Advertisement

தூரம் 4

சக்திக்கு வாயிலேயே அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது, கொஞ்ச நேரம் முன்புதான் லாலாவோட நன்றாக உண்டுவந்தான். அந்த வாசமும் சுவையும் நீங்காது இருக்க, சரோவிடம் பேசும்போது சரளமான பேச்சில் அதையும் சொல்லிவிட்டான். கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தவன், மீண்டும் கையை முகர்ந்து பார்க்க தக்காளி சாதம் வாசம் மூக்கைத் துளைத்தது. இவன் என்ன பேசலாம் என யோசிக்க, சரோவோ

“கோவில்ல அவன் ப்ரண்ட்ஸ் எல்லாரும் சாப்பிட்டாச்சு, மறுபடியும்  ஒரு கேரியர் கட்டிட்டு போறான், எங்கம்மாவும் அப்படியே வைச்சிக்கொடுக்குது. உனக்குக் கொடுக்க தக்காளி சாதமே இல்ல தெரியுமா சக்தி?” என்று வருத்தமாக சொன்னாள்.  பின் சட்டென்று

“ஆமா, தக்காளி சோறு நல்லாயிருக்குனு எப்படி சொன்ன?” என்று கேட்டாள்.

‘போலிஸ்காரன் பொண்டாட்டி ஆகுற தகுதி மொத்தமும் இருக்குடி உனக்கு’ என்று சீராட்டிய சக்தி மனமோ ‘இன்னிக்கு எத்தனை உருட்டோ?’ என்று நினைக்காது இல்லை.

“அது உங்க வீட்டு மண்டாபிடி சாப்பாடு டேஸ்ட்டா இருக்குனு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க” என்றான் கிண்டலாக.

“எங்க வீட்டைப் பத்தி நல்ல விஷயம் எல்லாம் காதுல கேட்குது போல” சரோஜினி ராகமிழுக்க

“என்ன பண்றது? எங்களுக்குப் பெருந்தன்மை இருக்கு, மாமனார் வீட்டை விட்டுக்கொடுக்க முடியுமா?” என்றதும் சரோஜினி மனது இறக்கை விரித்தது.

அவளுக்குப் பிடித்த சக்தியுடன் திருமணம், அவள் காதல் கைக்கூடப்போகும் நாளுக்காக ஆவலாகக் காத்திருந்தாள். நிச்சயம் இரு குடும்பமும் படையெடுக்கும் என்று தெரிந்தாலும், அவள் சித்தப்பா சித்ரஞ்சனிடமிருந்து வந்த தைரியமா தெரியவில்லை. இல்லை சக்தி மீதான நம்பிக்கையா தெரியவில்லை. ஆனால் சரோஜினிக்கு சக்தி மட்டுமே! 

சரோஜினி அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டு கனாவில் மிதக்க,

“சரோ… சரோசா…” என்று அவன் அழைக்கவும் கடுப்பானாள்.

“சரோஜினீயீயி!!” என்று அழுத்தி சொன்னாள்.

“சரிங்க சரோஜினி! உங்களுக்குக் கல்யாணத்தை நினைச்சு கொஞ்சமும் பயமில்லையா? எதாவது ப்ளான் வைச்சிருக்கியா? எப்போ சொல்ல போறோம்?” என்று கேட்டான் சக்தி. அவனுக்கு இப்போது திருமணம் குறித்த எண்ணமில்லை, ஆனால் இப்போதிருந்து பலவாறு யோசித்தால் மட்டுமே இவர்கள் திருமணம் சாத்தியம் என்று தெரியும்.

சக்திவேல் அவன் வீட்டை யோசித்தான். அவன் தாத்தா லட்சுமணன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் கூட அவன் அத்தை வசுந்தரா சித்ரஞ்சனை  மணந்தது இன்றும் கூட அவருக்கு வருத்தம். வீட்டின் ஒரே மகன்! தாத்தா, அப்பா, அம்மா என்று எல்லாருக்கும் செல்லம். அவனை சுற்றியே அவர்களின் உலகம்!

சக்திவேலின் ஆசைகளுக்கு என்றுமே அவன் வீட்டில் மதிப்பு உண்டு. ஆனால் அந்த சுதந்திரம் எல்லாம் சுதந்திர விலாஸத்து பெண் மீது காதல் என்றால் மொத்தமாக போய்விடும். உண்மையை சொல்ல வேண்டுமானால் பாகிஸ்தான் பெண்ணை விரும்பினால் கூட லட்சுமணன் திருமணம் செய்து வைப்பார். ஆனால் அவர்களின் பக்கத்து  வீடு என்பது ஜப்பானுக்குக் கொரியா போல, இந்தியாவுக்குப் பாகிஸ்தான் போல, அமெரிக்காவுக்குக் க்யூபா போல.. 

அவன் அத்தையை அவனுக்கு மிகவும் பிடிக்கும், சின்ன வயதில் சக்தியைக் கவனித்தது எல்லாம் வசுந்தரா. ஆனால் அவரை பார்த்தே பலவருடம் ஆகிவிட்டது. லட்சுமணன் ரோஷக்காரர், மகளை மொத்தமாக விலக்கிவிட்டார்.

 

சரோஜினி யோசிக்க, சக்தி

“சரோ! ஒருவேளை நம்ம இரண்டு பேர் வீட்லையும் ஒத்துக்கலன்னா?” என்று கேட்டான்.

“நீயும் நானும் பேசினது எல்லாம் அப்படியே உன் தாத்தா கிட்ட காட்டுவேன், கட்டினா உங்க பேரனைத்தான் கட்டுவேனு உங்க வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருப்பேன், சத்யாகிரகம் பண்ணுவேன்” என்று சரோஜினி பேசிக்கொண்டே போக

“உண்ணாவிரதம், சத்யாகிரகம். என்னடி இதெல்லாம்? திலகர் பேத்தினு காட்டுற பார்த்தியா?” என்று சக்தி கிண்டலாகக் கேட்டான். கூடவே

“ஏட்டி! எவ்வளவு திமிர் இருந்தா போலீஸ்காரன் எனக்கெதிராவே எவிடன்ஸ் இருக்குனு சொல்லுவ?” என்று கேட்டான்.

“பின்ன, போலிஸா தைரியமா பொண்ணைத் தூக்கிட்டு போகாம, ஒத்துக்கலன்னா என்ன செய்வனு கேட்டா?” என்று சரோஜினியும் எதிர்க்கேள்வி கேட்டாள்.

“உங்க சித்தப்பன் புத்தி போகுதா பாரு” என்று சக்தி அதற்கும் பேச

“உங்க அத்தைக்குப் பிடிச்சதாலதானே போனாங்க. சும்மா எங்க சித்தப்பாவையே பேசாத சக்தி” என்றாள் கடுப்பாக.

அத்தைக்குப் பிடித்து தானே போனார்கள் என்று சக்தியும்  நினைத்தான். அவன் மட்டுமில்லை, எல்லாரும் அப்படித்தான்  நினைத்தார்கள். வசுந்த்ரா சித்ரஞ்சனை விரும்பி மணந்தாள் என்று. ஆனால் வசுந்த்ரா சித்ரஞ்சனை காதலிக்கவே இல்லை என்ற உண்மை யாருக்கும் தெரியாது!! தெரிந்தால்??

 

 

 

Advertisement