Advertisement

நீல நதிக்கரை-1::-

அவன் ஆழ புதைந்திருப்பது என்னவோ அந்த ஆகாயத்தின் மடிக்குள்தான் ஆனால் தான் புதைந்திருப்பது இந்த ஆழியின் மடியில் என்பது போல எல்லோரையும் நம்ப வைக்க மெல்ல எழும்பினான் அவன்.

தாயின் பின்னே ஒளிந்துக்கொண்டு மெல்ல எக்கி எக்கிப் பார்க்கும் மழலையைப் போல அந்த ஆழியின் பின்னிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப்பார்த்தான் ஆதவன்.

இருள் சற்று விலக ஆரம்பிக்கவும் அவன் தன் ஒளிக்கரங்களை சற்று வேகமாக வீச அது மின்னலென அந்த ஆழியில் பட்டு சிதறி சுற்றியெங்கிலும் தெறித்தது…அதன் வீச்சு கரையோரம் அமர்ந்திருந்தவரின் முகத்திலும் பிரதிபலிக்க அத்தனை நேரம் இறுக்கமாக இருந்த அவரின் முகத்தில் சிறு மென்மை இழையோடியது.

கடல் அலைகளின் ஆவேசத்திற்கு அணைப்போடுவது போல கரையை சற்று மேடாக தூக்கியிருக்க அதன் முனையில் ஒரு விரிப்பு விரித்து கண்மூடி சம்மணமிட்டு அமர்ந்திருந்தவரின் கரங்கள் இரண்டும் அவரின் முட்டியில் இருந்தது…நிறுத்தி நிதானமாக இழுத்து ஆழமாக மூச்செடுத்து மூச்சு பயிற்சி செய்தவரின் தேகமும் மனமும் அந்த சூரிய வெளிச்சம் பட்டு சற்று தளர்ந்தது.

அடுத்து சில நிமிடங்கள் தொடர்ந்த அவரின் மூச்சு பயிற்சி முடியவும்,விழி திறந்தவரின் பார்வையில் பரந்து விரிந்த கடலும்,அதன் மேல் மணி மகுடமாக வீற்றிருந்த கதிரவனையும் கண்டதும் இதழ்கள் புன்னகையில் பெரிதும் விரிய மனமோ புத்துணர்ச்சியைத் தத்தெடுத்தது.

கண்ணை கூசச்செய்யும் அந்த சூரியனிடம் இருந்து தப்பிக்க தன் தலைக்கு மேலே தூக்கி விட்டிருந்த கண்ணாடியை இழுத்து தன் கண்களுக்கு மாட்டியவாறே, மடக்கியிருந்த தனது கால்களை அந்த கடற்கரை மேட்டில் தொங்க விடவும் கடலலைகள் வந்து அவர் பாதம் தொட்டு சென்றது.

இளங்காலையில் கண்முன்னே தெரியும் காட்சி மெய்மறக்க வைக்க, தேகத்தோடு மனதையும் தொடும் குளுமைக்காற்றும் என அன்றைய நாள் இனிதாக ஆரம்பித்திருப்பதாக உணர்ந்தவர் இன்னுமின்னும் அந்த சூழலுக்குள் தன்னை புதைத்துக்கொண்டார்.

தன்னை மறந்து, சுற்றம் மறந்து இது போதும் எனக்கு என்பதாக சில மணிநேரம் அங்கேயே அமர்ந்து தன் நேரத்தை செலவிட்டவரின் பார்வை அக்கம் பக்கம் எங்கும் திரும்பாமல் ஆர்ப்பரிக்கும் அந்த கடலையே ரசிக்கவும், அவரின் கைப்பேசி நேரமானதை அறிவிக்க அலாரமாக ஒலித்தது.

அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் மெல்ல எழுந்து தான் பயன்படுத்திய இருக்கை விரிப்பையும், உடமைகளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவர் கடல்மண்ணில் கால் புதைய சில நிமிட நடைதூரத்தில் தன் வீட்டை அடைந்தார்.

அவர் வீட்டின் மாடியிலிருந்து பார்த்தாலே கடல் நன்றாக தெரியும் ஆனால் அதை தொட்டு ரசிக்க இயலாதே…அதனாலேயே அனுதினமும் காலையும்,மாலையும் குறிப்பிட்ட சில நேரம் அங்கு சென்று அமர்ந்துவிடுவார்.

எப்போதும் கடற்கரையிலிருந்து வீடு திரும்பும் போது மனம் லேசாகி அந்த நாள் முழுவதும் இதழ்பிரியா புன்னகையோடு வலம் வருபவர் இன்றும் அப்படியே அந்த இரண்டு படுக்கையறை கொண்ட தனி வீட்டில் நுழைந்தார்.

அந்த வீடு வில்லா டைப் என்பதால் ஒரே மாதிரியான வீடுகள் தனித்தனியாக அருகருகே அமைந்திருந்தது…அதில் ஒன்றில் வாசம் செய்பவரும் அந்த வீட்டில் தனியாகத்தான் வசித்து வருகிறார்…ஆனால் இந்த தனிமையை தனக்கே தனக்கென வேண்டும் என்று விரும்பி ஏற்றவர் நதியா…

 

அவர் தனியே வசிப்பதை விட, தன்னந்தனியே இத்தனை பெரிய வீட்டில் இருப்பதற்குத்தான் அவருக்கு பலவிதமான எதிர்ப்பு கிளம்பியது… அந்த எதிர்ப்பு பலதும் அவரின் பிள்ளைகளிடமிருந்து…ஆனால் அதையெல்லாம் சாமர்த்தியமாக ஒதுக்கிவிட்டு உறுதியாக நின்று இன்று அந்த வீட்டில் வசிக்கிறார்.

“நீங்க மூணு பேரும் கவலைப்படற அளவுக்கு நான் இப்ப இல்ல…நான் நல்லா நிம்மதியா சந்தோஷமாதான் இருக்கேன்…எனக்கு கை நிறைய என் பென்ஷன் பணம் வருது…நான் என்னைப் பார்த்துக்கறேன்…நீங்க என்னை நினைச்சு வருத்தப்படாதீங்க…”என்பார் நதியா பொறுமையாக.

அப்படி தன் பிள்ளைகளை சமாளித்து, சமாதானம் செய்து என சில பல தடைகளுக்கு இடையே, முழுக்க முழுக்க அவர் சொந்த உழைப்பில் சம்பாதித்த வருமானத்தில் வாங்கியது அந்த வீடு…

இத்தனை வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கையை விட,இனி தன் வாழ்க்கையை தனக்கென மாற்றியமைத்த பாதையில் அவர் எடுத்து வைத்த முதல்படிதான் இந்த வீடு…

ஆனால் அவர் இந்த வீட்டை தேடி பிடித்து வந்து தங்க மிகப்பெரிய காரணம் அந்த நீலநதிக்கரைதான்…

 

அதிகாலை நேரம் கடலலை மீது தோன்றும் ஆதவனின் உதயம் ஒருவித புத்துணர்ச்சியைக் கொடுத்தால்,

அந்திசாயும் நேரம் பரந்து விரிந்திருந்த அந்த நீல நதியின் மேல் தன் ஒளிக்கரங்களை பரவ விட்டபடி,கதிரவன் மேற்கில் மறையும் போது வீசும் தென்றல் ஏனோ மனதை சாந்தப்படுத்தும்…அந்நேரம் மனம் உணரும் சுகத்தை வார்த்தைகளால் வடிக்க இயலாது அங்கே அமர்ந்திருந்தார் நதியா.

நாளையைப் பற்றி கனவில்லை…

இன்றையப் பற்றி கவலையில்லை…

சுற்றத்தைப் பற்றிய கவனமுமில்லை…

தன் தனிமையைப் பற்றிய எண்ணமுமில்லை…

தன் வாழ்நாள் முழுமைக்கும் இந்த நொடி போதுமானது…

தான் வாழ்ந்து முடிக்க இந்த இடம் போதுமானது…

தனக்கு துணையாக என்றும் அழியாத அந்த ஆதவன் போதுமானது…

தான் இளைப்பாற இந்த நீலநதிக்கரை போதுமானது…

*****************************************

ரவிச்சந்திரன் மாலை வரை எப்படியோ நேரத்தை நெட்டித்தள்ள, அவரின் முன் வந்து நின்றான் மனோ என்னும் மனோ ரஞ்சன்…

ரவிச்சந்திரனுக்கு தன் தொழில் ரீதியாக, வேலை விஷயமாக ஆயிரம் பேரை தெரியும்…ஆனால் தற்போது அவருக்கு வேண்டப்பட்டவன் என அவர் கைக்காட்டும் நபராக அருகே இருப்பது இந்த மனோ ஒருவன் மட்டுமே…

அவனைக் கண்டதும் அவரின் விழிகள் பளிச்சிட,

“ஹே மனோ வா வா…”என்று அவனை வரவேற்க அவனோ அவரை முறைத்தவாறே வந்தான்.

அவன் விவரமறிந்தே இங்கே வந்திருக்கிறான் என்று உணர்ந்தவர் அப்படியே அமைதியாக,

“ஒன்னு உங்க உடம்பை நல்லா பார்த்துக்கணும்…இல்லைன்னா அக்கம் பக்கம் தெரிஞ்சவங்க இருக்க இடமா பார்த்து தங்கி இருக்கணும்…இது எதுவும் இல்லாம எதுக்கு இப்படி இங்க வந்து இருக்கீங்க?”என்றவன் வந்த வேகத்திலே ஆரம்பிக்க,

“இல்ல ஒரு மாற்றமா இருக்கும்னு தோணுச்சு அதான் இந்த வீடு கிடைச்சதும் இங்க வந்துட்டேன்…”என்றார் சற்று தயக்கமாக.

“எவ்வளவு இடம் மாறினாலும் மனசு மாற்றத்துக்கு நீங்க இடம் கொடுத்தா தான் எல்லாம் சரியா இருக்கும்…இல்லைன்னா எவ்வளவு முயற்சி செய்தாலும் எல்லாமே வீண்தான்…”என்றான் மனோ அழுத்தமாக.

“நம்ம ஆம்பளைங்கன்ற தலைக்கனத்தை காலம் போற கடைசி நேரம் வரைக்கும் தூக்கி சுமக்கணும்னு அவசியம் இல்லை அங்கிள்…”என்றவனின் குற்ற சாட்டில் அவரின் முகம் இறுகியது.

 

Advertisement