செழியனின் ஜீப் சத்தம் தூரத்தில் கேட்டதும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அம்மு வீட்டுக்குள் ஓடி வந்தவள்,
“அம்மா, நான் எங்கயிருக்கேன்னு அப்பா கேட்டா சொல்லாதீங்க! அடிச்சி கேட்டாலும் சொல்லாதீங்க!” என்று மாடி ஏறி ஓட..
தடுத்து நிறுத்திய திவ்யபாரதியோ, “ஏய்! மரியாதையா சொல்லிட்டுப் போ! இன்னைக்கு என்ன வம்பைடி இழுத்து வச்சிருக்க…?”
“கொஞ்சம் பொறும்மா! அப்பா வந்து இப்போ கதை கதையா சொல்வாரு!” என்றவள், நிற்காமல் ஓரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.
“அடியே! நில்லுடி..!”
‘அவருதான் நல்லா கதை சொல்வார்ன்னு எனக்கு தெரியுமே! அவர் சொன்ன கதையில பிறந்தவதான நீயும்..” என்று மனதுக்குள் சொன்னவள், குனிந்து வெட்கத்துடன் தன் நிறைமாத வயிற்றை தடவிப் பார்த்துக் கொண்டாள்.
நேராக கார்த்தியின் பின்புறம் போய் மறைந்தவள், “மாமா! நான் இங்க இருக்கேன் சொல்லாத!” என்றாள் இரகசியக் குரலில்.
“அம்முகுட்டி! நீ இங்கதான் இருப்பனு உங்கப்பனுக்கு இல்ல, இந்த ஊருக்கே தெரியும்!” என்று அதே இரகசிய குரலில் சொன்னவனும்.
“ஆமா! இன்னைக்கு என்ன வம்ப இழுத்து வச்சிருக்க!” என்று அதே இரகசியம் மாறாமல் கேட்டவனிடம்..
“மாமா! உனக்கு வேற தனியா சொல்வாங்களா! எனக்கு எனர்ஜி வேஸ்ட். இரு மாமா அப்பாவே சொல்வாங்க.” என்றாள் சலித்துக்கொண்டு.
அதில் புன்னகைத்தவனுக்குத் தெரியும், இது வாடிக்கையான ஒன்று என்று.
ஜீப்பை வாசலில் நிறுத்தி விட்டு கோபமாக வந்த செழியன், “எங்க உன் அருமை பொண்ணு! போய் ஒளிஞ்சிக்கிட்டாளா! ஸ்டேஷன் போனா, இவ கேஸுதாண்டி பெரிய தலைவலியா இருக்கு. இன்னைக்கு என்ன பண்ணிட்டு வந்துருக்கா தெரியுமா?” என்றவன்.,
“6 வது படிக்கிற பையன் ஒருத்தன் மண்டைய உடைச்சி வச்சிருக்கா. பசங்க எல்லாம் சேர்ந்து சண்டை போட்டுட்டு இருந்துருக்காங்க, அதுல இவ, நடுவில புகுந்து கம்பு சுத்தி எல்லாரையும் அடிச்சி வச்சிருக்கா. அதுல ஒருத்தன் மண்டைய கம்பாலே வேற பொழந்து இருக்கா! இவ அடிக்கவும், இந்த நாலு தடித் தாண்டவராயன்களும் வேற கூட சேர்ந்து அந்தப் பசங்களை துரத்தி இருக்கானுங்க.” என்று ஹேன்றி அண்ட் கோவையும் சேர்த்து குற்றப்பத்திரிக்கை வாசித்தான், மனைவியிடம்.
“அந்தப் பையனோட அப்பன் ஸ்டேஷன் வந்து புலம்பிட்டு போறான். பாவமாச்சேன்னு ஹாஸ்பிட்டல் போக காசு குடுத்து அனுப்பினேன். நான் வாங்குற சம்பளம் பூரா இப்படித்தான் போகுது.” என்று புலம்பியவன், மாடியை நோக்கி குரல் கொடுத்தான்.
“அம்மு..! அம்மு..! அப்பா முன்னாடி வா!” என்று கூப்பிடவும்
மாடியிலிருந்து முதலில் எட்டிப்பார்த்தது என்னவோ ஹென்றி தான்.
‘என்னை மீறி அவளைத் தொடு பார்ப்போம்’ என்ற முறைப்பு அவனிடம்.
அவன் பின்னால் வந்த ராக்கியும், பைரவும் ‘என்னவாம் இந்த சிரிப்பு போலீஸ்க்கு’ என்ற நக்கல் பார்வையுடன் கீழ் இறங்க..
பின்னால் மாறனோ, ‘காது பத்திரம் தம்பி’ என்ற முறைப்புடன் நின்றான்.
சலித்துக்கொண்ட செழியனோ, “நீங்கள்லாம் குடுக்கற செல்லம்தாண்டா அவ இந்த ஆட்டம் ஆடுறா!” என்றவன் “எங்க அந்த மகாராணி! இறங்கி வருவாளா, மாட்டாளா?” என்றான்.
மெல்ல மெல்ல கார்த்தியின் பின்னால் இறங்கி வந்த அம்மு, ஒன்றும் தெரியாதது போல் பம்மிக்கொண்டு நின்றிருந்தாள்.
“எதுக்கு, அந்தப் பையனை அடிச்ச! உன்னை விட பெரிய பசங்க கிட்ட உனக்கு என்ன தகராறு?” என்றான் மிரட்டும் குரலில்.
“அப்பா! ஸ்கூல் விட்டு வர்ற வழியில, நாலு பசங்க சேர்ந்து ஒரு பையனை அடிச்சிட்டு இருந்தாங்க. அதான் பாவமாச்சேன்னு பக்கத்துல இருந்த கம்பெடுத்து அவனை அடிக்காமக் காப்பாத்தினேன். யாருக்கும் அடிபடாத மாதிரிதான்பா கம்பு சுத்தினேன்.” என்றவள் நம்பாத பார்வை பார்த்தவனிடம், தன் தாய் போல் ‘செழியன் ப்ராமிஸ்’ என்றாள் கழுத்தை பிடித்துக்கொண்டு.
செழியன் முறைக்கவும் “அதுல ஒருத்தன் என் ஜடைய புடிச்சி இழுத்துட்டான், அதான் கோபம் வந்து லேசா கம்ப வச்சி தட்டினேன், கொஞ்சமே கொஞ்சம் இரத்தம் வந்துச்சி அவ்ளோ தான்பா.” என்றாள் கையை சுருக்கிக் காட்டி.
கார்த்தியும், திவ்யபாரதியும், அவள் சொன்ன விதத்தில் சட்டென்று சிரித்து விடவும், அவர்களையும் சேர்த்து முறைத்தவன்,
“எல்லாம் கூட்டுக் களவாணிங்க, இந்த வீட்ல நான் மட்டும்தான் தனிக்கட்சி. மிச்ச எல்லாம் ஓரே கட்சி.” என்று திட்டியவனுக்கும் தெரியும், அம்மு வம்புச் சண்டைக்குப் போக மாட்டாள். ஆனால், வம்பு இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அவள் இருப்பாள் என்று.
அன்று இரவு வழக்கம்போல் அம்மு சாப்பிட்டுவிட்டு ஹோம் ஒர்க் செய்யாமல் படுத்துவிட, படுத்தவளை எழுப்பி தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு, அவள் கைப்பிடித்து ஹோம் ஒர்க் எழுத வைத்த கார்த்தியை, வாசலில் முறைத்துக்கொண்டு நின்றிருந்தனர் செழியனும் பாரதியும்.
அதில் ‘நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா’ என்ற பார்வை.
சிரித்தே சமாளித்த கார்த்தி, “அம்மு பாவம்டா, பாரு இப்போல்லாம் எவ்ளோ ஹோம் ஒர்க் குடுக்கிறாங்க தெரியுமா? எழுதவே கஷ்டமா இருக்கு!” என்றவனை துப்புவதுபோல் செய்கை செய்த செழியன், தலையில் அடித்துக்கொண்டு தன் மனைவியுடன் சேர்த்து வையிற்றில் இருக்கும் குழந்தைக்கும் கதை சொல்லித் தூங்க வைக்க கிளம்பிவிட்டான்.
மனைவி கர்ப்பமாக இருப்பதால், தூங்க வைக்க மட்டுமே கதை சொல்லி வருகிறான் நம் செழியன்.
தாயும் தந்தையும் கிளம்பியதும் மெதுவாக கண்விழித்த அம்மு, “மாமா! அப்பா அம்மா போய்ட்டாங்களா!” என்று மெதுவாகக் கேட்டவள், “ஒரு பாட்டு பாடு மாமா!” என்றாள்
“அம்முக்குட்டி! நீ தூங்கலையா! கேடி, தூங்கினமாதிரி நடிச்சி என்னைய ஹோம் ஒர்க் எழுத வச்சிருக்க!” என்று போலிக் கோபம் போல் கேட்டவனிடம்,
“பின்ன என்ன மாமா! நீ தினமும் ஹோம் ஒர்க் எழுதி எழுதி, இப்போ நானே எழுதிட்டு போனா கூட, ‘இது உன் கையெழுத்து தானான்னு’ மிஸ் சந்தேகமா கேட்குறாங்க. அதான் எதுக்கு வம்புன்னு நீயே எழுதிக்குடுன்னு தூங்கினா மாதிரி நடிச்சேன்.” என்றவள் சத்தமாக கிலுக்கிச் சிரித்தாள்.
“கேடி” என்று அணைத்துக்கொண்டவன், தன் அம்மு குட்டியின் ஆசைப்படி, பாடவும் ஆரம்பித்தான்.
“யார் இந்த தேவதை..
ஆனந்த பூமக..
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம்
சொந்தக்காரி..
யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும் என் மக..
நீ எந்தன் சாமி தான்
என்ன பெத்த சின்ன தாயே..
என்ற சினிமா பாடலை பாட
கேட்டுக்கொண்டிருந்தவளோ, “மாமா, வேற பாட்டே நீ பாட மாட்டியா” என்றாள் மெல்லிய குரலில்.
“நான் என் குட்டிம்மா பத்திதானே பாடமுடியும்” என்றவன், “ஆமா, அம்முக்குட்டி! நீ இன்னைக்கு ஒருத்தனை காப்பாத்தினேன்னு சொன்னியே, அது யாரு?” என்றான் தலையை வருடி விட்டவாறே.
“அதுவா மாமா!” என்றவள் அவன் பெயரைச் சொல்லவும்,
கார்த்தியின் புருவம் ஒருமுறை சுருங்கி விரிந்தது.
ஏனெனில் அம்மு சொன்ன பையன், கார்த்தியின் சிலம்பக் கலைக்கூடத்தில் நம்பர் ஒன் மாணவன். நம்பர் ஒன் மாணவன் மட்டும் இல்லை. இந்த 12 வயதில் குருவை மிஞ்சின சிஷ்யனும் கூட.
கார்த்தி நினைத்தது போலவே, அன்று மாலை அம்மு சென்றதும், அந்த அடிவாங்கிய மாணவனிடம் வம்பிழுத்த அந்த நாலு மாணவர்களும்,
அவனிடம் வந்து “டேய்! நீ சொன்னா மாதிரி ஒழுங்கா ஜூஸ் வாங்கிக் குடு! நாய் எல்லாம் அவகூட வரும்னு ஏண்டா முதல்லயே சொல்லல?” என்றவர்கள் “மரியாதையா அதுக்கும் சேர்த்து எதுனா வாங்கிக்குடு.” என்றனர்.
“கொஞ்சம் விட்ருந்தா என் காது போயிருக்கும் தெரியுமா” என்றான் அதில் ஒருவன் தன் காதை பொத்திக்கொண்டு.
அதில் சிரித்தவனோ, “அது என்னவோடா, எப்ப பாரு யார்கிட்டயாவது வம்பிழுத்துக்கிட்டே அலையுறா அந்த ராங்கி! போன வாரம் கூட என் ப்ரண்ட் கைய உடைச்சி வச்சிட்டா!
இதுவும் கூட கார்த்தி சொல்லிக்கொடுத்த பாடம் தான். கார்த்தி சொல்லிக்கொடுத்த பாடத்தை, அவன் மருமகளுக்கு எதிராகவே பயன்படுத்தும் இவனின் பள்ளிக்காலப் பகை என்ன வானது என்பதை, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.