Advertisement

அத்தியாயம் 14
ஓஹ்… அப்படித்தான் கல்யாணம் நடந்ததா? உங்க அப்பாதான் பிரச்சினை பண்ணாரா?” என்று முறைத்தாள் கோதை.
“ஏன் டி அதுக்கு என்ன முறைக்குற” புன்னகைத்தான் கிருஷ்ணா.   
“உன்ன முறைக்காம? உங்க அப்பனையா முறைக்க முடியும்? அது என்ன அண்ணனும் தம்பியும் பொண்ணுக சம்மதம் கேக்காம தாலி கட்டுறீங்க? உன்ன கூட மன்னிச்சிடலாம் நான் லவ் பண்ணுறதா நினைச்சி, நான் வர சொன்னதா வந்து தாலி கட்டிட. உன் நொண்ணன் பெரிய இவனா? உசுர காப்பாத்த தாலிதான் கட்டுவாரா? தாலிய கட்டிட்டு அப்பாக்கு பயந்து பொண்டாட்டிய ஊருளையே! விட்டுட்டு போய்டுவாரா?” தலையணையால் கிருஷ்ணாவை மொத்த ஆரம்பித்தாள்.
அவளை தடுத்தவன் “உன் மடில படுத்ததும் அப்படியே அந்த தலகணையாள என் முகத்தை அமிழ்த்தி மூச்ச நிறுத்து. என்ன டி நீ… கொஞ்சம் கூட புரியாம பேசுற? ஒரு பொம்பள மனசு பொம்பளைக்கு தெரியும் என்று சொல்வாங்க இல்ல. அதே மாதிரி ஒரு ஆம்பள மனசு ஒரு ஆம்பளைக்குத்தான் தெரியும். எங்க அண்ணன் அண்ணிய லவ் பண்ணாமாதான் தாலி கட்டி இருப்பாரா?” என்றவன் எழுந்து அமர்ந்திருந்தான்.
“லவ்வா?” என்றவள் மீண்டும் மொத்தி எடுக்க,
“ஏன் டி ராட்சசி திரும்ப அடிக்கிற?”
“லவ் பண்ணுறவரு? கடல மிட்டாய் கொடுத்துட்டு போனதோடு சரி வந்து பாத்தாறா? விட்டா உங்க அண்ணிக்கு அந்த கணபதியோட கல்யாணமே! நடந்திருக்கும். லூசு பய”
“நீ என் அண்ணன திட்டுற?”
“நான் உன்னையே திட்டுவேன். உன் அண்ணனெல்லாம் எம்மாத்திரம். மூடிட்டு தூங்கு” என்ற கோதை தலையணையில் தலைவைத்து தூங்க முற்பட
“புள்ளபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருச்சு. எனக்கும் ஒரு காலம் வரும் டி அப்ப உன்ன வச்சிக்கிறேன்” கருவியவாறே கிருஷ்ணா தூங்கிப் போனான்.
கோதைக்கு தான் தூக்கம் வரவில்லை. “லவ் பண்ணுறாங்களாம் லவ்வு. சரியான லூசுக் குடும்பமாத்தான் இருக்கு. நான் வந்து இவன் கிட்ட மாட்டிக்கிட்டது பத்தாதுன்னு அந்த அக்கா வேற இவன் அண்ணன் கிட்ட மாட்டிக்கிட்டாங்களே! இதுங்கள எப்படி சேர்த்து வைக்கிறது?” யோசனையில் ஆழ்ந்தவாறே தூங்கி இருந்தாள் கோதை.
இங்கே தூங்காமல் இருந்த மற்றுமொரு ஜீவன் அன்பழகிதான். அருள்வேல் பேசியதை கேட்ட பின் தான் எடுத்த முடிவுதான் சரி என்று எண்ணினாள் அன்பழகி.
சாந்திமுகூர்த்தத்துக்கு நல்ல நாள் பார்க்க வேண்டும் என்று வத்சலா அன்பழகியை தன்னோடு தூங்க வைத்திருக்க, இருவருக்கும் பேசிக்கொள்ளக் கூட சந்தர்ப்பம் அமையவில்லை. அடுத்த நாள் காலையே! அருள்வேல் சென்னை செல்ல ஆயத்தமாக அன்பழகி அசையாது நின்றிருந்தாள்.
“என்னம்மா இங்கன நிக்கிற? ஓஹ்… துணிமணி எல்லாம் வீட்டுல இருக்கா? யாரையாச்சும் அனுப்பி எடுத்து வர சொல்லுறேன். நீ குளிச்சிட்டு ஊருக்கு போக தயாராகு” என்று வத்சலா சொல்ல
“இல்ல நான் போகல. நான் இங்கயே! இருக்கேன்” என்றாள் அன்பழகி.
“என்ன?” என்றவாறு வந்த அருள்வேல் “என்ன சொன்ன?” என்று உறும
“நான் எங்க வீட்டுலையே! இருக்கேன்னு சொன்னேன்”
“அடிச்சேன்னா பல்லு மொத்தமும் கொட்டிடும்” கையை ஓங்க, அன்பழகி அசையவில்லை.
“என்ன டா பண்ணுற? முதல்ல கைய கீழ இறக்கு” என்ற வத்சலா அன்பழகியை பார்க்க அவள் முகம் இறுகி இருந்தது.
“அவ என்ன சொல்லுறா கேட்டிங்களா? அவள இங்கன விட்டுட்டு நான் மட்டும் ஊருக்கு போனா நாலு பேர் நாலு விதமா பேச மாட்டாங்களா? ஆ.. கட்டின பொண்டாட்டிய அடக்கி வைக்க தெரியாத துப்புக்கெட்ட பயனு பேசுவானுங்க. அதானே! இவளுக்கு வேணும்” கோபத்தில் வார்த்தையை விட்டிருந்தான் அருள்வேல்.
அப்பொழுது கூட அவன் மனதில் என்ன இருக்கிறது என்று பேசி அன்பழகிக்கு புரிய வைக்க முயலாமல், கனகவேல் பேசியதன் தாக்கத்தை இவ்வாறு பேசி இருக்க,
“ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவது அவளை அடக்கி, ஒடுக்கி வைப்பதற்கா? என்று முகம் சுணங்கினாள் அன்பழகி. 
  அருள்வேல் கத்திக் கொண்டிருக்க, “என்னம்மா நீ போ.. போய் தயாராகு” என்று வத்சலா சொல்ல
“இல்லைங்க நான் என் வீட்டுக்கு போறேன்” என்றாள் பிடிவாதமாக
“என்ன டி வீம்புக்கென்றே பேசுவியா? போவியா? போவியா? போய்தான் பாரேன். கால ஒடச்சி அடுப்புல போடுவேன். பாத்துக்க” என்று மிரட்டியவன் “அம்மா இவ கூட மல்லு கட்ட எனக்கு நேரமில்லை. இவள பாத்துக்கோங்க. எனக்கு அங்க கட்ச்சி வேல ஏகப்பட்டது இருக்கு. தேர்தல் முடியட்டும் வரேன். உன் வீட்டுக்கு போன நீ செத்த டி..”
சென்னை சென்றவனுக்கு வேலை மட்டும் இழுத்துக்கொள்ளவில்லை. அவன் திடீர் திருமணம் வேறு மீடியாவில் வந்து நிம்மதி இல்லாமல் செய்தது. போதாததற்கு “மனைவியை பிரிந்த முதலமைச்சரின் தவப்புதல்வன். தந்தை வழியில் மகன்” என்றெல்லாம் கேலிச் செய்திகள் அவன் மனதை மேலும் ரணமடைய செய்ய அன்பழகியின் மேல் கொலைவெறியே வர அலைபேசியில் கூட அவளோடு பேச மனம் வரவில்லை.
கனகவேலுக்கே மகன் தேர்தலில் வெற்றி பெருவானா என்ற அச்சம் தோன்ற, மாநிலத்தை ஆளும் தந்தை வைத்திருக்கும் மீடியாவை உபயோகித்தே! நடந்த சம்பவத்தின் உண்மை தன்மையை எடுத்து கூறலானான் அருள்.
அது உண்மையா பொய்யா என்று ஆராய்ச்சி செய்ய கிளம்பிய தனியார் தொலைக்காட்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான செய்தியால் அவன் களங்கமும் நீங்கி இளைஞ்சர்களின் மனதில் இடம் பிடித்து தேர்தலிலும் வெற்றி பெற்றான் அருள்வேல்.
“என்ன இந்த பொண்ணு இப்படி இருக்கா?” என்று வத்சலா மருமகளை எண்ணி வருந்தினாலும் அவளை ஒதுக்கத்தான் முடியவில்லை. வீட்டு வேலைகள் அத்தனையையும் பார்த்துக்கொண்டு வத்சலாவையும் கவனிப்பவளை எப்படி ஒதுக்குவாள். நடந்த சம்பவங்களால் திடிரென்று நடந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றாள். அவளே! புரிந்துகொள்வாள் கொஞ்சம் நாளாகட்டு என்று மனதை தேற்றிக்கொண்டாள் மாமியார்.  
அருள்வேல் சொன்னது போல் தேர்தல் முடிந்து அன்பழகியை காண வந்தான். அவனிடம் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டாள் அன்பழகி. அதிர்ந்தவன் அதன்பின் ஊருக்கு வரவே! இல்லை.
 இந்த ஆறுமாத்தில் முக்கியமாக நடந்தது ஊருக்கு வந்த பாலமுருகனுக்கு முனீஸ்வரி மற்றும், கணபதியை பற்றி உண்மை அறிய வந்ததும் அன்பழகியின் திடீர் திருமணமும் தான்.
மகளை பார்க்க வந்தவன் அவளது திருமணத்துக்காக சேமித்ததாக வங்கி கணக்கு புத்தகத்தைக் கொடுக்க அதிர்ந்தாள் அன்பழகி.
தந்தைக்கு தன்மீது இவ்வளவு பாசமா? பணத்தை வங்கியில் போடாமல் அன்னைக்கு மருத்துவம் பார்த்திருக்கலாம் என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அவள் எண்ணியதை தந்தையிடம் கூறி இருக்கலாம். முத்தழகியை போல் மகளும் அழுத்தமாக இருந்து விட பாலமுருகனுக்கு மகளின் பிரச்சினை தெரியவில்லை.
வங்கிப் புத்தகத்தை அவள் வாங்கிக்கொள்ளாமல் வத்சலாவிடம் கொடுக்க சொல்லி, தந்தைக்கு அருந்த காபி கலக்க உள்ளே சென்றிருக்க, ஞானவேலும் செல்வராஜும் ஆலையிலிருந்து வருகை தந்திருந்தனர்.
பாலமுருகனிடம் நலம் விசாரித்து விட்டு  “இங்க பாருப்பா உன் பொண்ணு பேர்ல பணம் போடுறது நல்ல விஷயம்தான். ஆனா சீதனமா கொடுக்கணும்னு நினைச்சி கொடுக்கிறதா இருந்தா எதுவும் வேணாம்” என்றார் செல்வராஜ்.
ஞானவேலும் முத்தழகி சீட்டு கட்டி இருப்பதாக ஊரில் சீட்டு பிடிக்கும் தங்கம்மா கூறியதாகவும் அந்த பணமும் அடுத்த மாதம் கிடைக்கும் என்று கூற பாலமுருகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தான் மருந்துக்கு கொடுக்கும் காசைத்தான் மனைவி சீட்டுக்கு கட்டி இருப்பது தெரிந்தது. கோபம் வந்தாலும் செத்து போனவள் மீது கோபப்பட்டு வார்த்தையை விட்டு என்ன பிரயோஜனம்? அமைதியாக நின்றிருந்தான் பாலமுருகனின்.
“சரி முருகா இப்போ என்ன பண்ண போற?”
“இனி சவாரிக்கு போறதா இல்லிங்க ஐயா.. அழகியும் போய் சேர்ந்துட்டா… பொண்ணுக்கும் கல்யாணம் ஆகிருச்சு. நான் யாருக்கு சம்பாதிக்க” விரக்தியா பாலமுருகன் பேச
“அதுக்காக குடிச்சிட்டு உடம்ப கெடுத்துக்கலாம்னு நினைப்போ!” செல்வராஜ் கோபப்பட்டார்.
“இல்லைங்க ஐயா… குடிக்கிறத விட்டுட்டேன். வீட்டுல இருந்து என் பொஞ்சாதி ஆசையா நட்ட தோட்டத்த பார்த்துக்கலாம் என்று இருக்கேன். அவ நியாபகமா அது மட்டும் தானுங்க இருக்கு. அதுல முளைக்கிற காய்களை பறிச்சி கடைக்கு போட்டு வர்ற வருமானம் தனி ஒருத்தனான எனக்கு பத்துமில்ல” என்ற பாலமுருகன் மகளிடமும் சொல்லிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.
தந்தை இனிமேல் வீட்டில்தான் இருக்கிறார் என்றதும் ஒரு புறம் மனம் மகிழ்ந்தாலும் அன்னை இருக்கும் வரை வீட்டுப் பக்கமே! வராத தந்தை வீட்டோடு இருந்து விடுவதாக கூறியது யாருக்காக என்று நினைக்கும் பொழுது மறுபுறம் மனம் சுருங்கத்தான் செய்தது. இதனாலயே வீட்டுக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டாள்  அன்பழகி.
இங்கு நடந்தது எதுவும் அறியாத அருள்வேலோ! அன்பழகி தனது வீட்டுக்கு செல்லாமல் அன்னையோடு இருப்பது கொஞ்சம் நிம்மதியாக இருக்க, அவளாக அழைக்கும்வரை ஊருக்கு வர மாட்டேன் என்று அவனும் வீம்பாக இருக்கலானான்.
இன்று பருத்திக் காட்டில் பருத்திப் பஞ்சு அறுவடை செய்வதால் கிருஷ்ணா கோதையை அழைத்துக்கொண்டு காலை ஒன்பது மணிபோல் பார்வையிட சென்றிருக்க, அவன் பாதுகாவலர்களும் அவர்களுக்கு கண்ணெட்டும் தூரத்தில் நின்றிருந்தனர்.
“ஆமா என்ன அறுவடைன்னு சொன்னாங்க இந்த நூறு ஏக்கருக்கு அம்பது பேர் கூட இல்ல. ஒரு பெரிய மெசினை போட்டு அறுவடை பண்ணாம எதுக்கு இப்படி இன்னமும் மனிஷனுங்கள நம்பி இருக்கீங்க. ஐடியா இல்லாத பசங்க. முதலமைச்சர் பசங்கனு பேத்த பேருதான்” கோதை அலுத்துக்கொள்ள
“கிடைக்கிற கேப்ல எல்லாம்  என்னையும், என் குடும்பத்தையும் கலாய்க்கலாம்னு அலையுற இல்ல. சும்மா எல்லாம் தெரிஞ்சா மாதிரி பேசாதீங்க என் அறிவுக்கொழுந்தே! எல்லா பஞ்சும் ஒரே தடவைல வெடிச்சு பூவாகுதா? மெசினை போட்டு பறிக்க? அறுவடை செய்ய நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை எடுக்கும். அப்போதான் எல்லா பஞ்சையும் ஒழுங்கா அறுவடை செய்ய முடியும். பொறுமை ரொம்ப முக்கியம். அதுதான் உன் கிட்ட இல்லையே!” கடைசி வாக்கியத்தை அழுத்தி சொன்னான் கிருஷ்ணா
“ஓஹ்…” என்றவளும் அவனை உறுத்து விளிக்கலானாள்.
“அது மட்டுமில்ல…காலை இளம் வெயில் நேரத்தில் பத்து மணிக்குள்ளாகவும், மாலை மூன்று மணிக்கு பின்புப் பருத்தி எடுப்பது நல்லது. நடுப்பகலில், வெப்பமான சூழ்நிலையில் எடுக்கப்படும் பருத்தியில், காய்ந்து ஒடிந்த புழவிதழ்களும், சருகுகளும் சேர்ந்து நல்ல பருத்தியோடு கலந்துவிடும் வாய்ப்பு உண்டு”
“ஓஹ்… ஆமா அவங்க என்ன சாக்கு பைலை தனியா சேமிக்கிறாங்க?” கோதை யோசனையாக கேட்க,
           
“அதுவா? அது சுத்தமான பருத்தி சுளைகள் அதைத்தான் தனியா சேமிக்கிறாங்க. அதே! மாதிரி செடியிலிருந்து கிடைக்கும் தரம் குறைந்த கொட்டை பருத்தியை தனியாக இன்னொரு பையிலும் சேமிப்பாங்க”
“எதுக்கு?”
“திரும்ப பயிரிடுவாங்க, மேலதிகமானத விற்பனையும் செய்வாங்க”
“அப்படியா? கிரேட்யா உனக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு” கோதை சிலாகிக்க,
“ஆல் இன்போர்மேசன் ஐ நோ” காலரை இழுத்து விட்ட கிருஷ்ணா “ஈவினிங் ஆலைக்கு போய் அங்க என்னெல்லாம் நடக்குதுன்னு பார்க்கலாம் சரியா…” என்று அன்பாக கூற
“ஆமா ஆலைல என்ன நடக்குது சோலைல என்ன நடக்குதுனு பார்த்துகிட்டு இருந்தா சரி..” என்று மனதுக்குள் பொறுமியவள்  
புருஷன் நல்ல மனநிலையில் இருப்பதனால் இதுதான் சரியான சமயம் என்று “யோவ் புருஷா உன் அண்ணனையும் அண்ணியையும் சேர்த்து வைக்க நான் சூப்பர் பிளான் போட்டு வச்சிருக்கேன்” ஆரம்பித்தாள் கோதை.   
“நீ ஏதாவது பண்ணி சொதப்பி அவங்களுக்குள்ள பிரச்சினையை பெருசு பண்ணிடாத” முறைத்தான் கிருஷ்ணா
“அப்போ கடைசிவரைக்கும் நான் கன்னியா கெடந்து கிழவியாகி சாகணுமா?” கோபத்தில் வார்த்தைகள் தடுமாற ஆரம்பித்திருக்க
“என்ன? என்ன? இப்போ என்ன சொன்ன?”
“சொன்னாங்க சொன்னாங்க சொரைக்காக்கு உப்பில்லா, பருப்புல பொறுப்பில்லைனு லூசு, லூசு எவனாச்சும் கல்யாணம் பண்ணி முதலிரவை கொண்டாடாம இருப்பானா? அதுவும் காதலிக்கிற பொண்ண பக்கத்துல வச்சிக்கிட்டு? நீ எல்லாம் என்ன ஜென்மமோ!”
“அடிப்பாவி அன்னக்கி நான் பேசுனது ஒட்டு கேட்டுட்டுதான் நம்ம முதலிரவுல என்ன அந்த பாடு படுத்துணியா?” கணவனானவனுக்கு அவள் சொன்னது சரியாகத்தான் புரிந்திருந்தது.
நாக்கை கடித்தவள் “சரி சரி அத விடு முதல்ல உன் அண்ணனையும் அண்ணியையும் எப்படி சேர்த்து வைக்கிறதுனு சொல்லுறேன் கேளு. அப்போ தானே! நாம ஒன்னு சேர முடியும்” என்று இளிக்க 
“சொல்லித் தொல” கடுப்பானான் கிருஷ்ணா.
“சென்னைல உங்க அண்ணனுக்கு எக்சிடன் ஆச்சுன்னு இங்க இருக்குற உங்க அண்ணிக்கு போன் பண்ணி சொல்லணும். புருஷனுக்கு ஒன்னுனா அழுதுகிட்டே போக மாட்டாங்களா?”
“இதெல்லாம் அர்த்த பழைய ஐடியா… எத்தனை சினிமால பாத்திருக்கேன்” முகத்தை சுளித்தான் கிருஷ்ணா.
“பழைய ஐடியாதான் ஒர்கோட் ஆகும். நான் சொல்லுறத கேளு”
“சரி..சரி..சொல்லு” சுவாரஸ்யமே! இல்லாமல் கேட்கலானான்.
“புருஷன கைலயும், கால்லயும் தலைலையும் கட்டோட பார்த்தா பொண்டாட்டிக்கு மனசு உருகாதா இல்லையா? புருஷன கவனிச்சிக்க அவங்க அங்க தங்கிப்பாங்க, உங்க அண்ணன் தான் ரொமான்ஸை டெவலப் பண்ணி அண்ணிய வழிக்கு கொண்டு வரணும்”
“இதுதான் உன் மொக்க ஐடியாவா?” கிருஷ்ணா கேலி செய்ய
“என்ன கிண்டலா? இந்த ஐடியா மட்டும்  ஒர்கோட் ஆகல மவனே! நான் என் காதை அறுத்து உன் கைல கொடுத்துடுறேன் பாரு” வீர வசனம் பேசினாள் மனையாள்.
சத்தமாக சிரித்த கிருஷ்ணா “இதுக்காக வேண்டியே! எங்க அண்ணன நானே! கார ஏத்தி எக்சிடன் பண்ணுறேன் டி” கருவிக்கு கொண்டான்.
கேலியும் கிண்டலுமாக இவர்கள் பேசிக்கொண்டு வெகு தூரம் சென்றிருக்க, ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு வந்திருந்ததை கவனிக்கவில்லை.
திடிரென்று யாரோ கோதையை பிடித்து தள்ளி விடவும் கோதை கிருஷ்ணாவின் மேல் விழவும் இருவரும் ஒன்றாக உருண்டனர்.
“ஐயோ.. பாம்பு… பாம்பு…” என்று கோதை கத்த அங்கே படம் எடுத்துக் கொண்டிருந்த நாகம் அன்பழகியை சீண்டி இருந்தது. 
பருத்திக் காட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு உணவும், குடிக்கவும் பெரிய வீட்டில் இருந்துதான் வழங்குவார்கள். அதை ஏற்பாடு செய்த வத்சலா மூத்த மருமகளை அழைத்துக்கொண்டு வந்திருக்க, மகனையும் சின்ன மருமகளையும் காணாமல் தேடினாள். 
யாரோ! அவர்கள் வடக்கு பக்கமாக போனதை கண்டதாக கூற “ஐயோ அந்த பக்கம் பாம்பு புத்து இருக்கே!” நெஞ்சில் கை வைத்து வத்சலா அமர்ந்து விட செய்வதறியாது அன்பழகி கோதையையும் க்ரிஷ்ணாவையும் நோக்கி ஓடி இருந்தாள்.
ஓடி வந்தவள் கண்டது நாகம் படையெடுத்துக் கொண்டு கோதையை தீண்ட முற்படுவதைத்தான். எங்கே சத்தம் எழுப்பினால் அது கோதையை தீண்டி விடுமோ! என்று அவர்களின் அருகில் வேகமாக வந்தவள் கோதையை தள்ளி விட்டிருக்க, அன்பழகியின் புறம் திரும்பிய நாகம் அவளை தீண்டி இருந்தது.
வத்சலாவின் அருகில் ஓடி வந்தவர்கள் விஷயம் கேள்விப்பட்டு அன்பழகியின் பின்னால் ஓட, அத்தனை பாதுகாப்பு வீரர்களையும் தாண்டி ஒரு பாம்பு கிருஷ்ணாவை நெருங்கியதை அறியாமல் நின்றிருந்த பாதுகாப்பு படையினரும் என்ன எதோ! என்று துப்பாக்கியை கையில் ஏந்திய வண்ணம் ஓட்டம் பிடிக்கலாயினர்.
சிலர் பாம்பை துரத்திக்கொண்டு போக, “ஐயோ… அக்கா… ஐயோ.. அண்ணி…” என்று கிருஷ்ணாவின் மற்றும் கோதையின் கூக்குரலை கேட்டவாறு மயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தாள் அன்பழகி.
“அவளை உடனடியாக நாட்டு வைத்தியரிடம் தூக்கி சென்றனர் அங்கிருந்தவர்கள். கடித்த இடத்திலிருந்த வீக்கத்தை பார்த்து விஷ நாகம்தான் தீண்டி இருப்பதாக அவர் கூற வத்சலாவும், கோதையும் அழவே! ஆரம்பித்திருந்தனர்.
“நாகப்பாம்புகள் கடித்தாலும், அவைகள் தனது விஷத்தை அநாவசியமாக கக்குவதில்லை.  இரையை ஜீரணம் செய்வதற்கு உதவியாக விஷம் இருப்பதால் அவற்றை சீக்கிரத்தில் வீணாக்காது. சேமித்து வைக்கவே விரும்பும். நாகப்பாம்புகள் விஷத்தோடு கடித்தால் அது அதன் கோபத்தை வெளிக்காட்டுவதாகவே அமையும். பொதுவாக நாகப்பாம்புகள் 80% விஷம் இல்லாத தன்மையிலேதான் கடிக்கின்றன. அவை தாக்குதலுக்கு ஆளாகும்போது, தற்காத்து கொள்வதற்கு விஷத்துடன் கடிக்கும்.
பயமோ! பதட்டமோ! அடையக்கூடாது இல்லனா ரத்தத்துல சீக்கிரம் விஷம் கலந்துடும். நாகம்னு பொதுவா சொல்லுறோம், நல்ல பாம்பா? கட்டுவிரியனா? கண்ணாடிவிரியனா? ஊதுசுருட்டையா? எதுன்னு பார்க்கணும். நல்ல பாம்பு கடியா இருந்தா ரத்தம் வேகமாக உறையும். உசுருக்கு ஒன்னும் ஆபத்தில்லை. மயக்கம் தெளியட்டும் பார்க்கலாம்” என்றவர் சிகிச்சையை ஆரம்பித்தார்.
தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அன்பழகியின் மூக்கினுள் விட சிறுது நேரத்தில் மயக்கம் தெளிந்தாள். உடனடியாக ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பருக கொடுத்த உடன் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.
அதை பார்த்து வத்சலா பதற “ஒரு மணித்தியாலத்துக்கு ஒருதடவை கொடுக்கனும்மா.. இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்” என்றார் மருத்துவர்.
“அம்மா அவர்  வேலைய செய்ய விடு வா… நாம வெளில போய் உக்காரலாம்” என்று கிருஷ்ணா அன்னையை அழைத்து சென்று வெளியே அமர்ந்துகொள்ள அழுதுகொண்டிருந்த கோதை அங்கே அமைதியாக அமர்ந்திருப்பதை கண்டு புருவம் உயர்த்தினான்.
அவள் முத்திலிருந்த தெளிவு கிருஷ்ணாவை யோசிக்க வைத்திருந்தது.
மகளை பாம்பு கடித்தது என்றறிந்த பாலமுருகனும் ஓடி வந்திருந்தான். திருமணமான பின் மகள் வீட்டுக்கு வருவதில்லை. அவன் சென்று பார்த்து விட்டு வருவதுதான். அன்பழகி “நல்லா இருக்கீங்களா அப்பா?” என்று கேட்பதோடு குடிக்க ஏதாவது கொடுப்பாள். அதை தவிர பெரிதாக ஒட்டுதல் இல்லை.
“நீ எப்படிம்மா இருக்க? மாப்புள எப்படி இருக்காரு?” என்று கேட்டும் முருகன் “ஏன் மாப்ள உன்ன அங்க கூட்டிகிட்டு போகாம இருக்காரு என்று உரிமையாக கேட்கக் கூட முடியாமல் திண்டாடுவான்.
மகளை பார்த்து கதறி அழ “எனக்கு ஒன்னும் இல்ல அப்பா நான் நல்லா இருக்கேன்” என்றாள் அன்பழகி.
“பார்த்து பத்திரமா இருக்கக் கூடாதம்மா… இப்படித்தான் உங்க அம்மாவும் சரியா அவ உடம்ப பாத்துக்காமா அல்பாயுசுல போய்ட்டா…  நான் வீட்டுக்கும் வராம இரவு பகல் வண்டி ஒட்டி ஓடி ஓடி உழைச்சது எல்லாம் யாருக்காக உங்க ரெண்டு பேருக்கும் தானே! மருந்து செலவுக்கு காசு கொடுத்தா அத சீட்டு கட்டி இருக்கா அந்த கிறுக்கச்சி”
“என்ன சொல்லுறீங்க?” அன்பழகி சோர்விலும் அதிர்ச்சியாக
“அவ பேச்ச விடுமா… செத்து போனவள பத்தி எதுக்கு தப்பா பேசிகிட்டு. நீயாவது மாப்பிள கூட சந்தோசமா வாழணும்மா உடம்ப பாத்துக்க” கண்கள் கலங்கியவாறே வெளியேற யோசனையில் விழுந்தாள் அன்பழகி. 
மாலை மங்கி வரும் வேலை மருத்துவர் வீட்டு முற்றத்தில் ஐந்து வண்டிகள் வரிசை கட்டி வந்து நிற்க கிருஷ்ணாவும் எட்டிப் பார்கலானான்.
வண்டியிலிருந்து குதிக்காத குறையாக இறங்கினான் அருள்வேல்.
“அண்ணனுக்கு யார் தகவல் சொன்னது நாம சொல்லலையே!” என்று கிருஷ்ணா யோசிக்க,
“வாங்க மாமா… அக்கா இங்கதான் இருக்காங்க” என்று கோதை அருள்வேலை அழைத்துக்கொண்டு செல்ல,
“ஓஹ்… இவ வேல தானா. என்ன பிளான் பண்ணுறான்னே! புரியல. மண்டை காயுது” என்றெண்ணியவாறு அண்ணனை பின் தொடரலானான்.
“அறிவிருக்கா உனக்கு? மூணு வேலையும் தின்னுட்டு வீட்டுல இருக்க வேண்டியது தானே! எதுக்கு பஞ்சு காட்டு பக்கம் போன? பாம்பை பாசமா தடவி கொடுக்க போனியா? முட்டாள். முட்டாள்” அன்பழகியை பார்த்த உடன் அருள்வேல் திட்ட ஆரம்பித்திருக்க, கோதையும், கிருஷ்ணாவும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அன்பழகியின் முகம் அழுகையை தத்தெடுத்து விம்மலுக்கு தயார் நிலையில் இருக்க, “மாமா ஆக்சுவலி என்னதான் பாம்பு கடிக்க பாத்திருச்சசு. அக்கா என்ன தள்ளி விட்டதால, பாம்புக்கு கோபம் வந்து அக்காவ கொத்திருச்சு” கோதை சிரித்தவாறு சொல்ல
“அப்படியாம்மா…” என்ற அருள்வேலின் முகம் கனிந்திருக்க,
அழும் நிலையில் இருந்த அன்பழகிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “எல்லா கோபத்தையும் என் மேல காட்டுறது. பாசம் மட்டும் அவங்க குடும்பத்து மேல மட்டும்தான்” மனம் சுணங்கியவள் நொடித்துக்கொண்டாள்.
அவளுக்கு எங்கே தெரிகிறது அவன் நேசம். அவளை பாம்பு தீண்டி விட்டது என்றதும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று எவ்வளவு வேகமாக வண்டியோட்டிக்கொண்டு வந்தான்.
வந்தவன் அன்பழகி அமர்ந்திருப்பதைக் கண்டு இத்தனை நாள் பிரிந்திருந்த கோபமும், இப்படி நடந்து விட்டதே! என்ற ஆதங்கமும், அவளிடம் சகஜமாக பேசவும் முடியாமல் திட்டி தீர்த்துக்கொள்ளலானான். 
“சரி மருத்துவரே என் பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா?” என்று அருள்வேல் கேட்க
“இருபத்தி நான்கு மணித்தியாலம் அம்மா தூங்க கூடாது” என்று அவர் மறைமுகமாக மறுக்க
“நான் பாத்துக்கிறேன்” என்று அருள் சொன்னதும் கிருஷ்ணாவின் தோளில் இடித்தாள் கோதை. 
“ஓஹ்… இதுதான் இவ பிளானா…” அவளை பார்த்து புன்னகைத்தான் கிருஷ்ணா.
“அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டி இருக்கேன்.  தும்பை இலை, தும்பை பூ ரெண்டையும் இடிச்சு சாறு பிழிஞ்சு குடிக்க கொடுங்க. வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிடகொடுங்க. நாளைக்கு காலைல வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்லுங்க கசப்பு தன்மை உணர்ந்தாங்கன்னா விஷம் முறிஞ்சதுனு அர்த்தம். இல்லனா மருந்து கொடுக்கணும். எப்படியும் கால் வீக்கத்துக்கு மருந்து கட்டணும் நான் காலைல வந்து பாக்குறேன். இப்போ நீங்க கூட்டிகிட்டு போங்க”
“சரிங்க” என்றவன் அன்பழகியை கைத்தாங்கலாக பிடித்துக்கொள்ள அவள் கால்வீக்கம் மற்றும் கடி பட்ட இடத்தில் அதீத வலியால் காலை கீழே வைக்கக் கூட முடியாமல் அலறினாள்.
மறுகணம் அவளை கையில் ஏந்திக்கொண்டு அருள்வேல் வண்டியை நோக்கி நடக்க
“என்ன பண்ணுறீங்க?” வெக்கப்பட்டவாறே அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் அன்பழகி.
“உங்கண்ணன் என்னமா ரொமான்ஸ் பண்ணுறாரு. நீயும் இருக்கியே! லவ் பண்ணுறேன்னு சொல்லிக்கிட்டு ஒரு தடவையாவது என்ன நீ இப்படி தூக்கி இருப்பியா?” சிலிர்த்து எழ
“உனக்கு வாய் ஜாஸ்தி நடந்தே வா” என்ற கிருஷ்ணா ஓட்டம் பிடித்திருக்க, அவனை துரத்தலானாள் கோதை.

Advertisement