நரசிம்மனும் சஞ்சயும் டெம்போவில் சீர்வரிசை பாத்திரங்களை ஏற்றிக் கொண்டு இருந்தனர். “எதுவும் ஸ்க்ராட்ச் ஆகிடப் போகுது. தம்பி அந்த டேபிள் ஃபேன் பாக்ஸை உள்ளத் தள்ளி வைப்பா”என்று சொல்லிக் கொண்டிருந்தார் நரசிம்மன். வீட்டில் வெண்ணிலாவின் திருமணத்திற்கு என்று வாங்கி வைத்த சில பித்தளை பாத்திரங்கள் சில்வர் பாத்திரங்கள் மட்டும் சென்னைக்கு பயணித்தது. மற்ற அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் சென்னையிலேயே வாங்கிக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து இருந்தனர் இதெல்லாம் எதற்கு என்று மறுத்த வேலவன் வரலக்ஷ்மியிடம் “என் பொண்ணை வெளியே தந்திருந்தாலும் இதெல்லாம் செய்வேன் தானே வேலா. என் பொண்ணுக்காக சேர்த்து வைத்ததில் தான் செய்றேன். நாம நமக்குள்ள சரின்னு போகலாம் மத்தவங்க அப்படி இருப்பாங்க னு நினைக்கக் கூடாது ஒரு பேச்சு வந்தாலும் தப்பாகிடும்”என்று நாசூக்காக மறுத்தவர் தன் மகளுக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் வாங்க ஏற்பாடு செய்திருந்தார். மறு வீட்டுக்கு வந்ததுமே அவள் நகைகளை எல்லாம் அணிவித்து தான் அனுப்பினர். “சிலது பேங்க் லாக்கர் ல இருக்கு வரு. தாலிப் பிரிச்சு கோர்க்கும் போது அதை எடுத்துட்டு வர்றேன்”என்று சொல்லி இருந்தார் அகிலா. “மொத்தமா இருபது சவரன் இருக்குமா… எங்க தீபாவுக்கு ஐம்பது சவரன் போட இருந்தோம் நாங்க”என்று மங்கை வாயிருக்க மாட்டாமல் சொல்ல “ஐம்பது சவரன் தான் அத்துக்கிட்டு ஓடிருச்சே அடிமையா வாழ முடியாது னு.”என்று நக்கலடித்த விசாலத்தின் மருமகள் “அகிலா இப்ப போட்டு விட்டதே முப்பது காணும். பேங்குல நாற்பது இருக்கிறதா நேத்தே சொல்லிருச்சு. எல்லாஞ்சேத்தி எழுவதாம்”என்றார் அழுத்தமாக. ‘தேவையா உனக்கு’என்று விசாலம் மங்கையைப் பார்த்தவர் அகிலாவிடம் “நீ பொண்ணை குடுத்ததே அந்த மகாலட்சுமிய குடுத்ததுக்கு சமம் கண்ணு. ஒன் மனசு போல செய்யி. மத்தவங்க சொல்றாங்களேனு வருத்திக்காத”என்றார். “அதெல்லாம் இல்லிங்க. என் பொண்ணை விட எங்களுக்கு என்ன இருக்குது”என்று அகிலா முடித்திருக்க மங்கை நொடிப்பாய் திரும்பிக் கொண்டார். மங்கையின் இந்த அமைதி தான் அகிலாவை ஏதோ செய்தது. சாதாரணமாக மங்கை இப்படி இருப்பவர் இல்லையே. எதுவாக இருந்தாலும் நேரடியாக முகத்தில் அடித்தாற் போல பேசி விடுபவர் இப்போது இந்த அமைதி அதுதான் அகிலாவை மனம் பதைக்க செய்தது. இனிமேல் வேறு வேலவன் வீட்டிலேயே தங்கப் போவதாக கேள்விப் பட்டதிலிருந்து மகளை எதுவும் கொடுமை செய்வாரோ வரலக்ஷ்மி போல தன் மகளும் அமைதியாக தான் இனி இருக்க வேண்டுமோ என்றெல்லாம் அச்சமாக இருந்தது அவருக்கு. ஏற்கனவே அங்கே எது நடந்தாலும் தன்னிடம் சொல்லி விட வேண்டும் என்று மகளுக்கு அத்தனை அறிவுரை கூறியிருந்தார். அவளும் மையமாகத் தான் தலையாட்டி இருந்தவள் ஒரு கட்டத்தில் “ம்மா வரு ஆன்ட்டி இருக்கும் போது நீங்க ஏன் இவ்வளவு சொல்றீங்க என்னைப் பத்தி அவங்களுக்கு தெரியும் தானே… நான் சமாளிச்சுப்பேன்”என்று தாய்க்கு சமாதானம் சொல்லினாள் பெண். வேறு வழி அகிலா இத்தனை புலம்புபவர் இல்லையே ஒரு நேரத்தில் இவ்வளவு புலம்புவதற்கு எதற்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆயாசமாக எண்ணி விட்டாள் வெண்ணிலா. அவசரத் திருமணம் தான் ஆனாலும் இப்போது புலம்பி என்ன செய்ய என்று தான் தோன்றியது அவளுக்கு. “இந்த பெட்டியை உன் கையிலேயே வச்சுக்கோடா நிலா.”என்று சிறு பெட்டியைக் கொடுக்க அதில் என்ன இருக்கிறது என்று காண ஆர்வம் மங்கைக்கு. “பத்திரமா இருக்கோணும் கண்ணு. ஏதாவது னா உங்கம்மாக்கு போனு போட்டாலும் சரித்தான் எங்களுக்கு கூப்புட்டாலும் சரித்தான். ஒடனே வந்துபோடுவோம்”விசாலம் பேத்திக்கு அத்தனை அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். கிளம்புகையில் பலகார பட்சணங்கள் என்று அது வேறு தனியாக சேர்ந்தது. வந்த வேனோடு சேர்ந்து ஒரு டெம்போ ட்ராவலர் அதில் தான் சஞ்சயும் சென்றான். நானும் சஞ்சயோடு வரவா என்று கேட்ட மேகனின் முகத்தை மேலும் கீழும் பார்த்தார் மங்கையின் கணவன். “பொண்ணோட வருவே ன்னு பார்த்தா மச்சானோட வரட்டானு கேட்கிறியே வர்மா”என்று இடிஇடியென சிரித்த தர்மதுரையின் சிரிப்பு ஒருவருக்கும் ஒப்பவில்லை. “மலையேறுனாலும் மச்சான் துணை வேணுமே மாமா. உங்களுக்கு கூட அப்படி தானே”நக்கலான வர்மனின் பதில் சூட்சுமம் நிரம்பியிருந்தது வரலக்ஷ்மிக்கு நன்றாகப் புரிந்தது. “அதென்னவோ சரி தான்”என்ற தர்மதுரை அடுத்த வார்த்தை பேசவில்லை மங்கையின் சூசகமான முறைப்பில். சஞ்சய்க்கு துணையாக விஷ்ணு டெம்போவில் ஏறிக் கொண்டான் வேதாவின் சொல்லின்படி. சென்னை வந்து சேர்ந்ததே தெரியாமல் அத்தனை உறக்கம் வெண்ணிலாவிற்கு. ஏற்கனவே பெற்றோரைப் பிரிந்து அழுததில் முகமெல்லாம் புசுபுசுவென வீங்கி கண்ணீர் தந்த சோர்வில் அத்தனை உறக்கம் அவளுக்கு. ஜன்னல் பக்கம் தலையை சாய்த்து உறங்கியவளை மெல்ல தன் தோளுக்கு இடம் பெயர்த்த வர்மனுக்கு சிரிப்பு தான் வந்தது. ‘ரெண்டு சண்டைக் கோழியும் சேர்ந்து அதுவும் ஒரே சீட்டில்’ என்று நினைக்கையில் ஆச்சரியம் தாளவில்லை அவனுக்கு. என்னவோ இந்த இரண்டு நாட்களில் அவளைத் திட்டுவதையோ சண்டை போடுவதையோ அவ்வளவாக அவன் செய்யாமல் இருந்தது உலக அதிசயம் தான். இல்லை என்றால் பார்க்கும் நேரம் எல்லாம் பற்றிக் கொள்ளும் இருவருக்கும். ‘இந்த அஞ்சாறு வருஷத்தில் இவளும் தான் எவ்வளவு சேஞ்ச் ஆகிட்டா… எப்போ பார்த்தாலும் ஒரு பாவாடை கட்டிட்டு அதை முழங்கால் வரைக்கும் வேற ஏத்தி கட்டிட்டு ரௌடிப் பொண்ணாட்டம் நிற்பா… அதெல்லாம் இன்னும் வச்சிருக்காளா இல்லையா தெரியலையே… என்ன படிக்கிறான்னு கூட கேட்டுக்கலை. முடி முன்ன விட நீளமா வளர்ந்து இருக்கு. ஆள் கலரா புசுபுசுனு ஆகிட்டா.’ சீட்டில் தலையை சாய்த்தவனுக்கு இரண்டு நாட்களில் தான் கண்ட அத்தனையும் ஒரு தொகுப்பாக ஓடியது. “வரு, வர்மனை எழுப்பி விடு”என்ற தந்தையின் குரல் கேட்கவே கண்களைத் திறந்தான் மேகன். “வெண்ணிலா எழுந்துக்கோ வீட்டுக்கு வந்தாச்சு”என்று அவளின் கன்னத்தில் தட்ட அவளோ “அகிம்மா அஞ்சே நிமிஷம்”என்றாள். “சுத்தம் அகிம்மாவா… வெண்ணிலா எழுந்திரு”என்று சற்று வேகமாக தட்டி விட்டான். அவ்வளவு தான் சண்டைக்கோழி விழித்துக் கொண்டது. எழுந்து சிவந்த கண்களோடு அவள் முறைத்த முறைப்பில் காளிதேவி அவதாரத்தைக் கண்டான் மேகன். அவள் முறைத்தால் அடுத்து என்ன திட்டுவாள் என்று தான் அவனுக்கு அத்துப்படி ஆயிற்றே. சட்டென அவள் வாயைப் பொத்தி “இப்போதைக்கு எதுவும் சொல்லிடாதே மானமே போயிடும்”என்றான் இறைஞ்சுதலாய். “உராங்குட்டான் உன்னைய”என்று முனகியவள் சுற்றம் உணர்ந்து கோபம் தணித்தாள். வீட்டிற்கு சென்றதும் மீண்டும் ஒரு ஆரத்தி. சஞ்சய் பொருட்கள் எல்லாம் இறக்கி விட்டு அதே ட்ராவலரில் கிளம்புவதாக கூற, வெண்ணிலா மேகன் இருவருமே வேண்டாம் என்று மறுத்தனர். “அப்பா அம்மா தனியா இருப்பாங்கல்லடா நிலா. நீயும் இல்லை நானும் இல்லைனா”என்று நிறுத்த உடனே “ஆமா ஆமா ரெண்டு பேரும் இல்லைனா அழுதே புலம்புவாங்க நீ கிளம்பு ண்ணா”என்று சொல்லி விட்டாள் . “குட் கேர்ளா இருக்கணும். எதுவா இருந்தாலும் அண்ணனுக்கு கூப்பிடு சரியா?”என்றவனுக்கு செல்லவும் மனமில்லை தான். திடீரென திருமணம், என்ன தான் வரலக்ஷ்மி வேதா வேலவன் மேகவர்மன் என்று நன்கு பழகிய குடும்பம் தான் என்றாலும் இப்படி தனியாக விட்டு செல்வதில் சுத்தமாக அவனுக்கு விருப்பம் இல்லை. சிறுவயதில் அவர்களோடு இருந்துள்ளனர் தான் ஆனால் இப்போது உரிமையாக.. ம்ஹூம் தங்கையை பாவம் போல் பார்த்தான். “பார்த்துக்கோ மச்சான்”என்று மேகனை அணைத்துக் கொண்டவன், கண்கலங்கி அனைவரிடமும் விடை பெற்றான் மனமே இன்றி. “வேதா நீ ரெஸ்ட் எடுடா. மிச்ச வேலை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்”என்று வரலக்ஷ்மி சொல்லியபடி சுடு தண்ணீர் பக்கெட்டை கொண்டு வந்து வைத்தார். “ம்மா கால் ரொம்ப குடையுது”என்று வேதா பரிதாபமாக சொல்ல “வரு ஆன்ட்டி நீங்க டப் கொண்டு வாங்க பக்கெட் ல வச்சா மசாஜ் பண்ண முடியாது வேதாக்கா காலை நீட்டுங்க வீங்கி இருக்கு”என்று வந்து இயல்பாய் அமர்ந்து கொண்டாள் வெண்ணிலா. டப்பில் தண்ணீரை ஊற்றி கூச்சம் சங்கோஜம் எதுவும் இன்றி நாத்தனாரின் காலுக்கு மசாஜ் செய்தவளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆச்சரியம் தாளாமல் தான் பார்த்தனர். “இப்ப எப்படி இருக்கு க்கா…? விஷ்ணு அண்ணா நீங்க வந்து பக்கத்தில் உட்காருங்க அவங்களுக்கு தூக்கம் வந்தா தூங்குவாங்கல்ல”என்று மசாஜ் செய்தபடி சொல்ல மங்கை உடனே “அதென்ன அவளை அக்கா இவரை அண்ணான்ற…?!”என்று நொடிக்க “வேதாக்காவை அக்கானு கூப்பிட்டு பழகிடுச்சு”என்றாள் நிமிராமல். “உன் இஷ்டம் போல கூப்பிடு மா இதில் என்ன ரூல்ஸ் வேண்டி கிடக்கு”என்றான் விஷ்ணு. வேதா சற்று கண்ணயரவும் மேகனை வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு அறைக்குச் செல்லுமாறு பணித்தார் வரலக்ஷ்மி. இதற்காக தானே அவள் அஞ்சியது நேற்று ஏனோ பெரிதாய் தெரியாத ஒன்று இன்று பூதாகரமாக தெரிந்தது. அங்கே சொந்தங்கள் எல்லாம் இருந்தனர். தனியறை என்றாலும் உறக்கம் வருகிறது என்று தப்பித்து கொண்டாள். தினமும் அப்படியே சொல்லி தப்பிக்க முடியாதே… அங்கே தனியறை என்றாலும் சத்தம் போடும் போது வெளியே கேட்கவில்லை இங்கே கேட்கும் போலவே என்றெல்லாம் யோசித்து தயங்கி அமர்ந்திருக்க மேகன் அவள் தோளில் தட்டினான். “வா போகலாம்”என்று அழைக்க, நெஞ்சாங்குழி ஏறி இறங்கியது அவளுக்கு. ‘இவளை என்ன செஞ்சிடுவேன் நான்?.எப்படி பார்க்கிறா பார் நான் என்னவோ மேல பாஞ்சிடுற மாதிரி’ எரிச்சல் மண்டியது மேகனுக்கு. “போகலாம் போகலாம்”என்றவள், அவனோடு எவ்வளவு மெதுவாக நடந்தும் அவனறை வந்து விட்டது. உள்ளே கால் வைக்கும் போதே சில்லிட்டது. ஏசியை அதிகப்படுத்தி வைத்திருப்பான் போலும். “இங்கே ஏசி இல்லாம தூங்க முடியாது. உனக்கு வால்பாறை குளிரே ஜஸ்ட் லைக் தட் தானே, இதை சமாளிச்சுடுவ”என்றபடி கதவைத் தாழிட்டான். ‘இதற்கு மேல் என்ன?’என்று தான் பார்த்தாள். “ப்ம்ச் வெண்ணிலா கோபத்தை கிளறாம போய் தூங்கு”என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு. “நான் என்ன செஞ்சேன்?”அவனின் கோபத்தை உணர்ந்தவளாக கேட்க “இதோ இதோ இப்படி பேந்த பேந்த விழிச்சுட்டு நடுங்கறியே, அது போல பண்ணித் தொலைக்காதே…எனக்கே என்னைப் பார்த்தா வில்லன் மாதிரி ஃபீல் ஆகுது”என்றான் கடுப்பாக சட்டென கெக்களித்து சிரித்து விட்டவள் “எனக்கு கொஞ்சம் குளிராக இருக்கு. உங்களைப் பார்த்து நடுங்கலை, நீங்க பெரிய டான் பாருங்க உங்களைப் பார்த்து பயப்பட வேற செய்றாங்க”என்றாள் தன் பயம் மறைத்தபடி. “ஓஓஓ அப்போ பயம் இல்லை”என்றவன் அவளை அதீதமாக நெருங்கி இருந்தான். …… தொடரும்.