இரண்டு நாட்கள் முழுதுமாக கழிந்திருந்தது, டாங்ஜின் பற்றிய விவரம் சேகரித்து, வழித்தடத்தை அறிந்து நண்பர்கள் இருவரும் வந்து சேர. அப்போதும் திசை மாறிச் சென்று, வல்லபனின் உடைந்த சீனப் புரிதலை வைத்து அவர்கள் சொல்வதை ஒரு வழியாக அறிந்து தெளிந்து வந்து சேரும் வேளை இருட்டிவிட்டிருந்தது, இருவரும் கையில் தீப்பந்தம் ஏந்தியபடியே குதிரையை அந்த ஒற்றையடிப்பாதையில் மெதுவாக செலுத்திக்கொண்டு வந்தனர்.
சற்று தொலைவில் மனிதக் குரல்கள் கேட்கவும் முன்னால் சென்றுகொண்டிருந்த மாறன் புரவியின் வேகத்தைக் கூட்டினான். வளைவு திரும்பவும் அவன் கண்டது ஒருவனை மூவர் சூழ்ந்து வாள்முனையில் நிறுத்தி வைத்திருந்தனர். அதில் ஒருவன் தன் குறுவாளை எதிரில் இருப்பவனை குத்த முற்படுவதைப் பார்த்த கணம், “ஏய்… யாரங்கே!” , மாறன் ஓங்கிக் குரல் கொடுத்தபடி புரவியை விரட்டினான்.
வேறு யாரும் இருப்பார்கள் என்று எண்ணாதவர்கள், குதிரைக் குளம்படி சத்தமும், ஓங்கிய அன்னிய குரலும் திடீரென்று கேட்க கவனம் சிதறிவிட நெஞ்சிற்கு குறிவைக்கைப் பட்ட வாள் வயிற்றில் பாய்ந்தது.
மாறனின் பின்னே வந்த வல்லபனின் குரலும் சேர, மூவரும் சட்டென்று இருட்டில் மறைந்துவிட்டனர். கீழே குத்துப்பட்டு விழுந்திருந்த உருவத்தை நோக்கி தீப்பந்தத்துடன் அருகே வந்து பார்த்த மாறனுக்கு, சில நொடிகளானது அதிர்விலிருந்து மீள.
“வ…வளவனாரே! நீங்களா? யார் அவர்கள்?”, அவர் தாடையை தன்புறம் திருப்பினான். மெல்ல கண்ணைத் திறந்து பார்த்த வளவனுக்கு இவர்களை அடையாளம் தெரிந்தது போலும். பேச முயற்சித்தவருக்கு வெறும் காற்றுதான் வந்தது. கைகளை பாதையை நோக்கி நீட்டினார்.
“நண்பா, குருதி பெருகி வருகிறது. கயவர்கள் கத்தியை உருவிச் சென்றிருக்கிறார்கள்”, தன் மேல்துண்டை எடுத்து அழுத்தமாக வளவனின் வயிற்றைச் சுற்றி முடிந்த வரை அவரை அசைக்காமல் கட்டினான். நொடியில் துண்டு சிகப்பாயிற்று. மாறனின் துண்டையும் சேர்த்து வைத்து அழுத்த, முனகல் மட்டுமே வந்தது வளவனிடம்.
அடுத்து வேகவேகமாக வளவனைப் புரவியில் ஏற்றி பின்னோடு அமர்ந்து குத்துப்பட்ட இடத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்டான் மாறன், வல்லபன் முன்னே செல்ல, சற்று தொலைவில் ஊர் இருப்பதற்கான ஒளி தெரிந்தது. அனேகமாக அவர்கள் தேடி வந்த டாங்ஜின் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.
ஊரின் எல்லைக்குள் நுழையவும், சிலர் ஓடி வந்தார்கள். மாறனின் தீப்பந்த வெளிச்சத்தில் ஷீயை கண்டவர்கள் வேகவேகமாக பேச நண்பர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
“மருத்துவர்… இரத்தம்”, என்று சீன மொழியில் வல்லபன் கூறியதுதான் தாமதம் இன்னும் சத்தம் கூடியது. பேசி புரியவைக்க முடியாது என்று நினைத்த மாறன், வளவனை இறக்க வந்த கைகளைத் தடுத்து, புரவியிலேயே ஊருக்குள் செல்ல முற்பட்டான்.
கூட்டத்தின் குரல் சற்று கோவமாக மாறியது. வல்லபன் வேகமாக, “பங்யாவ்…பங்க்யாவ்” என்று கத்தினான்.
“என்னடா?”, மாறனின் கேள்விக்கு, “நண்பன் என்று கூறினேன்”
“மிக அவசியம். இவர் வீடெங்கே என்று கேள்!”, என்று அரட்டினான்.
வளவனைக் காட்டி, வல்லபன் இல்லம் என்ற வார்த்தையை மூன்று நான்கு முறை கத்தவும், சலசலத்த கூட்டத்திலிருந்த ஓரிருவர் கையை வீசி வரச் சொன்னார்கள், புரவியை சற்று வேகப்படுத்தினான்.
அதற்குள் வேகமாக ஒடிசலான தேகம் கொண்ட ஒரு உருவம் வாளுடன் ஓடி வந்தது. சீனத்து கால் சராயும் மேல் அங்கியும், தோளில் போர்த்திய துண்டுமாக ஓடி வர, ஆண் என்றே நினைத்தனர் தோழர் இருவரும். பின்னோடே இன்னும் இருவர், ராந்தலுடன் வந்தனர்.
“பாபா”, என்ற குரல் அந்த உருவம் பெண் என்பதை தெரிவித்த அதே நொடி, வல்லபனின் தீப்பந்த வெளிச்சம் அந்த முகத்தில் விழ, சீன முகவெட்டில் அகன்ற கண்களும் கூர் மூக்கும் மென்சிவப்பில் மெல்லிய உதடுகளும் தெரிய, மாறன் கண்ணெடுக்காது விளக்கொளியில் தெரிந்த தேவதையின் முகத்தில் லயித்திருக்க,
“பாபா”, என்று தவிப்பாக விளித்தவள், வல்லபனையும் மாறனையும் ஒரு நொடி நோக்கினாள்.
“யார் நீங்கள்? என் தந்தையை என்ன செய்தீர்கள்?”, தமிழில் பேசவும், “ஊஃப்”, என்று காற்றை வெளியிட்டு தன்னை மீட்ட மாறன்,
“குறுவாளால் குத்தப்பட்டிருக்கிறார். மருத்துவரை வரச்சொல்லுங்கள் முதலில். நேரம் ஆக ஆக உதிரம் இழந்துகொண்டிருக்கிறார். வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். பிறகு பேசலாம்”, என்று சுருக்கமாகக் கூறினான்.
நொடியும் தாமதிக்காமல், வல்லபன் குதிரை பக்கமாக வந்தவள், சட்டென்று ஏறி அவன் முன் அமர்ந்து குதிரையை செலுத்தினாள்.
கண் இமைக்கும் பொழுதில் லாவகமாக தன்னிடம் லகானைப் பறித்து, குதிரையிலும் ஏறி அமர்ந்த பெண்ணை அதிசயத்து முடிக்கும் முன் ஒரு பெரிய மாளிகையின் வாசலுக்கு வந்துவிட்டிருந்தனர். ஊரும் அவர்கள் பின்னேயே ஓடி வந்தது.
ஷீயை இறக்கி உள்ளே தூக்கிச் சென்று அவர் அறையில் படுக்க வைத்து, வைத்தியர் தன் சிகிச்சையை துவங்க, பெருக்கெடுக்கும் கண்ணீரோடு நின்றிருந்தாள் ரூயூன். மிமி வந்து அவளை அணைத்தவர்,
“மருத்துவர் அவர் வேலையை செய்வார். உடன் மிங் இருக்கிறான். நீ வெளியே வா ரூயூன். ஊரே வாயிலில் காத்து நிற்கிறது”, என்று அழைத்து வந்தார்.
தந்தை சுவாசிக்கிறார் என்ற ஒரே பிடிமானத்தைக் கொண்டு தன்னை ஒருவாறாக சமாளித்த ரூயூன், ஒரு பெருமூச்சுடன், அவள் ஆயியுடன் சென்றாள்.
வாசல் திண்ணைக்குச் சென்றவள், ஊர் மக்களிடம் தந்தை நலனைப் பற்றிச் சொல்லி அவர்களின் பிராத்தனைகள் மட்டுமே இப்போதைக்கு தேவை என்று பேசி காலையில் வருமாறு பணித்தாள்.
கூட்டதிலிருந்து சில குரல்கள் ஒலித்தது. அதுவரையில் ஒரு ஓரமாக அமர வைக்கப்பட்டிருந்த மாறனும், வல்லபனும் இரு ஆட்களால் அழைத்து வரப்பட்டார்கள்.
அவர்கள் இருவரையும் ஊடுருவிப் பார்த்தன ரூயூனின் விழிகள். அவள்து சிறு பிராய அனுபவங்கள் இந்-தூ நாட்டவரை அதிகம் நம்பவிடவில்லை.
“ம்ம்…உங்கள் கதையைக் கூறுங்கள். யார் நீங்கள். என்ன ஆனது?”, என்று வினவினாள்.
கேளிக்கை விடுதியில் வளவனை சந்தித்ததையும், வெங்களிப் பொருட்கள் வாங்க டாங்ஜின் வரும்படி அவர் அழைத்ததும், அதன் பொருட்டே அவர்கள் வந்ததாகக் கூறினான் மாறன். அவன் வார்த்தைகள் கனிந்தே வந்தன். நண்பனுக்கு இப்படிக்கூட பேசத் தெரியுமா என்று சற்றே விந்தையாக நோக்கினான் வல்லபன்.
தன் அழகில் மையலுற்று தேன் பேச்சு பேசும் பல கயவர்களைக் கடந்து வந்த ரூயூனிடம் சுத்தமாக இது எடுபடவில்லை.
தந்தையைக் கொல்ல முயன்றவர்கள் யார், என்ன கண்டார்கள்? சரியாக அந்த நேரத்திற்கு எப்படி அவ்விடம் வந்தார்கள் என்று பலப் பல கேள்விகள் அவளிடமிருந்து வந்தது.
அவள் அவர்களை நம்பவில்லை என்பது நிதர்சனமாகத் தெரிய, மாறனின் பொறுமை வல்லபனிடம் இல்லை.
“நாங்கள் எங்கேயும் ஓடிவிடவில்லை பெண்ணே. நாங்கள் வழி தவறிச் சென்ற ஊரைக் காட்டுகிறேன். விசாரித்துக்கொள்ளுங்கள். வளவனாரை கொல்ல எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. வாள் முனையில் அவரை நிறுத்தியிருந்த மூவரும் சீனர்கள். அவர் எதிரி யார் என்று நீங்கள்தான் விசாரிக்க வேண்டும். காப்பாற்றிய எங்களை விரோதிகளாகப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை”, படபடவென்று பேசினான்.
கூட்டம் சலசலக்கவும், ரூயூன் அவர்களைக் கைகாட்டி எதோ சமாதானமாகக் கூறினாள். பின் கூட்டம் கலையத் தொடங்கியது.
“தந்தை கண் விழித்து சொன்னபின், அல்லது, என் விசாரணை முடியும் வரை இங்கேயே காவலில் வைக்கப்படுவீர்கள். குற்றவாளி என்று நிரூபணம் ஆகும் வரையில் விருந்தாளியாகவே நடத்தப்படுவீர்கள்”, என்று அவர்களுடன் நின்ற இருவரிடம் கண்காட்டினாள்.
“வளவனாரின் ஓரே மகள், ரூயூன் என் பெயர்”, என்றாள் மையமாக.
“ஓ..அது உங்கள் தாயாரா?”, என்று மிமியைக் காட்டி வல்லபன் கேட்க, முகம் சுருக்கியவள், “என் அத்தை. அன்னை உயிருடன் இல்லை”, என்றதோடு விருட்டென்று திரும்பி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
தனிக் குடிலொன்றில் விடபட்டு வாசல் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில், உள்ளேயும் ஒருவன் காவலுக்குப் படுத்துக்கொண்டான்.
“இதென்ன மாறா நல்லது செய்ய முனைந்தாலும் வம்பாகப் போய்விட்டது?”, வல்லபன் புலம்ப, அங்கே குவளையிலிருந்து நீரை எடுத்துப் பருகியவனோ,
“என்ன வம்பாகிவிட்டது? இரவில் செல்கிறோம், சத்திரம் சாவடி இருக்குமோ இல்லை மரத்தடிதானோ என்று கேட்டுக்கொண்டிருந்தாய், இதோ மஞ்சமே கிடைத்திருக்கிறது. இரத்தம் தோய்ந்த நம் ஆடைகளை சுத்தம் செய்ய வாங்கிச் சென்றுள்ளார்கள். இன்னும் என்ன?”, என்றான் மாறன்.
“ம்ம்… உணவு?”, கேட்கும் போதே கதவு தட்டும் சத்தம் கேட்டு அவர்களுடன் இருந்த காவலாள் எழுந்து சென்றான். அடுத்த சில நிமிடங்களில் ஆவி பறக்கும் சுடு சோறும், பாலும், பழங்களும் வந்தன.
தோடம்பழத்தை# ஆவலோடு எடுத்தான் வல்லபன். “இங்கே வந்ததில் இது ஒன்றுதான் என் மனதைக் கவர்ந்திருக்கிறது மாறா. என்ன இனிப்பு? ஆகா. எலுமிச்சையும், நாரத்தங்காயும் இருக்கும் குடும்பத்தில் இப்படி இனிப்போடு நாரங்கியும்# இருக்கிறதே. சிலாகித்து அதன் சுளைகளை ஒவ்வொன்றாய் உண்டான்.”
நண்பனைப் பார்த்து நகைத்த மாறன், அதுவரை தெரியாதிருந்த பசியை உணர்ந்து அரிச் சோறும் பாலுமாக கலந்து உண்டு பசியாற்றிக்கொண்டான்.
“தேவிதான் அனுப்பியிருப்பாள் என்று நினைக்கிறேன். தந்தை உயிருக்குப் போராடும் நேரத்திலும் விருந்தினரை கவனிக்கும் பாங்கு அடடா!”, என்று பாராட்டிய மாறனை வெட்டவா குத்தவா என்று முறைத்தான் வல்லபன்.
“அவள் பேர் ரூயூன். நீ மையலில் என்ன பிதற்றினாலும் அது உண்மையாகாது. நம்மை அவள் சிறிதும் நம்பவில்லை. நாம் இங்கே கைதிகள்தான். அனேகமாக நமது உடையை வாங்கியதும், உணவு அனுப்பியதும் அந்த வயதான பெண்மணி அவள் அத்தையாகத்தான் இருக்க வேண்டும்”, வல்லபன் நிதர்சனத்தை உரைத்தான்.
அதை சற்றும் சட்டை செய்யாது, “என்ன ஒரு ஆளுமை அவளிடம் என்று கண்டாயா வல்லபா? முதற்கட்ட அதிர்ச்சியில் சற்று தடுமாறினாலும், அடுத்து அந்த மக்களிடையே பேசியதும், அவள் பேச்சை கேட்டதும் அத்தனைக் கூட்டமும் அடங்கி கலைந்ததும், சிற்றரசி போலவே இருந்தாள். ஒருவேளை இந்தப் பிராந்தியத்திற்கு இளவரசியாக இருப்பாளோ? அந்தக் காவலனிடம் பேச்சு கொடுத்து விசாரிக்க முயலேன்”, மாறன் வேண்டுகோளில் கண்களை உருட்டினான் வல்லபன்.
“என்னடா கண்டதும் காதலா? நீ கூறுவது போல இளவரசி என்றால், உன் பிரேமை பார்த்து பாதாள சிறையில் அடைத்தாலும் அடைத்துவிடுவார்கள். நாம் அவள் தந்தைக்கு தீங்கிழைக்கவில்லை என்பது தெரியும் வரை உன் காதலை சற்று கட்டுப்பாட்டில் வை”, நண்பனுக்கு அறிவுரைத்தாலும் மாறனைக் கண்டு சற்று கவலை கொண்டான் வல்லபன்.
அவர்கள் உணவு வந்த வெங்களிப் பாத்திரங்கள் மிகத் தரமானதாக இருக்க, மாறன் அதை உணரக்கூட இல்லை என்பது கவலையளித்தது.
விடியும் நேரமே எழுந்த நண்பர்கள் தங்களை சுத்தப்படுத்தி, வாசலை திறக்கச் சொல்லிக் கேட்டனர். காவலாள் மறுதலித்துக்கொண்டிருந்தான்.
நீயே அழைத்துச் செல், எங்கள் நண்பரில் உடல் நிலையை அறிந்து கொண்டு வந்துவிடலாம் என்று ஒரு வாறாகப் புரிய வைத்து, வெளியே வந்தனர்.
நேற்று இரவு புலப்படாத மாளிகையின் அழகும் பிரம்மாண்டமும் காலை இளங்கதிரில் இருவரையும் ஸ்தம்பிக்க வைத்தன.
“முகப்பே இத்தனை பிரமாதமாக இருக்கிறதே, உட்புறம் எப்படி இருக்கும்?”, என்று வியந்தபடியே நேற்று அமர்ந்திருந்த திண்ணையில் உட்கார்ந்தார்கள். ஒரு நாழிகை கடக்கும் தருவாயில் மிமி வந்து நின்றார்.
இரவெல்லாம் உறங்காது இருந்தவர் போல சோர்வோடு தெரிந்தார். வல்லபன் உடைந்த சீனத்தில் வளவனின் நலன் குறித்து விசாரிக்க, சோகமாக உதடு பிதுக்கி தலையசைத்தார். அவர் பின்னே வேகமாக வந்தாள் ரூயூன். கார்குழலை அள்ளி முடிந்திருந்தவள் நேற்று உடுத்தியிருந்த அதே உடையில் இருந்தாள்.
சிவப்பேறிய விழிகள் இருவரையும் ஆங்காரமாய் நோக்க, “வெறும் கத்தியால் குத்தினால் போறாதென்று நஞ்சு தடவிய குறுவாளால் குத்தினீர்களா? ஏன்? என்ன வேண்டும் உங்களுக்கு? என்ன நஞ்சு என்றாவது சொல்லுங்கள்”, என்று ஓங்கிய குரலில் ஆரம்பித்து சற்றே தோய்ந்த குரலில் முடித்தாள்.
“நஞ்சு தடவியிருந்ததா! அவர்கள் ஏற்கனவே கொல்லத் திட்டமிட்டு தடவி வைத்திருக்க வேண்டும். தேவி! மருத்துவர் என்ன சொல்கிறார்? வளவனார் கண் முழித்தாரா?”, மாறனின் கேள்வியில் உதடு கடித்தாள் ரூயூன். இமைகள் தட்டி கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள்.
“என்னிடம் ஒரு நஞ்சுமுறிப்பான் இருக்கிறது. கடல் கடந்து செல்கிறாயே, செல்லும் இடத்தில் விஷ ஜந்துக்கள் தீண்டினால் உபயோகித்துக்கொள் என்று என் மாமன் கொடுத்தது. அதை வேண்டுமானால் முயன்று பார்க்கிறீர்களா?”, மாறன் கேட்கவும், நெற்றியை சுருக்கியவள் மெல்லிய குரலில் அவள் அத்தையோடு எதோ பேசினாள். அடுத்த சில நொடிகளில் சம்மதிக்க, குடிலுக்கு ஓடிச் சென்று மருந்துக் குப்பியை தன் மூட்டையிலிருந்து தேடி எடுத்துவந்தான்.
கொடுக்கும் முறையையும் அளவையும் கூறியவன், தானும் இருந்து பார்க்கட்டுமா எனவும், மறுப்பாய் தலையசைத்தவள், “உதவிக்கு நன்றி. நீங்கள் குடிலில் இருங்கள். செய்தி எதுவாகினும் இருந்தால் அழைக்கிறேன்”, என்று வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.
பகல் பொழுது முழுதும் சிக்கலுக்கு யாரை நொந்து கொள்வது என்று பேசிப்பேசியே வல்லபனும் மாறனும் கடத்தினார்கள். முடிவில் விதியை பழித்தான் வல்லபன்.
“ஹ்ம்ம்…அவளைக் காண வேண்டும் என்பது என் விதிபோல. உடனிருக்கும் உன்னையும் சேர்த்து சிக்க வைத்துவிட்டது வல்லபா”, என்றான் மாறன் வருத்தத்துடன்.
“மாறா, வளவனார் எழுந்து குத்தியது யார் என்று சொல்லவில்லையென்றால் பழி நம்மீது விழும். காப்பாற்ற யாருமில்லாத நாட்டில், நம்மை கொன்று போட்டாலும் கேட்க ஆளில்லை. இன்றிரவே தப்பிச் செல்ல வேண்டும். மேலும் இங்கிருப்பது ஆபத்து!”, வல்லபன் ரகசியமாக முணுமுணுத்தான்.
“வல்லபா, வளவனாரின் மகள் அப்படியெல்லாம் செய்ய மாட்டாள். நாம் தப்பிக்கப் பார்த்தால்தான் குற்றவாளியாகக் கருதுவார்கள்”, என்று மறுதலித்தான் மாறன்.
சற்றே ஏளனமாகப் பார்த்த வல்லபன், “நண்பா, உன் மயக்கம் சிறிதும் அவளிடம் பிரதிபலிக்கவில்லை என்பது புரிகிறதா? தந்தை மறைந்த துக்கத்தில் அவள் வெறுப்பு நம் மீதுதான் திரும்பும். இந்த ஊரே அவள் சொல் கேட்டு நடக்கிறது. இதற்கு மேலும் நான் விளக்க வேண்டுமா? பெண் மோகத்தில் உயிர் துறந்த பல ஆயிரம் ஆண்களோடு நீயும் இணையப் போகிறாயா யோசி!”, என்று எழுந்து வாசலுக்குச் சென்றான்.
ஆடம்பர பல்லக்கு ஒன்று வந்து இறங்க, அதிலிருந்து சீனத் தம்பதியர் வெளிவந்தனர். மிமி வந்து அழைத்துச் சென்றார். காவலுக்கு வெளியில் இருந்தவனிடம், அது யார் என்று வினவ, உறவினர் என்பது வரை புரிந்தது. ஆனால் உறவு முறை வல்லவனுக்கு விளங்கவில்லை.
“வளவனாரைப் பார்க்க, சற்று வயதான தம்பதியர் வந்திருக்கிறார்கள். கவனம் அவர்கள் மீதிருக்கும்போது நாம் தப்பிப்பது சாலச்சிறந்தது. உன் கடமைகளை நினைவில் நிறுத்தி முடிவுசெய். பிறகு உன்னிஷ்டம்”,என்ற வல்லவன் மஞ்சத்தில் சாய, மாறன் தீவிர சிந்தனையில் இருந்தான்.
வந்தவர்களை வரவேற்று அமர வைத்த மிமி, தந்தையின் அறையிலேயே பழியாய் கிடந்த ரூயூனிடம் வந்தார்.
“மகளே ரூயூன், உன் பெரிய மாமனும், மாமியும் செய்தி கேட்டு உன்னையும் உன் தந்தையையும் காண வந்திருக்கிறார்கள்”, என்று சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் மெய்லிங்கின் மூத்த அண்ணனும், வளவனின் முதல் மச்சானுமான மிங்.
“ஷீ…என்ன ஆகிற்று உனக்கு? எந்தக் கயவன் இதைச் செய்தது? அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்”, என்று கத்த, வந்த சிடுசிடுப்பை மறைக்கப் பிரயத்தனப்பட்டாள் ரூயூன்.
“மாமா… இங்கே நின்று கூச்சல் போட வேண்டாம், தந்தை உறங்கட்டும். வாருங்கள்”, என்று வெளியே வர, அவள் மாமனோ, ஷீயை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். கழுத்து வரை போர்வை மூடியிருக்க, எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
“வெளியில் வாருங்கள் பேசுவோம்”, என்று மீண்டும் கூறி அறையின் கதவை திறந்து வைத்தாள்.
மிங் அதற்கு மேலும் ஒன்றும் சொல்ல முடியாது வெளியே வர, விருந்தினர் அமரும் அறைக்கு அழைத்து வந்தாள் ரூயூன். மாமன் மனைவியோடு அமர்ந்திருந்தார் மிமி.
மிங்கிற்கு தேனீர் ஊற்ற முனைந்த மிமியைப் பார்த்தவன், “இன்னும் தே நீர் பரிமாறும் கலையை கற்கவில்லையா ரூயூன்? வீட்டின் மகளாக நீ அல்லவா என்னை உபசரிக்க வேண்டும்?” என்றான் எள்ளலுடன்.
முகம் மாறாமல் ஒரு அலட்சியப் புன்னகையோடு, “இது ஒன்றும் சூட்சுமம் நிறைந்த கலை இல்லையே மாமா. பொறுமையும் நிதானமும் பெண்ணிடம் இருக்கிறதா என்று சோதிக்கவே இப்படி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். சோதித்துக் கொள்ளுங்கள்”, என்றபடியே அனாயசமாக கொதிக்கும் நீரை சுமந்திருக்கும் நீர் ஜாடியை லாவகமாக எடுத்து, சிந்தாமல் சிதறாமல், தே நீர் இலைகள் நிரம்பிய சிறு பைகளை கொண்டு ஒரு குறை சொல்ல முடியாத படி கலந்து கொடுத்தாள்.
மாமியின் கண்களில் சற்று பொறாமை வந்தது. அவர் மகள்களிடம் இந்த நேர்த்தி இல்லை. அதற்குள் தொண்டையை கனைத்த மிங்,
“இங்கே பார் ரூயூன், ஷீக்கு நடந்தது துரதிர்ஷ்டமானதுதான். இந்த நேரம் மயக்கமாக இருந்தாலும், அவன் நினைவெல்லாம் நீதான் நிறைந்திருப்பாய். என் தங்கை உயிரோடு இருந்திருந்தால் இன்னேரம் உனக்கு மணமுடித்து பேரக் குழந்தைகளைப் பார்த்திருப்பாள். அவளிடத்திலிருந்து அந்தக் கடமையை நாந்தான் வீட்டின் தலைமகனாக முடிக்க வேண்டும்.
மிமி இங்கேயிருந்து உன்னை சிறப்பாகவே தயார் செய்திருக்கிறாள். உனக்கான மணமகனை நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். இங்கே வந்து தொழிலையும் எடுத்து நடத்துவான். நானும் தம்பிகளும் மாற்றி மாற்றி உடனிருந்து பார்த்துக்கொள்கிறோம். புரிகிறதா? உன் தந்தைக்கு பக்கத்து அறையை எங்களுக்கு தயார் செய்”, கட்டளைகள் பறந்து வந்தன.
“தந்தை இப்படியிருக்க ஏன் இந்த அவசரம்? அவர் கண் விழிக்கட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்”, என்றாள் கோபத்தை அடக்கி.
“ம்ப்ச்… இதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு புரியாது. அவன் இல்லாது தொழில் படுத்துவிடும். என்ன ஏற்றுமதி, சரியான பொருள்கள் நேரத்திற்கு சென்றதா என்றெல்லாம் கண்காணிக்க வேண்டும். நாளையிலிருந்து நான் சென்று கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்கிறேன். நான் சொல்வதை கேட்டு நட”, என்றார் அதிகார தொனியில்.
அவள் எதுவும் பேசும் முன்னர், அவள் கையை இறுக்கமாகப் பிடித்த மிமி, “ நீங்கள் கேட்ட அறையில் மருத்துவர் தங்கியிருக்கிறார் அண்ணன். நான் வடக்குபுறக் இருக்கும் பெரிய அறையை ஏற்பாடு செய்கிறேன். விசாலமாக, வசதியாக இருக்கும். வாருங்கள்”, என்று பணிவாகக் கூறவும்,
“இதைப்போல பணிவோடு பேச கற்றுக்கொள்!”, என்று கட்டளையிட்டு மனைவியோடு சென்றார் மிங்.
இரவு உணவு முடிந்தபின்னரிலிருந்தே மாறனைக் கரையாய் கரைத்துக்கொண்டிருந்தான் வல்லபன்.
“இன்னும் ஒரு நாள் காத்திருந்து மட்டும் என்ன மாறிவிடப் போகிறது மாறா? நாளை அந்த மனிதர் இறந்துவிட்டால் நம் கதை முடிந்தது. உடல் நிலை பற்றி சொல்லியனுப்புகிறேன் என்றாளே, தகவல் ஏதேனும் வந்ததா? இல்லையே? கண்டிப்பாக இன்று இரவே செல்லவேண்டும். தாமதிப்பதால் ஒரு பயனும் இல்லை! மூன்றாம் ஜாமம் தொடங்கியதும் நான் செல்கிறோம். மறுக்காதே!”
இரண்டு மனதாக இருந்த மாறனைப் பார்த்த வல்லபன், பல்லைக் கடித்து, “அவளோடுதான் நீ சேர வேண்டும் என்ற விதியிருந்தால், கண்டிப்பாக மீண்டும் சந்திப்பாய். புறப்பட தயாராக இரு”, என்றான் முடிவாக.
மூன்றாமம் ஜாமம் தொடங்க சற்று நேரமே இருக்க, காவலன் தூங்கிவிட்டானா என்று பார்க்க சாளரத்தின் ஓரம் நின்று வல்லபன் நோட்டம் விட, ஒரு கரிய உருவம் வேகமாக மாளிகையின் பக்கவாட்டு பலகணியிலிருந்து ஒரு கயிற்றில் சர சரவென இறங்கியது.
சட்டென உடல் விரைத்த வல்லபன், மாறனுக்கு சைகை செய்ய, அவனும் வந்து சாளரத்தின் ஓரம் நின்று பார்க்க, மெல்லிய நிலவொளியில், அந்த உருவம் அவர்கள் குடிலை நோக்கி வேகமாக வருவது தெரிந்தது.
அடித்து பிடித்து இருவரும் அவர்கள் மஞ்சத்தில் படுத்துக்கொண்டனர். வந்தவுடனேயே அவர்கள் குறுவாள்கள் பறிக்கப்பட்டிருந்தன.
வரப்போகும் அதிர்ச்சியை சரியாகக் கணித்தால் ஆயிரம் பொற்காசுகள் என்று பரிசு அறிவித்திருந்தாலும், சகாக்கள் இருவரும் தோல்வியைதே தழுவியிருப்பார்கள். அப்படிப்பட்ட செய்தியைத் தாங்கி வந்துகொண்டிருந்தது அந்த உருவம்.