வெண்ணிலா திருதிருவென விழித்துக் கொண்டு தன் பெற்றோரைப் பார்க்கவும் அண்ணனைத் தேடவுமாக இருக்க மேகவர்மனுக்கே ஒரு நொடி பாவமாக போனது.

    

    

    எல்லோரும் சொல்றாங்கனு இந்த முடிவு எடுத்திருக்கக் கூடாதோ வெண்ணிலா கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமோ என்று காலம் கடந்து யோசித்தவன் நொடியில் அந்த சிந்தனையை உதறி விட்டு இயல்பாய் அமர்ந்தான்.

    

    இருவரின் பெற்றோரும் மன நிறைவுடன் நின்றிருக்க மங்கை முள் மீது நிற்பது போல் நின்றார்.

    

    

    நிமிடத்தில் எல்லாமும் மாறிவிட்டதே என்ற ஆதங்கத்துடன் தம்பியைப் பார்க்க, அவரோ மகனை விட்டு விழியகற்றவில்லை. 

    

    “அவங்க எங்க?”என்று தயக்கத்துடன் வேதாவிடம் கேட்க 

    

    “எவங்க?”என்றாள் புரியாமல் 

    

    

    “அதான் கல்யாணப் பொண்ணு வேதாக்கா”என்றதும் மேகவர்மன் சட்டென அவளைப் பார்த்தான்.

    

    

    வேதா தயக்கத்துடன்,”அந்த பொண்ணு”என்றவள் மேகனின் பார்வையில் “அப்புறம் சொல்றேன் நிலா”என்றாள்.

    

    ‘பொண்ணு மாறிடுச்சாம். வால்பாறையில் ஏற்கனவே பழக்கப்பட்ட குடும்பமாம் அவங்களும் இவங்க ஆளுங்க போல உடனே கல்யாணம் நடத்திட்டாங்க.’

    

    ‘கல்யாணப் பொண்ணு எங்க…லவ் மேட்டரா ஓடிட்டாளா…ஓடினவ முன்னாடியே போய்த் தொலைக்க கூடாது. அந்த பையன் பாவம் நல்ல வேளை உடனே பொண்ணு அமைஞ்சிடுச்சு இல்லாட்டா என்ன செய்வாங்க காலத்துக்கும் இது கெட்ட பேர் தானே’

    

    ‘மாப்ளைக்கு எதுவும் குறையோ அதை மறைச்சு பண்ணி இப்ப அது தெரிஞ்சு ஓடிருச்சோ பொண்ணு’

    

    ‘அப்படி எல்லாம் இருக்காது அப்படி இருந்தால் இவங்க ஏன் பொண்ணு தரப் போறாங்க’

    

    என்று பல முனகல்களும் முணுமுணுப்புகளும் வலம் வந்தாலும் பந்தியில் ஆட்களும் குறைவில்லை மண்டபத்தில் சலசலப்பிற்கும் பஞ்சமில்லை.

    

    “ம்மா எப்போ மண்டபத்தை விட்டு கிளம்புவோம்?”தாலி கட்டிய சிறிது நேரத்தில் எல்லாம் கேட்டு விட்டான் மேகவர்மன்.

    

    அவனுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை.  உறவினர்களின் குறுகுறு பார்வையும் முணுமுணு பேச்சும் எரிச்சலை தான் தந்தது.தீபாவை நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவளது பெரியம்மாவை பழி வாங்க இப்படியா தன்னை பலி ஆக்குவாள் என்று தான் தோன்றியது. ஆனாலும் மறுபக்கம் அவளது சொந்தங்கள் குழப்பி விடவும் தானே இப்படி போய் விட்டாள் என்றும் தோன்றாமல் இல்லை. அவளது நினைவைப் புறம் தள்ளி விட்டான். தான் இத்தனை கூறியும் அடிப்படை நம்பிக்கை இல்லாது இருப்பவள், எப்படி காலம் முழுவதும் தன்னோடு வாழ்வாள் போனதே பரவாயில்லை என்று தான் தோன்றியது அவனுக்கு. ஆனாலும் வெண்ணிலாவோடு தன் வாழ்வு நினைக்கையிலேயே கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது வர்மனுக்கு. 

    

    

    ‘எந்த ஆங்கிள்ல எங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரியா இருக்கும்னு இந்த அப்பாவும் அம்மாவும் யோசிச்சாங்க.ரெண்டு பேரும் சாதாரணமா மீட் பண்ணாலே சண்டை தான் போடுவோம்.’என்று எண்ணியவனிடம் ‘நீ எந்த ஆங்கிள்ல யோசிச்சு சரின்னு சொன்ன?’என்று கேள்வி கேட்டது அவன் மனம்.

    

    ‘அதுதானே தெரியலை. மந்திரிச்சு விட்ட மாதிரி ஓகே சொல்லிட்டேனே ஆமா அவ எப்படி சம்மதிச்சா?’ என்று எண்ணிக் கொண்டே வீட்டினர் சொல்லிய சடங்குகளை எல்லாம் மறுக்காமல் வெண்ணிலாவோடு செய்தான்.

    

    

    “நல்ல வேளை அகிலா. பாப்பாவை பார்க்க வந்த மாப்ளைக்கு வேற இடம் தகைஞ்சதால இங்கே வரலைன்னு சொல்லிட்டாங்க இல்லாட்டா அவங்க முன்னாடி ரொம்ப சிரமமா போயிருக்கும்”என்ற நரசிம்மன்”ஏன் அகி, பாப்பா நம்ம மேல கோபமா இருப்பாளோ” என்றார் மணமேடையில் இருந்த மகளைப் பார்த்தபடி.

    

 

    “நம்ம உறவுக்காரங்க கிட்ட என்னங்க சொல்றது எப்படி அழைக்கறது”என்று அகிலாவின் கவலை வேறாக இருந்தது.

    

    “உன் அண்ணன் வீட்டில் பேசணும் எனக்கு என் அண்ணன் தம்பிங்க கிட்ட சொல்லணும் அவ்வளவு தானே பேசிக்கலாம் விடு. பத்து பதினைந்து வருஷமா பழகி இருக்கோம் வேலன் வந்து கேட்கும் போது மறுக்க முடியலை அகி. உன்னாலையும் தான் வரலக்ஷ்மி கிட்ட மறுத்து பேச முடிஞ்சதா”என்ற கணவனின் கேள்வியில் அமைதியானார் அகிலா.

    

    எல்லாம் சரி தான் ஆனால் மகளின் மனநிலை. நொடியில் முடிவெடுத்து மகளை திருமணம் செய்து வைக்க சம்மதித்து விட்டாலும் மகளுக்கு இந்த திடீர் திருமணம் எவ்வளவு அதிர்வாக இருக்கும் அதை எப்படி கடந்து வருவாள். என்று யோசித்தவர் ‘என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும் கடவுளே’என வேண்டிக் கொண்டார்.

    

    அவருக்கு கவலை எல்லாம் மகள் இந்த அதிர்ச்சியை எப்படி கடந்து வருவாள் என்பதில் தானேத் தவிர மற்றபடி மேகவர்மனோடு அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஏனெனில் மேகவர்மன் மீது அவருக்கு இருந்த அபார நம்பிக்கை அந்த சிந்தனைக்கே கொண்டு செல்லவில்லை. 

    

    

    “நல்ல நேரம் வந்திடுச்சு அகிலா. பிள்ளைகளை கூட்டிட்டு கிளம்புவோம்”என்று வரலக்ஷ்மி வந்து கூறவும் அடுத்து வேலைகளை கவனித்தனர்.

    

    “மாமா மண்டபத்துக்கு செட்டில் பண்ணனுமே. மேனேஜர் யார் னு சொல்லுங்க”என் சஞ்சய் வரவும் 

    

    வேலவன் “பணம் எல்லாம் தந்தாச்சு சஞ்சய் நாம் கிளம்ப வேண்டியது தான் பாக்கி.”என்றவர் மண்டபத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்துக் கொண்டார். 

    

    விடியற்காலையில் இருந்த ஜோடனை எல்லாம் கலைக்கப்பட்டு இயல்பு நிலைக்கு மாறிக் கொண்டிருந்தது மண்டபம். நேரம் முடிந்ததுமே ஏசி முதற்கொண்டு அனைத்தையும் அணைத்தார்கள் அங்குள்ள வேலையாட்கள். 

    

    

    மணமகன் அறையில் மேகவர்மனும் மணமகள் அறையில் வெண்ணிலாவும் இருந்தனர். வெண்ணிலாவின் அருகில் வேலவனின் சித்தியும் அவரின் மகள் மருமகளும் இருக்க அமைதியாக அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. ஏதோ சிறைக்குள் அடைத்த உணர்வு அவளுக்கு.

    

    “அம்மணி என்னடா திடுதிப்புனு கண்ணாலம் நடந்து போச்சேனு நெனைக்காத. நீயி எம்மவன் குடும்பத்துக்கு அம்புட்டு நல்லது செஞ்சிருக்க தெரியுமா”என்றார் வேலனின் சித்தி. 

    

    

    புரியாமல் விழித்தவளிடம் “அந்த மங்கை ஒரு வெடுமணி துர்க்குணி அம்ணி. அது கொணமே ஒரு கோக்குமாக்கு கொணம் இந்த குடும்பத்தை ஆட்டி வெச்சவிய. அது பாத்த பொண்ணு இந்த குடும்பத்துக்கு வாராம நீ வந்ததைத்தான் அத்த நீ செஞ்ச நல்லது னு சொல்றாங்க ஏனுங்கத்த நாஞ்சொல்றது சரிதானுங்களே”என்ற மருமகளை நெட்டி முறித்து “எம்பட மருமவ என்னிக்கு தப்புத் தவறா பேசி இருக்கா.”என்றார் சிரித்தபடி.

    

    

    “ஒண்ணு சொல்றேம்மணி. எங்க வருமனுக்கு தங்கமான கொணம். வாயைத் தெறந்து நாலு வார்த்தை னாலும் நறுக்கு தெறிச்சா மாதிரி பேசும். வளவளனு பேசாது சாது”என்றதும் வெண்ணிலா விழிகள் தெறிக்கும் அளவிற்கு பார்த்தாள் அவர்களை.

    

    

    ‘ஏதே அவனா சாது. சரியான ட்ரம்செட் வாயைத் தொறந்தா மூடாத ஸ்பீக்கர். அவனுக்கு போய் இப்படி ஒரு நல்ல பேரா’என்று மனதினுள் தான் புலம்பிக் கொண்டாள் பாவம்.

    

    

    இங்கோ வர்மனின் நண்பர்கள் வேறு “அந்த பொண்ணைப் பார்த்தா அப்பாவியா இருக்கு வர்மா. உன்னை நம்பி உடனே பொண்ணு தந்திருக்காங்க. பத்திரமா பார்த்துக்கோ.”

    

    ‘அவ அப்பாவி நீ பார்த்த. போடா டேய் அவ வால்பாறையை வால்மார்ட்டுக்கே வித்துடுவா…ஏதோ மூஞ்சியை அப்படி வச்சிருக்கா. அப்படி எல்லாம் நம்பாதீங்கடா டேய்’என மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் வெளியே மையமாய் தலையாட்டி வைத்தான்.

    

    

    “மச்சி அந்த பொண்ணுக்கு டைம் தேவைப்பட்டா கண்டிப்பாக குடு. இதை எல்லாம் ஏத்துக்க டைம் தேவைப்படும்”நெருங்கிய நண்பன் ஒருவன் சொல்ல

    

    

    ‘டைம் தானே… நான் தானே அதை தர நீ யாருடா வென்று னு திட்டுவா. உஷ் இவனுக வேற கம்முனு இருங்கடா’என்றெண்ணியபடி “கண்டிப்பாக மச்சி”என்றான்.

    

    

    “ஒரு நிமிஷம் டா”என்று கழிவறை நோக்கி மேகன் நகர நண்பர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

    

    

    “அந்த பொண்ணை விட இந்த பொண்ணு இவனுக்கு பொருத்தமா இருக்குல்லடா. முன்னாடியே இந்த பொண்ணை பேசி முடிச்சு இருக்கலாம் இவங்க. ஒரே கேஸ்ட் தான் போல.”என்று சொல்லிக் கொள்ள உள்ளே வர்மனுக்கு சிரிப்பு வேறு வந்தது. 

    

    

    “உங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம் டா. ஏன்டா இப்படி அடிச்சுக்கிறீங்க”சஞ்சய் சலித்துக் கொண்ட நினைவெல்லாம் வந்து போனது.

    

    ‘எப்படி எங்க லைஃப் போகுமோ’என்று பெருமூச்சுடன் வெளியே வந்தான்.

    

    சஞ்சய் வந்து “கிளம்பலாம்”என்றிட நண்பர்கள் குழாமுடன் தன் பெட்டியோடு வந்தான் மேகன். அவனுக்கு முன்பே நின்றிருந்தாள் வெண்ணிலா. முகத்தில் சலிப்பை விட பெண்ணுக்கு சோர்வு தான் அதிகம் இருந்தது. வேதா அவளின் கையைப் பிடித்திருந்தவள் விடவே இல்லை. சிறு பிள்ளையாக இருக்கும் போது தன் அக்கா எப்படி அவள் கையைப் பிடிக்கலாம் என்று சண்டையிட்ட நினைவு வந்து ஒட்டிக் கொள்ள இப்போதும் சிறு கோபம் தான். அவன் பார்வை குறுகுறுப்பு உண்டாக்கியது போலும்.சட்டென நிமிர்ந்தவள் மேகவர்மன் வேதா பிடித்திருந்த கையைப் பார்த்துக் கொண்டிருக்கவும்,’இவன் திருந்தவே மாட்டான்’என்று முனகிக் கொண்டாள்.

    

    ‘போடி அது என் அக்கா’இப்போதும் அதே ஊடல் தான் அவனுள்.

    

    முதலில் மேகவர்மன் வீட்டிற்கு சென்று விளக்கேற்றி விட்டு பாலும் பழமும் கொடுக்க இருவருமே முகத்தை ஒரு வாக்கில் சுளித்தனர்.

    

    

    “ம்மா”என்று வெண்ணிலா பரிதாபமாக அகிலாவைப் பார்க்க அங்கே மேகவர்மனும் அதே முகபாவனையில் வரலக்ஷ்மியைப் பார்த்தான்.

    

    இருவருமே வெறும் பால் மட்டும் குடிக்க மாட்டார்கள். அதனால் இந்த பார்வை.

    

    “உங்க ரெண்டு பேரையும் எங்களுக்கு தெரியாது பாரு. எல்லாம் ஹார்லிக்ஸ் போட்டு தான் தந்திருக்கேன் குடிங்க”என்று வேதா அதட்டவும் அசடு வழிய சிரித்து விட்டு ஆளுக்கு பாதியாக குடித்தனர்.

    

    

    “சூடே இல்ல வேதாக்கா..”இருவரும் ஒரே குரலில் சொல்ல அங்கே அத்தனை பேரும் சிரித்திருந்தனர்.

    

    “அதுசரி சோடிப் பொருத்தம் நல்லா தான் இருக்கும் போல. ரெண்டு பேருக்கும் இதுலயே ஒத்து போகுதே”என்று பக்கத்து வீட்டு பத்மா புன்னகைத்தார்.

    

    ‘ஒத்துப் போகுதா எங்களுக்கா’இருவர் மனதிலும் அதே கேள்வி தான். 

    

    “சரி சரி வால்பாறை போயிட்டு உடனே திரும்பணும் வேற கிளம்பலாமா”என்றதும் அகிலாவே, “அவ்வளவு சீக்கிரம் வந்திட முடியுமா வரு. பேசாமல் நாளைக்கு ஒரேதா பொண்ணு மாப்பிள்ளை அழைச்சு விருந்தும் ஏற்பாடு செஞ்சுட்டா உன் விருப்பம் தான் நீ சொல்லு”என்றிட வேலவனின் சித்தப்பா “எய்யா வேலா கடலு மாதர வீடு அங்கன இருக்கையில அதுவும் பரம்பரை வீடு அங்கே தான் நீயி மங்கை எல்லாம் பொறந்தீங்க. மறுவீடு போனதும் அங்கே வந்து தங்கட்டும் கண்ணு என்ன மருமவளே சொல்லு”என்றார் ஆவலாக.

    

   இவர்கள் தடுமாற்றமாய் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மங்கை ஒப்பாரியும் சத்தமான பேச்சுமாய் வெடுக் வெடுக்கென்று உள்ளே வந்தார்.

    

    

    …… தொடரும்.