தன்னால் முடிந்த வரை தடுத்துப் பார்த்த பாரதி, செழியனைக் கொன்றே தீர வேண்டும் என்று கிளம்பியஅவனை தடுக்க முடியாமல் தவித்து நின்றவள், ஒரு நொடிதான் யோசித்திருப்பாள், பின்னர் ஓடி வந்து கார்த்தியின் ஜீப்பில் தாவி ஏறியவள், மறக்காமல் கார்த்தி கடத்தியவர்களை கட்டிப்போட பயன்படுத்தும் கைவிலங்கையும் கையோடு எடுத்து, தன் ஜெர்க்கினுக்குள் மறைத்துக்கொண்டாள்.
ஜீப்பில் ஏறியவளை முறைத்த கார்த்தி, ஒன்றும் பேசாமல் ஜீப்பை செழியனின் வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான். ஏற்கனவே அந்த வீட்டின் ஒரு அறையினுள், இரு ஜீவன்கள் சோறு தண்ணீ இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை, இருவருமே ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அவர்களால் எந்த ஒரு நிலையிலும் தப்பிக்க முடியாது. ஏன் அப்படி சிந்திக்கக் கூட திராணியற்றுக் கிடந்தார்கள் எனலாம். அதையும் மீறி நினைத்தாலும், ஹென்றி பார்த்துக்கொள்வான்.
செழியனின் வீடு செல்லும் வழியில், சிசிடிவி ஜாமரை பயன்படுத்தி சுற்றியிருந்த கேமராக்களை முடமாக்கினார்கள். செழியனின் வீட்டை சுற்றி ஒரு முறை வலம் வந்து, வீட்டின் பின்புறமாக ஜிப்பை நிறுத்தினான், கார்த்தி.
மாடியின் அறை ஒன்றில் விடிவிளக்கு எரிய, அது செழியனின் அறையாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்த கார்த்தி ஜிப்பிலிருந்து இறங்க முற்படவும், ஜெர்கினுள் இருந்த கைவிலங்கு கொண்டு, சட்டென கார்த்தியை ஜீப்போடு சேர்த்து லாக் செய்தாள், திவ்ய பாரதி.
அதிர்ச்சி விலகாமல் பார்த்தவனிடம், “சாரி கார்த்தி! நான் உங்க இரண்டு பேரையுமே இழக்க விரும்பல. நீ வெளிய இருந்தா, இன்னும் பாவிங்கள தண்டிப்ப. அதே போலத்தான் செழியனும். நீ சத்தமில்லாம செய்யறத, அவன் சட்டமா செய்வான்.” என்றவள் கை விலங்கின் சாவியை கார்த்தி கஷ்டப்பட்டு முயற்சி செய்தால் எஃகி எடுக்கும் தூரத்தில் வைத்தாள்.
“நீ புத்திசாலி கார்த்தி! நீ இந்தச் சாவிய எடுத்து லாக்க ரீலீஸ் பண்றதுக்குள்ள, நான் எல்லாத்தையும் முடிச்சிருவேன்.” என்ற திவ்யபாரதி அடுத்த நொடி மதிலேறி குதித்து சர சரவென்று அருகிலிருந்த மரத்தைப் பிடித்து ஏறியவள், விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்த மாடியின் பால்கனியில் தாவிக் குதிச்சா” என்று செழியனிடம் சொல்லி முடித்த கார்த்தி, “அதுக்கு அப்புறம்தான் உனக்கே தெரியுமே” என்றவன்..
“அவ சொன்னா மாதிரியே, நான் கை விலங்கை கழற்றிட்டு வரதுக்குள்ள, எல்லாமே முடிஞ்சி இருந்தது. நீ பாரதிய அரெஸ்ட் பண்ணி கூப்பிட்டுப் போறத, கையாலாகாம அந்த மரத்துக்கு பின்னாடி இருந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். அன்னைக்கு நைட் இருந்த கோபத்துல வீட்டுக்கு வந்து அந்த மந்திரி பையனோட நண்பன் கதையை முடிச்சேன். நாங்க, அவனுங்களை கடத்தினதும் கொல்லாம வச்சதுக்கு காரணமே, அவனுங்க சாவு மத்தவங்களுக்கு பாடமாவும் கொடூரமாவும் இருக்கனும் என்றும் நினைச்சோம். ஆனா, அதுக்குள்ள நீ வந்து எல்லாமே சொதப்பல் ஆகிடுச்சி.” என்று பெருமூச்சு விட்டான்.
“அவ உன் கிட்ட இருந்து என்னையும், என் கிட்ட இருந்து உன்னையும் காப்பாத்தத்தான், தானே வந்து சரணடைஞ்சிட்டா.” என்றான் தனக்கு கிடைத்த நட்பை நினைத்துப் பெருமையாக.
“இப்படி பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா, அன்னைக்கு நான் அவளைக் கூட்டிக்கிட்டே வந்து இருக்க மாட்டேன்.” என்று ஆற்றாமையாகச் சொன்னவன், “எல்லாம் உன்னாலதான்” என்று கோபத்தில் செழியனின் மீது பாயப்போக,
அசால்ட்டாக நகர்ந்து கொண்ட செழியன், கார்த்தியை சோபாவில் தள்ளி, அவன் சட்டையை கொத்தாகப் பிடித்து, “உனக்கு எவ்ளோ, உன் கொலைகார ஃப்ரண்ட் முக்கியமோ..? அதைவிட அவ எனக்கு முக்கியம். மைண்ட் இட்.” என்று முறைத்தபடி பற்றியிருந்த சட்டைக் காலரை விட்டு விட்டு, ஆயாசமாக எதிர் சோபாவில் அமர்ந்தான்.
கார்த்தியை தள்ளி விட்டதுமே செழியனில் பாய்ந்திருந்தான், மாறன். செழியனின் காதருகில் தாவப்போக, குறுக்கில் பாய்ந்து மாறனை தடுத்திருந்தான், ஹென்றி! கார்த்தியின் தலைமை தளபதி. கார்த்தி அளவு நெருக்கமாகப் பழகவில்லை என்றாலும், செழியனை மறந்திருக்கவில்லை, ஹென்றி!
“ஓ.. இவர்தான் அந்த காது பார்ட்டியா..?” என்ற செழியனுக்கு, புன்னகையால் “ஆம்” என்று பதிலளித்தான்.
ஹென்றியை கை காட்டிய செழியன் “அந்த நாய்க்கு என் மேல இருக்க நம்பிக்கை கூட, இரண்டு வருஷம் கூட இருந்த உனக்கு இல்லை..ல்ல” என்றான் வருத்தமாக.
“எத்தனை வாட்டி சொல்றது, யாராவது குழந்தையக் கொஞ்சினாலே எனக்கு மூளை மழுங்கிரும்னு…” என்று கார்த்தி வெறுப்புடன் சொல்ல..
“செய்றதெல்லாம் செஞ்சிட்டு எல்லாம் என்னாலயா” என்று முறைத்த செழியன், “இதை நீ ஒரு நல்ல போலீஸ்காரனாவே இருந்து பண்ணிருக்கலாமே!” எனவும்,
வெடிச் சிரிப்பு சிரித்த கார்த்தி, “உங்க அப்பா நல்ல போலீஸ் தான, கடைசிவரைக்கும் அவனுங்களை எதாவது செய்ய முடிஞ்சிதா..?” என்று கேட்டவன்,
“அன்னைக்கு அம்முவோட காரியமெல்லாம் முடிஞ்சதுமே, ஒரு பெரிய ரவுடி கும்பலே எங்க வீட்டுக்கு வந்து மாமாவை மிரட்டினாங்க. ‘உன் பொண்ணுதான் செத்துப்போச்சி, உன் மருமகனாவது உயிரோட இருக்கனும்னா, இந்த ஊரை விட்டே ஓடிப்போய்டு! இல்ல.. குடும்பத்தோட கொளுத்திருவோம்னு. என் மாமாவும் பயந்துபோய், நைட்டோட நைட்டா ஊரை காலி பண்ண முடிவு பண்ணிட்டாரு.
என் கிட்ட மன்னிப்பு கேட்ட என் மாமா, என்னையப் பாதுகாக்க ஒரு ஆசிரமத்துல சேர்க்கப் போறதா சொன்னாரு. அப்போதான் உங்க அப்பா சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது. அதான் ஊர விட்டுப் போக முன்னாடி, அவசரம் அவசரமா ஒரு லெட்டர் எழுதி உங்க அப்பாவோட ஜீப்ல போட்டுட்டு போய்ட்டேன்.
அங்கதான் ஒன்னு தெரிஞ்சிக்கிட்டேன். வெறும் பதவிய வச்சி மட்டும், இந்த மாதிரி குற்றவாளிங்களை ஒன்னும் செய்ய முடியாதுன்னு. அதுவும் இல்லாம, என் அம்மு மட்டும் இல்ல, எத்தனையோ அம்முங்க இதே மாதிரி பாதிக்கப் படுறாங்கன்னு..
அவனுங்க எல்லாரையும், என்னோட போஸ்டிங்க வச்சி ஒன்னும் பண்ண முடியாதுன்னு தோணுச்சி. அதான் ஹென்றிய காரணமா வச்சி, அகாடமிலருந்து விலகி வந்தேன். உங்களுக்கு எல்லாம் ஹென்றியோட சின்ன குறைதான் கண்ணுக்கு தெரிஞ்சது. ஆனா, எனக்கு அவன்கிட்ட இருந்த தலைமைப் பண்பு கண்ணுக்குத் தெரிஞ்சது. அதான் அவனையும் என் கூடவே கூட்டிட்டு வந்துட்டேன்.
அவனை வச்சே, என்னோட மத்த நாய்ங்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து தயார் படுத்தினேன். என்னோட போலீஸ் மூளையை, மாட்டிக்காம இருக்க பயன்படுத்திக்கிட்டேன்.” என்றவன்,
“நான் மட்டும் இல்லைனா, பாரதி அந்த நாகராஜ கொன்ன அன்னைக்கே மாட்டி இருப்பா. அவளுக்கு அவனைக் கொல்லனும்னு வெறி இருந்ததே தவிர, மாட்டிக்காம இருக்கனுங்கற எண்ணம் எல்லாம் இல்ல. எந்த பாதுகாப்பும் இல்லாமத்தான் வந்தா.. ஒரே ஒரு ஊசியோட. நான் தான் அவ அந்த நாகராஜக் கொன்னதும், அங்கிருந்த தடயங்கள் எல்லாத்தையும் அழிச்சேன்.” என்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.
மேலும் சிறிது நேரம் கார்த்தியுடன் பேசிய செழியன், விடைபெற்றுக் கிளம்ப, பைக்கை எடுத்துக் கொண்டிருந்த அவனின் அருகில் வந்த கார்த்தி,
பைக்கை ஸ்டாண்ட் இட்டு நிறுத்திய செழியன், கால் மேல் கால் வைத்து பைக்கில் சாய்ந்தபடி, முன்னங்கைகளை கட்டிக் கொண்டவன், “உன்னைய உள்ள வைக்க, எனக்கு இரண்டு நிமிஷம் போதும் இளா. ஆனா… அதை என் அப்பா விரும்ப மாட்டார். உன்னை கைது செஞ்சி, என் அப்பாவ இன்னும் குற்ற உணர்ச்சியில தள்ள, நான் விரும்பல.” என்றவன் பெருமுச்சி ஒன்றை விட்டபடி,
“பாரதிக்காக அவர் அத என்கிட்ட கேட்காட்டியும், அவர் கண்ணுல அந்த வேண்டுதல் இருந்தது இளா!, நீ இப்படி ஆனதுக்கு அவரும் ஒரு காரணமோன்னு தவிச்சிட்டு இருக்கிறவரை, இன்னும் தவிக்க வைக்க என்னால முடியாது இளா.” என்றவன் “பாரதியும் அதை விரும்ப மாட்டா. ஆனா… அதுக்காக இப்படியே விட்டுருவேன்னு நினைக்காத, உன் ஆட்டத்தை நீ நிறுத்தலைன்னா, என் ஆட்டத்தை நான் ஆட ஆரம்பிச்சிடுவேன்.” என்றவன், திரும்பியும் பார்க்காது பைக்கை உதைத்துக் கிளம்பவும்.
“உங்க அப்பாவுக்கு நான் நன்றி சொன்னேன் சொல்லு, செழியன்” என்று அருகில் வந்திருந்தான் கார்த்தி.
செழியன் இறங்கி நின்று திரும்பிப் பார்க்கவும்,
“அவரே தண்டிச்சிருந்தா கூட, நான் என் கூட்டை விட்டு வெளிய வந்துருப்பேனான்னு தெரியாது. ஆனா.. அந்தப் பாவிங்கள என் கையாலே கொல்லும் போது, என் அம்மு எனக்கு திரும்ப கிடைச்ச உணர்வு. நீ அடிக்கடி சொல்றியே ரொம்ப பேசுற இளான்னு, அது என் அம்மு என்கூட இருக்கான்னு பீல் பண்ணதால வந்த சந்தோசம்.” என்றவன்,
“அதனால எந்த குற்ற உணர்ச்சியும் அவருக்கு தேவை இல்லைன்னு சொல்லு.” என்றவன்..
“அவர் எடுத்த முயற்சிகள் அத்தனையும் எனக்கும் தெரியும் செழியன், ஆனா, அவர்தான் உன் அப்பான்னு இப்போ நியூஸ் பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டேன். அப்பவே தெரியும், நீ எப்படியும் என்னை கண்டுபிடிச்சி தேடி வருவன்னு..” என்றவனிடம்,
“முடிஞ்சா நீயே அதை அவர்கிட்ட சொல்லிடு இளா. he must be happy (அவர் மிகவும் சந்தோசப் படுவார்)” என்ற செழியனிடம்,
“என்னை அரெஸ்ட் பண்ணலைன்னா, பாரதிய எப்படி காப்பாத்துவ…?” என்றான் கார்த்தி சிரிப்பு பொங்க.
‘முட்டாளா நீ’ என்பதுபோல் பார்த்த செழியன், “உன்னை அரெஸ்ட் பண்ணாலும், அவளைக் காப்பாத்த முடியாதுன்னு எனக்கும் தெரியும், அவளே ஒத்துக்கிட்ட கொலைக்கு, உன்னையும் கொண்டு போய் தூக்கில போட்டு, ஒன்னும் ஆகப்போறது இல்லை.” என்றான் சலிப்புடன்.
“எனக்கு தெரிய வேண்டி இருந்ததெல்லாம், அவளுக்கும் உனக்கும் என்ன உறவுன்னு மட்டும்தான்” என்ற செழியனிடம், “பொறாமை” என்று கார்த்தி சத்தமாகச் சிரிக்க,
அவன் முதுகில் ஒன்று வைத்த செழியன் “பொறாமை இல்லைனா, அதுக்கு பேர் காதலே இல்ல.” என்று புருவத்தை தூக்கவும்,
“உனக்கு வேணா, உன் காதலி தேவையில்லாம இருக்கலாம், ஆனா எனக்கு…” என்று நிறுத்திய கார்த்தி, மர்மச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.
பதிலுக்குத் தானும் மர்மச் சிரிப்பை வெளியேற்றிய செழியன், புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவன் புல்லட் சத்தம் கேட்டு வெளியில் வந்த ஹென்றி, அவன் கிளம்பவும் சல்யூட் அடித்து, தானும் ஒரு போலீஸ் காரன் என்று நிரூபித்தான்.
அவன் அளப்பரிய செயல்களுக்காக, பதில் சல்யூட் ஒன்றை வைத்த செழியன் புல்லட்டை எடுத்துக்கொண்டு பறந்திருந்தான்.