அந்த காலை நேரத்திலேயே சுப்ரபாதம் ஒலிக்க பூஜையறையில் இருந்து சாம்பிராணி மணமும் ஊதுபத்தி மணமும் காற்றில் கலந்து பக்திப் பிரவாகத்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தது. கிணுகிணுவென கேட்ட மணிச் சத்தம் பூஜை முடிந்து விட்டதாக அறிவிக்க அந்த சத்தத்தில் எழுந்து வந்தான் சஞ்சய்.

    

    

    “குட்மார்னிங் மம்மி”என்றபடி வந்தவனை ஏகத்துக்கும் முறைக்க 

    

    “ஃப்ரெஷ் ஆகிட்டேன் தாயே திருநீறை பூசுங்கள்”என்று வலது கையால் வாய் மூடி குனிந்த மகனைக் கண்டு மென்புன்னகை சிந்தியவர் திருநீறை வைத்து விட்டார் அந்த வீட்டின் தலைவி அகிலா.

    

    

    “சீக்கிரமே எழுந்தாச்சு போல அகி”என்றபடி வந்தார் அகிலாவின் கணவர் நரசிம்மன்.

    

    

    “இன்னைக்கு ஆடி கடைசி வெள்ளி”என்ற தகவலோடு தீபாராதனை தட்டை மீண்டும் பூஜையறையில் வைத்தார்.

    

    

   “வாவ் அப்போ இன்னைக்கு கூழ் தக்காளி சாதம் சுண்டல் தயிர் சாதம் எல்லாம் வருமே” என்றபடி கலைந்த தலையும் நலுங்கிய உடையுமாய் வந்து நின்றாள் நம் நாயகி வெண்ணிலா (அ) நிலாமுகி. வெண்ணிலா நரசிம்மனின் அம்மாவின் பெயர். நான்கு தலைமுறை கழித்து பிறந்த தன் மகளுக்கு தன் அம்மாவின் பெயரைச் சூட்டினார் நரசிம்மன். வெண்ணிலாவைச் சுருக்கி வெண்ணி என்றதில் கடுப்பாகிப் போனவள் சிறுவயதிலேயே பெயரை மாற்றும்படி கோபம் கொள்ள அன்றிலிருந்து நிலாவாகிப் போனாள் மற்ற அனைவருக்கும் அந்த ஒருவனைத் தவிர. வம்புக்கென்றே அவளை வெண்ணிலா என்று முழுப்பெயரை சொல்லித் தான் அழைப்பான் அவன். 

    

    அவன் மேகவர்மன். வெண்ணிலாவின் எதிர் வீட்டில் குடியிருந்தான். சில வருடங்களுக்கு முன்பு மேகவர்மனின் வேலை காரணமாக குடும்பத்தோடு இடம் பெயர்ந்து விட்டனர். வெண்ணிலாவிடம் கேட்டால் துபாயோ தூத்துக்குடியோ போயிட்டாங்களாம் என்று கிண்டலாக சொல்லி விட்டுச் செல்வாள். ஏனெனில் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். அவன் எங்கிருக்கிறான் என்பதைக் கூட அறிய மறுத்தவளாய் உலாவுகிறாள். சிறு வயதில் இருந்தே சீண்டும் அவனை இவளுக்கு அறவே பிடிப்பதில்லை. இன்னொரு காரணம் தன் அன்பு அண்ணன் சஞ்சய் தனக்கென்று ஒதுக்கும் நேரத்தை பறித்துக் கொள்ளும் கொள்ளைக்காரனாக சிறுவயதிலேயே மேகவர்மன் மீது கோபம் வேறு. 

    

    நண்பனின் தங்கையை சீண்டி வம்பு செய்வதில் அலாதி பிரியம் நம் நாயகன் மேகவர்மனுக்கு. இவர்கள் இருவருக்கும் தான் முட்டிக் கொள்ளுமே தவிர இரு குடும்பமும் வால்பாறையில் இருந்தவரை நல்ல சிநேகமாகத் தான் இருந்தனர். அவ்வபோது அலைபேசிவழி தொடர்பு மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மற்றபடி மேகவர்மன் குடும்பம் இடம்பெயர்ந்த பிறகு இன்னும் நேரில் சந்திக்கவில்லை.

    

    

    சஞ்சய் தொடர்பில் இருந்தாலும் தங்கையிடம் அதை எல்லாம் பகிர்வதில்லை. அவள் விரும்பமாட்டாள் என்ற காரணத்தால். இனி காண்போம் வெண்ணிலாவின் வாழ்வை.

    

    

    “இப்படி வந்து நிற்காதேன்னு எத்தனை தடவை சொல்றது நிலா. போய் குளிச்சிட்டு வா”என்று அம்மா அதட்டியதில் மீண்டும் அறைக்கே ஓடினாள் வெண்ணிலா. 

    

    

    “உன்னைத் தவிர வேற யாருக்கும் அவ பயப்படுறதில்லை அகிலா”என்று சிரித்தபடியே தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தார் நரசிம்மன். 

    

    “ம்ம்க்கும் இத்தனை கண்டிப்பா இருக்கும் போதே உங்க பொண்ணு என்னை ஏச்சுடுறா. இன்னும் நானும் செல்லம் கொடுத்தா அவ்வளவு தான் தலைக்கு மேல நின்னு காளிங்க நர்த்தனம் ஆடுவா”என்றபடி சரியான பதத்தில் தேநீரை ஆற்றி தந்தைக்கும் மகனுக்கும் கொடுத்தார் அகிலா.

    

    

    “விடுங்கம்மா சின்னப் பொண்ணு.”தங்கைக்கு பரிந்து பேசினான் சஞ்சய்.

    

    “நீதான்டா சொல்லிக்கணும். பீஜி முடிக்கப் போறா. அதுக்குள்ள வரிசைகட்டி மாப்பிள்ளை வீட்டில் இருந்து வேற பொண்ணு கேட்டு வர்றாங்க. நானே அடுத்து என்ன செய்றது னு யோசிச்சுட்டு இருக்கேன்”என்று சமையலறைக்குள் நுழைந்தார்.

    

    

    தேநீரை குடித்து முடித்தவனோ “ம்மா அவளுக்கு இப்ப தான் 22 ஆகுது அதுக்குள்ள.. போங்க நீங்க. அவ எம்ஃபில் படிக்கணும். இன்னும் வேலைக்குப் போகணும் எத்தனை கனவு இருக்கு அவளைப் பத்தி நீங்க வேற”என்று சலித்துக் கொண்ட மகனைப் பார்த்து “ஏன் உன் தங்கையை கூடவே வச்சுக்கோயேன். நான் நல்ல மாப்பிள்ளை வந்தா கல்யாணம் பண்ணி வச்சிடுவேன் அடுத்து என் மருமகளை எப்போ நான் பார்க்கறது”என்றதும் சஞ்சய் சிரிப்புடன் “அதுக்காக என் தங்கச்சியை துரத்துவீங்களா நீங்க. வேணும்னா மருமகளைக் கொண்டு வந்திடுங்க அப்புறம் மருமகனைப் பார்க்கலாம் ஓகே”என்றிட 

    

    

    “அகிலா உன் பையனுக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு”ஹாலில் இருந்து சிரித்தபடி குரல் கொடுத்தார் நரசிம்மன்.

    

    “அப்போ நம்ம வீட்டில் சீக்கிரம் டும்டும்னு சொல்லுங்கப்பா”என்று புத்தம் புது ரோஜாவாக வந்து நின்றாள் வெண்ணிலா.

    

    

    “ஹேய் நான் உன்னை காப்பாத்த ட்ரை பண்ணா நீ என்னைக் கோர்த்து விடறியா” என தங்கைக்கு தேநீரை நீட்டினான் சஞ்சய்.

    

    

    “அப்புறம் அண்ணியைப் பார்த்து நான் நாத்தனார் கொடுமை செய்ய எனக்கும் ஆசை இருக்காதா அண்ணா”என்று அண்ணனோடு வம்பளந்தபடி காலை நேர பரபரப்பை எதிர்கொண்டவர்கள் தத்தம் வேலைக்குச் சென்றனர். 

    

    தந்தை மகன் மகள் மூவரும் கிளம்பியதும் அகிலாவின் அடுத்த வேலைகள் துவங்கியது. 

    

    ********

    

    “அப்பா பத்திரிக்கை எல்லாம் வந்திடுச்சு. இது என் ஆபிஸ்ல அப்புறம் ஃப்ரெண்ட்ஸ்க்கு கொடுக்க கார்ட் “என்று ஒரு கட்டை நீட்டினான் மேகவர்மன்.

    

    “உனக்கு போதும் தானே ப்பா. கம்மியா இருக்க மாதிரி தெரியுதே”என்று அவனின் தந்தை வேலவன் கேட்க 

    

    

    “போதும் ப்பா. இங்கே எனக்கு என்ன அவ்வளவு ஃப்ரெண்ட்ஸா இருக்காங்க. வால்பாறையில் இருந்தாலாவது இன்னும் இருநூறு சேர்த்து தேவைப்படும்.”என்றதும் வேலவன் கனிவாய் மகனைப் பார்த்தவர் “அங்கேயும் இன்விடேஷன் தரலாம் வர்மா. அங்கிருந்து வந்து அஞ்சாறு வருஷம் தானே ஆகுது. அதுக்குள்ளவா நம்மை மறந்திருக்க போறாங்க”என்றார்.

    

    “ஹ்ம்ம் எனக்கும் ஆசை தான். ஆனா உங்க பாசமான அக்கா அதுக்கு ஒத்துக்கணுமே?” என்றான் பெருமூச்சுடன்.

    

    

    “என்ன என் பேச்சு அடிபடுது போல”என்றபடி உள்ளே வந்தார் மங்கையர்க்கரசி. வேலனின் உடன் பிறந்த அக்கா. சட்டென எழுந்து நின்றான் மேகவர்மன்.

    

    

    “வாங்க அத்தை. நல்லா இருக்கீங்களா”என்று மேகவர்மன் கேட்டதும் ஒரு திருப்தி அவருள்.

    

    “நல்லா இருக்கேன் மருமவனே. பத்திரிக்கை அடிச்சு வந்திடுச்சா”என்று உடனேயே கையில் எடுத்து விட்டார் மங்கை.

    

    

  “இப்ப தான் க்கா தம்பி வாங்கிட்டு வந்தான். பாருக்கா” என்றார் வேலன் பூரிப்பாய்.

    

    

    “ஹ்ம்ம் நான் ஃபைனல் பண்ணின மாதிரி தானே அடிச்சிருக்கான்”என்றவர் தன் விருப்பப்படி பத்திரிக்கை இருக்க அதில் அடுத்ததாய் ஒரு திருப்தி.

    

    மேகவர்மன் அவரது பாவனைகளை அமைதியாய் உள்வாங்கிக் கொண்டிருக்க மங்கை பத்திரிக்கையை எடுத்து ஒரு வரி விடாமல் படித்தார்.

    

    

    “அக்கா. நல்ல நாள் பாருங்க சாமிக்கு படைச்சிடுவோம். வால்பாறை போக”எனும் போதே அவர் முகத்தில் அத்தனை கோபம் பொங்கியது.

    

    

    “இப்ப எதுக்கு அங்கே. இங்கே இல்லாத கோவிலா. அதெல்லாம் குலதெய்வத்தை நினைச்சு இங்கே சாமிக்கு படைப்போம்”என்றார் சட்டென.

    

    

    வேலவனுக்கு முகம் சுணக்கத்தைக் காட்டியதென்றால் மேகனுக்கு ஒரு சிறு கீற்றாய் சினம் துளிர்த்தது.

    

    

    ‘இதென்ன இதற்கு கூட பிடிவாதம்?’ என்று சலிப்பாக இருந்தது அவனுக்கு.

    

    

    “இல்லைக்கா. நம்ம வேதா கல்யாணத்துக்கும் போய் பத்திரிக்கை படைக்கலை. அது கூட மாப்பிள்ளை வீட்டு குலதெய்வம் கோவில்ல படைச்சுட்டோம் னு வைங்க. இது நம்ம வீட்டு உரிமை கடமை இல்லையா. செய்யாம விட வேண்டாமே. சாமி காரியம் அதுக்கு தான் சொல்றேன்”என்று தயங்கித் தயங்கி சொல்லும் தந்தையை சங்கடமாய் பார்த்தான் மேகவர்மன்.

    

    

    இதுவே இந்த வீட்டில் தன் அம்மா இருந்திருந்தால் இப்படி தந்தை மறுக முடியுமா என்று எண்ணிக் கொண்டான்.

    

    ஆனால் அவர் இருந்திருந்தாலும் மங்கையின் ஆட்சிக்கு குறை இருக்காது என்பது தான் நிதர்சனம்.

    

    மங்கையர்க்கரசி வேலவனை விட பத்து வயது மூத்தவர். வேலவன் பிறந்ததும் ஜன்னி வந்து அவர் அம்மா இறந்த பிறகு மங்கையின் கைகளில் தான் வேலவன் வளர்ந்தார். பத்து வயதிலேயே தனக்கு தாயாக மாறிய தமக்கை மீது எப்போதுமே வேலனுக்கு மரியாதை கலந்த பயம் உண்டு. அதைவிட பாசம் ஏராளமாக இருந்தது. மங்கையும் தன் கடைக்குட்டி தம்பியை அதிகாரம் செய்தே வளர்க்க இப்போது வரை அது நீடிக்கிறது. நான் உன்னை அப்படி வளர்த்தேன் இப்படி வளர்த்தேன் என்று சொல்லி சொல்லியே வேலனை வேறெதுவும் யோசிக்க விடாமல் வைத்திருந்தார் மங்கை.

    

    மேகவர்மனின் அம்மாவை பெண் பார்த்தது திருமணம் முடித்தது எல்லாம் மங்கை தான். தான் திருமணம் செய்து கொள்ளாமல் தம்பிக்கு திருமணம் முடித்து பின் சில வருடங்கள் கழித்து தான் மங்கை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் வேலனின் வீட்டில் மங்கையின் சட்டம் தான் பேசும். மேகவர்மனின் அம்மாவும் பேசாமடந்தையாக இருக்க மங்கைக்கு அது இன்னும் வசதியாகப் போனது. 

    

    “எங்க வேலா வராவை காணம். காலங்காத்தால எங்க போனா”என்று பார்வையை சுழற்றினார்.

    

    “அது இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையா க்கா அதான் கோவிலுக்கு போயிருக்கா.”என்றார் வேலன்.

    

    

    “சரி சரி. பத்திரிக்கையை கொண்டு போய் சாமி ரூமில் வைங்க. இன்னும் ரெண்டு நாளில் ஆவணி பிறந்ததும் மஞ்சள் தடவி சாமிக்கு படைப்போம்.”என்றார்.

    

    

    “அக்கா”என்று இழுத்த வேலனை முறைத்து விட்டு “வர வர இந்த வீட்டில் என் பேச்சு எடுபடறதே இல்லை வேலா”என்றார் கடினமான குரலில்.

    

    

    “என்னக்கா இப்படி சொல்லிட்ட உன் பேச்சை நான் மீறுவேனா”என்று உடனேயே சொல்ல மங்கையின் முகம் மலர்ந்தது.

    

    

    “அப்போ நான் வச்சுட்டு ஆபிஸ் கிளம்பறேன் ப்பா.”என்ற மேகன் எழுந்து கொண்டான்.

    

    

    “வர்மா லீவுக்கு எப்போ அப்ளை பண்ணப் போற”என்றார் அடுத்ததாய்.

    

    

    ஆரம்பிச்சுட்டாங்க என்று முணுமுணுத்தவன் “உங்க கிட்ட கேட்கலாம்னு இருந்தேன்த்தை. நீங்க சொல்லுங்க எத்தனை நாள் லீவ் எடுக்க”என்று கேட்டதில் உச்சி குளிர்ந்து போனார் மங்கை.

    

    

    “என் மருமகன் கிட்ட இருந்து கத்துக்கோ வேலா”என்று பெருமிதமாக சொல்லியவர் “ஒரு வாரம் போதும் வர்மா”என்றார்.

    

    

    ஒரு வாரம் தானா என்று அதிர்ந்தவன் சரியென்று தலையாட்டி விட்டு போய்விட்டான்.

    

    

    இல்லையென்றாலும் மங்கை சொன்ன நாட்கள் மட்டும் தான் விடுமுறை எடுக்க முடியும் எடுக்க வைப்பார் மங்கை. அதற்கு எதற்கு வீண் விவாதம் என்று வழக்கம் போல தலையாட்டிவிட்டுச் செல்ல மங்கைக்கு அதில் அத்தனை பெருமிதம் ‌

    

    

    பெருமிதத்தை உடைக்க பெண்ணரசி வருவாளா…

    

    

   ….. வெண்மேகம் தூறும்