Advertisement

அத்தியாயம் 23
கோதைக்கு ராதையை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. அம்மாச்சி கூறியது போல் அவள் எதோ ஒரு திட்டத்தோடு வீட்டுக்குள் வந்திருப்பாள் என்று புரிந்தது. அவளை வீட்டை விட்டு மட்டும் துரத்தியடித்தால் இந்த பிரச்சினை முடிந்து விடாது. அவள் இனிமேல் இந்த வீட்டுக்குள்ளேயே நுழையாதபடி செய்ய வேண்டும். இல்லையென்றால் அன்னைக்குதான் ஏதாவது ஆபத்தை விளைவிப்பாள் என்று உணர்ந்தாள் கோதை.
தான் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து இத்தனை வேலைகளை பார்த்திருக்கின்றாள். அவளை ஏதாவது செய்தே ஆகா வேண்டும் என்ற கோபத்தில் தான் வசந்த்திடம் கொடுத்தனுப்பிய உணவில் பேதி மாத்திரைகளை கலந்துக் கொடுத்தாள். 
அவளும் வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றாள் அக்கா அக்கா என்று வசந்த் பாசமழையை பொழிந்து உருகிக் கரைவதை. ராதை அதற்கு தகுதியானவளே இல்லை என்று புரிய வைப்பதை விட அவனை பயன்படுத்திக்கொள்வதுதான் சிறந்தது என்று கோதையின் சிறு மூளை திட்டம் தீட்டியது.
ராதையின் சுயரூபம் தந்தை அறிந்துக் கொண்டால் போதும் அவளை தந்தையே சென்னைக்கு அனுப்பி வைப்பார் என்று கணவனையும், தம்பியையும் ஏதேதோ காரணம் கூறி வெளியே அனுப்பி வைத்தவள் தந்தையிடம் வந்து பொறுமையாக பேசினாள்.
“அப்பா படில யாரும் தெரியாம எண்ணெயை கொட்டி இருக்க முடியாது. தெரியாம கொட்ட அது ஒன்னும் சமையலறை கிடையாதே! அதுவும் கொட்டி இருந்தது முடிக்கு போடுற எண்ணெய் இல்ல. சமையலுக்கு யூஸ் பண்ணுற எண்ணெய்.  கொட்டி இருந்தா உடனே க்ளீன் பண்ணி இருக்கணும். இல்ல யார் கிட்டயாவது சொல்லி யாரையும் வர விடாம பாத்துகிட்டு இருக்கணும். இது வேணுமென்னே பண்ணா மாதிரி இருக்கு” என்றதும் கண்ணபிரான் யோசிக்கலானார்.
“என்னம்மா சொல்ல வர? ராதை எதுக்குமா அபிய காயப்படுத்த நினைக்கணும்?” தனது மகள் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் பேசினார் கண்ணபிரான்.
“இங்க பாருங்கப்பா.. உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கு. அம்மா இரண்டாம் தாரம் என்று தெரிஞ்ச பிறகும் உங்க மேல எனக்கு எந்த கோபமும் வந்ததில்ல. ஏன்னா நீங்க எங்க மேல எந்தளவுக்கு பாசம் வச்சிருக்கீங்கனு எனக்கு தெரியும். அதே மாதிரிதான் அவளுக்கும் உங்கள பத்தி தெரியும். எதோ காரணத்துக்காக இங்க வந்திருக்கா. அதனால ஏதேதோ பண்ணிக்கிட்டு இருக்கா. அது என்னவென்று இன்னக்கி உங்க கண்ணால பார்த்து, காதால கேட்டு ஒரு முடிவுக்கு வாங்க” என்று கோதை சொல்ல அரைமனதாக தலையசைத்தார் கண்ணபிரான்.
தந்தை இதற்கு சம்மதித்ததே பெரிய விஷயம் தான் பேசும் பேச்சுக்களை பொறுமையாக கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமே “அப்பா நான் உங்க பொண்ண கொஞ்சம் அப்படி இப்படி பேசுவேன். உங்களுக்கு என் மேல கோபம் கூட வரலாம். கொஞ்சம் பொறுமையாக இருந்தா அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கலாம். தெரிஞ்சா தானே அதுக்கு உண்டானத பண்ண முடியும்” என்றாள் கோதை.
மறுவீட்டுக்கு வந்த கோதை தங்குவதே இன்னும் நாங்கோ! ஐந்தோ நாட்கள்தான். ராதையை பழிவாங்குவது போல் சின்ன சின்ன விடயங்களை செய்யலாம். அதனால் அவளின் உண்மை முகம் வெளியே வராதே! தந்தையிடம் தெரியப்படுத்துவதுதான் சரியென்று இந்த முடிவுக்கு வந்திருந்த கோதை பால் கிளாஸை எடுத்து சென்று, நீர் அபிஷேகம் செய்து அக்காவை எழுப்பி விட்டு வந்திருந்தாள்.
தொப்பலாக நனைந்த ராதை கீழே வர இன்னும் அரைமணித்தியாலம் செல்லும் என்பதால் கணவனையும் தம்பியையும் வெளியே அனுப்பி வைத்து விட்டு அன்னைக்கும், பாட்டிக்கும் மாத்திரைக்கு கொடுத்து அவர்களை தூங்க வைத்து தந்தையை தங்களது அறையில் இருக்கும்படி கூறினாள்.
குளித்து விட்டு வந்த ராதை பசியில் உண்ண உணவு தேட அங்கே ஒன்றுமில்லை. கண்ணபிரானுக்கு மனம் துடித்தது. அவளின் பசிதான் கோபத்தை வரவழைக்க முதல்படி என்று கோதைக்கு நன்கு தெரியும். அதனாலே உணவுகளை எதுவும் வைக்கவில்லை காலி வயிறு வேறு கோபத்தீயை எரிய வைக்கும்.
ஆப்பிளை கடிக்கும் ராதையிடம் வேண்டுமென்றே தான் சென்று வம்பிழுத்தாள் கோதை.
கோதையின் நேரடி மிரட்டலுக்கு ராதை சொத்தை எழுதி கொடுக்கும்படி கூறியது கண்ணபிரானுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கயந்திகாவின் மொத்த உருவமாகவே ராதையை கண்டார் கண்ணபிரான்.
அடுத்து ராதை சொன்ன சொத்தும் வேணும், அப்பாவும் வேணும் என்றதில் ஒரு தந்தையாக கண்ணபிரானின் மனம் நிம்மதி அடையத்தான் செய்தது.
ஆனால் ராதை அடுத்து பேசியது கண்ணபிரானுக்கு கண்மண் தெரியாத கோபத்தை வர வைத்திருந்தது.
ஒரு பெண்ணின் பிடிவாதம்தான் அவர் வாழ்க்கையில் அவர் காதலித்த பெண்ணோடு சந்தோசமாக வாழ முடியாமல் இத்தனை ஆண்டு காலமாக மனதளவில் துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.
தன் காதலித்து மணந்த ஆசை மனைவிக்கு பண்ணிக் கொடுத்த சத்தியத்துக்காகவும் தாலி கட்டிய ஒரே பாவத்துக்காகவும் கயந்திகாவோடு வேண்டா வெறுப்பாக குடும்பம் நடாத்த ஆரம்பித்தார்.
பிடிக்காத ஒன்றை செய்வது எவ்வளவு கொடுமையோ! அதே அளவு ரண வேதனை காதலித்தவளுக்கு துரோகம் செய்கிறோம் என்ற எண்ணம் வரும் பொழுதெல்லாம் அதை தாங்க முடியாமல் தலை வெடித்து விடுவது போல் வலிப்பதும். அந்த கோபத்தை யாரிடம் காட்டுவது என்று கூட தெரியாமல் குடிப்பதும். எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையை எண்ணி வருந்தி யாருக்கும் தெரியாமல் கண்ணீர் வடிக்க மட்டுமே தன்னால் முடியும் என்று எத்தனை நாட்கள் துடித்திருப்பார்.
அதே வேதனையை தன் சின்ன மகளுக்கு தன் மூத்த மகள் கொடுப்பதா? அதை அவளே அவள் வாயால் சொல்லவும் செய்வாளோ? தன்னுடைய இத்தனை வருட கோபத்தையும் தான் இடியாய் ராதையின் கன்னத்தில் இறக்கி இருந்தார் கண்ணபிரான்.
ஒரு மனிதன் போதையில்தான் உண்மைகளை உளறுவான் என்பது மட்டுமல்ல. கோபத்தில் கூட சில நேரம் உண்மைகளை கக்கி விடுவான் என்பதும் உண்மையே.
அபரஞ்சிதாவுக்கும், கயந்திகாவுக்கும் எந்த விதமான உறவும் இல்லை. அதனால் அபரஞ்சிதாவை பற்றி சிந்தனையும் கவலையும் கயந்திகாவுக்கு வரப்போவதும் இல்லை. ஆனால் ராதையும் கோதையும் அப்படி இல்லையே சகோதரிகள் ஆயிரன்றே. ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் இப்படி எதிரிகள் போல் இருக்கலாமா? இந்த மாதிரி சிந்தனைகள் இவர்களுக்குள் வரலாமா?  
கோபத்திலும் எதோ ஒரு வேகத்திலும் ராதையை பெற்றது அபரஞ்சிதா என்று சற்றும் யோசிக்காமல் கூறி விட்டார்.
எத்தனை வருடங்கள் இந்த உண்மையை தனது மனதில் பூட்டி வைத்திருந்திருப்பார். தனது காதல் மனைவி அபரஞ்சிதாவுக்கு கூட தெரியக் கூடாது என்று மறைத்து வைத்திருந்த உண்மை அவள் சட்டையை பிடித்து உலுக்கவும்தான் சுயநினைவுக்கே வந்தார் கண்ணபிரான்.
“சொல்லுங்க சொல்லுங்க அப்போ என் குழந்தை இறந்து போகலையா? இத்தனை வருஷமா நீங்க என்ன ஏமாத்திகிட்டுதான் இருந்தீங்களா? உங்களுக்கும் கயந்திகாகும் கல்யாணம் ஆகிருச்சுனு தெரிஞ்ச உடனே நான் உங்க வாழ்க்கைல இருந்து விலக்கிப் போக்கிடலாம்னு தானே இருந்தேன். ஆனா உங்க அக்கவுண்டன் வந்து பேசி உங்க நிலைமையை சொல்லி புரிய வச்சி. நீங்க வந்து பேசி அப்பொறம் தானே நாம ஒண்ணா வாழவே முடிவெடுத்தோம்.
உங்கள காதலிச்ச பாவத்துக்காக என் அம்மாவோட ஆசையை நிறைவேத்தம்மா எல்லாத்தையும் விட்டுட்டு உங்களுக்காக வந்தேன். இரண்டாம் தாரம் என்ற பட்டம்தான் கொடுத்தீங்க. உங்க மேல இருந்த காதலினால பொறுமையா இருந்தேன். ஆனா என் பொண்ணையே என்கிட்டே இருந்து பிரிச்சு அவ கைல கொடுத்து இருக்கீங்க? சொல்லுங்க? சொல்லுங்க? ஏன் இப்படி பண்ணீங்க?” அபரஞ்சிதா கதறித் துடிக்கலானாள்.  
எந்த உண்மையும் ஒருநாள் வெளியே வரத்தான் செய்யும். எத்தனை நாள் மூடி மறைக்க முடியும்? ராதையை பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டிய நேரம் இதுவோ! என்று கண்ணபிரான் யோசிக்க “அப்பா அப்போ நான் இந்தம்மா பொண்ணா?” தொண்டையடைக்க ராதை தந்தையின் முன் வந்து நின்றாள். 
யாரை முழுமனதாக வெறுத்தாளோ! யாரை பழிவாங்க துடித்தாளோ!  யாரை காயப்படுத்த நினைத்தாளோ! அவள் வயிற்றில் பிறந்திருக்கின்றாள். இதை விட வேதனை எதுவும் உண்டா. தாங்க முடியாமல் கதறி அழ ஆரம்பித்தாள் ராதை.
கோதைக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என்ன நடந்தது என்று தெரியாவிடினும் தந்தை உண்மையை மறைத்திருந்தால் கண்டிப்பாக அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று முழுமனதாக தந்தையை நம்பினாள்.    
“அம்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத. உனக்கு அப்பா மேல நம்பிக்கை இல்லையா? அவர் அப்படி ஏதாவது ஒரு காரியம் பண்ணி இருந்தா அதற்கும் ஒரு காரணம் இருக்கும். புரிஞ்சிக்க. பொறுமையா என்னனு விசாரி” கோதை பொறுமையாக அன்னைக்கு எடுத்து சொல்ல
“இன்னும் என்னடி பொறுமையா விசாரிக்க வேண்டி இருக்கு? இத்தனை வருஷமா வாழ்ந்த வாழ்க்கைல அவர் எனக்கு மனக்கஷ்டத்தை மட்டும்தான் கொடுத்திருக்கார். இன்னக்கி மரண அடியே கொடுத்துட்டாரு” என்று அபரஞ்சிதா ஒரு பக்கமாக கதறி அழ ஆரம்பித்தாள்.
மனைவியின் அந்த வார்த்தையில் முற்றாக உடைந்து போனார் கண்ணபிரான்.
தூக்கம் கலைந்து வாசலுக்கு வந்த வடிவு என்ன? ஏதுன்னு? விசாரிக்க அபரஞ்சிதா ஏங்கி ஏங்கி அழுதவாறே சொல்லலானாள்.
“என்னடி சொல்லுற? பார்க்க மாப்பிளையை மாதிரியே இருந்தாலும் இவள பார்க்கும் போது உங்க அப்பா ஜாட இருக்குற மாதிரி தோணும். அப்போதெல்லாம் உன் கிட்ட ஜாட மாடையா கேட்டுப் பார்த்தேனே நீயும் உனக்கு ரெண்டு பசங்கதான்னு சொன்னியா நானும் விட்டுட்டேன். அவளுக்கு பொறந்தவ என்ற எண்ணம் தலை தூக்குறதால நானும் பெருசா யோசிக்கல” என்ற வடிவு
“ஏன் மாப்புள இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு எப்படி என் பொண்ணு கூட ஒண்ணுமே நடக்காத மாதிரி குடும்பம் நடத்த முடிஞ்சது உங்களால” கோபத்தில் கத்த ஆரம்பித்தார்.
என்ன பேசுவதென்று புரியாமல் கண்ணபிரான் அமைதியாக அமர்ந்திருக்க, “அம்மாச்சி கத்தாத. என்ன நடந்ததுன்னு அப்பா சொல்லுவாரு” என்ற கோதை தந்தையை பேச தூண்டினாள்.
மௌனத்தை உடைத்த கண்ணபிரான் பேச ஆரம்பித்தார். “நான் அபிய கல்யாணம் பண்ணது அதன் பிறகு சென்னை வந்தது. எனக்கும் கயந்திக்கும் கல்யாணம் ஆனது மூணு மாசமா நான் அபிய பார்க்காம இருந்தது. இது எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தானே!” என்று விட்டு வடிவை பார்க்க, தலையத்த வடிவு மேலே சொல்லவும்படி கைசைத்தார்.
“அபியும் கயந்திகாவும் ஒரே நேரத்தில்தான் கர்ப்பமா இருந்தாங்க. அபிய பெங்களூருல தனியா விட முடியாததுனால யாருக்கும் தெரியாம அக்கவுண்டனோட உதவியோடு சென்னைல ஒரு வீட்டை எடுத்து அங்க தங்க வச்சிருந்தேன்.
கயந்திகா ஓட்டிக்கொண்டு போன வண்டி ஆக்சிடன்ட் ஆகி ரொம்ப சீரியஸ்ஸா இருந்தா. குழந்தையும் இறந்தே பிறந்தது. அவளுக்கு இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு டாக்டர் வேற சொல்லிட்டாரு. நானும் மாமாவும் என்ன பண்ணுறதுனு புரியாம ஹாஸ்பிடல்ல அமர்ந்திருந்தோம்.
அந்த நேரம்தான் அபிக்கு வலி வந்து என்ன பலதடவை போன்ல கூப்பிட்டு இருக்கா. நான் கயந்திகா கூட இருந்ததுனால போன கவனிக்கல.
வலி பொறுக்க முடியாம அக்கவுண்டனுக்கு போன் போடவும் அவரு அபிய கயந்திக்கா இருக்கும் ஹாஸ்பிடள்ள அட்மிட் பண்ணிட்டாரு. பண்ணவரு விசயத்த என் கிட்ட சொல்லவும் நான் அபிய போய் பார்த்தேன். அவ பிரசவ வார்டுல இருந்தா. வலில துடிச்சிகிட்டே பேசினா.
அந்த ஹாஸ்பிடல் டீன் மாமாக்கு தெரிஞ்சவரு என்ன அங்க பார்த்ததும் மாமாகிட்ட சொல்லிட்டாரு. இந்த விஷயம் எனக்கு தெரியாது. அபிக்கு குழந்தை பிறந்து என் கைல கொடுப்பாங்கனு நான் காத்து கிடந்தா குழந்தை இறந்து பிறந்ததா டாக்டர் வந்து சொன்னாங்க.
ஒரு குழந்தை ஆக்சிடண்ட்டுனால இறந்து போச்சு. ஒரு குழந்தை என் கவன குறைவால் இறந்து போச்சுன்னு நான் அபிய கட்டிக்கொண்டு அழுதேன்” என்று அபரஞ்சிதாவை பார்த்தவாறு கூற, ஒரே நாளில் இரண்டு குழந்தைகளை இழந்து விட்டு அன்று கணவன் அழுத அழுகை பொய்யில்லை என்று மட்டும் அபரஞ்சிதாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
கயந்தி மயக்கத்துல இருந்ததுனால நான் அபி கூடவேதான் இருந்தேன். மாமாவும் என்ன கண்டுக்கல. அபி குணமடைஞ்சதும் வீட்டுக்கு போய்ட்டா. அவளை பாத்துக்க ஆள் ஏற்பாடு செஞ்சேன். கயந்தி கண் முழிச்சா நான் அவ கூட இருக்கணும் இல்லனா மாமா கேள்வி கேப்பாரு. அபிய  பத்தி தெரிஞ்சா பிரச்சினையாகும்னு நான் பயந்தேன்.
நான் கயந்திகா ரூமுக்கு போனா அங்க என் குழந்தைனு ஒரு குழந்தை இருந்தது. எனக்கு ஒன்னும் புரியல” என்ற கண்ணபிரான் கண்ணீரோடு அன்று நடந்தவைகளை சொல்லிக்கொண்டிருந்தார்.
“வாங்க மாப்புள. உங்க பொண்ணு அழகா இருக்கா இல்ல” என்றார் வேலுநாயகம்.
“மாமா இது யார் குழந்த? கயந்தி குழந்தைதான் இறந்துட்டதா டாக்டர் சொன்னாரே” புரியாது கண்ணபிரான் மாமனாரை பார்த்தார்.
“என் பொண்ணு முழிச்சிக்க போறா வாங்க வெளிய போய் பேசிக்கலாம்” என்ற வேலுநாயகம் மருமகனை அழைத்து சென்று “உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சுனு சொன்னப்போ அந்த பொண்ண கொல்ல கூட நான் தயங்கள. ஆனா அந்த பொண்ணால இன்னக்கி என் பொண்ணு உசுரோட இருக்கா”
“என்ன சொல்லுறீங்க?” கண்ணபிரானுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவே இல்லை.    
“என்ன மாப்புள இன்னும் புரியலையா? உங்க காதல் மனைவி அபிக்கு பொறந்த கொழந்தைதான் அது”
“மாமா” கண்ணபிரான் அதிர்ச்சியடைய
“இங்க பாருங்க மாப்புள. என் பொண்ணு சந்தோஷத்துக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். இனிமேல் அவளுக்கு கொழந்த பொறக்காதுனு டாக்டர் சொல்லிட்டாரு. யாரோ பெத்த குழந்தைய என் பொண்ணு வளர்க்குறத விட உங்க பொண்ணையே அவ பொண்ணா வளர்க்கட்டுமே. அதான் டாக்டர் கிட்ட சொல்லி குழந்தையே இடம் மாத்திட்டேன்” வேலுநாயம் சாதாரணமாக சொல்ல
“மாமா தப்புக்கு மேல தப்பு பண்ணுறீங்க. ஏற்கனவே என் அபிய  என் கிட்ட இருந்து பிரிச்சி என்ன வலுக்கட்டாயமா உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க. அந்த பாவம்தான் உங்க பொண்ணுக்கு கொழந்த பாக்கியம் கூட இல்லாம போச்சு. மேலும் பாவம் பண்ணாதீங்க” கண்ணபிரான் ஆவேசமாக கத்த.
“புரியுது மாப்புள. இப்போ எல்லாம் பண்ணுற பாவத்துக்கு இந்த ஜென்மத்துலையே அனுபவிச்சிட்டுதான் செத்து போறாங்க. அதனாலதான் உங்க அபிய ஒன்னும் பண்ணல” சிறு முறுவலோடு சொல்ல மாமனாரை அதிர்ச்சியாக பார்த்தார் கண்ணபிரான்.
“என்ன பாக்குறீங்க. உங்க அபிக்கு இன்னும் நிறைய குழந்தைகளை பெத்துக்க முடியுமே. உங்க ரெண்டு பேர் நடுவுளையும் நான் வர மாட்டேன். அதே மாதிரி நீங்க என் பொண்ணையும் சந்தோசமா பார்த்துக்கோங்க. நான் இருக்கும்வரைக்கும் உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்குனு என் பொண்ணுக்கு தெரிய வராது” என்று அன்றே வாக்கு கொடுத்திருந்தவர் அபரஞ்சிதாவை சந்திக்க செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை.
ராதையை பற்றி உண்மையை அபரஞ்சிதாவிடம் கூற முடியாமல் தினம் தினம் மனவேதனையில் தவிக்கலானார் கண்ணபிரான். அவரின் வேதனைக்கு மருந்தும் அபரஞ்சிதா என்றாகிப்போக ராதை கிடைத்து ஒரு வருடத்துக்குள் அபரஞ்சிதா மீண்டும் கருவுற்று கோதையை பெற்றெடுத்தாள். வேலுநாயக்கத்தால் ஆபத்து வராவிட்டாலும் கயந்திகா அறிய நேர்ந்தால் பிரச்சினை உருவாகக் கூடும் என்று அபரஞ்சிதாவை பெங்களூரில் குடி வைத்தார் கண்ணபிரான்.
கோதை பிறந்து இரண்டு வருடங்களில் வசந்த் பிறக்க அபரஞ்சிதா தனது முதல் குழந்தையை முற்றாக மறந்திருந்தாள்.
அதன்பின்தான் வடிவு அவர்களோடு சமாதானமாகி வாழ வந்தது.
தொண்டையில் கேன்சர் வந்து இறந்து போனார் வேலுநாயகம். மருமகனை காணும் பொழுதெல்லாம். “பண்ண பாவத்துக்கு அனுபவிக்கிறேன்” என்பதை கூற மறக்க மாட்டார். கடைசி காலங்களில் பேசக் கூட முடியவில்லை. சைகையால் மட்டும்தான் கூறுவார்.
அவரின் குற்றஉணர்ச்சியா? பாவ விமோட்சம் கிடைக்க என்று செய்தாரா சொத்துக்களை கண்ணபிரானின் வாரிசுக்கு அவரது நேரடி வாரிசான யுவனுக்கும்  எழுதி வைத்திருந்தார்.
வேலுநாயகம் சொன்னது போல் அவர் இருக்கும்வரை கயந்திகாவுக்கு அபரஞ்சிதாவை பற்றின எந்த உண்மையும் தெரியவரவில்லை. அவர் இறந்த பின்தான் கணவன் எங்கு செல்கிறார் என்ற சந்தேகம் முளைத்து யுவனை வைத்து வேவு பார்த்து கண்டு பிடிக்க சொன்னாள்.
ஆனால் யுவன் ஒருபடி மேல் சென்று தந்தை சொத்துக்களை எழுதி வைத்திருப்பது வரை கண்டு பிடித்து கோதையை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டான்.
“என்ன மன்னிச்சுடு அபி உனக்கு மனக்கஷ்டத்தை மட்டுமே கொடுத்துட்டேன். உன்ன பாக்குற போதெல்லாம் உண்மைய சொல்ல முடியாம குற்ற உணர்ச்சில தவிச்சேன். மாமா இறந்த பிறகு உண்மைய சொல்லலாம்னு பல தடவ யோசிச்சேன். உண்மைய ஏத்துக்குற சக்தி உனக்கிருந்தாலும், நம்ம பொண்ணு நிலைமையை நினைச்சி அமைதியா இருந்துட்டேன்” என்ற கண்ணபிரானை வெறுமையாக பார்த்தாள் அபரஞ்சிதா.
“சொல்லி இருக்கலாம் இல்ல. அவ என் பொண்ணுன்னு சொல்லி  இருக்கலாம் இல்ல. தூரத்துல இருந்தாவது நான் அவளை பாத்திருப்பேனே” அபரஞ்சிதாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகிக் கொண்டிருந்தது.
ராதையால் இந்த அதிர்ச்சியை தாங்க முடிய வில்லை. சொந்த வீட்டில் அந்நியமாக ஒரு மூலையில் அமர்ந்து என்ன பேசுவதென்று புரியாமல் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா அதான் அப்பா மேல எந்த தப்பும் இல்லனு தெரிஞ்சி போச்சே. உனக்கு ஏதாவது ஆகுமோன்னு தானே யோசிச்சு யோசிச்சு ஒவ்வொன்னத்தையும் பண்ணி இருக்காரு. இன்னும் எதற்கு அவர் மேல கோவத்தை காட்டுற? அந்த தாத்தா இறந்த பிறகு எங்க உண்மைய சொன்னா நீ கஷ்டப்படுவியோ! எங்க அக்காவால அத ஏத்துக்க முடியாம திண்டாடுவாளோ என்றுதான் இத்தனை நாளா அமைதியா இருந்திருக்காரு. கொஞ்சம் நீ அப்பாவ புரிஞ்சிக்க ட்ரை பண்ணு”  என்று கோதை சொல்ல அபரஞ்சிதாவும் மூத்த மகளைத்தான் பார்த்தாள்.
“நடந்தது நடந்து போச்சு அபி. இனி நடக்க வேண்டியதை பாரு” என்றார் வடிவு.
ராதை பாவமாக அமர்ந்திருக்க, அபரஞ்சிதா நொண்டி நொண்டி மகளிடம் சென்று “என்ன மன்னிச்சிக்க. நான் பெத்த பொண்ணுன்னு தெரியாம உன்ன இத்தனை நாளா பாத்திருக்கேன்” என்று கண்ணீர் வடிக்க
“அம்மா… நீதான்மா என்ன மன்னிக்கணும்” என்ற ராதை அபரஞ்சிதாவை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
வெளியே சென்ற வசந்தும் கிருஷ்ணாவும் சிரித்துப் பேசியவாறே பைகளோடு உள்ளே நுழைய அனைவரும் கண்கள் கலங்கியவாறு இருப்பதைக் கண்டு வசந்த் வடிவை முறைத்து விட்டு என்ன நடந்தது என்று கோதையிடம் விசாரிக்க, கிருஷ்ணாவும் கண்களாலே மனைவியிடம் கேள்வி எழுப்பினான்.
கண்ணபிரான் சொன்னதை மாத்திரம் சுருக்கமாக கோதை சொல்லி முடிக்க, அப்பட்டமான அதிர்ச்சியை முகத்தில் காட்டினான் வசந்த்.
க்ரிஷ்னா அதிர்ச்சியடையவில்லை. அதிகாரம், பதவி, பணபலம் இருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்லும் கனகவேலுக்கு பிறந்தவனல்லவா அவன். வேலுநாயகம் கண்ணபிரானை எப்படியெல்லாம் ஆட்டிவைத்திருப்பார் என்று அவனுக்கு நன்றாக புரிந்தது.
“திருமணம் செய்ய பெண் பார்த்தால் ஒன்னு பையனுக்கு பெண்ணை பிடிக்காது. இல்ல பெண்ணுக்கு பையன பிடிக்காது. ரெண்டு பேருக்கும் பிடித்திருந்தால் ஜாதம் செட் ஆகலானு குண்டை தூக்கி போட்டுடுவாங்க.
காதல் கல்யாணத்துல ஜாதி பிரச்சினை. அப்படியே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிற கண்ணபிரான் போண்றவங்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை. என்னத்த சொல்ல. கடவுள் பிரச்சினையை மட்டும் டிசைன் டிஸைனா வைச்சிருக்கான் டா” கிருஷ்ணாவின் மனம் கூவிக் கொண்டிருக்க
“என்ன பண்ணலாம் க்ரிஷ்” என்று வந்து நின்றாள் கிருஷ்ணாவின் மனையாள்.
“உன் மாமாகு போன போடு. அவன் மூலமாத்தான் அந்தம்மா கிட்ட பேசணும்” என்று கிருஷ்ணா சொல்ல கோதை உடனே யுவனை அழைத்தாள்.
“இங்க கொடு நான் பேசுறேன்” என்று கிருஷ்ணா அலைபேசியை வாங்கும் பொழுதே “என்ன மாமா பெத்த ரத்தினமே இந்த மாமாவ நியாபகம் வச்சு கூப்புடற?” என்று யுவன் பேச ஆரம்பித்தான்.
“நான் அவ புருஷன் பேசுறேன்” என்று கிருஷ்ணா சொன்னதும்
“நீயாடா தம்பி” என்று சமாளித்தான் யுவன்.
“என்ன சார் என் பொண்டாட்டி கிட்ட கொஞ்சுற மாதிரி தெரியுது. நான் என்றதும் சமாளிப்பா” என்று கிண்டல் செய்ய
“அவ என் மாமா பொண்ணு. நான் கிண்டல் பண்ணுவேன். மடில தூக்கி வச்சி கொஞ்சுவேன். என்னவேனா செய்வேன் தம்பி. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்று யுவன் சிரிக்க
“அதெல்லாம் அவளுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் அதான் கொஞ்சவும், கெஞ்சவும் நானிருக்கேனே” கடுப்பானான் கிருஷ்ணா.
“யோவ் சொல்ல வேண்டியதை சொல்லுயா?” கோதை கணவனின் முதுகை சுரண்டி சைகை செய்ய விழித்துக் கொண்டவன் மெதுவாக விஷயத்தை கூறலானான்.
கிருஷ்ணா கூறிய விஷயங்கள் யுவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் தந்தை வசந்துக்கும், கோதைக்கும் சொத்துக்களை எழுதி வைத்ததன் பின்னால் இது போன்ற ஏதாவது பெரிய காரணம் இருக்கும் என்று எண்ணி இருந்ததனால் உடனே தன்னை மீட்டுக்கொண்டான்.
“ராதை எங்க இப்போ? ஈஸ் ஷி ஓகே?” உடனே அக்கா மகளின் நிலை என்னவாக இருக்கும் என்று புரிந்துக் கொண்டு விசாரிக்கலானான்.
“என்ன பாசம் பொங்குதோ. அவ மட்டுமல்ல அத்தையும் அழுதுகிட்டுதான் இருக்காங்க. உன் அக்கா கிட்ட விசயத்த எப்படி சொல்ல போறான்னு யோசி” என்ற கிருஷ்ணா அலைபேசியை அனைத்திருந்தான்.

Advertisement