Advertisement

அத்தியாயம் 16

 

அருள்வேல் பத்து வயதுவரை அன்னையோடு ஊரில்தான் இருந்தான். அதன் பின்தான் அவனை வத்சலா தங்கையிடம் ஒப்படைத்தாள்.

 

ஊரில் இருக்கும்வரைக்கும் பெரிய வீட்டு பையன் என்ற செல்ல குழந்தையாக ஊரையே! சுற்றி திரிந்தவனுக்கு நண்பர்கள் ஏராளம். பாடசாலையில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்த உடன் அன்னை ஊட்டுவதை அவசரமாக முழுங்கி விட்டு ஓட்டம்பிடிப்பது நண்பர்களை சந்திக்கத்தான்.

 

பாடசாலை விடுமுறை நாட்களில் சொல்லவே! வேண்டாம். கண்முழித்த உடன் “அம்மா பசிக்குது” என்றுதான் முதலில் சொல்வான்.

 

“முதல்ல பல்ல விளக்கிட்டு வாடா…” என்று வத்சலா குரல் கொடுக்க, பல்லை துலக்குபவன் வேகவேகமாக சாப்பிட்டு விட்டு நண்பர்களை  சந்திக்க ஓட்டம் பிடிப்பான்.

 

மதிய சாப்பாட்டுக்கு கூட வராமல் ஊரு முழுக்க விளையாடித் திரியும் குழந்தைகளை பெற்றோர்கள் கத்தி கத்தி அழைப்பது வழக்கமாகிப் போக, பஞ்சாயத்து வரைக்கும் இவர்களது ஆட்டம் சென்றது.

 

“இளநீ ஒண்ணத்தையும் வைக்காம குடிச்சிடுறானுங்க ஐயா…”

 

“மாமரத்துல மாங்கா எல்லாம் பறிச்சிடுறானுக ஐயா”

 

“கொய்யா மரத்துல ஒரு கொய்யா கூட காணோம் ஐயா…” 

 

“பறிக்க சொன்னதே! அவர் பையன்தான். அது தெரியாம பஞ்சாயத்துல சொல்லிக்கிட்டு” ஒரு வாண்டு குசுகுசுக்க,

 

“கத்தாதடா அவங்கப்பா காதுல விழுந்தா அவன வெளுத்து வாங்குவார். அப்பொறம் எங்க வீட்டுலையும் அடி பின்னி எடுப்பாங்க.” என்று இந்த வாண்டு சொல்ல 

 

“ஆமா… ஆமா வெளுத்து வாங்குவாங்க” என்றவனின் கைகள் பின் பக்கத்தை தடவி கொடுத்தது.

 

குழந்தைகள் என்பதால் தண்டிக்கவும் முடியாமல், ஒட்டுமொத்த குழந்தைகளும் சேர்ந்து செய்வதனால் யாரை தண்டிப்பது? யாரென்று அறிந்தால் தானே! குறிப்பிட்ட பெற்றவரிடம் நஷ்ட ஈடு கேட்கலாம். யாரிடம் நஷ்ட ஈடு கேட்பது என்று கூட புரியாமல் பெரியவர்கள்தான் முழி பிதுங்கி நின்றனர்.

 

முடிவாக யார் தோட்டத்துக்கும் போக கூடாது மைதானத்துல கிரிக்கட் விளையாடுங்கடா…” என்று மைதானதத்தை ஒழுங்கு செய்து கொடுக்க, ஆண் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்.

 

பெண் குழந்தைகளோ! முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருக்க, “பக்கத்து மண்டபத்துல உங்க பொம்மைகளோட போய் விளையாடுங்க, அடுப்பு மூட்டாம என்னெல்லாம் சமைக்க முடியுமோ! சமைங்க, கிரிக்கட் விளையாடும் பசங்களுக்கு கொடுங்க” என்று சொல்ல பெண் குழந்தைகளும் மகிழ்ந்தனர். 

 

அதன்படி வீட்டில் இருக்கும் பழங்களை தூக்கிக்கொண்டு வந்து பழச்சாறு போட்டு அனைவரும் தாகம் தீர்த்துக் கொண்டதுமில்லாமல், வீட்டில் செய்து வைத்திரும், முறுக்கு, அதிரசம், சீடை. லட்டு, என்று வகை, வகையாக ஒவ்வொருவரும் தினமும் கொண்டு வந்து உண்டு மகிழ்ந்தனர்.

 

அடுத்தவர் மரத்தில் பறித்து பஞ்சாயத்தாவதற்கு பதிலாக இதுவே! நிம்மதி என்று பெரியவர்கள் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட, இவர்களின் ஆட்டத்துக்கு அளவே! இல்லாமல் போனது.

 

அப்படி ஒருநாள் அனைவரும் அமர்ந்து ஜூஸ் அருந்தும் பொழுதுதான். கதிர் எனும் ஒருவன் அவனது அத்தை மகளை வம்பிழுக்கலானான்.

 

“அடியேய் நான் வளர்ந்தா உன்ன தான்டி கல்யாணம் பண்ணிக்க போறேன். மாமனை இப்போவே! நல்லா கவனிச்சிக்க”

 

கதிரின் அத்தை பொண்ணு நிர்மலாவோ! அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு செல்ல, அங்கிருந்த யார் யாருக்கு அத்தை பொண்ணு, மாமா பொண்ணு என்று உறவு முறைகள் இருக்கிறார்கள் என்று கணக்கிட ஆரம்பித்தான் சதீஷ் என்பவன்.

 

“அட நம்ம அருளுக்கு அத்த பொண்ணும் இல்ல மாமா பொண்ணும் இல்ல டா…” என்று கதிர் சிரிக்க,

 

“அந்த குட்டிக்கும் மாமா பொண்ணும் இல்ல அத்த பொண்ணும் இல்ல” என்று சதீஷ் ஐந்து வயது நிரம்பாத அன்பழகியை காட்ட,

 

பொம்மையை கையில் வைத்துக்கொண்டு தென்னைமர கொண்டையில் பாவாடை தாவணியில் பொம்மையாய் கன்னத்தில் கருப்பு பெரிய பொட்டோடு மையிட்டிருந்த பெரிய கண்களை உருட்டி இவர்களை பார்த்து சிரித்தாள் அன்பழகி.

 

“அப்போ அவளுக்கு அத்த பையன் நான்தான்” என்றான் அருள்.

 

“ஒய்..அருளோட மாமா பொண்ணு இங்க வா…” என்று சதீஷ் அழைக்க அன்பழகியும் பாவாடையை தூக்கியவாறு ஓடி வந்திருந்தாள்.

 

“என்ன இது நெத்தில குட்டியூண்டு பொட்ட வச்சிட்டு கன்னத்துல இம்புட்டு பெருசா பொட்டு வச்சிருக்க?” சதீஷ் புரியாது கேக்க

 

“அம்மாதான் வச்சி விட்டாங்களே!” பாவாடையை பிடித்து ஆட்டியவாறு அன்பழகியும் அழகாக பதில் சொன்னாள்.

 

அருள் எதுவும் பேசாமல் அவள் பேசும் அழகையும் செய்பவைகளையும் ரசித்துக்கொண்டிருந்தான்.

 

“அது த்ரிஷ்டிக்கு வைக்குறதுடா… எங்க அம்மாவும் எங்க பாப்பாக்கு வைக்கும்” என்றான் கதிர்.

 

“பொம்மை மாதிரி இருக்குற இந்த குட்டி பொம்மைக்கு வைக்கணும்தான்” என்றான் சதீஷ்.

 

அவள் கையிலிருந்த கடலைமிட்டாயை பார்த்து “உனக்கு கடலைமிட்டாய் என்றா பிடிக்குமா…” என்று அருள் கேட்க முத்து பற்கள் தெரிய அழகாக சிரித்தவள் மிட்டாயை சாப்பிடலானாள்.

 

அன்றிலிருந்து தினமும் அவளுக்காக கடலைமிட்டாய் வாங்கிக் கொண்டு செல்பவன் இனாமாக இரு கன்னங்களிலும் முத்தங்களை பெற்றுக்கொள்வான்.

 

இப்படியே! அவன் நாட்கள் அழகாக அன்பழகியோடு நகரும் பொழுதுதான். கனகவேலின் பேட்டி டிவியில் வந்து வத்சலாவுக்கும் ஞானவேல் மற்றும் செல்வராஜுக்கும் உண்மை தெரியவந்து அருளை வத்சலா யசோதாவிடம் அனுப்பி வைத்திருந்தாள்.

 

அன்னையை பிரிவதோடு அன்பழகியை பிரிவதை நினைத்து ஏங்கி ஏங்கி அழுதவன் க்ரிஷ்ணாவோடு ஒருவழியாக ஒட்டிக்கொண்ட பின் படிப்பதிலும், ஸ்போர்ட் என்றும் கனகவேல் அவனை விடாது ஈடுபடுத்தி இருக்க, ஊரை பற்றியோ! அன்பழகிய பற்றியோ! சிந்திக்கக் கூட அவனுக்கு நேரம் இருக்கவில்லை.

 

ஊரில இருக்கும்வரை அன்னையின் மடியில் அமர்ந்து உணவுண்டு, தூங்கி, செல்லம் கொஞ்சி வளர்ந்தவனுக்கு தந்தையை கண்டால் பயம் மட்டுமே! அதனாலே! அவர் சொல்வதையெல்லாம் செய்யும் தலையாட்டி பொம்மையாக மாறி இருந்தான்.

 

ஊருக்கு வருவது திருவிழா, குலதெய்வ பூஜை போன்ற முக்கியமான விசேஷங்களுக்கு மட்டும்தான் என்றாகிப்போக, வந்த உடன் சென்னைக்கு திரும்பியும் விடுவதனால் அன்பழகியை பார்ப்பது கூட அரிதாக்கிப் போனது.

 

காலேஜ் செல்ல ஆரம்பித்த பின்தான் யார் கட்டுப்பாட்டையும் மீறி கொஞ்சம் சுதந்திரமாக அவனால் நடமாடவே! முடிந்தது. அன்பழகியின் நியாபகங்கள் சிறு புள்ளியாய் மனதின் ஓரம் இருந்தாலும், அவளை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற எண்ணமெல்லாம் வரவில்லை.

 

அப்படியே சந்தித்தாலும் வயதுக்கு வந்த பெண்ணிடம் நின்று பேசுவது ஊர் வழக்த்தில் இல்லை என்பதனால் அதை யாராவது பார்த்து விட்டால் வீண் பிரச்சினை என்று ஒதுங்கிப் போனவன் அவளை மிட்டாய் கடையில் பார்க்கத் தவற மாட்டான். “இன்னும் இவ கடலைமிட்டாய் சாப்பிடுறாளா?” உள்ளுக்குள் சிரித்துக்கொள்வான். நாளாக நாளாக கடலைமிட்டாயை ஏக்கமாக பார்த்துவிட்டு செல்வாளே! ஒழிய வாங்க மாட்டாள். “என்னாச்சு இவளுக்கு?” என்ன என்று விசாரிக்கலாம் என்று அவளையே! பார்த்திருப்பான். அந்தோ பரிதாபம் அவளுக்குத்தான் அவன் யார் என்று கூட நியாபகம் இல்ல.

 

அதை கூட அவன் பெரிதாக எண்ணவில்லை. எண்ணி இருந்தால் அவளிடம் சண்டை கூட போட்டிருப்பானே! ஐந்து வயது குட்டி பொண்ணுக்கு என்னை எப்படி நியாபகம் இருக்கும் என்று புன்னகைத்தான்.

 

அன்று அவள் வீட்டை தாண்டி செல்லும் பொழுது அவளை பார்த்ததால் கடலைமிட்டாய் வாங்கி வந்து கொடுத்து விட்டு சென்றான்.

 

மனதில் காதல் என்ற எண்ணம் அப்பொழுது இல்லை. அவன் நினைத்திருந்தால் நின்று பேசி இருப்பான். தன்னை நினைவில்லை என்று சொல்பவளிடம் என்னவென்று பேச?

 

வீட்டில் திருமணப் பேச்சை ஆரம்பிக்கும் பொழுது கூட அவன் எண்ணத்தில் அன்பழகியின் முகம் வரவில்லை. காதல் என்றெல்லாம் அருளின் எண்ணத்தில் வரவே! இல்லை. அந்த எண்ணம் முளைத்திருந்தால் என்றோ! வீட்டில் பேசி அன்பழகியை திருமணம் செய்திருப்பான். கட்ச்சி, பதவி, அப்பா இதை மட்டும் மனதில் நிறுத்தி சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு அன்பழகித்தான் திருமணம் என்றதும் மனதில் இனம் புரியாத வலி பரவுவதை தடுக்க இயலவில்லை.

 

அது என்னவென்று ஆராய்ச்சி செய்வதற்குள் அன்பழகி கணபதியிடமிருந்து தப்பி வீட்டை விட்டு ஓடி வந்தது, பஞ்சாயத்து, அன்பழகி கோவில் குளத்தில் குதிக்க சென்றது என்று எல்லாம் நடந்து அருளின் மனதை அவனுக்கு புரிய வைத்திருக்க, சற்றும் யோசிக்காமல் அன்பழகியின் கழுத்தில் அவள் சம்மதம் கூட கேட்காத தோன்றாமல் தாலி கட்டி இருந்தான்.

 

“என் சம்மதம் இல்லாமல் நீ தாலி காட்டியது தவறு” என்பது போல் அன்பழகி தனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்றதும் ரொம்பவும் மனமுடைந்து போனான் அருள். 

 

எல்லாவற்றையும் அன்பழகியிடம் பகிந்து கொண்டபின்தான் அவன் மனம் நிம்மதி கொண்டது.

 

அமைதியாக கணவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஐந்து வயதில் அவனை சந்திந்ததது, அவனுக்கு முத்தம் கொடுத்தது  எதுவும் சுத்தமாக நியாபகத்தில் இல்லை. அவன் பேசப் பேச ஆச்சரியம் மேலோங்கியதோடு சிறு கோபமும் எட்டிப்பார்த்திருந்தது.

 

“எத்தனை தடவ ஊருக்கு வந்திருப்பீங்க? ஒரு தடவையாச்சும். என் கிட்ட வந்து ஒழுங்கா பேசி இருப்பீங்களா? பேசி இருந்தா? நீங்க என்ன விரும்புறத நான் புரிஞ்சிகிட்டு இருந்திருப்பேன் இல்ல”

 

“அடியேய்… நான் உன்ன விரும்புறதே! உனக்கு கல்யாணம் என்று சொன்னப்போதான் புரிஞ்சது. நீ என் நெஞ்சுல சாஞ்சி நான் உன்ன அணைச்சப்போ நீ தான் எனக்கு எல்லாமே என்று முடிவு பண்ணேன். நீ குளத்துல குதிக்க போனப்போதான் நீ இல்லனா நா இல்லனு தோணிருச்சு. அதான் உடனே! தாலி கட்டி உன்ன என் கூட கூட்டிட்டு போனேன்.” என்றவன் மனைவியை முறைத்தவாறு “அப்படியே வந்து பேசி இருந்தாலும் என்ன நீ அடிச்சிதான் துரத்தி இருப்ப உனக்குத்தான் என்ன நியாபகம் இல்லையே!” அவன் சொன்னதன் உண்மை சுட அமைதியானாள் அன்பழகி.

 

“இங்க பாரு எல்லாத்துக்கும் நேரம், காலம் என்ற ஒன்னு கூடி வரணும் உன் வாழ்க்கைல இப்படி ஒரு சம்பவம் நடக்கணும் அந்த நேரம் பார்த்து நான் அங்க வரணும் என்று விதி. இவ்வளவு பேசுற உனக்கு என்ன பிடிக்குமா?” என்று அருள் ஆசையாக கேட்க,

 

சற்றும் யோசிக்காமல் “தெரியல” என்றாள் அன்பழகி.

 

“அடி போடி… பொய்யாவது சொல்லி இருக்கலாம் இல்ல” சோகமானான் அருள்.

 

“அது வந்து… என்ன சொல்லுறது… கடலைமிட்டாய் கொடுத்துட்டு போனீங்க இல்ல. அப்போல இருந்து உங்க நியாபகமாவே! இருந்தது. உங்கள திரும்ப பார்க்கணும் போல இருக்கும். ஆனா நீங்க யார்னு கூட தெரியாம எப்படி? எங்க? போய் பாக்கிறது? அன்னக்கி உங்க நெஞ்சுல சாஞ்சப்போ எனக்கு அப்படி ஒரு நிம்மதி. உங்க முகத்தை பார்த்த பிறகு அப்படி ஒரு சந்தோசம்”

 

“அப்போ எதுக்கு டி சாகப்போன” சட்டென்று கோபப்பட்டான் அருள்வேல்.

 

“அவங்க எல்லாம் அப்படி பேசியதும் தாங்க முடியல. அவங்க அப்படி பேசினதால தானே. இன்னக்கி நான் உங்க பொண்டாட்டியா இருக்கேன்” என்றவள் தாலியை தூக்கிக் காட்ட

 

“ஆமா பொண்டாட்டியாம் பொண்டாட்டி… என்ன பிடிக்கலைனு ஒதுக்கி வச்ச பொண்டாட்டி” என்று முறுக்கிக்கொள்ள அன்பழகிக்கு “ஐயோ” என்றானது.

 

அரசியல்வாதி நடந்ததை லேசில் மறக்க மாட்டான் சொல்லிக் காட்டியே உசுர எடுப்பான். வாழ்நாள் பூரா அன்பழகிக்கு இந்த பேச்சை கேட்க நேரிடும் என்று மட்டும் புரிந்தது.

 

“இங்க பாருங்க இனி ஒருதடவை இப்படி பேசுனீங்க, உங்கள அங்க அனுப்பிட்டு நான் எங்கப்பா கூட அவர் வீட்டுக்கே போய்டுவேன்” என்று மிரட்ட

 

“போய்டுவியா? போ…போ… என் மாமனார் வீட்டுல வந்து டேரா போட எனக்கு ஒன்னும் அசிங்கமில்ல” என்றவனுக்கு சிரிப்பாகத்தான் இருந்தது. அது அவன் மனைவி என் வீடு என்று சொல்லாமல் அப்பா வீடு என்று சொன்னதுது தான் காரணம்.

 

கணவனின் முகத்தில் மலர்ந்த புன்னகை அவளையும் தொற்றிக்கொள்ள “எதுக்கு சிடு சிடுன்னு பேசுறீங்க? கொஞ்சம் சிரிச்சிகிட்டே பேசுங்களேன்”

 

“உன் மேல கோவம் டி அதான் பேசும் போதே எரிச்சல கொட்டிடுறேன். ஆனா இனிமேல் அப்படி ஆகாதுன்னு நினைக்கிறேன். சரி என் கூட ஊருக்கு வரியா? இல்ல இங்கயே உன் மாமியார் கூட டேரா போடலாம்னு உத்தேசமா?”

 

“உங்கள அங்க அனுப்பிட்டு நான் எங்கப்பா கூட அவர் வீட்டுக்கே போய்டுவேன்” என்று அவள் மறைமுகமாக சொன்னது அவள் அவனோடு சென்னை வருவதை பற்றி தானோ! அதை உறுதி செய்துகொள்ள இந்த கேள்வியை கேட்டிருந்தான் அருள்வேல்.

 

“ராமர் இருக்கும் இடம்தான்! சீதைக்கு அயோத்தி. புருஷன் இருக்கும் இடத்துல இருக்குறது தானே! பொண்டாட்டிக்கு அழகு” என்றவள் “ஆமா உங்க அப்பாகிட்ட அப்படி பேசுனீங்க? அப்பொறம் எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு அங்க போவீங்க?” சிறு கலக்கத்தோடு கேட்க

 

“ஏன் இந்த மூஞ்ச வச்சிகிட்டுதான். எங்க அப்பா அவ்வளவு சீக்கிரத்துல என்ன கைவிட மாட்டாரு. அவருக்கு நான் இல்லாம எந்த வேலையும் ஓடாது. அப்படி அவருக்கு வலது கையா இருக்கேன்” என்றவனின் கண்கள் மின்ன அதை உணர்ந்துகொள்ளத்தான் அன்பழகியால் முடியவில்லை.

 

“இல்ல. நான் வந்தா அவர் ஏதாச்சும் சொல்வாரா…”

 

“இங்க பாரு… அவர் சொல்லுவாரு, இவர் சொல்லுவாருனு பார்த்தா நம்மால நம்ம வாழ்க்கையை வாழ முடியாது. எங்கப்பா எப்படி பட்டவரு என்று எனக்கு தெரியும். அவருக்கு நான் வேணும். அதனால உன்ன ஒன்னும் சொல்ல மாட்டாரு. நீ என்ன நம்பி வா” என்றவன் வேறு பேச்சு பேசவில்லை.

 

கனகவேல் அன்பழகியை கொலை செய்ய கூட துணிவார் என்று அருள்வேலுக்கு தெரியும். திருமணம் முடிந்த கையேடு ஊருக்கு சென்றவன் அன்பழகியை தான் விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டேன் என்பதை கனகவேலிடம்  சொல்லியும் இருந்தான்.

 

“என்ன டா சொல்லுற? எவனோ! கற்பழிக்க போன பொண்ண காப்பாத்தின, அப்பொறம் தற்கொலை பண்ண போனதால தாலி கட்டிடான்னு இல்ல சொன்னாங்க” கனகவேல் நடந்ததை கண்ணால் பார்த்தது போல் பேச

 

முகம் இறுகிய அருள்வேல் கூட இருக்கும் கறுப்பாடு யார் என்று கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை புறம் தள்ளி விட்டு.

 

“நான் காதலிக்கிறத உங்க கிட்ட சொல்லிட்டா பண்ண முடியும்? அந்த விஷயம் தெரிஞ்சா… அவ உசுருக்கு உத்தரவாதம் இல்லையே! நீங்க விரும்புற பொண்ண கல்யாணம் பண்ண எந்த எல்லைக்கு போனீங்கன்னு ஊருக்கே தெரியும். நான் விரும்புற பொண்ண கல்யாணம் பண்ண நான் எதுவும் செய்ய வேண்டிய தேவை இருக்கல. ஆனா அவளுக்கு ஒன்னுனா சொந்த ரெத்தம்னு கூட பாக்க மாட்டேன். ஏன் நா நான் உங்க ரெத்தம்” என்றவன் தந்தையின் அறையை விட்டு வெளியேறி இருக்க, அன்பழகியின் மீது கைவைக்க கனகவேல் கொஞ்சம் யோசிக்கத்தான் செய்தார்.

 

அருள்வேல் தந்தையிடம் இவ்வாறு பேசுவான் என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். கனகவேல் கற்றுக்கொடுத்த பாடம் இன்று கனகவேலுக்கு எதிராக திரும்பியிருந்ததுதான் உண்மை.

 

இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். மகனின் மனதை கரைத்து விடலாம் என்றிருந்தவருக்கு அன்பழகியை பாம்பு கடித்த செய்தி கிடைத்ததும் “சனியன் தொலைஞ்சா…” நினைக்க அருள்வேல் அவளுக்காக ஊருக்கு கிளம்பியது பிடிக்கவில்லை. அந்த கோபத்தை மகனிடம் காட்டி வாங்கிக் கட்டிக்கொண்டார்.

 

தந்தை சொல் தட்டாத மகன் என்று அனைவரும் புகழும் இவனா இப்படி? தான் விரும்பும் பெண் என்று வந்தால் எந்த ஆணும் யாருடன் வேண்டுமானாலும் மோதுவார்கள் போலும். சரித்திரம் திரும்புகிறது. நான் எனது தந்தையிடம் மறைமுகமாக மோதினேன். இவன் நேரடியாகவே! மிரட்டுகிறான்.

 

மகனின் மனநிலையை புரிந்து அடங்குவாரா கனகவேல்?

 

“ஒய் அழகி உக்காந்து இருந்து என் இடுப்பு வலிக்குது கட்டில்ல வந்து சாஞ்சிக்கவா?” கள்ளப்பார்வை பார்த்தவாறு அருள் கேட்க,

 

அவன் நோக்கம் புரியாமல் இவளும் கொஞ்சம் தள்ளி படுக்க, அவளருகில் வந்து படுத்துக்கொண்டவனோ! அவள் முகத்திலிருந்த முடியை ஒதுக்கியவாறு “எப்படி கழிய வேண்டிய இரவு. இப்படி ஒன்னும் பண்ண முடியாம பண்ணி புட்டியே!” என்று நெற்றியில் முத்தமிட்டான்.

 

அன்பழகியின் உடல் சிலிர்க்க கண்களை மூடிக்கொண்டவள் அவனை நெருங்கி நெஞ்சில் சாய்ந்திருந்தாள்.

 

அவனுக்கும் அதுதான் தேவையாக இருந்தது. அவளது நெருக்கம். அவளை அணைத்துக்கொண்டிருந்தால் போதும். வேறெதுவும் வேண்டாம் மனம் நிறைந்திருந்தது.

 

சின்ன வயதில் நடந்த கதைகளை சொல்லி அவளை சிரிக்க வைத்தவாறு விடியும்வரை கதை பேசலானான் அருள்வேல்.

 

அவள் செய்தவைகளை கேட்டு “இல்ல நீங்க பொய் சொல்லுறீங்க? நீங்க பண்ணதெல்லாம் நான் பண்ணதா சொல்லுறீங்க” என்று சிரித்தவாறு கணவனோடு சண்டையிடலானாள் அன்பழகி.

 

 ஒரு சில இரவு விடியக் கூடாது என்று மனம் ஏங்கும்.

 

அது முதலிரவு மட்டுமல்ல இந்த மாதிரியான இரவும்தான்.

 

அன்றைய விடியல் அருளுக்கும் அன்பழகிக்கும் புதுவித உட்சாகத்தை கொடுத்திருந்தது.

 

வத்சலா வந்து கதவை தட்டும்வரை அவர்களின் பேச்சு நீண்டுகொண்டே சென்றிருக்க, அருள்வேல் தன்னையுடைய சிறுவயது மட்டுமல்லாது கிருஷ்ணாவின் சிறுவயது சேட்டைகளையும் சேர்த்து கூறி, தனது குடும்பத்தை பற்றியும் கூறி முடித்திருந்தான்.

 

வத்சலா வந்து மருத்துவர் வந்திருப்பதாக கூறிய பின்தான் இருவரும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு முன்னறைக்கு வந்தனர். அன்பழகியால் மெதுவாக அடியெடுத்து வைக்க முடியுமென்று அருளை தூக்க வேண்டாமென்று மறுத்து பிடிவாதமாக அவன் கையை பிடித்தவாறு நடந்து வந்திருந்தாள்.

 

மருத்துவர் பரிசோத்தித்து விட்டு விஷம் முற்றாக நீங்கி விட்டதாகவும், காலில் வீக்கம் குறைந்திருப்பதாக கூறி மருந்தும் கட்டி விட்டு மெதுவாக அடியெடுத்து நடக்கலாம் என்றும் கூறி விட்டு சென்றிருந்தார்.  

 

நீ அழைத்தால் வரும் தூரத்தில் நான்
ஏன் என்னை அழைக்கவில்லை அன்பழகி.
என் மனக்குரல் உனக்கு கேட்கவில்லையா…
நீ வரும்வரைதான் காத்திருந்தேன் உனக்காக இந்த அன்பழகி. 

 

அலைபேசியில் கண்ணபிரானிடம் கத்திக்கொண்டிருந்தான் யுவன். “என்ன மட்டும் தனியா இங்க விட்டுட்டு நீங்க எல்லாரும் ஜாலியா ஊருக்கு போய்ட்டிங்க இல்ல”

 

“டேய் டேய் ஸ்கூல் போற பையன் மாதிரி அழாதடா… உனக்குத்தான் உங்க அக்கா இருக்காளே!” என்றார் கண்ணபிரான்.

 

“போங்க மாமா சிரிக்காம காமடி பண்ண உங்களால மட்டும்தான் முடியும். என்ன எங்கக்கா கிட்ட கோர்த்து விடலாம்னு பாக்குறீங்களா? அதெல்லாம் நடக்காது. நான் என் வீட்டுல இருக்கேன். ஆனா ஆபீஸ் வேலைய தனியா பாக்கத்தான் கடுப்பாகுது” 

 

“நீ என்ன சின்னக் குழந்தையா? தனியாத்தான் பார்க்கணும்”

 

வடிவுப்பாட்டியும் கோதையோடு ஊருக்கு சென்றிருப்பதால் அபரஞ்சிதா அன்னையில்லாமல் ஊருக்கு செல்ல மாட்டாள் என்று யுவன் வசந்த்திடம் “எல்லாரும் இங்க இருப்பாங்க. உனக்கு காலேஜ் இருக்கில்ல நீ மட்டும் ஊருக்கு கிளம்பு” என்று வெறுப்பேத்த.

 

“எனக்கு ஸ்டடி லீவு மாமா… நானும் இருப்பேன்” என்று வசந்த் முறைக்க, நடந்ததோ! யுவனை சென்னையில் விட்டு விட்டு அனைவரும் பெங்களூர் சென்று விட்டனர்.

 

இங்கிருந்தால் கயந்திகாவின் ஆட்டம் அதிகரிக்கும், அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால் கண்ணபிரான் இங்கு இருக்கக் கூடாது என்று அவர் கிளம்பி சென்றிருக்க, யுவனுக்கு அப்படி ஒரு கோபம்.

 

“நானும் ஆபீஸ பெங்களூருக்கு மாத்திக்கிட்டு அங்கேயே! வந்துடுறேன்” என்றான் யுவன்.

 

“நடக்குற கதையை பேசுடா…” என்று அலைபேசியை அனைத்திருந்தார் கண்ணபிரான்.

 

நாய் வேஷம் போட்டால் குரைத்துத் தானே! ஆக வேண்டும் என்ற நிலைதான் ராதைக்கு. “பெங்களூர் செல்லலாம்” என்று அபரஞ்சிதாவை வற்புறுத்தியது அவள்தான். தந்தை சென்னையில் இருப்பார். இங்கு அபரஞ்சிதாவை ஆட்டிப்படைக்கலாம். ஒரு வழி பண்ணலாம் என்று எண்ணி வந்திருக்க, தந்தையும் கூடவே! வருவார் என்று எண்ணவில்லை.

 

அவர் முன்னிலையில் தனது நல்ல பெயர் கெட்டு விடக் கூடாதே! அதனால் அபரஞ்சிதாவை அதட்டி வேலை வாங்கவும் முடியாமல் அதிகாலையில் எழுந்து குளித்து அவளோடு சேர்ந்து சமையலில் ஈடுபட ஆரம்பித்தாள்.

 

“நீ எதுக்குமா… இதெல்லாம் செய்யிற? நீ போய் ரெஸ்ட் எடு” என்று அபரஞ்சிதா அன்பாக கூற

 

“இல்ல. நான் உங்க கிட்ட இருந்து கத்துக்கிறேன். அம்மா கிட்ட இருந்துதானே! பொண்ணுங்க கத்துக்கணும்” என்று ஐஸ் வைக்க, அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கண்ணபிரானின் மனம் குளிர்ந்து.

 

“ஆமா… ஆமா… நாளைக்கு இன்னொரு இடத்துக்கு வாக்கப்பட்டு போகும் பெண். சமைக்க தெரியாதுன்னு சொன்னா… மாப்பிள்ளை வீட்டுல அம்மாவைதான் கேள்வி கேப்பாங்க. நீ சொல்லிக் கொடு அபி…” என்றார் கண்ணபிரான்.

 

பல்லைக் கடித்த ராதை “இவள வேலை வாங்க வந்தா… இவளுக்கு நான் வேலை பார்க்க வேண்டிய என் நிலைமையை நினச்சா….” தன்னையே! நொந்தவாறு! வேலையை பார்க்க ஆரம்பித்தாள். 

 

உள்ளுக்குள் எரிந்தாலும் வசந்தோடும் இன்முகமாகவே! நடந்துகொண்டாள்.

 

யுவனும் வசந்த்திடம் ராதையை பற்றி குடைந்தெடுக்க, “அக்கா நல்லா இருக்காங்க மாமா” என்பான்.

 

“அவ நல்லா இருக்கானு தெரியும். அவளால நீங்க நல்லா இருக்கீங்களா? அத சொல்லு மொதல்ல”

 

“நாங்க நல்லா இருக்கோம். அக்கா நல்லா சமைக்கிறாங்க. என் கூட ஜாகிங் வராங்க. அப்பா கூட டென்னிஸ் விளையாடுறாங்க. அம்மா கூட தோட்ட வேலையெல்லாம் பாக்குறாங்க. கோதை வாலு இல்ல என்ற குறையே! எனக்கு இல்ல” என்பான் வசந்த்.

 

“ரெண்டு நாள்ல இவ்வளவு மாற்றமா? இருக்காதே! இருந்தாலும் உன் சொந்த அக்காவை இப்படி டீல்ல விடக் கூடாது. இரு உடனே! அவளுக்கு போனாப் போட்டு விசயத்த பத்த வைக்கிறேன்” வசந்தை வம்பிழுக்க

 

“மாமா இந்த நாரதர் வேலையெல்லாம் பார்க்காதீங்க. அவ வந்தா என் இடுப்பெலும்பு முறிச்சிடுவா… போன வைங்க முதல்ல” கடுப்பானான் வசந்த்.

Advertisement