Advertisement

அத்தியாயம் 1
அழைக்கிறேன் உன்னை தொலை தூரத்திலிருந்து. 
ஏன் அனைத்து வைத்தாய் உன் அலைபேசியை இரவு முழுவதும்.
நீ நிம்மதியாக உறக்கம் கொள்ள, என் தூக்கம் பறி போனது இன்று. 
ராதையே! மனம் திறவாயடி. காத்திருக்கிறேன்… இப்படிக்கு உன் கிருஷ்ணா….
அலாரம் அடித்து ஓய்ந்தாலும் பூங்கோதைக்கு கண்களை திறக்கவும் கட்டிலை விட்டு இறங்கவும் மனம் வரவில்லை.
“சே பழக்க தோஷத்துல அலாரத்த இன்னக்கியும் ஆப் பண்ண மறந்துட்டேன். தினமும் சரியான நேரத்துக்கு பட்டு என் தூக்கத்த கெடுக்குது” கையை நீட்டி அலைபேசியை எடுத்து அலராத்தை மற்றுமன்றி அலைபேசியையே! அனைத்து வைத்தாள். 
ஒருவாறு காலேஜை முடித்து விட்டாள். இனியும் இந்த வீட்டில் இருக்க வேண்டுமா? மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லலாமா? அல்லது திருமணம் செய்துகொண்டு ஒரேயடியாக இந்த வீட்டை விட்டு செல்லலாமா என்றுதான் அவள் மனம் இரவு முழுவதும் போராடிக்கொண்டிருந்தது. அதில் வெகு நேரம் தூங்காமல் இருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று தெரியவில்லை. அலாரம் தூக்கத்தை கெடுத்து விட்டிருக்க, போர்வையை இழுத்து போர்த்தியவாறு மீண்டும் தூங்க முயன்றாள்.
பாட்டி பூஜையறையில் மணியாட்டியவாறு பூஜை செய்வது காதில் விழ தலையணையை தூக்கி காதில் வைத்துக்கொண்டு தூங்க முற்பட, அம்மாவின் குரலும் மெதுவாக கேட்டது. முகத்தை சுளித்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டு தலையணையால் காதை பொத்திக்கொண்டாள்.
வாசலில் அதுதான் நடந்துக்கொண்டிருந்தது. “என்னமா இவ… இன்னமும் தூங்குறா? காலேஜ் முடிச்சாலும் முடிச்சா காலைல லேட்டா எந்திரிக்கிறா? குடும்பத்துக்கு இது நல்லதில்ல. போங்க போய் உங்க பேத்திய எழுப்புங்க” குளித்து முடித்து தலையில் துண்டை கட்டிக்கொண்டு பூஜையறைக்குள் நுளைந்தவாறே! அபரஞ்சிதா அன்னையை அதட்ட
“ஆமா இங்க வாய் சவுடாலு எல்லாம் என் கிட்டாதான். எங்க அவ கிட்ட போய் பேசி பாரேன். உன்ன கிழிகிழினு கிழிப்பா” முணுமுணுத்த அம்மாச்சி வடிவுக்கரசி “என் பேத்தியை பேசுற ஏன் உன் செல்ல பையன் கூட இன்னமும் கும்பகர்ணன் மாதிரி தூங்கிக் கிட்டுதானே! இருக்கான். அவன மட்டும் ஒன்…னும் சொல்லாத” கழுத்தை நொடித்தவர் தீபாராதனையை மகளிடம் கொடுத்து விட்டு சமயலறைக்குள் நுழைந்திருந்தார்.
பூங்கோதை வட்ட முகம். வளைந்த புருவங்கள். பெரிய கண்கள். கூரான மூக்கு. அழகான கன்னங்கள். சிவந்த உதடு. சராசரி உயரம். நீண்ட கூந்தல் என்று அன்னையை கொண்டு பிறந்தவள். ஆனால் பாசத்தை முழுவதுமாக தந்தை மீது வைத்திருந்தாள்.
அதற்காக அன்னை மீது பாசம் வைத்திருக்கின்றாள் என்றால் அதுவுமில்லை. அவள் இந்த உலகத்தில் வெறுக்கும் ஒரே! நபர் அவளை பெற்ற அன்னை அபரஞ்சிதா என்றால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மையும் கூட.
அபரஞ்சிதா பூஜையை முடித்துக்கொண்டு வந்த பொழுதும் கோதை எந்திருக்கவில்லை என்றதும் கோபம் வந்தாலும் மகளிடம் எதுவும் பேச முடியாததால் ஒரு பெருமூச்சு விட்டவாறே! தலையிலிருந்த துண்டை கழட்டி தலையை துவட்டியவாறு அதை காய போட பின்பக்கம் செல்ல அவள் அலைபேசி அடிக்கும் சத்தம் கேட்டது.
அழைப்பது யாரென்று அறிந்துகொண்டவளுக்கு சந்தோசப் புன்னகை தானாக வந்து முகத்தில் குடியேற துண்டை அங்கேயே! போட்டு விட்டு அலைபேசியை இயக்கி காதில் வைத்திருந்தாள்.
“என்ன பண்ணிக்கிட்டு இருக்க அபி…” கணவனின் குரல் காதில் தேனாக பாய
“இப்போதாங்க குளிச்சிட்டு பூஜையை முடிச்சேன். அம்மா இட்லி வேக வைக்கிறாங்க… சாம்பாரு தாளிக்கணும், சட்டினி அரைக்கணும், பசங்க தூங்குறாங்க” புதுசாக திருமணமாக பெண்  கணவனிடம் ஒப்பிப்பது போல் அபரஞ்சிதா ஒப்பித்துக்கொண்டிருக்க, கண்ணபிரான் புன்னகை முகமாகமாகவே! கேட்டுக்கொண்டிருந்தார்.
“அப்பா… எங்க இருக்கீங்க?” அபரஞ்சிதாவுக்கு அலைபேசி வழியாக குரல் கேட்டிருக்க, 
அலைபேசியை காதில் வைத்தவாறே “மொட்டை மாடில இருக்கேன் மா…” என்று கண்ணபிரான் சொல்ல
“யாருங்க ராதையா? எப்படி இருக்கா அவ நல்லா இருக்காளா? கல்யாணத்துக்கு மாப்புள பாக்குறீங்களா?” தன் கணவனிடமே! அவருக்கு பிறந்த மகளை பற்றி அபரஞ்சிதா விசாரிக்க, அதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியாமல் தவித்த கண்ணபிரான்
“நான் கால் பண்ணது உனக்கு பிறந்த பொண்ணோட கல்யாண விஷயம் பேச அபி.. அவளுக்கு மாப்பிள பாத்திருக்கேன்” என்று புருவங்களை சுருக்கி சொல்லியவர் மேற்கொண்டு எதுவும் தகவல் சொல்ல முனையவில்லை.
“என்னங்க பேசுறீங்க? ராதை இருக்குற போ… கோதைக்கு எப்படீங்க கல்யாணம் பண்ணுறது?” என்னமோ தான் பெத்த பெண்ணுக்கு திருமணம் செய்வது போல் அபரஞ்சிதா பதற
கண்ணபிரானின் மூத்த தாரம் கயந்திகா அபரஞ்சிதா பற்றியும் கோதையை பற்றியும் பேசியவைகளை ஒரு நொடி மனதில் நிழலாட மூச்சை இழுத்து விட்டு தலையை உலுக்கிக் கொண்டு “அபி நீ போன ராதை கிட்ட கொடு நான் பேசிக்கிறேன்” என்றார் கண்ணபிரான்.
“ராதை இல்லங்க உங்க சின்ன பொண்ணு பேர் கோதை” சின்ன வயதிலிருந்து இரு மகள்களின் பெயர்களையும் கணவர் மாற்றித்தான் கூறுகிறார் என்பதால் சிரித்தவாறு தனது மகள் உறங்குவதாக சொல்லாமல் அன்னையை தேடி செல்ல அலைபேசி அடித்ததிலிருந்து சமயலறையில் இருந்தாலும் வடிவின் காது மகளின் வார்த்தைகளில் இருந்ததால்
“ஓஹ்.. மாப்புள பாத்திருக்கானா… எப்படிப்பட்ட மாப்புளய பாத்திருக்கானோ! இவ வேற அப்பன் பார்த்த மப்புளனா கண்ண மூடிக்கிட்டு தாலிய கட்டிக்குவாளே!” பேத்தியை நினைத்து மனதுக்குள் புலம்பியவாறே மகளை முறைத்த வடிவு அலைபேசியை வாங்கிக்கொண்டு கோதையின் அறைக்குள் நுழைந்திருந்தார்.
வடிவுக்கரசி. பெயரை போலவே! இளமையில் அழகோவியமாக திகழ்ந்தவர்தான். அந்த அழகு மட்டுமல்ல மேடைகளில் நடனமாடும் நாட்டிய கலைஞராகவும் திகழ்ந்தவர். தனது மகளும் மேடையில் அரங்கேற்றி பேரும் புகழும் வாங்க வேண்டும் என்று வடிவு ஆவல் கொள்ள அபரஞ்சிதா கண்ணபிரான் மீது காதல் கொண்டதன் காரணத்தால் அந்த கனவை தூக்கிப் போட்டாள்.  
தனக்கு தன் காதல்தான் முக்கியம் என்று அன்னையை எதிர்த்து கண்ணபிரானை திருமணமும் செய்துகொண்ட அபரஞ்சிதா இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பின்தான் வடிவுக்கரசி மகளோடு சமாதானமானார்.
அபரஞ்சிதா பெங்களூரிலுள்ள கோரமங்களாவில் பிறந்து வளர்ந்து அங்குதான் ஆசிரியையாக பணியாற்ற, கண்ணபிரான் சென்னையில் ஒரு கம்பனியை நடாத்தி வருகிறார்.
பூங்கோதைக்கு விவரம் தெரிய வரும்வரை அம்மாவின் பின்னால் அலைந்தவள்தான். ஆனால் அப்பா செல்லம். எது செய்தாலும் தந்தையிடம் ஒரு வார்த்தை கேளாமல் செய்ய மாட்டாள்.
சின்ன வயதில் அவளுடைய பிறந்த நாளுக்கு கூட தந்தை வராமல் போகவும் ரொம்பவும் மனமுடைந்து ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள். ஆனால் தந்தையிடம் எந்த கேள்வியும் கேக்க மாட்டாள்.
“பாவம் அப்பா… ஆபீசில் அதிக வேலை கொடுக்கிறார்கள். அப்பா இல்லாம அங்க எந்த வேலையும் நடக்காது, தீபாவளி பொங்கலுக்கு கூட லீவு எடுக்க முடியாதபடி வேலை வேலைனு அலையிறாரு”  அன்னை சொல்லும் சமாதானக்களில் குழந்தைகள் இருவரும் தந்தை மீது மேலும் பாசத்தை கொட்ட, வடிவுக்கு மருமகன் மீது சந்தேகம்தான் வந்தது.
பண்டிகை, பிறந்தநாள், கல்யாணநாள் என்று ஒரு நல்ல நாளுக்கும் வீடு வரக் காணோம். அப்படி என்ன வேலையோ! சந்தேகம் கொண்டாலும் மருமகனின் நடத்தையிலும், குணத்திலும் வடிவுக்கு ஒரு பொழுதும் சந்தேகம் வந்ததில்லை. கண்ணபிரான் வீடு வந்தால் மனைவி மக்களிடம் அவ்வாறு நடந்து கொண்டதுமில்லை.
கண்ணபிரான் வீடு வந்தால் வீடே! கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால் ஏதோ! ஆர்மியில் இருப்பது போல், ரகசிய போலீசில் வேலை செய்வது போல் வருடத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய நாட்கள் தான் வீட்டில் தங்கி இருந்திருப்பார்.
அப்படி என்ன மருமகன் சென்னையில் செய்கின்றான் என்று வடிவு சென்னையில் வசிக்கும் தனது தோழி ஒருத்தியின் மூலம் விசாரிக்க சொல்லி இருந்தார்.  
எந்த தப்பு தண்டாவும் மருமகன் செய்யக் கூடாது என்று கடவுளை வேண்டியவாறு வடிவு இருக்க, இடியாய் அந்த செய்தி வந்தது அது கண்ணபிரானுக்கு சென்னையில் ஒரு குடும்பம் இருப்பதாகவும். அவர் நடாத்தும் கம்பனி அவரது மூத்த தாரத்தின் கம்பனி என்றும் தனது தோழி வந்து சொன்னதாக வடிவு மகளிடம் சொல்ல, அபரஞ்சிதாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“அப்போ… அப்போ.. உனக்கு ஏற்கனவே! தெரியுமா? தெரிஞ்சிதான் நீ அந்த மனுஷன கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” வடிவு மகளை தாறுமாறாக அடிக்க, பிள்ளைகள் இருவரும் அதிர்ந்த முகபாவனையில் பார்த்திருந்தனர்.
“அடிப்பாவி… புருஷன் அவ்வளவு தூரத்துல இருக்கானே! மாசத்துக்கு ஒருக்காவாவது வீட்டுக்கு வரானில்ல. அப்படி என்ன அந்த கம்பனியை கட்டிக்கிட்டு அழுறான். இங்க வந்து தொழில் பார்க்க முடியாதா? இல்ல நாமா அங்க போவோம்னு உன் கிட்ட எத்தனை தடவ சொல்லி இருப்பேன். பாவி பாவி. நான் சொல்லும் பொழுது அமைதியா கேட்டுகிட்டு இருந்துட்டு ஒண்ணுமே! பேசாம போய்டுவியே! இதுக்குத்தானா? அப்படி என்னடி கன்றாவிக் காதல் அடுத்தவன் புருஷன் மேல? த்து…” பெத்த மகள் என்றும் பாராமல் காரி உமிழ்ந்தார் வடிவு.
அபரஞ்சிதா பிள்ளைகளோடு சொந்தமாக ஒரு குடியிருப்பில்தான் வாழ்ந்து வந்தாள். அன்னை தங்களோடு வந்து தங்க ஆரம்பித்த பின் கணவனோடு பேசி  கையிருப்பையும் போட்டு பெரிய தோட்டத்தோடு நான்கு அறைகளைக் கொண்ட ஒரு வீட்டை வாங்கி குடியேறி இருந்தாள்.  
நகரத்தில் இருந்து சற்று ஒதுக்குப் புறமாக இருந்தபடியால் கிராமிய மனம் வீசும்படியாக இருந்த அவர்கள் வீட்டையும், சூழலையும் குழந்தைகளுக்கு பிடித்துப் போகவே! தந்தையோடு சென்று தங்கும் எண்ணமெல்லாம் வரவே இல்லை. அதுவும் சென்னை போன்ற கொழுந்து விட்டெரியும் நகரத்தில்.       
“பாட்டி சொல்வது உண்மைதான். தந்தை அந்த கம்பனியை கட்டிக்கொண்டு அழுவதாக அன்னை இதுவரையில் எந்த குறையும் கூறியதில்லை. எந்த விசேஷமான நாளுக்கும் கூட தந்தை வீட்டில் இல்லை” காரணம் புரிந்த பொழுது பூங்கோதைக்கு வயது பதினைந்து. தம்பிக்கு பதிமூன்று.
கோதைக்கு தந்தையின் மீது எந்தக் கோபமும் வரவில்லை. மொத்த கோபமும் அன்னையின் மீதுதான் இருந்தது. “அது எப்படி கல்யாணம் ஆகி விட்டது என்று தெரிந்த பின்னும் தந்தையை காதலித்து திருமணம் செய்துகொண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டாள். அவரிடத்தில் எதையும் அன்னை எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் பிள்ளைகள் நாங்கள் எதிர்பார்ப்போமே!” வெறுப்பாக அன்னையை பார்த்தவள் அதன் பின் அபரஞ்சிதாவிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளவில்லை.
தந்தை ஏற்கனவே! திருமணமானவர் என்று அறிந்து திருமணம் செய்திருக்கிறாள். அதை பெற்ற பிள்ளைகளிடமும் பெத்த தாயிடமும் மறைத்து ஏமாற்றி இருக்கிறாள். அவரை பிளாக்மெல் செய்து திருமணம் செய்து கொண்டாளோ! வயது கோளாறில் தப்பு செய்து குழந்தை ஊடான பின் வேறு வழியிலல்லாது திருமணம் செய்ய நேர்ந்ததோ! நினைக்கும் பொழுதே! அருவருப்பாக இருக்க, தன் பிறப்பின் மீதே! சந்தேகம் வர உடல் கூசி நின்றவள். தவறு முழுவதும் அன்னையிடம் என்றுதான் எண்ணினாள்.
தந்தை ஏமாற்று பேர்வழியாக இருந்திருந்தால் அன்னையின் கழுத்தில் தாலியும் ஏறி இருக்காது. தம்பி வசந்த்தும் பிறந்திருக்க மாட்டான். அவர்களுக்கிடையிலான உறவு எத்தகையது என்று ஆராய்ச்சி செய்ய கோதைக்கு இஷ்டமில்லை. அது அவர்களின் பிரச்சினை. உண்மையை அறிந்த பின் அன்னையை வெறுக்க ஆரம்பித்தவள் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் தந்தையிடம் ஹாஸ்டலில் சேர்த்து விடும்படி கெஞ்சினாள். கண்ணபிரான் மறுத்து விட அந்த கோபமும் வார்த்தைகளாகி அபரஞ்சிதாவை பதம் பார்க்க ஆரம்பிக்க, முடிவாக வடிவே! கோதையை ஹாஸ்டலில் சேர்த்திருந்தார்.
வடிவுக்கும் மகள் மீது கட்டுக்கடங்காத கோபம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக கோதை போல் பேசாமல் இருந்திட முடியாதே! ஒதுக்கி வைப்பதால் மகள் செய்த தவறும் சரியாகாது. தனக்கும் அவளை விட்டால் வேறு போக்கிடம் கிடையாது. கொஞ்சம் சுயநலமாக சிந்தித்தாலும், பெத்த மகளை விட முடியாதே!
விடுமுறை நாட்களில் கோதைக்கு வீட்டுக்கு வருவதென்றால், யாரோ! கழுத்தை நெறிப்பது போன்ற எண்ணம். அவ்வளவு வெறுப்பு. இப்பொழுது படிப்பை முடித்து விட்டு முற்றாக வீடு வந்திருக்க, அடுத்து என்னவென்று புரியாமல்தான் இரவில் விழித்து பகல் முழுவதும் தூங்க முயற்சிக்கின்றாள். அவளை பெற்றவளிடமிருந்து காப்பாற்ற போகும் அந்த கல்யாண சம்பந்தம் யாருடையதாக இருக்குமோ!
“அடியேய் கோதை இந்தா உங்க அப்பா பேசுறாரு. சூரியன் உச்சத்துக்கு வரும்வரைக்கும் தூங்குவியா என்ன?”  தூங்கிக் கொண்டிருப்பவளின் பின் பக்கம் பலமாக ஒன்று வைக்க திடுக்கிட்டு விழித்தவள் அம்மாச்சியை முறைக்க,
அலைபேசியை காட்டி மீண்டும் வடிவு சொல்ல கண்கள் மின்ன அலைபேசியை வாங்கிக் கொண்டவள் கண்களாளேயே! “வெளியே! போ” எனும் விதமாக மிரட்ட கழுத்தை நொடித்தவாறு வடிவு வெளியேற
“பார்த்து போ கிழவி கழுத்து சுளுக்கிக்கும்” என்று கத்தினாள் கோதை.
இந்த பேச்செல்லாம் கண்ணபிரானின் காதில் விழத்தான் செய்தது. மகள் என்ன பாட்டியிடம் இப்படி பேசுகிறாள் என்று எண்ணாமல் அவளின் அப்பேச்சை ரசித்தவருக்கு தான் பெற்ற மகள் பிறர் முன்னிலையில் இப்படி மரியாதைக் குறைவாக என்றுமே! பேசமாட்டாள் என்பதும் நன்றாகத் தெரியும்.
கூடவே! அபரஞ்சிதா அவளை நன்றாகத்தான் வளர்த்திருக்கிறாள் என்று நினைக்கும் பொழுது தன் காதல் மனைவியை நினைத்து பெருமிதம் கொண்டவருக்கு பணத்துக்காகவும் பகட்டுக்காகவும் தான் சென்னையில் வாழும் வாழ்க்கையை நினைத்து வெறுப்பாகவும் இருந்தது.
கயந்திகா ஒருநாளும் காலையில் எழுந்து சாமி கும்பிட்டு அன்றைய நாளை ஆரம்பித்து கண்ணபிரான் அவர்களது கல்யாண வாழ்க்கையில் பார்த்ததே! இல்லை. அவள் எழுந்துகொள்ள ஒன்பது மணி தாண்டும். அறையிக்கு க்ரீன் டீ செல்லும் பொழுதுதான் அவள் எழுந்து விட்டாள்  என்பது கண்ணபிரானுக்கே! தெரியும். அவர் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து விட்டு டென்னிஸ் கிளப் சென்று விடுவார். எட்டு மணிக்கு வீடு வந்தால் நியூஸ் படிப்பது, பார்ப்பது என்று பொழுது போக அதன் பின் குளித்து விட்டு ஆபீஸ் செல்ல தயாராகி கீழே வரும் பொழுது மேசையில் உணவு தயாராகி இருக்கும். 
ராதை ஸ்கூல் செல்ல தயாராக்குவதும் ஒரு வேலையாள் பொறுப்பில் இருக்க, அன்னையாக, மனைவியாக கயந்திகா எந்த பொறுப்புகளையும் இதுவரை ஏற்றுக்கொண்டு செய்ததில்லை.
ராதை காலேஜ் செல்லும் பொழுது அவளே! தயாராகி கீழே வந்து தந்தையோடு உண்டு விட்டு கிளம்பி விடுவாள்.
காலேஜ் முடித்த பின் அவளும் அன்னையை போல் காலையில் எந்திரிக்க ஒன்பது மணியை தாண்ட, கல்யாணமாகி இன்னொரு வீட்டுக்கு போக வேண்டிய பெண் என்ற கவலை கண்ணபிரானின் மனதில் ஏறிக்கொள்ள, மகளை கம்பனிக்கு வரும்படி வற்புறுத்திக்கொண்டிருக்க சமீபகாலமாகத்தான் வருகிறாள்.
கண்ணபிரானுக்கு மனைவியை நினைத்து கோபம் தலைக்கேறினாலும் எதுவும் பேச முடியாதபடியால் சொந்த வீட்டில் விருந்தாளி போன்ற வாழ்க்கைதான்.
கண்ணபிரானுக்கு இன்னொரு குடும்பம் இருப்பது தெரிந்த பின்னால் இவ்வாறெல்லாம் நடப்பதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் இது கல்யாணமான நாள் முதல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
“ஹலோ அப்பா.. எப்படி இருக்கிறீங்க? சப்டீங்களா? என்ன பண்ணுறீங்க? இன்னக்கி டென்னிஸ் விளையாட போகல போலயே!” சின்ன மகள் அக்கறையாக விசாரிக்கவும் கண்ணபிரானின் இதயம் கனிந்தது. 
“இன்னக்கி கொஞ்சம் வேல இருக்குனு போகல மா…” மகள் கேட்டதுக்கு பதிலை சொல்லியவர் “உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ராதை” என்று இழுக்க… கோதைக்கு கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்பாகத்தான் இருந்தது.
எப்போ பேசினாலும் தந்தை இரு பெண்களின் பெயர்களையும் மாற்றித்தான் கூறுவார். கோதை அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. அபரஞ்சிதாவும் பெரிதுபடுத்த மாட்டாள்.
பெயரை பற்றி தந்தையிடம் வாக்குவாதம் பண்ணாமல் தந்தை ஏதோ! முக்கியமான விஷயம் பேச அழைத்தாரே! என்னவாக இருக்கும்? என்ற சிந்தனையில் எழுந்தமர்ந்தவள் “எதுவானாலும் சொல்லுங்கப்பா… என் கிட்ட சொல்ல என்ன தயக்கம்” அன்பாக மகள் கட்டளையிட
“உனக்கு மாப்பிளை பாத்திருக்கேன் மா…” கண்ணபிரான் கொஞ்சம் தயங்கியவாறுதான் ஆரம்பித்தார்.
ஆனால் கோதைக்கு அது தான் அவள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி போல் “நிஜமாவா ..ப்பா… சொல்லுறீங்க?”
கண்கள் மின்ன மகள் நிற்கும் தோற்றம் அலைபேசியினூடாக கண்ணபிரானுக்கு தென்படாததால் அவள் சந்தேகமாக கேட்பது போல் தோன்ற “ஆமாம்மா… அப்பா உனக்கு மாப்பிளை பார்க்கலாம்ல?” தந்தையாக தனது கடமையை செய்வதற்கும் அனுமதி வேண்டி நின்றார் இரண்டு குடும்பங்களை கட்டிக் காக்கும் பொறுப்பில் இருக்கும் அந்த தந்தை.
“என்னப்பா நீங்க? இவன்தான் மாப்புளனு ஒருத்தன என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துனீங்கனா? அவன் கையாள தாலிய கட்டிக்க போறேன். இதுல என்ன உங்களுக்கு சந்தேகம்” மகள் திருப்பிக் கேட்ட பின்னால் தான் தந்தை நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
“நான் உனக்கு பாத்திருக்குற மாப்புள யார்னா?”
“அதான் நான் சொன்னேனே! யாரானாலும் பரவாலன்னு, எப்போ? எங்க? கல்யாணம்னு மட்டும் சொல்லுங்க உங்க பொண்ணு தயாராகி வந்து நிப்பா” அவள் குரலில் இருந்த தீவிரம் கண்ணபிரானின் முகத்தில் புன்னகையை தோற்றுவித்திருக்க, “ஆ.. அப்பா மாப்பிளைகிட்ட பொண்ணு பேர் கோதைனு சொல்லுங்க, மறந்து மாத்தி சொல்லிட போறீங்க, அப்பொறம் பொண்ணு மாறி போச்சுன்னு ரகள பண்ண போறாரு” என்று கிளிக்கி சிரித்தவள் அலைபேசியை அனைத்து தூக்கிப்போட்டு விட்டு சந்தோசமான மனநிலையில் கட்டிலை விட்டு இறங்கி குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
“என்ன உங்க ஆச மனைவி கிட்டயும் செல்ல பொண்ணுக்கிட்டயும் பேசிட்டிங்களா?” படிகளில் இறங்கும் கணவனிடம் கிண்டலாக கேட்டாள் கயந்திகா.
“மாப்புள யார்னு கூட கேக்கல நீங்க சொன்னா சரிப்பானு சொல்லிட்டா என் பொண்ணு” பெருமையாக சொல்ல கயந்திகாவின் முகம் கருத்து விட கண்ணபிரானின் முகத்தில் விரிந்த புன்னகை மலர்ந்தது.
கணவனின் முகத்தில் இருந்த அதீத சந்தோசம் கயந்திகாவை தூண்டி விட “ஆமாம்மா… என் தம்பிய கட்டிக்க உங்க பொண்ணுக்கு கசக்குமா என்ன? சொத்து மட்டுமா? அழகானவன், படிச்சவன்” என்று தம்பியை புகழ,
சத்தமாக சிரித்த கண்ணபிரான் “அதான் சொன்னேனே! யாரு மாப்பிளைனு கூட கேக்காமத்தான் சம்மதம் சொன்னான்னு. இதுல நான் பார்த்த மாப்புள  உன் தம்பின்னு சொன்னா மட்டும் வேணான்னு சொல்லவா போறா?” மனைவியின் மூக்கை உடைக்க
“கல்யாணமாகி என் பொறந்த வீட்டுக்கு தானே! வரப்போறா… கதற விடுறேன்” மனதுக்குள் கருவிக்கொண்ட கயந்திகா கணவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்.
தனது தந்தையின் கம்பனியில் வேலை பார்த்த திறமையான ஆணழகனான கண்ணபிரானை தந்தையின் சம்மத்தோடுதான் திருமணம் செய்து கொண்டிருந்தாள் கயந்திகா.
செலவச் செழிப்பிளையே! வளர்ந்த கயந்திகாவுக்கு தான் ஆசைப்பட்டது எந்த வழியிலும் கிடைக்க வேண்டும் என்ற அகங்காரம் எப்பொழுதும் உண்டு. அதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவளும் கூட. அவளது குணமறிந்துதான் கண்ணபிரானை அவளது தந்தை வேலுநாயகம் அவளுக்கு திருமணமும் செய்து வைத்திருந்தார்.
அவளது தந்தை உயிரோடு இருக்கும்வரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. தந்தை இறந்த சில நாட்களிலையே! கணவன் அடிக்கடி வெளியூர் கிளம்ப விழித்துக்கொண்டவள் தம்பியிடம் கூறி வேவு பார்கலானாள்.
அப்படி அவள் கண்டறிந்த உண்மைதான் கண்ணபிரானின் இன்னொரு குடும்பம். தந்தை உயிரோடு இருக்கும் பொழுது இந்த உண்மை தெரிய வந்திருந்தால் அந்த குடும்பத்தையே! உயிரோடு புதைத்திருப்பார். இன்று அவர்கள் இறந்த இடத்தில் புற்பூண்டு கூட முளைத்திருக்காது.
தம்பியிடம் அந்த குடும்பத்தை கொன்றொழிக்க சொன்னால் அவன் அதை விட அதிர்ச்சியான செய்தியை கயந்திகாவின் நெஞ்சில் இறக்கி இருந்தான். அது சொத்தை நான்காக பிரித்து கண்ணபிரானின் பிள்ளைகள் மூன்று பேருக்கும் மற்ற ஒரு பங்கு வேலுநாயகத்தி நேரடி வாரிசான யுவனுக்கும் எழுதப்பட்டிருந்தது. 
அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அந்த சொத்து ட்ரஸ்ட்டுக்கு போகும்படி வேறு எழுதி இருக்க, அந்த குடும்பத்தை ஒன்றும் செய்ய முடியாமல் அக்காவும், தம்பியும் தலையை பிய்த்துக்கொண்டனர்.
வக்கீலிடம் விசாரித்ததில் தந்தை இருக்கும் பொழுது எழுதப்பட்ட உயில் என்று கூறப்பட யுவனுக்கு அதில் இருக்கும் மர்மம் புரியவில்லை. கண்ணபிரானின் மேல் அளவுக்கடந்த கோபம் வந்தாலும் சொத்தையும் மீட்க வேண்டும், அக்காவின் வாழ்க்கையையும் மீட்க வேண்டும் என்ன செய்வது? என்று யோசித்து கோதையை திருமணம் செய்வதுதான் ஒரே வழி என்று அக்காவிடம் அறிவுரை கேட்டிருக்க, கயந்திகாவுக்கும் அதுதான் சரி என்று பட்டது.
நேராக கணவனிடம் சென்று நின்றவள் கண்ணபிரான் அபரஞ்சிதாவோடு நிற்கும் குடும்பப் புகைப்படத்தைக் கொடுத்து “நாளைக்கு என் பொண்ணக்கு கல்யாணமான பின்னால இந்த அசிங்கம் எல்லாம் வெளியே வந்தாலோ! இல்ல. என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணும் போது அவங்க வந்து பிரச்சினை பண்ணமா இருக்கணும்னா ஒரே வழிதான் இருக்கு யுவனுக்கு அந்த பொம்பளையோட பொண்ண கட்டி வைங்க. ஒரே குடும்பம்னு ஆகிட்டா எந்த பிரச்சினையும் பண்ண மாட்டாங்கல்ல” என்று சொத்து விவரம் தனக்கு தெரியும் என்று கூறாமல் தன்மையாக பேச
கயந்திகா பிரச்சினை பண்ணாமல் இவ்வாறு பேசுவதே! மேல் என்று எண்ணிய கண்ணபிரான் திருமணத்தை பற்றி வீட்டில் பேசி இருக்க கோதையின் முழு சம்மதமும் கிடைத்திருந்தது.
அக்கா இருக்க தங்கைக்கு திருமணம் செய்கின்றோம் என்ற கவலை எல்லாம் கயந்திகாவுக்கு இல்லை. அவளை பொறுத்தவரையில் தம்பிக்கு திருமணம் அவ்வளவுதான்.
தனது அன்னையிடமிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்க முடியுமோ! அவ்வளவு தூரம் விலகி இருக்க  நினைக்கும் கோதை கண்மூடித்தனமாக தந்தையின் மீதான பாசத்தால் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாள் யாருடன் திருமணம் நடைபெற போகிறது என்று அறிய நேர்ந்தால் திருமணத்தை மறுப்பாளா? அல்லது தந்தைக்காக தலை குனிந்து தாலியை ஏந்திக்கொள்வாளா?

Advertisement