Advertisement

அத்தியாயம் 11
மனிதர்கள் தோன்றிய காலம் முதல் மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்று உண்டெனில் அந்த ஒன்று அஸ்க். லஸ்க். ஏமோ. லவ். இஷ்க். ப்ரேமம். காதல். ? மட்டும் தான்.
ஆணுக்கு பெண். பெண்ணுக்கு ஆண் என்று கடவுள் படைத்து ஒருத்தருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குள் காதல் என்ற உணர்வை புதைத்தான்.   
மனிதன் பலதுறைகளில் முன்னேற்றம் அடைந்தாலும் ஏன் நாம் காதலிக்கின்றோம் என்ற ஒரு விஷயத்தை கண்டறிய முடியவில்லை. எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது… எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது? தெரியாது.
விபத்தா? விதியா? தெரியாது.
காதல் இந்த வயதில் மட்டும்தான் தோன்றும் என்றும் யாரும் கூறவில்லை. தன் இணையை காணும் பொழுது இதயம் படபடத்து, கைகள் வியர்ப்பதும், முகம் நாணம் கொள்வதும், அவள்{ன்} பசியின்றி தூக்கமின்றி வாடுவதும் ஏன் என்றும் புரியவில்லை. 
எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்! இதை அறிவியல் பூர்வமாக பார்த்தால் “காதல்” என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் “காதல்” என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள்.
பருவ வயதில் காதல் மலர வில்லை என்றால்தான் குறையாக பார்க்க வேண்டும். குற்றமாக அல்ல.
கிருஷ்ணாவுக்கு மீசை முளைக்கும் போதே ஆசைகள் முளைக்க ஆரம்பித்திருக்க, அவன் குடும்ப பின்னணியும், செல்வச்செழிப்பும் அவனை சுற்றி எந்த நேரமும் பெண்கள் கூட்டம் இருந்துகொண்டுதான் இருந்தனர்.
காளையர்கள் கல்லூரிக்கு வருவதே காதலிக்க என்றிருக்க, கிருஷ்ணா படித்த கல்லூரியை பற்றி சொல்லவே வேண்டாம். அங்கு படித்தவர்கள் அத்தனை பேரும் ராஜா வீட்டு கன்றுக் குட்டிகளாகிப்போக கலாச்சாரத்தை கிஞ்சத்தும் மதிக்காத மனப்பாங்கை கொண்டிருந்தவர்கள்.
காதலுக்கும் காமத்துக்கு வித்தியாசம் தெரியாமல் இனக்கவற்சியால் தூண்டப்பட்டு,  காதலிப்பதே! கூடலுக்காகத்தான் என்பது போல் பிரேக் அப், பிக் அப் என்ற கொள்கையோடு சுற்றி திரிந்தவர்கள்.
இவர்களுக்கு மத்தியில் உண்மையான காதலை காண்பதும் கடினம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கிருஷ்ணா எந்த பெண்ணிடமும் வரம்பு மீறி பழகவில்லை. நேற்று என் நண்பனின் காதலி இன்று என் காதலியா? எனும் பொழுது கொஞ்சம் மனம் கோணத்தான் செய்தது. என்ன இது? என்று அவனையறியாமலே! மனதுக்குள் ஒருவித அருவருப்பு இருக்க,  அப்படிப்பட்ட பெண்களோடு எட்ட நின்று பழகலானான்.
சுய தேவைக்காக எந்த பெண்ணிடமும் போய் வலுக்கட்டாயமாக காதலிக்கிறேன் என்று வற்புறுத்தவும் இல்ல. அதற்கு ஒரு முக்கிய காரணம் தனது அன்னையின் கண்ணீர்தான் என்றால் பொய்யுமில்லை. ஒரு பெண் ஏமாற்றப்பட்டால், வலுக்கட்டாயமாக ஒரு உறவுக்குள் இழுத்து வரப்பட்டால் எந்த மனநிலையில் இருப்பாள். என்று அன்னையை பார்த்து புரிந்துகொண்டவனுக்கு எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணை கஷ்டப்படுத்த எண்ணம் வரவில்லை.
அவன் எந்த தப்பு செய்தாலும் உறுதுணையாக நின்று அவனை காப்பாற்றி விடக் கூடி தந்தை இருந்தும், தந்தை என்ன எதிர்பார்கிறாரோ! அதற்கு நேர் எதிராகவே! செய்து பழக்கப்பட்டவன் கிருஷ்ணா. அதனாலயே! எந்த தப்பு தண்டாவுக்கும் அவன் செல்லவில்லை.
அந்த நேரத்தில் மாலினியும் அவன் வாழ்க்கையில் சரியாக நுழைந்திருந்த சமயம் அவளை வெறுப்பேற்ற பெண்களோடு சுற்றி திருந்தானே! தவிர யாருடனும் அவன் மனம் ஒட்டவில்லை. தனுஷை தவிர நண்பனாக யாரையும் மனம் ஏற்றுக்கொள்ளவுமில்லை. முழுமனதாக நம்பவுமில்லை.
அர்ஜுன் பால்ய வயது சிநேகிதன் என்று மறைத்து எதிரிகள் போல் நாடகமாடி மாலினியை அர்ஜுனோடு சேர்த்து வைக்கும் முயற்சியில்தான் இருந்தான்.
காலேஜில் காதல் ஒரு பொழுது போக்காக பார்த்தவனுக்கு நண்பனின் காதல் பிரம்மிப்பைத்தான் கொடுத்தது.
“அப்படி என்னதான் இருக்கோ!..” என்று அலுத்துக்கொண்டவனுக்கு தனக்காக பிறந்தவள் எங்கு இருப்பாளோ! என்ற எண்ணம் தோன்றாமலும் இல்லை.
கோதையை பார்த்த நொடி பார்த்தவாறே இருந்தவனுக்குள் இதயம் பட படக்க “இவள் தான் அவளோ!” என்ற ஆசை எட்டிப்பார்க்க அவளிடம் பேச முயற்சி செய்தான்.
அவள் பெயரை அறிந்துகொண்டு எவ்வளவு ஆனந்தம் அடைந்தானோ! அதை விட ஊமை என்று அறிந்து அதிர்ச்சியடைந்தவன் இவள் தனக்கானவள் தானா? இது சரிவருமா? என்று ஒரு நொடி குழம்பினான்.
மறுநொடி அவன் இதயம் சொன்னதை கேட்டவனாக, அவளோடு பேசிப் புரிந்துகொள்ளலாம் நல்ல புரிதல்தான் கல்யாணத்துக்கு அஸ்திவாரமே! காதலிப்பது கல்யாணம் செய்யும் எண்ணத்தில் தானே! அவளுக்கும் தன்னை பிடித்திருக்க வேண்டுமே! இந்த அலைபேசி உரையாடலும் இந்த இரண்டு வருட விலகலும் ஒருவரை ஒருவரை புரிந்துகொள்ள உதவும் என்றுதான் அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு அமேரிக்கா பறந்தான்.
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, நம்பிக்கை வைத்து, இறுதிவரை என் வாழ்க்கை உன் கையில் என்ற உணர்வு தானாக தோன்றுவதே! காதலின் உச்ச கட்டம். அலைபேசி உரையாடல் கூட அரைகுறையாக இருந்த நிலையில் “எனக்கு திருமணம். நீ வா” என்ற குறுந்செய்தி கிருஷ்ணாவுக்கு ஆயிரம் அர்த்தங்களை கற்பித்திருக்க, தன்னை காதலிப்பவளை கரம்பிடித்தபின் வரும் பிரச்சினைகளை சமாளிக்கலாம் என்று முடிவு செய்துதான் சற்றும் யோசிக்காமல் கோதையின் கழுத்தில் தாலியை கட்டி இருந்தான்.
தாலி கட்டிய மனைவி யார் நீ என்று கேட்ட பொழுது கூட அவளை சந்தேகம் கொள்ளவில்லை. அவனுக்கு குறுந்செய்தி வந்த அலைபேசி எண் யாருடையது என்று அறிந்து கொண்டவனுக்கு பெரும் அதிர்ச்சி.
கோதை கண்ணபிரான் என்ற பெயரில் இருந்த அந்த அலைபேசி எண் அவன் அமேரிக்கா சென்று ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வர, எதற்காக இவள் நடிக்கிறாள் என்ற கோபம் கிருஷ்ணாவின் மனதில் தலை தூக்க கழுத்தை பிடித்திருந்தான்.
ஏதொ ஒரு காரணத்துக்காக யாரோ! ஒருவர் கோதையின் கழுத்தில் தன்னை தாலி கட்ட வைத்திருக்கின்றான்{ள்}. ஒரு அந்நியனை உடனடி கணவனாக ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் கோதை இவ்வாறெல்லாம் செய்கிறாள் என்று கிருஷ்ணா விட்டுக்கொடுத்து போக, அவன் அலைபேசி வழியாக வந்த செய்தி அவன் கோபத்தை தூண்டி இருந்தது.
அவனோடு பேசிய எண் கோதையின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக அறிந்த நொடி தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற கோபம்தான் கிருஷ்ணாவை ஆட்கொண்டது.
ஒரு ஆணால் பெண் ஏமாற்றப்பட்டால் மட்டும்தான் வலிக்குமா? ஒரு பெண்ணால் ஆண் ஏமாற்றப்பட்டால் வலிக்காதா? அதுவும் காதலிக்கும் பெண் ஏமாற்றினால்? சற்றும் யோசிக்காமல் மூர்க்கத்தனமாக கோதையின் கழுத்தை நெறிக்கலானான் கிருஷ்ணா.
மூச்சு விட முடியாமல் பேச்சற்று போனவள் அவன் கையில் அடித்தும் அவளை விடவில்லை அவன்.
“அங்க என்ன டா பண்ணுறீங்க?” வத்சலா ஜன்னல் புறமாக குரல் கொடுக்கவும் கோதையின் கழுத்தை கட்டிக்கொண்டவன் “பேசிக்கிட்டுதான்ம்மா இருக்கோம்”
கோதை க்ரிஷ்ணாவிடமிருந்து திமிறி விலக முயற்சிப்பதும் கிருஷ்ணா அவளை இறுக்கி அணைத்தவாறும் நிற்பதும்தான் தூரத்திலிருந்த பார்த்த வத்சலாவுக்கு தெரிந்தது. ஏதோ சின்னன் சிறுசுகள் விளையாடுகிறார்கள் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
“சுக்கு காபி குடிக்கிறியா?”
“இப்போ ஒன்னும் வேணாம்” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு சென்று யார் கண்ணிலும் படாதவாறு வீட்டின் ஈசான மூலையிலிருந்த மாமரத்தில் சாய்க்க, கோதையின் முதுகும், தலையும் மரத்தில் நன்கு மோதியதில் வலியெடுத்தது.
“என்ன பண்ணுற? வலிக்குது?” என்றவளின் கண்களின் ஓரம் நீர் நிறைந்திருந்தது.
“எனக்கு வலிக்கிறத விடவா?” என்றவனோ! இதயத்தை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்க,
கலங்கிய கண்களோடு அவனை ஏறிட்டவள் “நானா என்ன காதலிக்க சொன்னேன். என் கழுத்துல தாலி கட்ட சொன்னேன்” என்று விட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
கிருஷ்ணாவுக்கு வந்த கோபத்தில் அவள் முகத்தை அழுத்திப் பிடித்தவன் “உன் குட்டு உடைஞ்சி போச்சு. நீ தான் எனக்கு போன்ல பேசினதா ஆதாரம் இருக்கு”
“கைய எடு முதல்ல, வலிக்குது” அவன் கையை பிடித்து இழுத்தவாறே “என்ன ஆதாரம்?” சற்று குரலை உயர்த்தி கோபமாகவே! கேட்டாள் கோதை.
“உன் மொபைல் எங்க?” தீர்க்கமாகவே! பார்த்தான் க்ரிஷ்னா.
தான் எப்பொழுதும் கழுத்தில் மாட்டியிருந்த சிறு பையிலிருந்து அலைபேசியை எடுத்து நீட்டியவள் கோபமாக கையை கட்டிக்கொண்டு அவனையே! பாத்திருக்க,
“பாஸ்வார்ட்” என்றவன் அவளை ஏறிட
“உன் இடது கை கட்டைவிரலை வை திறக்கும்” என்றவளின் பார்வையின் அர்த்தம் என்ன என்று கிருஷ்ணாவுக்கு சுத்தமாக புரியவில்லை.
அவன் கட்டை விரல் கைரேகையை எப்பொழுது எடுத்தாள்? ஏன் எடுத்தாள்? எதற்காக அதை பாஸ்வர்டாக வைத்திருக்கிறாள்? என்று கிருஷ்ணாவின் மனதில் கேள்விகள் முளைக்கும் நேரம்
“நீ என்ன காதலிக்கிறதா சொன்ன ஒரே காரணுத்துக்காக உன்ன முழுசா நம்பி நீ கட்டின தாலிக்கு மரியாதை கொடுத்து அன்னக்கி மண்டபத்துல உன்ன பத்தி எதுவும் பேசல. கல்யாணம் பண்ணா ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சிக்கணும் நான் இப்படித்தான் அத நீ புரிஞ்சிக்கணும் எங்குறதுக்காகத்தான் ஓவரா எல்லாம் பண்ணேன். என்னோட எல்லா ரகசியம் நீ தெரிஞ்சிக்கணும் என்றுதான் உனக்கு தெரியாம நீ தூங்குற நேரம் உன் கட்டை விரல் ரேகையை என் பாஸ்வர்டாக வச்சேன். நான் உன் கிட்ட எந்த பொய்யும் சொல்லல” என்ற கோதையின் முகம் வலியில் சுருங்கி இருந்தது.
கிருஷ்ணாவை காதலிக்கிறாயா? என்று கேட்டால் அவளிடம் நிச்சயமாக பதிலில்லை. ஆனால் அவனை பிடித்திருந்தது. ஒரே ஒருநாள் பார்த்து காதல் கொண்டு இரண்டு வருடங்களாக காதலித்து தனக்கு திருமணம் என்றதும் எந்த பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை என்று வந்து நின்றவனை பிடிக்காமல் போகுமா?
இதுவே! வா நாம ஓடிப்போகலாம் என்று அழைத்திருந்தால் கன்னத்தில் பளார் என்று கொடுத்து விரட்டி விட்டிருப்பாள். என்னதான் சி.எம் பையனாக இருந்தாலும் எது வேண்டுமானாலும் நடக்கக் கூடும் என்று தெரிந்தும் அவள் வீட்டார் முன்னைலையில் தாலி கட்டவும் ஒரு தைரியம் வேண்டும்.
அந்த பிடித்தம்தான் அவனை காதலித்ததாக வீட்டார் குற்றம் சொன்ன போதும் மறுத்து பேசவே தோன்றவில்லை.
காதலிக்கும் அத்தனை பேரும் திருமணத்தில் இணைகிறார்களா? என்று கேட்டால் இல்லை. திருமணத்துக்கு பிறகு வரும் காதல் தானே! நிலையானது. அதனால்தான் கிருஷ்ணாவை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டாள். ஆனால் அவள் குறும்புத்தனமும், துடுக்குத்தனமான பேச்சும் கிருஷ்ணாவின் கோபத்தைத்தான் தூண்டி இருந்தது.
அழுது விடுவேன் என் என்றிருந்த கோதையின் முகத்தை பார்த்து க்ரிஷ்னாவுக்கே பாவமாக இருக்க, அவள் பேச்சில் ஒன்றை புரிந்து கொண்டான்.
அவள் தன்னை ஏமாற்ற நினைத்திருந்தால் ஒரு பொழுதும் அவளது பெயரில் சிம்மை வாங்கி இருக்க மாட்டாள் என்று.
அவன் கட்டைவிரல் ரேகையை பாஸ் வார்டாக வைத்தது உள்ளுக்குள் குஷியாக கோபம் வேறு பறந்தோடி இருந்தது. 
“சரி வா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவளை அழைத்துக் கொண்டு பின்னாடி தோட்டத்திலிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தவன் அவளது அலைபேசியோடு தனது அலைபேசியையும் அவளிடம் கொடுத்து அமெரிக்காவிலிருக்கும் இருக்கும் பொழுது அவள் போல் யாரோ! தன்னிடம் பேசிய உரையாடலை காட்டினான்.
பொறுமையாக படித்தவள் “யாரு இப்படி பண்ணி இருப்பாங்க?”
“சிம் உன் பேர்லதான் இருக்கு”
“ஆனா அது என் நம்பர் இல்லையே! வேணும்னா என் போனுக்கு கால் பண்ணி பாரு” எங்கே தன்னை இன்னும் நம்பவில்லையோ! என்று சிறு பதட்டத்தோடு கோதை கணவனை ஏறிட
“நம்ம கல்யாணத்துக்கு பிறகு அந்த நம்பர் சுவிட்ச் ஆப் ஆகி இருக்கு” என்றவனுக்கு மனைவியின் பதட்டம் கண்டு புன்னகை மலர்ந்தது.
“ஓஹ்…அப்போ அது யாருனு கண்டு பிடிக்க முடியாதா?” கொஞ்சம் கவலையாக கேட்க
“ஏன் முடியாது அந்த போன் ஐ.ஈ.எம்.ஐ. நம்பர் டிரேஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். புது நம்பர் போட்டா கூடிய சீக்கிரம் மாட்டுவான்”
“சீக்கிரம் யாருனு கண்டுபிடி” என்றவள் முகம் கோபத்தில் சிவந்திருக்க,
 “இருக்கு அவனுக்கு. நல்லா நாலு சாத்து சாத்த வேணும்” என்ற கிருஷ்ணாவின் பேச்சில் கோபமில்லை.
தாடையை தடவி யோசிப்பது போல் பாவனை செய்த கோதை “வேணாம் மன்னிச்சு விட்டுடலாம்”
“ஏனாம்?”
“இல்லனா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்டியே!” என்று சொல்ல
அவள் பேச்சில் அவன் இதயம் தாறுமாறாக துடிக்க அவள் மேல் மேலும் காதல் பெருக்கெடுத்தது. “அதுக்காகத்தான் அவன நல்லா போடணும்” என்றவனின் முகத்தில் பெரிதாக புன்னகை மலர கோதை அவனை நன்றாக முறைக்கலானாள். 
“அப்போ என்ன லவ் பண்ணறதா சொன்னது?”
அவள் மனதினுள் தான் இருக்கின்றோமா? சிறு ஆசை எட்டிப்பார்க்க “ஆமா.. ரெண்டு வருஷமா லவ் பண்ணி கல்யாணமும் பண்ணியாச்சு. லவ் பண்ணுறேன்னு பல தடவ சொல்லியாச்சு. ஒரு முத்தத்துக்கு கூட பஞ்சம்” குதர்க்கமாக பேசலானான்
“நான் கொடுக்க வேணான்னு சொன்னேனா? இல்லா நான் கேக்குறேன் கொடுக்க வேணான்னு சொன்னேனா?” கணவனையே! அதிர வைத்தாள் கோதை. 
“உன்ன பத்தி தெரிஞ்சும் நான் இப்படியெல்லாம் பேசி இருக்கக் கூடாது டி..” என்றவன் மெதுவாக அவளை நெருங்க 
“நீ பேசிக்கிட்டே இரு. யாரவது வந்துட போறாங்க”
“உன் வாய் இருக்கே..” என்று அவள் இதழ் நோக்கி குனிய அவன் கன்னத்தை கடித்தவள் தள்ளி விட்டு ஓட
“ஏய்.. இரு டி உன்ன அப்பொறம் பாத்துக்கிறேன்” என்று கத்தினான் கிருஷ்ணா.
“ஆ… பார்ப்ப பார்ப்ப” பழிப்பு காட்டி விட்டு உள்ளே ஓடி இருந்தாள் கோதை.
மாலையில் யாரும் எங்கும் வெளியே செல்லவில்லை. ஆலையில் இருந்து வந்த ஞானவேலும் செல்வராஜும் நாளை மறுநாள் குலதெய்வ கோவிலில் பூஜை ஏற்பாடு செய்திருப்பதாக கூறலாயினர்.
“அப்போ நாளைக்கு பஞ்சு காட்டுக்கு போலாம் இல்ல தாத்தா” என்றான் கிருஷ்ணா
“போலாம் பா..” என்றார் செல்வராஜ்.   
இரவு உணவுக்கு தோசை தான் செய்திருந்தாள் அன்பழகி. அதிலும் நெய் தோசை, மசாலா தோசை, கறி தோசை என்று வித விதமாக அசத்தி இருக்க,
“நாம வீட்டுக்கு வந்திருக்கோமா? ஹோட்டல்ல தங்கி இருக்கோமா? என்று சந்தேகமாகவே! இருக்கு. இப்படி சாப்பாடா போட்டு கொல்லுறீங்க அக்கா” அன்பழகியிடம் பேச்சுக்கு கொடுக்க முனைந்தாள் கோதை.
புன்னகைத்த அன்பழகி எதுவும் பேசவில்லை.
“யப்பா வாயில புட்டா? கொலுக்கட்டாய்னு தெரியல. இப்படி அழுத்தமா இருக்காங்க” கிருஷ்ணாவிடம் முணுமுணுத்த கோதை “நைட் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் தூங்கிடாத” என்று சொல்ல
“தூங்குறதா? பூஜைக்கு மட்டுமில்ல நாம ஹனிமூனுக்கு வந்திருக்கோம் டி..” என்று மனைவியை கிருஷ்ணா பதற வைக்க முனைய
அவளோ! “அதற்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கேன் என் புருஷா…” என்று அவனை பதற வைத்தாள்.
அனைவரும் தூங்க சென்றிருக்க, கதவெல்லாம் பூட்டி இருக்கா என்று பார்த்து விட்டு தனதறைக்குள் வந்து கதைவடைத்துக்கொண்டாள் அன்பழகி.
காலையிலிருந்து அத்தனை வேலைகளை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வது இரவில் கட்டிலில் விழுந்த உடன் தூங்க வேண்டும் என்பதற்காகத்தான்.
இன்று ஏனோ! தூக்கம் கண்ணை சொக்க மறுத்தது. பழைய நிபாகங்கள் அலைக்கழிக்க அன்னையை நினைத்து கண்களின் ஓரம் நீர் துளி சத்தமில்லாமல் வழிய துடைக்க தோன்றாமல் கண்களை மூடிக்கொண்டாள்.
“ஏ… புள்ள இப்படியே! போனா மில்லு வருமில்ல” அருள்வேல் கையை நீட்டியவாறு கேட்க,
“யாரது” என்று தலையை தூக்கிப் பார்த்தவளுக்கு இருபத்தி இரண்டு வயதில் இருந்த அருள்வேலை யார் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் மில்லுக்கு தங்களது நிலத்தினூடாக செல்வது ஊர்க்காரர்கள் என்பதனால்
“இப்படியே போனா மில்லுக்கு போய் சேருறதுக்குள்ள தோள்பட்டை வலிக்க ஆரம்பிக்கும், கைய கீழ போட்டுட்டு போங்க” என்ற அன்பழகி அரிசி கழுவிய நீரை மரம் செடிகொடிகளை பாய்ச்சலானாள்.
“குட்டச்சிக்கு குசும்ப பாரு”
பத்து வருடங்களுக்கு முன் ஊரில் எந்த வீட்டுக்கும் மதில் சுவர்கள் இல்லை. தம்பியோடு தங்களது வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்தால் நேராக மில்லுக்கு சென்றுதான் நிற்பான்.
இப்பொழுது எந்த பக்கம் பார்த்தாலும் மதில் சுவர்களும், கம்பி வேலிகளும் என்று மில்லுக்கான நடைபாதையை கண்டறியமுடியவில்லை. அவசரமாக செல்லலாம் என்று வந்த தன் மடமையை எண்ணி நொந்தவனிடம் தான் அன்பழகி இவ்வாறு பேசி வைத்திருந்தாள்.
“நான் எதுக்கு கைய நீட்டிக்கிட்டு போறேன்? வீசிகிட்டே போறேன்” குரல் கொடுத்தவாறு அருளுவேல் நடையை தொடர்ந்திருக்க,
“நாம என்ன தப்பா சொல்லிட்டோம்?” நொடித்துக்கொண்டாள் அன்பழகி.
அன்பழகி பெற்றோருக்கு ஒரே பெண். தந்தை பாலமுருகன் லாரி ட்ரைவர். அன்னை முத்தழகி ஒரு இட்லி கடையை வைத்து மில்லில் வேலை செய்பவருக்கு வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தாள். மதிய சாப்பாடும் கொடுக்க முடியுமா என்று சிலர் கேட்க சரி என்றவள் மகளின் உதவியோடு மதிய உணவையும் வழங்கலானாள்.  
மில்லில் வேலை பார்ப்பவர்கள் முகக் கவசம் அணிந்திருப்பார்கள். அன்பழகியின் அன்னை முத்தழகி காலை நேரமும் மதிய நேரமும் முகக் கவசம் அணியாது ஆலையினுள் சுற்றித்திரிய, ஏற்கனவே! ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதியுற்றிருந்த மேலும் உடல் படுத்த வீட்டோடு இருந்துகொண்டாள்.
பதினைந்தாம் வயதிலிருந்தே! அன்பழகி  அன்னை கட்டிக் கொடுக்கும் உணவுகளை மில்லுக்கு எடுத்து செல்வாள்.
உணவு பாக்கெட்டுகளை அடுக்கிய பையை சுமந்து சுமந்து அவளது இரண்டு தோள்பட்டையும் வலிக்க ஆரம்பிக்க, இரவில் வலியில் முனகுபவளுக்கு முத்தழகி கவலையோடு எண்ணெய் தேய்த்து விடுவாள்.
அன்பழகியின் அப்பா பாலமுருகன் வண்டி ஓட்ட சென்றால் வீட்டு எப்போ வருவார் என்று தெரியாது. அவர் வரும்வரை சாப்பிடாமல் கொள்ளாமல் இருக்க முடியுமா? அதனால்தான் முத்தழகி உணவுக்கடையை ஆரம்பித்திருக்க, அன்பழகி தங்களது வீட்டை சுற்றி உள்ள சிறு இடத்தில் உணவுக்காக பயன் படும் எல்லாவகையான செடி, கொடிகளையும் நட்டு அன்னைக்கு உதவுபவள் சமையலையும் கற்றுக்கொள்ளலானாள்.  
கையில் பைகளை சுமப்பதனால் கை ரொம்பவும் வலிக்கிறது என்று ஒரு குச்சியின் இரு புறமும் பைகளை தொங்க விட்டு குச்சியை தோற்பட்டையில் சுமந்துகொண்டு மில்லுக்கு நடக்கலானாள் அப்படி நடக்கும் பொழுது குச்சியின் சமநிலைக்காக கையை நீட்டியவாறுதான் நடப்பாள். அந்த நியாபகத்தில்தான் அருள்வேலிடம் அவ்வாறு கூறி இருந்தாள் அன்பழகி.
மில்லுக்கு சென்று அன்னையை சந்தித்தவன் அந்த வழியாகவே! திரும்பி வர அன்பழகி மதிய சாப்பாட்டுக்கு சமைப்பதற்காக கத்தரிக்காய் பறித்துக் கொண்டிருந்தாள். 
“ஏய் புள்ள இந்தா….” என்று எதையோ! தூக்கிப் போட்டவன் சென்று விட
அதை பிடித்தவள் பேப்பரில் சுற்றி இருந்த கடலை மிட்டாயை கண்டு முகம் மலர்ந்தாள்.
கடையில் வாங்கி சாப்பிட ஆசை இருந்தாலும், காசு வீணாகுதே! என்று வாங்க மாட்டாள்.
“வழி சொன்னதுக்கு பரிசா?” என்று இவள் குரல் கொடுக்க அருளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
 நாட்கள் அதன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்க,  வண்டி ஓட்ட செல்லும் தந்தை வீட்டுக்கு வரும் நாட்கள் குறைந்து கொண்டே வர என்ன எது என்று வீட்டுக்கு வந்த உடன் தந்தையிடம் விசாரிக்கலானாள் அன்பழகி. அதற்கு பாலமுருகன் சரியான காரணம் சொல்லாமல் மழுப்ப, தந்தையை சந்தேகம் கொள்ள முடியாமலும் யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமலும் தடுமாறினாள் பெண்.
கிளீனர் மாணிக்கத்திடம் விசாரித்து எந்த பிரயோஜனமும் இல்லை. குடும்பம் என்று எதுவும் இல்லாத ஒண்டிக்கட்டை மாணிக்கம் சதா குடித்து விட்டு போதையில் இருப்பவர். என்ன கேட்டாலும் பதில் வராது.
பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட காலம் கடந்திருந்தது. முனீஸ்வரி என்ற பெண் தனது இரண்டு மகன்களோடு முத்தழகியின் வீட்டு வாசலில் கண்ணீரோடு வந்து நின்ற பிறகுதான் ஊர் பூரா விஷயம் பரவியது.
பஞ்சாயத்தில் பாலமுருகனின் இரண்டாவது தாரம் முனீஸ்வரி என்று அறியப்பட பாலமுருகனும் ஒத்துக்கொண்டார்.
“என்னப்பா… கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டிய வயசுல பொண்ண வச்சிக்கிட்டு ஒரு அப்பன் பண்ணுற காரியமா இது?” பஞ்சாயத்து தலைவராக செல்வராஜ் கேட்க 
“சீக்காளி பொண்டாட்டிய வச்சிக்கிட்டு நானும்தான் எத்தனை நாளைக்கு குடும்பம் நடாத்த?” முத்தழகியை முறைத்துப் பார்த்தவாறு கூறினார் பாலமுருகன்.
முத்தழகிக்கு இந்த பிரச்சினை இருப்பது தெரிந்துதான் பாலமுருகன் திருமணம் செய்திருந்தார். திருமணத்தின் போதே! முத்தழகி தன்னுடைய நிலைமையை எடுத்துக்கூறி திருமணத்தை மறுத்திருக்க, பாலமுருகன் பிடிவாதமாக முத்தழகியை மணந்திருந்தார்.
அன்பழகி கிடைத்த பின் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் பல குளறுபடிகள் இருக்கத்தான் செய்தது. முத்தழகியே! கணவனிடம் வேறு திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டிருந்தாள். அதை பாலமுருகன் கடுமையாக எதிர்க்கவும் செய்தார். அப்படிப்பட்ட மனிதர் கல்யாண வயதில் மகளை வைத்துக்கொண்டு இப்படியொரு காரியம் செய்ததை முத்தழகியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அன்பழகிக்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை. சமீபகாலமாக வண்டியோட்டும் தந்தை வீட்டு செலவுக்கென்று பெரிதாக பணம் எதுவும் கொடுக்காததற்கு காரணம் இந்த குடும்பம் என்று மட்டும் புரிந்தது.
“இங்க பாருப்பா ஊருக்கென்று ஒரு கட்டுப்பாடு இருக்கு. உன் ரெண்டாவது மனைவி இங்க இருக்க முடியாது நீ அவங்கள வேற எங்கயாச்சும் குடி வை” செல்வராஜ் பேச
“அது எப்படி என் அக்காவ கல்யாணம் பண்ணிட்டு ஒதுக்கி வைக்க சொல்லுறீங்களா?” என்றவாறு வந்தான் ஒருவன். பார்க்க ரௌடி போல் இருந்தாலும் வெள்ளையும் சொல்லையுமாக இருந்தான் அவன்.  
“நீ யாருப்பா…” என்று ஞானவேல் கேட்க 
“அவன்தான் உங்கண்ணனுக்கு வில்லனா?” என்று கிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் கோதை

Advertisement