Advertisement

அத்தியாயம் 19
கிருஷ்ணாவுக்கு என்றுமே அரசியலில் ஈடுபாடு இருந்தது கிடையாது. அதற்கு முக்கிய காரணமும் கனகவேல் ராஜாதான்.
அன்னை சதா அழுது கொண்டிருக்க, தந்தை வீட்டில் இருக்காமல் எப்பொழுதும் கட்ச்சி, மீட்டிங் என்று கிளம்பி விடுவதும், நாட்டுக்காக தன் உயிரையே கொடுப்பது போல் பேசுபவர் வீட்டில் கண்ணீர் வடிக்கும் மனைவியை கண்டுகொள்வதில்லை என்ற கோபம் கிருஷ்ணாவின் மனதில் ஆழப் பதிந்திருந்தது. 
தந்தை என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்ற உண்மைகளை அறிந்துகொண்டதன் பின் தந்தையின் மீது மட்டுமல்லாது அரசியலின் மீதே வெறுப்பு வர எக்காரணத்தைக் கொண்டும் அரசியலில் களமிறங்க மாட்டேன் என்று தனக்கு தானே உறுதி மொழி எடுத்திருந்தான்.
ஆனால் இன்று யார் யாரோ விளையாடும் பந்து போல் ஆகிற்று அவனது வாழ்க்கை. எவனோ ஒருவன் தான் கோதையை காதலிப்பதை அறிந்து அவள் போல் பேசி திருமணத்தை நடாத்தி இருக்கின்றான்.
தனக்கு உடல்நலமற்று போனதை காரணமாக் காட்டி தன்னை அரசியலில் இழுக்க நினைக்கும் தந்தை.
அவர் செய்த பாவத்துக்காக அவரை பழிவாங்க துடிக்கும் அண்ணன்.
கணவனே கண்கண்ட தெய்வம் என்று கண்மூடித்தமாக இன்னும் தந்தையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அன்னையர்கள்.
தந்தை மேல் என்ன கோபம் இருந்தாலும் பெற்ற மகன், மருமகன் என்றதும் மனமிறங்கும் தாத்தாக்கள்.
இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு தன் கனவை நனவாக்குவது எப்படி?
தந்தையின் அறையை விட்டு வேகவேகமாக தனதறைக்கு வந்து கதைவடைக்குத்துக் கொண்டான் கிருஷ்ணா.
பின்னால் வந்த அருள்வேல் கதவை தட்டுவது அநாகரீகம், இனியும் அவனிடம் பேசி புரிய வைக்க முடியாது கோபம் தனியட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று இடத்தை காலி செய்திருந்தான்.
“ஹாய் புருஷா… இப்போ தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா? எங்கடா போன? வீட்டை விட்டு போனா இந்த இடத்துக்கு போறேன்னு சொல்லிட்டு போக மாட்டியா? இல்ல இந்த இடத்துல இருக்கேன்னு சொல்ல மாட்டியா?” என்று மிரட்ட கிருஷ்ணாவுக்கு கோதையின் பேச்சில் எரிச்சல் எல்லாம் வரவில்லை. சிரிப்பாக இருந்தது.
அவள் ஒருத்திதான் இந்த வீட்டில் அவளாக இருக்கிறாள். ஓவராக எமோஷனாகாமல், பொய்யாக நடிக்காமல். அவள் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்வாள்.
அவன் உள்ளே வரும் பொழுது கூட அலைபேசியைத்தான் நோண்டிக் கொண்டிருந்தாள். அவனை கண்டதும் முகம் மலர்ந்தவள் அதை அனைத்து தூக்கிப்போட்டு விட்டுத்தான் இத்தனை பேச்சையும் பேசி விட்டாள்.
அலைபேசியும் அவளும் இரட்டை பிறவிகள் என்று வடிவுப்பாட்டி அவளை வசைபாடாத நாளே இல்லை. அப்படி இருக்க கிருஷ்ணாவை கண்டதும் அதையே தூர வைக்கின்றாள் என்றால் அவள் வாழ்க்கையில் கிருஷ்ணா எவ்வளவு முக்கியமானவன் என்று அவள் செய்கையால் அவனுக்கு உணர்த்தி விட்டாள்.
சில நேரம் வார்த்தைக்கால சொல்லாத காதலை மௌனம் பேசி விடுமாம். கோதைக்குத்தான் மெளனமாக இருந்து பழக்கம் இல்லையே, அவள் செய்கைகளை கவனித்து கிருஷ்ணா புரிந்துகொண்டால் தான் உண்டு.
கிருஷ்ணாவும் அதை கவனிக்கத்தான் செய்தான். அதனால்தான் அவனுக்கு எரிச்சல் வருவதற்கு பதிலாக சிரிப்பு வந்தது. “சண்டிராணி போல் பேச்சில் வாள் வீசினாலும் அவளுக்கு அவன் மீது விருப்பமும் ஒரு வித மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது கணவன் என்பதனாலா? காதலாலா? அதுதான் கிருஷ்ணாவுக்கு புரியவில்லை.
அவளுடைய இயல்பான குறும்புத்தனத்தினால் வெக்கமே இல்லாமல் சில விஷயங்களை பேசுகிறாள் என்று அவன் கூறினாலும், கணவனான அவனிடத்தில் மட்டும்தான் அந்த பேச்சுக்கள் வெளிப்படுவதை பார்த்திருக்கின்றான். அது தாலி கொடுத்த உரிமையாக கூட இருக்கலாம். “எப்படி இப்படி திடிரென்று சந்தித்த ஒருவனிடம் பேச முடிகிறது?” என்று கிருஷ்ணாவின் மனம் கேள்வி எழுப்பினாலும், அவனை அவள் முழு மனதாக ஏற்றுக்கொண்டதால் அவனிடத்தில் பேசுவதற்கு அவளுக்கு எந்த கூச்ச நாச்சமும் தோன்றவில்லை போலும்.
ஏர்போர்ட்டில் அவளை பார்த்த நொடி அவனுக்கு தோன்றியது காதல் என்றால்? தாலி கட்டிய கணவனிடம் அவள் பேசுவதை தப்பாக எடுத்துக் கொள்வதா? அதுவும் கோதை போன்ற குறும்புக்காரி தன்னுடைய சுயத்தை தொலைத்தால் பொம்மை போல் இருப்பாள். அவள் இப்படி இருப்பதுதான் அவளுக்கு அழகு.
மனைவியை கண்களில் நிரப்பிக் கொண்டவன் மனதால் ரசிக்கலானான்.
“ஆமா எங்க அப்பா என்ன கேண்டிடேடா நாமினேட் பண்ணி இருக்காரே அத பத்தி நீ ஒன்னும் சொல்லல” சட்டையை கழற்றியவாறு கிருஷ்ணா வினவ
அதை வாங்கி கடமை தவறாத மனைவியாய் ஹேங்கரில் மாட்டியவள் “உனக்கு அரசியல்ல குதிக்க இஷ்டமில்ல. இருந்திருந்தா நீ அமேரிக்கா போய் இருக்க மாட்ட, உங்க அப்பா ஹாஸ்பிடல்ல படுத்திருக்கும் போது பாவமா இருந்திச்சு. ஆனால் வீட்டுக்கு வந்ததுல இருந்து ஜாதகம், ஜோஷியம் என்று பினாத்திக்கிட்டு, உங்க அம்மங்கள நல்லா பிரைன் வாஷ் பண்ணத பார்த்தா உன்ன அரசில்ல இழுக்க திட்டம் போடுறாருனு தோணிருச்சு. அது போலவே நாமினேஷன் கொடுத்துட்டாரு” கணவனுக்கு பதில் சொல்லியவாறே அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
என்னதான் வாயாடி.. வம்பாக பேசுபவள் என்றாலும், நடப்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றது போல் பேசக் கூடியவள் கோதை. அதற்கு அவள் திருமணத்தின் போது நடந்த சம்பவமே போதும். யாரென்றே அறியாத கிருஷ்ணா தாலி கட்டியதும் திகைத்தவள், அவனையே காதலித்ததாக பேசி மண்டபத்தையே அல்லோல கல்லோல பட வச்சவளாயிர்றே. 
கோதை அரசியல் படித்தவளும் கூட. பாட புத்தகத்தில் இருப்பது போன்றா இன்றுள்ள அரசியல்வாதிகள் நாட்டை ஆளுகிறார்கள்? கனகவேலை பற்றி நல்லவர், வல்லவர் என்று மீடியாக்களில் வரும் செய்திகளில் பாதி கூட உண்மையில்லை என்பதை கோதை அறியாமலும் இல்ல.
குடும்பத்தாரை பார்த்த மட்டில் கெட்டவர்கள் என்று தோன்றவில்லை. அரசியலில் இருப்பவர்கள் எந்த நேரத்தில் நல்லவர்களாக இருப்பார்கள் எந்த நேரத்தில் கெட்டவர்களாக மாறுவார்கள் என்று சுற்றி இருப்பவர்களை பொறுத்துதான் உள்ளது. அவர்கள் எடுக்கும் முடிவுக்கு தலையாட்டினால் நல்லவர்கள் இல்லையென்றால் கெட்டவர்கள்.
“இப்போ நான் என்ன பண்ணனும்” கிருஷ்ணா மனைவியின் முகத்தையே பார்த்திருந்தான்.
“உனக்கு அரசில்ல இஷ்டம் இருந்திருந்தா எப்பயோ! அரசியல்ல களமிறங்கி ஒரு கை பார்த்திருப்ப, விருப்பமில்லாம குதிச்சி நீச்சலடிக்க அரசியல் ஒன்னும் கடல் இல்ல. அலைக்கு கரையொதுங்குவோம்னு தெரிஞ்சும் குதிச்சு எதிர் நீச்சல் போட.
என்ன கேட்டா உங்க அப்பா இந்த ஜாதகம், ஜோஷியத்தை நம்புறத விட்டுட்டு, அரசியல்ல விருப்பம் இருக்குற, கொஞ்சமாச்சும் அனுபவம் இருக்குற உங்கண்ண கேண்டிடேட்டா போட்டிருக்கணும்.
ஆனாலும் ஏன் உங்க குடும்பத்து ஆட்களையே போடுறீங்க? இது என்ன அரசாட்ச்சியா? மக்கள் ஆட்ச்சிதானே!
டாக்டர் தன்னோட பையன டாக்டர் ஆகணும்னு ஆச படுறான். வக்கீல் தன்னோட பையன வக்கீல் ஆகணும்னு ஆச படுறான். அது கூட தப்பில்ல ஏன்னா அங்க படிச்சா தான் ஆக முடியும். அரசியல் அப்படியா? எவன் வேணுமானாலும் உள்ள வரலாம் தேர்தல்ல நிக்கலாம். அது கூட தப்பு. இங்கயும் படிச்சவங்க மட்டும் வரணும், ரௌடீஸ் வரக்கூடாது. அதே மாதிரி உங்க அப்பா முதலமைச்சர் ஆனா நீயும் ஆகணுமா? உனக்கு பிறகு உன் பையனா? அப்போ இது மக்கள் ஆட்ச்சி இல்லையா?”
“அப்போ என்ன தேர்தல்ல நிக்க கூடாதுனு சொல்லுறியா?” கிருஷ்ணாவின் முகத்தில் புன்னகை மட்டும் மாறவில்லை.
“நான் வேணான்னு சொன்னா உங்க அப்பா கேப்பாரா என்ன? உன்னையும் பிரைன் வாஷ் பண்ணிடுவாரு” என்றவள் “இரு உனக்கு குடிக்க ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்று வெளியே செல்ல எழுந்து கொண்டாள்.
“ஒன்னும் வேணாம் இப்படி கொஞ்சம் உக்காரு உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றவன் அவள் கைபிடித்து தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
“அப்போ இவ்வளவு நேரமும் பேசினது முக்கியமான விஷயம் இல்லையா?” கணவனை சீண்டியவாள் அவனை உரசிக் கொண்டு அமர, சுடிதார்தான் அணிந்திருந்தாள். துப்பட்டாவை கட்டிலுக்கு போட்டு விட்டிருந்தாள்.
“அடியேய் கொஞ்சம் தள்ளி உக்காரு டி.. இப்படி உரசிகிட்டு நின்னா என்ன சொல்ல வந்ததுன்னு மறந்துடுவேன்” கிருஷ்ணா பொய்யாய் முறைத்தாலும் அவள் அருகாமையை அவன் மனம் கள்ளத்தனமாக ரசிக்க அவள் கையை மட்டும் விடவில்லை.
“யாரு நீ… காரியத்துலையே கண்ணா இருக்குற நீ சொல்ல வந்தத மறந்துடுவியா? இத நான் நம்பணுமா?” மேலும் அவனை ஒட்டி அமர்ந்தவள் “யோவ் ஹனிமூன் போறான்னு சொன்ன? அதன்ன, இதன்ன ஒன்னத்தையும் காணோமே! உண்மையிலயே உனக்கு பொண்ணுகளை பிடிக்குமா? இல்ல…. அவனா நீ…” மெதுவான குரலில் ரகசியம் பேசுவது போல் கேட்டு அவனை சீண்டலானாள் கோதை. கிருஷ்ணாவை சீண்டுவது என்றால் அவளுக்கு அப்படி ஒரு சுகம்.
“யாரப் பார்த்து என்ன கேள்வி டி கேக்குற? கடிச்சி வச்சிடுவேன் பாத்துக்க, அப்பொறம் வீட்டுக்குள்ள மாஸ்க் போட்டுக்கிட்டுதான் அலைய வேண்டி இருக்கும் சொல்லிட்டேன்” அவள் உதட்டை சுண்டி விட்டவன். “என் காலேஜ்ல நான் தான் டி ஹீரோ. பொண்ணுங்க எல்லாம் என் பின்னாடிதான் சுத்துவாங்க. எனக்கு ப்ரொபோஸ் பண்ணாத பொண்ணே இல்ல தெரியுமா? செல்லமா என்ன காலேஜ் டான்னுதான் கூப்பிடுவாங்க. அவ்வளவு கெத்தா சுத்திகிட்டு இருந்தேன்”
“ஐயா எத்தனை பொண்ணுகளுக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்கீங்க?” கிருஷ்ணாவின் கையை பிடித்து  விரல்களை சொடக்கிட்டவாறு மெதுவாக கேட்டாள் கோதை.
“பண்ணனும்னு நினைப்பேன். ஆனா அந்த பொண்ணுக்கு ஏற்கனவே பாய் பிரென்ட் இருப்பான். அதுவும் என் ப்ரெண்ட்டோட ப்ரெண்டா இருப்பான் அப்பொறம் விட்டுடுவேன்” மிக மிக சாதாரணமாக சொன்னான் கிருஷ்ணா. அதுதான் உண்மையும் கூட.
“அப்பொறம்?” கோதை ஆர்வமாக கேட்க
“அப்பொறம் என்ன?”  புரியாது மனைவியை ஏறிட்டான்
“அப்பொறம் டேட்டிங், மேட்டரு இப்படி ஏதாவது?… சொல்லு…சொல்லு.. சொல்லு..” இன்னும் அவனை நெருங்கி அமர
“அடிப்பாவி. அப்பாவியா மூஞ்ச வச்சிக்கிட்டு போட்டு வாங்குறியா? சொல்ல மாட்டேன் போ…” அவளின் அதீத ஆர்வமே அவனுக்கு சந்தேகத்தை தோற்று வித்திருந்தது.
“டேய் சொல்லு டா… நான் முரட்டு சிங்கிள்டா… இதெல்லாம் எனக்கு தெரியாது டா..”  குழந்தை போல் கெஞ்சலானாள் கோதை.
“அத தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ண போற?” கிருஷ்ணாவுக்கு சிரிப்பாக இருந்தது. கேடியிலும் கேடி ஜில்லா கேடியாச்சே கோதை. அவனிடமே போட்டு வாங்கி அவனுக்கே ஆப்பை சொருக பார்க்கின்றாள்.
“நான் என்ன செய்ய? எனக்கு கிடைச்சது செகண்ட் ஹண்ட் ஹஸ்பன்தான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான்” நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள்.
என்னதான் பெண்கள் கணவனின் முன்னாள் காதலி பற்றி சாதாரணமாக பேசுவது போல் பேசினாலும் பொறாமையில் அடிவயிறு பற்றத்தான் செய்யும். அவன் பெண்களை காதலிக்க வில்லையென்றால் என்ன? பெண்கள் எந்த மாதிரி என்று அறிந்துதான் வைத்திருந்தான். நண்பர்களோடு அமர்ந்து பேசும் பொழுது ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள்.
“டேய் மறந்தும் இப்போ இருக்குற லவர் கிட்ட எக்ஸ் பத்தி பேசிடாத, அப்பொறம் வாழ்க கோவிந்தா கோவிந்தா தான். அதையே சொல்லி டாச்சர் பண்ணுவா?” என்று ஒருவன் சொல்ல
“ஆமா டா.. என் ஆளு போன் எடுக்கலானா? எவ கூட கடல போடுவா..னு கேப்பா, எக்ஸ் பத்தி சொன்னதுல இருந்து அவ போட்டோ பத்து ரசிச்சு கிட்டு இருக்கியான்னு கேப்பா” என்று ஒருவன் சொல்ல
“அது கூட பரவால்ல டா… நாங்க மீட் பண்ணுறதே வாரத்துக்கு ஒருக்கா, பார்க்லயோ, பீச்லயோ மீட் பண்ணா ஒழுங்கா கிஸ் கூட பண்ண முடியாதுனு தியேட்டர் கோனார் சீட்டை புக் பண்ணி ஒரு வாரமா பிளான் பண்ணா…” நொந்த குரலில் இன்னொருவன் சொல்ல
“பண்ணா…” கோரஸாக நண்பர்கள் ஆர்வமாக
“அந்த பக்கி… இப்படித்தான் அவளையும் கூட்டிட்டு வந்தியா? தியேட்டருக்கு மட்டுமா? ரூம் புக் பண்ணியானு அசிங்கமா கேக்குறாடா… சிங்களா இருந்து செத்து போலாம்னு தோணுது” அழு குரலில் கரைந்தான் அவன்.
“பொம்பளைங்க சரியான சந்தேகப் பேய்ங்க” ஒருவன் கத்த,
“லவ்வர் இப்படின்னா பொண்டாட்டிங்க எப்படி இருப்பாங்க?”
“லவ்வற கூட கழட்டி விட்டுடலாம் டா… ஆனா பொண்டாட்டிய?”
“நம்ம வாய்க்கு சிப்பு போட்டா தான் குடும்பம் நடத்த முடியும்”
அன்று நண்பர்கள் பேசும் பொழுது சிரித்தவாறு கேட்டிருந்தான் கிருஷ்ணா. 
“நான் சத்தியம் பண்ணி சொன்னாலும் நீ நம்ப மாட்ட, அதனால எதுவும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் போ..” என்றவன் எழுந்து செல்ல,
இப்போதைக்கு அவனிடத்தில் எதையும் கரைக்க முடியாது என்று புரிந்து கொண்டு “பய புள்ள சிக்க மாட்டேங்குறானே”   அவன் கையை பிடித்து அமர்த்தியவள் “எதோ முக்கியமான விஷயம் சொல்லணும் என்று சொன்னியே சொல்லாமலையே போறியே லூசு” என்று அவனை திட்ட
“புருஷனுக்கு ரொம்பதான் மரியாதை கொடுக்குற, எங்க என்ன சொல்ல விட்ட? கண்டதையும் பேசி டைவர்ட் பண்ணிட்டியே” ஏகத்துக்கும் மனைவியை முறைக்கலானான் கிருஷ்ணா.
“சரி, சரி பிகு பண்ணாம சொல்லு” கோதை சாவுகாசமாக அமர்ந்துகொண்டாள்.
அவள் மடியி தலை வைத்து படுத்துக்க கொண்டவன் அவனுடன் கோதை பேசியதாக கூறிய அலைபேசியை கண்டு பிடித்து விட்டதாகவும், அது அருள்வேலிடம் இருந்ததையும் கனகவேல் கூறிய கதையையும் கூற, பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள் கோதை.
“என்ன மேடம் சத்தத்தையே காணோம்?”
“இல்ல இது என்ன சாதாரண வீடா? முதலமைச்சரோட வீடு. ஒரு கடிதம் வந்தாலே யார் அனுப்பினாங்க, எங்கிருந்து வந்தது என்று பிரிச்சி மேஞ்சி உள்ள பாம் இருக்கானு செக் பண்ணுவாங்க. ஒரு செல் போன் வந்தா செக் பண்ண மாட்டாங்களா?
போன் பார்சல்ல வந்தா கண்டிப்பா அந்த கவர் இருக்கும். ஏதாவது க்ளூ கிடைக்கும். எந்த கவரும் இல்லைனா. கலப்ரிட் உங்க அப்பாதான் அதுல எந்த சந்தேகமும் இல்ல” என்றாள் கோதை.
படுத்திருந்த கிருஷ்ணா அவள் பேசப் பேச எழுந்து அமர்ந்து விட்டான். “ஆமா இல்ல. இது எனக்கு தோணவே இல்ல. பாரேன். நான் இப்போவே போய் சரத் கிட்ட கேக்கறே” என்றவாறு எழுந்தான் கிருஷ்ணா.
“என்ன கேக்க போற?” அவன் நெற்றியில் அடித்தாள் கோதை.
நேரடியாக கேட்டால் கவரை எடுத்துக் கொடுக்க போகிறான். இதில் என்ன இருக்கிறது என்ற எண்ணம்தான் கிருஷ்ணாவுக்கு. கோதை அடித்ததில் சுதாரித்தவன் “என்ன?’ எனும் விதமாக அவளை ஏறிட
“உண்மையிலயே அப்படி ஒரு கவர் இல்லைனா. அந்த விஷயம் உங்க அப்பா காதுக்கு போகக் கூடும். பிறகு எடுத்து தருவதாக சொல்லி கவருக்கு ஏற்பாடு நடந்தா என்ன பண்ணுவ?”
“வாய்ப்பிருக்கு. அந்தாளு என்னவேனாலும் செய்வாரு. இப்போ என்ன பண்ணலாம்?”
“கவரெல்லாம் எங்க வைக்கிறாங்க என்று தெரியுமா?”
“ஆமா ஒரு மாசம் வரைக்கும் ஸ்டோர் ரூம்ல இருக்கும் அதன் பின் எரிச்சிடுவாங்க” 
“போன் வந்திருந்தா கவர் அங்க இருக்கும். நாமளே போய் பார்க்கலாம்”
“நல்ல ஐடியா? இப்போவே போலாமா?”
“வேணாம் வேணாம் நைட் போலாம். எல்லாரும் தூங்கின பிறகு”
“நெறய ஜேம்ஸ் பாண்ட் படம் பார்ப்பியோ!”
“இல்லையே”
“ரொம்ப க்ரிமினலா யோசிக்கிற” கிருஷ்ணா அவளை  வம்பிழுக்க
“வாக்கப்பட்டு வந்த இடம் அப்படி, அதான்” என்றவள் கணவனின் முறைப்படி பரிசாக பெற தவறவில்லை.
“யோவ் புருஷா… அத விடுயா… நாம எப்போயா ஹனிமூன் போக போறோம்” கணவனின் முறைப்பெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் மீண்டும் அவனை உரசிக்கொண்டு அமர
“ஏன் டி என் உசுர வாங்குற? இப்போதான் அப்பாக்கு உடம்பு குணமாகி இருக்கு, அண்ணனே இத பத்தி இன்னும் பேசல அதுக்குள்ள நான் போய் ஹனிமூன் போறத பத்தி பேச முடியுமா? இருக்குற பிரச்சினையை எப்படி சமாளிக்கிறதுனு தெரியல இதுல இவ வேற” கடைசி வாக்கியத்தை கடித்து துப்ப
“நீ தான் ரொம்ப நல்லவன் மாதிரி அண்ணனுக்காக யோசிக்கிற, அவரு உங்க அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கும் பொழுதே முதலிரவ ஜமாய்ச்சிட்டாரு” பொறாமையில் பற்றி எறிந்தாள் கோதை.
“என்ன டி பேசுற? யார் காதுலயாவது விழுந்துட போகுது” கிருஷ்ணாவுக்கு பதட்டமாக ஒன்றும் இருக்கவில்லை. மனைவியின் முகத்தை பார்த்தவனுக்கு சிரிப்பாக இருந்தது.
“நான் பேசுறதுதான் விழுமா? உங்க அண்ணி ரூமை விட்டு வரும் ஒவ்வொரு தடவையும் வெக்கப்படுறது என்ன? முகம் சிவக்கிறது என்ன? அப்பப்பப்பா… அந்திவானம் கூட அவங்க பார்த்து வெட்கப்படும்”
“நீ எதுக்கு அவங்க பெட்ரூமை எட்டி பார்க்க போன?” என்றவன் அவளை ஒட்டி அமர்ந்திருந்தான். 
“ஐயே… நான் எதுக்கு போகணும் நான் என் ரூமை திறந்து வச்சா போதுமே அவங்க ரூம் வாசல்ல என்ன நடக்குதுன்னு சினிமா பாக்குறது போல தெரிஞ்சிடுமே” என்றவள் முகத்தை திருப்ப
அவளை இறுக அணைத்துக் கொண்ட கிருஷ்ணா “பொழுது போகலான இந்த வேலைதான் பார்பியா? எங்க அண்ணி கிராமத்துல பிறந்து வளர்ந்தவங்க, வெக்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்”
“அப்போ எனக்கு சூடு சொரணை இல்லனு சொல்ல வரியா?” கிருஷ்ணாவை அடிக்க முற்பட அவன் அணைத்திருந்ததில் அடிக்க முடியாமல் தடுமாறினாள் கோதை.
“உனக்கு சூடு சொரணை எல்லாம் அதிகம்தான் வெக்கம்தான் இல்ல. அண்ணி எங்க அண்ணா பார்த்தாவே வெக்கப்படுவாங்க உன்ன கிட்ட அதெல்லாம் எதிர் பார்க்க முடியுமா?” பெருமூச்சு விட்டுக்கொண்டான் கிருஷ்ணா.
“நான் என்ன பண்ண நான் இப்படித்தான்” என்றவள் முகம் சுருங்கி இருக்க
அவள் நெற்றியில் முட்டியவன் “ஆனா எனக்கு இப்போ அதுதான் பிடிச்சிருக்கே!” என்றவனின் குரல் இளகி இருந்தது. 
“அப்போ ஒரு முத்தம் கொடு” எதிர்பார்ப்பையும் ஆசையையும் அப்படியே முகத்தில் பிரதிபலிக்க செய்த்தாள் கிருஷ்ணாவின் மனையாள்.
“கேடி பொண்டாட்டி” என்றவனுக்கு அவள் முகம் பார்த்தால் முத்தத்தோடு முடிந்து விடும் போல் தெரியவில்லை. அதுதான் ஆரம்பம் போல் தோன்றியது.
இங்கே அபரஞ்சிதாவை ஆட்டிப்படைக்க வந்த ராதை வடிவுப் பாட்டியிடம் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி நின்றாள்.
முதலமைச்சர் கனகவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றதும் கிருஷ்ணா குடும்பத்தோடு சென்னை வந்த பாட்டிக்கு முதலமைச்சரின் வீட்டில் இரண்டு நாள் கூட தங்க பிடிக்கவில்லை.
போலீஸ் பாதுகாப்பு ஒரு புறம் என்றால் தொண்டர்களின் கூச்சல் ஒரு புறம் என்று நிம்மதி இல்லாத சூழ் நிலை. நிம்மதியை தேடி தோட்டத்து பக்கம் சென்றால் வேட்டை நாய்கள் பற்களைக் காட்டி மிரட்ட கோதையிடம் “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்ற ரேஞ்சுக்கு புலம்ப ஆரம்பித்தார் வடிவு.
பாட்டியின் இம்சை தாங்க முடியாமல் யுவனை அழைத்த கோதை கிழவியை ட்ரைனில் பெங்களூர் அனுப்பி விடும்படி கூற, பாவம் பார்த்து யுவன் பிளைட்டில் ஏற்றி விட்டிருக்க, தனியாக அனுப்பியதாக அவனுக்கு வசைபாடியவாறே பெங்களூர் வந்திறங்கி இருந்தார் வடிவு.
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை கோதைக்கு அலைபேசி அழைப்பை விடுத்து யுவனை பற்றி குறை கூறியதுதான்.
“உன்ன அலுங்காம குலுங்காம பிளைட்டுல அனுப்பி இருக்கான் லூசு பய அவனுக்கு தேவைதான். வை போன” என்று கோதை கடுப்பாகி அலைபேசியை அனைத்திருக்க,
யுவனுக்கு அழைத்து தனியாக அனுப்பியத்தற்கு வசை மழையை வாரி வழங்கி விட்டு “அந்த சிறுக்கி என்ன ட்ரைன்ல ஏத்தி விட சொன்னாளா?” என்று கேட்டு கோதையை வசைபாட ஆரம்பித்திருக்க, மீட்டிங் நடுவில் அலைபேசியை காதில் வைத்துக்கொண்டு அத்தனை திட்டையும் முகம் மாறாமல் கேட்டுக்கொண்டான் யுவன்.
“பெரியவங்க அதான் போன ஆப் பண்ணல” என்று யுவன் கோதையிடம் சொல்ல “அட பக்கி… அது ஒரு பெரிய மணிசினு நீ மரியாதை கொடுத்திருக்க உன்ன சொல்லணும்” என்று சிரித்தாள்.
“நல்ல லூசு குடும்பத்துல போய் எங்க மாமா மாட்டி இருக்காரு” யுவனால் முணுமுணுக்கத்தான் முடிந்தது.
கோதையை அதட்டி எந்த வேலையையும் வாங்க முடியாது அவள் ஒரு வாயாடி. வடிவையே மடக்கிப் பேசி அவள் காரியத்தை செய்து விட்டு போவாள்.
ராதை வடிவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வேலை செய்ய ஆரம்பித்து, அவள் இடுப்பெலும்பை முறிக்காத குறையாக வேலை வாங்கலானார் வடிவு.  பல்லைக் கடித்துக் கொண்டு ராதை வேலை பார்க்க, இதில் காயந்திகாவுக்கு வசவுகள் வேறு.
“இந்த கிழவியை ஏதாவது பண்ணனும். என்னய்யா வேலை வாங்கி இடுப்பு வலி வர வைக்கிற? உன்ன எண்ணெயில வழுக்கி விழ வச்சி உன் இடுப்பு எழும்ப முறிக்கிறேன்” என்று படியில் எண்ணெய்யை ஊற்றி விட்டிருந்தாள்.
அதில் வழுக்கி விழுந்து கால் பிசகியது என்னவோ அபரஞ்சிதாவுக்குத்தான். கண்ணபிரானோடு கூட நடந்ததால் விழப்போனவளை சுதாரித்து தாங்கி பிடித்ததால் தப்பித்தாள். இல்லையென்றால் படியில் உருண்டு விழுந்திருப்பாள்.
அபரஞ்சிதாவுக்கு கால் பிசகியதில் அவள் ஓய்வெடுக்க ராதையின் தலையில்தான் எல்லா வேலையும் வந்து விடிந்திருந்தது. வடிவு ஊஞ்சலில் ஆடியவாறு வேலைகளை ஏவ மட்டும்தான் செய்வார்.
சாப்பாட்டில் உப்பு இல்ல. காரமில்ல. என்ன இப்படி சமைச்சி இருக்க? உங்க அப்பாக்கு இத சாப்பிட கொடுக்கலாமா? என் பேரனுக்கு இது பிடிக்காது.  நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேன். உணவை வேஸ்ட் பண்ணுற நீ? இதென்ன உங்க அம்மா சொத்தா?” இந்த மாதிரி பேச்சுக்கள் இந்த பத்து நாளா ராதையின் காதில் கேட்டு கேட்டு எரிமலையாக வெடிக்க காத்திருந்தாள் அவள்.
எல்லா பேச்சும் ராதை தனியாக சிக்கும் பொழுதுதான். யார் முன்னிலையிலும் எதையும் பேச மாட்டார் பாட்டி.
அபரஞ்சிதாவின் முன் பேசினால் ராதைக்கு சப்போர்ட் பண்ணுவாள் என்று தெரியும். பேரனின் முன் பேசினால் பாட்டிக்கே திட்டு விழும், மருமகனின் முன் வாய் திறப்பாரா? நல்ல மாமியார் என்ற பட்டம் பறிபோய் விடுமல்லவா?
காயந்திக்காவின் மீது இருந்த வெறுப்புதான் ராதையிடம் இவ்வாறு நடந்துகொள்ள வைத்திருந்தது. ராதை எரிமலையாய் வெடித்தால் பாட்டியின் சுய ரூபம் வீட்டாருக்கு தெரிந்து விடுமா? பார்க்கலாம்.

Advertisement