Advertisement

அத்தியாயம் 22
கிருஷ்ணாவும் கோதையும் பெங்களுர் விமான நிலையத்திலிருந்து வீட்டை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணாவுக்கு தேர்தல் முடியும்வரை எங்கும் செல்ல மனம் வரவில்லை. தந்தை அடுத்த நொடி என்ன செய்வாரோ! என்ற டென்ஷன் இருந்துகொண்டேதான் இருந்தது.
அண்ணன் அருள்வேலிடம் தந்தை துணை முதல்வராக திட்டம் போடுவதை கூறினான் கிருஷ்ணா. கனகவேலை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும் ஏதாவது காரணம் சொல்லி அருள்வேலை சரியாக வேலை செய்ய விட மாட்டார்.  
அவருக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போலவே நடந்து கொண்டு அண்ணனின் நிம்மதியை கெடுத்து விடுவார் என்றுதான் எண்ணினான்.
“என் முதுகுக்கு பின்னாடி இப்படி ஒரு வேலை நடக்குதோ” நான் பார்த்துக்கொள்கின்றேன் என்றான் அண்ணன்.
அருள்வேல் அன்று கோபத்தில் வத்சலாவின் வாழ்க்கையை அனைவரும் கெடுத்து விட்டதாக கூறியதாக கிருஷ்ணா எண்ணி இருக்க, அது அவ்வாறில்லை. கோபத்தில் மட்டும் கூறவில்லை. அண்ணனின் நெஞ்சம் முழுக்க எரிந்து கொண்டிருக்கும் வெறுப்பில் கூறியது என்று தம்பிதான் உணரவில்லை.   
வத்சலாவின் இந்த நிலைக்கு யசோதாவும், கிருஷ்ணாவும் காரணமில்லை என்றாலும் கனகாவேல்தான் முழுக்க முழுக்க காரணம் என்று அருளின் ஆழ்மனம் எண்ணுவதை கிருஷ்ணா அறிந்திருக்கவுமில்லை. அதன் வெளிப்பாடே அந்த பேச்சு என்று புரிந்துகொள்ளவுமில்லை. அதனால் அண்ணனின் திட்டங்களை அவன் அறியவுமில்லை.
அண்ணன் முதலமைச்சர் ஆனால் அவன் தந்தையின் தலையீடு இல்லாமல் நிம்மதியாக வேலை பார்க்க வேண்டும் என்று மட்டும்தான் தம்பியாக எண்ணினான். காரணம் தந்தை அண்ணனை ஒரு தலையாட்டி பொம்மையாக வைத்திருப்பது கண்கூடாக அவன் கண்டிருக்கின்றானே! ஆனால் அருள்வேல் தான் ஒரு தலையாட்டி பொம்மையல்ல என்று கனகவேலுக்கு புரியவைத்ததனால் தான் இன்று அவன் முதலமைச்சர் வேற்பாளராகவே இருக்கின்றான் என்று க்ரிஷ்ணாவுக்குத்தான் தெரியவில்லை. 
“இல்ல அண்ணா இந்த நேரத்துல நான் உன் கூட இருந்தா தானே நல்லது. இப்போ போய் பெங்களூர் போக சொல்லுற?” அண்ணனை எண்ணி கவலையடைந்தான் தம்பி.
“எங்க அப்பாவ சமாளிக்க ரெண்டு பேர் வேணுமா? நான் பார்த்துக்கொள்ளுறேன் டா நீ நல்லபடியா போய்ட்டுவா” தம்பியை வழியனுப்பி வைத்தான் தமையன்.
பெங்களூர் கிளம்பும் முன்னதாக தந்தையை சந்தித்தவன் “அண்ணனுக்கு ஏதாவது கொடச்சல் கொடுத்தீங்க, அப்பொறம் நான் பொல்லாதவனாகிடுவேன்” என்று மிரட்டி விட்டு தான் வந்தான்.
கனகவேல் எதுவும் பேசவில்லை. முகத்தில் எந்த எதிர்வினையையும் காட்டாமல் அமர்ந்திருந்தார்.
கிருஷ்ணாவுக்கு அவர் அமைதி கூட எதோ திட்டமிடுகிறார் என்ற எண்ணத்தையே தோற்று வித்திருக்க, அண்ணனிடம் பலதடவை தந்தையின் மீது ஒரு கண் வைக்கும்படி கூறி விட்டுத்தான் வந்திருந்தான்.
வந்தவனுக்கு சந்தோஷமில்லை. ஏதாவது பிரச்சினை ஆகுமோ என்ற கவலைதான் மனம் முழுக்க நிறைந்திருந்தது.
ஏர்போட்டிலிருந்து அழைத்து செல்ல கண்ணபிரான் வரவா என்று கேட்டிருக்க வேண்டாம் என்ற கிருஷ்ணா மனைவியோடு டேக்சியில் ஏறி இருந்தான்.
பாதுகாப்புக்கு அருள்வேல் ஏற்பாடு செய்வதாக கூறியும் “அங்கேயாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்” எந்த விதமான பாதுகாப்பும் வேண்டாம் என்றிருந்தான் கிருஷ்ணா.
கிருஷ்ணாவின் எண்ணங்கள் இவ்வாறு இருக்க, கோதையின் எண்ணங்கள் வீட்டுக்கு சென்ற உடன் முதல் வேலையாக தனக்கு கிருஷ்ணா கிடைக்க காரணமாக இருந்த நபருக்கு நன்றி கூற வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். 
வண்டி வீட்டை அடைந்ததும் தனது குடும்பத்தார் அனைவரும் ஓடிவந்து தங்களை வரவேற்பார்கள் என்று கோதை எதிர்பார்க்க யாரும் வாசலுக்கு கூட வரவில்லை.
“எங்க டா இவ வீட்டை விட்டு போறா என்று இருந்தீர்களா? துரத்தி விட? போனவ போகட்டும் இந்த பக்கம் வரவே கூடாது கடவுள் கிட்ட வேண்டி கிட்டீங்க போல? அது சரி கல்யாணமான பொண்ண மறுவீட்டுக்கு கூப்பிடவுமில்லை. நாங்களா வந்தா வரவேற்க கூட மாட்டீங்களா?” கத்தியவாறே கோதை உள்ளே செல்ல வீடு அமைதியாக இருந்தது.
வண்டிக்கு பணம் கொடுத்து பைகளை தூக்கிக் கொண்டு கிருஷ்ணா வர வாசலில் இருந்து கொண்டு “அம்மா அம்மா. ஏய் கிழவி… எங்க போய் தொலைஞ்சீங்க?” என்று கோதை கத்திக் கொண்டிருந்தாள்.
“எல்லா பேக்கையும் என்ன தூக்க வச்சிட்டு இவ பாட்டுக்கு வந்து கத்திக்கிட்டு இருக்கா” கடுப்பான கிருஷ்ணா பைகளை தூக்கிப் போட்டு விட்டு “எதுக்கு இப்போ கத்துற? உன் வீடு தானே. உள்ள போய் பார்க்க வேண்டியது தானே” என்றவாறு சோபாவில் அமர்ந்தான். மனைவியின் பேச்சில் அவன் வரும் பொழுது இருந்த மனநிலை முற்றாக மாறி இருந்தது. 
அபரஞ்சிதா தூங்கிக் கொண்டிருந்தாள் போலும் மகளின் குரல் கேட்டு கண்விழித்து “பூ நா ரூம்ல இருக்கேன்” என்றவாறு எழுந்து நொண்டி நொண்டி வாசலுக்கு வந்தாள். 
“என்ன நொண்டுற?” என்னதான் அன்னை மீது கோபம் இருந்தாலும் அன்னை அவதியுறுவதைக் கண்டு பாசம் பொத்துக் கொண்டுவர தோளை பிடித்து வாசலுக்கு அழைத்து வந்து அமர வைத்தவாறே வினவினாள் மகள்.
“வழுக்கி விழப்போனேன் கால் பிசகிருச்சு” என்ற அபரஞ்சிதா அனிச்சையாக மாடியை பார்கலானாள்.
அன்னை பார்த்த திசையில் ஏறிட்ட மகள் அங்கே ராதை இருப்பதைக் கண்டு “அம்மாவோட கால் பிசகிணத்துக்கும் இவளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ” என்று சந்தேகம் கொண்டு அதை பற்றி கேட்க முற்படும் பொழுது
“பார்த்து வரவேணாமா அத்த. உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா மாமா தாங்குவாரா” அக்கறை இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் கிண்டல் தொனியில் மனைவியை பார்த்து வம்பிழுக்க, கணவனை ஏறிட்ட கோதையின் சிந்தனை அப்படியே மாறிப்போனது.
கணவனை முறைக்க ஆரம்பித்தவள் அவனுக்கு பதில் சொல்ல அவனும் பதில் பேச, வீட்டில் ஏன் யாருமில்லை என்று கேட்கவுமில்லை. அவளாகவே சென்று காபி கலந்து எடுத்து வந்து அன்னைக்கும், கணவனுக்கும் கொடுத்தாள். 
அதையும் பருகியவாறே “உனக்கு காபி கூட போட தெரியுமா? சாப்பிட மட்டும்தான் தெரியும் என்று நினச்சேன்” என்று வம்பிழுக்கலானான்.
“வீட்டுல இருக்கும் வரைக்கும் ஒரு வேல பண்ண மாட்டா மாப்புள. எப்போ பார்த்தாலும் போன நோண்டிகிட்டே இருப்பா. இப்போ தானே தெரியுது. உங்க கிட்ட தான் பேசிகிட்டு இருந்தான்னு” அபரஞ்சிதா சிரிக்க
அவள்தான் அவனோடு பேசவே இல்லையே! “நிஜமாவா?” கண்களையே குறும்பாக கேட்டு மனைவியை சீண்டினான் கிருஷ்ணா.
கணவனின் பார்வையின் அர்த்தம் கண்டு வெகுண்டவள் “அம்மா” என்று கோதை அன்னையை முறைக்கலானாள்.
இவனை போல ஒருத்தன லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கணும். அவனே வந்து நம்பர் கொடுத்தான் தூக்கி எறிந்த தன்னை என்னவென்று சொல்வது. கொஞ்சம் மனம் சுணங்கினாலும். அவனே இப்பொழுது தன் கணவனான மகிழ்ச்சியில் அவன் தோள் உரச அமர்ந்து வம்பிழுக்கும் கணவனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
கீழே நடக்கும் பேச்சுக்கள் அனைத்தும் மாடியிலிருந்து ராதையின் காதில் விழுந்தாலும் கீழே இறங்கி வரவில்லை அவள். கோதையோடு சுமூகமான உறவிலா இருந்தாள்? வந்தவளை வாவென்று அழைத்து உபசரித்து செல்லம் கொஞ்ச.  
கண்ணபிரானின் வண்டி சத்தம் கேட்கவும் “அப்பா எங்க போயிட்டு வராரு” என்றவாறு கோதை வெளியே செல்ல கிருஷ்ணாவும் அவள் பின்னால் சென்றான்.
வசந்த்தான் வண்டியை ஒட்டிக்கொண்டு வந்திருந்தான். முன் கதவை திறந்துக் கொண்டு கண்ணபிரான் இறங்கவும் பின் கதவை திறந்த வடிவுப் பாட்டி கோதையைக் கண்டு “வந்துட்டியா… வா.. வா.. நீ தான் இந்த வீட்டுல நடக்குற அநியாயத்தை தட்டிக் கேக்கணும்” என்றவாறே இறங்க
“அத்த கொஞ்சம் பொறுமையா இருங்க உங்களால தனியா நடக்க முடியாது” என்று கண்ணபிரான் வடிவை நெருங்கி இருக்க வசந்த்தும் வடிவின் அருகில் வந்திருந்தான்.
“என்ன நடந்தது?” என்று கோதை வடிவின் அருகில் செல்ல ஒப்பாரி வைக்காத குறையாக ராதை தன்னை தள்ளி விட்டதாக அழுது கரையலானார் வடிவு.
யோசனையாக அன்னையை திரும்பிப் பார்த்த கோதை அபரஞ்சிதா அமைதியாக இருக்கவும் “முதல்ல உள்ள வா என்னனு பேசிக்கலாம்” என்று பாட்டியை அழைத்து சென்று அமர வைக்க முயல தன்னால் அமர்ந்து இருக்க முடியவில்லை என்று அறைக்கு அழைத்து செல்லுமாறு கூற, வசந்த் வடிவை அறைக்கு அழைத்து சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.
“அக்கா ஒன்னும் பண்ணலகா.. பாட்டிதான் ஊஞ்சல்ல இடிச்சி கிட்டாங்க” என்றான் வசந்த். 
“நீ வாய மூடு வெளங்காதவன். அக்காவாம் அக்கா. அவளை தூக்கி தலேல  வச்சிக்கிட்டு ஆடுறீங்க. அன்னக்கி படில எண்ணெய ஊத்தி என் பொண்ணு கால ஒடச்சா. இன்னக்கி என்ன தள்ளி விட்டு என் கால ஒடச்சா. அவ எதோ திட்டத்தோடதான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கா” வடிவு ஆவேசமாக கத்த
“கொஞ்சம் அமைதியா இரேன் மா” என்றாள் அபரஞ்சிதா.
“என்ன நடந்தது? ஒழுங்கா என்கிட்டே சொல்லிடுங்க” கடுப்பான கோதை அனைவரையும் மாறி மாறி பார்க்க,
“அது வந்து…” என்று அபரஞ்சிதா இழுக்கவும் கயந்திகாவோடு நடந்த பிரச்சினையால் ராதை தங்களோடு இங்கு வந்து தங்கியதை கூறினார் கண்ணபிரான்.
“பாட்டி வரும் வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. அக்காவும் அம்மாவும் சேர்ந்துதான் சமைப்பாங்க. வீட்டு வேலையெல்லாம் செய்வாங்க. இவங்க வந்ததுல இருந்துதான் எல்லாம் தப்பா நடக்குது” வசந்த் வடிவை முறைக்க, 
“சரி நான் பேசிக்கிறேன்” என்ற கோதை அனைவரையும் வெளியே அனுப்பி கதவை சாத்தி இருந்தாள்.
 “ஏய் கிழவி ரொம்ப நடிக்காத. உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும். என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லு” வடிவை மிரட்டலானாள் கோதை.
“என்னடி வந்ததும் வராததுமா என் மேல பாயிர?” வடிவுப் பாட்டி கோதையிடம் எகிற
“ஏய் கிழவி எதோ என் கல்யாணத்தால எங்கம்மா முதல் தாரம் எங்குற உண்மை வெளிய வந்துருச்சு. அதனால அந்தம்மா {கயந்திகா} காண்டுள இருக்காங்க, அந்தம்மா பொண்ணு மனம் நோவ இங்க வந்திருக்கா, அந்த பொண்ண நீ பேசி இருக்க. இது தப்பில்ல” நடிகர் சூர்யாவின் விசிறியாக சீறி எழுந்தாள் கோதை.
“இங்க பாரு? என் பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா? நல்லவ வேஷம் போட்டுக்கிட்டு இங்க நச்சு பாம்பாட்டம் வந்தா நான் விட்டுடுவேனா? ராத்திரில அவங்கம்மா கூட குசுகுசுன்னு போன் பேசுறா. எல்லாம் கொழுப்பு. திமிரு புடிச்சு அலையிறா. பெண்டு நிமிர வேல செஞ்சா சரிப்பட்டு வருவான்னு நல்லா வேல வாங்கினேன்.
படில எண்ணெயை ஊத்தி என்ன கவுக்க பார்த்தா உங்கம்மா விழுந்து கால் பிசகிருச்சு. விட்டேனா அவள? இருக்குற எல்லா வேலையையும் செய்ய வச்சேன். ஆனாலும் அடங்கள. 
“இன்னக்கி காலைல உங்கப்பா நீயும் உன் புருஷனும் வரதா சொல்லவும். தடல்புடலா விருந்துக்கு ஏற்பாடு பண்ணலாம்னு நானும் உன் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போ உங்கப்பா நீ ஈவினிங்த்தான் வரதா சொன்னாரு. சரி ராத்திரிக்கு பண்ணிக்கலாம்னு சொன்னேன். சொல்லிட்டு மாடி ஏறி போறேன். அதுக்குள்ள அவங்கம்மா கிட்ட நீ வரத பத்தி குசுகுசுன்னு சொல்லிக்கிட்டு இருக்கா” என்ற வடிவு ராதையுடனான பேச்சு வார்த்தையை கூறலானார்.
“என்ன டி அதுக்குள்ள உங்கம்மா கிட்ட பத்த வச்சிட்டியா?” வடிவு ராதையை முறைக்க,
திகைத்த ராதை முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு “ஏன் நான் எங்க அம்மா கிட்ட கூட பேசக் கூடாதோ! அம்மா கிட்ட பேச உங்க கிட்ட அனுமதி வாங்கணுமா?” கையை கட்டிக்கொண்டு வடிவை பார்த்திருந்தாள்.
“உங்கம்மா அப்படியே உன் மேல பாச மழைய பொழிஞ்சி வளர்த்திருக்கா பாரு நீ தினமும் போனாப்போட்டு குசலம் விசாரிக்க, அவ உன்ன வளர்த்த லட்சணம் தான் ஊருக்கே தெரியுமே” நச்சுனு அன்னை மகளின் உறவை பற்றி வடிவுப் பாட்டி சொன்னதும் ராதையின் முகம் இருண்டது.
உண்மைதான் ஒரு அன்னையாக கயந்திகா எந்த கடமையையும் செய்ததில்லை. ஆனாலும் அதை வடிவு குத்திக் காட்டியது ராதைக்கு பிடிக்கவில்லை. என்ன இருந்தாலும் பெற்ற அன்னையை ஒருத்தி குறை சொல்வதா?
“இங்க பாருங்க.  எப்போ பார்த்தாலும் எங்க அம்மாவ பேசுறீங்க. வயசுல பெரியவங்கனு பாக்குறேன். மரியாதை கெட்டுடும் பாத்துக்கோங்க” என்றவாறே ஊஞ்சல் இருக்கும் இடத்துக்கு வந்தவள் சங்கிலியை பிடித்திருந்தாள்.
“என்ன டி பண்ணுவ? நீ எதற்காக இங்க வந்திருக்கனு எனக்கு தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா? உங்க அப்பாவ ஏமாத்தலாம். என் பொண்ண ஏமாத்தலாம். ஏன் என் பேரான கூட பாசம் காட்டி ஏமாத்தலாம் என்ன எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது டி. நல்லவ மாதிரி வேஷம் போடுறியே உன் முகமூடிய கிளிக்கிறேனா? இல்லையானு பாரு” என்ற வடிவு ஊஞ்சலை தாண்டிப் போக தன்னை பற்றி வடிவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்ற ஆதங்கத்திலும், கோபத்திலும் ஊஞ்சலை தள்ளி விட்டிருந்தாள் ராதை.
பலகை சரியாக வடிவின் முழங்காலில் இடிக்க, தேக்கு பலகை நன்கு பதம் பார்க்க வடிவு துடிதுடித்து கத்தியவாறே கீழே விழுந்து விட்டார்.
“இதுதான் சந்தர்ப்பம்னு நீ ஒப்பாரி வச்சு அவள வீட்டை விட்டு துரத்த திட்டம் போட்ட?” கோதை அம்மாச்சியை கேலியாக பார்க்க பாவமாய் தலையசைத்தார் வடிவு.
“எங்க வீட்டுக்குள்ளேயே வந்து எங்களுக்கே தண்ணி காட்டுறாளா? அவள எல்லாம் நாம துரத்தக் கூடாது பாட்டி. துண்டக் காணோம் துணியக் காணோம்னு அவளே ஓடணும். மறந்தும் இந்த வீட்டு பக்கம் இனி தலை வச்சுக் கூட படுக்க யோசிக்கக் கூடாது. புரியுதா?” உதட்டை கடித்தவாறு கோதை சொல்ல
“என்னடி பண்ண போற” ஆர்வமானார் வடிவு.
பாட்டியின் கேள்விக்கு கோதை பதில் சொல்லவில்லை. கண்ணடித்து சிரித்து விட்டு சென்று விட்டாள்.
கிருஷ்ணாவுக்கு இரவு விருந்து தடல்புடலாகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நொண்டியவாறே அபரஞ்சிதாவும், வடிவும் சமையலில் ஈடுபட வசந்த் தேங்காய் துருவி கொடுப்பதும், தட்டுக்களை அடுப்பதும் என்று இதர வேளைகளில் ஈடுபட்டிருந்தான்.
ராதை கீழே வரவும் இல்லை. யாரும் அவளை அழைக்கவுமில்லை.
சாப்பிடும் பொழுது வசந்த் சென்று அழைத்தான். தனக்கு பசியில்லை என்றாள் ராதை.
“பாவம் டா… பாட்டி பண்ண வேலையால ஒரு மாதிரி இருக்கும் அவளை அவ பாட்டுல விடு ரெண்டு நாள்ல சரியாவா” என்ற கோதை அனைவருக்கும் பறி மாறி விட்டு தானும் பறி மாறிக்கொண்டு அமர்ந்து சாப்பிட அந்த இடமே கலை காட்டியது.
அவர்களின் பேச்சும் சிரிப்பும் ராதைக்குள் மேலும் எரிய கயந்திகாவை அழைத்து இவர்களை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள். 
  அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் ஒரு தட்டில் சில உணவுகளை அடுக்கி வசந்தின் கையில் கொடுத்த கோதை “உன் அக்காக்கு கொடு டா… பசி தாங்க மாட்டா.  நானே கொடுப்பேன். என் கிட்ட இன்னும் சகஜமா பழகல இல்ல. நீ கொடுத்தா சாப்பிடுவா” என்று இன்முகமாகவே சொல்ல வசந்தும் சந்தோஷமாகவே எடுத்து செல்ல, அபரஞ்சிதாவும் கண்ணபிரானும் புன்னகையினூடாக பார்த்திருந்தனர்.
கதவை தட்டி விட்டு உள்ளே சென்ற வசந்த் “அக்கா வா வந்து சாப்பிடு” என்று சொல்ல வேண்டாம் என்று சொல்ல நா எழுந்தாலும், சாப்பாட்டின் மனமும், பசி வேறு வயிற்றை கிள்ள அமைதியாக சாப்பிட்டாள் ராதை.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை வசந்த் அவளோடு பேசிக்கொண்டிருக்க, அவன் அன்பை நினைத்து ராதைக்கு கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.
கொஞ்சம் கூட வெறுப்பைக் காட்டாமல் இவனால் எப்படி பாசம் காட்ட முடிகிறது. அதுவும் தனது அன்னையின் வாழ்வை பறித்த பெண்ணுக்கு பிறந்தவள் என்று தெரிந்தும் இப்படி இன்முகமாக பேசத்தான் முடியுமா? நடிக்கிறான் என்று பல தடவை நினைத்திருக்கின்றாள். ஆனால் இன்று நடந்த சம்பவத்தின் போதும் என்ன நடந்தது என்று கூட கேளாமல் தனக்காத்தானே பேசினான்.
தனக்கு இது போல் ஒரு தம்பி இல்லையே என்று நினைக்கும் பொழுது கோதையின் மேல் கொஞ்சம் பொறாமை கூட வந்தது.
வசந்த் சென்ற பிறகு தூங்காலம் என்று கண்ணை மூடியவளுக்கு வயிறு வலிக்க ஆரம்பிக்க, வாஷ் ரூம் போயிட்டு வந்தாள். உருண்டு புரண்டு மீண்டும் கண்ணை சொக்க கண்களை மூடிய அடுத்த நொடி மீண்டும் வயிற்றை பிடித்துக்கொண்டு வாஷ் ரூம் ஓடினாள்.
ஓடினாள். ஓடினாள். விடியும் வரை ஓடிக்கொண்டே இருந்தாள். உணவில்தான் எதோ! கோளாறு என்று புரிந்தது. வசந்த் கண்டிப்பாக இதை செய்திருக்க மாட்டான் என்றும் தெரியும். அந்த கிழவி நன்றாக பழிவாங்கி விட்டாள் என்று வடிவை திட்டிக்கொண்டே தூங்காமல் வாஷ் ரூமுக்கு அலைந்தாள் ராதை.
“என்னம்மா உன் செல்ல மகள் கீழே இறங்கி வர மாட்டாளா?” நமட்டு சிரிப்போடு கோதை கேக்க
“ஆமா அவளுக்கு சேவகம் செய்யவே உன் அம்மா பொறந்திருக்கா பாரு” வடிவுப் பாட்டி வசை பாட ஆரம்பித்தாள்.
நேற்றரவு ராதைக்கு கொடுத்தனுப்பிய உணவில் பேதி மாத்திரைகளை கலந்து விட்டிருந்தது கோதையை தவிர யாருக்கும் தெரியாதே.
விடியும் வரை தூக்கம் இல்லாமல் வாஷ்ரூமுக்கு அலைந்த ராதை விடிந்த பின்தான் தூக்கத்தை தழுவி இருந்தாள். அது அறியாமல் கீழே வடிவு அவளை திட்டிக் கொண்டிருந்தார்.
“உடம்பு முடியலையோ! என்னவோ! நான் போய் பார்த்து விட்டு வரேன்” என்ற அபரஞ்சிதாவை தடுத்த கோதை
“நோண்டிகிட்டு நீ எப்படி படி ஏற போற? நான் போறேன் நீ இரு” என்று பால் கிளாஸை கையில் எடுத்துக்கொண்டு மேலேறி சென்றாள்.
ராதை அசதியில் அடித்துப் போட்டது போல் தூங்கிக் கொண்டிருக்க குளியலறைக்குள் புகுந்து ஒரு வாளி தண்ணீரை கொண்டு வந்து அவள் மேல் கொட்டிய கோதை ராதை திடுக்கிட்டு எழுந்ததும்
“என்ன மகாராணி? உங்களுக்கு நாங்க சேவகம் செய்யணுமோ! உன் வீட்டுல நீ எப்படி இருந்தியோ! அத அங்கேயே விட்டுடு. இங்க நீ எல்லா வேலையும் பார்க்கணும். காலையில எந்திரிக்கணும் புரியுதா? பாலக் குடி என்ன முழிக்கிற?” என்ற கோதை அறையை விட்டு வெளியேறி இருக்க ராதைக்கு ஒரு கணம் என்ன நடந்தது என்று புரியவில்லை.
வெறும் வயிறாக இருந்தவளுக்கு வயிறு வேறு கபகபவென எரிய பாலை ஒரு சொட்டு விடாமல் குடித்தாள் ராதை. ஆனாலும் கண்கள் சொக்கிக் கொண்டிருக்க தூங்கவும் முடியவில்லை. படுக்கை வேறு ஈரமாகி இருந்தது.
 எல்லாவற்றையும் சுத்தம் செய்தவிட்டு குளித்து விட்டு கீழே வர காலை உணவு காலியாக இருந்தது. சாப்பிட ஒன்றும் இல்லை. ஒருநாளும் இந்த வீட்டில் அவளுக்கு சாப்பிட கொடுக்காமல் இருந்ததில்லை.
கோதை அங்குதான் இருந்தாள். அவளிடம் பேசியதில்லையே. அபரஞ்சிதாவிடம் கேட்கக் கூட தயக்கமாக இருந்தது. பசி வேறு வயிற்றை கிள்ள ஒரு ஆப்பிளை கடிக்கலானாள்.
“யாக்கோ! என்ன பாசிக்குதா? பசி வந்தா பத்தும் பறக்கும்னு சொல்வாங்க, உன் உடம்புல இருக்குற திமிரு பறந்திருச்சா?” என்ற கோதை ராதையின் அருகில் வந்து “நீ எந்த நோக்கத்தோடு இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கனு எனக்கு தெரியாது. அது எந்த நோக்கமாக இருந்தாலும் நடக்காது. மரியாதையா வால சுருட்டிக்கிட்டு போய்டு. இல்லையா வால வெட்டி கைல கொடுத்து உன்ன பேக் பண்ணிடுவேன்” என்று மிரட்ட
“உன் பேர்லயும். உன் தம்பி பேர்லயும் இருக்குற என் குடும்ப சொத்தை எழுதிக் கொடு நான் போயிடுறேன்” என்றாள் ராதை.
“ஓஹ்.. சொத்துக்காகத்தான் வந்தியா? நான் என்னமோ அப்பாக்காகத்தான் வந்தியோனு பயந்துட்டேன்” என்று கிண்டல் வழியும் குரலில் சொல்ல ராதையின் முகம் கறுத்தது.
“அதான் அப்பா தெளிவா சொன்னாரென உங்கம்மா டிவோர்ஸ் பேபர்ஸ்ல சைன் பண்ணா சொத்தெல்லாம் உன் பேர்ல எழுதி கொடுக்கிறதா” அக்காவை மடக்கினாள் தங்கை.
“எனக்கு அப்பாவும் வேணும் சொத்தும் வேணும்” அலட்ச்சியமாக பதில் சொன்னாள் ராதை.
“அப்பா என்ன பொருளா? ஆளாளுக்கு பங்கு போட? அவர் காதலிச்சது எங்கம்மாவ. நடுவுல வந்தது உன் அம்மா” கோதையின் குரல் சற்று ஓங்கி ஒலிக்க
“நடுவுல வந்தோமோ! பாதில வந்தோமோ! சமூகத்துல மூத்த தாரமா எங்க அம்மா தானே தலை நிமிர்ந்து இருந்தாங்க. எல்லாம் உன்னாலதான் கெட்டிருச்சு. எல்லாம் நீ காதலிச்சு கல்யாணம் பண்ணினனாலதானே! நடு சபைல எங்கம்மாவ அவமானப்படுத்தின. உனக்கும் அதே நிலைமையை வரவைக்கள என் பேரு ராதை இல்ல டி”
“என்ன பண்ண போற?” முகம் சுளித்தாள் கோதை.
கோபத்தின் உச்சியில் இருந்த ராதை என்ன பேசுகின்றோம் என்று புரியாமல் “உன் புருஷன மயக்கி என் கழுத்துல தாலி கட்ட வச்சி. அவன் உன் கிட்ட இருந்து பிரிக்கிறானா இல்லையானு பாரு?” என்று சொடக்கிட்டு சொல்ல அடுத்த கணம் அவள் கன்னம் எரிந்தது.
கோதைத்தான் அடித்திருப்பாள் என்று பார்த்தால் அவள் கையை கட்டிக்கொண்டு நின்றிருக்க கோப மூச்சுக்களை வாங்கியவாறு நின்றிருந்தார் கண்ணபிரான்.
“அப்பா…”  என்று அதிர்ச்சியான ராதை அங்கே கண்ணபிரானை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை.
அவள் கீழே வரும் பொழுது கண்ணபிரானின் வண்டி இருக்காததால் அவரோடு கிருஷ்ணாவும் வசந்தும் வெளியே சென்றிருப்பார் என்று எண்ணியே இருந்தாள்.
வடிவும், அபரஞ்சிதாவும் மாத்திரை போட்டு தூங்குகிறார்கள் என்று கண்ட பின்தான் இவ்வளவு தைரியமாக கோதையோடு வாயாடினாள்.  இப்படி அவள் குட்டு உடைந்து விடும் என்று அவள் அறிந்திருக்கவுமில்லை. கண்டபடி பேசி தந்தையிடம் அடி வாங்குவாள் என்றும் எண்ணவில்லை.
என்றுமே அடித்திருக்காத தந்தை அடித்ததும் நெஞ்சம் அடைத்த கவலை கண்ணீரை முட்டிக்கொண்டு வர, அதற்கு காரணமான கோதையை நன்றாக முறைக்கலானாள்.
“பாவி பாவி என்ன பேச்சு பேசுற? அப்படியே அவளை மாதிரி. அவ உன்ன வளர்க்க மட்டும் தானே டி செஞ்சா. உன்ன பெத்தது என் அபி தானேடி. உன் புத்தி எப்படி டி. இப்படி எல்லாம் யோசிக்கும்” கோபத்தில் கண்ணபிரான் இத்தனை வருடங்களாக மறைத்திருந்த உண்மையை கூறி இருக்க, ராதையோடு சேர்ந்து கோதையும் அதிர்ந்து நின்றாள்.
“என்ன சொன்னீங்க இப்போ என்ன சொன்னீங்க?” நொண்டியவாறே கணவனிடம் வந்த அபரஞ்சிதா கண்ணபிரானின் சட்டையை பிடித்து உலுக்கலானாள்.

Advertisement