Advertisement

தூரம் 1

“மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் வரப்போவுது, யார்லாம் மண்டாபிடி செய்யப்போறீங்களோனு வரிசையா வந்து பதிவு பண்ணிடுங்க” கோவில் நிர்வாகி சொல்ல ஊரார் எல்லாரும் வரிசையாக பதிவு செய்தனர். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்  கோவில் நிர்வாகி சண்முகம்.

“காசி”

“கணேசன்”

“தமிழ்செல்வன்” என்று அவரவர் பெயர்கள் சொல்லிக் கொண்டு வர இடையே

“லட்சுமணன்” என்று சத்தமாகக் குரல்  கொடுத்தான் சக்தி.

“என்னது? லட்சுமணனா? திலகர்னு எழுதுங்க” என்று முன்னே வந்து சட்டமாக சொன்னார் வாஞ்சி நாதன். திலகரின் மகன்.

“என்ன தம்பி, திலகர் அய்யா தானே முதல்ல செய்வார்?” என்று சண்முகம் கோபமாக வாஞ்சிநாதனை பார்த்திருந்த சக்தியிடம் கேட்க

“இப்ப வரிசையாதானே பெரியப்பா பெயர் எழுதுறீங்க? அப்போ எங்க தாத்தா பெயரை எழுதுங்க. பின்னாடி சொன்னவர் பெயரை அப்புறம் எழுதுங்க” என்றான் அவன்.

“வரிசையானாலும் ஊர்ல எப்பவும் இதே வழக்கம்தானே சக்தி? திலகர் மாமா கோச்சுப்பார்” என்றதும்

“அவன் கிட்ட என்ன மச்சான் விளக்கம் சொல்றீங்க? நாங்கதான் முதல்ல செய்யணும். அப்புறம் அவங்களை சொல்லுங்க” என்று வாஞ்சி நாதன் பிடிவாதம் கொள்ள

“ஏன் வாஞ்சி? அவன் முதல்ல பெயரை சொல்லிட்டான்னு விட்டுக்கொடுத்தா என்ன?” இன்னொரு பெரியவர் கேட்க

“இவனுங்களுக்கு ஏன் விட்டுக் கொடுக்கணும்?” என்று வாஞ்சிநாதன் கத்தினார்.

“எங்க அப்பா இந்த நாட்டுக்காக போராடினாரு, இவனுங்க குடும்பம் என்ன பண்ணானுங்க துரைக்குக் கூஜா தூக்கின கும்பல்தானே?” என்று எள்ளலாய்க் கேட்டார் வாஞ்சி நாதன்.

அதில் பாஸ்கரனுக்கு கோபம் வந்தது.

“வாயை மூடு வாஞ்சி நாதன்! அதிகம் பேசாத.” என்று அதட்ட

“என்ன பெரியப்பா? எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அவர் திலகரா இல்லை ஹிட்லரா? நானும் இந்த நாட்டுக்கு சேவை செய்ற வேலையிலதானே இருக்கேன்” என்று  சண்முகத்தைக் கேட்டான் சக்திவேல். சக்திவேல் இன்ஸ்பெக்டராக இருக்கிறான்.

“ஆமா ஆமா! பெரிய சேவை…” என்று அதுவரை அமைதியாக இருந்த லாலா  வாயைத் திறந்தான். திலகரின் பேரன், வாஞ்சி நாதனின் மகன் லாலா லஜபதி ராய்.

“என்னடா திமிரா?” என்று சக்தி எகிற

“சக்திவேல்!” என்று அவனை அதட்டினார் அவன் அப்பா பாஸ்கரன்.

“திமிர்தான்!” என்ற லாலா சொல்லியவன்

“என்ன மாமா? அவனை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறீங்க?” என்றபடி பேனாவை எடுத்து பெயரை எழுத போக, அவன் கையை முறுக்கினான் சக்தி.

அவ்வளவுதான் கலாட்டா அங்கே! இருவரும் அடித்துக் கொள்ள, இரண்டு பக்கமும் பிடித்து இழுத்தனர். லட்சுமணனும் திலகரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கே வர இருவரின் பேரன்களும் முறைத்தபடி நின்றனர்.

சக்தியின் அடியால் லாலாவின் சட்டை கிழிந்து அவன் முகம் கன்றி போய்விட்டது. சக்திவேலின் கன்னம் சிவந்திருக்க , பார்த்த லட்சுமணன் துடித்துவிட்டார்.

“வேலை வெட்டி இல்லாத வெட்டி பய கூட எல்லாம் உனக்கு என்ன பேச்சு சக்தி? இவனோட சண்டை போட்டு இவனை சண்டியர் ஆக்குறியா? சும்மா பழைய பெருமை பேசிட்டு கிடக்குற பயலுக்கிட்ட ஏன் சண்டை போற, உனக்கு ஒரு தகுதி இருக்கு. தெய் ஆர் நாட் ஈகுவள் டூ யூ! ” என்றபடி பேரனின் கசங்கிய சட்டையை நீவிவிட, லாலா கடுங்கோபத்துடன் சக்திவேலை முறைத்தான்.

திலகர் லட்சுமணனை முறைத்து

“கண்ட பய கிட்ட பேரனை அடி வாங்க விட்டு வேடிக்கை பார்ப்பியா நீ?” என்று மகனை கடிந்தபடி பேரனை தன்னோடு அழைத்து செல்ல

“இவனுங்க மண்டாபிடி பண்றதுக்குள்ள, மண்டையை உடைக்காம விட மாட்டானுவ போலயே” என்று சண்முகம் புலம்பினார்.

அருகே இருந்த ராஜதுரை அவனிடம், “நீங்க செய்றதும் தப்புதானே பெரியப்பா, திலகர் தாத்தாவே எப்பவும் செய்யணுமா? வரிசைப்படி பெயர் சொன்னது சக்திவேல் தானே?” என்று கேட்டான்.

“நீ உங்க பங்காளிக்குத்தாண்டா வக்காலத்து வாங்குவ” என்று சண்முகம் ராஜதுரையைப் பேசினார்.

“நியாயம் பேசினா என்னை பேசுறியா நீ?” என்று ராஜதுரை அவரை முறைக்க,

“என்னடா என்ன முறைக்கிற? உன் பொண்டாட்டிக்கு அவங்க பங்காளி முறை. மருமக கிட்ட சொல்லவா?” என்று சண்முகம் மிரட்ட

“அவளும் நியாயமாத்தான் பேசுவா. நீ என்ன பெரியப்பா சொல்றது. நானே சொல்லிப்பேன். லட்சுமணன் தாத்தா பெயருக்கு அப்புறம் நாங்க செய்யணும். பெரியப்பா பெயரை எழுதிடு” என்று அவன் பாட்டுக்கு சொல்லிவிட்டு போய்விட்டான்.

சண்முகம் இரண்டு கையாலும் கன்னத்தைத் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்க, வெளியூரிலிருந்து வந்திருந்த அவரின் சகளை இதையெல்லாம் பார்த்துவிட்டு

“ஏன் சகளை? ஒரு பெயர் எழுதுறதுக்கு உங்க ஊர்ல இப்படி அடிச்சிக்கிறீங்க? மண்டாபிடிதானே? யார் செஞ்சா என்ன? நானும் பார்த்தேன், அந்த ஆள் வாஞ்சி நாதன் பின்னாடி நின்னாரு, அந்த பையன் தான் முன்னாடி நின்னு பெயர் சொன்னான்” என்று அவரும் நியாயம் பேசினார்.

“யோவ்! நீ வேற ஏன்யா? அதெல்லாம் சொன்னா திலகர் மாமா கேட்கமாட்டார். அந்த சக்தி பயலுக்குத் தெரியும் தமிழ்செல்வனுக்கு அப்புறம் திலகர் பெயர் வரும்னு, வேணும்னுதான் அவங்க தாத்தா பெயரை சொன்னான்.” என்று சக்தியைத் திட்டினார்.

“ஏன் சொன்னா என்ன தப்பு? அவங்க கோவில்ல மரியாதை எதிர்ப்பார்த்தா நியாயம். இது பொதுதானே?” என்று கேட்டிட

“இந்தியாவும் பாகிஸ்தானும் என்ன சொந்தம்?” என்று சண்முகம் கேட்டார்.

“பக்கத்து  நாடு”

“அதே மாதிரி அவனுங்க ரெண்டு பேரும் பக்கத்து வீடு” என்றதும்

 

“பக்கத்து வீட்ல இருந்துட்டா இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி அடிச்சிக்கிறானுங்க?” என்று சகளை ஆச்சரியப்பட்டார்.

“இதுக்கு எதுக்கு வாயைப் பொளக்கிற? இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை போட்டுக்கல, சீனாவும் இந்தியாவும் பக்கத்துல இருந்தாலும் அடிச்சிக்கல, கீழே இலங்கை, அது கூட நமக்கு நல்ல பழக்கம் இருக்கா இல்லையே? பார்டர்னாலே பிரச்சனைதானே? இந்த ஊரோட இந்தியா பாகிஸ்தான் அந்த ரெண்டு வீடும். என்னைக்கு எந்த குண்டு வெடிக்கும்னே தெரியாது.”

“அப்படி என்ன பகை?”

“ஒரு மசுரும் கிடையாது! இந்த திலகரோட அப்பா சுப்ரமணியம் இருக்காரே, அவர் சுதந்திர போராட்ட வீரர். ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் பண்ணினப்போ எல்லாம் கூடவே போனாரு. அதே நேரம் லட்சுமணன் பெரியப்பா அப்பா வேதையன் இங்கிலிஷ்காரன் கிட்ட குமாஸ்தாவா வேலை பார்த்தார். அதனால இரண்டு குடும்பத்துக்கும் அப்போ ஆகாது, சுதந்திர கிடைச்ச பின்னாடியும் இவங்க திருந்தல..”

“சின்ன வயசுல இருந்தே அவன் தொரைக்குக் கூஜா தூக்கினவனு திலகர் தாத்தா வீட்ல லட்சுமணன் தாத்தா வீட்டை பேச, அப்படியே இத்தனை வருஷம் ஆகியும் பகை தீரவே இல்லை. திலகர் மாமா இப்படி பேசினதால லட்சுமணன் பெரியப்பா அவர் பேரனை போலீஸ் ஆக்கி இந்த நாட்டுக்கு சேவை செய்ய வைச்சிட்டார்.”

“திலகர் மாமா அப்பவும் நாங்க  நாட்டுக்காக போராடினோம்னு அதே பேச்சு. சுதந்திர கிடைக்கிறதுக்கு முன்னாடி சக்தி குடும்பத்துக்கு நிறைய மரியாதை இருந்தது, கிடைச்சதுக்கு அப்புறம் அப்படியே தலை கீழா மாறி போயிடுச்சு.”

 

“இப்படி இருக்கும்போது திலகர் மாமா பையன் சித்ரஞ்சன் தாஸ் லட்சுமணன் பெரியப்பா பொண்ணு வசுந்தராவை லவ் பண்ணி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டான்.”

 

“அட்ரா சக்க! இதான் சங்கதி அப்போ. சம்பந்திக்காரங்களா இருந்துட்டு இவ்வளவு ரகளையா?” என்று சகளை சத்தமாக சிரித்தார்.

Advertisement