Advertisement

அத்தியாயம் 24
க்ரிஷ்ணாவோடு சிரித்துப் பேசியவாறு உள்ளே நுழைந்த வசந்துக்கு ராதையின் சிவந்து வீங்கிய கன்னம் அவளை யாரோ அடித்திருக்கிறார்கள் என்று கூற, வேறு யார் அம்மாச்சியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் வடிவை முறைத்தவன் கோதையிடம் நடந்தது என்ன என்று கேட்கலானான்.
கோதை கூறியவற்றை கேட்டு அதிர்ச்சியடைந்தவன் ராதையின் அருகில் போய் அமர்ந்துக் கொண்டான். அவனுக்கு ராதையை ரொம்பவே பிடிக்கும். என்னதான் ராதை அவன் மேல் பாசம் வைப்பது போல் நடித்தாலும் அவன் அக்காவாக ஏற்றுக்கொண்டு உண்மையாகத்தான் அன்பு வைத்தான்.
அவளே தனது சொந்த அக்காவாகிப் போக அருகில் அமர்ந்து ஆறுதலாக பேச ஆரம்பித்தான்.
“சாரிடா வசந்த் நான் இங்க வந்ததே அப்பாவ உங்க கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிகிட்டு போகணும். தாத்தா உங்க பேர்ல எழுதிக் கொடுத்த சொத்தெல்லாம் எழுதி வாங்கணும் என்றுதான்” கண்ணீரோடு சொன்னாள் ராதை.
“விடுக்கா உன் மேல எந்த தப்பும் இல்ல. நம்ம அம்மாக்கு பொறந்ததா தெரிஞ்சிருந்தா நீ இப்படியெல்லாம் பண்ண யோசிச்சிருப்பியா? எதோ கோபத்துல பண்ணிட்ட. பாரு கன்னம் எப்படி சிவந்து வீங்கி இருக்குனு. முதல்ல வா ஏதாவது தைலம் தடவலாம்” என்று அவளை வசந்த் உள்ளே அழைத்து சென்றிருக்க, கண்ணபிரானும் அபரஞ்சிதாவும் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். 
யுவனிடம் பேசிவிட்டு வந்த கிருஷ்ணா யோசனையாக அமர்ந்திருக்க, “என்ன புருஷா?” என்று அவன் அருகில் அமர்ந்தாள் கோதை.
ஒன்றுமில்லை என்று அவன் தலையசைக்கவும் “உன் வீட்டுல இருக்குற பிரச்சினை பத்தாதுன்னு எங்க வீட்டுலையும் பிரச்சினை இல்ல” என்றாள் கோதை சோகமான முகபாவனையில்.
“என் வீட்டு பிரச்சினையை அண்ணன் பாதுபான். உன் வீட்டு பிரச்சினையை யுவன் பாதுபான்” என்ற கிருஷ்ணா அத்தோடு நிறுத்திக்கொள்ள
“ஐயோ பயபுள்ள இன்னமும் மெஸேஜ் பண்ணவன கண்டுபிடிக்க முடியலைன்னுதான் யோசிக்கிறானோ” பதறின கோதை பேச்சை மாற்றும் பொருட்டு “அப்போ வேற எந்த பிரச்சினையும் இல்ல இல்ல. நாம எப்போ ஹனிமூன் போக போறோம்” என்று அவன் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவன் முகம் பார்த்தாள்.
“போலாம் போலாம். தேர்தல் முடியட்டும்” என்றவனின் சிந்தனையெல்லாம் கோதையிடம் அந்த விஷயத்தை எவ்வாறு சொல்வது? சொன்னால் எப்படி ரியேக்ட் செய்வாள் என்று இருந்தது.
யுவனின் வண்டி கயந்திகாவின் வீட்டுக்குள் நுழைய காவலாளி வாயிற்கதவை அவனுக்காக திறந்து விட்டார்.
தந்தை இறந்தபின் இந்த வீட்டுக்கு அவன் வருவதே இல்லை. கண்ணபிரானோடு சந்திப்பெல்லாம் காரியாலயத்தில்தான். கோதையின் கல்யாணமன்று அக்காவை சந்தித்ததோடு சரி இன்றுதான் நேரில் சந்திக்க செல்கின்றான். ஒரு அலைபேசி அழைப்பு விடுத்தாவது நலம் விசாரிக்க மனம் வரவில்லை. அவளும்தான் தம்பி என்று யுவனிடம் பேசவில்லை.
சொத்துப்பத்து இருந்து என்ன பிரயோஜனம். அக்கா தம்பி என்று இருப்பதே இரண்டு பேர்தான். ஒருவருக்கொருவர் அன்பாகவும் பாசமாகவும் ஒத்துமையாகவும் இருக்காமல் இப்படி யாரோ போல் இருப்பது என்ன வாழ்க்கை. தந்தை செய்த பாவத்தின் விளைவுகள் தான் இப்படி தங்களுக்குள் உறவு சீர் கெட்டு இருக்கிறதோ! என்று யுவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அமைதியான வீடே அவனை வரவேற்க அக்கா எங்கே என்று வேலையாளிடம் கேட்டவாறு மாடிப்படிகளில் ஏறினான் யுவன்.
கயந்திகா அப்பொழுதுதான் எந்திரித்திருப்பாள் போலும். அதற்காக அவள் இரவில் தூங்கியது போலவும் தெரியவில்லை. கண்கள் சிவந்து உடல் மெலிந்து யாரோ போல் தான் இருந்தாள்.
தான் பார்த்த தன்னுடைய கம்பீரமான அக்காவா இவள்? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இருந்தது அவள் தோற்றம்.
“வாடா… என்ன என்னயெல்லாம் பார்க்க உனக்கு நேரம் கிடைச்சிருக்கு?” வெறுமையான குரலில் கூறியவள் நேராக சென்றது வீட்டிலிருந்த மினி பாருக்குத்தான். 
“காலையிலையே குடிக்க போறாளா? என்ன இந்த பழக்கம்? எப்போதிலிருந்து?” யுவனின் மனம் கேள்வி கேட்டவாறே அவள் பின்னால் சென்றான்.
“ஆளே மாறிட்ட ஒழுங்கா சாப்பிட கூட மாட்டியா? முதல்ல போய் குளிச்சிட்டு வா நானும் இன்னும் சாப்பிடல. ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என்றான் தம்பி.
கையில் எடுத்த விஸ்கி பாட்டிலை கிழே வைத்து தம்பியை யோசனையாக பார்த்தாள் கயந்திகா. “கண்ணபிரானின் இன்னொரு குடும்பத்தை பற்றி அறிந்துக் கொண்ட பொழுதும் கோதையுடனான திருமணத்தை பேசும் பொழுது இவ்வாறுதான் இவன் நடந்துகொண்டான். மீண்டும் இவன் பேசுவதை பார்த்தால் எதோ திட்டமிட்டிருக்கினான் போலயே” என்றது அவள் மனம்.
அவள் குளித்து விட்டு வரும்வரை அவன் கூற மாட்டான் என்று தெரியும் ஆகையால் சென்று குளித்து விட்டு ஒரு புடவையை கட்டிக்கொண்டு வந்தவள் “வா சாப்பிடலாம்” என்று அழைத்தாள்.
யுவன் ஏற்கனவே காலை உணவை உட்கொண்டுதான் வந்திருந்தான். அக்கா அழைத்ததும் மறுக்காமல் சென்றவன் அமைதியாக உண்டு விட்டு எழ
“என்ன டா விஷயம். முக்கியமான விஷயம் பேசணும் எங்குறதாலதானே சாப்பிடாம கொள்ளாம இங்க ஓடி வந்திருக்க” கயந்திகாவும் கையை துடைத்தவாறு எழுந்து கொண்டு காரியாலய அறையை நோக்கி நடந்தாள்.
பேச்சை எவ்வாறு ஆரம்பிப்பது என்று அக்காவை பின் தொடர்ந்த யுவன் காரியாலய அறையில் நுழைந்து அக்காவுக்கு எதிரே அமர்ந்துக் கொண்டான்.
தம்பியின் அமைதி சுனாமியை ஏற்படுத்த போவதை அறியாமல் “என்னடா பிரச்சினை? அவளுங்க புதுசா ஏதாவது பிரச்சினை பண்ணுறாளுகளா?” என்று கேட்க
அதையே பிடித்துக் கொண்ட யுவன் “புதுசா ஒரு பிரச்சினையும் இல்ல. எல்லாம் பழைய பிரச்சினைதான். நம்ம அப்பா ஆரம்பிச்சு வச்ச பிரச்சினை” என்று ஆரம்பித்தான் யுவன்.
“சொத்து விஷயம் தானே. என்ன சொல்லுறாளுங்க அவளுங்க சொத்தை எழுதிக் கொடுக்க மாட்டாளுங்கலாமா? அத எப்படி கொடுப்பாளுங்க?” இளக்காரமாக நகைத்தாள் கயந்திகா.
  
“எனக்கு தெரிஞ்சவரையில அவங்க எப்பயும் நம்ம சொத்துக்கு ஆசைப்பட்டது கிடையாது. ஏன் மாமாகே சொத்தை அவர் பசங்க பேர்ல அப்பா எழுதி வைத்தது தெரியாதே. நாம சொல்லி தானே தெரியும்”
மறைமுகமாக ராதை இந்த வீட்டு பெண் இல்லை என்று யுவன் கூற முயல அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் கயந்திகா இல்லை.
“இப்போ நீ எதுக்கு வந்த? அவளுங்க புகழ் பாடவா?” கோபத்தில் முகம் சிவந்தாள் கயந்திகா.
“இல்ல எங்க அப்பா புகழ் பாட” என்றான் புன்னகையோடு
லூசா நீ என்ற பார்வையோடு தம்பியை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள் அக்காள்.
அவளை மேலும் கோபப்படுத்தாமல் “அப்பாக்கு என்ன விட உன் மேதான் பாசம் அதிகம்” என்றவன்  சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு “ஒரு நாலாவது நிதானமா யோசிச்சு பார்த்திருப்பியா? அப்பா எதுக்கு மாமா பசங்களுக்கு சொத்த எழுதி வைக்கணும்னு” 
மீண்டும் அழுத்தி மாமா பசங்க என்று ராதையையும் கோதை மற்றும் வசந்த்தோடு சேர்த்துதான் கூறினான். கயந்திகா இந்த முறையும் அதை சரிவர கவனிக்கவில்லை.
தந்தைக்கு அவள் மீதுதான் பாசம் அதிகம் என்றதும் முகம் சுளித்தவள் யுவன் எடுத்துக் கூறியதில் யோசனையாக தம்பியை பார்த்தவாறே இருந்தாள்.
ஆனால் அவன் எதுவும் கூறுவது போல் தெரியவில்லை. அதனால் அவளே அந்த மௌனத்தை உடைத்தாள்.
“எனக்கு உன்ன கண்டாலே பிடிக்காது யுவன். பிகோர்ஸ் என் அப்பாவோட பாசத்த பங்கு போட வந்தவன் நீ என்கிற ஒரே காரணம் தான். எனக்கு எப்பேர்ப்பட்ட மாப்பிளை வேணும்னாலும் பார்க்க கூடிய நேரத்துல உன் மாமாவ நான் ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக என்ன அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு. அத வச்சு தானே அப்பா உன்ன விட என் மேல பாசமா இருக்காருன்னு சொல்லுற?
நான் எவ்வளவு பிடிவாதமான மகளா இருந்தாலும், அன்பான மனைவியா இருக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனா உன் மாமா என் மேல அன்பும் வைக்கல ஆசையும் வைக்கல. வலுக்கட்டாயமாக அவரை கல்யாணம் பண்ணிகிட்டதனால என் மேல கோபத்துல இருக்காருன்னு இருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல அவருக்கு என் அன்ப புரிய வைக்க முயற்சி செஞ்சி செஞ்சி வாழ்க்கையே சலிப்பாகிருச்சு.
ராதை என் பொண்ணா இருந்தாலும் அவ மேல எனக்கு பெருசா பாசம் வரல. என்னால ஒரு ஆண் வாரிசை பெத்துக்க கொடுக்க முடியாததாலதான் இப்படி எல்லாம் நடக்குதோன்னு பயம் வேற வர ஆரம்பிச்சிருச்சு. 
      
இது நான் தேடுகிட்ட வாழ்க என்றதும் என் மேலையே எனக்கு கோபம் வர அந்த கோபத்தையெல்லாம் அவர் மேல காட்ட ஆரம்பிச்சேன். அவர் இன்னும் என்ன விட்டு விலகி போய்ட்டாரு. கொஞ்சமாச்சும் என்ன புரிஞ்சிக்கணும் எங்குற எண்ணம் அவருக்கு இருந்ததே இல்ல.
எப்போ அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்குனு தெரிஞ்சிகிட்டேனோ அப்போவே நான் செத்துட்டேன். அந்த விஷயம் அப்பாகும் தெரிஞ்சிருக்கு. அத என் கிட்ட மறைச்சதும் இல்லாம சொத்தை வேற அவ பிள்ளைங்களுக்கு எழுதி வச்சிருக்காரு. அப்பா உண்மையாகவே என் மேல பாசம் வச்சிருந்தா அவருக்கு என்னைக்கி உண்மை தெரிஞ்சதோ! அன்னைக்கே அவள கொன்னு இருக்கணுமா? இல்லையா? என்ன ஏமாத்தின அவரை நான் சும்மா விட மாட்டேன்” என்றவள் கண்களில் கண்ணீர் சிறிதும் இல்லை. கோபம் மட்டும்தான் அனலாய் தகித்துக் கொண்டிருந்தது.
கோபத்தில் கத்தியவள் அபரஞ்சிதா கண்ணபிரானின் முதல் தாரம் என்பதை நொடியில் மறந்துதான் போனாள்.
“மாமா உன்ன ஏமாத்தல. உன் பிடிவாதத்தினாலையும் அப்பா உன் மேல வச்ச பாசத்தினாலையும் நீ ஏமாந்து போய் நிக்கிற”
தம்பியின் பேச்சில் கயந்திகா என்ன? ஏது? என்று வாயை திறந்து விசாரிக்கவில்லை. காரணமில்லாமல் அவன் அவ்வாறு கூற மாட்டான் என்று தெரியும்
“நீ எதையோ சொல்ல வர என்னா ஆனாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு சொல்லிடு” என்ற கயந்திகா மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்கொண்டாள்.
“உனக்கு பிரசவம் நெருங்கி இருக்கும் சமயம்தான் ஆக்சிடன் ஆச்சு இல்லையா?” என்று கேட்டவாறே தனது கையிலிருந்த ஆபீஸ் சூட்கேஸை திறந்து ஒரு கோப்பை கொடுக்க கயந்திகா அதை கையில் வாங்கவில்லை மாறாக அதில் என்ன இருக்கிறது என்று மட்டும் கேட்டாள். 
“ஆக்சிடன்ட் ஆனதுல உன்னால இன்னொரு குழந்தையை பிரசவிக்க முடியாதுனு உனக்கு தெரியும் தானே” என்றதும் அவள் தலை தானா அசையவும் யுவன் தொடர்ந்தான். “அந்த ஆக்சிடண்ட்டுல உன் குழந்தையும் இருந்துதான் பிறந்தது” என்று நிறுத்தி அக்காவின் முகம் பார்க்க கயந்திகா தம்பியின் கையிலிருந்த கோப்பை பறித்து படிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு பிறந்து இறந்து போனது ஆண் குழந்தை என்று அதில் குறிப்பிட்டிருக்க, அவளின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது ஆனால் சத்தம் மட்டும் வெளியே வரவே இல்லை.
கல்லுக்குள் ஈரம் என்பார்கள் அதே போல்தான் காயந்திகாவும் கண்ணபிரானின் அன்புக்காக ஏங்கி யாரும் அறியாமல் ஒவ்வொரு இரவும் அழுதுகொண்டுதான் இருக்கின்றாள். கணவனின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காத பட்சத்தில் அந்த கோபத்தை பிறவியிலையே பிடிவாத குணம் கொண்டவள் கோபத்தை மற்றவர்கள் மீது வார்த்தைகளால் பேசி தீர்த்துக் கொள்கின்றாள்.
“அப்போ அப்போ ராதை?” கேட்டவளின் நா வறண்டு பேச்சு வரவில்லை.
யுவன் எழுந்து சென்று அங்கிருந்த மினி குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுக்க கடகடவென வாயில் சரித்துக் கொண்டாள்.
“மாமாவும் அபி அக்காவும் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்காங்க இது தெரியாம நீ பிடிவாதமா மாமாவ கல்யாணம் பண்ணனும்னு அப்பா கிட்ட சொன்னதால அவரோட குடும்பத்தை கடத்தி வச்சு அப்பா உன்ன அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு. அபி அக்கா பத்தி அப்பாக்கு தெரிஞ்சா அவங்க உசுருக்கு ஆபத்து வந்திடும்னு அவங்கள பெங்களூருளையே வச்சிருந்திருக்காரு மாமா.
உனக்கும் அவங்களுக்கும் ஒரே நேரத்துலதான் பிரசவம்…”
“ராதை அபி பொண்ணா..” யுவனை தடுத்த கயந்திகா பட்டென்று கேட்டிருக்க
“ஆமா குழந்தையை நம்ம அப்பாதான் உன் கிட்ட சேர்த்திருக்காரு அபி அக்காக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தெரியும்”
“உன் மாமாக்கு” என்றவள் பார்வையில் என்ன இருந்தது என்று யுவனால் கூட ஊகிக்க முடியவில்லை.
“உன்னால இனிமேல் குழந்தை பெத்துக்க முடியாது யாரோ பெத்த குழந்தையை நீ வளக்குறத விட மாமா குழந்தையே நீ வளர்க்கட்டுமுன்னு அப்பா சொல்லி இருக்காரு. உன்ன சந்தோசமா பாதுகலனா அபி அக்காவ கொலை பண்ணுறதா மிரட்டி இருக்காரு”
“சொன்னவாறு செஞ்சிருந்தா உன் மாமா என் கூட சந்தோசமா வாழ்ந்திருப்பார்” என்ற கயந்திகா கசந்த புன்னகையை சிந்த யுவன் அக்காவை அதிர்ச்சியாக பார்த்தான்.
“அப்போ அப்பா மனசு மாறி திருந்தி சொத்தை எல்லாம் மாமா பசங்க பேருலையும் உன் பேருலையும் எழுதி வச்சிட்டாரு அப்படித் தானே” என்று கயந்திகா கேட்க
“ஆமாம்” என்று தலையசைத்த யுவனுக்கு அக்கா எந்த மாதிரியான முடிவை எடுப்பாள் என்று ஊகிக்கவே முடியவில்லை.
மூன்று நாள் அமைதியாகவே கடந்திருக்க யுவன் ராதையை அழைத்து பேசி இருந்தான்.
அவள் அழைப்பாள் என்று இவன் எதிர்பார்க்க, அவள் அழைக்கவில்லை. அக்கா பொண்ணாக இருந்தவரை பெரிதாக ஒட்டுதலும் இல்லை. அதனால் மனம் விட்டு பேசுவாள் என்று எதிர்பார்த்ததும் தன் தவறு. தன் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் இருக்கிறாளா? அல்லது மனக்கவலையில் இருக்கிறாளா? என்று அறிந்துகொள்ள வேண்டிய கடமை அவனுக்கு இருப்பதாக எண்ணியே அழைத்திருந்தான்.
யுவன் அழைத்தது ராதைக்கு ஆச்சரியம்தான். தந்தையை கேட்டு அழைப்பான் ஒழிய அவளிடம் நலம் கூட விசாரிக்காதவன் அழைத்தது வியப்பில் ஆழ்த்தத்தான் செய்தது.
எந்த மேல் பூச்சும் இல்லாமல் நேரடியாகவே விசயத்துக்கு வந்தவன் “விசயத்த கேள்விப்பட்டதும் எனக்கு ஷாக்தான். சம்பந்தபட்ட உனக்கு எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. என்ன செய்ய போற? அங்கேயே இருக்க போறியா?” கேள்வியோடு நிறுத்த
“இது தானே என் குடும்பம். நான் இங்க தானே இருந்து ஆகனும்” விரக்தியான ஒரு சிரிப்பை உதிர்த்தாள் ராதை.
“ஏன் உனக்கு அவங்கள பிடிக்கலையா?” என்று கேட்டான் யுவன்.
“அவங்க எல்லாரும் நல்லவங்கதான். நான்தான்” என்றவள் தான் இங்கு வந்த காரணத்தை கூறி விசும்ப.
“நீ என்ன தெரிஞ்சா எல்லாம் பண்ண? சரி விடு. அதான் உண்மை தெரிஞ்சி போச்சே. எல்லாம் நன்மைகேன்னு எடுத்துப்போம்” என்றவன் அமைதியாக.
“அம்மா கிட்ட பேசினியா? என்ன சொன்னாங்க? எனக்கு அவங்க கிட்ட பேச ஒரு மாதிரியா இருக்கு. அவங்களும் எனக்கு போன் பண்ணல” கவலையாகவே சொன்னாள் ராதை.
“அட சீ..  மொதல்ல போன் பண்ணி பேசு. அவ உனக்கு அம்மா தானே அது என்றைக்கும் மாறாது. புரியுதா” ராதையை அதட்ட அந்த பக்கம் கனத்த அமைதி நிலவி இருந்தது.
“என்ன சத்தத்தையே காணோம்” யுவன் சீற
“தலையாட்டினேன் மாமா” என்றாள் ராதை அப்பாவியாக.
“அட லூசு” என்று முணுமுணுத்தவனுக்கு சிரிப்பாக இருந்தாலும் “உனக்கு அங்க இருக்க சங்கடமாக இருந்தா இங்க வந்து என் கூட இருக்குறியா?” என்று கேட்க
“வேணாம். பொண்ணுங்க கல்யாணமாகும் வரைக்கும்தான் அப்பா அம்மா கூட இருப்பாங்க. நான் இங்கயே இருக்கேன்” என்று ராதை யதார்த்தமாக சொல்ல
“இதுல மட்டும் இவளுங்க வெவரமாத்தான் இருப்பாளுங்க” உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் “இப்போ உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுறியா?” என்று கிண்டல் செய்ய ராதை திரு திருவென முழிக்கலானாள்.
அவள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையே. அது யுவனுக்கு தெரிந்திருக்க, அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவரத்தான் அவ்வாறு பேசினான். ஆனால் அவள் அதை புரிந்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
“சரி ரொம்ப யோசிக்காத, உடம்ப பாத்துக்க, எதுவானாலும் எனக்கு போன் பண்ணு சரியா” என்று யுவன் சொல்ல ராதை மண்டையை ஆட்டலானாள்.
“மண்டைய ஆட்டினா எனக்கு கேக்காது வாய தொறந்து பேசு. யாப்பா.. அம்மா மாறினதும் உன் குணமும் மாறிருச்சு. தாங்க முடியல. எத்தனை ஷாக்கத்தான் நான் தாங்குவேன்” பொய்யாய் அழுத்துக் கொண்டவன் அலைபேசியை துண்டித்திருக்க ராதையின் முகத்திலும் புன்னகை தோன்றி மறைந்தது.
வீட்டின் கலகலப்பே போய் வீடு அமைதியாக இருந்தது. அபரஞ்சிதாவும் வடிவும் மன அமைதிக்காக கோவிலுக்கு சென்றிருக்க, கண்ணபிரான் வெளியே சென்றிருந்தார்.
ராதை அறையில் அடைந்து கிடக்க, கிருஷ்ணாவும் கோதையும் மதிய உணவுக்கு பின் தங்களது அறைக்குள் நுழைந்திருக்க, வசந்த் அவனது அறையில் புத்தகமும் கையுமாக அமர்ந்திருந்தான்.
அடுத்த வாரம் அவனுக்கு பரீட்ச்சை அதனால் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தான்.
கதவு திறக்கும் சத்தத்தில் ராதையாக இருக்கும் என்று தலையை உயர்த்தாமலையே “வாக்கா” என்றான் வசந்த்.
“என்னடா அக்கா புராணமா?” என்றவாறு உள்ளே வந்தாள் கோதை.
“ஓஹ்.. நீயா? என்ன இந்த பக்கம்?” கிண்டலாகவே கேக்க
“நேத்து வந்தவ அக்கா… அப்போ நான் யாராம்?” பொறாமையில் கொந்தளித்தாள் கோதை.  
“நீ சொக்கா, ஷோக்கா… பேக்கா இருக்க” என்றதும் அவன் தலையில் கொட்டியவள்
“என்ன நக்கல் பண்ணுறியா?”
“இப்போதான் தெரியுதா? சரி எதுக்கு வந்த? மாமா எங்க?”
“அவரு தூங்குறாரு”
“தூங்குறாரா? இந்த நேரத்துல என்ன தூக்கம்”
“நீ பேச்ச மாத்தாத நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றவள் மறைத்து வைத்திருந்த அலைபேசியை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அது கோதையின் பெயரில் கிருஷ்ணாவின் விலாசத்துக்கு அனுப்பப்பட்ட அலைபேசி. அதில்தான் கோதையாக க்ரிஷ்ணாவோடு பேசியதாக கிருஷ்ணா கோதையிடம் கூறி இருந்தான்.
அதை பார்த்ததும் புன்னகைத்த வசந்த் “ஆமா இது என் போன் தான். அது உனக்கும் தெரியுமே! இப்போ என்ன?” என்று கேட்க
அவன் தலையில் மீண்டும் கொட்டியவள் “ஏன் டா நான் பேசினது போல அவர்கிட்ட பேசி இருக்க, லவ் பண்ணுறதா வேற சொல்லி இருக்க? லூசா நீ? யாரு இந்த வேலைய பார்த்தவன தேடிகிட்டு இருக்காரு மாட்டினா மவனே சங்குதான்” என்று சீற
சத்தமாக சிரித்த வசந்த் “நல்லா பாரு நான் ஒரு லவ் மெஸேஜ் கூட அனுப்பல. சார் தான் உருகி உருகி லவ் பண்ணாரு”
“டேய்… நான் தான் அவரை லவ் பண்ணவே இல்லையே அப்பொறம் எதுக்கு பொய் சொல்லி அவர வர வச்சி என் கழுத்துல தாலி கட்ட வச்ச?” ஆரம்பத்தில் தெரிந்திருந்தால் கோப்பட்டிருப்பாளோ. தம்பியின் மீது கோபம் வரவில்லை. கிருஷ்ணா கணவனகா கிடைக்க அவன்தானே காரணம்.
“இப்போ உனக்கு என்ன தெரியணும்?” மிகவும் சாதாரணமாக கேட்டான் வசந்த்.
கோதைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டவள் “சொல்லு முதல்ல இருந்து என்ன நடந்ததுன்னு சொல்லு”  என்றாள் மிகவும் சாதாரண முகபாவனையில்.
புன்னகைத்தவாறே “நான் பர்ஸ்ட் இயர் படிக்கும் பொது மாமா காலேஜுக்கு கல்சருக்காக போனேன். அப்போதான் அவர மொத தடவ அங்க பார்த்தேன். என்னா கெத்து என்னா கெத்து. நான் அப்போவே அவர் பேன் ஆகிட்டேன். அவர்கிட்ட பேச ட்ரை பண்ணேன் முடியல. அடுத்த வருஷமும் போனேன் ஸ்மார்ட்டா இருந்தாரு. அவரை பார்த்துகிட்டே இருக்கணும் போல இருந்தது”
“அவனா நீ” கோதை கோபத்தில் கத்த
“சீ அசிங்கமா பேசாத. மாமாக்கு காலேஜுல இருந்த மாச பார்க்கணுமே”
“அந்த ஈரவெங்காயமெல்லாம் உரிச்சது போதும். விசயத்துக்கு வா…” கடுப்பானாள் கோதை.
அன்னக்கி ஏர்போர்ட்டுல அம்மாகிட்ட பேசிட்டு வரும் போதுதான் பார்த்தேன் மாமா உனக்கு எதோ பேப்பர் கொடுத்துட்டு போறதும் நீ அத தூக்கி வீசிட்டு போறதும். அத நான் எடுத்து பார்த்தேன் அவர் போன் நம்பர்னு புரிஞ்சது பத்திரமா எடுத்து வச்சிக்கிட்டேன்”
“அட நாசமா போன்றவனே அதுக்கு ஏன் டா அவர் கிட்ட நான் பேசுறது போல பேசின?”
“நான் எங்க நீ பேசுறது போல பேசினேன்?   ஜஸ்ட் ஹாய், ஹலோ, அமேரிக்கா போய் செட்டில் ஆக்கிடீங்களா? சாப்டீங்களா? காலநிலை எல்லாம் எப்படி இருக்குன்னுதான் கேட்டேன்”
“அப்போ அவர் என்ன லூசா நான்தான் பேசுறேன்னு நினைச்சி லவ் பண்ணுறதா சொல்ல” கடுப்பானாள் கோதை. 
“மெஸேஜ் பண்ணா உடனே பதில் வராதே. லெட்டர் போடுறது போல லேட் ஆகும் சோ அதிகமா பேசியதும் இல்ல. நான்தான் பேசுறேன்னு சொல்ல சந்தர்ப்பமும் அமையல. என்னோட ப்ரொபைல் பிக்ச்சர் வேற நீயும் நானும் சேர்ந்து எடுத்தத தான் வச்சிருந்தேன். அதனால அவர் நீதான் பேசுறதா நினைச்சுகிட்டு இருந்திருக்காரு” என்ற வசந்த் சிரித்து விட்டு “அப்பொறம் அவர் மெஸேஜ் எல்லாம் ஒரு பொண்ணுகிட்ட பேசுற மாதிரி இருந்தது. அப்போரம்தான் புரிஞ்சது உன் கிட்ட பேசுறதா நினைச்சி பேசுறாருனு”
“அடப்பாவி அப்போவாச்சும் சொல்லித் தொலைக்க வேண்டியது தானே” முறைத்தாள் கோதை.
“அவர் கிட்ட சொல்லுறதுக்கு பதிலா உன் கிட்ட சொல்லி உன்ன அவரோடு சேர்த்து வைக்கலாம்னு நெனச்சேன்” என்ற தம்பியை
“நீ எனக்கு தம்பியா மாமாவா?”
“மாமா மாதிரி புருஷன் கிடைச்சிருக்கே இதுக்கு மேலையும் பேசுவ” என்றவன் “சரி நீ ஹாஸ்டல்ல இருந்து வந்த பிறகு பேசிக்கலாம்னு இருந்தேன். உன் மூட் பார்த்து பொறுமையா பேச சந்தர்ப்பம் பார்த்துகிட்டு இருந்தேன். அதுக்குள்ள அப்பா உனக்கு மப்புல பார்த்துட்டாரா? நீ வேற ஓகே சொல்லிட்ட, என்ன பண்ணுறதுனு தெரியல. அதனால “எனக்கு கல்யாணம் சீக்கிரம் வரவும்” என்று மெஸேஜ் பண்ணி கல்யாண பத்திரிகையையும் அனுப்பி வச்சேன்” என்றான் வசந்த்.
எவ்வளவு தீவிரமான ஒரு காரியத்தை சாதாரணமாக சொல்கிறான் கோபத்தில் கொதித்தவள் “இருடா… உன் மாமாகிட்ட சொல்லி உன்ன போடுறேன்” வசந்தின் தலையில் நன்றாக கோதை கொட்டிக் கொண்டு இருக்கும் பொழுது உள்ளே  நுழைந்தான் கிருஷ்ணா.

Advertisement