பலகணியிலிருந்து சரசரவென்று இறங்கி வந்த உருவம், இருட்டில் கலந்து குடிலை வந்து சேர்ந்தது. காவலாளி உட்கார்ந்த நிலையிலேயே உறக்கத்தை தழுவியிருந்தான். சற்றே தலையசைத்து தன் பிடித்தமின்மையைக் காட்டினாலும், தன்னிடமிருக்கும் திறவுகோலால் ஒலி எழுப்பாமல் கதவை திறந்து உள்ளே நுழைந்தது.
தூங்கா விளக்கு லேசான ஒளியைப் பாய்ச்ச, மெல்ல பக்கவாட்டு அறை வாயிலை அடைந்தது உருவம். நண்பர்கள் இருவரும் படுத்திருக்க,
“ஷ்…ஷ்…. நான் ரூயூன். எழுந்திருங்கள்”, என்ற குரலில் ஆச்சரியம் மேலிட மாறன் எழுந்து அமர, வல்லபன் ஆழந்த நித்திரையில் இருப்பது போல படுத்தேயிருந்தான். அவன் ரூயூனை நம்புவதாக இல்லை.
“தேவி? என்ன இந்த நேரத்தில்? தந்தைக்கு எதுவும்?”, என்று தொடங்க,
“எந்த பின்னடைவும் இல்லை என்பது மட்டுமே நிலை. எனக்கு உங்களால் ஒரு உதவி வேண்டும்”, என்று இடைமறித்தாள் ரூயூன்.
அறையின் மூலையிலிருந்த விளக்கிள் ஒளியை சற்று பெரிதாக்கி அருகில் எடுத்து வந்த மாறன், “இது என்ன வேலையாள் மாதிரி உடை?”, என்றான்.
“ம்ப்ச்… யாருக்கும் தெரியாமல் வந்திருக்கிறேன். நாளை ஒரு நாடகம் நடக்கப் போகிறது. அதற்கு உங்கள் உதவி தேவை. எனக்குப் பார்த்த மணமகனாக நடிக்க வேண்டும். முடியுமா?”, ரூயூனின் கேள்வியில் உறைந்து நின்றான் மாறன்.
இதற்கு மேலும் படுத்திருக்க முடியாது, எழுந்த வல்லபன், “ஏன்?”, என்று கேட்டான். இதிலும் எதுவும் வில்லங்கம் இருக்குமோ என்று சந்தேகம்.
விளக்கொளியில் இருவரையும் பார்த்த ரூயூன், அவர்கள இலகுவான ஆடையில் இல்லாதிருப்பதைப் பார்த்து, “இருவரும் இன்று இரவு தப்பிச் செல்ல நினைத்திருந்தீர்களோ?”, என்றாள் ஒரு புருவம் தூக்கி.
அவளின் புத்தி கூர்மையில் சற்றே அயர்ந்தார்கள் இருவரும்.
மென்னகையுடன், “உங்கள் மணமகனாக நடிக்க “, என்று ஆரம்பித்த மாறனை இடைமறித்து, “வளவனார் மகள் வேண்டும் உதவியைப் பற்றி இன்னும் சற்று விரிவாகக் கூறுவார் மாறா. அதை கேட்டுவிட்டு முடிவு செய்வோம்”, என்று நிறுத்தினான்.
வல்லபனைப் பார்த்து ஒரு புன்முறுவலுடன், “மெச்சுகிறேன்”, என்று மட்டும் கூறியவள், “என் அன்னையின் மூத்த சகோதரரும், அவர் மனைவியும் வந்திருக்கிறார்கள். தந்தை இப்படி இருப்பதில் ஆதாயம் தேடி எங்கள் தொழிலையும்,என்னையும் பார்த்துக்கொள்ள மணமகனை தேர்ந்தெடுத்துவிட்டதாகக் கூறுகிறார்”, என்று நிறுத்தினாள்.
“ஆக எங்களைவிட அவருக்குத்தான் உங்கள் தந்தையை கொல்ல நோக்கம் இருக்கிறது?”, வல்லபன் விடாமல் கேட்க, “வல்லபா… அதற்கு இதுவல்ல நேரம். நீங்கள் கூறுங்கள் தேவி”, என்றான்.
“என் தந்தை எனக்காக பார்த்த மணமகன் நீங்கள்தான் என்று சொல்லப்போகிறேன். நீங்கள் என் தந்தை வழி உறவு. வணிகம் செய்ய அவரை நாடி வந்து கேளிக்கை மாளிகையில் பார்த்து பேச, உங்களால் கவரப்பட்டு என்னைப் பார்க்கவென்று டாங்ஜின் வரவழைத்திருக்கிறார்”, என்று கூறப் போகிறேன்.
“ஆனால், ஊர் மக்களிடம் விசாரித்தால் குட்டு வெளிப்படுமே தேவி”, மாறன் கூற,
“ம்ம்… நானும் யோசித்தேன். இரவு தந்தை கண்விழித்ததாகவும், நீங்கள்தான் அவர் வரச் சொல்லியிருந்தவர்கள் என்று சொன்னதாக சொல்லவேண்டும்”
“குத்தியவர்கள் யார் என்று சொல்லவில்லையா என்ற கேள்வி வருமே?”, வல்லபன் கேட்க, “மூன்று பேர் என்று சொன்னார், அதற்குள் மூர்ச்சையாகிவிட்டார் என்று கதை புனையவேண்டும்”, என்றாள் தோள் குலுக்கி.
“ஹம்ம் சிறப்பு”, என்றான் வல்லபன். அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று ரூயூன் சொல்லுவது அவர்களுக்குமே ஆதாயமான விஷயம்தான்.
“தேவி, அவர் முழித்து உங்களிடம் பேசினார் என்று செய்தி கசிந்தால் அவரை மீண்டும் கொலை செய்ய முயற்சிகள் நடக்கலாம். பாதுகாப்பு அதிகமாக இருக்க வேண்டும்”, என்றான் மாறன்.
அவனை நோக்கியவள், “நன்றி. நானும் அதை கணித்தேன். நாளை சிறிய மாமன்கள் வந்து இறங்குவார்கள். விழிப்புடன் இருக்க தேவையானதை செய்கிறேன்”
“மொத்தம் எத்தனை மாமன்கள் உங்களுக்கு?”, வல்லபன் கேட்க,
“மூன்று”, என்று முறுவலித்தாள் ரூயூன்.
ஒரு அதிர்ந்த பார்வையுடன், “பின், அது… “, என்று ஆரம்பித்து நிறுத்தினான் வல்லபன்.
“ஹ்ம்ம்… என்னவென்று பாருங்கள், ஏன் எனக்குத் தெரியாமல் சற்று மிரட்டிக் கூட கேளுங்கள். உங்கள் வாயடைக்க பொற்காசுகள் தந்தாலும் தருவார்கள், அல்லது உங்கள் கதையை முடிக்க முயல்வார்கள். எப்படி நடந்துகொள்வது என்று நீங்களே முடிவெடுங்கள்”, என்றாள் ரூயூன் வல்லபனை உற்று நோக்கி.
“இப்போது நான் உங்கள் தந்தை தேர்ந்தெடுத்த மணமகனாக நின்றாலும், என்னை மணமுடிப்பதாக நீங்கள் கூறினால் என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை தேவி. நஞ்சு தோய்ந்த கத்தி என் மீது அதற்காகவே பாயலாம்”, என்றான் மாறன்.
சற்று யோசித்தவள், “ஹ்ம்ம்…வாய்ப்பு இருக்கிறது. சரி, இவர்களை நான் துரத்தியடிக்கும் வரை உடனிருந்து இருவரும் எனக்கு உதவி புரியுங்கள். உங்களுக்கு வேண்டிய சிறந்த தரத்திலான வெங்களியை நான் வெகுமதியாகவே தருகிறேன்”, என்று வாக்களித்தாள்.
“நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நம்புகிறீர்களா?”, என்று வல்லபன் கேட்க,
“நீங்கள் வழிமாறிச் சென்றது உண்மை என்று விசாரணையில் தெரிந்தது. அங்கிருந்து வரும் தூரத்தைக் கணக்கிட்டால் தந்தைக்கு இப்படியாகும் நேரமும், நீங்கள் அவரை அழைத்து வந்த நேரமும் பொருந்துகிறது. முழுதுமாக இல்லையென்றாலும் ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. அதோடு, இருக்கும் சூழ் நிலையில் உங்களை நம்புவதைத் தவிர எனக்கு வேறு வழியும் இல்லை. சரி நாளை காலை நல்ல உடை உடுத்தி தயாராக இருங்கள். அழைப்பு வரும்”, என்று கூறி வந்த வழியே மறைந்தாள்.
“அவளோடுதான் நான் சேர வேண்டும் என்ற விதியிருந்தால் நடக்கும் என்று சொன்ன உன் வாய்க்கு இனிப்பை அள்ளித் தர வேண்டுமடா வல்லபா. சந்திப்பதென்ன, அவளை மணமுடிப்பவனாகவே விதி என்னை மாற்றியிருக்கிறது”, என்று உவகை பெருக மாறன் கூற,
“நண்பா, தரை இறங்கு. நடிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறாள். நடிப்பதற்கும், அதிலுள்ள ஆபத்தைக் கணக்கிட்டும் நமக்கு கூலி கூட பேசியிருக்கிறாள். மறந்துவிடாதே!”, என்று எச்சரித்தான் வல்லபன்.
“இல்லையடா, அவள் நன்மதிப்பைப் பெற இது ஒரு பொன்னான வாய்ப்பு”, என்ற நண்பனைப் பார்த்த வல்லபன், “ஆக உன் குடும்பம் மறந்துவிட்டது? வளவனாரைப் போல நீயும் இவளை மணந்து இங்கேயே தங்கிவிடப்போகிறாய்?”, என்று கனவில் மிதந்த மாறனை சட்டென்று நடப்பிற்குக் கொண்டுவந்தான்.
பேசிப் பேசி இருவருக்கும் அது தூங்கா இரவாகவே கழிந்தது. கதிரவன் உச்சிக்கு வர இன்னும் சில நாழிகைகளே இருக்கும் பொழுது, காவலாளி அழைத்துப்போக வந்தான். குளித்து, உணவருந்தி, வெண்ணிற பருத்தி ஆடைகள் அணிந்து பளிச்சென்று கிளம்பி நின்றார்கள் இருவரும்.
வாசலுக்கு வந்த மிமி, இன்முகமாக உள்ளே அழைத்துச் சென்றார். இருவரும் எதிர்பார்த்தது போன்றே, மிக அழகான ஒரு நீண்ட கூடம், அலங்காரத் தூண்கள், அதில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு செல்வ மிகையைக் கூறியது. சூரிய வெளிச்சமும் காற்றும் அறையை நிறைக்கும் வகையில் சாளாரங்கள் அமைந்திருந்தன.
செம்மரத்திலான இருக்கைகள், நீள் இருக்கைகள் இருந்தன. கூடத்தின் மறுபுறம் மற்றுமொரு அறைக்கு அழைத்துச் சென்றார் மிமி. சுகந்த நறுமணம் வீச, பத்துபேர் அமர்ந்து பேசும் அளவு பெரிதாக இருந்தது.
இரு கரம் கூப்பி வரவேற்றாள் ரூயூன். அடுத்து சீன மொழியில் மாமனுடன் பேசினாள். அவரும் அவர் அருகே அமர்ந்திருந்த பெண்மணி, அவள் மாமியாக இருக்க வேண்டும், அளவிடும் பார்வைகளை வீசினர்.
மாறனும், வல்லபனும், மிங்கையே நோட்டமிட்டிருந்தனர். “மூவரில் ஒருவன் இவனாகக் கூட இருக்கக் கூடும் நண்பா”, ஒரு பெரிய புன்னகையூடே முணுமுணுத்தான் வல்லபன்.
“யாரிவர்கள் தேவி”, என்று புதிதாகப் பார்ப்பது போலக் கேட்டான் மாறன். இருவரையும் அமரும்படி கூறி தே நீர் உபசரித்தாள் ரூயூன். எடுத்துக்கொண்டவர்களைப் பார்த்து, “இவர்கள் என் மாமன் மாமி. நீங்கள் என் தந்தை எனைப் பார்க்க வரச்சொல்லி வந்தது உண்மை என்று புரிந்தது. நேற்று தந்தை சில நொடிகள் கண் விழித்துப் பேசினார்”, என்று மகிழ்வுடன் ரூயூன் கூற, நண்பர்கள் இருவரும் ஆச்சரியபடுவதாக நன்றாகவே நடித்தனர்.
“என் மருந்து வேலை செய்தது போலவே?”, என்று கேட்கவும், மாமனிடம் சீன பாஷையில், மாறனைக் காட்டி, “விஷ முறிவுக்கு இவர்தான் மருந்து கொடுத்தார். அதுதான் தந்தைக்கு முழிப்பு வர காரணமோ தெரியவில்லை. இரண்டு வேளை கொடுத்திருந்தோம். இன்றும் தொடர்ந்தால், மீண்டும் முழிக்க வாய்ப்பு இருக்குமென்று நினைக்கிறேன்”, என்று சொல்லி, மீண்டும் தமிழிலும் கூறினாள்.
மிங், “இவர்களே குத்திவிட்டு, இவர்களே மருந்து தந்திருக்கலாமே”, என்று கேட்க, “அதில் என்ன ஆதாயம் கிடைக்கும் மாமா? தந்தையே என்னைக் காண இவர்களை அழைத்திருக்கும்போது இப்படி ஒரு காரியம் செய்ய தேவையே இல்லையே? தொழில் முறை எதிரிகளின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். மூவர் என்று சொன்ன தந்தை அவர்கள் யார் என்று சொல்லாமலா இருப்பார். காத்திருப்போம்”, என்று கூற சற்றே சங்கடத்துடன் நெளிந்தார் மிங்.
“உன் சிறிய மாமன்கள் நான் உனக்குப் பார்த்து வைத்திருக்கும் மணமகனுடன் வந்து கொண்டிருப்பார்கள். இந்த இந்-தூ எப்படி உனக்கு மணமகனாக சரி வருவான்? அனுப்பி வை. அல்லது இவனை மணமுடித்து அவன் நாட்டிற்கு சென்றுவிடப் போகிறாயா?”, மிங்கின் கேள்வி ஓரளவு புரிய, மெல்லிய குரலில் மாறனுக்கு மொழி பெயர்த்தான் வல்லபன்.
“தந்தை நலம் பெறும் வரையில் எந்த முடிவும் என்னால் எடுக்க முடியாது மாமா. நீங்கள் சொன்னது போல தொழிலைப் பார்க்க வேண்டும். அதற்கு என்னைப் பெற்றவர், நன்றாகவே தயார் படுத்தியிருக்கிறார். உங்கள் அக்கறைக்கு மிக நன்றி. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஓய்வெடுங்கள்”, என்று பணிவாகவே கூறினாள்.
“அறியாமல் பேசுகிறாய். என்றோ ஒரு நாள் தந்தையுடன் சென்று பார்ப்பதற்கும், இப்போது முடிவுகளை எடுத்து தலைமையை நிலை நாட்டவும் பெரிய வித்தியாசம் உண்டு. இவர்களை முதலில் போகச் சொல்”, என்று அலட்சியமாகக் கைகாட்டிப் பேசவும், அவர் உடல்மொழியும் பேச்சு தொனியுமே மாறனுக்கு புரிய வைத்தது.
மிங்கின் கண்களை உற்று நோக்கியவன், மெல்ல ஒரு புருவம் உயர்த்தி கேள்வியாகப் பார்க்க, சற்றே தடுமாறி பார்வையை தழைத்தார் மிங்.
ரூயூன் விடை கொடுக்க, “தேவி. என் உதவி தேவைப்பட்டால் அவசியம் அழையுங்கள். அதோடு எங்கள் பொருட்கள் இரண்டினை திருப்பி அனுப்பினால் அனைவருக்கும் உதவும்”, விடைபெறுவதைப் போல குறு வாள்களை நினைவுறுத்தி வெளியேறினார்கள் நண்பர்கள் இருவரும்.
வெங்களிச் சாலையைப் பார்க்க வேண்டும் என்று துடித்த மாமனை, சிறிய மாமன்களும் வந்துவிடட்டும். நாளை சென்று பார்க்கலாம் என்று ஒரு வாறாக சமாளித்து அனுப்பி வைத்த ரூயூன்,
“ஆயி, எவரும் கேட்டால் நான் ஓய்வெடுப்பதாக சொல். நான் வேலையாள் போல சாலைக்குச் சென்று இன்று நடக்க வேண்டியவற்றை கவனித்துவிட்டு வருகிறேன். தந்தையின் காவலுக்கு நம் வேலையாட்கள் இருவரை கூடுதலாக காவல் வைத்திருக்கிறேன். அதே போல மருத்துவரையும் கண்காணிக்க ஆள் அமர்த்தியிருக்கிறேன். ஆசை காட்டியோ, மிரட்டியோ மருத்துவர் மூலமாகக் கூட தந்தையின் கதையை முடிக்க வாய்ப்பு உண்டு. நீ மாமியோடு இணக்கமாக பேச்சு கொடுத்து, அவர்கள் என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் என்று செய்தி சேகரிக்க வேண்டும்”, ஆறுதலாக அணைத்துக்கொள்வது போல மிமியை அணைத்தபடி காதில் முணுமுணுத்தாள்.
“பிணம்தின்னிகள், மொத்தமாக எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளத்தான் இந்தத் திட்டம். மணமுடிப்பது போல முடித்து வைத்து, பின் அவனையும் கொன்று, உன்னை மூலையில் முடக்கிவிடத்தான் எண்ணியிருப்பார்கள்”, மிமிக்கு ஆத்திரத்தில் உடல் நடுங்கியது.
“அவர்களை வெளிப்படையாக பகைத்துக்கொள்ளாதே மகளே. எதற்கும் துணிந்த கயவர்கள். அவர்கள் வழியில் சென்றுதான் தப்பிக்க வேண்டும். இந்த இந்-தூக்களுடனும் சற்று எச்சரிக்கையாகவே இரு”, என்று அறிவுரைத்தார் மிமி.
கதிரவன் மேற்கில் சாயத் தொடங்கி சில நாழிகையில் வாயிற்புறம் பரபரப்பானது. புரவிகளும் பல்லக்குகளுமாக வந்து இறங்க, வீட்டின் ஆளாக மிங், மனைவியை அழைத்துக்கொண்டு வரவேற்கச் சென்றார்.
சில நாழிகைக்கு முன்பாகவே மாமி ரூயூனை நச்சரித்து உடை, தலையலங்காரம் என்று மணமகனை வரவேற்க தயார் செய்திருந்தார். தந்தையின் கவலையில் இருந்தவளுக்கு எழுந்த அத்தனை கோபத்தையும் மிமிதான் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
“அவர்கள் அழைத்து வரும் மணமகனைப் பார்க்கக்கூட முடியாதென்றால் அதுவே அவர்களுக்கு ஒரு காரணமாக அமையும். பார்த்துவிட்டு நிராகரிப்போம்”, என்று பேசி சரிகட்டியிருந்தார்.