மாமன்கள் மூவரும் ஆர்பாட்டமாக உள்ளே வந்தனர். வீட்டின் செல்வச் செழிப்பு பிரம்மிக்க வைத்தது. மிங் வந்து பார்த்து விவரித்தபோது கூட தோன்றாத வியப்பு, இப்போது விளங்கியது அவன் சகோதரர்களுக்கு. அவர்களும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்கள்தான். ஆனால் இப்படியான ஒரு வரவேற்பறை அவர்களிடம் கூட இல்லை.
வளவன் தன் செல்வப் பெருமையைக் காட்ட இப்படி ஒரு ஆடம்பரக் கூடத்தை நிறுவவில்லை. அவனைப் பொறுத்த வரை இது வணிக யுக்தி. பல்வேறு நாடுகளிலிருந்து வருபவர்களை மயக்கி, பிரமிக்க வைத்து, தான் எதிர்பார்க்கும் விலையை பெற்றுக்கொள்வான். ஆங்காங்கே அவனது சாலையில் செய்யப்பட்ட கைதேர்ந்த வெங்களிப் பொருட்கள், அவனோடு ஒப்பந்தம் செய்து விற்கும் வேறு சில வணிகர்களின் சீனப் பட்டு மெத்தை, ஏன் உயர் ரக செம்மர இருக்கைகள் கூட அவன் விருந்தோம்ப அழைத்துவரும் வணிகர்களை கவரத்தான். அதை அறியாத மெய் லிங்கின் சொந்தங்கள் பொறாமையில் பொசுங்கின.
அந்த கூடத்தில் நடு நாயகமாக மிங் அமர்ந்துகொள்ள, அவன் சகோதரர்கள் இரு புறமும் அமர்ந்தனர். மிங் மனைவி வீட்டின் அரசியாக வேலை ஆட்களை வந்திருப்பவரின் உடமைகளை அறைகளுக்கு எடுத்துச் செல்ல ஏவிக்கொண்டிருந்தாள்.
மிமி வந்து நிற்க, “வேகமாக சென்று தே நீருக்குத் தேவையானவற்றை எடுத்து வரச் சொல் மிமி. அடுத்து ரூயூனை சென்று அழைத்து வா. அவள் வந்து அனைவருக்கும் தே நீர் உபசாரம் செய்யவேண்டுமே. தந்தையை நினைத்து அழுத முகத்தோடு வராமல், சற்று சிரித்த முகமாக வரச்சொல்”, என்று ஏவினாள்.
அடுத்த அரை நாழிகையில், அழகான மென் நீல பாரம்பரிய பட்டில், சிகப்பு வண்ணத்தில் பறவை, மரங்கள் என்று நெய்யப்பட்டு, முழு நீள அங்கி, அதனிடையே உள்ளே வெண்பட்டிலான சற்று இறுக்கமான மேல் ஆடையை வெளிப்படுத்தியது. அவள் நீண்ட கூந்தலை கொண்டையிட்டு, தந்தம் கொண்டு செய்யப்பட்ட சிறு சீப்பு, பறவைகள் என்று அதில் சொருகி அலங்காரம் செய்திருந்தார்கள்.
மென்னடை நடந்து அறைக்குள் வந்தாள் ரூயூன். முகம் நிர்மலமாக இருந்தது. மாமி செயற்கையாக சிரித்து, “வா மகளே. உன் சிறிய மாமன்கள் யாரை அழைத்து வந்திருக்கிறார்கள் பார். எல்லோரையும் வரவேற்று, பருக தே நீர் தந்து உபசரி தங்கமே”, என்று கொஞ்சினார்.
மாமாக்களை முறையாக வரவேற்றவள், எதிர்புறம் வாயைப் பிளந்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஒடிசலான தேகம் கொண்டவனைப் பார்த்தாள். கண்ணில் காமத்தைத் தாண்டி எதுவுமில்லை. அசூயையாக உணர்ந்தவள், அவனை முறைக்கவும், ஒரு அசட்டுச் சிரிப்புடன் பார்வையை தழைத்துக்கொண்டான்.
“என்ன பார்க்கிறாய் ரூயூன். இவர்தான் உனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஸீசாய்”, என்று சொல்ல, பல்லைக் கடித்தவள், வரவழைத்துக் கொண்ட பணிவோடு, தன் இரு கரங்களையும் மடக்கி பின் ஒன்றோடு ஒன்று இணைத்து மார்பின் முன் வைத்து, இடுப்பு வரை குனிந்து நிமிர்ந்து மாமன்களுக்கு செய்ததைப் போல அவனுக்கும் மரியாதை செலுத்தினாள்.
அடுத்து தே நீர் உபசாரம் நடந்தது. அவளது அழகைப் பார்ப்பதா, வீட்டின் செல்வத்தை கணக்கிடுவதா என்று ஸீசாய்க்கு பெரும் சோதனையாக இருந்தது. இப்படி ஒரு அதிர்ஷ்டம் அவனுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிங் குடும்பத்து தூரத்து சொந்தமாக அவர்களிடம் ஒட்டிக்கொண்டு, அவர் சொல்லும் பணிகளை செய்து நல்ல பெயர் வாங்கியிருந்தது, இப்படி ஒரு செல்வமகள் கிடைக்க வழிவகுக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவன் எதிர்பார்த்ததெல்லாம் அவர்கள் தொழிலில் ஒரு மேற்பார்வையாளன் போன்றதொரு பணி. இப்போது தெரியாமல் சிறிய அளவில் சுரண்டிக்கொண்டில்லாமல், சற்று அதிகாரத்தில் இருந்தால், இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் திருடலாம் என்று கணக்கிட்டிருந்தான். இப்போதோ தங்கச் சுரங்கமே கையில் கிடைத்துள்ளது.
மிங்கும் அவர் சகோதரர்களும், அவன்பாலுள்ள நல்லெண்ணத்தால் இப்படி ஒரு வாழ்க்கையை அவனுக்கு தருகிறார்கள் என்று எண்ணும் அளவு முட்டாளல்ல ஸீசாய். அவர்கள் எடுத்தது போக அவனுக்கு பிச்சை போடுவார்கள். அப்படியே எண்ணட்டும். அவன் முன்னே நிற்கும் இவளை மணமுடித்தபின், செல்வத்தை அபகரிக்க அவனுக்கு ஆயிரம் வழிகள் இருப்பது அவர்களுக்குத் தெரியாது.
“தந்தையை யார் இப்படி செய்தது என்று தெரிய வேண்டும் மாமா. தெரிந்ததும் என் கையாலேயே அவர்களின் தலையைக் கொய்ய வேண்டும்”, என்று ரூயூன் கூற, அவளது உறுதி அங்கிருந்த ஆண்கள் அனைவருக்குமே சற்று கலக்கத்தை உண்டு செய்தது.
“கவலைப் படாதே ரூயூன். நம் திருமணம் முடிந்ததும், முதல் வேலையாக அந்தக் கயவர்களைக் கண்டுபிடித்து, தண்டனையை வழங்குகிறேன்”, ஸீசாய் அவள் நல்லெண்ணத்தைப் பெற்றுவிடும் முயற்சியில் வாக்களித்தான்.
தொண்டையை செருமிய இளைய மாமன் செங் லீ, “கண்டிப்பாக… என் அக்காவிற்காகவும், அவள் மகளுக்காகவும் இது கூட செய்ய மாட்டோமா என்ன? ஆனால் பார் ரூயூன், இது போன்ற பேச்சு பெண்களுக்கு அழகல்ல. அடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும். அதில்தான் உன் கவனம் இருக்க வேண்டும்”, என்று அடுத்து காய் நகர்த்தினான்.
குழப்பத்தில் இருப்பவள் போல நெற்றியை சுருக்கிய ரூயூன், “அதில் பாருங்கள் சிறிய மாமா. தந்தை நேற்று விழித்து என்னிடம் பேசிய போது, அவர் பார்த்திருக்கும் மணமனைப் பற்றிக் கூறினார்”, என்று வந்தவர்கள் தலையில் இடியை இறக்கினாள்.
அதிர்ந்து நோக்கிய இரு மாமன்களும் எதுவும் உளறி வைக்கப்போகிறார்களோ என்று இடை புகுந்த மிங், “இரவு சில நொடிகள் முழித்தான் என்று ரூயூன் கூறுகிறாள். அவனைக் காப்பாற்றி அழைத்து வந்ததாக கூறிக்கொள்ளும் இரு இந்-தூக்களில் ஒருவனை ரூயூனுக்குப் பார்த்திருக்கும் மணமகன் என்று கூறினானாம் ஷீ. அதற்கு மேல் எதுவும் சொல்வதற்குள் மீண்டும் மூர்ச்சையாகிவிட்டானாம்”, என்று சற்று அலட்சியமான நம்பிக்கை இல்லாத பாவனையாக முடித்தான்.
அவர்கள் பேசுவதைக் கேட்ட ரூயூனிற்கு சினம் ஏற, “மூன்று பேர் அவரை சுற்றி நின்று தாக்கியதாகவும் கூறினாரே மாமா. அதை சொல்லவில்லையே தாங்கள்”, என்றாள் பணிவாக.
இரு சிறிய மாமன்களின் கண நேர அதிர்வையும், இளைய மாமன் செங் லீயின் முகம் வெளிறிப் போவதையும் கண்டுகொண்டாள். ஸீசாயின் கண்களும் இந்த முக மாற்றங்களைக் கண்டு கொண்டன. ‘ஆக இது எதிர்பாரா சம்பவத்தைக் கொண்டு ஆதாயம் தேடவில்லை. இவள் தந்தையை கொல்வதில் இவர்களுக்கும் பங்கிருக்கிறது’, என்று நினைத்தவன் பல்வேறு கணக்குகளை யோசித்தான்.
“மூவர் சுற்றி நின்று தாக்கினார்களா? மூவர் என்று மட்டும்தானே என்னிடம் கூறினாய்? வேறு என்ன பேசினான் ஷீ? முழுவதுமாகச் சொல்”, என்று ஆத்திரத்தோடு வினவினான் மிங்.
ஓங்கிய குரலுக்கு பயம்கொள்வது போல முகத்தை வைத்துக்கொண்டு, “அது உங்களிடம் கூறினேன் என்றுதான் நினைத்தேன் மாமா. தந்தை பேசிய மகிழ்ச்சியில், உணர்ச்சிகரமாக இருந்ததில் விட்டுப் போயிருக்கலாம். வேறு ஒன்றும் சொல்ல வில்லை. ம்ம்… ஆங்… வயிற்றுப் பகுதியில் வலிப்பதாகக் கூறினார்.
அவளை ஒரு லேசான முறைப்புடன், “அடுத்த முறை எனக்கு உடனே தெரிவிக்க வேண்டும். வந்தவர்கள் ஓய்வெடுக்கட்டும். நீ ஸீசாயை அழைத்துச் சென்று அவன் அறையைக் காட்டு”, என்று கட்டளை இட்டான் மிங்.
“யார் அந்த இன்-தூ? அவனை அனுப்பிவிட வேண்டியது தானே மாமா”, என்று அவன் காரியத்தில் கண்ணாக இருந்தான் ஸீசாய். ரூயூனை மணக்க அவனோடு இன்னொருவனும் களத்தில் இருக்கிறான் என்பதே கசந்தது.
“முடியாது. தந்தை விழித்து ஒரு முடிவு சொல்லும் வரை அவர்களும் இங்கே இருப்பார்கள்”, என்று உறுதியாகக் கூறிவிட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள் ரூயூன்.
“அப்படியே அவள் தந்தையின் திமிர்!”, என்று மிங்கால் பொருமத்தான் முடிந்தது.
ரூயூன் சார்பாக மிமி மன்னிப்பு கோரி, தான் ஸீசாயை அழைத்துச் செல்வதாகக் கூற, முணுமுணுப்புடன் கலைந்தார்கள்.