Advertisement

அத்தியாயம் 12
இரவு உணவுக்கு பின் அறைக்கு வந்த கிருஷ்ணாவின் எண்ணங்களை ஆட்கொண்டிருந்தாள் கோதை.
கோதை தன் மீது நம்பிக்கை வைப்பாளா என்றிருக்க, அவளே! அவள் அலைபேசியில் அவனது கட்டைவிரல் கைரேகையை பாஸ் வர்டாக வைத்து  அவன் பக்கமாக ஒரு அடி வைத்து முன்னேறி இருந்தது கிருஷ்ணாவின் மனதில் சந்தோச மழையை பொழிய வைத்திருந்தது.
தன் துணையை பற்றி முழுவதும் அறிந்து கொண்டு திருமணம் செய்து புரிந்துகொள்வது ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும் என்றால்? எதுவுமே! தெரியாமல் திருமணத்தில் இணைந்து அறிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் கூட சுவார்ச்சயம்தான்.
கிருஷ்ணாவின் சிந்தனையை கலைக்கும் விதமாக திபுதிபுவென உள்ளே நுழைந்தவள் “அப்பாடா தூங்கிட்டியோன்னு நினச்சேன்.. சரி சொல்லு.. உங்க அண்ணனுக்கு எப்போ? எப்படி கல்யாணம் ஆச்சு? உங்க அண்ணி ஏன் இங்க இருக்காங்க? என்ன அவங்க பேச மாட்டாங்களா?”
கோதை வந்த வேகத்துக்கு காதலனை சந்திக்க வந்த காதலியாக இருந்தால் இந்நேரம் தலைவனின் மடியில் தஞ்சமடைந்து முத்த மழையில் நனைந்து கொண்டிருப்பாள்.
வந்தவள் காதல் பார்வையோடு வந்திருந்தால் கிருஷ்ணாவுக்கு அந்த எண்ணம் தோன்றி இருக்குமோ! கேள்விகளோடு வந்தவளை ஏற, இறங்க பார்த்தவன்
“ஏன்டி நமக்கே! போன் பேசினவன கண்டு பிடிக்கிற வேலை இருக்கு இதுல இவங்க பிரச்சினை வேறயா?” அவன் பதிலில் கோபம் கொஞ்சமும் இல்லை. இவள் என்ன? ரகம் என்ற ஆராய்ச்சிதான் இருந்தது.
“யோவ் சொல்லுயா… நாம என்ன இப்போ தூங்க போறோமா? ஏதாவது பேசிகிட்டு இருக்குறதுக்கு உங்க அண்ணிய பத்தி சொல்லு”
“உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?” கிருஷ்ணா அழுத்துக்கொள்ள
“தெரியுதுல்ல அப்போ சொல்லு” கரகர என்ற குரலில் மிரட்டுவது போல் சொல்ல முயன்றாள் கோதை.
அன்பழகியை பற்றி கிருஷ்ணாவுக்கு தெரிந்த விடயங்களை கூறியவன் அன்று பஞ்சாயத்தில் நடந்ததை கூற
“அவன்தான் உங்கண்ணனுக்கு வில்லனா?” கிருஷ்ணாவின் பேச்சில் குறுக்கிட்ட கோதை முதுகுக்கு ஒரு தலகணையை கொடுத்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் மடியிலும் ஒரு தலகணையை வைத்துக்கொண்டு கதை கேட்க ஆரம்பித்தாள்.  
“நான் என்ன கே. பாலசந்தரா? நீ கமல் சாரா? நான் இங்க என்ன? சினிமா கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? வில்லன் எல்லாம் என்டர் ஆக அவன் ஒரு டம்மி பீஸு. அப்படினு தான் நானும் நினச்சேன்”
“அப்போ அவன்தான் வில்லனா?” ஆர்வமானாள் கோதை.
“இப்போ நான் சொல்லவா? வேணாமா?” பொய்யாய் முறைத்தான் கிருஷ்ணா.
“ரொம்ப பண்ணாத… சீக்கிரம் சொல்லு” அன்பழகியின் பிரச்சினைதான் என்ன என்று அறிந்து கொள்ளாமல் இன்றிரவு தூக்கம் வராது என்றிருந்தது கோதைக்கு.
“சரி அப்போ ஒரு முத்தம் கொடு”
கிருஷ்ணா உதடு குவிக்கவில்லை, கன்னத்தை காட்டவில்லை, மிக மிக சாதாரணமாக உரிமையோடுதான் கேட்டிருந்தான். அவனுக்கு அவள் கொடுக்கும் முத்தத்தை விட அவள் முகம் காட்டும் வெக்கங்களை ரசிக்க ஆசை எட்டிப்பார்த்திருக்க இப்படி திடிரென்று கேட்டால்தான் முடியும் என்று கேட்டிருந்தான்.
“ஒன்னு போதுமா?” சண்டிராணி கோதையிடம் க்ரிஷ்னாவின் ஆசைகள் நிறைவேறுமா? அவன் என்ன எதிர்பார்க்கின்றானோ! அதற்கு மாறாகத்தான் அவள் செய்வாள்.
“எனக்கு முத்தமே! வேணாம். போ….” என்றவனின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது.
“வேணாமா? சரி நீ மேல சொல்லு” என்றவளுக்கு கணவனின் ஆசைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. கதை கேற்கும் ஆர்வம் மட்டும்தான் அதிகரித்திருந்தது.
“ஏன் டி நீ இப்படி இருக்க?” கிருஷ்ணா பொய்யாய் முறைக்க, கோதை அவன் டி. ஷர்டை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு விடுவித்தாள்.
“ஏய் என்ன டி இப்படி பொசுக்குன்னு கிஸ் பண்ணிட்ட” அவள் அப்படி செய்வாள் என்று எதிர்பார்க்காவிடினும் கிருஷ்ணா அதிர்ச்சியடியவில்லை. இவள் இப்படித்தான் என்று ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்தான்.
“புருஷன் கேட்டா கொடுக்கணும் இப்படி வச்சிக்கிட்டு வஞ்சகம் பண்ணைக் கூடாது. சரி நீ கேட்டது கிடைச்சிருச்சே! இப்போவாச்சும் பஞ்சாயத்துல என்ன நடந்ததுன்னு சொல்லுறியா?”
“உன் தேவைக்கு என்ன வேணாலும் பண்ணுவ இல்ல” என்றவாறே கிருஷ்ணா கோதையின் மடியில் படுத்துக்கொண்டான்.
     
 அவன் முன்னுச்சி முடியை விரல்கொண்டு விளையாடியவாறே “அப்பொறம் என்ன ஆச்சு?” என்று கோதை கேட்க
அவள் மறுகையை பிடித்துக்கொண்டு விரல்களோடு விளையாடியவாறு அன்று நடந்ததை சொல்லலானான்.  
“என் பேர் கணபதிங்க எங்க ஊருல ஒரு டீ ஸ்டால் நடாத்தி வருகிறேன்க, முனீஸ்வரீ எனக்கு ஒரே அக்காங்க, எனக்கு இருக்குறது அக்கா மட்டும் தானுங்க…”
“தம்பி வளவள கொழகொழன்னு பேசாம விசயத்த சொல்லுப்பா…” கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் கூற
“அட தெளிவா சொல்லோணும் இல்ல. சொன்னா தானே! பஞ்சாயத்துல சரியான தீர்ப்பா சொல்லுவாங்க” என்றான் கணபதி.
“சரிப்பா சொல்லு” என்றார் செல்வராஜ்.
“என்ன பெத்த உடனே! ஆத்தா மூளை காய்ச்சல்னு படுத்து செத்து போச்சுங்க, அய்யன் இதோ! இவரை மாதிரி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டாருங்க. அந்த அம்மாவுக்கு எங்களை ஏத்துக்க மனசில்லைங்க. ஒவ்வொரு வீட்டுலையும் பத்துபாத்திரம் கழுவி, கூலி வேலை செஞ்சி என்ன வளர்த்தது படிக்க வச்சது எல்லாம் அக்கா தாங்க,
காலேஜுக்கு எல்லாம் போய் படிக்குற அளவுக்கு வசதியுமில்ல. எனக்கு படிப்பும் ஏறல. வெளியூருக்கெல்லாம் போய் வேல பார்க்க எனக்கும் இஷ்டமில்லங்க. எங்க அக்காக்கும் இஷ்டமில்லங்க. ஸ்கூல் முடிஞ்ச உடனே! ஊருல டீ கடைய ஆரம்பிச்சேனுங்க. அக்காக்கு ஊருக்குள்ளேயே! மாப்பிள்ளையும் பார்த்து கட்டிவச்சேனுங்க”
“அப்போ பாலமுருகனுக்கு பிறந்த பசங்க இல்லையா இவனுங்க?” முனீஸ்வரியின் கையில் தொங்கிக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனையும், பதிமூன்று வயது சிறுவனையும் பார்த்து ஊர்க்கார்கள் குசுகுசுவென பேச ஆரம்பித்தனர்.
என்ன நடந்திருக்கும் என்று பதினெட்டே வயதான அன்பழகி புரியாத முகபாவனையில் பார்த்திருக்க,
“என்னப்பா பாலமுருகா இந்த பசங்க உனக்கு பிறந்த பசங்க இல்லனு இந்த தம்பி சொல்லுது. அப்படி என்ன கட்டாயம் வந்துருச்சு இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட?” ஞானவேல் கேள்வி எழுப்ப ஊர் மொத்தமும் பாலமுருகனின் பதிலுக்காக காத்திருந்தனர்.
“அத நான் சொல்லுதென்க” என்று ஆரம்பித்த கணபதி… “இதோ இந்த சின்னவனுக்கு ஐஞ்சு வயசாக இருக்கும் போதே! மாமா காச நோயால செய்த்து போய்ட்டாருங்க, அவரால அக்காக்கு தொற்றி அக்காவ ரொம்பவும் சிரமப்பட்டுத்தாங்க காப்பாத்தி கர சேர்த்தேன். நல்ல வேல பசங்களுக்கு பரவல” என்றவனின் முகம் பாவமாய் இருக்க, அக்கா மேல் இவனுக்கு அவ்வளவு பாசமா? என்று ஊர் மக்கள் வியந்தனர்.
“சரிப்பா உன் குடும்பத்துக்குள்ள பாலமுருகன் எப்படி வந்தான்? அத சொல்லு முதல்ல” ஞானவேல் இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர கணபதியை பேச சொன்னார்.
ஐஞ்சு வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டுதான் டீ கடையா இருந்த எங்க கடைய டீ ஸ்டாலா உயர்த்தினோம். ஊருல எங்களுக்குனு மானம் மாறுவதை எல்லாம் இருக்குங்க ஐயா… அக்கா மூணு வேலையும் சாப்பாடு சமைச்சி கடைக்கு போடும். அப்படித்தான் எங்க பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. யார் வம்புக்கும் நாங்க போறதில்ல. இராத்திரில லாரிகள் வந்து நிறுத்தி சாப்பிடுவாங்க” வார்த்தைகளை கோர்த்து கோர்த்து தங்களை பற்றி யாரும் தவறாக நினைத்து விடக் கூடாதென்று கணபதி பேசுவது அங்கிருந்தவர்களுக்கு நன்றாகவே! புரிந்தது.
முனீஸ்வரீ வந்ததிலிருந்து அழுதுகொண்டிருந்தாளே! தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. சின்ன மகன் அன்னையின் பிடியை விட முயல்வதும் அவள் இறுக்கிப் பிடிப்பதுமாக இருக்க, மூத்தவன் ஏதோ! சினிமா பார்ப்பது போல் நின்றிருந்தான். 
“ரெண்டு நாளைக்கு முன்னாடி இவரு லாரி சாப்பிட வந்ததுங்க, அப்போ அக்கா சாப்பாடு கொடுத்துட்டு உள்ள போச்சு. என் கிட்ட வந்து இங்க தங்க இடம் ஏதாவது இருக்கானு கேட்டாருங்க, வழக்கமா வாறவரு தெரிஞ்சவரு தானேனு நானும் வீட்டு பக்கத்துல இருக்குற குடிசைல தங்க சொன்னேங்க, அது என் நண்பனுடையதுங்க. அதுக்கான காச வாங்கி அவனுக்கு காலைல கொடுக்கலாம்னு கல்லால வேற போட்டுட்டேனுங்க”
“சீக்கிரம் சொல்லு பா…” ஒரு பெருசு காதை குடைந்தவாறே கத்த
“அப்பொறம் நான் தூங்க போய்ட்டேனுங்க, இவரு இவரோட கூட்டாளியோட சேர்ந்து குடிச்சிருக்காரு போல, குடிச்சவரு குடிச்சிட்டு தூங்கோனும் இல்ல. எங்க வீட்டு கதவை தட்டி தண்ணி கேட்டு இருக்காருங்க. அக்காதான் கதவை திறந்திருக்கா..கதவை திறந்தவள மானபங்க படுத்திட்டாருங்க, காலைல பஞ்சாயத்தாகி போச்சுங்க, அக்கா கழுத்துல தாலி கட்ட சொல்லிட்டாங்க, இதுதாங்க நடந்ததுங்க”
முத்தழகிக்கு அதிர்ச்சி எல்லாம் இல்ல. இப்படி ஏதாவது தான் நடந்திருக்கும் என்று தான் ஊகித்தாள்.
“அட வெக்கம் கெட்ட மனிஷா குடிச்சா இப்படியா பண்ணுவ? உன்ன நம்பி உன்ன உன் வீட்டுக்குள்ளேயே! விட முடியாம போய்டுமே! யா…” என்று பாலமுருகனை ஊர் தூற்ற ஆரம்பித்திருக்க, கல்லாய் நின்றிருந்தார் அவன்.
 “ஏன்மா முத்தழகி பாதிக்கப் பட்டதும் ஒரு பொண்ணுதான். இது உன் வாழ்க பிரச்சினையும் கூட, இதுல நீதான் தீர்ப்பு சொல்லணும். உன் தீர்ப்பை வச்சுதான் நான் தீர்ப்பு சொல்லுவேன்” என்றார் செல்வராஜ். 
இடையில் குறுக்கிட்டு “அவளும் என் மனைவிதான் இங்கதான் இருப்பா…” பாலமுருகன் முடிவாக சொல்ல
“இருக்குற நிலம் உன் மனைவி முத்தழகி பேர்ல இருக்கு. இதுல இந்த குடும்பத்தை நீ எப்படி இங்க தங்க வைக்க போற?” செல்வராஜ் கேள்வி எழுப்ப பாலமுருகனிடம் பதில் இல்ல.
“அவங்க தம்பியோட கடை இருக்கு வருமானம் வருது சோத்துக்கு ஒன்னும் கஷ்டப்படலையே! அவங்க அங்கேயே அவங்க ஊர்ல இருக்கட்டும்” என்று முத்தழகி சொல்ல
“அது எப்படிங்க முடியும்?” கணபதி எகிறிக்கொண்டு வர
“வேணும்னா எனக்கும் என் புருஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு நான் எழுதிக் கொடுத்துடுறேன்” முத்தழகி இதுதான் முடிவு என்று பேச 
“ஐயோ அக்கா அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க, கல்யாண வயசுல பொண்ண வச்சிக்கிட்டு இப்படி பேசாதீங்க, அவர் தலைமையில நம்ம பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கணும்” பாலமுருகனை பார்த்தவாறு கண்ணீரோடு கதறினாள் முனீஸ்வரி. 
பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் தன்னை பற்றி மட்டும் சிந்திக்காமல் அன்பழகியையும் பற்றி சிந்தித்து பேசுகிறாள் என்று முனீஸ்வரியை பற்றி நல்லெண்ணம் கொண்டனர் ஊர்க்கார்கள்.
“அந்த பொண்ணு சொல்லுற பேச்சும் வாஸ்தவம் தானே! புருஷன பிரிஞ்சி நீ வாழலாம். உன் பொண்ணுக்கு நல்லது, கெட்டதுனா, அப்பா வேணாமா?” செல்வராஜ் எடுத்துக் கூற ஊர் மக்களும் முத்தழகிக்கு புரியவைக்க முயன்றனர்.
“அவரு எப்படியும் வண்டி ஓட்டிட்டு ஊருக்கு வர மாட்டாரு. எங்க வயித்து பசிக்கு நாமதானே! பாத்துக்கிறோம். பிரிச்சி விட்டுட வேணாம். அவர் அந்த குடும்பத்தோட அந்த ஊர்ல இருக்கட்டும். எம்பொண்ணுக்கு கல்யாணம் வைக்கும் போது தகவல் சொல்லுறேன். அப்பாவா வந்து கடமையை மட்டும் செய்யட்டும்” என்று முத்தழகி பேச்சை முடித்துக்கொண்டாள்.
“அதான் உன் பொண்டாட்டி சொல்லிட்டாளே! உனக்கு புள்ளனா அது அன்பழகிதான் அந்த கடமைல இருந்து நீ தவறக் கூடாது பாலமுருகா. இப்போ நீ இந்த குடும்பத்தை கூட்டிகிட்டு போலாம்” என்று செல்வராஜ் தீர்ப்பு சொல்ல
“என்னங்கய்யா இது?” கணபதி கேட்க
“இங்க பாருங்க தம்பி உங்க அக்காக்கு நடந்தது அநியாயம்தான். நடந்தது நடந்து போச்சு என்று சொல்லி ஆறுதல் சொல்லுறதால நடந்தது இல்லனு ஆகிடாது. உங்க அக்காக்கு நீங்க இருக்கீங்க. இந்த அம்மாக்கும் பொண்ணுக்கும் யாரு இருக்காங்க? அந்த பொண்ணு வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சு பாரு” என்று ஞானவேல் சொல்ல
அன்பழகியை ஒரு பார்வை பார்த்த கணபதி “சரிங்க ஐயா பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு நான் அமைதியா போவுதேன். என்னாலையும் என் அக்காவாலையும் இந்த குடும்பத்துக்கு எந்த பிரச்சினையும் வேணாம்” அங்கிருந்தவர்களை வணங்கி விட்டு முனீஸ்வரையும் அவளுடைய மகன்களையும் அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.
  
 “யோவ் புருஷா என்னய்யா இது? மாஸான பஞ்சாயத்து ஸீன்ல உங்கண்ணன் எண்டராகி உங்கண்ணிய கல்யாணம் பண்ணி இருப்பாருனு பார்த்தா இப்படி சப்பென்று ஆகிருச்சே! அப்போ உங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் எப்படி ஆச்சு? அவங்க லவ் பண்ணலயா?”
“நான் அப்போவே! சொன்னேன் இது ஒன்னும் சினிமா கத இல்லனு. அந்த சம்பவம் நடக்கும் போது அண்ணிக்கு பதினெட்டு வயசு. அது நடந்து நாலு வருஷமாச்சு. அண்ணனுக்கும், அண்ணிக்கும் கல்யாணம் நடந்து ஆறு மாசம்தான் ஆச்சு”
“ஓஹ்… அப்போ அந்த நாலு வருஷத்துலதான் அவங்களுக்குள்ள காதல் மலர்ந்ததா?” கோதை ஆர்வமாக
அவள் தலையில் தட்டியவன் “அவங்க லவ் பண்ணாங்கன்னு நான் சொன்னேனா?”
“லவ் பண்ணலயா? அப்போ எப்படி கல்யாணம் பண்ணாங்க?” யோசனையில் விழுந்தாள் கோதை.
 அன்பழகியும் தனது திருமணத்தை பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
“என்ன கணபதி நாம ஒன்னு நினச்சா இங்க ஒன்னு நடக்குது?” முனீஸ்வரீ சிடுசிடுக்க,
“விடுவிடு எங்க போய்டுவாளுங்க பார்த்துக்கலாம்”
“என்னத்த பார்த்துக்க போற? நான் பாட்டுக்கு நாலு லாரி டைவர் கூட படுத்து நாலு காசு சம்பாரிச்சு கிட்டு இருந்தேன். நீ தான் அவன குடிக்க வச்சி என் கூட கோர்த்து விட்டு கழுத்துல தாலியையும் கட்ட வச்ச. என்னமோ! சொத்து சுகத்தோடு  இருக்கலாம்னு பார்த்தா இங்க ஒன்னத்தையும் காணோம். இருக்குற வீடும் குட்டியூண்டு நிலமும் வேற அவன் பொஞ்சாதி பேருல இல்ல இருக்கு” நொடித்தாள் முனீஸ்வரி.
“ஊரு பக்கமே! வராம பொண்ணு கல்யாணத்துக்கு காசு சேக்குறான் உன் புருஷன்”
“அவனையெல்லாம் என் புருஷன்னு சொல்லாத”
“ஏன் என் கூட படுக்குறது போல இல்லையாகும்” வண்டியில் தான் பெத்த இரு மகன்களும் அமர்ந்திருப்பதையும் பொருட்படுத்தாது கணபதியோடு வண்டியில் முன்னாடி அமர்ந்தவாறு அவன் செய்யும் சில்மிஷங்களை சிணுங்கியவாறு பதில் பேசிக்கொண்டிருந்தாள் முனீஸ்வரீ.
பஞ்சாயத்தில் கூறியது போல் முனீஸ்வரியும் கணபதியும் அக்கா தம்பி கிடையாது. கணபதி டீ ஸ்டால் வைத்திருப்பது உண்மை. கடையோடு மாடியில் வீடு. பக்கத்தில் அறைகளை கட்டி இரவில் வரும் லாரிகளை வாடகைக்கும் விடுவான்.
முனீஸ்வரியின் வீடு கடையோடு ஒட்டி இருக்க ஒரே வீடு போல்தான் தெரியும். ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் என்பதால் இவர்களின் உறவும் ஊராருக்கு தெரியாது. இது போக, இரவில் லாரி டைவர் யாரவது பெண் தேவை என்று வந்து நின்றால் கணபதி தயங்காமல் முனீஸ்வரியை விலை பேசி விடுவான்.
பாலமுருகன் அளவாக குடிப்பவன். கிளீனர் மாணிக்கம் போதையில் மிதப்பவன். மாணிக்கம் குடித்து விட்டு பாலமுருகன் அன்பழகியின் திருமணத்துக்காக ஒரு லட்சம்வரை காசு சேமித்து வைத்திருப்பதை கணபதியிடம் உளறி இருக்க, அதை கொள்ளையடிக்க எண்ணி பாலமுருகனின் சாப்பாட்டில் போதை மருந்தை கலந்து கொடுத்து அவர் மயங்கிய பின் தூக்கிக் கொண்டு வந்து முனீஸ்வரியின் படுக்கையில் கிடத்தி இருந்தான் கணபதி.
போதை தெளிந்ததும் அழுது கொண்டிருக்கும் முனீஸ்வரியைக் கண்டு என்ன நடந்தது என்று புரியாமல் பாலமுருகன் முழிக்க கணபதி பாலமுருகனை அடிக்க ஆரம்பித்திருக்க, தடுத்தாள் முனீஸ்வரி.
பணத்தை கொடுத்து செட்டில்மென்ட் செய்யலாம் என்று மாணிக்கம் பேச பாலமுருகன் சம்மதிக்கவில்லை. கூட்டம் கூட வேறு வழியில்லாது முனீஸ்வரியின் கழுத்தில் தாலி கட்ட வேண்டிய நிலை.
“நாம நினைச்சது ஒன்னு நடப்பது ஒன்னு” என்று கணபதியும் முனீஸ்வரியும் என்ன செய்வது என்று முழித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் கணபதிக்கு அந்த யோசனை தோன்றியது.
உடனே! கிளம்பி பாலமுருகனின் ஊருக்கு வந்துவிட்டான். முனீஸ்வரீ தன் அக்கா என்று கதை சொல்லி அவளை அங்கு தங்க வைத்து வீட்டையும் நிலத்தையும் எழுதி வாங்கலாம் என்று நினைத்தான்.
அது நடக்கவில்லை. ஆனால் அவன் கண்ணில் தங்க விக்கிரகம் போல் இருந்த அன்பழகி விழ நல்லவன் போல் பஞ்சாயத்துக்கு அடங்கியவனாக அமைதியாக முனீஸ்வரையை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றான். சென்றவன் ஒன்றும் அமைதியாக இருக்கவில்லை. அவனுக்கு அன்பழகி வேண்டும். அதற்கு யார் குறுக்காக வந்தாலும் சமாதி கட்ட தயாராக இருக்க முதலில் முனீஸ்வரியை தயார் படுத்தினான்.
“உன் புருஷனுக்கு சும்மா செலையாட்டம் பொண்ணு. அவன் கிட்ட நல்லமுறையா நடத்துகிற, அவளை எனக்கு கட்டி வைக்கிற”
“ஐயே.. ஆசையா பாரு.. தொரைக்கு நாங்க கசக்குதாக்கும் கன்னி பொண்ணு கேக்குதோ…” முனீஸ்வரி கணபதியின் முகவாயில் இடிக்க,
“யாருடி இவ அவளை போல ஒருத்தி இங்க இருந்தா… தொழில் ஓஹோ…னு இரும் டி… அதுக்குதான்” என்றான் விஷமமாக. 
வேறு எந்த பிரச்சினையும் வருவதற்குள் அன்பழகிக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முத்தழகி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள்.
பாலமுருகன் முனீஸ்வரியை திருமணம் செய்த முறையை கேள்விப்பட்டு சில வரன்கள் முறிந்து போக, சிலர் அதிகமாக சீதனம், சீர்வரிசை என்று பேச்செடுத்து வீட்டையும் நிலத்தையும் மாப்பிள்ளை பெயரில் எழுதி கேட்டனர்.
மாப்பிள்ளையின் பெயரில் எழுதிக் கொடுத்து திருமணத்துக்கு பின் மகளை விரட்டி விட்டால் அவள் நிலைமை என்ன ஆவது என்ற அச்சம் முத்தழகிக்கு மேலோங்க, வேறு வரன்களை பார்கலானாள்.
ஒருவாறு ஒருவரன் கூடி வர திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மாப்பிள்ளை அழைத்து வரப்பட்டு விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் கோவில் மண்டபத்தில்தான் மாப்பிள்ளை குடும்பம் தங்க வைக்கப்பட்டார்கள்.
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மாப்பிள்ளை தப்பாக நடக்க முற்பட்டதாக பஞ்சாயத்தாகி திருமணம் நின்று போனது. திருவிழா நேரம் வேறு. எந்த ஊர் பெண்ணென்னும் தெரியவில்லை. வெளியில் தெரிந்தால் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று அந்த தந்தை கேட்டுகொடத்துக்கு இணங்க பிரச்சினை பெரிதாக வில்லை. அன்பழகியிக்கு மாப்பிள்ளை தேடும் படலம்தான் கிடப்பில் கிடந்தது.
“நாலு வருஷமா நீயும் இங்க இருந்துகிட்டே! அவளுக்கு பாக்குற மாப்பிளையை துரத்தி விடுற, இந்த தடவ கல்யாணத்தையே! நிறுத்திட்டு, பலே! ஆள்தான் போ..” முனீஸ்வரி ஆதங்கமாக பேச
“வாய் சவுடால் விடுறத விட்டுபுட்டு உன் புருஷன் கிட்ட நைசா பேசி எனக்கு அவன் பொண்ண கட்டி வைக்கிற வழிய பாருல” கணபதியின் குரல் கொஞ்சம் கோபமாகத்தான் ஒலித்தது.
நான்கு வருடங்களாக அவனும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றான் பாலமுருகன் அசைந்துகொடுப்பதுபோ தெரியவில்லை.
“புருஷனாம் புருஷன் கிட்ட கூட வர மாட்டேங்குறான்” முணுமுணுத்தகவாரே அகன்றாள் முனீஸ்வரீ.
காதில் தேன் வந்து பாய்ந்தது போல்தான் கணபதிக்கு முத்தழகியின் மரண செய்தி கிடைத்தது.
“ஈஸ்வரி கிளம்பு கிளம்பு… உன் சக்களத்தி மண்டைய போட்டுட்டாளாம். அங்க போறோம். எல்லா காரியங்களையும் எடுத்து செய்யிறோம். பொண்ண இங்கன கூட்டிட்டு வாரோம். என்ன புரிஞ்சுதா?”
முத்தழகியின் இறுதிக் காரியங்களை கணபதி முன்னின்று நடாத்த, பாலமுருகன் சுயநினைவே! இல்லாமல் இருந்தான்.
மூன்று நாட்கள் வீட்டோடு தங்கி அழுதவாறு இருக்கும் அன்பழகிக்கு ஆக்கிப்போட்டு, விளக்கு பற்ற வைத்து கணபதியின் கண்ணசைவில் எல்லாவற்றையும் சரியாக செய்தாள் முனீஸ்வரி.
நாலாவது நாளே! பெட்டிபடிக்கையை கட்டிக்கொண்டு “ஆத்தா நாங்க ஊருக்கு கிளம்பனும். நீயும் எங்க கூட வந்துடு. உனக்கு இங்கன யாரு இருக்கா?” என்று நயனமாக பேச அன்பழகி அசையவில்லை.
இது வேலைக்கு ஆகாது என்று கணபதி செல்வராஜை சந்தித்து தாங்கள் ஊருக்கு செல்வதாகவும் அன்பழகி இங்க தனியாக இருக்க வேண்டாம் அவளையும் அழைத்து செல்வதாகவும் கூற,
“நல்ல விஷயம்தான் தம்பி கூட்டிட்டு போங்க, ஆனா உங்க மனைவியா கூட்டிட்டு போறதா இருந்தா போங்க” என்றார் செல்வராஜ்.
ஞானவேலுக்கும் அதுதான் சரி என்று பட செல்வராஜின் கூற்றை ஒத்துக்கொண்டார்.
கணபதிக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது.
அன்பழகியை இங்கிருந்து அழைத்து செல்லலாம். சென்ற பிறகு தான் வைப்பதுதான் சட்டம், தான் நினைப்பதுதான் நடக்கும் என்றெண்ணியவனுக்கு பஞ்சாயத்து தலைவர்களே! பெண்ணை திருமணம் செய்துகொண்டு போ என்றால் விடுவானா?
சற்று நேரம் யோசிப்பது போல் பாவனை செய்தவன் “அவங்களும் எனக்கு அக்காதானுங்க, அக்கா பொண்ண கட்டிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. அந்த புள்ள ஒத்துக்கணும். பதினாறாவது நாள் காரியம் கூட முடியலையே!” ரொம்பவும் நல்லவன் போல் பேச மனம் குளிர்ந்தார் செல்வராஜ்.
கைக்கெட்டும் தூரத்தில் மாப்பிள்ளையை வைத்துக்கொண்டு முத்தழகி ஊர் பூரா மாப்பிள்ளை தேடி இறந்தும் விட்டாளே! என்று கவலையும் கொண்டார்.
“சரிப்பா பதினாறாம் நாள் காரியம் முடிஞ்ச கையோட கல்யாணத்த வச்சிக்கலாம்”
“சரிங்க ஐயா அப்போ.. நான் ஊருக்கு கிளம்புதேன். அக்கா இங்கன இருக்கட்டும்” என்றவன் முனீஸ்வரியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கிளம்பி இருந்தான்.
அன்பழகிக்கு விஷயம் பகிரப்பட்ட அதை அவள் தகவலாக எடுத்துக் கொண்டாலே! தவிர சந்தோசஷமடையவில்லை.
கண்குளிர திருமணத்தை பார்த்து மனநிறைவோடு வாழ்த்த அன்னையில்லாத போது யாருக்காக இந்த திருமணம்? நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டாள். பாலமுருகன் ஊரிலையே! இல்லை. மாணிக்கத்தோடு சவாரிக்கு கிளம்பி இருந்தார்.             
பதினாறாம் நாள் காரியமும் முடிய இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்று இருக்கும் நிலையில் எல்லா ஏற்பாடுகளும் தடல்புடலாக நடைபெற்றுக்கொண்டிருக்க, அன்பழகி யாருக்கு வந்த விருந்தோ! என்று நடப்பவைகளில் ஒட்டாமல் ஒதுங்கி நின்றிருந்தாள்.
இந்த நேரத்தில் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று குலதெய்வத்துக்கு பூஜை செய்ய அருள்வேல் ராஜா ஊருக்குள் காலடி எடுத்து வைத்தான்.

Advertisement