Advertisement

யாரோ! 10
கிருஷ்ணாவின் வண்டி ஊருக்குள் நுழையும் பொழுதே! கோதை கண்ணாடியை கீழே இறக்கி இருக்க, சிலுசிலுவென காத்தும் வீச, வானமும் பஞ்சு போல மேகங்களை சுமந்தவாறு தெளிவாகத்தான் ஊர் காலநிலை இருந்தது.
மதிய நேரம் என்பதால் வெயிலும் சுட்டரித்துக் கொண்டிருக்க, பருத்தி காட்டில் பூக்கள் மொட்டு விரிக்க ஆரம்பித்திருந்த நேரம் வானின் மேகங்களுக்கு ஈடாக அவனியில் {பூமி} பூத்த வெண் முகில்களும் {பருத்திப் பஞ்சு} தென்றல் தழுவ சுதந்திரமாக பறக்க காத்துக்கொண்டிருந்தன.
“ஆமா அது என்ன பூ… வெள்ளையா?” கோதை அதன் வெண்மையில் மயங்கி கேட்க
“பருத்தி பஞ்சு” கிருஷ்ணா அவள் புறம் திரும்பாமலையே! பதில் சொல்லி இருந்தான்.
ஊருக்கு வரும் பொழுதெல்லாம், பருத்திக் காட்டில் அண்ணனோடு விளையாடிய நியாபகம் வந்து போக காலேஜ் சேர்ந்த பிறகு ஊர் பக்கமே! வரவில்லை என்றதை நினைக்கையில் மனம் வெறுத்தான். 
“பருத்தி.. துணி செய்வங்களே! அதுவா?” என்றவளுக்கு கண்ணை காட்டை விட்டு அகற்ற முடியவில்லை.
அந்த வான் முகில் தரையில் இறங்கி படுத்திருப்பது போன்ற ரம்மியமான காட்ச்சி.
“நாளைக்கு அறுவடை செய்வாங்க. இல்லனா எல்லாம் காத்தோட பறந்து போகும். நாளைக்கு வந்து அத எப்படி பண்ணுறாங்கனு பார்க்கலாம்” என்றான் கிருஷ்ணா.
ஞானவேலின் சொத்து முழுக்க கனகவேலுக்கு சேர்ந்திருக்க, செல்வராஜ் தனது சின்ன மகளுக்கு எந்த சொத்துக்களையும் கொடுக்காமல் மொத்த சொத்தையும் வத்தலாவின் பெயரில் எழுதியதோடு அதை யார் பெயரிலும் எழுதக் கூடாது என்று சத்தியம் வேறு வாங்கி இருந்தார்.
“என்னப்பா… எனக்கு இருக்கிறதே! ரெண்டு பசங்க, எனக்கு பிறகு அருளுக்கும், கிருஷ்ணாகும் தானே! சொத்து போக போகுது அத இப்போவே! எழுதினா என்ன?” என்று வத்சலா கேட்க,
கிருஷ்ணாவையும் தன் மகன் என்று பிரித்துப் பார்க்காமல் கூறியது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “இங்க பாருமா.. நா இல்லாத காலத்துல என் சொத்தை நீ பாதுக, நீ இல்லாத காலத்துல உன் பசங்க பார்த்துக்கட்டும்” வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக தன் முடிவை கூறி இருந்தார் செல்வராஜ்.
உண்மையில் இது ஞானவேலின் முடிவுதான். செல்வராஜுக்கு ஒரு பருத்தி ஆலையும் நூறு ஏக்கரில் பருத்திக் காடும் இருக்க, அதை வத்சலாவின் பெயரில் எழுதி வைத்து அதை அவள் பொறுப்பிலையே! விட்டு வைத்திருக்கிறார். அதில் அவள் மனம் லயித்தால் பழையதை நினைத்து கவலையடைய மாட்டாள் என்ற எண்ணம் இரு தகப்பன்களுக்கும். 
அருள்வேலை தங்கையிடம் அனுப்பும் பொழுதே! தன் மனதை தேற்றிக்கொண்டிருந்த வத்சலா பாதிக்கப்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து நிமிர்ந்து நிற்க, தந்தைகள் இருவருக்கும் அவளை கண்டு பிரமிப்புதான் தோன்றியது.
பூங்கோதை பார்வையிட்டுக் கொண்டு வந்தது அந்த காட்டைதான். அது தனது கணவனின் குடும்பச் சொத்து என்று அறியாமலே! ரசித்தும், வியந்தும் வந்தவள் ஊர் அழகை ரசிக்கலானாள்.
ஊரில் உள்ள அந்த பெரிய வீட்டின் முன் சென்று வண்டி நின்றதும் சோம்பல் முறித்தவனாக கிருஷ்ணா இறங்கிக்கொள்ள,  கோதையும் ஆர்வமாக இறங்கினாள். 
பாதுகாப்பு படையினர் பாதுகாப்பது ஏற்பாடுகளை மேற்கொள்ள செல்ல வடிவுப்பாட்டி இறங்கி கோதையின் அருகில் வந்து சிசுசிடுத்தவாறு “ஏன் டி உன் அம்மாவ பெத்தவ உன் பாதுகாப்புக்கு கூடவே! வராளே! அந்த நாலு தடி பசங்களோட அவளை விட்டுட்டோமே! என்ன ஆச்சோ! ஏது ஆச்சோன்னு தேடி பாத்தியா? நீ பாட்டுக்கு உன் புருஷன் கூட டூயட் பாடிகிட்டு வண்டில முன்னாடி போற” கையை நீட்டி நீட்டி பேசி திட்ட ஆரம்பித்தார்.
“என்னது நாலு தடிப்பசங்களா?” கிருஷ்ணாவின் மைண்ட் வாய்ஸ் கேள்வி எழுப்ப
“ஆ..ஹஹ ஹா.. இவ பதினெட்டு வயசு கன்னி சிட்டு. என்னது நாலு தடிப்பசங்களா? அப்படியே உன் மேல பாய போறாங்க. ஏய் கிழவி ரொம்ப துள்ளாத. நீ எனக்கு பாதுகாப்புக்கு வந்தியா? என்ன வேவு பார்க்க தானே! வந்த. உன்ன பத்தி எனக்கு தெரியாதா? வந்தோமா… காத்தாட ஊர சுத்தி பாத்தோமா… வாய்க்கு ருசியா கறி விருந்து சாப்பிட்டோமானு காம்…ன்னுன்னு கிடக்கணும். புரிஞ்சுதா” கோதை விரலை நீட்டி நீட்டி மிரட்ட
“இப்படித்தான் பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம பேசுவியா?” கிருஷ்ணா அவள் விரலை மடக்கிப் கையை பிடித்துக் கொண்டான்.
“அவ கெடுக்குறா விடு பேரான்டி. அறிவு கெட்டவ. ஆனாலும் நீயும் ஒரு கூறு கெட்ட குப்ப. இல்லனா.. இவள காதலிச்சு கல்யாணம் பண்ணி இருப்பியா?” வடிவு தன்னை கவனிக்கவில்லை என்ற கோபத்தை கிருஷ்ணாவின் மீது காட்டமாக காட்ட 
“இந்த கிழவிக்கு போய் பாவம் பார்த்தேனே! என்ன சொல்லணும்” தன்னையே! நொந்துகொண்டான் கிருஷ்ணா. 
வாசலில் இவர்களுக்காக காத்திருந்த வத்சலாவும், தாத்தாக்கள் இருவரும் ஓடோடி வந்து இன்முகமாக வரவேற்று கட்டிக்கொள்ள, கிருஷ்ணா அவர்களின் காலில் விழுந்து வணங்க, வடிவு கோதைக்கு கண்களாளேயே காலில் விழும்படி உத்தரவிட அவளோ! கண்டும் காணாதது போல் நிற்க, கிருஷ்ணா அவள் கையை பிடித்து இழுத்ததில் அவனோடு சேர்ந்து விழுந்தாள்.
அன்பழகி இவர்களுக்கு ஆலம் சுற்ற அவர்களை உள்ளே அழைத்து சென்று வத்சலா அமர வைக்க குசலம் விசாரிப்புகளோடு, ஊரை பற்றி கிருஷ்ணாவும், சென்னையை பற்றியும், யசோதாவை மற்றும் அருளை பற்றி தாத்தாக்களும் விசாரிக்க, அன்பழகி அவர்களுக்கு பருக, ஜில்லென்று மோர் கொண்டு வந்து கொடுக்கலானாள்.
அதை கையில் வாங்கிக் கொண்ட கோதை “ஆமா ரெண்டு தாத்தால யாரு உங்க அப்பாவோட அப்பா? யாரு உங்க அம்மாவோட அப்பா?” கிருஷ்ணாவிடம் இன்முகமாக கேட்க,
அவளின் முகபாவனையிலையே! “வந்த உடனே! கைவரிசையை காட்ட ஆரம்பிச்சிட்டா..” என்று நினைத்த கிருஷ்ணா பதில் சொல்லவில்லை.
“வத்சலாவும் யசோதாவும் என் பொண்ணுங்கமா…” என்று செல்வராஜ் பெருமையாக சொல்லியவாறு மீசையை முறிக்கிக் கொண்டார். 
தனது மகன் இந்த மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் என்று பெருமை கொள்ள முடியாதபடி மகன் செய்தவைகள் கண்முன் வந்து போக “நான்தான் மா அவனை பெத்தேன்” என்று ஞானவேல் ஒருவித கலக்கமாக சொல்ல
“என்னது நீங்க பெத்தீங்களா? உலக அதிசயமாக இல்ல இருக்கு” என்ற கோதை விழிவிரிக்க, ஞானவேல் புரியாது முழித்தார்.
“பின்ன பொம்பளைங்க தானே! புள்ள பெத்துக்குவாங்க நீங்க எப்படி?” ஒன்றுமே! அறியாதது போல் யோசிக்கும் பாவனையில் முகவாயில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.
“உக்காந்திருக்குறத பாரு பச்சை புள்ள போல மூஞ்ச வச்சிக்கிட்டு. விட்டா ஊரையே! வித்து அந்த காசுல தண்ணி வாங்கி குடிப்பா” கிருஷ்ணா மனதுக்குள் புலம்பலானான்.
{எதுக்கு வந்த காசுல தண்ணி வாங்கி குடிப்பானு யோசிக்காதீங்க மக்களே! பேசி பேசியே! தொண்டை வறண்டு போய் இருக்கும்னு சொல்லுறான்}
“ஏன் அம்மாச்சி… எங்க அம்மாவ நீ பெத்தியா? இல்ல தாத்தா பெத்தாரா?” புரியாத முகபாவனையில் கேட்க, கிருஷ்ணா பல்லைக் கடித்தான்.
வந்திறங்கி ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. இவள் அக்கப்போர் தாங்க முடியவில்லை. தன்னை பற்றி சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கொஞ்சம் கூட கவலை படாமல் எப்படித்தான் இப்படி ஒருத்தி இருப்பாளோ!
“அத ஏன் டி அம்மா கேக்குற?” வடிவு ஆரம்பிக்க
“அப்போ சொல்லாத” அசால்டாக சொன்னவள் மோரை அருந்தலானாள்.
கோதை பேசும் அழகை வீட்டார் ரசித்து பாத்திருக்க, கிருஷ்ணா முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.
“இந்த குசும்புதானே! வேணாங்குறேன். உன் அம்மாவ நான் பத்து மாசம் தவமிருந்து பெத்தாலும், என்னமோ! உன் தாத்தாதான் சுமந்தா மாதிரி உங்க அம்மாக்கு அந்த மனிசன் மேல அவ்வளவு பாசம். அந்த ஆளும் பொண்ணு மேல உசுரையே! வச்சிருந்தாரு. குளிப்பாட்டுறது என்ன? சோறூட்டுறது என்ன? அப்பப்பப்பா… பார்க்கணுமே! ஊரு உலகத்துல இப்படி ஒரு அப்பன் பொண்ண பாத்திருக்க முடியாது” என்ற வடிவுப்பாட்டியின் கண்கள் சற்று கலங்கி இருந்தது என்னவோ! சேலை முந்தியால் முகத்தை துடைப்பது போல் கண்களை துடைத்துக்கொண்டு  “ரெண்டு சேர்ந்துக்கிட்டு என்ன கொடும படுத்தும்” வடிவு பழைய நினைவுகளில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேச ஆரம்பித்தவர் அது அவரது அகராதியிலையே! இல்லை என்பதனால் பேச்சை மாற்றி இருந்தார்.
“யாரு எங்க அம்மா உன்னைய? உன் பொறாமைதான் தீயா எரிஞ்சி தாத்தா பரலோகம் போய் சேர்த்துட்டாரு போல” கோதையும் பதில் பேச
“குறும்புக்கார பொண்ணு” வத்சலா சிரித்தவாறு இருவரையும் சாப்பிட அழைத்து செல்ல
“இங்க இருக்குறவரைக்கும் அடக்க ஒடுக்கமா இருக்கணும்” கிருஷ்ணா மிரட்டியவாறே வர
“சரிங்க எசமான்” என்றவளின் பார்வை முழுவதும் அன்பழகியின் மேல்தான் இருந்தது.
“தாத்தா காட்ஸ்சுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணிடீங்களா?” என்றவாறு கிருஷ்ணா அமர
“ஆமப்பா… அவங்க தங்கிக்கவும் ஏற்பாடு செஞ்சிட்டேன். நீ சாப்பிடு. எவ்வளவு நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்க” செல்வராஜ் பரிமாற 
“நீங்களும் உக்காருங்க தாத்தா. என் பொண்டாட்டி பரிமாறுவா” என்று கிருஷ்ணா கோதையை பார்க்க அவளோ அவனுக்கு முன்னாடி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்திருந்தாள்.
கோதை சாப்பிடும் அழகு அந்த மாதிரி இருக்க, “பாவம் புள்ள ரொம்ப தூரம் பயணம் செஞ்சு வந்திருக்கா இல்ல. நீ சாப்பிடு நான் பரிமாறுறேன்” செல்வராஜ் கரண்டியை பிடிக்க
“நீங்க உக்காருங்க தாத்தா நான் பரிமாறுறேன்” என்று வந்தாள் அன்பழகி.
“பாட்டி நீங்களும் உக்காருங்க” என்று வடிவுப்பாட்டியையும் அமரும்படி கூற, ஞானவேலும் அமர அன்பழகி பரிமாற, வத்சலா ஒவ்வொரு உணவு பாத்திரரமாக கொண்டு வந்து வைக்கலானாள்.
“உள்ள இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா? மதியத்துக்கே! இவ்வளவு சமைச்சி இருக்கீங்க? டின்னருக்கு மிஞ்சத கொடுப்பீங்களா? இல்ல சூடா புது மெனு கொடுப்பீங்களா?” அள்ளி அள்ளி சாப்பிட்டவாறு கோதை கேட்க, 
“ஆஹ்..”
“என்ன டா கிருஷ்ணா.. மீன் முள்ளு குத்திருச்சா… பார்த்து சாப்பிடு” வத்சலா பதறியவாறு தண்ணீர் கொடுத்தாள். 
இறால் குழம்பு, சாம்பார், ரசம், ரைத்தா, சாலமன் மீன் குழம்பு, வெண்டிக்காய் பச்சடி, புடலங்காய் பொரியல், உருளைக்கிழங்கு மசாலா, மிளகு, ஜீரக மட்டன் மசாலா, சிக்கன் ப்ரை, பட்டாணி கீமா, பருப்பு சுரைக்காய் கூட்டு, பன்னீர் பட்டர் மசாலா, மட்டன் சூப், கோலா உருண்டை, மட்டன் தால்ச்சா, கோவக்காய் பொரியல்,காராமணி பொரியல், காளிபிளவர் வறுவல். இது போக இனிப்பு வகைகள்  சக்கரை பொங்கல், கேரட் அல்வா,  குலாப் ஜாமூன், காஜூ கத்திலி, ராப்ரி, ரசகுலா, ஜிலேபி என்று கண் முன்னால் இவ்வளவு உணவு வகைகள் இருக்க, தன் மனையாள் இன்னும் ஏதாவது இருக்கா? என்று கேட்டதும் இல்லாது இவ்வளத்தையும் சாப்பிட்டா இரவைக்கு பசி எடுக்குமான்னே! தெரியல. இரவு உணவுக்கு என்ன சமைக்க போறீங்க என்று கேட்டுத்தான் கிருஷ்ணாவுக்கு புரையடித்து.
பக்கத்தில் சாப்பிடும் கணவன் இருமுறானே! என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் சூப்பை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள் கோதை.
தண்ணீரை குடித்த கிருஷ்ணா மனைவியை முறைக்க, “அவவங்க பசிக்கு அவவங்கதான் சாப்பிடணும், தாயும் பிள்ளை என்றானாலும் வாயும் வயிறும் வேற இல்ல” தாழ்ந்த குரலில் சொல்ல 
“அடிப்பாவி. ஒருத்தன் முழுங்க முடியாம இறுகி செத்து போற கண்டிஷனல்ல இருக்கேன் அவனுக்கு தண்ணி கொடுக்காம வசனம் பேசி பழிவாங்க நல்ல நேரம் பார்த்த? நீயெல்லாம் என்ன ஜென்மமோ! டேய் அர்ஜுன் இருக்குடா உனக்கு”
“ராமரை கூப்பிடறத விட்டுட்டு அர்ஜுனனை கூப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா? நல்லது. ஆனாலும் கிருஷ்ணா என்று பேர் வச்சதுக்காக இப்படி அர்ஜுனனை உரிமையா கூப்பிடக் கூடாது அவர் வில்லோடும் அம்போடும் வந்துட்டாருன்னா.. உங்க நிலைமை என்ன ஆவது” என்ற கோதை அறியவில்லை கணவன் யாரை திட்டினான் என்று.
கிருஷ்ணாவும் அவள் மேல் இருந்த கடுப்பில் விளக்கம் சொல்ல முனையவில்லை.
விரல்களை சூப்பியவாறே “அத்த உங்க கை பக்குவம் சூப்பர். தினமும் உங்க கையாள சாப்பிட்டா நான் உங்க சைசுக்கு வந்துடுவேன்”
“ஐயே… பாதி சமையல் அழகி சமைச்சா” என்ற வத்சலாவின் முகத்தில் பெருமிதம் கொட்டிக்கிடந்தது. அழகியின் பெயரை அழைக்கும் பொழுது அதில் எவ்வளவு அன்பு.
“சூப்பர் சமையல்காரியா வச்சிருக்கீங்க அத்த” என்றவளின் வாக்கியம் முடியும் பொழுது அங்கு பேரமைதி நிலவியதை பொருட்படுத்தாமல் விரல்களை சூப்புவதை விடவில்லை கோதை.
அன்பழகி யார் என்னவென்று வந்த உடனே! கோதைக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதை யாரும் செய்யவில்லை.
கிருஷ்ணா கூட “அண்ணி நல்லா இருக்கீங்களா?” என்று ஒரு வார்த்தையை நலம் விசாரிக்காததை எண்ணி நொந்துகொண்டான். அவன் அழைத்திருந்தால் அவன் மனையாள் அண்ணன் மனைவியோடு பேசி இருப்பாள். மரியாதை கொடுத்து இருப்பாள். சமையல்காரி என்று எண்ணி இருக்க மாட்டாள். வந்து இறங்கியதிலிருந்து அவன் மனையாள் செய்த சேட்டைகளில் சுயத்தை இழந்துதான் நிற்கின்றான். 
அதையே! தான் வத்சலாவும் எண்ணினாள். சின்ன மருமகளுக்கு மூத்த மருமகளை அறிமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும். “யாரு சமைச்சா” என்று சொல்லும் பொழுது “உன் அக்கா” என்று ஒற்றை வார்த்தையில் அறிமுகப்படுத்த வேண்டிய உறவை இப்படி அறிமுகப்படுத்தாமல் விட்டது தன் மடமை என்று வருந்தலானாள்.
ஞானவேல் மற்றும் செல்வராஜின் முகங்களும் இருண்டு தர்மசங்கடமான நிலையில்தான் நின்றிருந்தனர்.
ஆனால் கவலைப்பட வேண்டி அன்பழகியோ! அதை பெரிதாக கண்டுகொள்ளாது அனைவருக்கும் இனிப்புகளை சாப்பிட தட்டுகளை எடுத்துவர உள்ளே சென்று மறைந்தாள்.
“என்ன தாத்தாஸ்? கை அந்தரத்துல நிக்குது சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா?” கோதை இருவரையும் பார்க்க
சட்டென்று அங்கு நிலவிய அமைதி வடிவுப்பாட்டிக்கு புரிய “நீ பேசக்கூடாத எதையோ! பேசிட்ட அதான் அவங்க ஷாக் ஆகி நிக்கிறாங்க” என்றவாறு ஒரு கவளத்தை உள்ளே தள்ளி இருந்தாள். 
“நான் என்ன தப்பா பேசிட்டேன்?” என்ற கோதை கிருஷ்ணாவின் முகம் பார்த்து நிற்க
“அவங்கதான் என் அண்ணி.. அவங்க ஒன்னும் இந்த வீட்டு சமயக்காரி கிடையாது” என்றவன் மனைவியை முயன்ற மற்றும் முறைக்கலானான்.
“அப்படியா? பார்த்தா தெரியலையே! அவங்க குடும்ப பின்னணி என்ன எதுன்னு எனக்கு தெரியாது. ஆனா அவங்க இப்போ இந்த வீட்டு மருமக தானே! ஏன் கழுத்துல மஞ்ச தாலிய தவிர எந்த நகையும் இல்ல. கட்டி இருக்குற சேலையும் காட்டன் சேலை. இந்த வீட்டு மருமக மாதிரியா இருக்காங்க, சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க”
கோதை ஆரம்பிக்கும் பொழுதே! அன்பழகி இனிப்புகளோடு வந்திருக்க, அவள் சொன்னது அன்பழகியின் காதில் நன்றாகவே! விழுந்திருந்தது. 
சொன்ன கோதையும் அதை சாதாரணமாக சொன்னது போல் சொல்லி விட்டு சாப்பிடுவதில் மும்முரம் காட்டினாளே! ஒழிய தான் எந்தவிதமான தப்பான வார்த்தையும் சொல்லவில்லை எனும் விதமாக அமர்ந்திருந்தாள்.
கோதை அன்பழகியை பார்த்த உடனே! அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் தாலியை கண்ட நொடி இதுதான் அருள்வேலின் மனைவியா? என்ற கேள்வி எழுந்தது.
சாதாரண ஒரு புடவைதான் கட்டி இருந்தாள் அது கூட வத்சலா அணிவது போன்ற புடவையாக இருக்க, அது வத்சலா கொடுத்ததாக கூட இருக்கும். காதில் ஒரு காதணி அது கூட தங்கம் கிடையாது. என்ன இது? இப்படி இருக்காங்க? இந்த வீட்டு மனுசங்க இவங்கள இப்படித்தான் பாத்துக்கிறாங்களா? என்ற கோபம் வந்தாலும் வத்சலாவும் பெரிதாக நகைகள் போட்டிருக்கவில்லை. கழுத்தில் ஒரு மாலை, ஒரு ஜோடி காதணி மட்டுமே!
வத்சலாவின் கவனத்தில், அவள் பார்வையில், சிந்தனையில் அன்பழகி இல்லை என்று கோதைக்கு சட்டென்று புரிந்து போக, தாத்தாஸை சொல்லவே! வேண்டாம்.
ஏன் கோதை கூட சாதாரண சுடிதாரில் தான் ஊருக்கு வந்தாள். பெரிதாக நகைகள் போடவில்லை. ஆனாலும் அன்பழகியின் தோற்றம் கண்ணை உறுத்த வேண்டும் என்றே தான் சமயம் பார்த்து சமையல்காரியா என்று கேட்டு வைத்தாள்.
ஆனால் அந்த பேச்சு கூட அன்பழகியை அசைத்து போல் தெரியவில்லை. அருளுக்கும், அன்பழகிக்கும் என்ன பிரச்சினை? ஏன் ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்காங்க என்று தெரிந்துகொள்ளாமல் கோதையின் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது.   
உண்ட மயக்கம், பயணக் களைப்பு என்று வடிவுப்பாட்டி சற்று நேரம் நித்திரை கொள்வதாக சென்று விட, கிருஷ்ணா தாத்தாக்களோடு வராண்டாவில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தான்.
அன்பழகி சமையல்கட்டை துப்பரவு செய்துகொண்டிருக்க, கோதை வத்சலாவின் பின்னும், முன்னும் அலைந்தவாறு பேசிக்கொண்டிருந்தாள்.
“அத்த ஒரு இடத்துல இருங்களேன் எனக்கு உங்கள கட்டி பிடிக்கணும் போல இருக்கு. நான் மட்டும் ஆம்பளையா பொறந்திருந்தா உங்களைத்தான் கல்யாணம் பண்ணி இருப்பேன்”
“என்னடி யம்மா பேசுற” என்ற வத்சலாவுக்கு வெட்கம் வர அது அப்படியே முகத்தில் அழகாக பிரதிபலித்தது.
“பின்ன சரிதா மாதிரி சப்பியா.. கியூட்டா இருக்கீங்க உங்கள யாருக்காவது பிடிக்காம போகுமா.. சோ.. ஸ்வீட் அத்த” என்று கட்டிக்கொள்ள அன்பழகியும் அவர்களை வினோதமாக பார்த்திருந்தாள். 
இத்தனை நாள் இந்த வீட்டில் இருக்கிறாள். வத்சலாவிடம் மாமியார் என்ற மரியாதையோடு நடந்து கொண்டிருக்கிறாளே! தவிர அதிகம் உரிமை எடுத்துக்கொண்டதில்லை. என்ன இந்தப் பெண் வந்த உடன் இப்படி நடந்து கொள்கிறாள். அதுவும் இன்று பார்த்த பெண்மணியிடம். அதுவும் மாமியாரிடம். என்ற ஆச்சரியம்தான் மேலோங்கி இருந்தது.
இதுவே! முன்னைய வத்சலாவாக இருந்திருந்தால் “என்னை யாருக்கு பிடிக்கும்?” என்று சோக கீதம் வாசித்து இருப்பாள். இன்றைய வத்சலாவோ! “அப்படியாம்மா… அப்போ மாப்புள பார்த்து மண்டபத்தை புக் பண்ணிடலாமா…” என்று சிரிக்க, அன்பழகிக்கு மயக்கம் வராத குறைதான்.
வத்சலா அமைதியான மாமியார், அன்பான மாமியார் என்று தெரியும் இப்படி கேலி கிண்டல் கூட செய்வாளா? இத்தனை மாதங்களில் இன்றுதான் பார்க்கின்றாள்.
“அங்க பாருங்க உங்க மூத்த மருமகள, இங்க என்ன நடக்குதுனு புரியாம பேயாறஞ்ச மாதிரி இருக்கா…” என்று அன்பழகியை காட்டி சிரிக்க,  வத்சலாவும் சிரிக்க ஆரம்பித்தாள்.
“நல்ல பொண்ணுமா.. நீ வந்ததுல மனசு நிறைஞ்சி போச்சு. ஆமா இப்படித்தான் என் தங்கச்சியையும் பேசி கவுத்திட்டியா”
“அவங்க உங்கள மாதிரி கிடையாது ஒல்லியா சுகாஷினி மாதிரி இருந்தாலும் செம்ம ஷர்பு. முதலமைச்சரையே லெப்ட் அண்ட் ரைட் வாங்குவாங்க” ரகசியம் பேசுவது போல் கூற வத்சலாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“என் தங்கச்சி சுகாசினி நான் சரிதாவா? அப்போ என் வீட்டுக்காரருக்கு என்ன பேர் வச்சிருக்க?” சிரித்தவாறே கேட்டாள் வத்சலா.
என்னதான் கணவனை விட்டு ஒதுங்கி இருந்தாலும், தாலி கட்டின கணவன், கணவன் இல்லையென்று ஆகி விடுமா? அந்த உரிமையில் என் வீட்டுக்காரர் என்று தைரியமாகவே! கேட்டாள் வத்சலா.
“ம்ம்.. பார்க்கத்தான் சரத்பாபு மாதிரி இருக்காரு ஆனா பண்ணுறதெல்லாம் வில்லத்தனம்” என்றவள் வாயிலையே! அடித்துக்கொள்ள
சத்தமாக சிரித்த வத்சலா “குடும்பத்துக்கு ஏத்த மருமகத்தான்” என்று கோதையின் நெற்றியைல் அடிக்க
“அப்போ அவ இல்லையா?” என்று அன்பழகியை பார்த்து பட்டென்று கேட்டு விட,
“அத அவதான் முடிவு பண்ணனும். இங்க அவ என் பொண்ணாத்தான் இருக்கா” அவ்வளவு நேரமும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த வத்சலா சோகமான முகத்தோடு அறைக்குள் சென்றாள்.
கோதை அன்பழகியை பார்க்க, மாமியார் சொன்னது எதுவும் காதில் விழவில்லை என்பது போல் அவள் பாட்டுக்கு வேலை செய்வதில் கவனமாக இருந்தாள்.
அவள் நிற்கும் தோரணையே! கோதையோடு பேச தயாராக இல்லை என்று கூற, தன்னிடம் அவள் பிரச்சினையை கூறுவாள் என்ற நம்பிக்கை கோதைக்கு வரவில்லை.
“ஆமா இவங்க கல்யாணம் எப்படி நடந்திருக்கும். என் புருஷன் அந்த லூசு க்ரிஷ்னாக்கு தெரிஞ்சிருக்குமோ! கேட்டு பார்க்கலாம்” என்று எண்ணியவள் கிருஷ்ணாவை தேடி வாசலுக்கு வர, அவன் தோட்டத்தில் யாருடனோ அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தான்.
“தாத்தாங்க வேற இல்ல. இருந்தா அவங்கள வம்பு இழுத்திருக்கலாம். இவன் வேற போன் பேசுறான் போலாமா? வேணாமா? அப்படி யார் கிட்ட பேசுறான்? ஒரு வேல எக்ஸ் கேர்ள் பிரென்டா இருக்குமோ!”  சந்தேகம் வர சத்தமில்லாமல் கிருஷ்ணாவின் பின்னாடி சென்று நின்றுகொண்டாள் கோதை.
அதே நேரம் அலைபேசியை துண்டித்த கிருஷ்ணா கோபம் கணக்க மனையாளை தேட திரும்ப அவன் இடது பக்கமும் அவள் வலது பக்கமும் என்று தேகங்கள் உரச, அவள் பெண்மையின் மேன்மையை நன்கு உணர்ந்தவன் தடுமாறி அவள் மேல் மோதி நின்றான்.
“டேய் தடிமாடு இப்படித்தான் சொல்லாம கொள்ளாம திரும்புவியா?” வலிக்குது தோள்பட்டையை நீவியவாறே கோதை முறைக்க ஆரம்பித்தாள்.
ஒரு நொடி மாயமாய் மறைந்திருந்த கோபம் கோதையின் பேச்சில் மீண்டிருக்க, எதிலிருந்தோ! விடுபட்டவன் போல் கிருஷ்ணா “ரெண்டு வருஷமா என் கிட்ட போன்ல பேசிட்டு, என்ன லவ் பண்ணுறதா சொல்லிட்டு, என்ன வர சொல்லி உன் கழுத்துல தாலியும் கட்ட வச்சி இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியே! உண்மையிலயே! உனக்கு என்னதான் வேணும்” அடிக்குரலில் சீறியவாறு அவள் கழுத்தை பிடிக்க
“விடுடா என்ன விடு விடு விடு” மூச்சு விட முடியாமல் திணறினாள் கோதை. 

Advertisement