Advertisement

அத்தியாயம் 21
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலினுள் நுழைந்ததிலிருந்து கோதை கிருஷ்ணாவை கேள்விக் கணைகளால் குடைந்துக் கொண்டிருந்தாள்.
“இங்க எதுக்கு வந்திருக்கிறோம்? யாரை பார்க்க வந்திருக்கின்றோம்?” என்ற அவளது எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அவள் கையை கோர்த்துக் கொண்டு நடந்தவண்ணம் இருந்தான் கிருஷ்ணா.
மதியம் வீட்டில் சாப்பிட்ட உடன்தான் “வா கிளம்பலாம்” என்று இந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்தான். சாப்பிட வரவில்லை. அப்படியானால் யாரையோ! சந்திக்க வந்திருப்பான் என்று ஊகித்துதான் கோதை கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.
மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லாது அலைபேசியில் உரையாடியவன் மின்தூக்கியில் ஏறி இருக்க கடுப்பானாள் கோதை.
மின்தூக்கி ஏழாம் தளத்தில் சென்று நின்றதும் கிருஷ்ணா மனைவியை அணைத்தவாறு ஒரு அறையின் முன் நிற்க கோதைக்கு இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.
“என்ன நம்ம புருஷன் நமக்கு சப்ரைஸா ஏதாவது திட்டமிட்டு இருக்கானா? மினி ஹனிமூன் சப்ரைஸா?” கோதையின் இதயம் தாறுமாறாக துடிக்க, அடி வயிற்றில் ஒரு பரவசம் பரவி உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.
மனைவியின் தவிப்பு, தடுமாற்றம் எல்லாம் கிருஷ்ணாவின் கண்களுக்கு தெரியவில்லை. அவன் கண்களோ! தோழியை காண துடிக்க, அவசர அவசரமாக இரண்டு மூன்று தடவைகள் அந்த அறையின் மணியை அழுத்தி இருந்தான்.
சத்தம் வெளியே வரை கேட்க குழம்பி நின்றாள் கோதை. “அறையில் ஏற்கனவே யாரோ! இருக்கின்றார்கள்.  யார் இருக்கின்றார்கள்?  யாரோ! இருக்கும் அறைக்கு என்னை எதற்காக அழைத்து வந்திருக்கின்றான்?”
கோதையின் மனதுக்குள் கேள்விகள் எழுந்து அவளை குடைந்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த அறைக் கதவு திறக்கப்பட ஒரு கர்பிணிப்பெண் கதவை திறந்தாள். தாய்மையின் பூரிப்பில் அழகாக இருந்தாள். ஐந்து அல்லது ஆறு மாதம் இருக்கும்.
“ஹேய் க்ரிஷ்” என்று அவள் முகம் மலர
மனைவியை அணைத்திருந்த கிருஷ்ணா அவளை விட்டு விட்டு “மாலு” என்றவாறு அந்த மாலுவை இறுக அணைத்திருக்க, கோதைக்கு புசுபுசு என்று கோபத்தீ அடி வயிற்றில் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.
“மாலு என்று கிருஷ்ணா அழைத்த நொடியே அவள்தான் மாலினி என்று புரிந்து கொண்ட கோதை “மாலுவாம் மாலு விட்டா தூக்கி தட்டமாலை சுத்தி விட்டுத்தான் கீழ இறங்குவான் போல. உள்ள போக மாட்டாங்களா? இல்ல இப்படியே வாசல்ல கொஞ்சி குலாவிக்கிட்டு இருப்பாங்களா?” தொண்டையை செருமி தான் அங்கே தான் இருப்பதாக காட்டிக்கொண்டாள்.
மாலினியை இறுக அணைத்த கிருஷ்ணாவை ஒருகையால் அணைத்துக்கொண்ட மாலினி எதேச்சையாக மறுகையை வயிற்றில் வைத்து பாதுகாத்துக் கொள்ள, அதை கிருஷ்ணாவும் உணர்ந்து சற்று விலகி நின்று கொஞ்சமாக மேடிட்டிருந்த அவள் வயிற்றை பார்த்து கண்களாளேயே கேள்விகளை தொடுத்திருந்தான்.
அதே சமயம் கோதை இரும மாலினியும் கிருஷ்ணாவும் அவளை பார்த்தனர்.
“ஹேய் மாலு… திஸ் ஈஸ் பூ மை லவ்லி வைப்” என்றவன் மனைவியை ஏறிட்டு “பூ இவ என் உயிர் தோழி மாலு” என்றதோடு “எங்க உன் புருஷன்” என்று உள்ளே எட்டிப் பார்க்க
“முதல்ல உள்ள வா க்ரிஷ்” என்ற மாலினி அவர்களுக்கு வழி விட்டு நின்றாள்.
கிருஷ்ணா உள்ளே சென்று அறையை அலச கோதை அங்கிருந்த இரட்டை சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
அவள் எண்ணமெல்லாம் கிருஷ்ணா அவள் அருகில் வந்து அமர்ந்துகொள்வான். அல்லது தனியாக இருக்கும் சோபாவில் அமர்ந்து கொள்வான். மாலனியோடு அமர மாட்டான் என்றிருந்தது.
அவர்கள் ஒரே சோபாவில் நெருக்கமாக ஒட்டி அமர்ந்துகொண்டு கொஞ்சிக் குலாவுவதை தன் கண்கொண்டு பார்க்க வேண்டுமா? நினைக்கும் பொழுதே மூச்சுக்கு காற்றில் அனல் பறந்தது.
தாய்மையின் பூரிப்பில் மாலினி இன்னும் மிளிர, அது கோதையின் கண்ணுக்கு “நல்லா கொழுக் மொழுக் என்று நெய் பொம்மை மாதிரிதான் இருக்கா. இவள லவ் பண்ணாம இருந்தாதான் தப்பு” கணவன் தோழி என்று அறிமுகப்படுத்தியதையும் மறந்து உள்ளுக்குள் வெம்பிக்கொண்டிருந்தாள் கோதை.
கதவை பூட்டி விட்டு வந்த மாலினி “என்ன சாப்பிடுறீங்க ரெண்டு பேரும்? க்ரிஷ் நீ இன்னமும் உனக்கு பிடிச்சதை தான் சாப்பிடுவியா? இல்ல உன் பொண்டாட்டிக்கு பிடிச்சதை சாப்பிடுவியா?” என்று கேட்க
“நான் எனக்கு பிடிச்சதை சாப்பிடுவேன். அவ அவளுக்கு பிடிச்சதை சாப்பிடுவா. நீ சொல்லுறத பார்த்தா நீ உன் புருஷன அடிமையாக்கி நீ சொல்லுற தலையாட்டி பொம்மை மாதிரி வச்சிருக்க போல. அதெல்லாம் என் கிட்ட நடக்காது” கோதையை பார்த்து கண்சிமிட்ட கணவனை நன்றாக முறைத்தாள் அவள்.
“யாரு இவ புருஷன்? கிருஷ்ணா மாதிரி ஒருத்தன விட்டுடு அப்படி யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா? யார் அந்த ஆணழகன்?” கோதையின் மண்டைக்குள் எறும்பு ஊற மாலினியின் கணவனை பற்றி எப்படி விசாரிப்பது என்று யோசிக்கலானாள். 
“ஆமா எங்க உன் புருஷன். எங்களை வர சொல்லிட்டு ஆளக் காணோம்” பேசியவாறே கிருஷ்ணா சென்று கட்டிலில் சாய்ந்துகொள்ள கோதையின் கோப எல்லை கடந்திருந்தது.
“என்ன இவன் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம நடந்து கொள்கிறான்” கணவனை முறைக்கலானாள் கோதை.
“படுக்கை என்பது ஒருவருடைய தனிப்பட்ட இடம். அதுவும் மாலினியும், அவள் கணவனும் இருக்கும் அறையில் இவன் போய் படுத்துக்கொண்டிருந்தால் அவன் கணவன் அதை பார்த்தால் என்ன நினைப்பான்? அதுவும் இவன் வேறு அவளை திருமணம் செய்ய இருந்தவன்” கோதை தலையில் அடிக்காத குறையாக பார்த்திருக்க
“அர்ஜுன் குளிக்கிறான் க்ரிஷ்” என்ற மாலினியும் கட்டிலின் மறு புறம் வந்து கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்.
“என்ன டா நடக்குது இங்க?” தன் கணவனும் முன்னாள் காதலியும் தன் கண்முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அதுவும் கட்டிலில். இவள் அதை வேடிக்கை பார்க்க வேண்டுமா? கோபம் பொத்துக்கொண்டு வர எழுந்து சென்று கிருஷ்ணாவின் அருகில் கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.
“கிளைமட் சென்ஞ் ஆனதால் கஷ்டமா இருக்கும்” என்றவாறே கிருஷ்ணா அங்கிருந்த பழக் கூடையை தன் புறம் நகர்த்தி ஒரு ஆரஞ்சு பழத்தை தோல் உரித்து சாப்பிட ஆரம்பித்தான்.
“அர்ஜுன் என்றா சொன்னாள்?” தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்று கோதை யோசிக்கும் பொழுது
உரித்த பழங்களை மாலிக்கு கொடுத்தவன் “ஹேய் பூ இந்தா இத சாப்பிடு” என்று கிருஷ்ணா மனைவிக்கும் கொடுக்க
அவள் கர்ப்பமாக இருக்கின்றாள் அதனால் அவளுக்கு முதலில் கொடுத்திருப்பான் என்று எண்ணாமல் பொறாமையில் பற்றி எரிந்துக் கொண்டிருந்தவளோ “இல்ல நீ சாப்பிடு” என்றவள் “ஆமா மாலினி உங்க ஹஸ்பன் மிஸ்டர் அர்ஜுன் என்ன செய்யிறாரு” என்று கேட்டாள் கோதை. 
அவள் அப்படி கேட்டதும் கிருஷ்ணா விழுந்து விழுந்து சிரிக்க அவன் தலையில் அடித்தாள் மாலினி.
அதை பார்க்கும் பொழுது கோதைக்கு மேலும் எரிந்தது. “அப்படி என்ன நான் ஜோக் சொல்லிட்டேன்னு சிரிக்கிறான்? இவ எதுக்கு அடிக்கிற சாக்குல தொட்டு பேசுறா?” கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்கும் நிலையை அடைந்துக் கொண்டிருந்தாள் கிருஷ்ணாவின் மனையாள்.     
குளியலறைக்கு கதவை திறந்துக் கொண்டு அர்ஜுன் தலையை துவட்டியவாறு வெளியே வந்தான்.
ஒரு ட்ராக் பொட்டம், டி ஷர்ட் அணிந்திருந்தான். வெள்ளையா அழகாக இருந்தான். “பார்க்க நல்லாத்தான் இருக்கான். ஆனாலும் என் புருஷன் அளவுக்கெல்லாம் இல்ல” கோதையின் அர்ஜுனை எடை போட்டுக்கொண்டிருக்க,  தலையை துவட்டியவன் துண்டை மனைவியின் கையில் கொடுக்காமல் அவனே சென்று காய போட்டான்.
போட்டு விட்டு கட்டிலில் மாலினிக்கு அருகில் சாய்ந்துகொண்டவன் “என்னடா சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணி இருக்க? என்ன பிரச்சினை?” என்று கிருஷ்ணாவின் கையிலிருந்த ஆரஞ்சு சுளையை பறிக்காத குறையாக வாயில் திணித்துக்கொள்ள கோதை இங்கு என்ன நடக்கிறது என்று புரியாது பார்த்திருந்தாள்.
“நீயும்தான் அப்பாவாக போற? என் கிட்ட சொன்னியா? சப்ரைஸ் இருக்கு வானு சொன்ன வந்தாதான் இவ என்ன தொப்பையோட இருக்கானு பார்த்தேன். அப்போறம்தான் புரிஞ்சது பிரேக்னன்ட்டா இருக்கானு. சும்மாவாச்சும் சொன்னியா? போடா போடா” கிருஷ்ணா சிரித்தவாறே பேச
“அமேரிக்கா போனவன் அப்படியே காணாம போயிட்ட, நான் போட்ட மெயிலுக்கு கூட பதில் இல்ல” அர்ஜுனும் அவனுக்கு சளைக்காமல் பதில் சொல்லலானான். 
மாலினிதான் கிருஷ்ணாவுக்கு தெரிந்தவள் என்றால் அர்ஜுனையும் தெரிந்தவன் போலல்லவா பேசுகிறான். அவனும் அது போலல்லவா நடந்துக்க கொள்கின்றான்.
பொறுமையை இழந்தவள் “ஆமா நீங்க மூணு பேரும் ப்ரெண்ட்ஸா” என்று கேட்டு வைத்தாள் கோதை.
அவர்களின் பேச்சையும், சிரிப்பையும் பார்த்த பின் அந்த கேள்வி கொஞ்சம் அபத்தமானதாக தோன்றினாலும், மாலினியைத்தானே கிருஷ்ணா காதலித்தான்? கல்யாணம் பண்ண பார்த்தான் எப்படி நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க என்று அர்ஜுனிடம் கேட்பது அநாகரீகம் என்று பட்டதனால் கோதை கேள்வியை கொஞ்சம் மாற்றி கேட்டிருந்தாள்.
அவளது கேள்வியில் மூவரும் சிரிக்க கோதையால் அவர்களை முறைக்க மட்டும்தான் முடிந்தது.
“ப்ரெண்ட்ஸ்ஸா… நாங்க ட்ரவுசர் போட்ட காலத்துல இருந்தே ப்ரெண்ட்ஸ்” என்று கிருஷ்ணா சிரிக்க கண்டான கோதை கணவனை முறைகளானாள். 
“ஏன் கிருஷ்ணா அவளை வெறுப்பேத்துற” என்று ஆரம்பித்த மாலினி அவர்கள் எவ்வாறு சந்தித்துக் கொண்டார்கள் சிறு வயது நட்பு பிரிந்து மீண்டும் காலேஜில் சந்தித்தது அர்ஜுனுடனான திருமணம் வரை சொல்லி முடிக்க,
“அப்போ இந்த லூசு இவள காதலிக்கலயா?” என்று கோதையின் மனம் நிம்மதி அடைய அதை அவள் கணவன் சிதைத்தான்.
“எங்க எனக்கும் மாலினிக்கு கல்யாணம் நடந்துடுமோனு இவன் கோவில்ல வச்சி தாலி கட்டிட்டான். இல்லனா நான் மாலினியை இவனுக்கு விட்டுக் கொடுத்து இருக்க மாட்டேன்” என்று கிருஷ்ணா அர்ஜுனை வம்பிழுக்க கோதைக்குத்தான் பற்றிக்கொண்டு எரிந்தது.
“யாரு நீ… நானாவது பரவால்ல… என் பிரெண்டுனு நியாபகம் இல்ல. வீட்டுல பார்த்த பையன்னு கொஞ்சம் நெருங்கி வந்து பேசலாம்னு பார்த்தா எப்படி எல்லாம் என்ன விரட்டி அடிச்ச. இந்த அஜ்ஜு வேற அந்த நேரம் என் முன்னாடி வந்து வெறுப்பேத்துவான். அப்போ எனக்கு எவ்வளவு கடுப்பாகும்” மாலினி நண்பர்களை தலையணையால் மொத்த
“இவன் பொய் சொல்லுறான் மாலு… நான் உன்ன லவ் பண்ணுறது காலேஜ்ல உன்ன பார்த்த அன்னைக்கே இவன் கிட்ட சொல்லிட்டேன். உனக்கு இவன நியாபகம் இல்ல என்கிற கோபமும் நான் உன்ன காதலிக்கிறதாலையும்தான் பய புள்ள உன்ன அந்த விரட்டு விரட்டினான்” என்று அர்ஜுன் உண்மையை போட்டு உடைக்க, கோதைக்கு அவர்களின் நட்பு புரிய ஆரம்பித்தது.
ரொம்ப நேரம் அவர்களின் பழைய கதைகளை பேசி சிரித்து மகிழ்ந்தனர்.
“ஆமா நீ கூட லவ் மேரேஜ் தானே! சிஸ்டர எங்க பார்த்த? எப்போ லவ்வ சொன்ன? அந்த கதையை கொஞ்சம் எங்களுக்கும் சொல்லு” என்று மாலினி குடைய கிருஷ்ணா முழிக்கலானான்.
அவன் என்னவென்று சொல்வான். தான் ஏமாந்து போன கதையை சொன்னால் சிரிக்க மாட்டார்களா? கேலி செய்ய மாட்டார்களா? அதையும் தாண்டி கோதையோடு சந்தோஷமாகத்தான் இருக்கின்றாயா என்ற கேள்வி வரும். ஆமாம் என்றாலும் நம்ப மாட்டார்கள்.
“உங்கள மாதிரி சின்ன வயசு லவ் எல்லாம் இல்லபா… ஏர்போர்ட்டுல பார்த்து ஐயா என் பின்னாடியே சுத்திகிட்டு இருந்தாரு. அப்பொறம் தைரியம் வந்து நம்பர் கொடுத்தாரு நானும் பாவம் பார்த்து மெசேஜ் பண்ணேன். அப்படி ரெண்டு வருஷமா பேசி லவ்வ டெவலப் பண்ணோம். எனக்கு வீட்டுல திடிரென்று மாப்புள பார்த்து மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க, அப்பொறம் என்ன ஐயா அதிரடியா எண்டரி கொடுத்து என் கழுத்துல தாலி கட்டிட்டாரு” கோதை கதை போல் சொல்ல
“அட அட அட நான்தான் காதல் மன்னன் என்று நினச்சா இவன் எனக்கு மேல இருக்கான்” அர்ஜுன் சிரிக்க
“அப்படியா? நடந்தது?” கிருஷ்ணா மனைவியிடம் கண்களையே கேட்டு துளைக்க
அவன் புறம் குனிந்தவள் “வரலாறு முக்கியம் மங்குனி அமைச்சராரே” என்று சிரித்தாள்.
“ஆனா பேப்பர்ல ஏதோ ஜாதக கோளாறு அது இதுனு இல்ல இருந்தது” என்றாள் மாலினி.
“அத ஏன் கேக்குற?” என்று ஆரம்பித்த கிருஷ்ணா அருள்வேலின் வாழ்க்கையில் நடந்துவரை கூறி முடித்தான்.
“என்ன கம்பனி ஆரம்பிக்க வானு கூப்பிட்டுட்டு நீ பாட்டுக்கு தேர்தல்ல நின்னுடுவியோன்னு நினச்சேன். நல்லவேளை உன்ன நம்பி வந்ததுக்கு மொட்டை அடிக்காம விட்டியே!” அர்ஜுன் சிரிக்க
“நாம ஒண்ணா கம்பனி ஆரம்பிக்கணும் என்கிறது எப்பவோ! முடிவு பண்ணது அத பண்ணாம வேற எதையும் செய்யிறதா இல்ல” உறுதியாக சொன்னான் கிருஷ்ணா.
“அது சரி உங்க அப்பாவ எப்படி சமாளிச்ச?” மாலினி யோசனையாக கேட்க 
“நான் எங்க சமாளிச்சேன் எல்லாம் என் பொண்டாட்டிதான் சமாளிச்சா” என்று கோதையை கோர்த்து விட்டான் கிருஷ்ணா.
கல்யாணமாகி வந்த அன்றே மாமனாரை பேசியே மட்டையாக்கியதை தான் சொல்கின்றான் என்று அவளுக்கு நன்கு புரிந்தது.
கணவன் வம்பிழுப்பது தெரியவே “நானா? நான் என்ன பண்ணேன்? நான் ஒண்ணுமே பண்ணலையே!” அப்பாவியாக முகத்தை வைத்திருந்தாள் அவள்.
அவள் குடும்பத்தையும் அவளையும் பற்றி பேசும் பொழுதே மாமனாரை உண்டு இல்லை என்று பேசி இருப்பாள் கோதை. கணவனிடம் இருந்த மயக்கத்தில் பேச்சற்று இருந்தவள் கணவன் ஏற்கனவே மாலினியை காதலித்தான் என்றதும் தான் சுயநினைவுக்கே வந்து இரத்தம் சூடாக்கி இடத்தை காலி செய்திருந்தாள்.
முதலமைச்சர் கனகவேல் ராஜாவுக்கு சின்ன மகனை எவ்வாறு  வழிக்கு கொண்டு வருதென்ற குழப்பத்த்தை விட பெரிய மகனை எப்படி அடக்குவதென்ற யோசனைதான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. வேறு யாராவதாக இருந்தால் வெட்டி வீசக் கூட தயங்காதவர் பெற்ற மகனை என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடியவில்லை. பிள்ளை பாசம் தடுத்தது. 
அவனை அடக்க அன்பழகியை தன் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தவருக்கு மருமகளை கடத்தியாவது மகனை அடக்க திட்டம் போட்டாலும் அவர் எவ்வாறெல்லாம் காய் நகர்த்துவார் என்று அறிந்திருந்த அருள்வேலோ அன்னையையும், மனைவியையும் தன் கண்முன்னே வைத்திருந்தான்.
வத்சலா கூட பல தடவைகள் ஊருக்கு சென்று வருவதாக கூறிப் பார்த்தாள். தேர்தல் நடந்து முடியும் வரை எங்கயும் செல்லக் கூடாது என்று அன்பு மகனாய் கட்டளையிட்டான் அருள்வேல்.
தம்பியோடு சென்று அவன் பெயரை அகற்றி தனது பெயரை வேற்பாளராக தாக்கல் செய்து விட்டு வந்து உடனடியாக வேலைகளிலும் இறங்கினான்.
தன்மானம் சீண்டப்பட்ட கனகவேல் ராஜா தான் முதலமைச்சர் பதவியில் இல்லாமல் போனால் என்ன தான் தான் துணை முதல்வராக பதவியில் அமர வேண்டும் கட்ச்சியியை தன் கைக்குள் வைத்திருக்க வேண்டும் திட்டம் தீட்டலானார். அதற்கான நடவடிக்கையாக கட்ச்சி உறுப்பினர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தலானார்.
அதை கோதாண்டத்தின் மூலம் அறிந்துக் கொண்ட மாலினி கிருஷ்ணாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன உங்க அப்பா முதலமைச்சர் பதவி இல்லனாலும் ஓய்வெடுக்காம துணை முதல்வராகப் போறாராமே”
மாலினி சொல்லும் பொழுதே அரசியல் வாரிசான கிருஷ்ணாவுக்கு அடி, நுனி, ஆரம்பம் எல்லாம் புலப்பட்டது. யார் சொன்னார்கள்? என்ற கேள்வி எல்லாம் தோன்றவே இல்ல.
“அவர் ஆசைப்படலாம். ஆனா நடக்கணும் இல்ல” மந்த புன்னகையோடு கூறியவன் அண்ணனின் காதில் இதை போட வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். “உன் அப்பாவைதான் தினமும் பார்க்குறேனே. அவர் எதுக்கு இன்னமும் எங்க அப்பாகிட்ட வேல செய்யிறாரு. அவரை உன் கூட கூட்டிக்க வேண்டியது தானே” என்று முறைக்க
“அவர் ஒன்றும் உங்க அப்பாக்காக வேலை செய்யல. அவர் முதலமைச்சருக்காக வேலை செய்யிறாரு. எத்தனை முதலமைச்சர் வந்தாலும் அவர் அவரோட வேலைய செய்வாரு” என்றாள் மாலினி.
அவள் பேச்சில் தந்தையின் நேர்மையும், இந்த வயதிலும் வேலை செய்கிறார் யாரிடமும் கையேந்த வில்லை என்ற திமிர் இருந்தது.
“அவருக்கு இருக்குற திறமைக்கு அவர் எங்கயோ போய் இருக்கணும். குண்டு சட்டியிலையே குதிரை ஓட்டுறாரு” கிருஷ்ணா கொஞ்சம் கோபமாக சொல்ல
“அண்ணா கம்பனி ஆரம்பிக்கும் போதே நானும் பேசிப் பார்த்துட்டேன். எங்க என் மாமனாருக்கு அரசியல்ல இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு” என்றான் அர்ஜுன்.
அவனும் மாலினியிடம் பலதடவை பேசி விட்டான். “அப்பாவை அவர் போக்குல விடு அஜ்ஜு” என்று அவளே சொல்லும் பொழுது அவனும்தான் என்ன செய்வான்.
“சரி அத விடு உன் வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” அர்ஜுனிடம் கிருஷ்ணா வினவ
“அண்ணனுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன். அக்காக்கும் ஒரு பொண்ணு ஒரு பையன் அம்மாக்கு அவங்க பசங்கள பார்க்கவே நேரம் பத்தல. அப்பா கம்பனி முழுப் பொறுப்பையும் அண்ணா கிட்டயும் மாமா கிட்டயும் கொடுத்துட்டாரு. ஸ்டீவ் அண்ணா வேற இருக்காரே சோ எந்த பிரச்சினையும் இல்லாம போய்கிட்டு இருக்கு” என்றான் அர்ஜுன்.
“ஸ்டீவ் அண்ணாக்கு எத்தனை பசங்கடா?”
“ரெண்டு பொண்ணு. அப்படியே அவர் கலருல. வீட்டுக்கு வாயேன் எல்லாரையும் பார்த்தா மாதிரி இருக்கும். ஆ… சொல்ல மறந்துட்டேன். ஸ்டீவ் அண்ணாவோட வைப் இருக்காங்களே அக்ஷரா அண்ணி. அவங்க ஒரு லாயர்னு சொன்னேனே நியாபகம் இருக்கா?”
“ஆமா?”
“நம்ம கம்பனி ஆரம்பிக்க வேண்டிய எல்லா லீகல் ப்ரொசீஜரையும் அவங்க பாத்துப்பாங்க”
“இடம் பார்த்து பில்டிங் ஓகே பண்ணிட்டேன். நீ வந்து பார்த்து ஓகே பண்ணா முன் பணம் கொடுத்திடலாம்”
“சொந்தமா வாங்க போறீங்களா? இல்ல ரெண்ட்டுக்கா?” மாலினி குறுக்கிட
“ரெண்ட்டுக்கு வாங்கினா எப்பவும் பிரச்சினைதான். சொந்தமாதான் வாங்கப்போறோம். அதுவும் உங்க ரெண்டு பேர் பேருலையும் பில்டிங் மட்டுமில்ல கம்பனியே உங்க பேருலதான் ஆரம்பிக்கிறோம்” என்று மாலினி மற்றும் கோதையை விரல் நீட்டி மாறி மாறி காட்டினான் கிருஷ்ணா.
“நம்ம பெயர்லயா?” கோதை ஆச்சரியமாக கேட்க
“ஆமா எம்.கே ஓட்டோ மொபைல்” என்றான் அர்ஜுன்.
“எம் மாலினி ஓகே. கே… வா?” புரியாது கோதை கேட்க
“டேய் கிருஷ்ணா ராதை இல்லனா மாலினி என்ற பெயர்ல தான் பொண்ண கட்டுவனு நெனச்ச ஆனாலும் உன் பேருக்கு மேட்ச்சா கோதைன்னு கட்டி இருக்க” என்று அர்ஜுன் கிண்டல் செய்ய,
“ஓஹ்.. KK அப்படி ஒரு மேட்ச்சிங் இருக்கோ!” என்று மனைவியை பார்த்தவன் “டேய் நம்ம கம்பனி பேர் எம்.கே இல்ல. பி.எம்” என்றான் கிருஷ்ணா.
“P?” என்ற அர்ஜுன் நண்பனை புரியாது பார்க்க
“என் பொண்டாட்டி பேரு பூங்கோதை டா…” ஓரக்கண்ணால் மனைவி முறைக்கின்றாளா என்று வேறு பார்த்துக் கொண்டான்.
ஆனால் கோதையின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
 கணவன் ஆரம்பிக்க போகும் கம்பனிக்கு அவளது பெயரை வைக்க போகிறான் என்பதே ஆச்சரியம்தான் இதில் முதல் பெயரா? இடை பெயரா என்று ஆராய்ச்சி செய்வதா? “இவனுக்கு என் மேல் இவ்வளவு காதலா?” என்ற ஆராய்ச்சியில் கோதை இறங்கி இருந்தாள்.
கிருஷ்ணா மற்றும் அர்ஜுனின் பேச்சு அப்படியே அவர்களின் கம்பனி பக்கம் திரும்பி அதை பற்றி பேச ஆரம்பிக்க மாலினி குடிக்க தேநீர் வரவழைத்தாள்.
கோதையோடு சோபாவில் அமர்ந்த மாலினி அவளுக்கு தேநீர் கப்பை நீட்டியவாறு “லைப் எல்லாம் எப்படி போகுது. கிருஷ்ணா உன்ன நல்லா பாத்துகிறானா?” என்று கேட்க கோதையறியாமளையே சட்டென்று அவள் முகம் மலர்ந்தது.
“கிருஷ்ணா ரொம்ப நல்லவன். என்ன கோபம் கொஞ்சம் அதிகமா வரும். சட்டுனு அத காட்டிடுவான். நீதான் அவனை புரிஞ்சி நடந்துக்கணும்” தனக்கு நடந்த அனுபவத்தை வைத்து மாலனி கூற,
“என்னது கிருஷ்ணா கோபப்படுவானா?… ஆ… படுவான்தான்… ஆனா என் கிட்ட ஒரு நாளும் அவன் கோபத்தை காட்டினது இல்லையே” கோதை யோசனையாக சொல்ல
“நிஜமாவா?” சந்தேகமாக பார்த்த மாலினி “காதலிக்கிற பொண்ணு, பொண்டாட்டி வேற அதான் பய புள்ள அமுக்கி வாசிக்கிறான் போல. அர்ஜுனன் நான் தலையாட்டி பொம்மை போல மாத்தி வச்சிருக்கேன்னு சொல்லிட்டு. இவன் உன் கிட்ட மாட்டிகிட்டு இருக்கான் போல” என்று சிரித்தாள் மாலினி.
தேநீரை அருந்தியவாறு கோதை கணவனை பார்க்க கையை ஆட்டி ஆட்டி அர்ஜுனோடு பெரிய டிஸ்கஷன் போய் கொண்டிருக்க, இப்போதைக்கு பேசி முடிப்பார்கள் என்று தெரியவில்லை.  
“டின்னர் இங்கயே சாப்பிட்டு விட்டு போலாம். இவங்க இப்போதைக்கு பேசி முடிப்பாங்களானு தெரியல” மாலினி சொல்ல கோதையும் சம்மதமாக தலையசைத்தாள்.
அவர்களின் பேச்சும் கோதையின் பாடசாலை காலேஜ் வீடு என்று சென்று மறு வீட்டுக்கு செல்லவில்லை என்பதில் வந்து நின்றது.
“முதலமைச்சர் பையன் என்றா அவ்வளவு பிசியா என்ன? இழுத்துட்டு போ பூ” தோழியாகவே மாறி இருந்த மாலினி உரிமையாக சொல்ல
“தேர்தலுக்கு முன்னாடி போயிட்டு வரலாம்னுதான் இருக்கோம். நாங்க போகலானாலும் அத்த அனுப்பி வச்சிடுவாங்க” என்றாள் கோதை.
“இரவு உணவையும் முடித்துக்கொண்டு கிருஷ்ணாவும் கோதையும் அவர்களிடமிருந்து விடைபெற “க்ரிஷ் ரொம்ப மாறிட்டான் இல்ல” என்றாள் மாலினி.
“ஆமா ஆமா கல்யாணத்துக்கு பிறகு எந்த அம்பளதான் அவனா இருக்கான். எல்லாம் பொண்டாட்டி பேச்சு கேட்டு தானே ஆகணும். இல்லனா குடும்பம் நடத்த முடியாதே”
“அந்த பயம் இருக்கணும்” என்ற மாலினியும் பொய்யாய் மிரட்டினாள்.
வண்டியில் அமர்ந்த கோதைக்கு மனம் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருந்தது.
“என்ன மேடம் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல? முகம் ரொம்ப பிரகாசமா ஜொலிக்குது” கிருஷ்ணா மனைவியின் கையை பிடித்து முத்தம் வைத்தவாறே வண்டியை இயக்க, மியூசிக் பிளேயரும் தானாக இயங்கியது.
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
 அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் எதுவும் பேசவில்லை. அந்த இரவின் அமைதியையும் அந்த தனிமையையும் ரசிக்கலானாள்.
எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே
கிருஷ்ணாவின் கைவிரல்கள் கோதையின் விரல்களோடு கோர்த்துக்கொள்ள கணவனின் முகம் பார்த்து சிரித்தவள் அவன் நெஞ்சில் முகம் புதைக்கலானாள்.
கிருஷ்ணாவும் வண்டியை மிகவும் மெதுவாக ஓட்டியவாறு மனைவியின் அருகாமையை ரசிக்கலானான்.

Advertisement