அகிலா உயிரை வெறுத்து அங்கிருந்தவர்களைப் பார்த்தார்.
   
    மங்கை பேசியதற்கு வரலக்ஷ்மியிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை. வேதா மட்டும் “இவங்களுக்கு வேற வேலை கிடையாது. வாங்கத்தை ம்மா போகலாம் வாங்க. அடி பட்டும் பேச்சு குறையுதா பாரு”என்று திட்டிக் கொண்டே வரலக்ஷ்மியின் கைகளைப் பிடித்து நடக்க அகிலாவுக்கோ மனவருத்தம் ஆகிப் போனது. மங்கையிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்க மாட்டார்களா என்ற ஆதங்கம்.
   
    இது சரியே வராது என்று எண்ணிய அகிலா வேகமாய் மங்கை இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார்.
   
   
    “இப்போ என்ன சொன்ன நீ “என்று கேட்க மங்கை திகைத்து விழித்தார்.
   
    “என்ன முழிக்குற என் மக ராசி கெட்டவளா உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா இப்படி பேசியிருப்ப நீ”என்று ஆத்திரத்துடன் கேட்க தாமரையோ “விடுங்க ஏதோ ஆதங்கத்துல பேசிட்டாங்க”என்று சமாளிக்க
   
    “ஆதங்கத்துல பேசினாங்களா… உன் மகளை இப்படி பேசியிருந்தா விட்டு இருப்பியா நீ”என்று தாமரையிடம் பாய்ந்தவர் “இதுக்கு மேல மரியாதை கிடையாது உனக்கு. நல்ல ராசி பார்த்து சாதகம் பாத்து தானே இந்தம்மா மகளை கல்யாணத்துக்கு பேசின நீ அப்புறம் ஏன் விட்டுட்டு ஓடிப் போனா அவ”என்று கத்தி விட்டு “வேலண்ணே விழுந்து கெடக்கறது எங்களுக்கும் வேதனை தான். அதுக்காக என் மகளை பேசுவியா நீ”என்று மங்கையை பிடிபிடியென பிடிக்க வரலக்ஷ்மியோடு சென்று கொண்டிருந்த  வேதா அவரை அங்கேயே விட்டுவிட்டு ஓடி வந்தாள் பதற்றத்தில்.
   
   
    “அத்தை விடுங்க இதை இப்போ பேசற நேரமா”என்று வேதா சங்கடமாக கூற
   
    “அப்போ எப்ப பேச சொல்ற வேதா நீ. அவங்க இதே மாதிரி எல்லார் கிட்டயும் பேசினா என் பொண்ணு நிலைமை. அவ ராசி கெட்டவளா மனசாட்சி இருக்கா இதுக்கு. நியாயமா பார்த்தா நீங்க ரெண்டு பேரும் ல பேசி இருக்கணும் வேதா.இதை நான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கலை”என்றிருந்தார் அகிலா.
   
   
    “ஏன் அத்தை நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா இருக்கற வேதனை பத்தாதுனு நீங்க வேற ஏன் இப்படி பண்றீங்க”என்று மங்கையை கடிந்து கொண்டவள் அகிலாவை இழுத்து வந்து விட்டாள்.
   
    “இதை நான் சும்மாவே விட மாட்டேன்”என்று அகிலா அப்போதும் திட்டி விட்டு தான் வந்தார்.
   
    மங்கையோ”உண்மை தானே சொன்னேன்”என்று தாமரையிடம் அப்போதும் வாயடங்காமல் பேச தாமரைக்கே ஒரு மாதிரி ஆகிப் போனது.
   
    இது என்ன மாதிரியான பின்விளைவுகளை உண்டாக்குமோ என்ற அச்சம் எழுந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு வேளை இருக்குமோ அதனால் தான் இப்படியோ தன் மகள் திருமணத்திற்கு மறுக்காமல் இருந்திருக்கலாமோ என்றெல்லாம் தாமரையின் மனம் குமைந்தது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் தன் மகள் திருமணம் செய்து வந்து இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருந்தாலும் இப்படி தானே இந்த மங்கை பேசியிருக்கும் என்றும் தோன்றியது அவருக்கு.
   
   
    வெளியே எந்த உணர்வுகளையும் காட்டவில்லை தாமரை.
   
    “போயிட்டு வர்றேன் அக்கா உடம்பை பார்த்துக்கோங்க”என்று சொல்லி விடைபெற
   
    “இனிமேலாச்சும் வந்து போக இரு தாமரை எனக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும்”என்று சொல்லி அனுப்பினார் மங்கை.
   
   ******
   
    அதன் பிறகு மருத்துவ மனையில் வேலனுக்காக மட்டும் இருந்தவர் வரலக்ஷ்மியின் அமைதியை கவனிக்கவில்லை. மங்கை பேசிய பிறகு வரலக்ஷ்மி எதையுமே யாரிடமும் பேசவில்லை என்பதால் வேதனையில் இருக்கிறார் என்று அகிலாவும் அதை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் வரலக்ஷ்மியோ மனதில் மங்கையின் பேச்சை திரும்பத் திரும்ப ஒலிக்க விட்டுக் கொண்டு யோசனையில் அமிழ்ந்திருந்தார்.
   
   
    அகிலா மனதில் குமுறிக் கொண்டிருந்தாலும் அதை கணவனிடமோ மகன் மகளிடமோ வெளிப்படுத்தவில்லை.
   
    வெண்ணிலாவே “என்னம்மா ஏன் ஒரு மாதிரியாக இருக்க”என்று கேட்க அகிலாவிற்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
   
    “ஒண்ணும் இல்லடா இதெல்லாம் எப்போ சரியாகும் னு கலக்கமா இருக்கு”என்று சமாளித்து வைக்க வேறெதுவும் கேட்கவில்லை அவள்.
   
   
    “வீட்டிற்கு போக சொல்றார் மா அவர் போவோம் சமைச்சு கொண்டு வரலாம்”என்று அகிலாவை அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள் வெண்ணிலா.
   
    மேகவர்மன் தான் கிளம்பச் சொல்லி இருந்தான். வேதாவையும் அழைத்துச் செல்லும்படி விஷ்ணுவிடம் கூற “இருக்கட்டுமே மாப்ள”என்றான் விஷ்ணு சங்கடமாக
   
    “பிள்ளையை தனியா விட்டுட்டு எத்தனை நாள் மாமா இருக்கும் அக்கா. நீங்க கூட்டிட்டு போங்க நான் பார்த்துக்கிறேன். அகிலா அத்தையும் வெண்ணிலாவும் சமைச்சு வந்ததும் அத்தையை இருக்க வச்சுக்கிறேன்”என்று அவனை சமாதானம் செய்து வேதாவையும் சமாளித்து அனுப்பி வைத்தான் மேகன்.
   
  அவர்கள் கிளம்பிய ஒரு மணி நேரத்திலேயே வேலன் கண் விழித்து விட்டதாக மருத்துவமனையில் இருந்த மேகன் வெண்ணிலாவிடம் தகவல் சொல்ல விழிகளில் பூத்த கண்ணீரை துடைத்துக் கொண்டே வேதாவிடம் கூறி விட்டு உடனேயே மருத்துவமனைக்கு கிளம்பினர்.
   
   
    மருத்துவ மனைக்கு அரக்க பறக்க ஓடி வந்தவர்களை மேகன் எதிர்கொண்டவன் “உள்ள டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க வேதாக்கா. கைவிரலை அசைச்சாராம் நர்ஸ் சொன்னாங்க அப்புறம் கண்ணை லேசா முழிச்சு பார்த்து இருக்காரு”என்று தந்தை கண்விழித்த மகிழ்ச்சியில் பேச வெண்ணிலா அவனை ஆதூரமாய் பார்த்தாள்.
   
    எத்தனை தவிப்பு அவனிடத்தில் கண்ணுறக்கம் அண்டாது வந்ததில் இருந்து மருத்துவமனையே கதியென்று கிடக்கிறான். இப்போது தான் அந்த முகத்தில் லேசான வெளிச்சமே துளிர்த்து இருந்தது.
   
    வேலவனை பரிசோதித்த மருத்துவர் வெளியே வந்தார்.
   
   
    “கான்சியஸ் வந்திடுச்சு. இதே தொடர்ந்தா அவர் பிழைச்சுடுவார். இப்போதைக்கு யாரையும் பார்க்க அனுமதிக்க முடியாது இன்னும் ரெண்டு நாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும். கொஞ்சம் நார்மல் ஆகட்டும் அதுவரைக்கும் வெய்ட் பண்ணுங்க. மெய்ன் டோர் இருக்கு இல்லையா அங்கிருந்து வேணும் னா பாருங்க”என்று சொல்லி விட்டார்.
   
   
    “அப்போ இன்னும் சரி ஆகலையா அப்பா”வேதா அழத் துவங்க
   
    “அதெல்லாம் இல்லை மா க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் தாண்டிட்டாரு பட் அப்சர்வேஷன் இஸ் மஸ்ட்”என்றவர் சிறிதளவு நம்பிக்கையை விதைத்துச் சென்றார்.
   
   
    கட்டிலில் கண் மூடிக் கிடந்த கணவனை கண்ணாடி தடுப்பு வழியே பார்த்து நின்றார் வரலக்ஷ்மி.
   
   
    கண்கள் கலங்க கணவனின் கோலம் காண சகியாதவராய் திரும்பிக் கொண்டு அழ மேகன் அவரைப் பிடித்துக் கொண்டான்.
   
    காய்ச்சலில் கூட ஒரு நாள் சுணங்கி படுத்திட மாட்டார் மனிதர் அப்படியானவர் இன்று வேரொடிந்த மரமாய் கிடக்க வாடியதென்னவோ அவரின் கிளைகளாய் மனைவியும் மக்களும் தான்.
   
   
    நினைவுகள் தப்பிக் கிடந்தவர் மீண்டும் விழித்தெழும் போது தான் அவரை சார்ந்த ஜீவன்கள் உயிர் பெறும்.
   
   
    “வந்து உட்காருங்க மா அப்பாவுக்கு எதுவும் ஆகாது நம்ம கிட்ட வந்திடுவாங்க” மேகன் வேலவன் கண் விழித்ததில் தெளிந்திருந்தான்.
   
   
  இரண்டு நாட்கள் கழித்து நன்றாக விழித்துப் பார்த்தார் வேலவன்.
   
    போன உயிர் திரும்பி வந்தது வேலவன் குடும்பத்தினருக்கு.
   
    “இப்போதைக்கு ரொம்ப பேச ட்ரை பண்ண வேண்டாம்.அவர் முன்னாடி எமோஷனல் ஆகாதீங்க. ஜஸ்ட் ரெண்டு ஒரு வார்த்தை பேச மட்டும் செய்ங்க”என்று மருத்துவர் கூறிய ஆலோசனையை மனதில் கொண்டு முதலில் வரலக்ஷ்மியை தான் அனுப்பி வைத்தான் மேகன்.
   
   
    மனைவியைக் கண்டதும் விழியோரத்தில் கண்ணீர் வடிய நடுங்கும் கையால் தன் மனைவியின் ஒரு விரலை மட்டும் பிடித்துக் கொண்டார் வேலவன்.
   
    “சரி ஆகிடும்”கண்ணீர் மல்க உதட்டில் சிரிப்புடன் சொல்லிய வரலக்ஷ்மிக்கு அப்போது தான் மனம் நிம்மதியடைந்தது.
   
    அடுத்து வேதா மேகன் என்று ஒருவர் ஒருவராய் அவரைக் காண செல்ல மேகன் செல்லும் போது வெண்ணிலா செல்லும் போது உறங்கி இருந்தார் வேலவன்.
   
    “இனிமே பயம் இல்லை. க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் தாண்டிட்டார்”என்று மருத்துவர் சொன்ன வார்த்தைகள் தான் வேலவன் குடும்பத்தினருக்கு உயிர் காக்கும் அருமருந்தாக அமைந்தது.
   
    இரண்டொரு நாட்களில் வேலவன் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் துவங்கி இருந்தார்.
   
    மங்கை வீல் சேரில் அமர்ந்து தம்பியைக் காண வந்தார்.
   
    “நல்லா இருக்கேன் க்கா அழுகாதீங்க”என்று கம்மிப் போன குரலில் கூற
   
    “அருமை பெருமயா வளர்த்து இப்படி படுக்கும் படி ஆகிடுச்சே வேலா. எல்லாம் என்னால”என்று அழும் போதே
   
    “நான் தான் க்கா கவனமா போகலை”என்று தன் மீது பழியைப் போட்டுக் கொண்டவர் “உனக்கு என்ன ஆச்சு க்கா கீழ விழுந்தியா”என்று புரியாமல் கேட்க மங்கை வேலவனைத் திகைத்துப் போய் பார்த்தார்.
   
    “வேலா”என்று அவர் அதிர
   
    “கீழ விழுந்தியா எனக்கு இப்படி ஆச்சுனு பதட்டமா ஓடி வந்தியா”என்றெல்லாம் அவர் பேச மங்கைக்கு குழப்பாக இருந்தது அவர் பேச்சு.
   
    நர்ஸ் அங்கே நிற்கவும் அந்த பெண்ணை பார்க்க “தலையில் அடிபட்டு இருக்கார்ல அதனால கூட இருக்கலாம் மா. மறந்துட்டாங்க போல சார் கிட்ட சொல்றேன். நீங்க பயப்பட வேண்டாம் அதிர்ச்சியில் ஒரு சிலர் நடந்ததை மறந்து போயிடுவாங்க. தூங்கி எழுந்தா சரி ஆகிடுவாங்க. பயப்படாதீங்க”என்றவள் மருத்துவரைத் தேடி சென்றாள்.
   
   
    மங்கை மேலும் பேசத் துவங்கும் போதே வேலவன் மீண்டும் உறக்கத்திற்கு சென்றிருக்க அவர் வெளியே வந்து விட்டார்.
   
     ‘எல்லாம் மறந்துட்டானா இல்லை இது தற்காலிக மறதியா’என்று குழம்பியபடி வெளியே வந்தார் .
   
   
    வெண்ணிலா அங்கே வரவும்”வேலன் தூங்குவான் நீ இப்ப போக வேணாம்” என்றிட அவளும் சரியென தலையாட்டி விட்டு அங்கேயே நின்று கொண்டாள்.
   
   
    அங்கே வந்த விஷ்ணு “நிலா நீயும் மேகனும் வீட்டுக்கு போயிட்டு வாங்க நான் இன்னைக்கு இங்க இருந்து பார்த்துக்கிறேன். அத்தையும் கூட்டிட்டு போ மா. அவங்களுக்கு மாத்திரை குடுத்துடு தூங்கட்டும். ரொம்ப நாள் ஆச்சு அவங்க நல்லா தூங்கி”என்றான் ‌
   
   
    “சரிங்கண்ணா”என்றவள் வேலவனைப் பார்க்காமலேயே கிளம்பி இருந்தாள்.
   
   
    அன்றிரவு மேகவர்மன் வெண்ணிலா இருவரும் உறங்க செல்ல வரலக்ஷ்மியை வேதா கவனித்துக் கொண்டாள்.
   
   
    “நான் அங்கேயே இருந்திருப்பேன் வேது. ஏன் இப்படி பண்றீங்க இப்போ பாரு எனக்கு தூக்கமே வரலை”என்று புலம்பினார் வரலக்ஷ்மி.
   
   
    “ம்மா நாளைக்கு காலைல தெம்பாக போய் அப்பா கூட இருங்க. இனிமே நீங்க தான் அவரை கவனிக்கணும். இப்போ தூங்குங்க”என்று மாத்திரை கலந்த பாலை அவருக்கு கொடுக்க குடித்த சில நிமிடங்களிலேயே உறங்கிப் போனார் வரலக்ஷ்மி.
   
    *********
   
    “தூங்கலையா நீங்க. காலையில் ஹாஸ்பிடல் போகணும் தானே”என்ற வெண்ணிலாவை கைப்பிடித்து தன் அருகில் அமர வைத்தான் மேகன்.
   
   
    “என்னாச்சு என்ன”என்று பதறியவளை புன்னகைத்தவன் “லவ் யூ வெண்ணிலா”என்றான் அவள் விழிகள் நோக்கி.
   
    அவன் விழி வீச்சில் எண்ணங்கள் தடைபட்டவளாய் “என்ன திடீர்னு”தடுமாறி பேச
   
    “விபரம் தெரிந்த வயசில் இருந்தே சண்டை போட்ட ஒருத்தி எனக்காக என் கூடவே இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை”என்றான் ஆத்மார்த்தமான குரலில்.
   
    “ஹ்ம்ம்”என்றவள் வேறெதுவும் பேசிடாமல் இருக்க மென்மையாக அணைத்தவனின் செயல்கள் வன்மை காட்டத் துவங்கின.
   
   
    மனதின் இறுக்கங்கள் தளரவும் அவள் நெருக்கம் தந்த தைரியத்தில் அவளை ஆட்கொண்டான் மேகவர்மன்.
   
   
    மேகத்தில் மறைந்து கலந்தது அவனின் வெண்ணிலவு.
   
   
    ….. தொடரும்