வேலன் மருமகள் வெளியே இருப்பதாக கூறவும் மேகன் நிலா இருவரும் பதறிப் போய் விலகிக் கொள்ள வேலவன் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தார்.

    “தம்பி தூங்கிட்டு இருப்பான் தொந்தரவு செய்யாம வாங்க”என்ற வரலக்ஷ்மியின் குரல் வேறு அழுகை கலந்து ஒலித்தது.

    “வெண்ணிலா நீ உள்ளயே இரு நான் பார்க்கிறேன்”என்றவன் அவசரமாக தன் கலைந்த கேசத்தையும் நலுங்கிய ஆடையையும் சரி செய்து விட்டு கதவைத் திறந்தான்.

    வரலக்ஷ்மி சங்கடமாக பார்க்க வேலவனோ “எவ்வளவு நேரம் வர்மா. வா வா “என்று பரபரக்க “வாங்கப்பா போகலாம்”என தாய்க்கு ஆறுதல் பார்வை தந்து அவரோடு நடக்க

    வரலக்ஷ்மியோ”நான் வர்மன் பெட் ஸ்ப்ரெட் மாத்திட்டு வர்றேன் நீங்க போங்க”என்று அறைக்குள் சென்று விட வேலவன் மகன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.

    “மன்னிச்சுக்கோடா நிலா. இந்த தீபா திடுதிடுப்புனு வருவானு தெரியலை. “என்று சங்கடமாக சொல்லவும் “பரவாயில்லை விடுங்கத்தை. சரி வாங்க நாமளும் போவோம் தேவை இல்லாம அந்த பொண்ணுக்கும் சங்கடம் வேற”என்று தன் வருத்தம் மறைத்துப் பேச வரலக்ஷ்மிக்கு இன்னுமே குற்றவுணர்வாகிப் போனது.

    “வாங்கத்தை பார்த்துப்போம்”என்றவள் தைரியமாக வேலனிடம் பேசும் முடிவிற்கு வந்திருந்தாள்.

    இருவரும் கூடத்திற்கு வருகையில் தீபாவுமே சங்கடத்தில் நெளிந்த வண்ணம் தான் இருந்தாள்.

    அத்தோடு வெண்ணிலாவைப் பார்த்ததும் இன்னும் சங்கடம் கூடிப் போனது. அவளுக்கு தன் நிலையை உணர்த்தி விடும் வேகம் எழுந்தாலும் வேலவன் நிலை அவளை அமைதியாக்க தன்னை வரச் சொன்ன மங்கையின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ‌.

    ‘கொஞ்சமாவது அறிவு வேணாம் இந்த பெரிம்மாக்கு இப்படியா என்னை வரச் சொல்லும்’என்று நொந்து கொண்டவள் தன் அவஸ்தையை வெளிக்காட்டாமல் அமர்ந்து இருந்தாள்.

    “நிலாம்மா… இது யார் னு தெரியுதா உனக்கு தெரியும் நீதான் கல்யாணத்துக்கு வந்திருந்தியே”என்று வெள்ளந்தியாக சிரித்த வேலவன் “உன் கிட்ட சொன்னது இல்லையே தீபா. நிலான்னா அவ்வளவு பிடிக்கும் எனக்கு. சமத்து பிள்ளை.படிச்சு முடிச்சுட்டு ஏதோ இங்கே பரிட்சை எழுத வந்திருக்கா”என்றார்

    “தெரியும் மாமா அத்தை சொன்னாங்க”என்ற தீபாவிடம் மெதுவாக “நான் சொன்னா சங்கடப்படாத. வால்பாறையிலேயே இருந்திருந்தோம்னா நான் வர்மனுக்கு நிலாவை தான் பொண்ணு கேட்டு இருப்பேன்”என்றது வர்மனுக்கும் மற்றவர்களுக்குமே கேட்டது.

    தீபா சங்கடமாய் சிரித்து “நல்ல சாய்ஸ் மாமா”என்றாள் உளமார.

    “அண்ணே அந்த பொண்ணு வந்ததில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கு வரு நீ பாரு”என்ற அகிலா தீபாவிடம் “நீ வாம்மா”என்று அழைக்க அவள் மின்னலென எழுந்து கொண்டாள்.

    “வர்மா நீயும் போயேன்”என்று வேலவன் சொல்ல “ஜெட்லாக் ப்பா தூங்கி எழுந்து வர்றேன் தீபா கிட்ட ஈவ்னிங் பேசறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க”என்றவன் சட்டென எழுந்து கொண்டான்.

    “வர்மா அதென்ன அண்ணன் சொல்றாங்க நீ என்ன டான்னா”என்றபடி சமையல் அறையில் இருந்து வெளிப்பட்ட மங்கையை வெண்ணிலா பார்வையாலேயே எரித்தாள்.

    “அக்கா விடு அவனுக்கும் தூக்கம் கெட்டு இருக்கும் நீ போப்பா”என்ற வேலவன் “அக்கா எங்கேயோ போகணும் னு சொன்னீயே போகலாமா”என்றார் வேகமாக.

    “இல்லையே என்ன வேலா மறந்த வாக்கில் கேட்கிறியா”என்று மங்கை சமாளிக்க

    “ஓஓஓ தெரியலை”என்று கண்களை உருட்டி பின் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று விட்டார் வேலன்.

    வர்மன் இருந்த நிலைக்கு யாரிடமும் எதுவும் பேசவில்லை அமைதியாக நகர்ந்து விட வெண்ணிலா மங்கையைப் பிடித்துக் கொண்டாள்.

    “எதுக்காக இப்போ உங்க கொழுந்தனார் பொண்ணை வரச் சொன்னீங்க”என்றாள் நேரடியாக

    திடுக்கிட்ட மங்கையோ தன்னை மறைத்து “என்ன நான் வரச் சொன்னேனா எனக்கென்ன பைத்தியமா.. ஏதாவது உளறாத நீ”என்றார் வெடுக்கென்று

    “நான் உளர்றேன்.ம்ஹ்ம் எதுவோ உங்க கிட்ட சரி இல்லை. நான் இனிமே கவனிக்கிறேன்”என்றவள் நேரே உணவு மேசை நோக்கிச் சென்றாள்.

    தீபா சங்கடமாய் பேசிக் கொண்டிருக்க நிலாவைக் கண்டதும் அவஸ்தையாக எழுந்து கொண்டாள்.

    தன்னிலை விளக்கம் தர முன்வந்தவளை “விடுங்க தீபா உங்க சிச்சுவேஷன் எனக்குப் புரியுது”என்று சொல்லி தடுத்து விட்டாள்.

    “நாளைக்கு காலைல பெங்களூர் போயிடுவேன் நிலா. அதான் பெரியம்மா கூப்பிட்டாங்களேன்னு ஓடி வந்தேன். இனிமே என்னவோ செய்யட்டும் அவங்க.”என்ற தீபா “தப்பா எடுத்துக்க வேண்டாம். எனக்கு கொஞ்சம் கில்ட் ஃபீல் இருந்தது.அதான்”

    “எதுக்கு”என்று புரியாமல் வினவ

    “இல்லை அவ்வளவு தூரம் வந்துட்டு மேரேஜ் அப்போ முடியாத னு சொல்லிட்டு போயிட்டேன். அதுக்கு அப்புறம் நான் அப்படி வளர்த்தேன் இப்படி வளர்த்தேன்னு அழவும் தப்பு செஞ்சுட்டோமோனு தான் அவங்க கூப்பிடும் போதெல்லாம் வந்தேன் மத்தபடி வேறெந்த இன்ட்டென்ஷனும் எனக்கு இல்லை நிலா. இந்த மாதிரி அவங்க உங்க ஃபேமிலியை ஆட்டி வைப்பாங்கன்றதால தான் நான் தீர்மானமா இந்த மேரேஜ் வேணாம் னு கிளம்பிட்டேன். இப்போதும் நான் செஞ்சது சரின்ற மாதிரியே தான் அவங்க இங்கே ஆட்சி பண்றாங்க”என்றாள் தீபா உண்மையான வருத்தத்துடன்.

    “புரியுது தீபா. பட் நீங்க இந்த விஷயத்தை முன்னாடியே பேசி இருக்கலாம் உங்க முடிவால் பாதிக்கப்பட்டது இந்த ஃபேமிலி தான்.”என்றவள் “எனக்கும் அவருக்கும் ஒத்துப் போயிடுச்சு அதனால எல்லாம் ஓகேவா போகுது இதே பத்து வருஷம் முன்னாடி இருந்த மேகவர்மன் வெண்ணிலா ன்னா நிச்சயம் நாங்க கோர்ட்டில் டைவர்ஸுக்கு நின்றுப்போம். உங்களை ஹர்ட் பண்ண சொல்லலை. பட் இருந்தாலும் சொல்லித் தான் ஆகணும் நான். ஒரு திருமணத்தை எடுத்து நடத்தறது சாதாரண விஷயம் இல்லை. அதை மாற்றி நிறுத்தி இது ரெண்டு குடும்பத்துக்கான மானப் பிரச்சினை ஆச்சு தானே”என்றாள் அழுத்தமாக

    தீபா சற்று குற்றவுணர்ச்சி மிக நிற்கவும் “நிலா போதும் விடு”என்ற அகிலா “நீ இந்த அளவு புரிஞ்சு நடக்கிறதே போதும் மா. நல்லபடியா போயிட்டு வாம்மா. உன் வாழ்க்கை நல்லாவே இருக்கும்”என்று வாழ்த்தி அவளை கிளம்ப வைத்து விட்டார்.

    “ம்மா நான் நல்லா கேட்டு இருப்பேன் நீங்க ஏன்”என்று நிலா ஆதங்கமாய் கேட்க

    “அவ போனதால தானே இப்போ இதெல்லாம் உரிமையா விட்றா ஒரு கெட்டதிலும் நல்லது அவ்வளவு தான் நீ இதை நினைக்காதே போய் தம்பியை பாரு. அவர் ரூமுக்கு போய் எவ்வளவு நேரம் ஆச்சு”என்று மகளை அனுப்ப

    “அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எனக்கு ஒரு விஷயம் பண்ணனுமே”என்றாள் யோசனையாக

    “என்னவாம்”என்று அகிலா அமர்ந்து கொள்ள நிலா விஷயத்தை கூறினாள்.

    “நான் நினைச்சேன் டா. ஓகே சஞ்சய் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவன் கிட்ட சொல்லி வைக்கிறேன்”என்றார் அகிலா.

    “ம்மா ரொம்ப சீக்ரெட்டா செய்யணும் கத்தி மேல நடக்கிற மாதிரி இது”என்றாள் எச்சரிக்கையுடன்.

    “விடுடா அந்த அம்மா ஆட்டத்தை அடக்கலாம்”என்ற அகிலா சஞ்சயிடம் பேச சென்று விட்டார்.

    “ஏதோ ஃப்ராடுத்தனம் இருக்கு இந்த மங்கை கிட்ட”என்று சொல்லியபடி தன் அறைக்குள் புக வர்மன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். பிடிப்பிற்கு நிலாவின் தலையணை வேறு.

    “உராங்குட்டான் என்னை விட்டுட்டு தலகாணி கூட என்ன தூக்கம் வேண்டி கிடக்கு”என்று முணுமுணுத்தவள் தலையையை தள்ளி விட்டு விட்டு தான் அவனின் அணைப்பிற்குள் சரண் புகுந்தாள்.

    “ப்ம்ச் தூங்க விடுடி முட்டக்கண்ணி. காது வலிக்குது”என்று முனகிக்கொண்டே வர்மன் உறங்க

    “இது வேறயா எழுந்தப்புறம் இருக்கு உனக்கு”சண்டை மோடிற்கு சென்றவள் அணைப்பில் இருந்து மட்டும் வெளியே வரவில்லை.

    ****”********

    “இப்படி அடிக்கடி ஷாக் குடுத்தா தான் இந்த வெண்ணிலா அடங்கி இருப்பா. எப்படியோ என் தம்பி கிட்ட இங்கேயே தங்க பர்மிஷன் வாங்கிட்டா. ஆனா இதுக்கு மேல நான் விடுவேனா. இந்த கடன் அடையற வரைக்கும் இவ இங்கே இருக்கவே கூடாது”என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு இருக்க தர்மதுரை மங்கையை யோசனையுடன் பார்த்துக் கொண்டே இருந்தார்.

    “என்ன என்னைய பார்த்தா தட்டுல சோறு வந்திடுமா?, போய் ஏதாவது வாங்கிட்டு வாங்க அங்கே தான் ஒரு கூட்டம் வந்து கெடக்கே. அங்கே போய் சாப்பிட முடியாது”என்று கணவனிடம் வள்ளென்று விழ தர்மதுரை அமைதியாக அங்கிருந்து வெளியேறினார்.

    ஒரு வாரம் கழித்து விசாலம் அகிலா எல்லாம் வால்பாறை கிளம்பி இருக்க வெண்ணிலா மட்டும் இங்கே தங்கி இருப்பதாக சொல்லி வேலவனிடம் பேசி இருந்தார் நரசிம்மன்.

    “வர்மன் மேல தங்கிக்கிறேன்னு சொல்லி இருக்கான் நரசிம்மா. நிலாப்பொண்ணு இங்கேயே இருக்கட்டும். எனக்கு என்ன பிரச்சினை. அவளைப் பத்தின கவலையே உனக்கு வேணாம் நானும் வருவும் பார்த்துப்போம்”என்றார் வேலவன் நண்பனிடம்.

    “ஒடம்பை பாத்துக்கோணும் கண்ணு. மாத்தரை மருந்தெல்லாம் சரியா சாப்புடு சாமி”என்று விசாலம் கண்ணீர் மல்க பேசிக் கொண்டிருக்க மங்கை ஒரு பக்கம் எரிச்சலை அடக்கி கொண்டு நின்றார்.

    ‘கெழவி உருகி ஊத்துவா’என்ற பொருமல் வேறு மனதினுள்.

    அனைவரும் கிளம்பி விடவே வர்மனும் அன்று தான் அலுவலகம் கிளம்பி சென்றிருந்தான்.

    வேலவனின் கண்ணில் படாமல் வெண்ணிலா விடம் பேசுவதே அவனுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கி ஏக்கமும் தவிப்புமாக இருக்க தந்தையின் மீது சிறிது ஆதங்கம் கூட பிறந்தது அவனுக்கு. “இப்படி பண்றாங்க சாதாரணமாக கூட இந்த பக்கம் இருக்க முடியலை முகி. ஏதோ திருட்டுத்தனமாக தப்பு பண்ற ஃபீல் ஆகுது எப்போடா இவருக்கு சரி ஆகும் னு இருக்கு”என்று வெண்ணிலாவிடம் புலம்பியே விட்டான்.

    “அவர் என்ன வேணுன்னா செய்றார். ஞாபகம் வந்தா அவர் முதல்ல கொண்டாடறது என்னையா தான் இருக்கும். உங்களுக்கு சங்கடமா இருந்தா ஆபிஸ் கிளம்புங்க. தீபா பத்தின கேள்வியே உங்களுக்கு வராது”எனவும் அதுவும் சரிதான் என்று வீட்டில் இருந்து வேலை செய்வதை வேண்டாம் என்று மறுத்து விட்டு அலுவலகம் கிளம்பி இருந்தான்.

    அன்று தீபா கிளம்பவுமே ஏன் மருமகள் பிறந்த வீட்டில் இருக்கிறாள் என்று வரலக்ஷ்மியையும் வர்மனையும் கேள்விகளால் துளைத்து எடுக்க கணவரை சமாளிப்பதற்குள் வரலக்ஷ்மி திணறிப் போனார்.

    மங்கை வேறு “அதுக்கு தான் தீபுவை நான் வரச் சொல்லி சொன்னேன் நீங்க அதுக்குள்ள நிலாவை கூட்டிட்டு வந்து இப்போ பாரு அவனை யார் சமாளிக்க. ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா யார் பார்க்கிறது”என்று திட்டினார்.

    “அதுக்காக மாசமா இருக்க பிள்ளையை பிறந்த வீட்டிலேயே விட முடியுமா அண்ணி”என்று வரலக்ஷ்மியையும் ஆதங்கமாய் கேட்க மங்கை அதிர்வாய் “மாசமா இருக்காளா”என்று வெண்ணிலாவைப் பார்த்தார்.

    ….. தொடரும்