Advertisement

தூரம் 2

சக்திவேலும் லாலாவும் இன்று நண்பர்கள் இல்லை. அவர்களின் பத்து வயது முதல் தோழர்கள். சிறுவர்களாய் இருந்த போது ஒன்றாய் விளையாட, திலகரும் லட்சுமணனும் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பேரப்பிள்ளைகளிடம் பகையை வளர்க்க தொடங்கினார்கள்.

 

திலகர் “ஏண்டா லாலா? நம்ம குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம் வெள்ளையனை வெளியேற சொல்லி போராடினவங்க, இவன் கொள்ளுத்தாத்தா கூஜா  குமாஸ்தா ஆனான், நாம்ம வாங்கின சுதந்திரத்தை இவங்க அனுபவிக்கிறாங்க. இந்த பய கூட சேராத!” என்று சொல்லி இழுத்து போனார்.

லட்சுமணன் அவர் பங்கிற்கு, “இவங்களாம் அன்சிவிலைஸ்ட் சக்தி, இவன் பேரன் கூட எல்லாம் ப்ரண்ட் அஹ் இருக்காத, படிக்காம உருப்பட மாட்ட” என்று ஆங்கிலத்திலும் வசைபாடி இழுத்துப்போக, திலகருக்குத் தாங்க முடியவில்லை.

லட்சுமணனின் தந்தை வேதையன் ஆங்கிலேயரின் அரசில் பணியில் இருந்தவர், அடுத்து லட்சுமணனும் வங்கி ஊழியர் என்று இருக்க திலகரின் தந்தை விவசாயி, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு அதில் கொஞ்சம் சொத்துகளை இழந்தார். ஆகையால் தன் வாரிசுகளை அரசு பணியில் அமர்த்துவதே திலகரின் லட்சியம்.

அவர் மகன் வாஞ்சி நாதன் ஆடுதுறையில் விவசாய அதிகாரியாக இருக்கிறார், பேரன் லாலாவை அரசு தேர்வுகளுக்குத் தயார் படுத்திக்கொண்டிருக்கிறார். சின்ன மகன் சித்ரஞ்சனும் அரசு வேலையே.

இதனால்தான் தன் மகன் பெண்டிக் பாஸ்கரை அவரின் விருப்பம் போல் பேராசிரியர் ஆக்கிய லட்சுமணன், பேரனை காவல்துறை அதிகாரி ஆக்கிவிட்டார். சக்தி என்று இன்ஸ்பெக்டர் ஆனானோ அன்றிலிருந்து லாலாவுக்கு திலகரின் தொல்லைகள் அதிகம். நண்பனிடம் புலம்பி தள்ளிவிடுவான்.

ஏழு வயதில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடும்போது தாத்தாக்கள் இருவரும் பேரன்களைப் பிரித்து அழைத்து சென்றுவிட, அதன்பின் அவர்களும் பகை கொண்டே இருந்தனர். ஒரே பள்ளி, ஒரே வகுப்பு என்றாலும் கூட பேசுவதே கிடையாது. பேசினாலும் தாத்தாவைப் போலவே பேசுவார்கள்.

ஆசிரியர் திட்டினால் லாலா உடனே, “மிஸ்! எங்க தாத்தாதான் இண்டிபெண்டன்ஸ் வாங்கி கொடுத்தார், அவங்களாம் சீட்டர்ஸ். தேசப்பற்றே இல்லாதவங்க” என்று பத்து வயதில் ஆசிரியரிடம் சண்டைக்கு நிற்பான்.

சக்தியும் லேசில் விடமாட்டான். அவனுக்கும் கோபம் வரும், ஆனால் பாடப்புத்தகத்தில் எல்லாம் அவனுக்கு சாதகமாக ஒன்றுமே இல்லாமல் இருந்ததால் கை நீட்டி விடுவான். அப்படி ஒரு முறை பிரச்சனை ஆகிப்போக, இரு வீட்டிலும் அப்பாக்கள் வேலைக்குச் சென்ற காரணத்தால் தாத்தாக்கள் பள்ளி சென்றனர். இந்த பிரச்சனையை சொல்ல பேரன்களே பரவாயில்லை என்பது போல் அப்படி ஒரு தகராறு.

“உங்களுக்கு உங்க பேரப்பசங்களை அடக்க முடியலன்னா பேசாம டீசி வாங்கிட்டு போங்க” என்று முதல்வர் சொல்ல,

“நாங்க ஏன் அவனுக்கு பயந்து போகணும்” என்று ஒரே மாதிரி  நினைத்து கடைசிவரை ஒன்றாகவே படித்தனர். அங்கே துளிர்த்தது அவர்கள் நட்பு, அதுவும் ஒரு சோசியல் பரீட்சையில்.

எதில் வேண்டுமானாலும் மதிப்பெண் குறையலாம், சுதந்திரம் சார்ந்தவற்றில் குறைந்தால் திலகர் தொலைத்துவிடுவார். தானாக படித்தால் வேறு, சக்தி அப்படித்தான். ஆனால் சக்தியை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று லாலாவை திலகர் படுத்தி எடுப்பார்.

பரீட்சை எழுதும்போது ஒரு கேள்விக்கு லாலாவுக்கு விடை தெரியவில்லை.

“பஞ்சாப் கேஸரி” என்று அழைக்கப்படுபவர் யார் என்று கேள்வி இருக்க

“பஞ்சாப்ல கேசரி செஞ்சவன் பெயர் எனக்கு எப்படி தெரியும்?” என்று முழித்தான் பத்து வயதான லாலா.

வெகு நேரமாக அவனுக்கு விடை தெரியாமல் போக, முன்னே இருந்த அவன் நண்பனை கேட்க அவனுக்கும் தெரியவில்லை. அவன் அவர்களுக்கு நேராக இருந்த சக்தியைக் கேட்க, சக்தி திரும்பி லாலாவைப் பார்த்தான்.

“உன் பெயர் தாண்டா” என்றான். சக்தி விடை சொன்னதே அதிசயமாக பார்த்தவனுக்கு அவன் பதிலில் நம்பிக்கையே இல்லை.

அவன் சொன்னதை கேட்டு லாலாவின் நண்பன் “டேய் ஐடி கார்டை கொடுடா, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதிக்கிறேன்” என்று வாங்கி எழுத, லாலாவுக்கு இந்த பிரிட்டிஷ் கைக்கூலி கிட்ட பதில் கேட்கிறதா, அதுவும் இவன் எனக்கு சரியான பதில் சொல்லுவானா என்று சக்தியை நம்பாமல் அந்த கேள்விக்குப் பதிலே எழுதவில்லை.

ஆனால் பிறகு பதிலை தேடிபார்த்த போது பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்டவர் லாலா லஜபதி ராய் என்று இருக்க, லாலாவுக்கு ஒரே வருத்தம்.

“அவங்க தாத்தா மாதிரி இல்லை அவன், ஆன்சர் சொல்லிக்கொடுத்தும் எழுதாம வந்திருக்க. சரி விடு காந்தி தாத்தா கூட டீச்சர் ஆன்சர் சொல்லிக்கொடுத்தும் எழுதாம இருந்தவர் தானே? என்று அவன் மனதை தேற்றியிருக்க, மதிப்பெண் வந்தபோது

“உனக்கு எப்பேர்ப்பட்ட மனுஷன் பெயர் வைச்சேன், அதுக்கு பதில் தெரியல” என்று உப்புக்கல்லில் திலகர் பேரனை முட்டி போட வைத்திருக்க, உப்புக்காக சத்தியாகிரகம் போன காந்தி எதிரியானார். உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேயனே பரவாயில்லை என்று நினைத்து விட்டான் லாலா. அங்கே தொடங்கியது சக்தியுடனான   நட்பு.

 

 

 

 

 

Advertisement