“ரொம்ப தான் பில்டப் தர சஞ்சு அண்ணா” என்றவள் மண்டப வாசலில் இருந்த பெயரைக் கூட கவனிக்கவில்லை.

    

    பாட்டுச் சத்தமும் மக்கள் சத்தமும் இணைந்து ஹைடெசிபலில் ஒலிக்க முகத்தைச் சுருக்கி கொண்டே தன் அண்ணனோடு நடந்தாள்.

    

    

    “ஃபங்ஷன் ஆரம்பிச்சுட்டாங்க போல நிலா. சீக்கிரம் வா பொண்ணு மாப்பிள்ளையை பார்த்திட்டு வந்திடலாம்”என்று அவளை யோசிக்க விடாமல் சஞ்சய் இழுக்க மணமேடையை நெருங்கிய பின்னர் தான் மணமகனைப் பார்த்தாள்.

    

    ‘அச்சோ இவனா மாப்பிள்ளை? என்ன கெரகம் டா இது? டேய் அண்ணா இப்படி பழி வாங்கிட்டியே இவனுக்கு தான் கல்யாணம் னா நான் வந்தே இருக்க மாட்டேனே’ என் மனதில் புலம்பிக் கொண்டே கையில் இருந்த பரிசுப் பொருளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு வேறு வழியின்றி மேடை ஏறினாள். 

‘வாடி என் வால்பாறை வானரமே’ மேடையேறி வந்தவளை நக்கலாய் பார்த்தபடி மணப்பெண்ணுடன் நின்றிருந்தான் மேகவர்மன்.

    

    ‘அதிசயமா வந்திடுச்சு வானரம் ‘என்று நகைத்துக் கொண்டான்.

“கங்கிராட்ஸ் வர்மா. கங்கிராட்ஸ் சிஸ்டர் ,ஜோடி பொருத்தம் சூப்பர்” என்றபடி கை கொடுத்தான் சஞ்சய்.

“தேங்க் யூ சஞ்சய்.” என்றவன் அருகில் இருந்தவளைக் கண்டு கொள்ளாமல் புகைப்படத்திற்கு நிற்க

‘திமிர் பிடிச்ச தேவாங்கு ஆளைப் பாரு நான் வந்தது இவனுக்கு தெரியலையாமா ஓவரா பண்றான் ஓசிடி வந்த உராங்குட்டான்’ என்று முனகிக் கொண்டே பரிசுப் பொருளை தராமல் நிற்க

“நிலா கிஃப்ட் குடும்மா” என்றான் சஞ்சய்.

“ஓஓஓ வெண்ணிலாவும் வந்திருக்காங்களா? நான் பார்க்கலை சஞ்சய். ஹாய் வெண்ணிலா “என்றான் வேண்டும் என்றே சிரித்தபடி 

“பார்த்திருக்க முடியாது ஏன்னா அவ்வளவு அழகான பொண்ணு பக்கத்தில் இருக்கும் போது மத்தவங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்களே சிஸ்டர் யூ லுக் ஹார்ஜியஸ் பட் இந்த ஐ மீன் இவரை எப்படி செலக்ட் பண்ணீங்க னு தெரியலை ஸோ சேட்” என்றாள் வருத்தமாய் கூறுவது போல.

மணப்பெண்ணோ வெட்கத்தை டன் கணக்கில் வாரிக் கொடுத்தாள்.

    

    அவளையும் இருவருக்கும் அறிமுகம் செய்து விட்டு புகைப்படத்திற்கு நிற்க 

கேமராமேன்”பிக்சர் ஓகே” என்றதும் நகரப் போக வர்மன் நிலாவை முறைத்தபடி நின்றான்.

அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் செல்ல,” திமிர் பிடிச்சவ கொஞ்சம் கூட பயமே கிடையாது. அது சரி அவ ஏன் பயப்பட போறா” என்று முனகிக் கொண்டான்.

    

    மேடையை விட்டு இறங்கி வந்த வெண்ணிலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இவன் திருமணம் என்று சொல்லாமல் அழைத்து வந்து விட்டார்களே என பொருமினாள்‌.

    

    “அம்மா எங்கே இருக்காங்கண்ணா”எனும் போதே வரலக்ஷ்மி முகம் மலர வெண்ணிலாவைப் பிடித்துக் கொண்டார்.

    

    “நிலாம்மா எப்படா வந்த அம்மா கிட்ட கேட்டுட்டே இருந்தேன் நான். வா வா தீபாவை பார்த்தியா… எப்படி இருக்கா வர்மனுக்கு பொருத்தமா இருக்காளா”என்று மகிழ்ச்சி பொங்க பேச அவளால் தன் கோபத்தைக் கூட காட்ட முடியாத நிலை.

    

    “நல்லா இருக்கேன் அத்தை. சென்னை வந்ததும் எங்களை எல்லாம் மறந்து போயிட்டீங்க”என்று வழக்கம் போல பேச

    

    “உங்களை மறக்கறதா… சரி சரி கெஸ்ட் எல்லாம் வர்றாங்க ரிசீவ் பண்ணனும். சாப்பிட்டு ரெஸ்ட் எடுடா அத்தை இதோ வந்திடறேன் சஞ்சு கூட்டிட்டு போப்பா . அம்மா அப்பா ரெண்டு பேரும் செகண்ட் ஃப்ளோர்ல இருக்காங்க”என்று பரபரத்தவர் அடுத்தவரை கவனிக்கச் சென்றார்.

    

    

    “லக்ஷ்மி ஆன்ட்டிக்கு ஏற்கனவே கால் ரெண்டும் ரெக்கை கட்டின மாதிரி பறக்கும் இப்போ மேரேஜ் ன்னவும் ரொம்ப பரபரப்பா ஆகிட்டாங்க”என்று சிரித்தான் சஞ்சய்.

    

    

   மங்கை இதை எல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டு தானிருந்தார் அசூசையாக முகத்தை வைத்தபடி.

    

    ‘விஷேஷம்ன்னதும் குடும்பத்தோட கிளம்பி வந்திருக்கறதை பாரு. அந்த சின்ன குட்டி நல்லா திமுதிமுனு வளர்ந்திருக்காளே நல்ல வேளை வர்மன் வால்பாறையில் இருக்கலை.’என்று நினைத்துக் கொண்டார்.

    

    அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்ததுமே அகிலாவை பார்த்தவள் ‘ஏன் இந்த திருமணத்திற்கு வருகிறோம் என சொல்லவில்லை’என்று கடுகடுத்தாள்.

    

    

    அகிலாவுக்கோ தர்மசங்கடமான நிலை. அந்த அறையில் வரலக்ஷ்மியின் சொந்தத்தில் சில பெண்களும் உறங்கிக் கொண்டிருக்க மகள் பேச்சு யாருக்கேனும் கேட்டு விடப் போகிறது என்று பதறினார்.

    

    “வாயை மூடு நிலா. காலையில் கல்யாணம் முடியற வரைக்கும் நீ பேசவே கூடாது”என்றார் எச்சரிக்கும் விதமாக

    

    “ஓகே ம்மா ஏன் நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க இப்போ என்ன நான் பேசக் கூடாது அவ்வளவு தானே ஓகே”என்று வாயை ஜிப் வைத்து மூடுவது போல் சைகை செய்ய சிரித்தார் அகிலா.

    

    “தூங்கலாம் காலையில் சீக்கிரம் எழுந்துக்கணும்”என்று சொல்லவும் தான் கொண்டு வந்த பையையே தலையணையாக வைத்து படுத்துக் கொண்டாள் நிலா

    

    “அம்மா கையில் வந்து படுத்துக்கறீயாடா உனக்கு தூக்கம் வராதே”என்று வாஞ்சையுடன் கேட்கவும் “ஒரு நைட் தானே மம்மி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”என்று சொல்லி விழிகளை மூட அகிலாவோ நாளைக்கு வர்ற மாப்பிள்ளைக்கு என் பொண்ணை பிடிச்சுடணும் என்று வேண்டுதல் வைத்தார்.

    

    

    நிலா விழிகளை மூடி இருந்தாலும் உறக்கம் சுத்தமாகவே வரவில்லை அவளுக்கு.

    

    “என்னதிது சுத்தமா தூக்கம் வரமாட்டேன்னுது நிலா இதென்னடா குட்டிமா உனக்கு வந்த சோதனை”என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டாள்.

    

    அகிலா உறங்குவதைக் கண்டு மென்மையாக புன்னகைத்தபடி அவர் மீது கையைப் போட்டு கொள்ள உறக்கத்திலேயே மகள் மீது தானும் கைபோட்டு அணைத்துக் கொண்டார் அகிலா.

    

    குறும்புத்தனம் மிகுந்த செல்லமகளை எண்ணி அவருக்கு எப்போதும் பெருமை தான். என்ன தான் சுட்டித் தனம் செய்தாலும் பெற்றோர் கூறினால் உடனே கேட்டுக் கொள்ளும் பெண் அவள். 

    

    

    அதிகாலை விடிவதற்குள் உறக்கம் கலைந்து விட்டது வெண்ணிலாவிற்கு. 

    

    

    எல்லாரும் தூங்கறாங்க இப்பவே குளிச்சிடுவோம் இல்லாட்டா வெய்ட் பண்ண வேண்டி வரும் என்று நினைத்தபடி குளித்து விட்டு வந்தாள்.

    

    

    ‘ப்ப்ச் குளிச்சதும் பசிச்சிடுமே நிலா உனக்கு. கொஞ்சம் நேரம் இரு அம்மா எழவும் காஃபி குடிக்கப் போகலாம்’என்று தனக்குள் பேசியவள் தலை முடியை சிக்கு எடுத்தாள்.

    

    “ஏ பாப்பா முடியை அவ்வளவு வேகமா இழுக்காதே இங்கே வா நான் எடுத்து விடறேன் “என்று அப்போது தான் கண் விழித்த வயதான பெண்மணி ஒருவர் கூற “இருக்கட்டும் ஆன்ட்டி”என்று நாசூக்காக மறுக்க அவரோ “நான் வருவோட அத்தை தான் நீ அந்த வால்பாறை பொண்ணு தானே உன்னை நான் பார்த்து இருக்கேன். என்னை உனக்கு ஞாபகம் இருக்காது ஏற்கனவே உனக்குத் தலை பின்னி விட்டு இருக்கேன்”என்று சிரித்தவர் தானாக வந்து சீப்பை வாங்கி சீவி விட்டார்.

    

    “நிஜமாவா ஆன்ட்டி எனக்கு ஞாபகம் இல்லை”என்றதும் “ஹ்ம்ம் நிஜமா தான் வரு உனக்கு மனோரஞ்சிதம் பூவை கட்டி வச்சு விட்டான்னு வர்மன் கூட ஏன் பூவை பறீச்சிங்கனு சண்டை போட்டானே அன்னைக்கு கூட நீ கோபமா பூவை எடுத்து தந்துட்ட அப்ப தலை கலைஞ்சதா நான் தான் சீவி விட்டேன்”என்றார் விளக்கமாக.

    

    

    அசடு வழிய சிரித்தவள் “அது அப்போ கோபம் வந்திடுச்சு ஆன்ட்டி யாராவது தலையில் வச்ச பூவைக் குடு னு சண்டை போடுவாங்களா இந்த உரா”என்று சொல்ல வந்தவள் “மாப்பிள்ளை கேட்கவும் கோபம் வந்து தந்துட்டேன்”என்றாள் அவளும்.

    

    “ஆனா அப்போ பார்த்ததுக்கும் இப்ப பார்க்கறதுக்கும் ரொம்ப மாறிட்ட பாப்பா நீ.”என்றவர் தலையை முழுதுமாய் சிக்கு எடுத்து விட்டார்.

    

    

    “இனிமே நீ டிசைனா பின்னிக்க சரியா அழகா இருக்கு உன் முடி”என்று சீப்பை கொடுக்க வாங்கிக் கொண்டவள் அவரோடு பேசியபடியே தலை பின்னிக் கொண்டாள்.

    

    

   ‘ஹ்ம்ம் எப்படியோ அந்த குரங்குக்கு ஒரு பொண்ணு பிடிச்சிருக்கு பாரு அதிசயம் தான்.’என்று சிரித்து கொண்டவள் “இந்த பொண்ணு கிட்ட எப்படி சாஃப்டா பேசுவான் நம்ம கிட்ட வள்ளுனு விழும்”என்று சொல்லிக்கொண்டே “அது வொஃய்ப் அப்புறம் பேசித்தானே ஆகணும்”என்றாள் தானாக. அவள் பேசுவதெல்லாம் தனக்குள் மட்டும் தான் வெளியே புன் சிரிப்பு மட்டுமே தெரியும்.

    

    “ம்மா எழுந்து ரெடி ஆகுங்க நான் உங்களுக்கும் எனக்கும் ஏதாவது குடிக்க கொண்டு வர்றேன் ஆன்ட்டி உங்களுக்கும் தான்”என்றபடி வெளியே வர மேகவர்மன் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தான்.

    

    ‘இவன் தூங்கினானா இல்லையா’என்று யோசித்தபடியே கீழே வர அவனருகில் சஞ்சய் தான் நின்று கொண்டிருந்தான்.

    

    

    “நிலா எழுந்தாச்சா… ஏதாச்சும் குடிக்க தரவாடா”என்று கேட்க 

    

    “அதுக்கு தான் வந்தேன் ண்ணா”என்றாள்.

    

    “என்ன அதிசயம் வெண்ணிலா காலையிலேயே குளிச்சிட்டு வர்றாங்களா”என்று கிண்டல் செய்தான் மேகவர்மன்.

    

    “இந்தா பாருங்க கல்யாண மாப்பிள்ளை னு பார்க்கிறேன்”என்று சொல்லி விட்டு முறைக்க சஞ்சய் தான் இடையில் வந்து “ரெண்டு பேரும் இன்னைக்காவது அமைதியா இருங்க”என்றான்.

    

    “அதை அங்கே சொல்லு”என்று இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல சஞ்சய் சிரித்தபடி தங்கைக்கு காஃபியை கொண்டு வந்து கொடுக்க அவள் மேலே சென்று விட்டாள்.

    

    

    ‘கல்யாணத்தன்னைக்கு கூட வம்பு இழுக்குது உராங்குட்டான்’என முனகியபடி காஃபியை குடித்தாள்.

    

    

    “நிலா ட்ரெஸ் மாத்திக்கோடா.”என்று அகிலா கூறவும் புடவையை கட்டத்துவங்கினாள். மனதுக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வேறு.

    

  

“ஹப்பா எப்படியோ அந்த உராங்குட்டான் கல்யாணம் ஆகி போகுது. இனி அது தொல்லை இல்லை. நிம்மதியா இருக்கலாம் வால்பாறை பக்கம் இனி தலையே வைக்க மாட்டான்ல.” என்று நிலா சொல்லிக் கொண்டு மகிழ்ச்சியுடன் தயார் ஆக, வெளியே அத்தனை சத்தம் கேட்டது.

    

    “ஏதோ சத்தமா இருக்கு நிலா நான் பார்க்கிறேன் நீ ட்ரெஸ் மாத்து”என்று அகிலா வெளியே சென்றவர் சிறிது நேரம் வரை வரவே இல்லை.

    

    

    ஒரு மணி நேரம் கழித்து வந்த அகிலா பரபரப்புடன் “நிலா அம்மா சொன்னா கேட்ப தானே”என்றார் பீடிகையாக 

    

    

    “மம்மி இதென்ன கேள்வி உங்க பேச்சை கேட்காம”என்று நிறுத்த வரலக்ஷ்மி அழுது சிவந்த முகத்துடன் உள்ளே வந்தார்.

    

    

    “என்னாச்சு அத்தை ஏன் முகம் இப்படி வீங்கி இருக்கு”என்று அவரை சந்தேகத்துடன் கேட்க 

    

    

    “அத்தை பேச்சு கேட்ப தானே நிலாம்மா”என்றார் அவரும்.

    

    

    நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

    

    

    “ம்மா என்னம்மா”என்றதும் சஞ்சய் நரசிம்மன் வேலவன் வேதா வேதாவின் கணவன் என்று அனைவரும் உள்ளே வந்தனர்.

    

    அனைவரையும் கண்டு பதற்றத்துடன் வரலக்ஷ்மியின் கையைப் பிடித்தவள் “ப்பா”என்றாள் பீதியுடன்.

    

    “உனக்கு என் பையனை கட்டிக்க சம்மதமா நிலா”என்று வேலவன் கேட்க அவளுக்கு மயக்கமே வந்து விட்டது.

    

    மயங்கி சரிந்தவளைப் பிடித்த சஞ்சய் “ம்மா பயந்துட்டா போல எழுப்பி ரெடி பண்ணுங்க நான் வர்மனைப் பார்க்கிறேன்”என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான்.

    

    

    “என்ன இதுக்கே இந்த பொண்ணு மயங்கிடுச்சு”என்று வேதாவின் கணவன் விஷ்ணு கேட்க 

    

    “சும்மா இருங்க நீங்க வேற”என்று திட்டிய வேதா “நிலாமா என்னடா”என்று வாஞ்சையுடன் கேட்க திருதிருவென விழித்தாள் நிலா.

    

    “என்னாச்சு ஏன் பொண்ணு எங்க”என்று கேட்டவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

    

    

    வரலக்ஷ்மி கேவி அழத் துவங்கவும் “அத்தை அழாதீங்க ப்ளீஸ்”என்று தன் அம்மாவைப் பார்க்க “பொண்ணு மண்டபத்தில் இல்லை நிலா எல்லாரும் வர்மனை தப்பா பேசுறாங்க. பேச நேரம் இல்லை டா. எங்களுக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம்.நீ இந்த மாலையைப் போடு வேதா போட்டு விடும்மா”என்று பரபரத்தவர் அடுத்தடுத்து முடுக்கி விட்டார்.

    

    

    ‘அந்த பொண்ணு நேத்து நல்லா சிரிச்சு வெட்கபட்டுச்சே எங்கே போயிருக்கும் யாராவது கடத்தி இருப்பாங்களோ அச்சோ அந்த பொண்ணை காப்பாத்தாம இந்த உராங்குட்டானுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.’என்று வெள்ளந்தியாக யோசித்தவளை பொம்மை போல அலங்கரித்து மணமேடையில் அமர்த்தி விட்டனர். 

    

    மேகவர்மன் உர்ரென்று முகத்தை வைத்தபடி வெண்ணிலாவின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்ட மூன்றாம் முடிச்சை வேதா போட்டு விட்டாள்.

    

    

    …… தொடரும்.