Advertisement

தூரம் 2

சக்திவேலும் லாலாவும் இன்று நண்பர்கள் இல்லை. அவர்களின் பத்து வயது முதல் தோழர்கள். சிறுவர்களாய் இருந்த போது ஒன்றாய் விளையாட, திலகரும் லட்சுமணனும் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பேரப்பிள்ளைகளிடம் பகையை வளர்க்க தொடங்கினார்கள்.

 

திலகர் “ஏண்டா லாலா? நம்ம குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம் வெள்ளையனை வெளியேற சொல்லி போராடினவங்க, இவன் கொள்ளுத்தாத்தா கூஜா தூக்கி குமாஸ்தா ஆனான், நாம்ம வாங்கின சுதந்திரத்தை இவங்க அனுபவிக்கிறாங்க. இந்த பய கூட சேராத!” என்று சொல்லி இழுத்து போனார்.

லட்சுமணன் அவர் பங்கிற்கு, “இவங்களாம் அன்சிவிலைஸ்ட் சக்தி, இவன் பேரன் கூட எல்லாம் ப்ரண்ட் அஹ் இருக்காத, படிக்காம உருப்பட மாட்ட” என்று ஆங்கிலத்திலும் வசைபாடி இழுத்துப்போக, திலகருக்குத் தாங்க முடியவில்லை.

லட்சுமணனின் தந்தை வேதையன் ஆங்கிலேயரின் அரசில் பணியில் இருந்தவர், அடுத்து லட்சுமணனும் வங்கி ஊழியர் என்று இருக்க திலகரின் தந்தை விவசாயி, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு அதில் கொஞ்சம் சொத்துகளை இழந்தார். ஆகையால் தன் வாரிசுகளை அரசு பணியில் அமர்த்துவதே திலகரின் லட்சியம்.

அவர் மகன் வாஞ்சி நாதன் ஆடுதுறையில் விவசாய அதிகாரியாக இருக்கிறார், பேரன் லாலாவை அரசு தேர்வுகளுக்குத் தயார் படுத்திக்கொண்டிருக்கிறார். சின்ன மகன் சித்ரஞ்சனும் அரசு வேலையே.

இதனால்தான் தன் மகன் பெண்டிக் பாஸ்கரை அவரின் விருப்பம் போல் பேராசிரியர் ஆக்கிய லட்சுமணன், பேரனை காவல்துறை அதிகாரி ஆக்கிவிட்டார். சக்தி என்று இன்ஸ்பெக்டர் ஆனானோ அன்றிலிருந்து லாலாவுக்கு திலகரின் தொல்லைகள் அதிகம். நண்பனிடம் புலம்பி தள்ளிவிடுவான்.

ஏழு வயதில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடும்போது தாத்தாக்கள் இருவரும் பேரன்களைப் பிரித்து அழைத்து சென்றுவிட, அதன்பின் அவர்களும் பகை கொண்டே இருந்தனர். ஒரே பள்ளி, ஒரே வகுப்பு என்றாலும் கூட பேசுவதே கிடையாது. பேசினாலும் தாத்தாவைப் போலவே பேசுவார்கள்.

ஆசிரியர் திட்டினால் லாலா உடனே, “மிஸ்! எங்க தாத்தாதான் இண்டிபெண்டன்ஸ் வாங்கி கொடுத்தார், அவங்களாம் சீட்டர்ஸ். தேசப்பற்றே இல்லாதவங்க” என்று பத்து வயதில் ஆசிரியரிடம் சண்டைக்கு நிற்பான்.

சக்தியும் லேசில் விடமாட்டான். அவனுக்கும் கோபம் வரும், ஆனால் பாடப்புத்தகத்தில் எல்லாம் அவனுக்கு சாதகமாக ஒன்றுமே இல்லாமல் இருந்ததால் கை நீட்டி விடுவான். அப்படி ஒரு முறை பிரச்சனை ஆகிப்போக, இரு வீட்டிலும் அப்பாக்கள் வேலைக்குச் சென்ற காரணத்தால் தாத்தாக்கள் பள்ளி சென்றனர். இந்த பிரச்சனையை சொல்ல பேரன்களே பரவாயில்லை என்பது போல் அப்படி ஒரு தகராறு.

“உங்களுக்கு உங்க பேரப்பசங்களை அடக்க முடியலன்னா பேசாம டீசி வாங்கிட்டு போங்க” என்று முதல்வர் சொல்ல,

“நாங்க ஏன் அவனுக்கு பயந்து போகணும்” என்று ஒரே மாதிரி  நினைத்து கடைசிவரை ஒன்றாகவே படித்தனர். அங்கே துளிர்த்தது அவர்கள் நட்பு, அதுவும் ஒரு சோசியல் பரீட்சையில்.

எதில் வேண்டுமானாலும் மதிப்பெண் குறையலாம், சுதந்திரம் சார்ந்தவற்றில் குறைந்தால் திலகர் தொலைத்துவிடுவார். தானாக படித்தால் வேறு, சக்தி அப்படித்தான். ஆனால் சக்தியை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று லாலாவை திலகர் படுத்தி எடுப்பார்.

பரீட்சை எழுதும்போது ஒரு கேள்விக்கு லாலாவுக்கு விடை தெரியவில்லை.

“பஞ்சாப் கேஸரி” என்று அழைக்கப்படுபவர் யார் என்று கேள்வி இருக்க

“பஞ்சாப்ல கேசரி செஞ்சவன் பெயர் எனக்கு எப்படி தெரியும்?” என்று முழித்தான் பத்து வயதான லாலா.

வெகு நேரமாக அவனுக்கு விடை தெரியாமல் போக, முன்னே இருந்த அவன் நண்பனை கேட்க அவனுக்கும் தெரியவில்லை. அவன் அவர்களுக்கு நேராக இருந்த சக்தியைக் கேட்க, சக்தி திரும்பி லாலாவைப் பார்த்தான்.

“உன் பெயர் தாண்டா” என்றான். சக்தி விடை சொன்னதே அதிசயமாக பார்த்தவனுக்கு அவன் பதிலில் நம்பிக்கையே இல்லை.

அவன் சொன்னதை கேட்டு லாலாவின் நண்பன் “டேய் ஐடி கார்டை கொடுடா, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதிக்கிறேன்” என்று வாங்கி எழுத, லாலாவுக்கு இந்த பிரிட்டிஷ் கைக்கூலி கிட்ட பதில் கேட்கிறதா, அதுவும் இவன் எனக்கு சரியான பதில் சொல்லுவானா என்று சக்தியை நம்பாமல் அந்த கேள்விக்குப் பதிலே எழுதவில்லை.

ஆனால் பிறகு பதிலை தேடிபார்த்த போது பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்டவர் லாலா லஜபதி ராய் என்று இருக்க, லாலாவுக்கு ஒரே வருத்தம்.

“அவங்க தாத்தா மாதிரி இல்லை அவன், ஆன்சர் சொல்லிக்கொடுத்தும் எழுதாம வந்துட்டேனே, சரி  காந்தி தாத்தா கூட டீச்சர் ஆன்சர் சொல்லிக்கொடுத்தும் எழுதாம இருந்தவர் தானே? என்று அவன் மனதை தேற்றியிருக்க, மதிப்பெண் வந்தபோது

“உனக்கு எப்பேர்ப்பட்ட மனுஷன் பெயர் வைச்சேன், அதுக்கு பதில் தெரியல” என்று உப்புக்கல்லில் திலகர் பேரனை முட்டி போட வைத்திருக்க, உப்புக்காக சத்தியாகிரகம் போன காந்தி எதிரியானார். உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேயனே பரவாயில்லை என்று நினைத்து விட்டான் லாலா. அங்கே தொடங்கியது சக்தியுடனான   நட்பு.

அடுத்த நாள் லாலாவாக சென்று சக்தியிடம் பேச, சிறுவர்கள் மனதில் பகையில்லை. எதிரி குடும்பம் என்றாலும் கூட உதவி செய்தவன் என்று சக்திவேல் மேல் லாலாவுக்கு அந்த வயதிலேயே ஆழமான  நட்பு.

அவர்கள் நட்பு பள்ளிக்கூடத்தில் அப்படியே தொடர, விடுமுறை தினத்தில் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து லாலாவை விளையாட சக்தி அழைக்க, லாலா முறைத்து சென்றான்.

“ஏண்டா நேத்து மேட்ச்’க்குக் கூப்பிட்டா வரல?” என்று சக்தி அடுத்த நாள் லாலாவிடம் கோபமாகக் கேட்க

“டேய், என் தாத்தா உங்கூட பேசினா என்னை தொலைச்சிடுவார்டா. நம்ம ப்ரண்ட்ஷிப் நமக்குள்ள இருக்கட்டும். கொஞ்சம் பெருசான தாத்தா எல்லாம் மாறிடுவாங்க” என்று லாலா சமாதானம் சொல்லியிருக்க, வருடங்கள் போக லட்சுமணனும் திலகரும் மாறினார்கள்.

பெரிய மாற்றம்!! திலகரின் மகன் சித்ரஞ்சன் லட்சுமணனின் மகள் வசுந்தராவை கோவிலில் வைத்து மணம் முடிக்க, அதுவரை இருந்த நிலையை விட அதிகமான பகைமை இரு பெரியவர்களுக்கும். அதே பகை வாஞ்சி நாதனுக்கும் பாஸ்கருக்கும் கூட உண்டு.

என்ன மாறினாலும் லாலா சக்தியின் நட்பு மாறவே இல்லை. இருவரும் சென்னையில் கல்லூரியிலும் ஒன்றாக படிக்க, இன்னும் பலமானது நட்பு. இருந்தும் வீட்டினர் முன் யார் நீ? என்ற மாதிரியே நடிப்பார்கள்.

சக்தி வெளியே உண்டுவிட்டு வந்ததால் அம்மாவிடம் சாப்பாடு வேண்டாம் என்றான். போனை எடுத்து அவன் எஸ்பிக்கு அழைக்கலாம் என்று நினைக்க, அரிச்சந்திரன் அழைத்தான்.

அரிச்சந்திரன் இவன் பங்காளி வீட்டு அண்ணன், ராஜதுரையின் மச்சான். வக்கீலாக இருக்கிறான். தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் நடந்த கொலை விஷயமாக ஒரு வழக்கை சக்திவேல் பார்க்கிறான். அது சம்மந்தமாக அரி அழைக்க, இருவரும் சிறிது நேரம் பேசினர். பின் மாடியில் இருக்கும் தன் அறைக்கு சக்தி செல்ல, அவன் அறையில் நிழலில் ஒரு உருவம் ஒளிந்திருப்பது தெரிந்தது.

“கொப்பன் மவளே!” என்று பல்லைக் கடித்தபடி அவன் அந்த உருவத்தை நெருங்கினான்.

அங்கே கதவோரம் ஒளிந்து நின்றவளைப் பார்த்து,

“திலகர் வீட்டு வாரிசெல்லாம் திருட்டுப்பசங்கதான்” என்றான்.

அதில் அவளுக்குக் கோபம் வர,

“யாரு திருட்டுப்பசங்க?” என்று முன்னால் வந்து சண்டையிட,

“நீதாண்டி! எதுக்குடி திருட்டுத்தனமா சுவர் தாண்டி வந்த?” என்று சக்திவேல் அறைக் கதவை சாற்றிவிட்டு, லைட்டை ஆன் செய்து அவளிடம் கேட்க

“அவனவன் காதலுக்காக கடல் தாண்டுறான், நான் காம்பவுண்ட் சுவர்  தாண்டுனா குத்தமா?” என்று விழிகளை விரித்துக் கேட்டாள் சரோஜினி.

சரோஜினி வாஞ்சிநாதன்! சரோஜினி நாயுடு பிறந்த நாள் அன்று பிறந்தவள், ஆகையால் அப்பெயர்.

 

சரோஜினியின் பார்வை தன்னையே துளைப்பது உணர்ந்து சக்தி தன்னைப் பார்க்க, சட்டையின்றி  ஷார்ட்ஸோடு நின்றான். கொடியில் கிடந்த துண்டை எடுத்துத் தன்னைப் போர்த்திக் கொண்டான்.

அவன் செயலில் உதடு சுழித்து, “விடிஞ்சதும் மொட்டை மாடியில  ஷோ காட்டிட்டு, எக்ஸர்ஸைஸ் பண்றப்ப எங்க போச்சு இந்த கூச்சமெல்லாம்?” என்று சரோஜினி கடுப்பாகக் கேட்டாள்.

“அது நான் எல்லாருக்கும் தெரிய மாதிரி பண்ணுவேன், இப்போ நீயும் நானும் தனியா இருக்கோம். சும்மாவே உங்க தாத்தனுக்கு என்னைக் கண்டாலே ஆகாது, உங்கப்பன்  என்னை காலையில அப்படி மொரைக்கிறாரு. உன் அண்ணன் என்னை அடிக்கிறான், உங்க வூட்டு கிழவி என்னை ஜாடை பேசுது” என்று சரோஜினியின் வீட்டு ஆட்கள் எல்லோரையும் சக்தி திட்டி முடிக்க, சரோஜினி அவன் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.

“சரோசா, ஒழுங்கா எழுந்திருடி. இப்படி வராதனு உனக்கு சொல்லியிருக்கேன் தானே?” என்று திட்ட

“சரோசானு சொன்ன அவ்வளவுதாண்டா” என்று கத்த, அவள் வாயை மூடினான் சக்திவேல். மூடிய விரல்களில் சரோஜினி முத்தமிட, சக்தி படக்கென்று கையை உருவிக்கொண்டான்.

சக்தியின் பார்வை சரோவை சுட்டது. சரோ அதனை கண்டுகொள்ளாது,

“எங்க வீட்டு மாடும், கோழியும் மட்டும்தான் பாக்கி, ரேஷன் கார்ட்ல இருக்க அத்தனை பேரையும்  நீ பேசிட்ட சக்தி. ஆஹ்ன் எங்கம்மாவை பேசல, அப்புறம் சித்தப்பாவைப் பேசல, என்ன இருந்தாலும் உன் அத்தை வீட்டுக்காரர்ல” என்றாள் அடக்கப்பட்ட சிரிப்போடு.

“சரோஜினி!” என்று சக்தி அழுத்தமாக அழைக்க,

“உன்னை அண்ணா அடிச்சிட்டானு தாத்தா சொல்லிட்டு இருந்தார், அதான் சுவர் தாண்டினேன்” என்று இரவு நேரத்தில் வந்ததுக்குக் காரணம் சொன்னாள்.

“யாரு உன் அண்ணன் என்னை அடிச்சானா? கையை நீட்டினான், நான் முறுக்கிவிட்டேனே” என்று கிண்டலாக சொன்னவனின் கரம் அவன் மீசையை நீவியது.

“பார்த்துட்ட இல்ல, போ சரோ” என்று சக்தி சொல்ல, சரோஜினி உடனே

“லவ் பண்ணினா தைரியம் வேணும், இப்படி சும்மா பயப்படக் கூடாது” என்று சொல்லி அறைக்கதவைத் திறக்க போனாள்.

“தைரியம்தானே? இப்படி திருட்டுத்தனமா வரது பேரு தைரியமில்லடி, இப்பவே வா உன் தாத்தா முன்னாடி உன் பேத்தியும் நானும் லவ் பண்றோம்னு சொல்றேன். நான் ரெடி, மிஸ்.சரோஜினி வாஞ்சி நாதன் ரெடியா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

சக்திவேல் முடிந்தவரை நேர்மையாக நடப்பான், ஆனால் யாராவது சீண்டிவிட்டால் அவ்வளவுதான், வேண்டுமென்றே செய்வான்.

“ரொம்ப பண்ணாத சக்தி, காலையில சண்டைனு சொன்னதால பார்க்க வந்தேன். பக்கத்துல இருந்துட்டே உன்னை பார்க்க கூட முடியல, அவ்வளவு தூரமா இருக்க ஃபீல், போன் கூட  நீ பிஸீனு பேச மாட்ட” என்று சொல்லும்போதே சரோஜினியின் குரல் உள்ளே போனது.

“ஏட்டி சரோ! ஃபீல் பண்றியா?” என்று உதடுகளுக்குள் சிரிப்பை அடக்கிக் கேட்டாலும், சரோஜினியின் உணர்வுகள் புரிந்தது.

“நான் உன்னை பார்க்க வராதனு சொல்லலடி, இதே உன் தாத்தா அப்பா முன்னாடி போய் நின்னு இவன் தான் சக்திவேல், இந்த ஊர்லயே அழகானவன்! அறிவானவன்! இன்ஸ்பெக்ஸ்டர் ஆஃப் போலிஸ், கட்டினா இவனைத்தான் கட்டுவேனு கெத்தா சொன்னா நல்லாயிருக்கும். அது தைரியம்! இப்படி வரது தைரியத்துல வராதுடி தங்கம்” என்றான் புன்னகையோடு.

சரோஜினியின் முகம் பார்த்த சக்திவேல், அவள் கையைப் பற்ற சரோஜினி முகம் திருப்பி,

“அய்யயோ, கையைப் பிடிச்சிட்டா உன் தலைவரு கோச்சுக்க போறார்” என்றாள் சுவரில் சக்திவேல் ஒட்டியிருந்த டி.ராஜேந்தரைப் பார்த்தபடி. அவரின் தீவிரவாத ரசிகன் அவன்!

சரோஜினியின் பேச்சில் சக்திக்கு சிரிப்பு வர, “சரோ மேடம் ரொம்ப கடுப்பா இருக்காங்க போலயே, சரி சாப்பிட்டியா?” என்று அக்கறையாய்க் கேட்டான்.

“சாப்பிட்டாச்சு” என்று மெல்ல சொன்னவள்

“எனக்கு தைரியமில்லாம இல்ல,  நம்ம விஷயத்தை சொல்லிட்டா டைரக்டா சுவர் ஏறித்தான் குதிக்கணும். அத்தோடு சுதந்திர விலாஸத்துக்கும் எனக்கும் ஒன்னுமே இல்லாம போயிடும். இப்ப கிடாவெட்டு நடத்துறப்ப சித்தப்பா வருவார், அவர் கிட்ட நம்ம விஷயம் பேச போறேன்.”

“பேசினதும் திலகர் அய்யா ஒத்துப்பாரா, அவர் திலகர்டி, காந்தி இல்லை” என்றான் சக்தி அழுத்தமாக.

“ஒத்துக்கலன்னா இப்படித்தான் தாவி வருவேன்” என்றாள் சரோஜினி.

“குரங்கே! நீ தாவி வர வேண்டாம்.  திலகரய்யா கிட்ட நானே வந்து பொண்ணு கேட்கிறேன். உன் சித்தப்பன் சித்ரஞ்சனுக்கு அப்பனை பேசி சரிக்கட்டுற தைரியம் இருந்தா, அவரு ஏன் ஓடிப்போறாரு?” என்றதும் சரோஜினி

“போதும்! இன்னிக்கு எல்லாரையும் ஒரு தடவ திட்டியாச்சு. சரி நான் போன் பண்ணினா கட் பண்ற, மெசெஜ் கூட பண்ணல?” என்று கேட்டிட

“அது டி.எஸ்.பி கூட மீட்டீங் சரோ” என்று சமாளித்தான்.

சக்திவேலின் நேர்மை அற்புதமானது, நண்பன் சொன்னதால் அவன் நட்பை இன்று வரை யாரிடமும் சொல்லாது ரகசியம் காக்கிறான், காதலி சொன்னதால் அவன் காதலையும் நண்பனிடம் சொல்லாது ரகசியம் காக்கிறான்.

இது மட்டும் லாலாவுக்குத் தெரிந்தால்??

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement