Advertisement

அத்தியாயம் 17
அருள் குளித்து விட்டு வரும் பொழுது அன்பழகி அவனுக்கு உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
தலையை துவட்டியவாறே! “சாப்பிடலையா? மேடம்” என்று கேட்க
“என் புருஷன் கூடத்தான் இனி சாப்பிடுவேன்” என்றாள் இவளும் அவன் முகம் பாராமல்.
துண்டோடு வந்து நின்றவனை பார்க்க கூச தலையை தாழ்த்தியவாறுதான் பதில் சொன்னாள் அன்பழகி. 
“வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல குளிச்சிட்டு வேற வந்திருக்க, பசிக்காதா…” கொஞ்சலாக ஒலித்தது அவன் குரல்.
“உங்களுக்காக தான் மினிஸ்டரே! வைட்டிங்” என்றவள் சட்டையை கொடுக்க அணிந்து கொண்டவன் அவளை இழுத்து அணைத்துகொள்ள
“விடுங்க என்ன பண்ணுறீங்க?” சிணுங்கியவாறே அவனிடமிருந்து விடுபட முயல வெளியே! வத்சலா சாப்பிட வருமாறு குரல் கொடுக்கலானாள்.
“இதோ… வரேன்ம்மா….” என்றவனின் நெஞ்சம் நிறைந்திருக்க, மனைவியை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றான்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவுண்ணும் பொழுது “அருளு இன்னக்கி குலதெய்வ கோவில்ல பூஜைக்கு ஏற்பாடு செஞ்சி இருந்தோம். பூஜையை செய்யலைன்னா தெய்வ குத்தமாகிடும்டா… நாங்க போய் பூஜையை முடிச்சிட்டு வந்துடுறோம். நீயும் அழகியும் சாப்பிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்குங்க” என்றாள் வத்சலா.
“அப்போ நாம கோவிலுக்கு போக வேணாமா?” அருள்வேல் கேட்க,
“போகணும். ஆனா அழகியோட இந்த நிலைமையில எப்படி போறது? அதுவுமில்லாம இரவு முழுக்க ரெண்டு பேரும் தூங்கல இல்லையா?”
“சரிம்மா..சரிம்மா..” என்றான் அருள்வேல் மனைவியை பார்த்தவாறு.
அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகும்படி வத்சலா கூறிக்கொண்டு தனதறைக்குள் புகுந்துக் கொண்டாள். 
“ஏன் டி பூ… உன் புருஷன் குலதெய்வத்துக்கு பூஜை செய்ய போறான். அதுக்கு நீ போற. அவன் குடும்பம் போறாங்க. நான் எதுக்கு டி போகணும்” வடிவுப்பாட்டி முகத்தை திருப்ப,
“ஆமா எதுக்கு நீ ஊருக்கு வந்த?” அம்மாச்சியை முறைத்தவாறே கோதை கேட்க,
“உனக்கு துணையா இருக்க” அசால்டாக பதில் சொன்னார் பாட்டி.
“கிழிச்ச… திங்கிறது. தூங்குறது. அத மட்டும் சரியா பண்ணுற. நேத்து பஞ்சு காட்டுக்கு வானு கூப்பிட்டா… நடந்தா காலு வலிக்கும்னு சொல்லுற. நீ எனக்கு துணையா வந்தியா? என்ன வேவு பார்க்க வந்தியா? இப்போ பூஜைக்கு வராம வீட்டுல இருந்துகிட்டு என்ன பண்ண போற?
“நல்ல வேல நான் பஞ்சு காட்டுக்கு வரல நான் மட்டும் வந்திருந்தா பாம்பு என்ன கொத்தி இருக்கும். உன்ன காப்பாத்த போய் நான் உசுர விடணுமா? அல்பாயுசுல என்னால சாக முடியாதுப்பா” அங்கலாய்த்தார் வடிவு.
பல்லை கடித்த கோதை. “இவங்கள உலக அழகி கிளியோபெற்றாவையும் மததெராசாவையும் ஒண்ணா கலந்து பிரம்மா படைச்சிட்டான். அப்படியே நூறு வருஷம் வாழ்ந்து உலகத்துக்கு சேவ செய்ய போறா. என் வாயில நல்லா வருது” முணுமுணுத்தவள் “புதுசா கல்யாணம் ஆனவங்க பிரிஞ்சிருந்து இப்போதான் ஒன்னு சேர்ந்து இருக்காங்க. கரடியா இங்க இருக்க போறியா? பேசாம கோவிலுக்கு வா…” அம்மாச்சியை மிரட்ட
“நான் எதுக்கு டி அவங்க நடுவுல போக போறேன். நான் பாட்டுக்கு சிவனேன்னு எனக்கு கொடுத்த அறைல இருக்க போறேன்”
இதுக்கு மேல பேசின நான் பொல்லாதவளாகிடுவேன். பேசாம வா…” கோதை பாட்டியை கையோடு இழுத்து செல்ல வத்சலா பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தட்டுகளை அடுக்கி வைத்திருந்தாள்.
வத்சலா தயாராகி வரருவதைக் கண்டு “ஏம்மா… தனியாகவா எல்லாம் பண்ண… அது சரி வீட்டு வேலைகளை பார்க்கும் மூத்த மருமக பாம்பு கடிச்சி படுத்து கிடக்குறா.. சின்ன மருமக விளங்காதவ, ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லை” கழுத்தை நொடித்தார் வடிவு.
பல்லைக் கடித்த கோதை “இந்த கிழவிக்கு ரொம்பதான் குசும்பு. இரு உன்ன வச்சிக்கிறேன்” கருவிக்கொண்டாள்.
“அப்படி இல்ல அம்மா.. சின்ன பொண்ணு. அதுவும் நம்ம குலதெய்வத்துக்கு என்ன பண்ணனும்னு அவளுக்கு தெரியாதே! அதான் கூப்பிடல. அடுத்த தடவ வரும் போது அவளையே! பண்ண சொல்லுறேன்” வத்சலா கோதையின் முகவாயை தடவியவாறே! சொல்ல,
“இப்படி எல்லாரும் செல்லம் கொடுக்குறதாலத்தான் இவ கெட்டு குட்டிசோரா போறா. இந்த ஆட்டம் ஆடுறா” என்றவாறு வடிவுப்பாட்டி வண்டியில் ஏறி இருந்தார். 
தாத்தாக்களோடு வடிவுப்பாட்டி மற்றும் வத்சலா ஒரு வண்டியில் வர, கிருஷ்ணாவும் கோதையும் ஒரு வண்டியில் கோயிலுக்கு கிளம்பி இருந்தனர்.
வண்டியில் செல்லும் பொழுதே தங்கையை அலைபேசியில் அழைத்தாள் வத்சலா. “நான் சொன்னது போல பூஜையறையில பீடத்தை வைத்து, அதில் கலச சொம்பு பாத்திரத்தில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் சிறிதளவு சேர்த்து அதில் கொஞ்சம் பன்னீர். பன்னீர் எந்த அளவிற்கு ஊற்றுகிறோமோ அதே அளவிற்கு சுத்தமான நீரை ஊற்றி அந்த சொம்பு பாத்திரத்தை நூல் கொண்டு சுற்ற சொன்னேனே சுத்துனியா?”
“நூல் சுத்துறேன் சுத்துறேன் சுத்த மாட்டேங்குதுனு ரொம்ப கஷ்டப்பட்டு சுத்தி வச்சேன்”
“சரிமா.. சரிமா..  இப்படி பண்ணி மூணு நாளைக்கு பூஜை பண்ணா குலதெய்வம் வீட்டுலையே குடியிருக்குமாம்”
“ஆமாக்கா விரதமும் இருந்தேன். பூஜையையும் சிறப்பா முடிச்சேன். இன்னக்கி மூணாவது நாள் பூஜை” என்றாள் யசோதா.
“போன தடவ குலதெய்வ பூஜையின் போது  பச்சரிசி ஒரு ஆழாக்கு அளவு நிரப்பிய  கலச சொம்பை வச்சி….” என்று வத்சலா ஆரம்பிக்கும் பொழுதே!
“ஆமாக்கா மாவிலைகளை செங்குத்தாக வைத்து, அதற்கு நடுவில் ஒரு தேங்காய் நுனிப் பகுதி மேல்நோக்கி இருக்குமாறு வச்சேன்”
கலசம் நிரப்பிய அந்த பச்சரிசியை சமைச்சி சாப்பிட்டியா? சொல்ல மறந்துட்டேன். பூஜைக்கு வைக்கப்பட்ட தேங்காயையும். பக்குவம் செய்து சாப்பிடுவது நல்லது” வத்சலா அன்று சொன்னதுதான் மறந்திருந்தாள்.
“சாப்பிட்டோம் அக்கா… பசங்களும் இருந்தார்களே! அதனாலதான் இந்த தடவ பூஜைக்கு அரிசி வைக்கல” என்றாள் யசோதா. 
“சரிம்மா…சரிம்மா.. பூஜையை முடிச்ச கையோட கலசத்தில் உள்ள நீர வீடு முழுக்க தெளிச்சுடு. மிச்சம் மீதி இருந்தா  துளசி செடில ஊத்திடுமா..” என்றவள் “மாமா பச்சரிசி சாதம் சாப்பிட்டாரா?” மெதுவாக விசாரித்தாள்.
கணவனை பற்றி பேசும் பொழுதே! வத்சலாவின் குரல் கமறித்தான் ஒலித்தது. இத்தனை வருடங்கள் கழித்தும் கணவனின் நலனில் அக்கறை இல்லாமல் இல்ல. கனகவேல் ஏமாற்றியதாக வத்சலாவின் அன்பும் பொய்யில்லை. வாழ்ந்த வாழ்க்கையும் பொய்யில்லையே.
என்னதான் அவரை மறந்து விட்டேன். பழையதை நினைக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டாலும், எதோ ஒரு தருணத்தில் பழைய நியாபகங்கள் கண்முன்னே வரத்தான் செய்கிறது. வத்சலாவின் கண்களில் நீரை நிறைக்கத்தான் செய்கிறது. அதை தந்தையும், மாமனாரும் பார்த்து விடாமல் மறைத்து இத்தனை வருடங்கள் சந்தோசமாக இருப்பதாக காட்டிக்க கொண்டு வாழ்ந்து வருகிறாள் என்பதுதான் உண்மை.  
“ஆமாக்கா” என்ற யசோதாவுக்கும் அக்காவின் சோகக் குரல் தாக்காமல் இல்லை. அக்காவின் வாழ்க்கையை தட்டிப் பறித்தவள் என்ற குற்ற உணர்ச்சி யசோதாவை விட்டு நீங்காமல் அவளை குத்திக் கிழிக்க, அந்த கோபமெல்லாம் கனகவேலின் மீதுதான் திரும்பும். ஆனாலும் கட்டிய கணவன் மீது அக்கறையும், பாசமும் இயல்பில்லையே ஒரு பெண்ணுக்கு இருக்க அது யசோதாவுக்கும் இருந்தது என்பது தான் உண்மை.
யசோதா ஊருக்கு வர மாட்டாள். குலதெய்வ பூஜையிலும் கலந்துகொள்ள மாட்டாள் என்ற வருத்தம் அக்கா தங்கை இருவருக்கும் இருக்க, எப்பொழுதெல்லாம் குலதெய்வத்துக்கு பூஜை நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் தங்கையிடம் விரதம் இருக்கும்படியும் வீட்டில் குலதெய்வம் குடியேற பூஜையை, சடங்குளை செய்யும்படியும் ஏவுவாள் வத்சலா.
யசோதாவும் வழமையாக செய்வது தானே என்று அக்காவின் மனதை நோகடிக்காமல் முதன் முதலாக செய்வது போல் அக்கா சொல்வதை கேட்டுக்கொள்வாள். அவ்வளவு ஒற்றுமை. அன்பு இருவரிடம்.
இல்லையென்றால் வத்சலா அருள்வேலை யசோதாவிடம் அனுப்பி இருக்கவும் மாட்டாள். அருள்வேல் யசோதாவையும், கிருஷ்ணா வத்சலாவையும் “அம்மா” என்று அழைத்திருக்கவும் மாட்டார்கள். 
வண்டி கோவிலை அடைந்ததும் க்ரிஷ்ணாவையும் கோதையும் இறங்க விடாமல் பாதுகாவலர்கள் தடதடவென இறங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள
“இவனுக வேற ரொம்ப ஓவரா பண்ணுறாங்க” கோதையும் கிருஷ்ணாவும் ஒன்று சேர சொல்லி விடவும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்து ஹைப்பை கொடுத்துக் கொண்டு வண்டியை விட்டு இறங்கினர்.
குலதெய்வத்துக்கு பொங்கல் வைத்து, படையல் போட வேண்டியதால் அதற்கான ஏற்பாட்டை மளமளவென பார்க்க ஆரம்பித்தாள் வத்சலா.
வத்சலா கொண்டு வந்த பொருட்களையும் தட்டுக்களை சுமக்க சிரமப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்ட கிருஷ்ணா பாதுகாவலர்களை அழைத்து பொருட்களையும் தட்டுகளை சுமக்க சொல்ல முடியாது என்று கூற முடியாமல் சுமந்து சென்றனர் அவர்கள்.
“இங்க குடும்மா காய்கறிகளை நான் நறுக்கி தரேன்” என்று வடிவுப்பாட்டி அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள, பொங்கல் பானையை அடுப்பில் வைத்த வத்சலா சின்ன மருமகளை அழைத்து அகப்பையை அவள் கையில் கொடுத்து விட திருதிருவென முழிக்கலானாள் கோதை.
“யோவ் புருஷா எனக்கு பொங்கல் சாப்பிட்டுத்தான் பழக்கம். செஞ்சி எல்லாம் பழக்கம் இல்ல. இந்த அகப்பைய நீ பிடி” என்று கிருஷ்ணாவின் கையில் திணிக்க அவன் கையை கட்டிக்கொண்டு தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நின்றிருந்தான்.
தாத்தாக்கள் கருப்பட்டியை உடைக்க,   ஒரு அடுப்பில் கடலை வேக வைக்கப்பட்டிருக்க,  வத்சலா சாதம் வடிக்க, ஒரு பாதுகாவலர் தேங்காய் துருவ, ஒருவர் ஓலை பின்ன, மற்றவர் கோவில் கிணத்திலிருந்து க்ரிஷ்ணாவோடு சென்று தண்ணீர் கொண்டுவர, சிலர் பாதுகாப்புக்கு நிற்க என்று அனைவரும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
கோதைக்கு சொல்லிக் கொடுத்தவாறே பொங்கலை கிண்டினாள் வத்சலா. பம்பரமாய் சுற்றி அத்தனை வேலைகளையும் பார்க்கும் மாமியாரை கண்டு தலை சுத்தித்தான் போனாள் கோதை.
எல்லாம் தயாராகிய பின் படையல் படைத்து பொங்கல் வைத்து மனதார குலதெய்வத்தை வணங்கி வேண்டி நின்றனர். நூற்றி எட்டு தடவை முறையாக மாத்திரம் ஓதி அர்ச்சனை செய்த பின்னர் அனைவரும் வீடு திரும்பி இருக்க வத்சலாவுக்கு பரம திருப்தி.
குங்குமம் மற்றும் திருநீறை அருளின் கையில் கொடுத்து அன்பழகிக்கும் வைத்து விடும்படி கூறியவள் தங்கையை அழைத்து அங்கு எல்லாம் முறைப்படி செய்துவிட்டாயா? என்று விசாரிக்கலானாள்.
இரண்டு நாள் கடந்திருக்க அன்பழகியும் முற்றாக குணமடைந்து நன்றாக காலை ஊன்றி நடக்க ஆரம்பித்திருந்தாள்.
  “யோவ் புருஷா அதான் உங்க அண்ணிக்கு சரியாகிருச்சே வீட்டுல பேசி அவங்க முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணலாமே. இல்லையா அவங்கள ஹனிமூன் அனுப்பி வைக்கலாமே” கோதை கிருஷ்ணாவின் தோளை உரசியவாறு குழைந்து பேச
“எங்க காலேஜ்ல பூபதினு ஒரு ஸ்ரீலங்கன் பையன் படிச்சான் அவன் ஒரு கத சொல்வான். அந்த கத எனக்கு இப்போ நியாபகம் வந்திருச்சு” தாடையை தடவினான் கிருஷ்ணா.
“யோவ் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன சொல்லுற?” அழாத குறையாக கெஞ்சினாள் மனையாள்.
“அந்த கதையை கேட்டா நான் என்ன சொல்லவரேன்னு உனக்கு புரியும்” என்றான் கிருஷ்ணா புதிரோடு.
“சொல்லித் தொல” என்றாள் இவளும் வேண்டா வெறுப்பாக.
“பண்டைய காலத்துல சிலபேர்தான் கல்வி கற்றார்களாம். அப்படி கற்றவர்கள் கூட காடு மேடுனு அலைஞ்சி ரொம்ப தூரம் நடந்து, படித்த பண்டிதர்களை தேடிப்போய் படித்தவர்கள்தானாம். அப்படி விரல் விட்டு எண்ண கூடிய ஊரில் படித்தவர்களுக்கு ஊருக்கு வந்தா ஊரார் ஒன்னு கூடி விருந்து வைப்பார்களாம்:
“நான் சொல்லுறதுக்கும் நீ சொல்லுற கதைக்கும் என்ன சம்பந்தம்” முறைத்தாள் கிருஷ்ணாவின் கோதை.
“சொல்லுறேன் சொல்லுறேன் சொல்லத்தானே கதையே ஆரம்பிச்சேன்” மர்ம சிரிப்போடு தொடர்ந்தான் கிருஷ்ணா. “அப்படி விருந்து வைக்கும் பொழுது மூத்த மேதாவிகளுக்கு கேட்டு வாங்கி சாப்பிட சங்கடா இருக்குமாம். அதனால அவங்கள விட வயசுல சின்னவங்களுக்கு பரிமாறும்படி சொல்லுவாங்கலாம்”
“ஆனா உங்க அண்ணனும் அண்ணியும் நம்மள விட மூத்தவங்க இல்லையா?” புரியாமல் கேட்டாள் கோதை.
“ஆமா.. ஆமா… அங்க இளையவர்களுக்கு பரிமாற்ற சொல்லுறதும் இங்க மூத்தவங்களுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு பண்ண சொல்லுறதுக்கும் ஒரே அர்த்தம் தான்”
 “பக்கத்துக்கு இலைக்கு பாயசம் எங்குறத இப்படி சுத்தி வளைச்சி கத சொல்லியாடா  கழுத்தறுப்ப? வரவர நீ என்ன ரொம்ப வெறுப்பேத்துற”
“பின்ன ரொம்ப பேசுற உன்னயெல்லாம் இப்படி பேசித்தான் டி கொல்லனும்”
“இங்க பாரு நான் வெக்கத்தை விட்டு சொல்லுறேன். அப்பொறம் உன் இஷ்டம். நான் படிச்சது லேடீஸ் ஸ்கூல், லேடீஸ் காலேஜ் பசங்க வாசனையை கூட முகர்ந்து பார்க்கல, லவ் பண்ணதே இல்ல. ஒரு கிஸ் கூட… இல்லவே இல்ல. அதனால் இதெல்லாம் உன் கிட்டாதான் கேட்க முடியும் சட்டுபுட்டுனு ஆகுற வேலைய பாரு”
அவளையே வினோதமாக பார்த்த கிருஷ்ணா “வெக்கமா அப்படி ஒன்னு இருக்கா உனக்கு” என்று சத்தமாக சிரிக்க கோதை நன்றாக முறைக்கலானாள்.
“என்ன வெறுப்பேத்தாத சொல்லிட்டேன். அப்பொறம் நீ கடைசிவரைக்கும் தனியா கெடந்து சாக வேண்டியதுதான்”
“இதோடா இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். கோதை இல்லனா ஒரு ராதை. ராதை இல்லனா ஒரு மாலினி இந்த க்ரிஷ்னாக்கு கிடைக்க மாட்டாளா என்ன?”
அவளை வெறுப்பேத்த கூறும் இந்த வார்த்தை பின்னொரு நாளில் அவனுக்கு வில்லங்கமாக அமையப்போவதை அறியாமல் கூறி இருந்தான் கிருஷ்ணா.
“ஆசைதான் உனக்கு” முறிக்கிக் கொண்டு உள்ளே சென்றாள் கோதை.
“நான் பொறுமையா இருந்தாலும் சண்டாளி சுத்தி சுத்தி வந்து உசுப்பேத்துறாளே! எந்த ஊருக்கு டிக்கட் போடுறதுனு தெரியலையே! டேய் அண்ணா…” அருள்வேலை தேடி ஓடி இருந்தான் தம்பி.
“ஹனிமூனா? என் வாழ்க்கைல இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சி கூட பார்க்கல டா… எங்க டா போறது? நான்தான் நம்ம ஊர தாண்டி எங்கயும் போனதில்லையே! டா…” தம்பிக்கு மேல் உற்சாகமானான் அண்ணன்.
“பாரின் போலாம் ..ண்ணா…” அண்ணனை கட்டிக்கொண்டான் தம்பி.
அண்ணனும் தம்பியும் அவர்களது வாழ்க்கைக்காக திட்டத்தை தீட்ட அவர்களை பெற்ற தந்தையோ அவர்களை கலந்தாலோசிக்காமல் அவர்களின் வாழ்க்கைக்கான முடிவை எடுத்திருந்தார்.
இதை அறியாமல் இவர்கள் சென்னை சென்ற உடன் சுவிஸ்லாந்து செல்லாம் என்று பேசி முடிவு செய்ந்திருந்தனர். அதன்படி இன்னும் இரண்டு நாள் ஊரில் தங்கி ஊரை சுத்திப்பார்த்து விட்டு அன்னையின் கையால் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று இளையவர்கள் முடிவு செய்திருக்க, சென்னையிலிருந்து வந்த போன் கால் அனைவரையும் உலுக்கி இருந்தது.
யசோதாதான் அழுதவாறு அருள்வேலை அழைத்திருந்தாள். கட்ச்சி மீட்டிங்கில் இருந்த கனகவேல் ராஜா திடிரென்று நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தனக்கு தகவல் வந்ததாகவும் என்ன செய்ய வேண்டும் என்பது கூட புரியவில்லை என்று புலம்ப ஆரம்பித்தாள்.
அருள்வேல் கூட சென்றிருந்தால் அவன் மருத்துவமனையில் இந்நேரம் தந்தையோடு இருப்பான். அவனும் ஊரில் இருக்க யார் தந்தையோடு இருக்கிறார் என்று அறிய தந்தையின் பி.ஏவானா கோதாண்டத்தை அழைத்து விசாரித்தான் அருள்வேல்.
“மீட்டிங்கில் பேசிகிட்டு இருந்தாரு தம்பி திடிரென்று நெஞ்ச பிடிச்சிக்கிட்டு விழுந்துட்டாரு” என்று கோதாண்டம் சொல்ல, அவர் பொய் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கை அருளுக்கு இருந்தமையால் உடனே! அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பினான். கிளம்பும் நேரத்தில் முதலமைச்சர் உடல் நலமற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தொலைக்காட்ச்சியில் முக்கிய செய்தியாக ஒளிபரப்ப ஆரம்பித்திருந்தது.
வரும் வழி எல்லாம் வத்சலா கடவுளை வேண்டியவாறு வர, குலதெய்வ பூஜையை முடித்திருந்த இந்த சமயத்தில் இப்படி நடந்தது தெய்வக் குத்தம் நடந்திருச்சோ என்று ஞானவேலும் செல்வராஜும் பேசியவாறு வந்தனர்.
“மாமா பத்திய சாப்பாடு தானே சாப்பிடுறாரு? அத்த சரியா மாத்துற மருந்தெல்லாம் கொடுக்குறாங்க தானே” என்று அன்பழகி அருள்வேலிடம் கேட்டவாறு வர,
“கொடுக்குறாங்க கூடவே! வெளியிடத்துக்கு போனா வாய கட்ட மாட்டாங்கன்னு அத்த திட்ட வேற செய்வாங்க” கோதைத்தான் அன்பழகிக்கு பதில் கூறி இருந்தாள்.
“பாத்தியா நேத்து வந்தவ உன்ன விட விவரமா இருக்கா…. வீட்டுல நடக்குற உட்பூசல் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கா” அருள்வேல் மனைவியின் புறம் குனிந்து மெதுவாக கூற, கணவனை முறைத்தாள் அன்பழகி.
கிருஷ்ணா ஏதோ யோசனையாகவே வரவும் அவன் கையை பிடித்து ஆறுதல் சொன்னாள் கோதை.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.  
வண்டி மருத்துவமனையை அடையும்வரையிலும் அருள்வேல் கோதாண்டத்தை அழைத்து அங்கு என்ன நடக்கிறது என்று விசாரித்தவாறுதான் வந்தான்.
யசோதா வீட்டில் பூஜையறையே கதியென்று இருக்க, அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல யாரும் முனையவில்லை. தனியாக அவள் அங்கு சென்று அழுது கரைந்து மயங்கியும் விழ கூடும். அவளை சமாளிப்பது கடினம். எந்த தகவலும் தெரியாமல் வீட்டில் இருக்கட்டும் என்று அருள்வேல் கூற, பாதுகாவலர்களும், வீட்டு வேலையாளர்களும் யசோதாவின் பாதுகாப்பை கண்காணித்தவாறு அவளோடு நின்றனர்.
இவர்கள் மருத்துவமனையை அடைந்ததும் பலத்த பாதுகாப்போடு அனைவரும் உள்ளே செல்ல கனகவேல் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் வீட்டார் அமர்ந்திருக்க, கனகவேல் ராஜாவை கண்ணில் கூட காட்ட மறுத்த மருத்துவர்கள் அவர்களின் வேலையை செய்த வண்ணம் இருந்தனர்.
அருள்வேலும் கிருஷ்ணாவும் சென்று தலைமை மருத்துவரை சந்திக்க முதலமைச்சரின் இதயத்தில் நான்கு அடைப்பு இருப்பதாகவும் உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டிய கட்டயாத்தில் அவர் இருப்பதனால் தீவீர சிகிச்சை பிரிவில் அவருக்கு ஆபரேஷன் நடைபெறுவதாக கூற,
“என்ன டாக்டர் விளையாடுறீங்களா? வீட்டுல யாரையும் கலந்தாலோசிக்காம நீங்க பாட்டுக்கு முடிவெடுத்திருக்கீங்க” என்று அருள்வேல் கத்த
“அவர் உங்களுக்கு அப்பா மட்டுமில்ல, இந்த மாநிலத்தோட முதலமைச்சரும் கூட, முடிவெடுக்க வேண்டியவங்க யாரும் பக்கத்துல இல்லைனா, அந்த ரைட்ஸ் எங்க கிட்ட அவர் கொடுத்திருக்கிறார்” என்று ஒரு கோப்பை எடுத்து நீட்ட, அதை படித்துப்பார்த்த கிருஷ்ணாவுக்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை.
“என்னண்ணா… நாம யாருமே! இருக்க மாட்டோம் என்று முன் கூட்டியே! தெரிஞ்சா மாதிரி எழுத்திக் கொடுத்து இருக்காரு” கிருஷ்ணா பொரும,   அருள்வேல் யோசனைக்குள்ளானான்.
பல மணிநேரம் கடந்த பின்னர்தான் முதலமைச்சர் கனகவேல் ராஜா அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று  தலைமை மருத்துவர் வந்து சொல்லி விட்டு சென்றார். ஆனாலும் அவரை பார்ப்பதற்கு இன்னும் சில மணித்தியாலங்கள் எடுக்குமாம் என்றதும் பெண்களையும், தாத்தாக்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தான் கிருஷ்ணா.
கனகாவேல் ராஜா கண்விழிக்கும் பொழுது யசோதா அவர் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க, விசும்பும் சத்தம் கேட்டு கழுத்தை சிரமப்பட்டு திருப்பிய கனகவேல் வத்சலாவை கண்டு
“வது வா… என் கடைசி நேரத்துல என்ன பாக்க வந்திருக்கியே. எங்க நீ வர மாட்டியோன்னு நினச்சேன்” என்று கண்கலங்க
ஓரமாக நின்று விசும்பிக்கொண்டிருந்தவள் கணவனின் அந்த பேச்சில் மனம் நெகிழ ஓடி வந்து கனகவேலின் கையை பிடித்துக்கொண்டாள்.
“உனக்கு பண்ண பாவம்தான். என்ன பாடா படுத்துது. மனசு நிம்மதி இல்லாம கெடந்து தவிக்குது. பாத்தியா இருதயத்துக்கே பொறுக்கல அதான் நோய் வந்திருக்கு. உன் கிட்ட மன்னிப்பு கேட்காம போய் சேர்ந்திடுவேனோனு பயம்தான் எனக்கு இப்படி ஆகிருச்சு. என்ன மன்னிச்சுடு வது” என்று கெஞ்சாத குறையாக சொல்ல வத்சலா கத்தி அழுது விட்டாள்.
அறையில் அனைவரும் இருக்க, கனகவேல் இப்படி பேசியது ஆச்சரியத்தையும் தாண்டி அவரது நிலையை நினைத்து தாத்தாக்கள் கவலைகொள்ள, அன்பழகியும், கோதையும் கூட சோகமான முகத்தோடு பார்த்திருந்தனர்.
“ஏன்க இப்படி எல்லாம் பேசுறீங்க? பழசெல்லாம் நான் எப்பயோ மறந்துட்டேன். நீங்க நல்லா இருக்கணும் என்றுதானே தினமும் பூஜை பண்ணுறேன். மாசா மாசம் குலதெய்வத்துக்கு பூஜை பண்ணுறேன். உங்களுக்கு ஒன்னும் ஆகாது. நீங்க சீக்கிரம் குணமாகி வந்துடுவாங்க” கண்ணீர் மல்க பேச, சிரமப் பட்டு கனகவேல் வத்சலாவின் கையை பற்றிக்கொண்டார்.
கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனை வசமாக இருந்த கனகாவேலை மனைவிகள் இருவரும் மாறி மாறி கூட இருந்து கவனித்துக்கொள்ள, வீட்டு பொறுப்பு முழுவதும் அன்பழகியின் கைக்கு மாறி இருந்தது.
வத்சலா கணவனை மன்னித்து விட்டாள். கனகவேல் அவளை ஏற்றுக்கொண்டார். இனி தங்களது குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று யசோதா சந்தோசமான மனநிலையில் இருந்தாள்.
மருத்துவமனையிலிருந்து தனது இல்லம் வந்த கனகவேல் ராஜா அடுத்து வரும் தேர்தலில் முதல்வர் வேற்பாளராக தனது இளைய மகன் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிக்கை விடுத்திருந்தார்.
அதை அறிந்த அருள்வேல் ராஜா “இத்தனை வருஷமா நான் அவர் கூட இருந்ததே இந்த பதவிக்குத்தான். தூக்கி அவன் கிட்ட கொடுத்துடுவேனா? பதவின்னு வந்தா அவனையும் தூக்குவேன். அவங்கப்பனையும் தூக்குவேன்” என்று கர்ச்சித்தான்.

Advertisement