிருஷ்ணா கோதைக்கா வரிஞ்சிக்கட்டிக் கொண்டு வர
“இவன் வேற நான் இவன லவ் பண்ணேன்னு சொல்லிட்டு துள்ளுறான். லூசா இருப்பானோ!” கோதையின் மைண்ட் வாய்ஸ் கிருஷ்ணாவை முறைக்க,
“ஆமாம்மா ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ண சொல்லி இருக்காங்க, அதுவும் காதல் கல்யாணம்னா சும்மாவா?” என்று அருள்வேல் சத்தமாக சொல்ல
கூட்டத்தில் ஒரு பெருசு “அதுவும் இந்த பொண்ணு தன்னோட அம்மாக இப்படி எல்லாம் பண்ணி இருக்கு. பொண்ணு நினைச்சி இருந்தா பையன வர சொல்லுறதுக்கு பதிலா… பொண்ணு ஓடி போய் இருந்திருக்கலாம்ல… அப்படி பண்ணல இல்ல. நியாயத்துக்காக, நீதிக்காக பண்ணி இருக்கா.  புரிஞ்சிகோங்கயையா. இப்போ எல்லா ஊரு உலகத்துல ரெண்டு பொண்டாட்டி கட்டுறது எல்லாம் சர்வ சாதாரணம். இதெல்லாம் போய் பெரிய விஷயமா பேசிகிட்டு” என்று குரல் கொடுக்க,
“எந்த ஊரு பஞ்சாயத்து தலைவருயா நீ?” கோதையின் மனம் கேள்வி எழுப்ப அதையே! அருவேல் கேட்டிருக்க, பவ்வியமாக அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார் அந்த பெருசு.
“இந்தாளும் ரெண்டு பொண்டாட்டி கட்டி இருப்பான் போல” கோதையின் மனம் கூவ மனதை அடக்கியவள் “ஆமா எல்லாம் என் குடும்பத்துக்காகத்தான் பண்ணேன். சின்ன வயசுல இருந்து தீபாவளி, பொங்கல் என்று பண்டிகையா இருந்தாலும் சரி, எங்க பிறந்த நாள், அம்மா அப்பா கல்யாண நாள் என்று ஒரு நாளைக்கும் அப்பா வீட்டுக்கு வர மாட்டாரு. எங்களை கடைக்கு கூட்டிகிட்டு போய் துணி கூட வாங்கிக் கொடுக்க மாட்டாரு. கொரியர்லதான் அனுப்புவாரு. அதுக்கு எதுக்கு எங்க அம்மாவ கல்யாணம் பண்ணிகிட்டாரு? எல்லா உரிமையும் வேணும்னு எங்க அம்மா இன்னைக்கு வரைக்கும் எதுவும் கேக்கலைங்க. விட்டு கொடுத்துட்டு அமைதியா இருந்துட்டாங்க. ரெண்டு பொண்டாட்டிய கட்டினா… புள்ளைங்கள பெத்துக்கிறாங்களே! பொண்டாட்டிங்க மத்தில நீதமா நடந்துக்க மாட்டாங்க, புள்ளைங்க என்ன பாவம் பண்ணாங்க?” மூச்சு வாங்க கோதை நிறுத்த
“ஏன் டா உன்ன வர சொன்னது கல்யாணம் பண்ண மாதிரி தெரியலையே! உன்ன வச்சி அவ குடும்ப பகையை தீர்க்குற மாதிரி தெரியுது” மீண்டும் அருள்தான் கிருஷ்ணாவின் காதை கடித்தான்.
“டேய் பேசாம இருடா இங்க என்ன நடக்குதுன்னு எனக்கே! இன்னும் புரியல” அழுது விடுபவன் போல் இருந்தான் கிருஷ்ணா.
“இந்தாம்மா நீ சொல்லுறது எல்லாம் சரிதான். அதுக்காக உங்க அப்பாக்கு கல்யாணம் ஆகிருச்சுனு தெரிஞ்சி ரெண்டாவதா உங்கம்மா உங்கப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா அது உங்கம்மா தவறு. இதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. கூடாதுனு அவளுக்கும் தெரிஞ்சிருக்கு” கயந்திகாவின் சொந்தக்கார கிழவி ஒருத்தி பேச கோதை அன்னையைத்தான் முறைத்தாள்.
  “அவ ஒன்னும் என் ரெண்டாவது சம்சாரம் இல்ல. அவ என் மூத்த சம்சாரம். நான் தொட்டு தாலி கட்டின மொத பொண்டாட்டி அபி தான்” என்று கண்ணபிரான் சொல்ல கூட்டத்தில் மீண்டும் பேச்சுக்குரல்கள் எழுந்தன.
“யோவ் என்னய்யா… எவளையோ கூட்டிகிட்டு வந்து உன் பொண்டாட்டின்னு சொன்னதுக்கே! நான் அடிச்சி துரத்தி இருக்கணும். அதுல அவ உன் மொத தாரம்னு வேற சொல்லுற” என்று கயந்திகா எகிற, யுவனுக்கு ஏதோ! புரிவது போல் இருந்தது.
  அங்கே ரணகளமாக “இந்த பிரச்சினை இப்போதைக்கு முடியிற பாடில்லை டேய் தம்பி உன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு வா போலாம்” என்று அருள் அழைக்க
கிருஷ்ணாவும் தன் மனைவியை அழைக்க “யார் யா நீ… பாரு உன்னால எவ்வளவு பிரச்சினை?” என்று சொல்ல அதிர்ச்சியடைவது கிருஷ்ணாவின் முறையானது.

Advertisement