எங்கோ இளமாறனின் குரல் கேட்பது போல இருந்தது. இறந்து ஒன்றாக சொர்க்கத்திற்கு வந்துவிட்டோமோ என்று நினைத்து லேசாக குரல் வந்த திசை நோக்கி தலை திருப்ப முயன்றான். ஆனால் லேசாக அசைக்க மட்டுமே முடிந்தது. அதற்கே வலியெடுக்க முனகினான்.
சட்டென்று முகத்தில் தண்ணீர் அறைய, முகத்தை சுருக்கிய வல்லபன் சிரமப்பட்டு கண்களைத் திறந்தான்.
“நண்பா… முழித்துக்கொள், நலமாக இருக்கிறாய். பயப்படாதே!”, இளமாறன் கண்கள் நண்பனின் உடலை காயங்களுக்காக ஆராய்ந்தன.
“என்ன ஆகிற்று? பி…பிழைத்தோமா?”, பலவீனமாக வந்தது வல்லபனின் குரல்.
புயல் ஓய்ந்துவிட்டது வல்லபா. பெரிதாக சேதாரம் இல்லை. நீ எப்படியடா போய் இடித்துக்கொண்டாய்?, புடைத்திருந்த நெற்றியில் லேசாக கைவைக்க, வலியில் கத்தினான் வல்லபன்.
நண்பனின் கேள்வியும், அவன் தொட்டதால் ஏற்பட்ட வலியும் சேர “ஹ்ம்ம்… ஒரு புறத்திலிருந்து மறு புறம் ஓடி வந்து முட்டிக்கொண்டால் எப்படி இருக்கும் என்று பார்க்கத் தோன்றியது, அதுதான் செய்து பார்த்தேன்”, பல்லைக் கடித்துக் கூற,
“மாறா, உன் தோழனுக்கு ஒன்றும் இல்லை. அடிபட்டாலும் அவன் நையாண்டி ஒரு மாற்று கூட குறைய வில்லை பார். இரத்தம் கட்டியிருக்கும், நான் கூறிய வைத்தியம் செய், சரியாகிவிடுவான்”, நம்பியின் குரலில் முழித்துப் பார்த்தான் வல்லபன். தன் பெரிய மீசையை நீவிக்கொண்டே அவனைப் பார்த்த நம்பி,
இரண்டு நாழிகையில் நெற்றியில் இட்ட பச்சிலை காய்ந்துவிட தலை வலி குறைந்தபின் சுற்றம் உணர்ந்தான் வல்லபன். அருகிலே அமர்ந்தபடியே துயிலுறும் நண்பனின் முகம் பார்க்க, அப்படி ஒரு களைப்பு தெரிந்தது.
மெல்ல தலை உயர்த்தி சுற்றிப் பார்க்க, ஆங்காங்கே படுத்திருந்தார்கள். கப்பல் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. வல்லபன் எழுந்து அமர, அதில் முழிப்பு பெற்றான் இளமாறன்.
“வல்லபா? என்ன? எதுவும் வேண்டுமா? வலியிருக்கிறதா?”
“இல்லை மாறா. வலி பெரிதாக இல்லை. நீ களைத்திருக்கிறாய். ஓய்வெடு. உண்பதற்கு எதுவும் கிடைக்குமா என்று பார்த்துவருகிறேன்”, என்று கூறியபடியே எழுந்தான் வல்லபன்.
“இரு. உன் பங்கு சோளத் தட்டையும் , உப்பிட்ட நெல்லிக்கனிகளும் எடுத்து வைத்திருக்கிறேன். அமர்ந்து உண்”, என்று அவன் அருகில் இருந்த சிறு மூட்டையை பிரித்தான். ஒரு சிறு கலையத்தில் நீரும் இருந்தது.
அனைவரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நெல்லிக் கனிகளை உண்ண வேண்டும் என்பது நம்பியின் ஆணை. அப்படி செய்யாதிருப்பின் உதடு ஓரங்கள் வெடித்து உண்பதற்கும் பேசுவதற்குமே பெரும் பாடு என்று பல கடல்பயணங்கள் பார்த்த பெருங்களத்தான் சொல்லியிருக்கிறான். அதன் பொருட்டே பிடிக்காவிடினும் நெல்லிக் கனிகளை உண்டுவிடுவான் வல்லபன்.
புயலைப் பற்றிய பேச்சு எழுந்தது. “கடலடியில்தான் நம் கனவுகள் புதையப்போகிறதென நினைத்துவிட்டேன் நண்பா. காற்று நாவாயை அப்படி உருட்டியது. இங்கே கீழேயே எங்களால் தாங்க முடியவில்லை. மேலே எப்படி சமாளித்தீர்கள்?”, வல்லபன் கேட்க,
“வாழ் நாளில் மறக்க முடியாது வல்லபா. புயலின் சீற்றம் கரையில் நாம் கண்டதைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உணர முடிந்தது. “
“இன்னும் சற்று விரிவாக சொல் மாறா? கீழ் தளத்தில் இருந்தபோது மரக்கலனின் ஆட்டத்தில் குப்புறக் கவிழுமோ, மல்லாந்து விழுமோ என்ற பயத்திலேயே இருந்தேன். என்ன ஒரு ஆட்டம் ஆடியது?”, வல்லபன் அவன் அனுபவத்தைக் கூறினான்.
“ஆம், கடல் அலையின் சீற்றம் அப்படித்தான் இருந்தது. எத்தனை பெரிய அலைகள் தெரியுமா? அப்படியே வந்து மேற்புறம் விழுந்து நம்மை தடுமாற வைத்தது. அந்த ஓரிரு கணங்கள், பெரியதொரு நீர் வீழ்ச்சியின் கீழ் இருப்பது போல இருக்கும். மரக்கலன் முன்னும் பின்னுமாக சாயும் நேரம் நீர் வடியும். வழுக்கினால், நீரோடு நாமும் அடித்துச் செல்லப்படுவது உறுதி. ஆறேழு நாழிகை இந்த போராட்டம் நீடித்தது. நம்பியும், பெருந்தேவனும்தான் சுக்கானோடு முழு நேரமும் மேலிருந்தார்கள். மாலுமிகள் அனேகம் பேர் சுழற்சி முறையில்தான் மேலே இருந்தோம். அரை நாழிகைக்கே உடல் வலுவிழந்துபோயிற்று”, திகில் குறையாது அந்த இரவை விவரித்தான்.
“மீப்பாயில் ஒரு பகுதியை பேய்க்காற்று கிழித்துவிட்டது. அதை முழுதுமாக இறக்குவதற்குள் ஓய்ந்துவிட்டோம்.”, மாறன் சொல்லவும்
“ஐயோ. பின் எப்படி நாம் செல்லப்போகிறோம்? நம்மை எந்த திசையில் கொண்டு வந்திருக்கிறது புயல் என்று நம்பி கணித்தாரா?”, படபடப்பாய்க் கேட்டான் வல்லபன்.
“கவலை கொள்ளாதே. ஓரிரு நாட்களில் நாம் பயணப்பாதையை மீண்டும் அடைந்துவிடலாம். அதுவும் கூட மீப்பாயை தைக்க எடுக்கும் நேரம் பொறுத்து. எல்லோரும் களைப்பாக இருக்கவும், முதலில் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்து மற்றதைப் பார்க்கலாம் என்று நம்பி கூறிவிட்டார்.”
கதிரவன் உச்சிப் பொழுதைத் தாண்டி சில நாழிகைகள் கடந்திருக்க, மீப்பாயின் கிழிசலை தைக்க கருந்தேவனுக்குத் உதவியாக இருந்தான் வல்லபன். அத்தனை களேபரத்திலும், மூவர் குழு மழை நீரை மரப் பீப்பாய்களில் நிரப்பி மூடி வைத்திருக்க, இன்று குளிப்பதற்கு சற்று உபரியாக நன்நீர் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தான்.
“புயல் மரக்கலனோடு சேர்த்து நம் எல்லோரையும் கூட சுத்தப்படுத்திவிட்டது கருந்தேவரே”, என்று வல்லபன் சொல்ல, “இரண்டு நாட்களில் மீண்டும் பழைய நிலைமை வந்துவிடும் வல்லபா. எப்படியும் இன்னும் நாலைந்து தினங்களில் ஸ்ரீ விஜயம் அடைந்து விடுவோம். அதுவரை பொறுத்துக்கொள்”, என்றார் அனுபவஸ்தர்.
ஸ்ரீவிஜய ஆட்சியின் பொற்காலம் இராஜேந்திர சோழனின் படையெடுப்பிற்குப்பின் அழிவை நோக்கிச் சென்றது. அடுத்து இரண்டு நூற்றாண்டுகள் குலோத்துங்க சோழன் காலம் வரையிலுமே சோழ ஆட்சியின் கீழ் இருந்தது. தற்போது மேலையு ஆட்சி ஆதித்யவர்மனின் கீழ் நிலையாக இருந்தது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியம் கோலோச்சிய போதே சீனர்களுடன் நல்லுறவில் வாணிபம் செழித்திருந்தது. டாங் பேரரசு, சாங் பேரரசு காலங்களிலும் வணிக ஒப்பந்தங்கள், நல்லெண்ணத் தூதுவர்களின் பகிர்வு என்று நட்புறவில் இருந்தது. ஆட்சிகள் மாறினாலும், கடாரம் போன்ற முக்கிய துறைமுகங்களிலிருந்து சீனாவிற்குச் செல்லும் கடல் பாதைகள் உபயோகத்தில் இருந்தன. வணிகமும் நடந்துகொண்டிருந்தது.
அட்சய முனை அருகே இருந்த கடல் கொள்ளையர்களின் ஆட்டம் அடக்கப்பட்டதில் கொற்கைக்கும், புகாருக்கும் சற்றும் குறைந்ததல்ல கடாரம் என்று கட்டியம் கூறியது போன்று, கடாரம் பல நாட்டு மக்கள் புழங்கும் நாகரிகம் வளர்ந்த துறைமுக ஊராகக் காட்சியளித்தது. பல மொழிகள், உடைகள் என்று வல்லபனுக்கும் மாறனுக்கும் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
சற்று உயரம் குறைந்திருந்தாலும், வனப்பில் மாற்றுக்குறையாத மஞ்சளழகிகள் வாலிபர்களை சுண்டியிழுத்தனர். அரிசிச்சோறும் மாமிசமும் ஒரு புறம், சைவ கோவில்கள், பௌத்த விகாரங்கள் மறுபுறம் என்று அன்னிய தேசமாக உணரவிடவில்லை கடாரம்.
ஆனால் நீண்ட நாட்கள் காத்திராமல், வெகு விரைவிலேயே அவர்களின் கனவு தேசமான சீனாவை நோக்கிப் பயணப்பட காலம் கூடிவந்தது. வல்லபனுக்கு நெஞ்சு நிறைய வருத்தம். பேசிப் பேசி மயக்கி வைத்திருந்த கடார மயிலொன்றிடம் பாதிலேயே விடை பெற வேண்டி வந்த சோகத்தில் முகத்தை தூக்கி வைத்திருந்தான்.
“நம்பியின் நாவாயிலேயேதான் பயணப்படவேண்டுமா? ஏன் இதை விடுத்தால் வேறு எவருமே கடாரத்திலிருந்து குவான்சாவ்விற்கு செல்லவில்லையா என்ன? இன்னொரு திங்கள் இருந்திருந்தால் ஸ்ரீவிஜயத்து மருமகனயிருப்பேன்.”, என்ற நண்பனின் புலம்பலில், புன்முறுவல் கொண்ட மாறன்,
“அவளைப் பார்த்தால் குடும்பப் பெண் போன்று தோன்றவில்லை நண்பா. உன் மயில் பலர் வந்து தங்கிச் செல்லும் கூடு.” என்று விளக்கினான்.
“என்னது? யார் உனக்குச் சொன்னது? அப்படியெல்லாம் இருக்காது”, என்ற வல்லபனிடம்,
“ஹ்ம்… அதோ அங்கே இருக்கிறான் பார் சையது”, அவனுக்கு உன் மயில் நல்ல பரிச்சயம். விசாரித்துக்கொள்”, என்று கைகாட்டினான்.
முதல் காதல் தோல்வியில் மட்டுமல்லாது ஏமாற்றத்திலும் முடிந்ததில் வல்லபனுக்கு மீண்டும் வர நான்கு நாட்கள் பிடித்தது. இனி மங்கையரை நம்பவே போவதில்லை. அவர்கள் மணிமொழியில் மயங்கவே மாட்டேன் என்றெல்லாம் சூளுரைத்து வேதனையை போக்கிக்கொண்டான்.
சீனம் நோக்கிய அவர்களது பயணம் பெரிதான இன்னல்கள் இன்றி முடிந்தது. ஒரு விடியற்காலையில் குவான் சாவ் கரை தென்பட்டது. மரக்கலனின் முகப்பில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மாறன், “வல்லபா, பெரும் கனவுகளோடு முதல் இலக்கான சீனாவை வந்தடைந்துவிட்டோம். ஆதி சிவனின் அருளால் சிறந்த வெங்களிப் பண்டங்களை வாங்கி பாதுகாப்பாய் எடுத்துச் செல்ல வேண்டும்.”, என்று கோரிக்கை விடுத்தான்.
குவான் சாவிலிருந்து இருபது காத தூரத்தில் விஸ்தாரமான அந்த அழகிய மர வீடு கம்பீரமாகக் காட்சியளித்தது. அதன் கூரைகள் இரு அடுக்குக் கூம்புகளாய் வடிவமைக்கப்பட்டிருந்ததே வீட்டின் வளமையை பறை சாற்றியது. கூரையின் முனைகள் அலங்காரமாக வடிவமைக்கப்பட்டு மேல் நோக்கி வளைந்திருந்தது. இதுவும் வீட்டினரின் செல்வத்தை காட்டியது. பெரும்பாலும் அரச மாளிகைகளைத் தவிர இப்படிப்பட்ட அலங்காரம் தனி நபர் வீடுகளில் காண்பது அரிது. ஆனால் அந்த வீடும், அதிலிருப்பவர்களும் மிகப் பிரபலம்.
அவர்களது வெங்களித் தொழில் வளம் கொழித்தது. மிக நேர்த்தியான ஜாடிகள், தட்டுகள், இன்ன பிற வீட்டு உபயோகப் பொருட்கள் என்று அவர்களது சாலையில் உருவம் பெற்று, வணிகர்களிடம் பிரசித்தி பெற்றன. அற்புதமாக சீன மொழி பேசும் இந்-தூ, சீனத்து மருமகன் என்ற கூடுதல் பெருமை. அதிலும், மனைவி இறந்தும் அவள் நினைவோடே வாழுபவன் என்று வளவனுக்குப் பலவகையில் மரியாதை.
வளவன் மீண்டும் வந்து வெங்களித் தொழிலை ஆரம்பித்து இதோ எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மாமனார் தந்த செல்வம் பல மடங்காக உயர்ந்துவிட்டது. வந்த புதிதில் மனைவியின் உறவுகளைக் காணச் சென்றான். அவன் நினைத்தது போன்றே, மாமனார் அவன் சென்ற சில மாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் என்றனர். மற்ற சகோதரர்களுள் பிணக்கு. இந்தப் போட்டியில் தொழிலும் மங்க ஆரம்பித்தது.
மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள நினைக்காதே என்று அவனது செல்வத்தைப் பற்றி அறியாது அவர்கள் பேச, அப்படியொரு எண்ணமே இல்லை என்று கிளம்பிவிட்டான் வளவன். அடுத்து அவன் எண்ணப்படி குவான் சாவிலிருந்து நான்கு காத தூரத்தில் இருந்த டாங்ஜின் பகுதியில் வெங்களி உற்பத்தி சாலை அமைக்க இடம் ஏதுவாக இருக்க, துணிந்து இறங்கினான்.
டாங்ஜின் வந்த புதிதில், சில வருடங்கள் கடலிலும் மாலுமிகள் மத்தியிலும், வேற்று நாடுகளிலும் கழித்ததில், சீன உயர்குடி பெண்களின் நளினங்களையும், உபசரிப்பு நாகரிங்களையும் ரூயூன் கற்றிருக்கவில்லை. சிறு வயதில் பாட்டி சொல்லிக் கொடுத்தது சற்று ஞாபகம் இருந்தாலும் அவ்வப்போது மறந்து போகும். அழுந்த பாதம் பதித்து மரக்கலங்களில் நடந்த பழக்கம் இப்போது தொரட, இதென்ன ஆண்களைப் போல அதிர்ந்து நடக்கிறாய் என்று கேலி செய்தார்கள். குரலும் ஓங்கி பேசவும், கட்டளையிடும் தொனியிலும் இருக்க அதற்கொரு பேச்சு. மொத்தத்தில் அழகாக இருந்தாலும் பெண்ணைப் போல எந்த ஒரு குணாதசியமும் இல்லாது இருப்பவளை யார் திருமணம் முடிப்பார்கள் என்று பேச்சு எழ, வளவன் பயந்துபோனான். தன் தாயகத்திலும் ரூயூனால் பொருந்திப் போக முடியவில்லை. இங்கேயும் இப்படியா என்று கவலை கொண்டு இதெல்லாம் அவளுக்கு கற்றுக்கொள்ள ஏதுவாக ஒரு பெண்மணியை தேர்வு செய்தான்.
ரூயூனுக்கும் அவளுக்கும் ஒத்துப் போகவில்லை. பகடி என்ற போர்வையில் என்னை ஏளனம் செய்கிறாள், அவமானப்பட்டு அவளிடம் நான் கற்றுத் தேற வேண்டியது எதுவுமில்லை என்று தே நீர் கோப்பையை தரையில் அடித்து நொறுக்கி எதிர்ப்பைக் காட்ட அத்துடன் அந்த யோசனை முற்றுப்பெற்றது.
சாலைக்கு வந்து வெங்களித் தொழிலை கற்கத் தொடங்கினாள் ரூயூன். முதல் இரு வருடங்கள் வளவனின் தீவிர உழைப்பு பல மடங்காகப் பலன் அளிக்க ஆரம்பித்தது. மகளையும் உடன் வைத்து அவளுக்கும் தொழிலை கற்றுத்தர ரூயூன் தந்தைக்கு சிறப்பான உதவியாளாக அமைந்தாள்.
அவள் மட்டுமன்றி, ஊரில் இருக்கும் பல பெண்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில், வெங்களியில் உருவங்கள் பதிக்கும் வேலை, அவற்றை கவனமாகக் கையாண்டு, உடையாமல் வைக்கோல் சுற்றி கடல் பயணத்திற்கு ஏதுவாக கட்டி வைப்பது என்று வேலை வாய்ப்பினை உருவாக்கினாள்.
பயிர்த் தொழிலை மட்டுமே நம்பி அதுவும் அவ்வப்போது வரும் வெள்ளங்களினால் நட்டமடைந்து நலிவுற்று இருந்த டாங்ஜின்னுக்கு இவர்களது வருகை ஒரு மாற்று ஏற்பாட்டைக் கொடுத்து வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையையும் தந்தது. உழைக்கும் வர்க்கத்தோடு எளிதாக புழங்கினாள் ரூயூன்.
இந்த ஏழெட்டு ஆண்டுகளில் தங்களை மட்டுமல்லாது அந்த ஊருமே வளம் பெற வழி வகுத்திருந்தனர் தந்தையும் மகளும். வெளினாட்டு வணிகர்கள் வந்து தங்கிச் செல்ல, அவர்களுக்கான உணவு செய்ய, உள்ளடங்கியிருக்கும் கிராமங்களில் இருந்து வந்த குறு சிறு வியாபாரிகளும் தங்கள் பொருட்களை கடைவிரிக்க சந்தை என்று டாங்ஜின் வளர்ந்திருந்தது.
வளவனின் வளமையும் பெருமையும் அவன் மனைவியின் உறவினர்களுக்கு சென்றடைந்தது. முதலில் இவனெல்லாம் எங்கே தொழிலில் சிறப்பான் என்று தங்களுக்குள் எள்ளி நகையாடியவர்கள், அடுத்தடுத்த வருடங்களில் எண்ணத்தை மாற்றி பொறாமை கொண்டனர். எப்படி இத்தனை செல்வம் வந்தது என்று தங்களுக்குள் கூடிப் பேச ஆரம்பித்தனர். பெரியவர் இருந்த வரை வரவு செலவெல்லாம் அவர் வசம் என்பதால் இவர்களுக்கு தெரியவில்லை. ஆனாலும், அவன் செல்லும்போது கொடுத்திருப்பார் என்று நினைத்தனர். அதன் விளைவாக அவனைக் காண மெய்லிங்கின் இளைய சகோதரர்கள் இருவர் வந்தனர்.
தொழிலில் அப்போதுதான் லாபம் பார்க்கத் தொடங்கியிருந்த நேரமாதலால், இந்த செழிப்பான வீட்டை இன்னும் கட்டியிருக்கவில்லை வளவன். தங்கள் சிறிய இல்லத்தில் வரவேற்று உபசரித்தான்.
மெல்ல இவர்கள் வந்த விடயம் புலப்பட, “தாயகம் திரும்பி, என் பங்கு நிலங்களை விற்று, அதன் முலம் வந்ததை முதலாகப் போட்டு வாணிபம் செய்தேன்”, என்று அவர்கள் சென்ற தூர தேசங்களைப் பற்றிக் கூறினான். அந்த நாட்டின் நாணயங்கள் சில வற்றை இன்னும் வைத்திருப்பதாக காட்டினான். இரண்டு நாட்கள் விருந்தாடியவர்கள் கிளம்பிச் சென்றதும், ரூயூனை அழைத்த வளவன், “உன் மாமன்கள் நம் செல்வத்தை கணக்கிட ஆரம்பித்துள்ளார்கள். உன் தாத்தன் உனக்கான சீராக தந்ததை யாரிடமும் பகிராதே. அது உன் உரிமை, ஆனால் அவர்களுக்குப் புரியாது அதைவிடவும் அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆகவே கவனமாயிரு”, என்று எச்சரித்தான்.
சென்றவர்கள் ஓயிந்துவிடவில்லை. வளவனின் வளர்ச்சியின் மேல் ஒரு கண் கொண்டிருந்தினர். அடுத்த இரண்டு வருடங்களில் மெய்லிங்கின் அண்ணன் குடும்பம் வந்தது. ரூயூனிற்கு அவர்கள் வகையில் மணமுடிக்க ஒரு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்ல வளவனால் சட்டென மறுக்க முடியவில்லை.
வந்தவர்களை மகளுடன் உபசரிக்க, மெய்லிங்கின் அண்ணி மீண்டும் பெண்ணுக்கான குண நலன்கள் இல்லை, ஆணின் வளர்ப்பில் இப்படித்தான் இருப்பாள். இந்த வயதில் ஆண்களை விடவும் அதிகமாக வெளியிடங்களில் நாடோடியாக சுற்றித் திரிந்தது தெரிந்தால் மணமகன் வீட்டில் எப்படி பேச முடியும் என்று பல்லவியை ஆரம்பிக்க, நறுக்குத் தெரித்தார் போல
“பொய்யும் புரட்டுமாக என் வாழ்க்கையை வாழ பிரியப்படவில்லை. நான் இதற்கெல்லாம் பொருந்த மாட்டேன், எனக்கு மணமுடிக்கும் கவலை உங்களுக்கு தேவையில்லை”, என்று அனுப்பி வைத்தாள் ரூயூன். தன் உறவில் மணமுடித்து, சொத்தில் ஒரு பங்கை கைப்பற்றும் கனவை பறிகொடுத்து சென்றனர் மெய்லிங்கின் அண்ணணும் அண்ணியும்.
மகள் எங்கே மணமுடிக்காமலே நின்றுவிடுவாளோ என்று அச்சம் ஏற்படத் தொடங்கியது வளவனுக்கு. அவன் தொழிலிற்காகவும், பணத்திற்காகவும் ரூயூனின் அழகையும் கண்டு பெண் கேட்டு வந்தவர்கள் அவளது ஆளுமையில் தெறித்து ஓடினர். அப்படியே மிஞ்சினாலும், பணத்திற்கு ஆசைப்பட்டு அவளுக்கு அடங்கி நடக்க சம்மதம் என்பது போல இருந்தார்கள் மணமகன்கள்.
வளவனின் பல கனவுகள் காற்றோடு சென்றாலும், கடவுளுக்கு சற்றே கருணை வந்தது போல மிமி வந்திறங்கினாள். மெய்லிங்கின் ஆத்ம தோழி. மெய்லிங்கின் அண்ணியின் பேச்சின் மூலம் ரூயூன் திரும்ப வந்துவிட்டதை தெரிந்து கொண்டு, வளவனைத் தேடி வந்துவிட்டாள்.
மறைந்த தோழியின் சாயலை ரூயூனில் கண்டு கண்கள் பனிக்க உச்சி முகர்ந்த மிமியின் வாசம் ரூயூனின் குழந்தைப் பருவ நியாபகங்களை கிளறின.
“கணவனும் இறந்துவிட, பெற்ற ஒரு பிள்ளையையும் நோய்க்கு தாரை வார்த்துவிட்டு கணவனின் குடும்பத்தில் வேண்டாத பாரமாய் இருக்கிறேன். நான் மெய்லிங்கின் இடத்தில் இருந்து, ரூயூனிற்கு எல்லாமும் சொல்லித் தருகிறேன்”, என்று மீமி கேட்கவும், வளவனை முந்திக்கொண்டு,
வளவனும் வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டவன், “மீமி… உன் தோழி இருந்திருந்தால் வயது இருபதை எட்டியும் மகளை மணமுடிக்காமல் விட்டிருப்பாளா? ரூயூனை திருமண பந்தத்திற்கு தயார் செய்வதாக இருந்தால் தாராளாமாக எங்களோடு இருக்க சம்மதம்”, என்று தூண்டிலிட்டான்.
“நான் மணமுடித்து சென்றுவிட்டால், பின் ஆயி என்னாவார்கள்?”, வளவனை நோக்கி ரூயூன் பாய,
“ஏன் உன் பிள்ளை பேறு, குழந்தை வளர்ப்பு என்று எத்தனை இருக்கிறது பார்க்க?”, என்ற பதிலில் சற்றே அடங்கினாலும்,
“ஆயி, எந்த நிபந்தனையும் இல்லை. எங்களோடே இருந்துவிடுங்கள்”, என்று வாக்குறுதி கொடுத்தாள் ரூயூன்.
வளவன் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்த கொண்ட மீமி, “வெங்களித் தொழிலையே எளிதாக கற்றுக்கொண்ட என் செல்லப்பெண்ணுக்கு தேநீர் உபசரிப்பும், மென் நடையும், பாடலும் பெரும் வித்தைகளா என்ன? அடுத்த வசந்த காலத்தில் அவள் திருமண கொண்டாட்டம் டாங்ஜின் முழுதும் நடக்க ஏற்பாடுகளை பார் ஷீ”, என்று கூறினாள் புன்னகையோடு.