மங்கையின் பேச்சு அனைவருக்குமே எரிச்சல் மூட்டியது.

    “ஜாதகத்தில் சரி இல்லைன்னா நடந்த கண்ணாலத்தை இல்லன்னு சொல்லிருவியா நீ‌… புரியாம பேசக் கூடாது மங்க”என்று வேலனின் சித்தப்பா நேரடியாகவே அதட்டி விட்டார்.

    “மங்கை பசங்களோட நல்லதுக்கு தானே மாமா சொல்றா”மனைவிக்கு பரிந்து கொண்டு வந்தார் மங்கையின் கணவர் தர்மதுரை.

    “இதுவும் நல்லதுக்குத்தான் மருமவனே. அவங்க ரெண்டு பேரும் புரிஞ்சு வாழ வேணாமா…”

    “நல்ல நேரம் எதுவும் பாக்காம”என்று அடுத்ததாய் ஆரம்பிக்க

    “என்னிய பேச வைக்காத கண்ணு இன்னிக்கு நீ பாத்த பொண்ணோட கண்ணாலம் நடந்திருந்தாலும் இந்நேரத்துக்கு ரூமுல விட்டு இருக்கோணும். சும்மா பேச்சை வளத்தீட்டு போக்கூடாது”என்று சலித்தவர் “ஏ கண்ணு வேதா, நீயி போ மாசமா இருக்கப் புள்ள என்ன வரைக்கும் முழிச்சுக் கெடக்கும்”என்று அதட்டி அடுத்தடுத்து துரித கதியில் நடத்தி இதோ மேகவர்மனோடு மாடியறையில் தனித்து விடப்பட்டாள் வெண்ணிலா.

    இருவருக்குமே இந்த தருணத்தை ஏற்க தயக்கமாகத் தானிருந்தது. என்ன பேசுவது என்ன கேட்பது என்று இருவருக்கும் புரியவில்லை. ஏடாகூடமாக கேட்டு அது வழக்கம் போல சண்டையில் முடிந்து விட்டால் முதல் நாளேவா இனிமேலாவது சண்டை சச்சரவு இன்றி சுமூகமான நிலையில் இருக்கப் பழக வேண்டும் இல்லை என்றால் வாழ்க்கையை ஓட்டுவது கடினம் என்று ஆயிரம் யோசித்தனர் இருவரும்.

    “பார்த்துக்கோ நிலா”என்று வேதா சொல்லி விட்டுச் செல்ல கதவருகில் நின்றிருந்த வெண்ணிலாவிற்கு உள்ளே செல்வதற்கே அத்தனை தயக்கம்.

    மேகவர்மன் அவளைப் பார்த்தானே ஒழிய வாவென்றும் அழைக்கவில்லை. அவன் தான் தனி சிந்தனையில் உழன்றானே எங்கிருந்து அவளை அழைக்க

‘நாமளா தான் உள்ள போகணுமோ இவன் ஏன் இப்படி பேயடிச்ச மாதிரி நிக்கிறான்’என்று யோசித்தபடி அவளும் அங்கேயே தான் நின்றாள்.

    ம்ஹூம் இங்கேயே நின்னா இப்படியே நிற்க வேண்டியது தான் என்று எண்ணியபடி ஒரு வழியாக கதவைத் தாழ்ப்பாள் போட அப்போது தான் சுயம் வந்தவன் “ம்ம்க்கும்”என்று குரலை கனைத்தபடி அவளருகில் வந்தான்.

    இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் “இதைக் குடுக்க சொன்னாங்க”என்று பால் சொம்பை நீட்டினாள் பதற்றத்துடன் ‌

  “இது இது எதுக்கு”என்றவன் அங்கிருந்த மேசையில் வாங்கி வைத்து விட்டு அடுத்து என்ன சொல்ல என்று புரியாமல் நிற்க

    இருவருமே ஒரே குரலில் “மாட்டேன் னு சொல்லி இருக்கலாமே”என்று சொல்ல சட்டென்று இருவரின் அதரங்களிலும் புன்னகை முகிழ்ந்தது.

    “சாரி”இருவரும் மீண்டும் சேர்ந்தே உரைத்தனர்.

    “உட்கார் நிலா”என்றவன் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கொண்டான்.

    “இல்ல ரொம்ப தூக்கம் வருது கண்ணெல்லாம் ஒரு மாதிரி எரிச்சலா இருக்கு”என்று தயங்கிப் பேசிய வெண்ணிலா அவனுக்கு புதிதாகத் தெரிந்தாள்.

    வழக்கமாய் வம்பு செய்பவன் இவளின் இந்த பரிணாமத்தில் சற்று தணிந்து “ஓகே தூங்கு”என்று எழுந்து கொள்ள

‘ஒரு வேளை கீழே பாய் விரித்து தூங்குவானோ?’ என்று யோசித்தவள்”பரவாயில்லை பெட்ல தூங்கு…ங்க ஃபார்மாலிட்டி வேணாம். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ஏன் கீழ படுத்துட்டு” என்று சொல்ல நக்கலாய் அவளிடத்தில் “ஹ்ஹான் அப்புறம்… நான் எப்போ கீழே தூங்கறதா சொன்னேன்? அந்த நினைப்பு வேறயா உனக்கு. ஏதோ பாவம் பார்த்து எழுந்து வழி விட்டேன். இந்த கனவு எல்லாம் இங்க காணாத. மேரேஜ் ஆகுதுன்னா ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம்னு தெரியும் தானே. சீன் போட நான் ஆள் இல்லை”என்றான்.

   அவனின் இந்த பேச்சில் கோபம் கொண்டவளோ “அதானேப் பார்த்தேன் வந்ததும் பாசமா நிலானு கூப்பிடவும் மேரேஜ் ஆனதால மாறிட்டியோனு நினைச்சேன். ஆனா நீயெல்லாம் திருந்தாத கேஸ்”என்று சொல்லி விட்டு படுத்து விட்டாள்.

   “இவளை”என்று முனகியவன் “அதான் தெரியுதே அப்புறம் ஏன் வீட்ல சொன்னதும் கல்யாணம் பண்ணிக்கிட்ட? முடியாது னு போக வேண்டியது தானே?!”என்று அவளைத் தன் பக்கம் இழுத்து சண்டையிட

    “ஏன் அதை நீங்க செய்ய வேண்டியது தானே… சும்மா என்னை கேள்வி கேட்டுட்டு”என்று காய்ந்தவள் “சீரியஸ்லி ஐம் ஸோ டயர்ட் ப்ளீஸ்”என்றபடி அவனுக்கு முதுகு காட்டியபடி கண்களை மூடிக் கொண்டாள்.

    “இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இது போல திருப்பி பேசின அவ்வளவு தான் பழைய மாதிரி சண்டை போட பாஞ்சிட்டு வரன்னு மல்லுக்கு நின்ன அவ்வளவு தான் பார்த்துக்கோ”என்று எச்சரித்து விட்டு அவனுமே படுத்து விட்டான்.

    விழுக்கென எழுந்து அமர்ந்தவள் “நான் நானா சண்டை போடறேன்”என்று அவனிடம் சண்டைக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள்.

    “ப்ம்ச் அப்போ இப்ப பேசறதுக்கு பேர் என்ன”

    “நீங்க சொன்னதுக்கு பதில் சொல்லிட்டு இருக்கேன் நான்”

    “அதை இவ்வளவு ஹார்ஷா தான் சொல்வியா…”

    “இதுவே ஹார்ஷா எனக்கு இப்படி தான் பேச வரும் ஏன் உங்களுக்கு தெரியாதா”வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசுபவளை அடக்க வழி தெரியாமல் விழி பிதுங்கினான் மேகன்.

    “உன் கிட்ட எது பேசினாலும் வேஸ்ட் என்ன பேசினாலும் வேஸ்ட்”என்று முனகியபடி அவனும் படுத்து விட ஏற்கனவே தூக்கம் இல்லாமல் இருந்தவள் வேறெதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டாள். எரிச்சல் அடங்கியதே தவிர தூக்கம் இம்மியளவும் வரவில்லை.

    ‘நல்ல வேளை ஹெவியான கதவு உள்ள ரூம் பேசின எதுவும் வெளியே கேட்காது. மாடின்றதால யாரும் வரவும் இல்லை’என்ற நிம்மதியோடு உறங்கிப் போனான் மேகன்.

    ‘ஒரு நாள் ல உன் லைஃபே மாறிடுச்சு நிலா. இன்னைக்கே இவ்வளவு சண்டை இன்னும் போகப் போக ஹப்பா நினைச்சாலே மூச்சு முட்டுதே’என்று யோசித்தபடியே படுத்திருந்தவள் ஒரு கட்டத்தில் உறங்கியும் போனாள்.

    அதிகாலை நேரத்தில் வழக்கம் போல விழிப்பு தட்டியவளுக்கு உடல் உபாதையை கழிக்க கழிவறை எங்கே என்று தேட வேண்டி இருக்க உறங்கும் வர்மனைத் தாண்டி போக முயற்சித்தாள்.

    “ப்ப்ச்”என்று சலிப்பாய் அசைந்தவன் அவளின் கொலுசு சத்தத்தில் எழுந்து விட்டான்.

    ஒரு நிமிடம் அந்த சூழலை கிரகிக்கவே முடியாமல் கண்களைத் தேய்த்து பின் “என்ன வெண்ணிலா”என்றான்.

    அவளுமே இரவில் நடந்த சண்டையை ஒதுக்கி விட்டு “வெளியே போகணும்”என்றாள் மெல்லிய குரலில்.

    “இந்த நேரத்தில் எதுக்கு? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன்” என்றவன் மீண்டும் கண்ணை மூட

    “ப்ம்ச் எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும்”என்று தயக்கம் உடைத்து சொல்லியவாறு காலை மாற்றி மாற்றி வைத்தாள் அடக்க முடியாமல்.

    “ஷ்ஷ்ஷ் ஓகே ஓகே போயிட்டு வா”என்றவன் “இல்ல இல்லை நீ வா நானும் வர்றேன்”என எழுந்து கதவைத் திறந்தான்.

    வீடே இருளில் மூழ்கி இருக்க மின் விளக்கைப் போடாமல் “கொலுசு சத்தம் கேட்காம மெதுவா வா யாராச்சும் முழிச்சுடப் போறாங்க”என்றவன் படிகளில் இறங்கவும் அவன் பின்னே பூனை நடையில் நடந்தாலும் அவசர அழைப்பு இங்கிருந்து ஓடு என்று உந்தியது.

    “ஸ்ஸ்ப்பா எல்லாரும் கூடத்திலேயே படுத்துட்டாங்க போல என் தோளைப் புடிச்சுட்டே வா வெண்ணிலா விழுந்து வச்சிடாத”என்று கிசுகிசுத்தவன் அவளின் கைகளை தன் தோள் மீது பொருத்தி பிடித்துக் கொண்டே முன்னே நடந்தான்.

    அவர்கள் மேலிருந்து வரும் போதே வேலனின் சித்தி விசாலம் எழுந்து விட்டார்.

    “பேரன் சமத்து தான்”என்று கண் விழிக்காமல் புன்னகையோடு சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டார்.

    “இந்த ரூம் தான் போ.”என்றவன் அங்கேயே நின்று கொண்டான்.

    “லைட் போட்டு விடுங்க. இங்கே ஸ்விட்ச் இல்லை”என்றதும் ஸ்விட்ச் பாக்ஸை தேடிப் பிடித்து போட்டவன் அங்கிருந்த கல்பலகையில் அமர்ந்து கொள்ள சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து “நீங்களும் போயிட்டு வந்திடுங்க”என்றாள் ஆசுவாசமாக.

    அவனும் தன் வேலையை முடித்து விட்டு வர இருவருமாக வீட்டினுள் செல்ல அதன் பின்னரே விசாலம் எழுந்து வந்தார்.

    **********

    “மறுபடியும் தூங்கறதுனா தூங்கு.”என்று சொல்ல

    “தூக்கம் வராது அவ்வளவு தான். குளிக்கறதுக்கு போகணும் ஆனா அண்ணி அதுக்கு நான் வந்து எழுப்பின பிறகு வரணும் னு சொன்னாங்க”என்றாள் கொட்டாவி விட்டபடி.

    “ஹ்ம்ம்”என்றவன் மெல்லிய தயக்கத்துடன் “உங்க வீட்டில் நீ இந்த கல்யாணம் வேண்டாம் னு சொல்லி இருக்கலாமே”என்றான் தன்மையாக.

    அவள் பேச வாயெடுக்கும் போதே “நீ ஏன் சொல்லலைனு மறுபடியும் ஆரம்பிக்காதே. நான் எவ்வளவு சொல்லியும் என் மண்டையை கழுவிட்டாங்க என் அம்மா”என்றான்.

    “இங்கேயும் அதே தான். வரு ஆன்ட்டி கண்ணெல்லாம் கலங்கி வந்து நிற்கும் போது என்னால மறுத்து பேச முடியலை. என் அம்மா அப்பாவுக்கு நான் அவங்க சொன்னா மறுக்க மாட்டேன்னு நம்பிக்கை, இத்தனை நாளும் அப்படி தான் நானும் இருந்தேன். திடீர் னு மறுத்தா அது அவங்களுக்கு அவமானம் தானே. அதனால ஒத்துக் கிட்டேன்”என்று கூற

    “அது சாதாரண விஷயங்களுக்கு வெண்ணிலா இது உன் லைஃப் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் நீ யோசிச்சு இருக்கலாம்”என்றதும் “எப்படியும் எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க. யாரோ ஒரு தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசு மேல்னு ஓகே சொல்லிட்டேன்”என்றாள் கிண்டலாக. ஆனாலும் மனதில் இந்த யோசனை தோன்றாமல் இல்லை அவளுக்கு. வரலக்ஷ்மியின் அந்த கண்ணீர் முகமும் மன்றாடலும் அவளை வேறெதுவும் சிந்திக்க விடவில்லை. அதை விட அவள் பெற்றோரின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பு பரிதவிப்பு எல்லாம் சேர்ந்து அவளை ஒப்புக் கொள்ள வைத்தது. வெண்ணிலாவின் திருமணத்தை எப்படி எல்லாமோ நடத்த வேண்டும் என்ற கனவு அகிலா நரசிம்மன் இருவருக்குமே இருக்க இப்படி ஒரு அவசர திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார்கள் என்றால் அது நிச்சயம் வேலவனுக்கும் வரலக்ஷ்மிக்காக மட்டும் தான் இருக்கும் என்று அவளுக்கு நன்றாகப் புரியவே எது வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்ற தீர்மானத்தோடு தான் சம்மதித்தாள்.

    “ஓஓஓ”என்றவன் அவள் கூறியதை உணர்ந்த நொடி “அடிங்”என்று கையை ஓங்கி விட்டான்.

    “உராங்குட்டான்”என்று முனகி மூக்கை விடைத்தவளை முறைத்து விட்டு திரும்பிக் கொள்ள “அமோகமான காலை”என்று சொல்லிக் கொண்டாள்.

“ஆமாமா”என்றான் அவனும்

    அதற்குள் கதவுத் தட்டப்படவே “நீ இரு நான் திறக்கிறேன்”என்று எழுந்தவனைப் பிடித்து நிறுத்தியவள் “அம்மா நான் தான் திறக்கணும்னு சொல்லி அனுப்பினாங்க”என்று வேகமாய் எழுந்து போய் திறக்க மீனா தான் நின்றிருந்தாள்.

    “வேதாக்கா அசந்து தூங்குது போல நிலா. அதான் நான் வந்தேன்”என்றவள் “எங்க தம்பி தூங்குதா?”என எட்டிப் பார்க்க வர்மன் குப்புறப் படுத்துக் கிடந்தான்.

    ‘உலக மகா நடிப்பு டா சாமி’என்று எண்ணியபடி நிற்க

    “செரி செரி தம்பிய எழுப்பி வுட்டுட்டு நீ துப்புட்டி எல்லாம் சுருட்டிக் கொண்டுட்டு வா. நான் அந்தா அங்க நிக்குறேன்”என்று நகர, மீனா சொல்லியது போலவே செய்தவள் வெளியே வந்தாள்.

    அவர்களைத் தாண்டிக் கொண்டு வர்மன் செல்லவுமே வேதாவின் கணவன் மேலே வந்து “மச்சான் என் கூட வா. குளிக்கறதுக்கு போ சொன்னாங்க”என்று அழைத்துச் சென்று விட்டான்.

    “நீ வா கண்ணு”என்ற மீனாவோ “இக்கட்ட சாட மாடையா கேப்பாங்க. எது கேட்டாலும் கொஞ்சமா வெட்கப்பட்ட மாதிரி தலையை குனிஞ்சு பாவலா காட்டிட்டு விட்ரு எல்லாத்துக்கும் பதில் சொல்லணும் னு இல்லை”என்றாள் ‌

    “சரிங்க மதினி”என்றவள், “நீங்க அந்த மொறை தான.?”என்றும் கேட்க

    “ஆமா பொண்ணு. நா ஒனக்கு நாத்தி மொறைதேன்.”என்ற மீனா அடுப்பில் கிடந்த தண்ணீர் பானையை தூக்கி வந்து உள்ளே டப்பில் கலந்து வைத்தாள்.

    “ஒனக்கு தக்கன தண்ணி வெளாவிக்க. மறக்காம தலைக்கு ஊத்திரு சரியா. இப்ப சொல்லலாமானு தெரியல. ஆனாலும் சொல்றேன். புருஷன் பொண்டாட்டியா இருந்தீங்கன்னா மறக்காம தலைக்கு ஊத்திடணும் என்ன… காலையில் வெள்ளென குளிச்சிடு, படிச்ச புள்ள உனக்கு தெரியாம இருக்காது இருந்தாலும் சொல்லணும்ல . அது மாதிரி “என்றவள் இன்னும் சில விஷயங்களை விளக்கி தெளிவுபடுத்தி விட்டு அவள் குளித்து முடித்து வரும் முன்பே அவர்கள் பயன்படுத்திய போர்வை தலையணை உறை என்று எல்லாம் அலசி போட்டிருந்தாள் மீனா.

    “நாஞ்செஞ்சிருப்பேனே மதினி”என்று தயக்கம் காட்டியவளிடம் “இதுவும் ஒரு சடங்கு தான் நிலா. எங்க கெழக்கத்தி சீமையில இந்தப் பழக்கம் தான்”என்றாள் சிரிப்புடன்.

    அவர்கள் குளித்து முடித்து விட்டு வரும் போதே மேகனும் அக்கா கணவனோடு வந்து விட்டிருக்க அதற்குள் வீட்டு சொந்தங்களால் பரபரப்பானது. காலை உணவை முடித்துக் கொண்டு நேராக நரசிம்மன் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டு பின் அன்று மாலையே சென்னை செல்ல திட்டமிட்டனர் வேலவனும் வரலக்ஷ்மியும்.