Advertisement

அத்தியாயம் 9

 
மது பேசியது மனதை ரணப்படுத்த நித்யாவிடம் பெண் பார்க்கும்படி வாசன் எதோ ஒரு வேகத்தில் கூறி விட்டான்தான். அதே வேகத்தில் ராமநாதனும் மும்முரமாக பெண் தேடினார்தான். 
 
பெண் பார்த்து பார்த்து எந்த பெண்ணையும் பிடிக்காமல் போக ஒரு கட்டத்துக்கு மேல் திருமணம் செய்துதான் ஆகா வேண்டுமா? என்ற எண்ணம் கூட வந்தது. கூடவே! வரும் பெண் மது மாதிரி புருஷனை மயக்கி காரியம் சாதிக்கிறவளா இருப்பாளோ! என்ற பயம் வேறு. ராமநாதன் வந்து இன்னொரு வரன் வந்திருப்பதாக கூறினால் மது பேசியதை மனதில் கொண்டு வந்து  திருமணம் செய்து தீருவேன் என்ற முடிவில்தான் இருந்தான் வாசன்.
 
மது சொன்னதை போல் யாரும் வாசனுக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. போட்டி போடாத குறைதான். சொந்தமாக வீடு கூட கொடுப்பதாக ஒரு வரன் வந்தது ஆனால் ராமநாதனை மற்ற சகோதரர்கள் யாரிடமாவது விட்டு விட வேண்டுமாம்.
 
“என்ன இது பெற்ற தந்தையையும் கட்டிய மனைவியையும் என்னால் பார்த்துக்கொள்ள முடியாதா?” உங்க வீடும் வேண்டாம் பெண்ணும் வேண்டாம் என்று வந்து விட்டான்.
 
கண்டிப்பாக ஸ்ரீராமிடம் செல்ல முடியாது, ஸ்ரீவத்சனும் வெளிநாட்டில் இருக்கிறான். அவனை நம்பியும் அவ்வளவு தூரம் செல்ல முடியாது. சத்யாவிடமும் செல்ல முடியாது. இருப்பது நித்யா ஒருத்திதான். பெண் பிள்ளைகளிடம் எத்தனை நாட்கள் சென்று தங்குவது? நித்யா எந்த குறையும் சொல்லாமல், பார்த்துக்கொள்வாள் தான், ஆனால் ஆத்மநாதன் ஒரு தனிமை விரும்பி, தான் தன் குடும்பம் போதும் என்று எண்ணுபவன் பாரமாக நினைத்து விட்டால்?  நினைத்து மனம் நோகும்படி ஏதாவது கூறிவிட்டால்?
 
வீடு வந்த ராமநாதனும் “நான் வேணும்னா அநாதை ஆசுரமத்துல போய் தங்கிக்கிறேன் வாசா… உனக்கு கல்யாணம் ஆகி நீ சந்தோசமா இருந்தா போதும்” என்று சொல்ல
 
“என்ன பேசுறீங்க? இப்படி பேசுனா? நான் கல்யாணமே! பண்ணிக்க மாட்டேன்” என்று கறாராக சொல்லி விடவும் ராமநாதன் அமைதியானார். அவர் அமைதியும் வாசனுக்கு கவலையை கொடுக்க “கவலை படாதீங்கப்பா.. அம்மா மாதிரியே! பொண்ணு கிடைக்கத்தான் போறா, கல்யாணம் நடக்கத்தான் போகுது” என்று தந்தைக்கு ஆறுதல் வார்த்தை கூறி இருந்தான். ஆனால் தந்தையின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பது வாசனின் மனதை பெரிதும் பாதித்தது. கூடவே மனதில் ஏறியிருந்த பயம் மட்டும் நீங்கவே இல்லை. நாளுக்கு நாள் அந்த பயம் நெஞ்சை அழுத்தி கெட்ட கெட்ட கனவுகள் வேறு வந்து அவனை இம்சிக்களானது.
 
அப்படியெல்லாம் ஆகாது, இப்படியெல்லாம் நடக்காது தனக்குத்தானே! ஆறுதல் கூறிக்கொண்டவன் மனதை திடப்படுத்த முயன்றான். என்னதான் கடவுளை வேண்டிக்கொண்டாலும், எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்பிக்கை வைத்து தைரியமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் அவன் மனதின் ஓரத்தில் அந்த அச்சம் ஒளிந்துகொண்டு அவனுக்கு கண்ணாமூச்சிக் காட்டிக்கொண்டுதான் இருந்தது.
 
ஒரு வீட்டில் பெண் எடுத்தால் அந்த பெண் குணவதியாக மட்டும் இருந்தால் போதும் என்றுதான் வாசன் நினைத்தான். குடும்பமே! நல்லவர்களாக நிறுக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
 
வீடு பெரியதோ சின்னதோ! சுத்தமாக வைத்திருக்கிறார்களா? என்பதை கவனித்து பார்த்தான். சில வீடுகளில் அலங்காரம் தூள் கிளப்பி இருக்கும் அண்ணாந்து பார்த்தால் முகட்டு கூரையில் சிலந்தி வலை கட்டி என்னை கொஞ்சம் கவனி என்ற பாவமாய் சொல்லும். “இதெல்லாம் தேறாத கேஸ், வீட இந்த லட்சணத்துல வச்சிருக்கு, பொண்ணுங்களா இதுங்க” மனதுக்குள் வசை பாடியவாறு பொண்ணு பிடிக்கல என்று சொல்லி விடுவான். {அவனவன் பொண்ணு பிடிக்கலைனு சொல்ல ஆயிரம் காரணம் சொல்லுவான். இவன் என்ன காரணம் வச்சிருக்கான் பாருங்க}        
 
வீடு சுத்தமாக இருக்கா என்று பார்த்த பின்தான் பெண்ணையே பார்த்தான். முதலில் அப்பெண்ணின் நடை உடை பாவனையை கவனித்தான். சாதாரணமாக பெண் பார்க்க வரும் பொழுது அலங்காரம்  செய்வார்கள்தான். மெனக்கிட்டு பியூட்டிபாளர் எல்லாம் சென்று அலங்காரம் செய்து கொண்டு வந்த பெண்களை வேண்டாம் என்றான்.
 
வீட்டில் எந்த அலங்காரம் இல்லாமல்தானே! இருக்கப் போகிறாள் எதற்காக இந்த ஆடம்பர செலவு என்றுதான் எண்ணினான். அதனால்தான் எளிமையாக இருந்த வாசுகியை பார்த்த மட்டில் பிடித்தும் விட்டதோ என்னவோ!
 
ஆத்மநாதனின் ஊர் என்று பிடிக்காமல் பெண் பார்க்க சென்றிருந்தாலும் வாசலில் இருந்த கோலமும் சுத்தமான வீடும் கண்ணை நிறைத்ததென்றால், மங்களகரமான வாசுகியின் தோற்றம் நெஞ்சம் நிறைத்தது. 
 
வாசுகி என்ற அமைதியான பெண்ணை திருமணம் செய்தாலும் மனைவி என்ற வாசுகியை ஒரேயடியாக நம்ப அவன் தயாராக இருக்கவில்லை. கூடப்பிறந்தவர்கள், கூடவே! வளர்ந்தவர்கள், அவன் வளர்த்தவர்கள் அவர்கள் குணநலன்கள் இப்படி இருக்க இடையில் வந்தவளை வாசன் சந்தேகப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
 
கல்யாணமான உடனே! கணவன் என்ற உரிமையை மனைவியிடம் எடுத்துக் கொண்டான்தான். “கல்யாணம் பண்ணுறதே! இதுக்குத்தானே!” என்ற எண்ணம் அவன் மனதில் ஆழப்பதிந்திருந்தது என்னவோ! உண்மை. அது அவன் ஆண் என்ற திமிரினால் தோன்றியதல்ல அவனது வயதும், உடல் தேவையும் அவனை அவ்வாறு சிந்திக்க வைத்திருந்தது. 
 
ஆனாலும் வாசுகியை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதை விடவில்லை. அவள் நடவடிக்கைகளை கவனிக்கலனானான். தன்னை அலங்காரித்துக் கொள்வதில் அவள் அதிக கவனம் செலுத்துவதோ! நேரமோ! எடுப்பதில்லை. ராமநாதனிடமும் மரியாதையாகவும் அன்பாகவும்தான் நடந்துகொண்டாள். வீட்டு வேலைகள் அத்தனையையும் தனியாக பார்த்தாள் அதில் குறையும் கூறவில்லை.
 
அவள் குறை கூறுமளவுக்கு அந்த வீடு ஒன்றும் பெரிய வீடுமல்ல மூன்று பேருக்கு சமைப்பது ஒன்றும் சிரமமல்லவே! என்றுதான் வாசன் எண்ணினான். “வந்த புதிதில் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள் போகப் போகத்தான் உண்மையான குணத்தை காட்டுவார்கள் எச்சரிக்கையாக இரு வாசா…” என்று அவன் மூளை அவனுக்கு எடுத்துரைக்க அவள் புறம் சாயும் மனதை இழுத்து நிறுத்தி இருந்தான்.
 
வாசுகி கணவனுக்கு செய்யும் கடமையென்று செய்த அனைத்தும் வாசன் மனதில் அவள் மேல் நல்லெண்ணத்தை தோற்று வித்திருக்க அவள் பால் ஈர்க்கப்பட்டான்.
 
அவள் எது செய்தாலும் வாசனிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு அவன் அனுமதியோடுதான் செய்யப் பழகி இருந்தாள்.
 
இந்த பழக்கம் அவளுக்கு பூர்ணாவால் ஏற்பட்டது. கோவிலுக்கு சொந்த அத்தைகளோடு செல்வதாயினும் “உன் அப்பா என்னைத்தான் திட்டுவாரு, அவர் போகச்சொன்னால் போ” என்பாள். நாதனிடம் அனுமதி கேட்டு அவர் சரியென்றால் மட்டும் வெளியே போய் வர பழகி இருந்தவள் கல்யாணத்துக்கு பிறகும் வாசனிடம் அனுமதி வேண்டி நிற்கலானாள்.
 
கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும், கடைக்கு செல்வதாக இருந்தாலும் அவனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து அனுமதி கேக்க, “இதுக்கெல்லாம் எதுக்கு போன் பண்ணுற?” என்று வாசன் செல்லமாக கடிந்து கொள்ளவும் ஒரு குறுந்செய்தியை தட்டி விட்டு செல்பவள் வீட்டுக்கு வந்த பின்பும் வந்து விட்டதாக குறுந்செய்தி அனுப்புவாள்.
 
வாசுகியின் ஒவ்வொரு செய்கைகளையும் ரசித்த வாசன் கொஞ்சம் கொஞ்சமாக அவளோடு மனதளவில் நெருங்கலானான். அதன் விளைவாக அவன் மனதில் இருந்த பயம் அகன்று வாசுகியை முழு மனதாக ஏற்றுக்கொண்டு அவளை புரிந்துக்கொள்ள முற்சிக்கலானான்.
 
கடவுள் படைத்த படைப்பில் மிக சிறந்த படைப்பு மனித இனம் என்றாலும் உடல் ஊனத்தோடு பிறப்பவர்களும் உண்டு. எந்த குறையுமே! இல்லாமல் பிறப்பவர்களும் நூறு விகிதம் நல்லவர்கள் இல்லையே! கோபம், பொறாமை, கவலை, சுயநலம், போன்ற ஏதாவது ஒன்றில் கூடக் குறைய இருக்கத்தான் செய்கிறார்கள்.
 
அடுத்தவனின் பொருளையோ! வாழ்வையோ! பார்த்து பொறாமை படாதவர்கள் இந்த பூமியில் எத்தனை பேர்? இருப்பதை விட்டு இல்லாததை நினைத்து கவலை அடைபவர்கள்தான் அதிகம். கோபம் வரும் பொழுது பொறுமையாக நாவை அடக்கினால் ஆயிரம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் எல்லோருக்கும் பொறுமை என்பது பறந்து விடும் கோபம் உடனே! வந்து விடும் என்பதுதான் உண்மை.
 
இதுதான் மனிதர்களின் குணம். கடவுள் மனிதனை படைத்திருப்பதும் அவ்வாறே! மனிதன் தன்னை உணர வேண்டும் அதன் பின் பிறரை, தன்னை சுற்றி உள்ளவர்களை உணர வேண்டும் என்பதற்காக வேண்டிதான் மனிதன் ஆறறிவாக படைக்கப்பட்டு எல்லா குணத்தையும் படைத்து விட்டானோ! இறைவன்.  
 
வாசுகியின் குழந்தை பருவம் மற்ற குழந்தைகள் போலல்லாது பூர்ணனாவின் வசுவுகளைக் கேட்டு வளர்ந்ததால் அந்த கோபத்தை யாரிடம் காட்டுவதென்று கூட அவளுக்கு தெரியவில்லை.
 
படிக்க வேண்டும், காலேஜ் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் “எங்க அக்காவ காலேஜ் அனுப்பப் போய் தான் அங்க ஒருத்தன காதலிச்சு அத வீட்டுல சொல்லாம வீட்டுல சொன்னபடி உங்கள கல்யாணம் பண்ணி குழந்தையை பெத்து போட்டுட்டு ஓடிப்போய்ட்டா” எடுத்த எடுப்பிளையே! பூர்ணா சொல்ல நாதனுக்கு பகீரென்று நெஞ்சுக்குள் வலியே! வந்தது.
 
பூர்ணா சொன்ன விதத்தில் வாசுகி யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடியே! விட்டாள் என்பது போல் இருக்க நாதனும் அவளை காலேஜ் அனுப்ப வில்லை. தந்தையை எதிர்த்து பேசி பழக்கப் படாதவள் மெளனமாக கண்ணீர் வடித்து விட்டு இதுதான் தன் வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.
 
பூர்ணா பெத்த இரண்டு பெண்களும் காலேஜ் செல்ல வாசுகி அடுப்படியில் தஞ்சமடைந்தாள். வீட்டு வேலைகள் மொத்தமும் அவள் தலையில்தான் வந்து விடிந்தது. அதுவும் ஒரேயடியாக ஒன்றும் பூர்ணா அவளை வேலைக்காரியாக்கி விடவில்லை. வாசுகி அறியாமலே! நாதனுக்கு தெரியாமலே! அதை செய்திருந்தாள்.
 
முதலில் கூடமாட உதவி செய்தவள் போகப்போக “இன்னைக்கி இதை செய். பகலைக்கு இத சமைச்சிடு, இரவைக்கு இத செய்” என்று சமையல் வேலை மாத்திரமல்லாது தங்கைகள் காலேஜ் செல்வதை காரணம் காட்டி மற்ற வேலைகளையும் உத்தரவிடலானாள். வாசுகி உணரும் பொழுது காலம் கடந்திருந்தது. அதிலிருந்து வெளிவரவோ! தப்பிக்கவோ! முடியாதபடி அந்த வேலைகளுக்கு அவள்தான் பொறுப்பாளி என்றாகி இருந்தாள்.
 
திருமணம் ஒன்றுதான் தனக்கு விடிவுகாலத்தைக் கொடுக்கும் என்று கனவோடு காத்திருந்தவளுக்கு ஜாதகத்தில் இருந்த குளறுபடியால் அதுவும் தள்ளி தள்ளிப் போக வாழ்க்கையே! வெறுத்துப்போனாள்.
 
தன்னுடைய சுயதேவைக்காக அன்றி யாரும் எதையும் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணம் வாசுகியின் மனதில் ஆழமாக பதிந்து போனதன் காரணத்தினால் என்றுமில்லாமல் வாசன் செய்வதெல்லாம் குழந்தைக்கத்தான் என்ற எண்ணம் வாசுகிக்கு வர, கூடவே கோபமும் சேர்ந்து வந்து அவளை அவ்வாறு பேச வைத்திருந்தது. அதற்கு அவள் பூர்ணாவிடம் கற்ற பாடமும், கர்ப்பமாக இருப்பதால் உண்டான மனநிலையும்தான் காரணம்.
 
வீட்டில் பூர்ணாவிடமோ! நாதனிடமோ! வாய் பேசாதவள் வாசனிடம் மட்டும் வாயடிப்பது தன்னவன் என்ற உரிமை என்பது என்று கூட பேதை பெண் உணர்ந்தாளில்லை.
 
வாசனும் சட்டென்று கோபப் படுபவன்தான். அவனும் எல்லா உணர்ச்சிகளும் உள்ள மனிதன் தானே! வாசுகி கோபப்பட்டு சுள்ளென்று எரிந்து விழுவதற்கான காரணம் கர்ப்பம் என்று அறிந்திருந்ததால் உடனே! சமாதானமும் அடைந்து பேசி புரியவைக்கலாம் என்றுதான் அவளோடு வீடு வந்தான். அவள் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லி விட்டான்.
 
 இந்த ஆறுமாத வாழ்க்கையில் வாசன் அவளிடம் கோபப்பட்டு அடித்தது ஒரு தடவைதான். கோபப்பட்டு பேசியதும் இல்லை. அவளும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. அவர்கள் மட்டும் தனியாக இருக்கும் பொழுது கேலி, கிண்டல் என்று சிரிக்க சிரிக்க பேசுபவன்தான் மற்றபடி சாதாரண பேச்சுக்கள்தான். இன்றுவரை அவன் குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியோ! சகோதர்களை பற்றியோ! அவளிடத்தில் எந்த குறையும் கூறியதில்லை.
 
ராமநாதன் மனம் பொறுக்காமல் சில நேரம் புலம்பியதுதான் அவளுக்குத் தெரியும். அதையும் அவள் தோண்டித் துருவி கேட்டாளில்லை. அப்படியிருக்க அவள் கணவன் கவலையான குரலில் பேசுவது இதுதான் முதல் முறை. அதற்கு காரணம் தான் தான் என்றதும் மனம் வெறுத்துப் போனவள் தாவி வந்து அவனை இறுக அணைத்தப்படி மன்னிப்பு வேண்டி நின்றாள்.
 
“ஹேய் என்ன டி நீ.. முதல்ல பேசுற, அப்பொறம் அழுகுற” என்றவன் கண்களை துடைத்தவாறே “இதெல்லாம் நீயா பேசல. எல்லாம் உன் வயித்துல இருக்கே! நம்ம பாப்பா பண்ணுற வேல” என்று சொல்ல கணவனை புரியாது பார்த்தாள்.
 
“உண்மைதான் டி. என்ன நம்பு. நம்ம அக்ஷரா இருக்காளே! அவ பொறக்கும் போது நித்தியும் இப்படித்தான் ஏடாகூடமா பேசுவா. என்ன இவ இப்படி மாறிட்டான்னு ஆச்சரியமா இருந்துச்சு. டாக்டர்தான் சொன்னாங்க கர்ப்பமா இருக்குற பொண்ணுங்க மனநிலை இப்படி இருக்கும் நீங்கதான் புரிஞ்சி நடக்கணும்னு. சரி அவ புருஷன் மேல காண்டுல இருப்பான்னு நெனச்சேன். உன்ன பாரேன் உனக்கும் அதே சிம்டம்ஸ். உனக்கும் என் மேல செம கண்டுதான் போ”
 
நம்ம அக்ஷரா பொறந்ததும் அவளுக்கு அந்த குணம் அப்படியே இருக்கு. சட்டுனு கோபப்படுவா, சுள்ளுனு பதில் பேசிடுவா. நித்தி கூட சொல்லுவா அப்படியே என் வீட்டுக்காரரை உரிச்சு வச்சிருக்கானு. ஆனா இது எங்க குடும்பத்துல இருந்துதான் வந்திருக்கும் போல. அம்மா ரொம்ப அமைதியானவங்க, அப்பாவும் அப்படிதான். எந்த தாத்தா, பாட்டி இப்படி இருந்தாங்களோ!” வாசன் பெருமூச்சு விட
 
வாசுகிக்கி அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வர “ஆ.. உங்க கொள்ளுத்தாத்தாவுக்கு கொள்ளுத்தாத்தா அவங்கம்மா வயித்துல இருக்கும் போது இப்படித்தானாம்”
 
“இருக்கும், இருக்கும்” என்றவன் “என்னடி லந்தா? வாய் ரொம்பதான் நீளுது?” சட்டை கையை மடித்தவாறு அவளை அடிக்க வர கல கலவென  சிரிக்கலானாள் வாசுகி.  
 
“அப்பா டா… சிரிச்சிட்டியா? இப்போ நான் கடைக்கு போகவா?”
 
“போங்க போங்க… காரியத்துல கண்ணா இறீங்க” என்று புன்னகைக்க,
 
“உன் மேலதான் டி என் கண்ணு. நைட் ஏதாவது சமைக்கிரியா? முடியுமா?”
 
“எனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல. சமைச்சி வைக்கிறேன். நீங்க இப்போ கிளம்புறீங்களா?”
 
“அடிப்பாவி… வீட்டுல இருக்க மாட்டீங்க என்று இப்போதான் கண்ண கசக்கின. இப்போ என்னடான்னா  தொரத்துற” வாசன் வாயில் கைவைக்க
 
“ஓவரா ஸீன் போடாதீங்க போங்க” அவனை பிடித்து தள்ளியே விட்டாள்.
 
“அப்பாவும் வந்துடுவார். அவருக்கும் சேர்த்தே சமை. நா வரேன்” என்றவன் கன்னத்தில் முத்தமிட்டு விடை பெற வாசுகியின் மனம் இலேசாக இருப்பது போல் உணர்ந்தாள்.
 
இரவு எட்டு மணி போல்தான் ராமநாதன் வீடு வந்து சேர்ந்தார். பிரசாதமும், திருநீறும் கொண்டு வந்திருந்தவர் கர்ப்பமாக இருப்பது அறிந்திருந்ததனால் அவளுக்கு கொறிப்பதற்காக அள்ளிக்கொண்டு வந்திருந்தார்.
 
“எதுக்கு மாமா இவ்வளவு?” வெக்கப்பட்டவாறே வாசுகி சொல்ல
 
கலாவதி ஐந்து குழந்தைகளை சுமந்த பொழுது அருகில் இருந்தவர் தானே! “அடிக்கடி பசிக்கும்மா..” என்று புன்னகைத்து நகர்ந்து விட்டார்.
 
ராமநாதன் மாத்திரை போட்டு தூங்க வேண்டும் என்பதாலையே! நேரங்காலத்தோடு சமைத்தவள் அந்த வாசனை பிடிக்காமல் வாந்தியெடுத்து சோர்ந்து அமர்ந்தும் விட்டாள். அந்த சத்தத்தில் ஓடி வந்த ராமநாதன் அவளுக்கு உதவி அறைக்கு செல்லுமாறும் மற்ற வேலைகளை தான் பார்ப்பதாக கூற வாசுகி மறுக்க, வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தவர் வேலைகளை பார்கலானார்.
 
கொண்டு வந்திருந்த சாத்துக்குடியையும் ஜூஸ் போட்டுக் அறைக்கே கொடுத்தவர் “இத குடிமா கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்று கூற
 
“என்ன மாமா நீங்க போய் இந்த வேலையெல்லாம் சேய்ரீங்க” என்று எழப்போக
 
“என் பொண்ணுங்க என்றால் செய்திருக்க மாட்டேனம்மா? அப்போ குடிச்சிகிட்டு போதைல வீட்டுல என்ன நடக்குது என்று கூட தெரியாம இருந்துட்டேன். வாழ்க்கைல நிறைய இழந்துட்டேன். இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். உன்ன என் பொண்ணா பாத்துக்கிறேன். தயவு செஞ்சி தடுக்காத” 
 
இப்படி பேசுபவரிடம் எப்படி மறுத்து பேசுவது? அமைதியாக வாங்கியவள் “மாமா நீங்க மாத்திரை போடணுமே! உங்களுக்கு பரிமாறட்டுமா” என்று கேட்க
 
“இல்லமா… நான் போட்டு சாப்புடுறேன். நீ ரெஸ்ட் எடு. வாசன் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்க. நீயும் மறக்காம மாத்திரை போடு சரியா” என்றவர் அறையை விட்டு வெளியேறி இருந்தார்.
 
வாசன் வந்த பிறகு வளமை போல் உணவை சூடாக்க போக அந்த வாசம் அவளுக்கு அவஸ்தையாகி மீண்டும் வாந்தியெடுக்கலானாள். வாசன் அடுப்பை அனைத்து அவளை கட்டிலில் படுக்க வைத்து தலையை கோதிவிட்டபடி பேசிக் கொண்டிருந்தவன் சாப்பாடு ஆரிய பின்தான் அவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிட்டு தானும் உண்டு மாத்திரைகளையும் எடுத்துக்கொடுத்தான்.
 
வழமையாக சுடச்சுட சாப்பிடுபவன் ஆறிப்போன சாப்பாட்டை சாப்பிட்டது வாசுகிக்கி கவலையை கொடுத்தது. அதை பற்றி சொல்லி புலம்பியவாறே கணவனை கட்டிக்கொண்டு தூங்கியும் போனாள். 
 
காலையில் எழுந்து சமைக்க சென்றவள் நிலை இதே நிலைதான். பாதி சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுதே! வாந்தியெடுத்து சோர்ந்து படுத்துக்கொள்ள வாசன்தான் சமையலை கவனித்து அவளுக்கு உணவையும் ஊட்டி மாத்திரையும் கொடுத்து தூங்குமாறு கூறியவன் பகல் உணவு தனம் ஆச்சி மெஸ்ஸில் வாங்கிக்கொள்ளலாம் என்றவாறு கடைக்கு கிளம்பி சென்றிருந்தான். 
 
கணவனை கவனித்துக்கொள்வதுதான் தனது தலையாயக் கடமை என்றிருந்த வாசுகிக்கு, குழந்தையின் வரவால் தன் கடமையை சரிவர செய்ய முடியாமல் போய் விடுமோ! என்ற அச்சம் தோன்றியது.
 
நான்கு நாட்கள் இவ்வாறே செல்ல அன்றும் வாசுகி சமையலுக்கு அத்தனையும் செய்து வைத்து ஒதுங்கிக்கொள்ள வாசன் சமைத்து விட்டு உண்ட பிறகு கடைக்கு கிளம்பி இருந்தான்.
 
வாசன் சென்ற சிறிது நேரத்திலையே! நாதனும், வாசுகியின் இரண்டு அத்தைகளும், ராஜமும் வாசுகியை பார்க்க வந்திருந்தனர். 
 
வாசுகி தூங்கிக் கொண்டிருக்க, ராமநாதன் வீட்டில்தான் இருந்தார். வந்தவர்களை வரவேற்று அவர் நாதனோடு பேசிக்கொண்டிருக்க, பெண்கள் சென்று வாசுகியை எழுப்பி இருந்தனர்.
 
“எப்போ வந்தீங்க ஆச்சி? வாங்க பெரியத்த, வாங்க சின்னத்த” என்று அழைத்தவாறே எழுந்தவள் அவர்களின் பின்னால் பார்க்க
 
“பூர்ணா வரல வாசுகி. வீட்டுல நடக்குற பிரச்சினைதான் உனக்குத் தெரியுமே!” ராஜம் சொல்ல பெரியத்த கலைவாணி முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள
 
சின்னத்த சித்ரா வாசுகிக்கி சைகை செய்யவும் “என்ன சாப்புடுறீங்க?” என்று சமயலறைக்குள் நுழைந்து அனைவருக்கும் கொறிப்பதும் குடிப்பதற்கும் ஏற்பாடு செய்தாள். 
 
சிறிது நேரத்திலையே! இயல்பு நிலைக்கு வந்த கலைவாணி “இன்னைக்கி நாம சாப்பிட்டுட்டுதான் போறோம்” என்று சமையல் செய்ய இறங்கி இருக்க,
 
 “ஆமா ஆமா” என்றவாறு மற்ற இரு பெண்களும் அவர்கள் கொண்டு வந்த பையை துழாவ ஆரம்பித்திருக்க வாசுகி அறைக்குள் நுழைந்து கணவனுக்கு அழைத்து வீட்டார் வந்திருப்பதை கூறினாள்.    
 
வீட்டுக்கு யாராவது வந்தால் மட்டும் வாசன் வீடு வருவான். அதனால்தான் வாசுகி அழைத்து கூறி இருந்தாள். வாசன் மதியம் வரும் பொழுது தடல்புடலான விருந்தே! தயாராக அங்கு காத்திருந்தது.
 
முகம் கழுவி அறைக்குள் வந்த வாசன் “சமையல் அறைக்குள்ளால வர முடியல இப்படி மணக்குது. விதவிதமா சமைச்சி அசத்தி இருக்காங்க. வீட்டுல எல்லாம் இருக்கா? ஏதும் வாங்கணுமான்னு கேட்டப்போ எல்லாம் இருக்குனு சொன்ன” முகத்தை துடைத்தவாறே வாசன் கேக்க
 
“அவங்களே! எல்லாம் கொண்டு வந்திருக்காங்க. சின்ன அத்த சித்ரா நல்ல வெட கோழியா புடிச்சி கொண்டு வந்திருக்காங்க, அது மட்டுமா நாட்டு முட்ட கொண்டு வந்திருக்காங்க. வாணி அத்த கொஞ்சம் பழங்கள் ஆச்சி தோட்டத்துல காய்ச்சதுனு காய்கறி பையே! சுமந்துகொண்டு வந்திருக்கு. வேறு என்ன வாங்க? ஆ.. அப்பா வேற தயிர் கொண்டு வந்தாரு. மாமா கொண்டு வந்ததும் இருக்கு” என்று வாசுகி அடுக்க
 
“போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்கிட்டு இருக்கு. நீ சாப்டியா?” கிண்டலாக ஆரம்பித்தவன் அன்பாக கேட்க
 
“எல்லாரும் உங்களுக்காகத்தான் வைட்டிங்”
 
“சரி வா” என்று வாசலுக்கு செல்ல ஆண்களுக்கு வாசலில் பாய் போட்டு இலை போடப்பட்டிருக்க வாசுகி பரிமாறினாள். உணவின் மணத்தால் அவளுக்கு வாந்தி வரவும் அப்படியே விட்டு விட்டு பின் பக்கம் ஓட வாசனும் அவள் பின்னால் ஓடி இருந்தான்.
 
வாசன் வாசுகியின் முதுகை நீவி தண்ணீர் புகட்டி அவளை அறையில் விட “சமைக்கும் போதும் வாசம் பிடிக்காம வாந்தியெடுத்துகிட்டுதான் இருந்தா மாப்புள” வாணி அத்த சொல்ல
 
“இதெல்லாம் மூணு மாசம் வரைக்கும் இப்படித்தான் இருக்கும். நல்லா சாப்பிட்டாவே! சரி. வாந்தி வருதுன்னு சாப்பிடாம இருக்கக் கூடாது” ராஜம் சொல்ல
 
“இங்க இவளை பார்த்துக்க யாரு இருக்கா? பேசாம இவள ஊருக்கு கூட்டிட்டு போய்டலாமா?” சித்ரா சொல்ல பெண்களுக்கு அதுதான் சரி என்றும் தோன்ற உடனே நாதனிடம் பேச முகம் மலர்ந்தார் நாதன்.
 
 “இல்ல நாங்க பார்த்திக்கிறோம்” வாசன் உடனே! மறுக்க, ராமநாதனும் தான் பார்த்துக்கொள்வதாக கூற
 
“என்ன பேசுறீங்க நீங்க ரெண்டு பேரும்? ரெண்டு ஆம்பளைக்கு கர்ப்பமாகி இருக்கும் பொம்பள புள்ளைய பார்த்துக்க முடியுமா?” ராஜம் கேக்க
 
“அவளே! எந்த வேலையும் செய்ய முடியாம. சமைக்கிற வாசம் வரும் போதும் வாந்தி எடுத்து சோர்ந்து போறா.. அவ எப்படி உங்களுக்கு சமைச்சி கொடுப்பா..” சித்ரா பேச
 
“கொஞ்சம் நாள் அவ வீட்டுல இருக்கட்டும்” என்று ராஜம் சொல்லும் போதே!
 
“இல்லனா வாசுகிக்கி நீங்க ரெண்டு பேரும் சேவகம் செய்ய வேண்டி இருக்கும்” என்றாள் கலைவாணி
 
வாசன் “அதெல்லாம் ஒன்றுமில்லை என் பொண்டாட்டிய நான் பாத்துக்கிறேன்” என்று கூறும் முன்பாகவே!
 
கலைவாணி பேசியது வாசுகியின் மனதில் சுருக்கென்று தைத்திருந்தது. இந்த நான்கு நாட்களாக ராமநாதன் அவளுக்கு ஜூஸ் போடுவதும், வாந்தியெடுத்தால் அள்ளுவதும் என்று எல்லாம் செய்ய “நான் வீட்டுக்கு வரேன்” என்று விட்டாள்.
 
“ஏன் டி” என்று வாசன் பார்க்க கணவனின் பார்வையை சந்திக்கவில்லை மனையாள்.
 
சரி அவள் இருக்கும் மனநிலையில் பிடிவாதம் பிடிப்பதும் ஒரு குணம் தானே! என்று வாசன் போய் வரட்டும் என்று அமைதியாக, அவள் இல்லாம தான் மட்டும் இந்த வீட்டில் எப்படி இருக்கப் போகிறோம் என்று வேறு கவலையடையலானான்.         
 
பஸ்ஸிலோ போக வேண்டாம் என்று வேன் பிடித்து ஆயிரம் பத்திரம் சொல்லி வாசுகியை வண்டியில் அமர்த்தியவன், “எத்தனை நாள் தங்க போற?” என்று கேட்க “தெரியாது” எனும் விதமாக தலையசைத்தாள் வாசனின் வாசுகி.
 
ஒரு பெருமூச்சு விட்டவன் “மாத்திரையெல்லாம் பைல வச்சிருக்கேன். டைம்க்கு போடு. போட்ட உடனே எனக்கு மெஸேஜ் பண்ணு. டைம்க்கு சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு. அடிக்கடி போன் பண்ணு சரியா? டாக்டர்கிட்ட போக நானே! வரேன். வேற யார் கூடயும் போகாதே” என்றவன் அவளை வழியனுப்பி வைத்தான்.
 
இரண்டு நாட்கள் வாசுகியிடமிருந்து வாசன் சொன்னபடி குறுந்செய்தி வந்தது அன்று மாலை நாதன் அழைத்து வாசுகியை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக வாசனுக்கு தெரிவித்திருந்தார்.
 

Advertisement