கண்ணாடி முன் நின்று, தன் கையிலிருந்த கடிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தான், செழியன்.
கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தவன் ‘இப்போ நீ ஏன் கலங்குற? நீ DSP டா, கலங்கக் கூடாது.’ என்று விவேக் ஸ்டைலில் தனக்கு தானே புலம்பிக் கொண்டிருந்தான், அத்தனை பெரிய காவலன்.
“DSP..! அங்க கண்ணாடி முன்னாடி நின்னு இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றழைத்தாள் நிறை மாத கர்ப்பிணியான திவ்யபாரதி.
செழியனின் அடுத்த கதை ஒன்று திரைப்படமாகி, வெளியாகக் காத்திருக்கிறது திவ்யபாரதியின் வயிற்றில்.
“அம்மு ஸ்கூல்ல இருந்து வரச் சொல்லி கடிதம் கொடுத்து இருக்காங்க தானே! டியூட்டிக்கு போக முன்னாடி போய் என்னன்னு கேட்டு வந்துருங்க, போங்க!” என்றவளை முறைத்துப் பார்த்திருந்தான் செழியன்.
கையிலிருந்த கடிதத்தைப் பார்த்தவன், “இவ வேற… அதுக்கு தானடி பயந்து கிட்டு இருக்கேன்! என்ன வம்ப இழுத்து வச்சிருக்கா தெரியலையே!” என்று மனதுக்குள் புலம்பியவனோ, வெளியில் கெத்தாக காட்டிக்கொண்டான்.
“ஆமாம், பாப்புக்குட்டி, நீ தான் ஈவினிங் மன வளர் கலை வகுப்பு எடுக்க, அம்மு ஸ்கூல்க்கு போவ தானே! நீயே போய் கேட்டு வந்துரேன்!” என்று நைசாக நழுவப் பார்த்தான்.
‘நானா?’ என்று மனதுக்குள் அலறியவள் “இல்ல! இல்ல, அவங்க காலையில தான் வரச் சொல்லி இருகாங்க! அதுவும் இல்லாம, நான் போகும் போது டீச்சர்ஸ் எல்லாம் கிளம்பிடுவாங்க. நீங்களே போய் பாருங்க!” என்று பந்தை மறுபடியும் அவன் பக்கமே திருப்பி விட்டவள்,
“வேணும்னா, நான் இன்னையிலருந்தே கூட லீவ் எடுத்துக்கறேங்க! நீங்க வேற நிறைமாசம் ஆகிடுச்சின்னு லீவு எடுக்கச் சொன்னீங்க தானே! நான் இன்னையிலருந்து அம்மு ஸ்கூல்க்குப் போகலைங்க.” என்றாள் சிரிப்பை ஒளித்துக் கொண்டு.
இவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டே தன் மாமன் கார்த்தியிடம் ஷு லேஸ் கட்டிக்கொண்டிருந்த அம்முவோ, கையால் வாயை மூடிக்கொண்டு சிரித்திருந்தாள்.
“ஏய் வாலு! ஸ்கூல்ல என்ன பண்ணி வச்சிருக்க?” என்று கார்த்தி இரகசியமாக அம்முவிடம் கேட்க.
“எப்படியும் இரண்டு பேரும் ஏதாவது சாக்கு சொல்லி வரமாட்டாங்க. வழக்கம் போல நீதானே மாமா வருவ! அங்க வந்தே தெரிஞ்சிக்கோ!” என்று சொல்லி விட்டு ஓடிவிட்டாள்.
“வாண்டு” என்று செல்லமாகத் திட்டியவன் புன்னகைத்துக் கொண்டான்.
பாலைவனமாக இருந்த கார்த்தியின் வாழ்வை சோலையாக்கியவள் அல்லவா, இந்த அம்மு.
குழந்தை பிறந்ததுமே முடிவெடுத்து விட்டான், செழியன். இந்தக் குழந்தை அம்மு தான் என்று. அதுவும் கார்த்தியின் அம்மு என்று.
தனக்கென்று தனியே குடும்பமே வேண்டாம் என்று இருப்பவன், கார்த்தி. செழியனின் அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்காக, இன்று வரைக்கும் பழைய பகை அனைத்தையும் விட்டுவிட்டு, நல்லவனாகத் திருந்தி வாழும் கார்த்திக்கு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேண்டும் என்று ஏதாவது செய்ய நினைத்தான், செழியன்.
எப்படியும் கார்த்தி தங்களை விட்டு செல்லப் போவதில்லை. அதனால் குழந்தை அம்முவை அவன் குழந்தையாகவே தத்துக் கொடுக்கவும் தயாராக இருந்தான்.
ஆம், செழியனின் அப்பா மகேந்திரன் கார்த்தியை சந்தித்தவர், தான் குற்ற உணர்ச்சியில் தவிக்காமல் இருக்க வேண்டும் என்றால், கார்த்தி அனைத்தையும் மறந்து விட்டு தன் இன்னொரு மகனாக இருக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
செழியனும் தன் பங்குக்கு கார்த்தி மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டால், கார்த்தியை கைது செய்ய நேரிடும் என்றும், அப்படி கார்த்தியை கைது செய்தால் மனசாட்சிப்படி அதே குற்றத்தை செய்த திவ்ய பாரதியையும் கைது செய்வது தான் முறை என்று சொல்லி, தன் பங்குக்கு மிரட்டி வைத்தான்.
இவர்களின் அன்பில் நெகிழ்ந்த கார்த்தி, அவர்களுடன் இருக்க ஒப்புக்கொண்டான். அதோடு திரையன் அரிமாவின் நிலத்தில் அவருடன் சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்தவன், இன்று சொந்தமாக தோட்டம் வைத்திருக்கிறான்.
அதுமட்டும் இல்லாமல், அவன் தன் தனி முயற்சியில் ஆரஞ்சு தோட்டம் ஒன்றை உருவாக்கி, அதன் விளைச்சலை வெற்றிகரமாக சந்தைப்படுத்தியும் வருகிறான். விரைவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறான்.
ஆனால், என்ன வற்புறுத்தியும் திருமணம் மட்டும் செய்து கொள்ள மறுத்து விட்டான்.
அது மட்டும் இல்லாமல், செழியனின் குழந்தை விஷயத்திலும், “குழந்தைய கொடுத்து என்னைய ஒதுக்கப் பாக்குறியா” என்று கோபித்து கொள்வது போல் நடித்தவன்,
“என் அம்முவுக்கு எப்போதுமே நான் மாமனாக இருக்க மட்டுமே விரும்புகிறேன். அப்போ மாமா.. இப்போ தாய்மாமா அவ்ளோதான்.” என்று முடித்து விட்டான்.
அன்றிலிருந்து இன்று வரை, அம்முக்கு எல்லாமே தன் மாமன் தான். செழியனும் சரி, பாரதியும் சரி, அம்மு விசயத்தில் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
அப்போது தான், கார்த்திக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும் என்று உறுதியாக நம்பினர். என்னதான் கார்த்தி இங்கு வந்த பிறகு சாதாரணமாக வளைய வந்தாலும், நிறைய இரவுகளில் தோட்டத்தில் தங்கிக் கொள்வான். தனிமையில் தன் அம்முவிடம் மனதைக் கொடுத்திருப்பான்.
ஆனால், குழந்தை அம்மு வந்த பிறகு, தானும் ஒரு குழந்தையாகவே மாறிப் போனான் கார்த்தி. அவன் வாழ்க்கையின் வெறுமை காணாமல் போயிருந்தது.
அவள் பிறந்ததிலிருந்து, குளிக்க வைப்பது முதல் தூங்க வைப்பது வரை, அனைத்தும் கார்த்தி தான். அம்முவும் அவனைத்தான் அதிகம் தேடுவாள். பசியாற்றிக் கொள்ள மட்டுமே பாரதியை தேடுவாள், செழியனின் பெண்ணரசி.
தற்பொழுது மாமன் ஊட்டி விட, சாப்பிட்டு முடித்த அம்மு, “அப்பா வாங்க போகலாம்.” என்றாள் நமட்டுச் சிரிப்புடன்.
“ஹான்! போலாம் அம்முக்குட்டி” என்று வாசலுக்குக் கிளம்பிய செழியன், போனைக் காதில் வைத்து, “எப்போ, எப்படி? இதோ ரெண்டே நிமிஷம் வந்துட்டேன்.” என்றவன்,
“கார்த்தி! அம்முக்குட்டி டீச்சர பார்த்துட்டு வந்துரு.” நான் கொஞ்சம் அவசரமா வெளிய போகணும்.” என்றவனை வழி மறித்த கார்த்தி…
“அவசரமா….!”
“ம்ம் ஆமா டா..”
“போலீஸ் கார்! இங்க சிக்னல் கிடைக்காதுன்னு அம்முகுட்டிக்கு கூட தெரியும்.” என்று முறைக்க
அம்முவோ விழுந்து விழுந்து சிரித்தாள்.
“தெரியுதில்ல! போய் தொலைடா!” என்றவனை கேவலமாக லுக்கு விட்ட கார்த்தி,
“பொண்ணு ஸ்கூல்க்கு போக பயம்! இந்த லட்சணத்துல நீயெல்லாம் ஒரு DSP! இதுல இன்னும் இரண்டு மாசத்துல ப்ரோமோஷன் வேற…” என்று கேலி செய்தான்.
செழியன் சொல்லவும், கைகளை கட்டிக்கொண்டு தன் தகப்பனை முறைத்த அம்முவோ, “வா மாமா! நாம போலாம்!” என்று கிளம்பவும், அவள் ஸ்கூல் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டான், கார்த்தி.
அம்மு கிளம்பவும், ஹென்றி அண்ட் கோ.. அம்முவின் முன் ஆஜர் ஆனவர்கள், அவளை சூழ்ந்து கொண்டு கூட நடக்க ஆரம்பித்தனர்.
கார்த்தி பையை தூக்கிக்கொண்டு முன்னால் நடக்க, அதன் பின்னால் ராக்கி மற்றும் பைரவ் நடக்க, நடுவில் அம்மு. பின் பக்கம் ஹென்றி மற்றும் மாறன். இது தினமும் வாடிக்கை.
தினமும் பள்ளிக்கு ஐவர் படையுடன் தான் செல்வாள், அம்மு. அதே போல் சாயங்காலம் பள்ளி முடிந்து வரும் பொழுதும், கார்த்தி இல்லை என்றாலும் இந்த நால்வர் படை இருக்கும். எல்லாம் கார்த்தியின் ஏற்பாடு.
அதற்காக கோழையாகவும் வளர்த்து விடவில்லை, தன் மருமகளை. ஆயக் கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தந்திருக்கிறான்.
இவர்களைத் தாண்டி அம்முவை யாரும் தொட்டு விட முடியாது. ஆனால், அம்மு தான் நித்தம் ஒரு யுத்தம் செய்து விட்டு வருவாள்.
அவள் குழந்தையில் உட்காரப் படித்த போது கூட, தடுமாறி தரை சாய்ந்ததில்லை என்பதை விட, இவர்கள் ஐவரும் சாய விட்டதில்லை. எப்பொழுதும் அவளைச் சுற்றியே இருப்பார்கள். அம்மு எந்தப் பக்கம் விழுந்தாலும், இந்த நால்வரின் ஒருவர் முதுகில் தான் சாய்வாள். அவ்வளவு பாசம் வைத்திருந்தனர் அவள் மீது.
நடந்து நடந்து, அந்த ஊருக்குள்ளயே இருக்கும் பள்ளியை அடைந்திருந்தனர்.
அம்முவை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றான், கார்த்தி.
“வாங்க சார், அவங்க அப்பா வரலையா?” எப்போதும் கார்த்தி வந்து எதையாவது சொல்லி சமாளித்து விடுவதால் வந்த கடுப்பு அது. படிப்பில் நம்பர் ஒன்னாக இருப்பவள், சேட்டையிலும் நம்பர் ஒன்னாக இருப்பதால் தான் பிரச்சனையே!
கார்த்தியை சேரில் அமரச் சொன்னவர், பெல் அடித்து பியூனை வரச் சொன்னார். உதடு கிழிந்து வாயில் பிளாஸ்த்திரியுடன் வந்து நின்றவனைக் காண்பித்த தலைமை ஆசிரியர்,
“பாருங்க சார்! உங்க பொண்ணு எப்படி அவர் வாயை உடைச்சி வச்சிருக்கான்னு, அவர் பல்லு கூட ஆடிக்கிட்டு இருக்குன்னு, கம்ப்ளைன்டு பண்ணி இருக்கார்.” என்றார் கோபத்துடன்.
ஒன்றுமே செய்யாததுபோல் நின்றிருந்த அம்மு பக்கம் திரும்பிய கார்த்தியோ, “என்ன அம்மு! அவர எதுக்கு அடிச்ச!” என்று கேட்கவும்,
முந்திக்கொண்ட தலைமை ஆசிரியர், “நேத்து பர்த்டேன்னு சாக்லேட் குடுத்து இருக்கா, குழந்தையாச்சேன்னு அவரும் கொஞ்சி முத்தம் குடுத்து இருக்கார்! அதுக்கு கீழ இருந்த கல் எடுத்து அவர் வாய் மேலயே தூக்கி அடிச்சிருக்கா, சார்!” என்று மூச்சு விடாமல் பேசினார்.
அவர் பேசி முடிக்கவும் இடையிட்ட அம்மு, “நோ, ஐ வார்ன்டு ஹிம் மேம்! (இல்லை, நான் எச்சரிக்கை செய்தேன்)” என்றாள் அழுத்தமாக.
“நோ மேம்! குட் டச்! ஆர், பேட் டச்! டோன்ட் டச் மை பாலிஸி!” என்றவள்,
“நான் முதல்லயே வார்ன் பண்ணேன் மேம்! இவர்தான் சொல்ல சொல்லக் கேட்காம தூக்கி முத்தம் கொடுத்தார். அதான் நான் அடிச்சேன்.” என்றாள் நிமிர்வுடன், தான் செய்தது தவறே இல்லை என்பதாக.
அவள் பதிலில் புன்னகைத்த கார்த்தி! “தெரிஞ்சிக்கோங்க மேம்! திருந்த வேண்டியது அம்மு இல்லை! நீங்கதான். காலத்துக்கு ஏத்த மாதிரி கல்வி முறையை மாத்துங்க. குட் டச்சும் வேண்டாம்! பேட் டச்சும் வேண்டாம்! டோண்ட் டச்சுன்னு சொல்லிக்குடுங்க குழந்தைங்களுக்கு.” என்று சல்யூட் ஒன்றை வைத்தவன், கெத்தாக அம்முவை தூக்கிக்கொண்டு வகுப்பறை வாசலில் விட்டு, அவள் கை முட்டியோடு தன் கைகளை முட்டி ஹை-பை கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றான்.