Advertisement

“அட நீ வேற, இன்னும் அந்த பொண்ணை அவங்க வீட்ல ஏத்துக்கல, சித்ரஞ்சனும் ரொம்ப ஊருக்கு வர மாட்டான். அவன் மெட்ராஸ்ல செட்டில் ஆகிட்டான். பாரு அவன் அவன் வெள்ளைக்கார பொண்ணை எல்லாம் கட்டி நாடு மாறிடுச்சு, இவங்க இன்னும் எம்பது வருஷ சண்டையைப் பிடிச்சு அந்த சின்ன பயலுங்க சக்தி லாலா அவங்க கூட எங்க பார்த்தாலும் ஒரே வம்புதான்” என்று வரலாற்றை சொல்லி முடித்தார்.

வாஞ்சி நாதன் மகனை பைக்கில் ஏற்றிக்கொண்டு சுதந்திர விலாஸுத்துக்குள் நுழைந்தார்.

 

சுதந்திர விலாசம் திலகரின் வீடு. திலகரின் தந்தை சுப்ரமணியம் சுதந்திர போரட்ட தியாகி. அதனாலயே மகன், பேரன், கொள்ளு பேரன் என்று எல்லாருக்கும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர். பேரன் லாலா கிழிந்த சட்டையும் வீங்கிய முகமுமாக உள்ளே நுழைய அஞ்சம்மா

“அப்புச்சி! என்ன ஆச்சு? ஏன் இப்படி சட்டை கிழிஞ்சிருக்கு?” என்று பதறினார்.

“ஏன் ஆத்தா? நானே கிழிஞ்சிருக்கேன், உனக்கு சட்டை கிழிஞ்சது பிரச்சனையா?” என்றபடி சட்டையைக் கழட்டினான். அவன் உயிர் நண்பன் ஆசையாக முதல் மாத சம்பளத்தில் வாங்கிக் கொடுத்தது, அதை கிழித்துவிட்டானே அந்த பரதேசி என்று சக்தியை நினைத்து பல்லைக் கடித்தான்.

சக்தி கையை முறுக்கியது வேறு வலியெடுக்க,

“வலிக்குது ஆத்தா” என்றான் கண்ணை சுருக்கி. திலகருக்கு பேரன் வலியில் துடிப்பது கண்டு பொறுக்கவில்லை.

“அந்த பய போலீஸ்னா பெரிய இவனா? என் பேரன் மேல எப்படி கை வைச்சான்? நீ என்னடா பண்ணின?” என்று மகனை திட்டினார்.

“முதல்ல அவனை டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போங்க” என்று  மகனை முறைத்தபடி சொன்னார் சித்ரா.

“வீட்ல ஒழுங்கா இல்லாம உப்பு சப்பு இல்லாத சண்டைக்கு போய் அடி வாங்கிட்டு வரான்” என்று திட்டியபடி சமைக்க போய்விட்டார். அவருக்கு இத்தனை வருடத்தில் இந்த சண்டைகள் எல்லாம் சலித்து போய்விட்டன.

சுதந்திரம் பெற்ற பின்னும் மாறாமல் உறவான குடும்பத்தை ஒவ்வொன்றுக்கும் குத்திக் காட்டி பேசுவது எல்லாம் தப்பு என்ற எண்ணம் அவருக்கு. மகன், மகள் எல்லாரும் அப்படித்தான், இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள், எல்லாருக்கும் தாத்தா செல்லம்.

இவர்கள் வீட்டில் இப்படி கலாட்டா நடக்க,

“ஐ அம் ப்ரவுட் ஆஃப் யூ மை பேரன்!” என்று சக்தியின் தோளில் தட்டினார் லட்சுமணன். பணிவாக குனிந்து நின்ற சக்தி

“தட்ஸ் மை கடமை தாத்தா” என்றான்.

“தட்ஸ் மை பேரன்!” என்று சிரித்தார் அவர். லட்சுமணன் அந்த காலத்திலேயே ஆங்கில வழி கல்வி கற்றவர்,  வங்கியில் வேலை பார்த்து ஓய்வுப்பெற்றவர். சின்ன வயதில் அவர்கள் ஊரில் ஒன்றிரண்டு பேரை தவிர யாருக்கும் ஆங்கிலம் தெரியாது, இவருக்கும் தெரியும் என்பதில் பெருமை.

அது எல்லாம் திலகருக்கு பொறாமை. சுதந்திரம், சுதேசம் என்று சொல்லி இவர்கள் மீதான வஞ்சத்தை தீர்த்துக் கொள்வார்.

“எத்தன வருஷத்துக்கு அந்த திருட்டுப்பயலுக்கே முதல் மரியாதை கொடுக்கிறது? நீ சரியா நடந்திருக்க சக்தி. ஆனாலும் அவனோட பேரன் லாலா.. அவன் எல்லாம் ஒரு ஆளா? அவன் கூட எல்லாம் சண்டை போடாத, சில்லி ஃபெல்லோ, கன்ட்ரீ ப்ரூட்!” என்று திட்ட, சக்தி வாய்க்குள்ளே சிரித்தான்.

இரவு மணி ஒன்பது ஆகிவிட, டவுனில் இருக்கும் அந்த பரோட்டா கடையில் கூட்டம் அலைமோதியது. லாலா பரோட்டா சால்னா என்று கண்முன் இருந்தாலும் வேகமாக உண்ண முடியவில்லை. சக்தி முறுக்கியது கை வலித்தது. அதே நேரம் லாலாவின் பக்கத்தில் சக்தி வந்து நின்றான்.

“சாத்தான் நினைச்சதும் வந்துடுச்சு” என்று முணுமுணுக்க,

“யார்டா எரும சாத்தான்” என்று சக்தி லாலாவின் தோளில் கையைப் போட, லாலா முகத்தைத் திருப்பினான்.

“என்ன மச்சானுக்கு அடிச்சது கோவமா?” என்று சக்தி அவன் தாடையைப் பிடிக்க,

“மண்ணாங்கட்டி! அடிச்சது கூட விடு, அந்த சட்டையை ஏண்டா கிழிச்ச நாதாரி” என்றான் கடுப்பாக.

“எனக்குப் பிடிச்ச சட்டை, நீ வாங்கிக் கொடுத்ததுடா விளக்கெண்ண” என்று வசைப்பாடியவன்

“கையை வேற பிடிச்சு வலிக்கிற மாதிரி முறுக்கிட்ட, டேய் நிஜமா எனக்கு ப்ரண்ட்தானா?” என்றதும் சக்திவேல் முறைத்தான். அவன் கோபத்துக் கொண்டான் என்று புரிய,

“பின்ன என்னடா மாப்பிள்ள, அந்த தலைவெளுத்த தற்குறிங்க தொல்லை பண்ணீனா நீயும் ஏண்டா இன்னிக்கு சண்டைக்கு வந்த, நம்மதான் இப்படி இருக்கோம். அவன் அவன் இத்தாலி பொண்ணு, இங்கிலாந்து பொண்ணுனு கரெக்ட் பண்றான். உன் தாத்தனும் என் தாத்தனும் கடைசி வரைக்கும் திருந்தவே மாட்டானுங்க”

“இதுல கடுப்பேத்துற மாதிரி, அப்போதான் உன் தாத்தா அந்த மேஜர் சுந்தர்ராஜன் இங்கிலிஷ்ல பேசுறான், வீட்ல அதை சொல்லி என் தாத்தான் உசுர வாங்குறான்” என்றான் லாலா கடுப்பாக.

“ஏண்டா இப்படி புலம்புற? எங்க தாத்தாவும் பாவம்தானே? ஒரு தடவ உன் வீட்டு பெருசு விட்டுக்கொடுத்தா என்னவாம்? நான் சும்மாதான் பெயரை சொல்லி பார்த்தேன், நீதான் முதல்ல என்னை பேசின, தாத்தா அப்பா எல்லாம் இருக்கவும் எமோஷனல் கை நீட்டிட்டேன்.”

“நீ கூடத்தான் என் மூஞ்சுல குத்திட்ட. பாரு இதுக்கே நான் ஃபேசியல் பண்ணனும் போல. நம்ம நண்பன் ஒரு போலீஸ் காரன் ஆச்சே இப்படி முகத்தோட போனா யார் மதிப்பானு யோசிச்சியாடா லாலா நீ?” என்று லாலாவைப் பேசினான்.

“நானும் ஒரு எமோஷனல்தான் அடிச்சிட்டேன், சரி விடு ஒரு கலக்கி சொல்லு.” என்றதும் சக்தி அவனுக்கும் பரோட்டா சொன்னான். இருவரும் உண்டு கொண்டிருக்க

லாலா புன்னகையோடு, “ஏன் ஆளு, இவங்களும் நம்மை மாதிரி ஒற்றுமையா இருந்தா இந்த உலகமே அமைதியாகிடும், உலக அமைதி கெடுறதே இந்த பெருசுங்களாலதான்” என்றான்.

சக்தி ஏதோ பேச வர, லாலாவின் போன் சத்தம் போட அவன் தங்கை அழைத்தாள்.

“என்னடி?” லாலாவின் குரல் அதட்டலாக வர

“எங்கடா இருக்க?”

“அது எதுக்கு உனக்கு?” என்று லாலா வம்பாக பேச

“எங்க பொறுக்கிட்டு இருந்தாலும் பத்து மணிக்குள்ள வீட்டுக்கு வரணும்னு தாத்தா ஆர்டர், இல்லனா சுதந்திர விலாசம் கதவு மூடப்படும்” என்றாள்  அவனின் பாசமான தங்கை.

“வாயாடி! வீட்டுக்கு வந்து உன்னை பேசிக்கிறேன்” என்று திட்டி வைக்க, அடுத்து சக்திவேலின் போனுக்கு அழைப்பு வர பார்த்தாள் ‘எஸ்.பி’ என்று வர

“யார்டா?” என்றான் லாலா.

“எஸ்பி டா, வேலையா கூப்பிடுவார். அப்புறம் பேசிக்கிறேன்” என்றான்.

“சரி, எப்படி போவ, பைக்ல வந்தியா? நான் ட்ராப் பண்ணவா?” என்று சக்தி கேட்க

“வேற வினையே வேண்டாம், அந்த தவுட்டுக்கு வாங்கினவளுக்கு மட்டும் நீயும் நானும் ப்ரண்ட்னு தெரிஞ்சா அவ்வளவுதான், திலகர் டெரர்ஸ்டா மாறிடுவார்” என்று லாலா பயப்பட

“ஏண்டா? என்னை உன் ப்ரண்டுனு சொல்றதுக்கே இப்படி பயப்படுற, உன் சித்தப்பனே பரவாயில்லை போலடா.” என்று சக்தி அவனை பேச

“ஏன் சொல்லமாட்ட, நீ சொல்லேன் என்னை உன் ப்ரண்ட்னு உன் மேஜர் சுந்தர்ராஜன்கிட்ட, கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட்தான்” என்றான்.

“நான் சொல்லுவேன். இப்போ வா பஸ் ஏத்தி விடுறேன் வா” என்று சக்தி அவனை அவர்கள் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு அவன் வீடு சென்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement