“ஏன் கத்துறீங்க”என்றபடி வந்து நின்றவளிடம்”என் டேப் எங்க வச்சே காணோம்”என்றான் சத்தமாக
“அது அந்த அலமாரியில் தான் இருந்தது”என்று இவள் பதிலுக்கு சத்தமிட அகிலா வந்து விட்டார் அங்கே.
“நீயே போய் எடுத்து குடுடி”என்றதும் “ம்மா அடுப்பில் எண்ணை காயுது”என்றாள் முறைப்பாக
“ப்ப்ச் இல்லாட்டா ஒவ்வொண்ணுக்கும் உன் புருஷன் சத்தம் போடுவார் போ”என்று மகளை அனுப்பி வைத்து விட்டு தான் மறுவேலை பார்த்தார் அகிலா.
முன்பு என்றால் எதிரெதிர் வீட்டில் இருந்து சத்தம் போட்டு சண்டை போட்டு கொண்டவர்கள் இப்போது பின்பக்க வீட்டில் மாடியில் இருந்து கத்திக் கொள்கின்றனர் ஆக மொத்தம் இருவரின் குரலும் வால்பாறையில் அந்த தெரு முழுவதும் கேட்கும் குரல் ஆகிப் போனது.
முன்பானால் சண்டையின் குரலாக இருக்கும் இப்போது வெண்ணிலாவை தான் அதிகம் ஏலம் விடுகிறான் மேகன். அவள் அவனோடு இருக்கும் வரையில் பொட்டு சத்தம் வராது. சொல்லாமல் கொள்ளாமல் தன் அம்மா வீட்டுப் பக்கம் போய் விட்டால் போதும் அடுத்த ஐந்து நிமிடத்தில் மாடியில் ஏறி நின்று வெண்ணிலா வெண்ணிலா என்று ஏலம் போட ஆரம்பித்து விடுவான். மேகனின் புது வீட்டிற்கு பின்னால் ஒரு நிலம் விலைக்கு வர அதை வாங்கி சஞ்சய் வீடு கட்டி இருந்தான். தன் பெற்றோரை தனியே விட்டு விட்டு சென்னைக்கு செல்வதில் சிறு சுணக்கம் கண்டவன் லோன் எடுத்து முதல் வேலையாக இந்த வீட்டைக் கட்டத் துவங்கி இருந்தான். வேலவன் வீட்டின் அருகே எனும் போது பாதுகாப்புடன் இருப்பார்கள் என்ற எண்ணம் அவனுக்கு. இப்போதெல்லாம் வரலக்ஷ்மியும் வேலவனும் விசாலத்தின் வீட்டிற்கு சென்று வர வெண்ணிலா தன் அம்மாவின் வீட்டிற்கு பிள்ளையோடு சென்று விடுவாள். சில நேரங்களில் எல்லோருமே விசாலத்தின் வீட்டிற்கோ அல்லது டீ எஸ்டேட்டிற்கோ கிளம்பி விடுவர்.
அது மேகன் சென்னையில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. அவன் வால்பாறைக்கு விடுமுறையில் வந்திருக்கும் போது வெண்ணிலா தன் அம்மாவின் வீட்டிற்கு சென்று விட்டால் தான் இந்த அலப்பறை செய்வான்.
“நான் வீட்டில் இருக்கும் போது நீ ஏன் அங்கே போற”கடுகடுத்தாலும் அவனின் கைவளைவிற்குள் தான் அவள் இருக்க வேண்டும்.
“டேப் இங்கே தான் இருக்கு”என்று அவள் நீட்ட
“ஆனா எடுத்து தர நீ இல்லை தானே”என்று அவன் முறுக்க
“உங்களுக்கு தான் உங்க மாமியார் பூரி போட சொன்னாங்க போட்டுட்டு இருந்தேன்”
“அதை அவங்க போட வேண்டியது தானே… உங்கண்ணன் கல்யாணம் வரைக்கும் நீ ஆடு. அப்புறம் மொத்தமா தூக்கிட்டு போயிடுறேன். வால்பாறை பக்கம் விட்டேன்னா பாரு”என்றான் வம்பாக
மெலிதாய் சிரித்தவளோ,”என்னவாம் மேகத்துக்கு வெண்ணிலாவை தேடுது”என்று அவன் கழுத்தை கட்டிக் கொள்ள
“ஏதாவது இருந்தா தான் தேடணுமா உன்னை. ப்ம்ச் போடி. நான் இருக்கிறதே ரெண்டு நாள் அதில் உன் அருமை மகன் வேற முக்கால்வாசி நேரமும் உன் கூடவே இருக்கான்”குறைபடித்தவனை கண்டு நன்றாக சிரித்தவள் “மகன் கூடவுமா போட்டி”என்றாள் கிண்டலாக
“அது அப்படி இல்லை. ப்ப்ச் நீ ஏன் இதெல்லாம் கேட்கிற. இப்போ என் கூட இருக்க முடியுமா முடியாதா” பிடிவாதமாக அவளைத் தன் பக்கம் அமர்த்திக் கொண்டான்.
“உராங்குட்டான் நீ அப்போ இருந்து இப்ப வரைக்கும் அதே வர்மன் தான் போ”என்று புன்னகைத்தாள் கேலியாக.
“இருந்தா என்ன தப்பு. நீ அப்பவும் இப்பவும் அதே வானரம் அதே வெண்ணிலா தான். என்னை தவிர எல்லார் கூடவும் இருப்ப நீ”என்று புகார் படித்தவனை பார்த்து சிரித்தவள் “சஞ்சுக்கு பொண்ணு அமைஞ்சுடும்னு நினைக்கிறேன். அதனால கண்டிப்பா இனிமே உங்க கூட தான் நான் போதுமா”என்றாள்.
“நிஜமாவா பொண்ணு வீட்டில் ஓகே சொல்லிட்டாங்களா”என்று ஆர்வமாக கேட்க
“ஹ்ம்ம் சொல்லிட்டாங்க நல்ல நாள் பார்த்து மாப்பிள்ளை வீடு பார்க்க வர்றேன் னு சொல்லி இருக்காங்களாம்”என்றவள் அவன் அணைப்பில் இருக்க பேச்சுவார்த்தை அதோடு நிற்கவில்லை.
நாட்கள் அழகாய் வால்பாறையில் கழிய மங்கை பற்றிய நினைவுகள் எதுவும் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் முடிந்த அளவு அவர் பேச்சை தவிர்த்து தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தனர் வேலவன் குடும்பத்தினர்.
மங்கை இன்னும் அதே மங்கை தான். கணவனை உருட்டி மிரட்டி பேசுவதிலும் இன்னும் தன் அதிகாரம் கணவனின் தம்பி தங்கை வீட்டில் இருப்பது போலவும் தான் பேச்சும் நடத்தையும் இருக்கும். அவர்கள் இவரை அசட்டையாக கடக்கப் பழகிக் கொண்டனர் என்பதே நிஜம். யாரேனும் வேலவன் பற்றி பேச்செடுத்தால் உக்கிரம் ஆகிவிடுவார் மங்கை. நன்றி கெட்டவன் என்று துவங்கி தன்பாட்டிற்கு பேசி முடித்து விட்டு தான் விடுவார். சிலரை காலத்தாலும் கடவுளாலும் கூட மாற்ற முடியாது. அவரிடம் பேச்சை வளர்த்து கதை கேட்கவும் சில அற்ப சொந்தங்கள் இருக்கத் தான் செய்தனர். வேலவனையோ வரலக்ஷ்மியையோ ஏதேனும் விஷேஷத்தில் கண்டு விட்டால் மங்கை பேசியதெல்லாம் ஒப்புவித்து விட்டு அவர்களிடம் ஏதேனும் சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கிறதா என்று தான் தேடி நிற்பர். பதிலே கூறாமல் லாவகமாக புன்சிரிப்புடன் தலையாட்டி விட்டு நகர்வதில் வேலவன் வரலக்ஷ்மியை அடித்து கொள்ள ஒருவராலும் இயலாது.
“என்ன சொன்னாலும் காதுல வாங்காதீங்கப்பா”என்று மகன் கூறியதற்கு ஏற்ப தான் இருவருமே நடந்து கொண்டனர்.
***********
“மச்சான் இந்த செய்னை போடுவியாம்”சஞ்சயின் கழுத்தில் அணிவித்தான் மேகவர்மன்.
“எதுக்குடா இந்த அலப்பறை”என்று சலித்தாலும் தங்கையின் உத்தரவாக தான் இருக்கும் என்று உணர்ந்து அணிந்து கொண்டான் சஞ்சய்.
“உங்க சிஸ்டரோட ஆர்டர் சார் போடுங்க. இல்லாட்டா அவ கையில் அஞ்சு பவுன் ல தடிமனா ஒரு செய்ன் வச்சிருந்தா அதை போட்டு விடுவா பரவாயில்லையா”என்று வர்மன் கிண்டல் செய்ய “யப்பா ஆளை விடுங்க டா சாமிகளா”என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டான் சஞ்சய்.
வீட்டில் பார்த்த பெண்ணைத் தான் சஞ்சய் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறான். பெரிதாக காதல் என்று யாரிடம் ஈர்க்கப் படாததால் பெண் உங்கள் விருப்பம் என்று சொல்லி இருக்க மீனாவின் தூரத்து சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்து விட்டனர் அவளுமே சென்னையில் வேலை செய்வதால் திருமண பொருத்தம் என்று அனைத்தும் சரியாக வரவே திருமணம் வரை வந்து விட்டனர்.
திருமணம் முடிந்த கையோடு சென்னையில் வெண்ணிலா மேகன் தம்பதி கீழேயும் சஞ்சய் ரத்னா தம்பதி முதல் தளத்திலும் குடியிருக்க வேண்டும் என்று வேலவன் முன்பே கூறி விட்டார்.
“நாங்க இங்க இருந்துக்கிறோம். நீங்க உங்க வாழ்க்ஙையை பாருங்க. லீவ் கிடைக்கும் போது வந்துட்டு போங்க”என்று சொல்லி விட நரசிம்மனும் சம்மதிக்க இளைய தலைமுறை சென்னைக்கு கிளம்ப சம்மதித்து விட்டது..
“அப்பாடானு இருக்குதுடா வேலா. நேத்து தான் ஸ்கூல் போன மாதிரி இருந்தது. இன்னைக்கு என் பையனுக்கு கல்யாணம். நாளெல்லாம் எவ்வளவு வேகமா ஓடுது”என்று சிரித்துக் கொண்டார் நரசிம்மன்.
“ஆமா ஆமா”என்ற வேலவன் “வேதாவும் சென்னைக்கே வந்துட்டா நல்லா இருக்கும். எங்க மாப்ளைக்கு அடுத்து நாசிக் ல வேலை போட்டு இருக்காங்களாம். பாவம் பொண்ணு ஊர் ஊராக சுத்துறா”என்று கூற
“நீங்க வேறண்ணா அவ ஜாலியா இருப்பா. சின்ன பிள்ளையிலேயே நானெல்லாம் இந்தியா முழுதும் சுத்தணும்த்த. அதான் எனக்கு ஆசைனு அது இந்த மாதிரி நிறைவேறுது போல அவளுக்கு”என்ற அகிலா “வரு. சம்பந்தியம்மா கூப்பிட்டாங்க. வா போகலாம். இந்த நிலா எங்க போனா” என்று கேட்டுக் கொண்டே வரலக்ஷ்மியை அழைத்துச் சென்றார்.
வெளியே இருந்த பூங்காவில் மேகவர்மனும் வெண்ணிலாவும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு முன் எடுக்கப்படும் ஃபோட்டோ சூட் போல வேண்டும் என்று வர்மன் புக் செய்யும் போதே கூறி விட்டான்.
“இப்போ எதுக்கு அதெல்லாம்”என்றவளிடம் “நம்ம மேரேஜ் அப்போ ரெண்டு பேரும் எப்படி இருக்கோம் பாரு”என்று திருமண ஆல்பத்தை காட்ட”அதுக்கு. இது அண்ணாவோட மேரேஜ்”என்றிருந்தாள் சிறு முறைப்புடன்.
“ஸோ வாட் என் மச்சான் எதுவும் சொல்ல மாட்டான்”என்றவன் “எனக்கு ஸ்வீட் மெமரீஸ் வேணும் வெண்ணிலா”என்றிருக்க அதற்கு மேல் அவனிடம் மறுப்பாளா அவனுடைய நிலவுப்பெண்.
அதன் விளைவே மணமக்களை ஒரு பக்கம் புகைப்படம் வீடியோ எல்லாம் எடுத்து கொண்டிருக்க இந்த பக்கம் வெண்ணிலா மேகவர்மனும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
நிலாவைத் தேடி அழைக்க வந்த இரு தாய்மார்களும் அப்படியே நின்று விட்டனர் அவர்களின் இணக்கம் கண்டு.
“நம்ம கண்ணே பட்டுடும் இல்ல வரு.”என்ற அகிலா அவர்களின் காலடி மண்ணையே எடுத்து முடிந்து வைத்தார்.
“நைட் சுத்திப் போடணும் ரெண்டு பேருக்கும்”என்றவர் “அவங்க எடுக்கட்டும் நீ வா போகலாம்”என்று அழைத்துச் செல்ல வரலக்ஷ்மிக்கு மனம் பூரித்து நிறைவாய் இருந்தது மகனின் வாழ்க்கையை நினைத்து.
தங்கள் பிள்ளைகள் அனைவருமே ஒரு வித பொறுப்புணர்வுடன் வளர்ந்தவர்கள் என்ற பெருமிதம் இரு அன்னையருக்கும்.
“ப்பா நானுக்கு”என்று மகன் ஓடிவர குடும்பமாய் ஒரு புகைப்படம்.
இதோ அதோவென இரவுப் பொழுது வந்திட சஞ்சயின் மனைவியை அவன் அறைக்குள் விட்டு விட்டு வர்மனின் வீடு வந்து சேர்ந்திருந்தாள் வெண்ணிலா.
“போகலாமா”என்று ஒரு குட்டி பையோடு வந்து நின்றான் மேகன்.
“தம்பி”என்றதும் “அவன் முகுந்தன் கூட தூங்கறானாம். அக்கா பார்த்துப்பாங்க நீ வா”என்று அவளைக் கிளப்பிக் கொண்டு சென்ற இடம் விசாலத்தின் வீடு.
அவனுக்காக முதன் முதலில் ஒதுக்கப்பட்ட அறை இன்று அவர்களின் அறையாக முற்றும் முழுதாக மாறி விட்டிருந்தது.
“வாங்க கண்ணுகளா…”என்று வரவேற்ற விசாலத்திற்கு முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
“அவரு தூங்கிட்டாரு கண்ணு நீங்க போங்க. விடியல்ல பாப்போம். மெல்ல எழுந்து வந்தா போதும்மணி. நீ ஒன்ர பாட்டுக்கு தூங்கறவன உசுப்பிட போறீங்.”என்று வெண்ணிலா விடம் சொல்லி அனுப்பி வைக்க இருவரும் மாடிக்கு சென்றனர்.
“என்ர பேரன் ராசா தான்”என்று சிரித்த விசாலம் கூடத்தில் படுத்து விட்டார்.
மாடியறையில் கழிவறை வைத்து கட்ட சொல்லி விட்டார் விசாலம். பேரன் பேத்தி வந்தால் தங்க வேண்டும் என்று சற்று வசதியாக கட்டி இருக்க மேகன் நினைத்தால் இங்கு வந்து மனைவி மகனோடு தங்குவதை வழக்கமாகிக் கொண்டிருந்தான்.
திருமண நாள் இரவை நினைத்து இருவருமே சிரித்துக் கொண்டனர்.
“அப்போ மாதிரியே இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்”என்று அவள் சிரிக்க
“டெய்லி விவாதமேடை தான்”என்று புன்னகைத்தவன் “இந்த ரூம் ஸ்பெஷல் தான் ல்ல வெண்ணிலா. நாம ரெண்டு பேரும் முதல் முதல்லா நார்மலா பேசின இடம் இல்லையா”என்று கேட்க அவன் கூற்றை ஆமோதித்தாள் வெண்ணிலா.
ஜன்னல் அருகே நின்றிருந்தவனின் தோள் சாய்ந்தவள் “முழுநிலவை அந்த மேகம் முழுங்கிடுச்சு”என்று கைகாட்ட
“இங்கேயும் தான் வெண்ணிலாவை இந்த மேகன் முழுங்கிட்டான்”என்றான் கேலியாக.
“நான் உங்களை நல்லா பார்த்துக்கிறேனா மேகா”என்றதும் “என்ன புதுசா கேட்கிற”என்று கேட்டவன்”தீபாவே போன வாரம் நீங்க வெண்ணிலா தவிர வேறு யார் கூட மேரேஜ் ஆகியிருந்தாலும் இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க வாய்ப்பு இல்லை னு சொன்னாங்க தெரியுமா”என்றான்.
“பார்றா”என்றவள் “அந்த பொண்ணு மேரேஜ் பண்ணிக்கலாம் ஏன் சிங்கிளா இருக்காங்க”என்றவளிடம் “கல்யாணத்தை நிறுத்தினதால வரன் வரலை போல. அதுவும் இல்லாமல் மங்கை அத்தை வேற ஏதாவது சொல்லி தட்டி விடுவாங்க போல”என்றான்.
“ஹ்ம்ம்”என்றவள் “நான் கேட்டதுக்கு பதில் வரலை”என்றாள்.
“ரொம்ப ரொம்ப ஜாலியா இருக்கேன். ஹாப்பி னு சொல்லி எல்லாம் அடக்கிட முடியாது வெண்ணிலா. ஆனாலும் ஒரு மாதிரி சூப்பரா எக்ஸைட்டா வாழறேன் உன் கூட”என்றான் உளமாற.
“அதென்ன எக்ஸைட்டா”என்றதும் “நீ ஹ்ம்ம் சம்திங் ஸ்பெஷல். ப்ம்ச் அதெல்லாம் கேட்காத எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ண தெரியாது. ஆனா இந்த வெயில் அதிகமா தாக்கும் போது வெள்ளை மேகம் எல்லாம் திரண்டு திடீர்னு மழை வருமே. அப்போ ஒரு சந்தோஷம் வரும் பாரு. அது போல உன் என்ட்ரி என் லைஃப் ல”என்றவனுக்குள் மகிழ்ச்சியின் பெருமழை.
இருவரும் சாளரத்தின் வழியே நிலவுப்பெண்ணை மேகம் மறைப்பதும் விலகுவதுமாய் இருந்த காட்சியை ரசித்திருந்தனர்.
இப்படியே இந்த சண்டைக்கோழிகள் காலம் முழுவதும் இணைபிரியாமல் வாழ வாழ்த்தி விடை பெறுவோம் மக்களே