இதோ அதோவென ஒரு மாத காலம் ஓடியிருக்க வேலனை மருத்துவமனையில் இருந்து அழைக்கும் நாளும் வந்து விட்டது. உடல் பூரண குணம் அடைந்திருந்தாலும் அவரின் மூளையோ அதன் செயல்பாடுகளோ முழுமையான நலத்தை பெறவில்லை. அவ்வபோது பேசுவதும் நடந்ததை மறப்பதுமாய் அவர் நாட்கள் நகர அவரின் வேலையில் இருந்து வாலண்டரி ரிட்டயர்மென்ட் வாங்க முயற்சித்து அது கிடைக்கவும் செய்திருந்தது.
வேதா தந்தை நலம் பெற்றதும் விஷ்ணுவோடு நொய்டா கிளம்ப ஆயத்தம் செய்திருந்தாள். தந்தை வந்ததும் அவரை வீட்டில் இருக்க வைத்த பிறகே வருவேன் என்றிருக்க விஷ்ணுவும் ஒப்புக் கொண்டான். அதற்குள் வரலக்ஷ்மிக்கு தைரியம் அளிக்கும் விதமாக பேசி வேலவனிடம் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாம் சொல்லி இருந்தாள்.
“அவருக்கு பொறுமையாவே எல்லாம் நினைவுக்கு வரட்டும் ம்மா அவரைப் போட்டு தொல்லை செய்யாதீங்க.”என்றவள் “வெண்ணிலா வர்மன் கல்யாணம் மட்டும் எப்படியாவது அவருக்கு தானா ஞாபகம் வந்திடணும்”. என்று மனதார வேண்டிக் கொண்டவள் அதை வரலக்ஷ்மியிடம் சொல்லவும் செய்தாள்.
” ஆமாம் மா. நீ சொல்றதையே செய்றேன் சரியாம்மா”என்ற வரலக்ஷ்மிக்கு தான் மகளைப் பிரிவது கடினமாக இருந்தது.
“இன்னும் பத்து நிமிஷத்தில் வந்திடுவோம்”என்று வர்மன் தகவல் தந்திருக்க வீட்டில் மங்கையும் வரலக்ஷ்மியும் எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தனர். மங்கை மூன்று வாரத்திற்கு முன்பு தான் வீடு திரும்பி இருந்தார்.
வெண்ணிலா அங்கில்லை. வால்பாறையில் இருந்தாள். எல்லாம் மங்கையின் கைங்கர்யம் தான்.
வரலக்ஷ்மியிடம் போட்ட தூபம் நன்றாகவே வேலை செய்திருந்தது. அதோடு மருத்துவரின் அறிவுரையும் இணைந்து கொள்ள விளைவு வெண்ணிலாவிற்கு வால்பாறை வாசம். நான்கு நாட்கள் முன்னதாக தான் வெண்ணிலாவைக் கொண்டு போய் வால்பாறையில் விட்டு வந்தான் மேகன்.
“என்ன சிரிப்பு உனக்கு”என்று அந்த நிலையிலும் சிறிது நிகழ்காலம் மறந்து கேட்க
“இல்லை 24*7 இருந்தாலும் சண்டை போட்டுட்டே அலைவோம் சேர மாட்டோம் னு இருந்த ஆளா நம்பனு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சு”என்றாள் புன்னகையாகவே
“என்ன பண்றது. இந்த ராங்கி மேல இத்துணூன்டு லவ் வந்திடுச்சு”என்று சூழலை இலகுவாக்க அவன் சொல்ல முறைத்துப் பார்த்தாள் வெண்ணிலா.
“சும்மா டி”என்றவன் அவள் தோள் மீது சாய்ந்து கொண்டு கண்களை மூடினான்.
வீட்டில் விட்டவன் சங்கடமாய் “கொஞ்ச நாளைக்கு அத்தை. நான் என் வேலையை முடிச்சிட்டு வந்து கூட வேற வீடு பார்த்து இருந்துக்கிறோம்”என்று சொல்லவும் தான் அகிலா முகம் தெளிந்தது.
“அதுக்கில்லை வர்மா. உங்களுக்கே கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி ரெண்டு பேரும் தனித்தனியா அதான் கஷ்டமா இருக்கு”என்று வருந்த
“இப்போ என்னம்மா உங்களுக்கு நான் ஆடி மாசத்துக்கு இங்கே வந்திருக்கேன்னு நினைச்சுக்கோங்க. எதுவும் தெரியாது.”என்றவள் “எதையும் நினைக்காம ஊருக்கு போங்க நான் சீக்கிரம் வந்திடுவேன்”என்றாள் மேகனிடம்.
அதே எண்ணத்துடன் விரைவில் வெண்ணிலாவை தன்னோடு அழைத்துச் செல்வேன் என்ற நம்பிக்கையோடும் அங்கிருந்து கிளம்பி இருந்தான் மனதேயின்றி.
பிடித்தமில்லாதவளோடு நடந்த திருமணம் தான் ஆனால் பிடித்தமான நிகழ்வுகள் ஏராளம் நிகழ்ந்திருக்க பிடித்தமின்மை எல்லாம் இப்போது பிடித்தத்தின் பட்டியலில் இடம் பிடிக்க பித்தாகிப் போனவனின் வாழ்வு இனி பிடியில் நிற்குமா
*********
“நான் சொல்றதை புருஞ்சுக்க வரா. இத்தனை நாளும் நடந்தது எல்லாம் போதும். என் தம்பி நரகத்தை தொட்டு திரும்பி வந்திருக்கான். அவன் உயிரோடு இனியும் விளையாட எனக்கு விருப்பம் கிடையாது. அந்த வெண்ணிலா இந்த குடும்பத்துக்கு வேண்டாம். மறுபடியும் அவ கெரகம் வேலவனுக்கு ஏதாவது ஆபத்தில் முடிஞ்சா என்ன செய்வ”என்று வரலக்ஷ்மியை பயம் காட்டி பேசினார் மங்கை.
“அண்ணி எனக்கும் புரியாம இல்லை. ஆனா வர்மன் என்ன சொல்வான் அதை விட இவருக்கு நினைவு திரும்பிட்டா வெண்ணிலா ஏன் இல்லைனு கேள்வி கேட்பாரே அதுக்கு என்ன பதில் சொல்றது”என்று வரலக்ஷ்மி கேட்க
“அதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போதைக்கு வெண்ணிலா வேலன் கூட இங்கே இருக்க கூடாது. அதுவும் இல்லாமல் வர்மன் தான் அமெரிக்கா போகணும் னு சொல்றானே போயிட்டு வரட்டும் பார்த்துக்கலாம்”என்றார் தைரியமாக.
“இருந்தாலும் அண்ணி”என்ற வரலக்ஷ்மியிடம் ஜாதகம் கிரகம் என்று பயம் காட்டியே அவரை தன் வழிக்கு வர வைத்திருந்தார் மங்கை.
வரலக்ஷ்மிக்கு வெண்ணிலாவின் ஜாதகத்தில் தோஷம் இருக்கக்கூடும் அதனால் தான் வேலனுக்கு இப்படி ஆகி இருக்கிறது நடுஇரவில் குடுகுடுப்பை காரன் வந்தான் என்றெல்லாம் சொல்லி பயம் காட்டி ஒரு வழியாக வெண்ணிலாவின் கேள்விப் பார்வையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டார் மங்கை.
வெண்ணிலா விடம் நேரடியாக வரலக்ஷ்மி பேசியவர் இரு கைகளையும் கூப்பி””நீ இங்கே இருந்து போயிடு வெண்ணிலா. அவருக்கு ஏதாவது ஞாபகம் வராம நம்மலா நினைவு படுத்தினா உயிருக்கு ஆபத்தாம். தயவுசெய்து கொஞ்ச நாளைக்கு உன் வீட்டில் இரும்மா”என்றதில் வெண்ணிலா மனம் வருந்தினாலும் சரியென்று சம்மதித்திருந்தாள்.
மங்கையும் முழுதாய் அவளை விரட்ட நினைக்கவில்லை. இந்த கடன் பற்றிய விஷயங்களை கேட்காமல் இருந்தால் அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் நிலைமை அப்படி இல்லையே
வர்மனோடு வீட்டிற்கு வந்திறங்கினார் வேலவன்.
கண்கள் கலங்க ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துக் கொண்ட வரலக்ஷ்மிக்கு மனது அப்போதுதான் இளக்கம் தந்திருத்தது.
“எனக்கு ஒண்ணும் இல்லை வரு. பாரு நல்லா வந்திட்டேன்”என்றவர் “மாப்ளைக்கும் வேதுவுக்கும் தான் அலைச்சல் ஜாஸ்தி ஆகிடுச்சு. வேதுக்கு பையன் பொறந்தது கூட எனக்கு தெரியாம போயிருச்சு பாரு”என்றார்.
அடுத்த சில நிமிடங்களில் “ஆமாம் எங்க மருமகளைக் காணல. தீபா”என்று அழைக்க வர்மன் திடுக்கிட்டு பார்த்தான் அவரை.
“என்ன பாக்குற வர்மா மருமக எங்க. வீட்டில் இல்லையா”என்றவர்”ரொம்ப சோர்வாக இருக்கு நான் படுக்கவா”என்று கேட்க அடுத்த நிமிடமே அவரை அறைக்குள் அழைத்துச் சென்று இருந்தான் மேகன்.
அவனின் மனம் முழுவதும் இவருக்கு எப்போது சரி ஆகும் என்ற எண்ணம் நிறைந்திருக்க எப்படியும் தான் வெளிநாட்டிற்கு சென்று வந்த பிறகு நிச்சயம் வெண்ணிலாவை மீண்டும் அழைத்து வந்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
வேதா விஷ்ணு இல்லை. வெண்ணிலா பிறந்தகத்தில் இருக்க வர்மனும் அமெரிக்கா கிளம்பி இருக்கவும் மங்கையின் வாசம் மெல்ல மெல்ல வேலவனின் குடிலுக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்திருந்தது.
மங்கையால் நின்று சமைக்க முடியாது கால் அந்த அளவுக்கு பலமில்லை அப்படி இப்படி என்று நூறு காரணங்கள் கூறி வேலவன் வீட்டில் காலடி எடுத்து வைத்த மங்கை மீண்டும் பழைய மங்கையர்கரசியாக உருவெடுத்து இருந்தார். வெளியே இருந்து இத்தனை நாளும் வேலவனின் குடும்ப நிர்வாகத்தில் குறுக்கிட்டவர் சில வாரங்களிலேயே நேரிடையாக தலையிடத் துவங்கினார். முதல் வேளையாக வால்பாறை சொந்தங்கள் வருவதை தடுத்து நிறுத்தி இருந்த மங்கை அடுத்ததாக சமையல் முதற்கொண்டு தன் விருப்பப்படி செய்ய வைத்தார். அத்தனைக்கும் வேலவனின் உடல் நலத்தை கைகாட்டியவரை ஒரு துளி கூட மறுக்காமல் நம்பினார் வரலக்ஷ்மி. பாச சாயம் பூசிய அந்த நரி இன்னும் எத்தனை தந்திரங்களில் வேலனின் குடும்பத்தை வளைக்க காத்திருக்கிறது என விதி மட்டும் அறிந்த விஷயம்.
இடையிடையே தீபாவையும் அங்கே வரவழைத்து அவளுக்குமே வேலனின் உடல் நிலையை சுட்டி காட்டி உன்னோடு தான் வர்மனுக்கு திருமணம் நடந்ததாக நினைக்கிறார் அவரிடம் உண்மையைக் கூறினால் இன்னும் மூளையின் செயல்பாடு குறைந்து உயிருக்கு ஆபத்து ஆகுமாம் என்று சொல்லி அவளுமே உண்மையாக இருக்குமோ என்பது போல எண்ணியவள் தன்னால் ஒரு உயிர் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தில் வந்து சென்றாள். வரலக்ஷ்மிக்கும் அதே மந்திரம் தான் வேலை செய்தது.
மங்கைக்கு இனி மீண்டும் விட்டதைப் பிடிக்கலாம் என்ற எண்ணம். தாமரையின் வீட்டிலும் தன்னை கோலோச்சி தம்பியின் வீட்டிலும் அதிகாரமாய் இருக்கலாம் என்று புளங்காங்கிதம் அடைந்து கொண்டிருந்தார். மற்றவர்களை அதிகாரம் செய்தே வாழும் மனிதனின் உச்சபட்சம் அங்கே தெரிந்தது.
அடுத்த மாதமே மங்கைக்காக பணம் வாங்கிக் கொடுத்த இடத்தில் இருந்து வட்டி கொடுக்காததால் நேரடியாக வந்துவிட்டனர் கடன் கொடுத்தவர்கள்.
“யாரு வரு ஏன் சத்தமா பேசுறாங்க”என்றபடி வெளியே வந்த வேலவனிடம்”என்ன வேலன் சார் பணத்தை வாங்கிட்டு வட்டியும் கட்டலை அசலும் தரலை கிட்டத்தட்ட மூணு மாசம் ஆகப் போகுது”என்று வந்தவன் நீட்டி முழக்கினான்.
வேலன் குழப்பமாக “என்ன வரு.. என்ன பணம் வட்டி எனக்கு புரியலை. என் ஆப்ரேஷனுக்கு வாங்குனீங்களா”என்று கேட்க
“இல்லைங்க அதெல்லாம் வர்மன் பணம் இது ஏதோ வேற சொல்றாங்க அதோட அதிக பணம் சொல்றாங்க அதுக்கு வட்டியே என்பதாயிரம் பக்கமா சொல்றாங்க”என்று தவித்தார் வரலக்ஷ்மி.
வேகமாக உள்ளே வந்த மங்கை “என்ன சத்தம்”என்று கேட்க வந்தவன் ஏதோ பேசப் போக அதற்குள் வரலக்ஷ்மி பதில் அளித்தார்.
மங்கை சட்டென “என்ன வேலா மறந்து போயிட்டியா வர்மன் கல்யாணத்துக்கு பணம் பத்தலைனு வட்டிக்கு வாங்கினதா சொன்னியே மறந்தாச்சா அவங்களா தான் இருக்கும்”என்று சமாளிக்க
“வர்மன் கல்யாணத்துக்கு கடனா”என்று தம்பதி இருவரும் விழிக்க
“அதுசரி உன் கிட்ட சொல்ல வேண்டாம் னு சொல்லவும் நானும் அப்போதைக்கு விட்டுட்டு மறந்தும் போயிட்டேன் வரா. வால்பாறை சொந்தம் வந்ததே அதுக்கு துணிமணி அப்புறம் தாலிக்கொடி எடுக்க எல்லாம் பணம் பத்தலைனு சொல்லி வாங்கி இருக்கேன் க்கா னு சொன்னான் . நான் கூட ஏன் வேலா அகலக்கால் வைக்கிறன்னு கேட்டதுக்கு எனக்கு இருக்கிறது ஒரு பையன் க்கா அவனுக்கு மனசார செய்யணும் னு என் வாயை அடைச்சுட்டான்”என்று சரளமாகப் பேசினார் மங்கை.
வரலக்ஷ்மி கணவனின் முகம் பார்க்க அவரோ குழப்பத்தில் ஆழ்ந்திருக்க மங்கை மேலும் பேசிப் பேசி “இப்போதைக்கு நான் பேசறேன் வரா நீ அமைதியா இரு”என்றவர் வந்தவனிடம் நாளை வந்து வட்டி தருவதாக ஒப்புக் கொண்டார்.
வரலக்ஷ்மியோ பதறிப் போய்”இப்போ இருக்கிற நிலைமையில் எப்படி அண்ணி தர முடியும் அதோட எதுக்கு வாங்கினார்னே தெரியாம”என்று தயங்கிப் பேச
மங்கையோ”அதெல்லாம் சொன்னா வட்டிக்காரன் நம்புவானா… இருக்கிறதை வட்டியை மட்டும் தருவோம் வரா. வர்மன் கிட்ட பேசலாம் இதுபத்தி”என்று சமாதானம் செய்தார்.