மறுநாள் காலை கண்விழித்ததும், வாசலில் வந்து குரல் கொடுத்தான் வல்லன்,
வெளியில் வந்த செழியனிடம் விசயத்தை சொல்லிவிட்டு அவன் சென்றுவிட,
அப்போதுதான் தூங்கி எழுந்த படி இறங்கிக் கொண்டிருந்தான், கார்த்தி.
வந்ததும் வராததுமா, “என்னடா பண்ண அவனை…” என்ற கேள்வியில் திகைத்து நின்றான், கார்த்தி.
“யாரை நான் என்ன பண்ணேன்?” என்று புரியாமல் பார்த்தவனிடம்..
“சும்மா நடிக்காதடா, நேத்து பஞ்சாயத்துல வச்சி தண்டணை குடுத்தவன், ஊருக்கு வெளிய மரத்துல தூக்கில தொங்குறானாம். கடைசியா அவனை உன் கூடத்தான் பார்த்ததா சொல்றாங்க.”
“வாடா வா! ஊர்ல எவன் எதைப் பண்ணாலும், அதுக்கு நான் தான் பலியா” என்றவனிடம்,
“எவன் பண்ணாலும் இல்ல, ஆனால் இவனுக்கு பின்னாடி கண்டிப்பா நீதான் இருப்ப…” என்றவன் மேலும் “அதான் உன் ப்ரண்ட் ஆசைப்படி தண்டிச்சாச்சில்ல. அப்புறமும் ஏன் இப்படி பண்ண?” என்று கோபமாக முறைத்து நின்றான் செழியன்.
“நீ சொல்றது கரெக்ட் தான் போலீஸ்கார்! தண்டனை குடுத்ததோட எல்லாம் அப்படியே அவனைக் கண்டுக்காம விட்டீங்க. எனக்கு அவன் உயிரோட நடமாடுறதே பிடிக்கல. அதான் கடத்திட்டு போனேன்.” என்றவன் “ஆனா, அவனை நான் கொல்லல…” என்றான் உறுதியாக.
“அப்படியே எல்லாம் விடல, அவன் இந்த ஊரைத் தாண்டின அடுத்த நிமிஷம், அவனை அரெஸ்ட் பண்ண போலீஸ் ஊருக்கு வெளிய தயாராதான் இருக்காங்க. அவங்களுக்கு தெரியும், இந்த ஊர் எல்லைய அவனால தாண்ட முடியாதுன்னு. திரையன் அரிமாவுக்கு மதிப்புக் குடுத்து ஊருக்குள்ள வரமாட்டாங்க.” என்றான் அதே கோபம் மாறாமல்.
“அவனை நான் கூப்பிட்டுப் போனது உண்மைதான்” என்றவன் அங்கு நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்.
……………….
இரவு ஆரம்பிக்கும் வேளையில், அவனைத் தனியே கூட்டிச் சென்ற கார்த்தி, கோபத்தில் அவன் கழுத்தை நெறிக்கப் போக…
அதற்குள் அவனாகவே கார்த்தியின் காலைப் பிடித்தவன், “தயவு செஞ்சி என்னைக் கொன்னுருங்க, காலையிலருந்து இந்த காமுகன்னு பச்சைக் குத்தினதப் பார்த்துட்டு, பச்சைத் தண்ணீர் கூட யாரும் குடிக்க தரமாட்றாங்க.
என் பொண்டாட்டி பிள்ளை, எங்க போனாங்கன்னே தெரியல. நான் பெத்த பையனே, என் மூஞ்சில காரித் துப்பிட்டு போய்ட்டான். இதுக்கும் மேல நான் உயிரோட இருந்து என்ன பண்ணப் போறேன். என்னை நீங்களாவது கொன்னுருங்க.” என்று காலைப் பிடித்திருந்தான்.
அதைப்பார்த்த கார்த்தியோ, “இத்தனை நாள் நீ வாழ்ந்ததே பூமிக்கு பாரம்னு உன்னைப் போடத்தான் இருந்தேன். ஆனால் நீ எல்லாம் இப்படி உடனே சாவறதை விட, குடும்பம் என்ன ஆச்சின்னே தெரியாம, ஊருக்குள்ள அலைஞ்சி திரிஞ்சி, பட்டினி கிடந்தே துடிதுடிச்சி சாவு!” என்று உதறிவிட்டு வந்துவிட்டான்.
இதைக் கார்த்தி சொல்லவும், நம்பாத பார்வை பார்த்த செழியனிடம், “இங்க பாரு… கொன்னா, ஆமாம் கொன்னேன்னு சொல்லப் போறேன். இத்தனை கொலை பண்ண எனக்கு, இவனைக் கொல்றது என்ன பெரிய விஷயமா?” என்றவன்,
“நான் இப்ப விவசாயியாக்கும், போடா அங்கிட்டு” என்று நகர்ந்தவன் நின்று திரும்பி…
“ஆமா, என்னை சொல்றீயே, அவனை நீயே ஏன் தூக்கில தொங்க விட்டுருக்கக் கூடாது? நேத்து அவன் குடும்பத்த நீ தானே கூட்டிப்போன?” என்றான்.
“நான் கொன்னுட்டு பலிய ஏண்டா உன் மேல தூக்கிப் போடப் போறேன்?” என்றவன் “அவன் குடும்பத்த நான் கூட்டிப்போனது உனக்கு எப்படி தெரியும்?”
“நேத்து, நானும் உன் பின்னாடி தான் தம்பி வந்தேன்.” என்றான் நக்கலாக.
நேத்து பஞ்சாயத்திலிருந்து அந்தக் காமுகனின் மனைவி பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு விரைவாகச் சென்றது செழியனுக்கு மனதில் உறுத்த, பின்னொடு சென்றான்.
அதே காரணத்திற்காக கார்த்தியும் பின் தொடர்ந்ததை செழியன் அறியவில்லை.
விறுவிறுவென சென்றவள் ஊரின் கிணற்றின் அருகே சென்று பிள்ளையை தள்ளி விட்டு தானும் குதிக்கப் போக, கடைசி நொடியில் பிள்ளையை இழுத்து எடுத்து தூக்கிக் கொண்டான், செழியன்.
“விடுங்க அய்யா! இனிமேல் இந்த ஊரில் எப்படி நான் மானம் மரியாதையோட வாழ்வேன்? அந்த படுபாவிப்பய புள்ளைன்னு தானே எல்லாம் எம்புள்ளைய பார்ப்பாங்க?” என்று கேட்டவள், முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள்.
செழியனோ, “அற்புதமான புள்ளைய பெத்து வச்சிருக்கமா நீ! அவன் செஞ்ச தப்புக்கு நீங்க செத்துட்டா, எல்லாம் சரியா போகுமா? இவன், என் தகப்பன் போல நான் இல்லன்னு வாழ்ந்து காமிக்க வேண்டாமா?” என்றவன்
பின் குரலை தாழ்த்திக்கொண்டு “தப்பு செஞ்சது அவன், தண்டனை உங்களுக்கா? அவன் செஞ்ச தப்புக்கு குற்றமே செய்யாத நீங்க பாதிக்கப்பட்டா ,அவனுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை குடுத்த எங்களோட நோக்கமே பாழாயிடும்மா.
எங்களை அந்த குற்ற உணர்ச்சியில தள்ளிடாத. நீ விரும்பினா, இந்த ஊரை விட்டு வேற ஊருக்கு அனுப்பி வைக்கிறேன், வேலைக்கும் நான் ஏற்பாடு பண்றேன்,” என்று சமாதானப்படுத்தி, தனக்கு தெரிந்தவர் மூலம் அந்த ஊரைவிட்டு அனுப்பியதோடு அல்லாமல், கையிலிருந்த பணம் மொத்தத்தையும் அள்ளித் திணித்தான்.
அந்த சிறுவனின் தோளில் தட்டிக் கொடுத்தவன், “பாதிக்கப்பட்டவங்க மட்டும் இல்லை குட்டிப்பையா! தப்பு செஞ்சவனோட குடும்பமும் சரி! அவனுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு தைரியமா நிக்கனும் புரியுதா?” என்று கேட்க
“புரிஞ்சது” என்று தலையாட்டிச் சிரித்தான், அந்த இளம் தலைமுறை.
பின்னால் இருந்து பார்த்த கார்த்தியும், செழியனும் அதற்காகத்தான் பின் தொடர்ந்திருக்கிறான் என்று தெரிந்ததும், அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் திரும்பி விட்டான்.
செழியனும் கார்த்தியும் பேசிக்கொண்டே சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். தடயங்களை பார்வையிட்ட செழியன், உண்மையில் அவன் தானாகத்தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறான் என்றறிந்து, லோக்கல் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கச் சொன்னான்.
எல்லாம் முடிந்து மேலும் இரண்டு நாட்கள் கடந்திருக்க, இப்போதெல்லாம் செழியன் திவ்யபாரதியை ஒட்டிக் கொண்டேதான் அலைந்து கொண்டிருந்தான்.
அடுத்து வந்த நாட்களில் எல்லாம், எப்போதும் ஈஷிக்கொண்டே அலைந்தான். அருகில் அமர்வதும், தோளில் கை போடுவதும், அவ்வப்போது அணைத்து விடுவிப்பதும் என்றிருந்தவன், தன் தொடுகையை அவளுக்கு இயல்பாக்கி இருந்தான்.
அன்று வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தவன், மெத்தையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவளின் மடியில் இயல்பாய் போய் படுத்துக்கொண்டான்.
இதுவரை இதுபோல் எல்லாம் செழியன் செய்ததில்லை. அதில் அதிர்ந்த திவ்யபாரதி, செய்வதறியாமல் பேந்த பேந்த முழித்தாள்.
மடியில் படுத்துக் கொண்டதோடு அல்லாமல், அவள் விரல் பிடித்து தன் தலையில் வைத்தவன், தலையை கோதிவிடச் சொன்னான். திவ்யபாரதி தவித்துப் போய் செழியனைப் பார்த்தாள்.
அவனது முகமோ இயல்பாய் இருக்க, அவன் கண்களோ மூடி இருந்தது. ஆனால் உதட்டுக்குள் ஒளித்த புன்னகையை மறைக்க, அந்தக் கள்வன் தூங்குவதுபோல் நடித்திருந்தான்.
அதில் செய்வதறியாது திகைத்தவள், அசதியில் தூங்குபவனை கலைக்க விரும்பாமல், அவன் தலையை கோதி விட ஆரம்பித்தாள்.
அடர்ந்த சிகைக்குள் தளிர் விரல் கொண்டு வருட, தன்னையும் அறியாமல் வெட்கப் புன்னகையொன்று உதட்டோரம் எட்டிப்பார்த்தது, திவ்யபாரதிக்கு. இதுவெல்லாம் அவள் வாழ்வில் இதுவரை கனவாகத்தான் இருந்திருக்கிறது. செழியனை மிகவும் நேசிக்கிறாள். எத்தனையோ நாட்கள் அவன் தூங்கும்போது காற்றில் நர்த்தனம் ஆடும், அவன் சிகை கோதி முத்தமிட ஆசைப்பட்டிருக்கிறாள் தான்.
ஆனால், அதன் பிறகான விளைவுகளில் அவனை தூண்டி விட்டு கடைசியில் முடியவில்லை என்றால், அதில் அவள் பாதிக்கப்படுகிறாளோ இல்லையோ? கண்டிப்பாக தன்னை நினைத்து செழியன் வருந்துவான் என்றே, பரபரக்கும் கைகளை அடக்கி, தூங்குபவனை அவனுக்கும் தெரியாமல் மூச்சு முட்ட இரசிப்பதோடு நிறுத்திக்கொள்வாள்.
தூக்கத்தில் திரும்பிப் படுப்பது போல் பாவனை செய்த செழியன், அவள் வாழைத்தண்டு வயிற்றுப் பக்கம் திரும்ப, அடுத்த நொடி அந்த முடிவை எடுத்ததிற்காக தன்னையே கடிந்து கொண்டான். என்றும் இல்லாமல் இன்று சேலை அல்லவா கட்டிக் கொண்டிருந்தாள்.
சாண் அளவு இடைவெளிக்கு வான் அளவு பெருமூச்செறிந்தான். சிற்றிடையின் பூனை முடிகள் கூட ஏளனம் செய்வது போல் இருக்க, கும்பிடு போட்டு திரும்பிக் கொண்டான்.
திவ்யபாரதியை தவிக்க விட எண்ணி அவன் செய்த செய்கையில், அவனே மீள முடியாது தவிக்க, மூச்சுக்காற்றின் வெப்பம் இடைதாண்டி தீண்டியதில், ஒருமுறை சிலிர்த்து அடங்கியது திவ்யபாரதியின் மேனி. கோதிய விரல்களிலும் அழுத்தம் கூடி, பின் தளர்ந்தது.
இதற்குமேலும் சோதிக்க விரும்பாதவன், விரல்களின் வருடலில் உண்மையில் தூங்கியிருந்தான். அதன் பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் திவ்யபாரதி.
இப்படியே இயல்பாக காதல் மெல்ல மெல்ல கரை தாண்டிக் கொண்டிருந்த வேளையில், அதை உடைப்பதற்கு என்றே வந்திருந்தார், செழியனின் தாய்.
மகனைக் காண வந்திருந்த செழியனின் தாயும் தந்தை மகேந்திரனும், இரு நாட்கள் அந்த கிராமத்தில் இருந்து மகனுடன் விருந்தாடியவர்கள், கிளம்பிச் செல்கையில் பாரதியிடம் வந்த செழியனின் தாய், கன்னத்தை வழித்து முத்தமிட்டவர்,
“எங்க இப்படியே கல்யாணம் பண்ணாமயே இருந்திருவானோன்னு பயந்துட்டே இருந்தேம்மா. நல்ல வேளை உன்னைப் பார்த்து மனச மாத்திக்கிட்டான். அப்படியே அவனுக்கு ஒரு பிள்ளையும் பெத்துக் குடுத்திட்டின்னா, இந்த அத்தைக்கு மனசு நிறைஞ்சு போய்டும்.” என்றவர்.,
அத்தோடு நில்லாமல் “அடுத்த தடவை என் பேரக் குழந்தையக் கொஞ்சத்தான் இங்க வரணும். என்னடா…” என்று நெற்றியில் முத்தம் பதித்துச் சென்றுவிட்டார்.
மனைவி சொன்னதைக் கேட்டு தனிமையில் கடிந்து கொண்டார், மகேந்திரன்.
“அந்தப் பொண்ணப்பத்தி எல்லாம் சொல்லி இருக்கேன் தானே? நாமளே இப்படி அவசரப்பட்டா எப்படி? எல்லாம் என் மகன் பார்த்துப்பான். நீ பேசாம இருக்க வேண்டியதுதானே! நீ சொன்னதும் அந்தப் பிள்ளை முகமே சுண்டிப்போச்சு. இது மட்டும் உன் மகனுக்கு தெரிஞ்சிது, சாமியாடுவான் தெரிஞ்சுக்கோ.” என்றார் மிரட்டும் விதமாக.
“எனக்கும் தெரியுங்க. அதுக்காக அப்படியே விட்டா அதுங்க எப்போ வாழ ஆரம்பிக்கிறது. அதுதான் கொஞ்சமே கொஞ்சம் மாமியார் வேலை பார்த்து இருக்கேன். நீங்க வேணும்னா பாருங்க. இதனால கண்டிப்பா கலகம் பிறக்கும். அந்த கலகத்தில், நமக்கு பேரப்பிள்ளையும் பிறக்கும். நீங்க சும்மா இருங்க. எல்லாம் எனக்குத் தெரியும்.” என்றார் பதிலுக்கு.
அவர் நினைத்தது நூறு சதவீதம் சரி என்பதுபோல், மனவுளைச்சலில் இருந்தாள், திவ்யபாரதி.
கொஞ்சம் கொஞ்சமாக செழியனிடம் நெருங்கி வந்தவள், செழியன் தாய் சொன்ன வார்த்தைகள் காதில் திரும்ப திரும்ப ஒலிக்க, தன்னால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியுமா என்ற சந்தேகம் திவ்யபாரதியினுள் வலுப்பெற்றது.
என்னதான் செழியன் நெருங்கினாலும், அதற்கு மேல் தொடராமல் இன்னமும் விலக்கியே வைத்திருந்ததில், அந்த ஐயம் வலுப்பெற்றிருந்தது.
முன்னே அவன் சொன்னதுபோல் கடைசிவரை, ‘தனக்காக அவனும் வாழாமல் கூட இருந்தே குழந்தைபோல் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டான் செழியன்’ என்று முடிவே செய்துவிட்டாள்.
செழியனும் அதற்கேற்றார் போல் தான் நடந்து கொண்டிருந்தான் அல்லவா.
சில நாட்களாக செழியனின் நெருக்கம் உள்ளுக்குள் தடுமாற வைத்தாலும், இத்தனை நாட்களில் அவனுக்காக கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தயார்படுத்திக் கொண்டுதான் இருக்கிறாள்.
ஆனால் செழியனிடமிருந்து அதற்குமேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போக, ஒருமனம் ஆசுவாசம் கொள்ளும் அதே வேளையில், இன்னொரு மனம் மெல்லிய ஏமாற்றம் கொள்வதை உணர்ந்திருக்கிறாள்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எளிதல்லவா? அதைத்தான் அந்த அனுபவத்தில் மூத்தவர் செய்துவிட்டுப் போயிருந்தார். ஆனால் அதன் எதிர்வினை தான் மாறுபாடாகப் போய்விட்டிருந்தது.
தாய் தந்தையை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு வந்த செழியன், அன்று இரவு தூக்கத்திற்கு தயாராக தெளிவில்லாமல் இருந்த மனைவியின் முகத்தை ஆராய்ந்தவன்,
“என்ன பலத்த யோசனை இந்த குட்டி மண்டைக்குள்ள” என்று லேசாக தலையில் தட்ட.,
ஏற்கனவே பலத்த சிந்தனையில் இருந்த திவ்யபாரதியோ எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த கேள்வியை கேட்டிருந்தாள்.
அவன் முகவாயை வருடிக்கொண்டே படுத்திருந்தவள் “இந்த ஊர்லதான் இரண்டாவது கல்யாணம் பண்றது தப்பில்லை தானே DSP..?” என்று மெதுவே கேட்டவளிடம்,
“ஆமா அதுக்கென்ன பாப்புக்குட்டி?”
“நீங்க ஏன் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கக் கூடாது, நான் உங்க பிள்ளைய நல்லா பார்த்..”
“ஷட் அப் பாரதி” என்று உரத்து ஒலித்த குரலில், சொல்லவந்தவள் வார்த்தை பாதியில் தடைப்பட்டு நின்றது.
இதுவரை அவன் பாரதி என்று அழைத்ததே இல்லை. அதிலேயே தடுமாறியவள், இருந்தும் தன் அத்தையின் ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் “இல்ல, என்னால…”
“உன்னை வாய மூடச் சொன்னேன் புரிஞ்சிதா! உன்னை ஆயா வேலை பார்க்க வைக்கத்தான், உயிரை பணயம் வச்சேன் பாரு!” என்றவன் அதற்குமேல் பேசவும் இல்லை. தோளோடு அணைத்துப்பிடித்திருந்த பிடியை விலக்கவும் இல்லை.
முதல் முறையாக செழியனின் கோபத்தைப் பார்த்ததில், திவ்யபாரதிக்கு கண்கள் கலங்கி கண்ணீர் அவன் நெஞ்சத்தை நனைத்தது. இருந்தும் அவன் சமாதானப்படுத்த முயலவும் இல்லை. அவள் முகத்தை திரும்பிப் பார்க்கவும் தயாராக இல்லை. கைகள் மட்டும் தன் பிடியிலிருந்து சற்றும் விலக்கிக் கொடுக்கவும் இல்லை.
மோட்டு வலையை பார்த்துப் படுத்திருந்தவனின் உள்ளம், உலையாகக் கொதித்தது. பாவமென்று விட்டு வைத்திருந்தால், என்னவெல்லாம் பேசிவிட்டாள். இதுக்காகவா, இத்தனை பாடு பட்டேன். இல்லை, இன்னும் என் மேல் நம்பிக்கை வர வில்லையா.. இன்னுமா என்னைக் கண்டு பயம் கொள்கிறாள் என்று வேதனையுற்றிருந்தான்.
அவன் காத்திருந்ததென்ன. இப்போது நடந்து கொண்டு இருப்பதென்ன. தன்னவளை கொண்டாடவல்லவா நினைத்து இருந்தான். தங்களுடைய முதல் கூடல் நினைவுச் சின்னமாக இருக்க வேண்டும் என்றல்லவா, பார்த்து பார்த்து சிருஷ்டித்துக் கொண்டிருந்தான்.
அதுவும் திவ்யபாரதிக்குத் தெரியாமல் கார்த்தியின் துணையுடன் செய்து கொண்டிருந்தான். எல்லாம் கை கூடி வரும் வேளையில், அனைத்தையும் ஒற்றை வார்த்தையில் போட்டு உடைத்திருந்தாள், திவ்யபாரதி.
தன்னை சமாதானப் படுத்துவான் என்று திவ்யபாரதி நினைத்திருக்க, செழியனோ அவள் பேசிய வார்த்தையில் காயப்பட்டுப் போனவன், கண்களை மூடிப் படுத்துக்கொண்டான்.
அதில் மேலும் முறுக்கிக்கொண்ட திவ்யபாரதி, அவன் கோபப்பட்டு பேசாமல் இருந்ததில் வேதனையுற்றவள், அவன் கைகளை விலக்கி, மெத்தையின் ஓரமாகப் படுத்துக் கொண்டாள்.
அதற்கும் செழியன் அசைந்தானில்லை.
அழுதுகொண்டே படுத்திருந்தவளின் விசும்பல் சத்தம் மட்டும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
வெகுநேரம் வரை பொறுத்துப் பார்த்தவன், அதற்குமேல் தாங்க முடியாமல் இழுத்து அள்ளி நெஞ்சில் போட்டுக் கொண்டான்.
“ஒன்னும் வேணாம். நான் போறேன்.” என்று கோபத்தில் முறுக்கிக்கொண்டு எழ முயன்றவளை தடுத்து இறுக்கிப் பிடித்தவன்,
“ரொம்பப் பண்ணாதடி, இதுக்குத்தான் உயிரையும் பணயம் வச்சி பள்ளத்தில பாஞ்சேனாக்கும், நீ யோசிக்காம என்ன வேணும்னா பேசுவ, நான் வாய மூடிக்கிட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன்னு நினைச்சியா..?
உனக்கு எத்தனை தடவை சொல்றது, உனக்காக எதை வேணும்னாலும் விட்டுக் கொடுப்பேன். ஆனால் எதுக்காகவும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன், புரிஞ்சிதா?” என்றவன்
“இன்னொருவாட்டி இந்த மாதிரி பேசிட்டு இருந்தன்னு வை, சொல்லிட்டு இருக்க மாட்டேன்.” என்றவன், இதற்குமேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல் கண்களை மூடிக்கொண்டான்.