Advertisement

அத்தியாயம் 2
இருமனம் இணைவதுதான் திருமணமா?
அல்லது இரு உடல்கள் இணைவதுதான் திருமணமா?
அல்லது இரு குடும்பங்கள் இணைவதுதான் திருமணமா?
இங்கு பணத்துக்காக நடைபெறுவதுதான் திருமணம்.
யுவனுக்கு தூக்கம் தூர ஓடி இருந்தது. கயந்திகா அவனை விட பலவருடங்கள் பெரியவள். தம்பி பிறந்ததை ஒன்றும் அவள் சந்தோசமாக கொண்டாடவில்லை. இந்த வயதில் அதுவும் மகள் கல்யாண வயதில் இருக்கும் நிலையில் அன்னை பிள்ளை பெற்றுக்கொண்டாள் என்று அன்னையை கேவலமாகத்தான் தூற்றினாள். அந்த பேச்செல்லாம் அன்னையிடம்தான் தந்தையிடம் அவள் எதுவும் பேசிட முடியாதே! ஒரே மகளாக, செல்ல மகளாக இருந்தவள் ஆண் வாரிசு கிடைத்தவுடன் இரண்டாம் பட்சமாக மாறிவிடுமோ! என்ற அச்சம் தந்தையிடம் மிகவும் நெருங்கி உறவை வளர்க்கலானாள்.   
மகள் இப்படி பேசுவதை எண்ணியே! மனவருத்ததோடு அன்னை உயிரை விட்டிருந்தது யுவன் நன்கு அறிவான். அப்பொழுது அவனுக்கு ஏழு வயதுதான். கண்ணபிரானை திருமணம் செய்துகொண்டு தன் மகளோடு வேறு வீட்டில் இருக்கும் அக்காவிடம் செல்ல யுவனுக்கு விருப்பம் இல்லை. தந்தையோடுதான் வாழ்ந்து வந்தான். அந்த ஏழு வருடங்களில் கயந்திகா அன்னையிடம் எவ்வாறு பேசுவாள் தந்தையிடம் எவ்வாறு பேசுவாள் அவனிடம் எவ்வாறு நடந்துகொள்வாள் என்று அவனுக்கு நன்றாகவே! தெரியும்.
ஒரு தடவை பந்து விளையாடிக் கொண்டிருந்தவனின் பந்தை வேண்டுமென்றே நீச்சல் குளத்தில் அடித்து அதை அவனை எடுக்க சொல்லியது மட்டுமல்லாது அவன் அதை எடுக்க கை நீட்டும் பொழுது தள்ளியும் விட்டிருந்தாள். நல்லவேளை தந்தையே! அதை பார்த்ததனால் அதன்பின் கயந்திகாவை யுவனிடம் நெருங்க விடவில்லை. 
தான் பெற்ற மகள் என்பதால் வேலுநாயகத்துக்கு கயந்திகாவை எதுவும் செய்யவும் முடியவில்லை. “என்ன செய்து விட முடியும்? என் கணவன் இல்லையென்றால் உங்களால் கம்பனியை நடாத்த முடியாது” என்ற இறுமாப்பில் கயந்திகா இருக்க,  ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தீர்மானித்திருந்தார் என்பதை அவளும் அறியவில்லை.
யுவனிடம் தந்தை கண்ணபிரான் ரொம்பவும் நல்ல மனிதர் என்று அடிக்கடி கூறுவதை கேட்டு அக்காவிடம் இவர் எப்படி சிக்கினார் என்றுதான் எண்ணத் தோன்றும். 
படிப்பை முடித்த கையேடு கம்பனியில் சேர்ந்தவனுக்கு தந்தையின் வழிகாட்டுதலும், மாமா கண்ணபிரானின் தோழமையும் உறுதுணையாக தொழிலை கற்றுக்கொள்ளலானான்.
தந்தையின் இழப்பு பலத்த அடியாக இருக்க, நிலை குலைந்து போனவனுக்கு ஆறுதலாக இருந்ததும் கண்ணபிரான் தான்.
அக்கா கயந்திகாவோடு யுவனின் உறவு என்றைக்கும் சுமூகமாக இருக்காவிடினும் சண்டை சச்சரவும் இருந்ததில்லை. தந்தை நோய் வாய்ப்பட்டு இருக்கும் பொழுது யுவனிடம் கேட்டுக்கொண்டது “குடும்பத்துல எந்த பிரச்சினையும் வராம பாத்துக்க, சில விஷயங்களை என்னால சொல்ல முடியாது. அது உனக்கு தெரிய வரும், வராமல் கூட போகலாம். தெரிய வந்தா சுமூகமான முடிவெடு” என்று கூறி இருந்தார்.
அதே போல் தான் அக்கா யுவனை அழைத்து கண்ணபிரானை பற்றி வேவு பார்க்க சொன்னதும் “என்ன இவ லூசுத்தனமா பண்ணுறா?” என்று எண்ணினாலும் “மாமா எதுக்கு அடிக்கடி பெங்களூர் போறாரு? நமக்கு அங்க எந்த வேலையும் இல்லையே! என்ன விஷயமாக இருக்கும்? கம்பனில ஏதாச்சும் பிரச்சினையா? நமக்கு தெரியாம தீர்வு காண யாரையாவது சந்திக்க போறாரா” என்று எண்ணியவாறு கிளம்பியவனுக்கு கண்ணபிரானுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை தன் கண்கொண்டு கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது.
தனது அக்கா போல் ஒருத்தி மனைவியாக இருக்கும் எந்த ஒரு ஆண்மகனும் இன்னொரு பெண்ணை நாடுவது சாதாரண விஷயம். கயந்திகாவிடம் அழகும் அறிவும் இருந்து என்ன பிரயோஜனம், கணவனிடம் அன்பு காட்டத் தெரியவில்லை. அதிகாரத்தால் கட்டிப்போட நினைக்கிறாள்.
அபரஞ்சிதா கண்ணபிரானிடம் காட்டும் அன்பு வியக்கத்தக்கதாக இருக்க, உண்மையில் இவர்கள் கண்ணபிரானின் பணத்துக்காக பாசம் காட்டுவது போல் நடிக்கிறார்களா? என்று சந்தேகமும் கொண்டான். ஆனால் அது அவ்வாறில்லை என்று புரிந்துகொள்ள ரொம்ப நாள் எடுக்கவில்லை. அபரஞ்சிதா மற்றும் கண்ணபிரானின் அன்னியோன்யம், புதுமணத்தம்பதிகள் போல் அவர்களின் இணக்கமும், அபரஞ்சிதா கணவனை கவனித்துக்கொள்வது என்று யுவனின் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்ததது.
“ஒரு பொண்ணு இருக்கானு சொன்னாங்க அவ வீட்டுல இல்லையா?” என்று வீட்டை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தவனுக்கு கோதை கண்ணில் படவே! இல்லை.
என்ன செய்வது அக்காவிடம் இவர்களை பற்றி சொல்வதா வேண்டாமா? சொல்லாமல் இருந்தாலும் சொத்து பற்றி ஆராய்ந்தால் உண்மை வெளியே! வரத்தான் போகிறது தெரிய வந்தால் குதிப்பாளே! என்று யோசித்தவனுக்கு பூங்கோதையை பற்றிய முழு விவரமும் கையில் கிடைக்க, போட்டோவில் அவளின் அமைதியான அழகு மனதை ஈர்த்தது.
“அக்கா பொண்ண கட்டிக்க என்றைக்குமே! தோணினது இல்ல. அது அக்கா மாதிரியே! பஜாரி. மாமாக்கு இப்படி ஒரு பொண்ணா? பொண்ணுனா இது இல்ல பொண்ணு” போட்டோவில் கோதையை பார்த்து மயங்கி நின்றவன் ஒருதடவையாவது பூங்கோதையிடம் பேசி இருக்க வேண்டுமோ!
அக்காவுக்கு உண்மை தெரிந்தால் எப்படியும் பிரச்சினை வரும், நாமே! சொல்லி ஐடியா கொடுப்பது போல் கொடுத்து பூங்கோதையை திருமணம் செய்துகொள்ளலாம் என்று எண்ணம் தோன்ற, அதன்படி அக்காவிடம் பேசியவன் காரியத்தில் இறங்கி இருக்க பூங்கோதையின் பதில் என்னவாக இருக்கும் என்று தூக்கம் தொலைத்து காத்திருக்கலானான் யுவன். 
ஆனால் மாப்பிள்ளை யார் என்றும் கூட விசாரிக்காமல் கோதை திருமணத்துக்கு சம்மதித்திருக்க, அதை அறிந்துகொண்ட அபரஞ்சிதா அமைதியாக பாத்திருக்க, அம்மாச்சி வடிவுதான் கத்திக் கூப்பாடு போட ஆரம்பித்திருந்தாள்.
“ஏய் கிழவி எதுக்கு இப்போ கத்துற? இங்க என்ன எழவா விழுந்திருக்கு? இப்படி கத்துற?” காதை குடைந்தவாறு கோதை பேச
“ஏன் டி அறிவிருக்கா உனக்கு? படிச்சவ தானே! டி நீ… உங்கப்பன் உனக்கு மாப்புள பாத்திருக்கான்னு சொன்னா… அவன் யாரு என்னனு விசாரிக்க மாட்டியா? மாப்பிள பாத்திருக்கான்னு சொன்னதும் சரினு சொல்லிட்ட” 
“இங்க பாரு கிழவி… நான் என்ன எவனாயாச்சும் இழுத்துகிட்டு ஓடுறேன்னா சொல்லுறேன்” அன்னையை ஒரு பார்வை பார்த்தவள் “நான் என் அப்பா பார்த்த மாப்பிளையைதானே! கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுறேன்” அமைதியாக அம்மாச்சிக்கு பதில் சொல்ல
பெத்த அன்னையே! ஓடிப்போய்தான் கல்யாணம் செய்தாள் என்பதை சைக்கிள் கேப்பில் சொல்லிக்காட்ட இவளால் மட்டும்தான் முடியும் என்று நொடித்துக்கொண்ட வடிவுப்பாட்டி “அதான் உங்கப்பன் பார்த்தாலும் பார்த்தான் சீமைல இல்லாத மாப்பிளையை பாத்திருக்கான். எவனாச்சும் பொண்ணுக்கு இப்படியொரு மாப்பிளையை பாப்பானா? மூத்த தாரத்தோட தம்பிய இரண்டாம் தாரத்து பொண்ணுக்கு பாத்திருக்கான். அறிவு இருக்கா அவனுக்கு. அது சரி அவனுக்கு அறிவு இருந்திருந்தா ரெண்டு பொம்பளயத்தான் கட்டி இருப்பானா? அவன் பொண்ணுதான் இப்படி ஒரு மாப்பிளைக்கு கழுத்த நீட்ட சம்மதிச்சிருப்பாளா?” கோபத்தில் மருமகனை அவன், இவன் என்று ஏகத்துக்கும் ஒருமையில் விளாசினார் வடிவுக்கரசி.
“இங்க பாரு கிழவி எங்க அப்பாவ அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுறத முதல்ல நிறுத்து” கோதை பல்லைக் கடித்தவாறு சொல்ல
“இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல” கழுத்தை நொடித்தார் வடிவுப்பாட்டி.
“எங்க அப்பாக்கு அறிவிருக்கா இல்லையானு உன் கிட்ட சேட்டிபிகேட் கேட்டாரா? பொண்ண ஒழுங்கா வளர்க்க தெரியல” அதையும் தன் அன்னையை பார்த்துக் கூற
“அடியேய்… கிடைக்கிற கேப்ல எல்லாம் உன் அம்மாவ வையாத, இங்க நாம பேசுறது உன் கல்யாண விஷயம். எங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல” வடிவு முடிவாக சொல்ல
“எங்களுக்குனா? யாருக்கு?” கோதை தெனாவட்டாகவே! கேட்க தடுமாறி நின்றார் வடிவு.
கண்ணபிரானின் பேச்சுக்கு அபரஞ்சிதா மறுப்பு தெரிவிக்க மாட்டாள். வசந்த் சின்ன பையன் என்று அவன் பேச்சு எடுபடாது. மறுப்பு தெரிவிக்க வேண்டிய கோதை திருமணத்துக்கு சம்மதித்து விட்டாள். இங்கே! வடிவு நாங்க என்று யாரை குறிப்பிடுகிறாள்?
“சொல்லு அம்மாச்சி… நாங்க.. நாங்கனு சொன்னியே! உன் கூட நாலு பேர் இருக்காங்களா? எங்க அவங்க? இல்ல செத்து போன உன் புருஷன் ஆவியா வந்து உன் பக்கத்துல நின்னுகிட்டு கல்யாணத்த நிறுத்த சொல்லுறாரா?” கிண்டலாக மீண்டும் கோதை வினவ
தெய்வமாகிப்போன தன் கணவனையே! கிண்டல் செய்கிறாள் என்றதும் கடுப்பான வடிவு “என்ன டி பேசாம நிக்குற? வாயத் தொறந்து உன் புருஷன் கிட்ட சொல்லு உன் சக்களத்தி தம்பிக்கு உன் பொண்ண கொடுக்க மாட்டேன்னு” மகளிடம் பாய்ந்தார் வடிவு.
உண்மையில் அபரஞ்சிதாவுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை. கணவனிடம் மறுப்பு தெரிவிக்கவும் முடியவில்லை. மகளிடம் பேசவும் முடியாமல் அன்னையை ஏவி விட்டிருக்க வடிவுப்பாட்டி பேத்தியிடம் பேசி புரியவைக்க முடியாமல் மகளிடம் பாய்ந்து… சொன்னது மகள்தான் என்று காட்டிக் கொடுத்திருந்தார்.   
“இங்க பாரு கிழவி… அவங்க சொல்லுரதுலையும் ஒரு நியாயம் இருக்கு இல்ல. அந்தம்மா பொண்ணுக்கு ஊரறிய கல்யாணம் பண்ணும் போது நாம பிரச்சினை பண்ணுவோம்னு ஒரு பயம் இருக்குமா இல்லையா?  இந்த விஷயம் தெரிஞ்சா தன் பொண்ணு வாழ்க என்ன ஆகுமோ! எங்குற பயம் இருக்கும். அந்த அம்மா கரெக்ட்டாதான் யோசிச்சு முடிவெடுத்திருக்காங்க” கயந்திகவை பெரியம்மா என்றோ! அப்பாவின் மற்ற மனைவி என்றோ! குறிப்பிடாமல் கோதை புகழ,
பேத்தியை முறைத்த வடிவு “அடியேய் கூறு கெட்டவளே! உன்ன கட்டிக்கிட்டு கொடும படுத்தினா? இல்ல. உன்ன வச்சி உன் அம்மாவ பிளாக்மெயில் பண்ணா? என்ன டி பண்ணுவ?” இந்த திருமணத்தை பேசியது கயந்திக்கா என்று தெளிவாக கண்ணபிரான் சொல்லித்தான் திருமண ஏற்பாடுகளை செய்வதாக கயந்திகாவிடம் கூறி இருக்க அது போல் அபரஞ்சிதாவிடமும் உண்மையை மறைக்காமல் பேசி இருக்க, வடிவுப்பாட்டிக்கு அதில் ஏதோ! உள்குத்து இருப்பது போலவே! தோன்றியது. அதனால் இந்த திருமணத்தை கடுமமையாக எதிர்க்கலானார்.
“என்ன கொடும படுத்தினா என்ன பாத்துக்க அப்பா இருக்காரே! இவங்கள பிளாக் மெயில் பண்ணுவாங்களா?” அன்னையை அதிசியப்பிறவி போல் பார்த்தவள் “அப்படி நடந்தா சந்தோஷப்படும் மொத ஆள் நான்தான்” என்று விட்டு செல்ல தலையில் அடித்துக்கொண்டார் வடிவு.
பாட்டி மற்றும் பேத்தியின் சம்பாஷணையை கலந்துகொள்ளவில்லையானாலும் அங்கிருந்த அபரஞ்சிதா மகளின் வார்த்தைகளால் ரொம்பவும் காயப்பட்டு போனாள். அவள் அமைதியாக இருப்பதற்கே! இந்த பேச்சு பேசும் கோதை அபரஞ்சிதா பேசி இருந்தால் இன்னும் கடுமையாக பேசுவாள். அதனாலயே! அன்னையை பேச விட்டு அமைதி காத்தாள்.   
வீடு வந்த வசந்த்திடம் வடிவு புலம்பித் தீர்க்க, “கூல் அம்மாச்சி இதுக்குப் போய் அவகிட்ட கத்தி டென்ஷனாகி… பிபிய ஏத்திக்கணுமா? எது நடந்தாலும் நல்லதுக்கு நடக்கிறதா எதடுத்துப்போம் சரியா?” என்று கட்டிக்கொள்ள
“நீ வாடா செல்லம் நா உனக்கு டீ போட்டு தரேன்” நொடியில் மனம் மாறி பேரனை அழைத்துக்கொண்டு சமயலறைக்குள் நுழைந்திருந்தார் வடிவு.
கல்யாண தேதியும் குறிப்பிடப்பட்டு கல்யாண வேலைகளும் வேகவேகமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கல்யாணம் சென்னையில் நடைபெறுவதால் அபரஞ்சிதா குடும்பம் சகிதமாக சென்னைக்கு வந்து விட வசந்துக்கு காலேஜ் இருப்பதால் அவன் மட்டும் வரவில்லை. யுவன் அவர்களை அவர்களுக்கு சொந்தமான மற்றுமொரு வீட்டில் தங்கவைக்குமாறு கண்ணபிரானை கேட்டுக்கொள்ள கண்ணபிரானுக்கும் அதுவே! சரியென்று தோன்ற அவ்வாறு செய்திருந்தார்.    
அபரஞ்சிதாவும், வடிவும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கல்யாண ஷாப்பிங் செய்ய கோதை சந்தோஷமாகவே! தந்தையோடு ஷாப்பிங் செய்ய கிளம்ப திருமணத்து முதல்நாள் வந்து சேர்வதாக கூறி இருந்தான் வசந்த். 
ஷாப்பிங் சென்ற இடத்தில் யுவனோடு கயந்திகாவை அபரஞ்சிதா மட்டுமன்றி கண்ணபிரானும் சற்றும் எதிர்பாத்திருக்கவில்லை.
தம்பியோடு நின்றிருந்தவள் கணவனை கண்டதும் இன்முகமாக ஓடிவந்து “முதல்ல எல்லாருக்கும் சாரி எடுத்துடலாம்” என்று கூறியவாறு கணவனின் கையை பற்றி அழைத்துக்கொண்டு சென்றதோடு மற்றவர்களை கிஞ்சத்துக்கும் கண்டுகொள்ளவில்லை.
யுவன் கோதையை ஆசையாக பார்க்க அவன்தான் மாப்பிள்ளை என்று அறியாத கோதையோ! “தம்பி அந்தம்மா யாரு? அந்தம்மாக்கு நீங்க யாரு?” என்று கேட்டிருக்க
“என்ன இவ சர்வசாதாரணமாக கிண்டல் பண்ணுறா…” என்று முழித்த யுவன் புன்னகையினூடாகவே! “அவங்க உனக்கு பெரியம்மா… நான் உனக்கு மாமா” என்று கோதையின் முகம் பார்த்தான்.
தந்தையின் கையை இவ்வளவு உரிமையாக பற்றிக்கொண்டு செல்லும் பெண்தான் கயந்திகாவோ! என்ற சந்தேகம் இருந்தாலும், யுவனுக்கு, அவளுக்கும் முக ஒற்றுமை கொஞ்சம் கூட இல்லை. அதனாலயே! அவ்வாறு கேட்டாள் கோதை. 
யுவனை பார்த்தால் அவன் ஒன்றும் கோதைக்கு தம்பி போன்ற தோற்றத்தில் இல்லை. ஆறடிக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலும் கட்டுமஸ்தான தேகம்தான். அடர்ந்த மீசை. லட்சணமான முகம். சிவந்த நிறமும் கூட. ஆண்களை அண்ணா என்று அழைப்பதை விட தம்பி என்று அழைப்பதுதான் இந்த கால பெண்களின் சாமர்த்தியம் என்று யுவனுக்குத்தான் தெரியவில்லை.    
அப்பொழுதுதான் அவளுக்கும் புரிந்தது இவன்தான் மாப்பிள்ளை என்று. அவனை ஆராய்ச்சியாக பார்த்தவள் குறும்பு சிரிப்போடு அவன் பார்ப்பதைக் கண்டு “இவன பார்த்தா கொடும படுத்த கல்யாணம் பண்ண போறவன் போல தெரியலையே! பயபுள்ள இப்படி பாக்குறான்” என்று அவனையே! பாத்திருக்க,
“என்ன அங்கயே! நின்னுட்டிங்க வாங்க முதல்ல கல்யாண பட்டு எடுத்திடலாம்” என்று கண்ணபிரான் அழைக்கவும் அனைவரும் உள்ளே! சென்றனர்.
கோதையோடு யுவன் அமர்ந்துகொள்ள, கண்ணபிரான் அமர்ந்திருந்த இடத்தில் கயந்திகா அமர்ந்துகொண்டு அபரஞ்சிதாவை கேலியாக பார்க்க அதை கோதை பார்த்து விட்டு “இது உனக்கு தேவைதான்” எனும் விதமாக அன்னையை பார்த்தவள் அவளை கண்டுகொள்ளாது சாரியை பார்கலானாள். 
கயந்திகாவை முறைத்த வடிவு மகளை அழைத்துக்கொண்டு கோதை அருகில் அமர்ந்துகொள்ள, கல்யாண பட்டு பார்ப்பதில் மும்முரம் காட்டினார் அனைவரும்.
கோதைக்கு பிடித்தால் வடிவுக்கு பிடிக்கவில்லை, அல்லது அபரஞ்சிதாவுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் மூவருக்கும் பிடித்தால் விலை அதிகமாக இருபதத்தால் கயந்திக்கா தனக்கு பிடிக்கவில்லை என்பாள்.
“இப்படியே! போனா ஒரு சாரி செலெக்ட் பண்ண ஒருநாள் போகும். சாரியை கட்ட போறது கோதை தானே! கோதை நீயே செலெக்ட் பண்ணு இவங்க யாருக்கும் பிடிச்சிருக்கானு யோசிக்காத” என்று யுவன் சொல்ல கோதைக்கு அவனை கொஞ்சம் பிடிக்கத்தான் செய்தது.
“அபி உனக்கு பிடிச்சா மாதிரி புடவைய நீயே செலெக்ட் பண்ணிக்க, கயந்திக்கா ராதைக்கு சேர்த்து நீயே எடு. அத்த உங்களுக்கு தேவையானதை பார்த்து எடுத்துக்கோங்க” கண்ணபிரான் உத்தரவிட்டவாறே அலைபேசியோடு எழுந்து கொண்டார். 
“அத நீங்க சொல்லனுமா மாப்பிள “என் பேத்தி கல்யாணம் சும்மா ஜம்முனு துணி போட மாட்டேன்னா?” சொல்லி முடிக்கும் பொழுது கோதை பார்ப்பதைக் கண்டு “என்ன?” எனும் பார்வையை வீச
“இது உனக்கே! ஓவரா தெரியல? கல்யாணத்துக்கு விருப்பம் இல்லனு சொல்லிக்கிட்டு புடவை எடுக்கவும், பந்திக்கும் முந்துற”
“அடி போடி விளங்காதவளே! அங்க பாரு அவ வயிறெரியிறா உங்க அப்பா காச நாம கரைக்கிறோமாம். ஒரு பண்டிகை, திருவிழா. பிறந்தநாள், கல்யாணனாள்னு உங்க அப்பா வேற வேறயா வாங்கி குவிச்சிட்டாரு  பாரு பொறாமைல பொசுங்க, இன்னிக்கிதான் கடைக்கே! கூட்டிகிட்டு வந்து தாராளமா வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டாரு. கரைச்சிட வேண்டியதுதான்” என்று விலைகூடிய புடவைகளாகவே! பார்க்க, அபரஞ்சிதாவின் மனதில் உள்ளதை வடிவு அப்படியே ஒப்புவித்ததில்  அவள் முகம் புன்னகையை பூசிக்கொண்டது.
கண்ணபிரான் கடைக்கு அழைத்து சென்று வாங்கிக் கொடுக்கவில்லை என்றாலும் சென்னையிலிருந்து வாங்கி அனுப்பி வைத்து விடுவார். சந்தோசத்தில் குதித்த குழந்தைகள் தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை அறிந்துகொண்டதன் பின் தந்தை வராமல் துணிகள் மட்டும் வரும் காரணம் இதுதான் என்று புரிய சோகமாயினர்.
“நீ கட்டுர புடவைய பார்த்து எடு அம்மாச்சி.. அப்பொறம் யாருக்காவதுதான் தூக்கி கொடுக்க போற” என்ற கோதை யுவனின் புறம் திரும்ப கயந்திகா தம்பியின் காதில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.
“பாத்தியாடா உன் மாமாவ என்ன எப்போவாச்சும் புடவை எடுக்க கடைக்கு கூட்டிட்டு வந்திருக்காரா? அவள மட்டும்  கூட்டிகிட்டு திரியிறாரு” என்று பொரும
“என்ன அக்கா பேசுற? மாமா இங்க நம்ம கூடத்தான்! இருக்காரு வருஷத்துல எத்தன நாள் அவங்க கூட இருக்காங்க? மாமா வாங்கிக் கொடுக்குற புடவை ஒன்னும் உனக்கு பிடிக்கிறது இல்ல முகத்துக்கு நேர சொல்லிடுற, புடவை மட்டுமா? நகை வாங்கி வந்தாலும் அதே! பேச்சுதான். எனக்கே நீ வேணும்னு பண்ணுறியோனு தோணும். நீ இப்படி பண்ணுறதாலதான் மாமா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரு போல” யுவன் சிரித்தவாறு சொல்லி முடிக்க,
தம்பியின் பேச்சு நெஞ்சில் சுர்ரென்று தாக்க, “போடா இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள பொண்டாட்டி குடும்பத்தை தாங்கி பேசுறியா?” என்று கயந்திக்கா முறைக்க,
“நான் உண்மைய சொன்னேன்” என்று சிரித்தான் யுவன்.
இந்த பேச்சு கோதையின் காதில் விழ, “இவனும் நம்மள போலத்தான், அக்காவ பிடிக்காது போல. ஜாடிக்கேத்த மூடிதான்” என்று தங்கள் ஜோடிப்பொருத்ததை சிலாகித்துக்கொண்டாள். 
“அங்க பாத்தியா? அதுங்க இந்த மாதிரி கடைக்கு வந்தது கூட இல்ல. இருக்குறதுலையே! விலை கூடின புடவையா பார்த்து தேர்ந்தெடுக்குதுங்க” என்று யுவனை உசுப்பேத்த முயன்றாள் கயந்திகா.
“இல்ல நீ தப்பா புரிஞ்சி கிட்ட. பொண்ணுக்கு கல்யாணம்னா காஸ்டலியாதான் வாங்கணும். எங்க குடும்பத்தை பத்தி மாமா சொல்லி இருப்பாரில்லை. எந்த மாதிரி ஆட்கள் கல்யாணத்துக்கு வருவாங்க, எங்க சொந்தபந்தம் எல்லாம் பொண்ணு வீட்டை பத்தி விசாரிப்பாங்க, அப்போ சாதாரணமாக துணி போட்டுக்கிட்டு இருக்க முடியுமா என்ன?” யுவன் அக்காவுக்கு தெளிவு படுத்த
“என்னமோ போ…” என்ற கயந்திகாவுக்கு மனசே! ஆறவில்லை. இதில் அலைபேசி உரையாடலை முடித்துக்கொண்டு வந்த கண்ணபிரான் அபரஞ்சிதாவின் அருகில் சென்று அமர்ந்துகொள்ள கயந்திகாவின் கோப எல்லை கடந்திருந்தது. 
“கல்யாணம் முடியட்டும் பார்த்துக்கொள்கிறேன்” என்று கருவியவாறு அவள் அமர்ந்திருக்க, ஒருவாறு முகூர்த்தத்துக்கு, நிச்சயதார்தத்துக்கு, மற்றவர்களுக்கு என்று புடவைகளை எடுத்துக்கொண்டு யுவனுக்கு துணி எடுக்க சென்றவர்கள் கண்ணபிரானுக்கும், வசந்துக்கு எடுத்துக்கொண்டு வெளியே வர இருட்ட ஆரம்பித்திருந்தது. 
யுவனுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கோதையோடு நேரம் செலவழித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, “மணி ஆறு முப்பது தாண்டிருச்சு. எங்கயாச்சும் போய் சாப்பிட்டுட்டே! வீட்டுக்கு போலாமே!” கோதையை பார்த்தவாறே கேட்க கண்ணபிரான் சரியென்று கூறும் முன் கயந்திகா ராதை வீட்டில் தனியாக இருப்பாள் என்று மறுத்து விட்டாள்.
லேடீஸ் கிளப், பிரெண்ட்ஸ் பர்த்டே பார்ட்டி என்று சென்றால் நடு இரவில் வீட்டுக்கு வருபவளுக்கு திடீரென்று தாய் பாசம் ஊர்றேடுத்ததைக் கண்டு மாமன் மச்சான் இருவருக்கும் கண்கள் தெறிக்கும் அளவுக்கு ஆச்சரியம் கூடியது.
சுதாரித்த யுவன் “ஆமா அக்கா இருட்டினா ராதை பயந்திடுவா… நீ உடனே! வீட்டுக்கு போ..” என்றவாறே கார் கதவை திறந்து அவளை அமர்த்தி விட்டு “நாங்க மெதுவா சாப்பிட்டுட்டு வரோம். ட்ரைவர் அக்காவ பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போய் விடுங்க” என்றவன் கண்ணபிரானின் வண்டிக்கு செல்ல கயந்திகா செய்வதறியாது வீடு சென்றாள்.
யுவன் நினைத்தது போல் கோதையோடு தனியாக ஒன்றும் பேச முடியவில்லை. அனைவரும் ஒன்றாக உண்டு வீடு திரும்பினார்.
கல்யாணம் மட்டும்தான் மண்டபத்தில் நிச்சயதார்த்தம் அபரஞ்சிதாவின் குடும்பம் இருக்கும் வீட்டில் மிக எளிமையாக கல்யாணத்து முதல் நாள் நடாத்த திட்டமிட்டிருந்தபடியே நடந்தேறி இருக்க, குடும்பத்தார் தவிர யாருமில்லை.
அன்றுதான் ராதை முதன் முதலாக தந்தையின் மற்ற குடும்பத்தை சந்தித்தாள். அபரஞ்சிதா அவளிடம் அன்பாக பேச முகத்தில் அடித்தது போல் பேசி அவளை அவமானப்படுத்த “அவ என் பொண்ணு டி..” என்று சொல்லி விட்டு சென்றாள் கயந்திகா.
நடந்ததை பாத்திருந்த கோதை எதுவும் பேசவில்லை. “இது நீயாக தேடிக்கொண்ட வாழ்க்கை. இதெல்லாம் நீ அனுபவித்துத்தான் ஆக வேண்டும்” என்ற பார்வையை வீசியவள் அங்கிருந்து நழுவி வசந்த்திடம் சென்று அமர்ந்து கொண்டாள். 
அபரஞ்சிதாவுக்கு ராதை அவமானப்படுத்தியதை விட தான் பெற்ற மகள் ஒதுக்குவதுதான் பெரும் வேதனையாக இருந்தது. கண்ணீர் முட்டிக்கொண்டு வர, கண்கள் கலங்கி நின்றவளை கண்டு பதறி விசாரித்தார் கண்ணபிரான்.
“ஒன்னும் இல்லைங்க பொண்ணுக்கு கல்யாணமாக போக்குதில்ல, அதான் சந்தோசத்து…” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
அபரஞ்சிதாவை தான் எங்கு இருக்கிறோம் என்று மறந்து அனைத்து ஆறுதல் படுத்திக்க கொண்டிருந்தார் கண்ணபிரான்.
“அப்பா… என்ன இது? நடு வீட்டுல அசிங்கமா…” ராதை கத்த யுவன், கயந்திகா, வடிவு, கோதை, வசந்த் என்று அனைவரும் வந்திருக்க,
விலக முயன்ற அபரஞ்சிதாவை விலக விடாது  “என்னம்மா..” என்று மகளை பார்த்து கண்ணபிரான் கேட்க முகத்தை சுளித்தாள் ராதை.
“அவ யாரோ! இல்ல. என் மனைவி.. நான் தொட்டு தாலி கட்டினவ” அழுத்தமாக சொல்ல ராதை மற்றும் கயந்திகாவின் முகங்கள் சிறுத்தன.
“ஆமா அப்பா.. நாளைக்கு என் கல்யாணம் நடக்கும் போது பெத்தவங்க தானே! கன்னிகாதானம் பண்ணனும். நாளைக்கு நீங்க என் அப்பாவா அத பண்ணுவீங்களா?” என்று கோதை சரியான நேரத்தில் கேட்டிருக்க,
தம்பிக்கு தான் திருமணம் செய்கிறோம் என்று இருந்த கயந்திகாவுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதையே! அப்பொழுதுதான் நியாபகம் வந்தது. கோதை இந்த திருமணத்துக்கு சம்மதம் சொன்னதன் பின்னால் இருக்கும் உள்குத்து புரிய, “இந்த கல்யாணம் நடக்காது” என்று ஆணித்தரமாக கயந்திகா சொல்ல
“என்ன விளையாடுறியா? நீ சொன்னதாலதான் கல்யாண ஏற்பாடு எல்லாம் செஞ்சோம். இப்போ எல்லாரையும் வர சொல்லிட்டு கல்யாணத்த நிறுத்துறீனா? என்ன அர்த்தம் என்ன அவமானப்படுத்த பாக்குறியா? சின்ன வயசுல இருந்தே! உனக்கு என்ன பிடிக்காது. சமயம் பார்த்து பழிவாங்க பாக்குறியா?” என்று கத்தியது யுவன்தான்.
“ஓஹ்… இப்படி ஒன்னு இருக்கோ!” என்று கோதை கைகளைக் கட்டிக்கொண்டு பாத்திருக்க, அங்கே அக்காவும், தம்பியும் வாக்குவாதம் பண்ணி கடைசியில் யுவன் திருமணம் நடந்தே! தீரும் என்ற முடிவாக சொல்லி கயந்திகாவையும், ராதையையும் ஒரு அறையில் அடைத்து வைத்தான்.
“என்ன டா பண்ணுற?” கண்ணபிரான் அதிர்ச்சியடைய
“என் அக்காவ பத்தி உங்கள விட எனக்குதான் தெரியும். போய் கல்யாண வேலையை பாருங்க மாமா” என்று அனுப்பி வைத்தவன் தூங்க சென்றான். 
“அடியேய்… உன்ன என்னமோன்னு நினச்சேன். இதுதான் உன் திட்டமா… என் ராசாத்தி… ஒரே கல்லுல ரெண்டு மங்கா.. உன் கல்யாணமும் நடக்கும், உங்க அப்பாக்கு ரெண்டு பொண்டாட்டி எங்குற உண்மையும் ஊரு உலகத்துக்கு தெரிய வந்து உங்க அம்மாக்கு சமூகத்துல அங்கீகாரமும் கிடைக்கும்” என்று வடிவுப்பாட்டி… கோதையை நெட்டி முறிக்க,
“இப்போ மட்டும் இந்த கல்யாணம் நடந்தா சந்தோசமா?” என்று கேட்டு விட்டு கோதை செல்ல
“என்ன டி இவ இப்படி பேசிட்டு போறா?” மகளிடம் புலம்பினார் வடிவு.

Advertisement