Advertisement

அத்தியாயம் 8

 
“ஐயோ அம்மா யாராவது என்ன காப்பாத்துங்க? என்ன கொல்ல பாக்குறா” வாசுகி அறைந்ததில் அதிர்ச்சியடைந்த வாசன் கத்த வாசுகி அவன் வாயை தன் இரு கைகளாலும் பொத்தி இருந்தாள். 
 
இது தான் சந்தர்ப்பம் என்று அவன் அவளை அணைத்துக்கொள்ள, அதிர்ச்சியடைவது வாசுகியின் முறையானது. தான் அடித்தும் கோபப்படாமல் இவன் என்ன செய்ய விளைகின்றான் என்று குழம்பிய வாசுகி கணவனை விட்டு திமிறி விலக முயற்சிக்க, வாசனோ அவளை விலக விடாது தன்னுள் இறுக்கி அணைத்தவாறு சிரித்துக் கொண்டிருந்தான்.
 
வாசுகி அடித்ததும் அதிர்ச்சியடைந்தவன்தான். அவள் இருக்கும் நிலைமையும், அவள் மன உணர்வுகளையும் புரிந்துக்கொண்டவனகாக சட்டென்று கேலி செய்ய ஆரம்பித்தான்.   
 
“என்ன டி ஒரு பேச்சுக்கு கோபம் வந்தா அடிக்க சொன்னேன். அதுக்காக பட்டுனு அறஞ்சி புட்ட.  நாம ரெண்டு பேரும் தனியா இருக்குறதால உன்ன மன்னிச்சி விட்டுடுறேன்” வார்த்தையில் மட்டுமே! மிரட்டல் இருந்தது. குரலில் கொஞ்சம் கூட இல்லை.
 
“பின்ன.. அன்னைக்கி எனக்கும் இப்படி தானே! இருந்திருக்கும்” முகத்தை சுருக்கியவள் “தள்ளுங்க சமைக்கணும்” என்று அவன் நெஞ்சின் மீது கைவைத்து தள்ளி விட 
 
“சாப்பாடு வாங்கிட்டுதான் டி வந்தேன் வா சாப்பிடலாம்” வாசன் கையை பிடித்து இழுக்க,
 
“இந்த மாதிரி நேரத்துல கடைல வாங்கினது எல்லாம் சாப்பிடக் கூடாதுனு தெரியாதா? நீங்க உங்க தங்கச்சி வீட்டுல சாப்பிட்டிருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் அதான் சீக்கிரம் சமைச்சி கடைக்கு எடுத்துட்டு வரலாம்னு பார்த்தேன்” ஏதோ வேகத்தில் சொன்னவள் நாக்கை கடித்துக் கொண்டு வாசனின் முகம் பார்க்க
 
“இவள் என்னை நன்கு அறிந்துதான் வைத்திருக்கிறாள்” உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் முகத்தில் அதை காட்டாமல் அவள் சொன்னது காதில் விழவே! இல்லாதது போல “தனம் பாட்டி மெஸ்ஸுலதான் டி வாங்கினேன்” என்றான்.
 
தனம் பாட்டி ஊரில் ஒரு சிறிய மெஸ்ஸை நடத்தி வரும் முதியவர். எந்த கலப்படமும் இல்லாமல் தனது கையாலையே! அனைத்தையும் செய்வதால் சாப்பாடும் அவ்வளவு ருசியாக இருக்கும். வாசனின் கடையில் தான் மளிகை ஜாமங்களை வாங்கிச் செல்வார். சாப்பாடு எப்படி இவ்வளவு ருசியாக இருக்கிறது என்று வாசுகி ஒரு தடவை கடைக்கு வந்த பொழுது கேட்டிருக்க,  எதையும் தூளாக வாங்காமல் தனது கையாலையே! வறுத்து, இடித்து பொடி செய்து சமையலில் சேர்ப்பதாக சொல்லி விட்டு பொக்கை வாய் தெரிய சிரித்தார்.
 
சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கும் அவர் சாப்பாடு என்றதும் “ஓஹ்.. அப்போ சரி வாங்க சாப்பிடலாம்” என்று பாயை விரித்து அமர்ந்து கொண்டாள் வாசுகி. நித்யா விஷயத்தை பேச அந்த நொடியில் மறந்துதான் போனான்.
 
வாசனின் சிந்தனையெல்லாம் “நான்கு மாதத்திலிருந்து வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெருக்க ஆரம்பிக்கும் அதன்பின் இப்படி தரையில் அமர்ந்து சாப்பிடுவது இவளுக்கு சிரமமாகத்தான் இருக்கும். முதலில் ஒரு சாப்பாட்டு மேசையை வாங்க வேண்டும். பிளாஸ்டிக்ல வாங்க கூடாது. பலகைலதான் வாங்கணும். ரெண்டு கதிரை ஒரு சின்ன மேசைனாலும் போதும். இந்த சுவர் பக்கமா போட்டுடலாம்”
 
நித்யாவுடைய மூன்று குழந்தைகளும் பிறக்கும் பொழுதும் வாசன் அருகில் தான் இருந்தான். கணவனாக ஆத்மநாதன் எவ்வளவு பயந்தானோ! அவ்வளவு பயம் வாசனின் மனதுக்குள்ளும் இருந்தது. அதுவும் மூத்தவன் ஆதி உண்டான சேதி கேட்டதிலிருந்து அவன் டில்லிக்கு மாதம் தவறாமல் போய் வந்த வண்ணம் தான் இருந்தான்.
 
நித்யாவோ! சிறு பெண். அன்னையும் இல்லை. பாஷையும் தெரியாது. பத்மாவும் நித்யாவின் துணைக்கு செல்லவில்லை. என்னதான் போனில் பேசினாலும் அருகில் இருப்பது போல் வருமா? சிரமம் பார்க்காமல் டில்லி சென்று வந்தான்.
 
சத்யாவும் குழந்தை நித்யாவுக்கு அவளால் உதவ முடியாது. ஒரு ஆண் என்றும் பாராமல் சகோதரனாக அவன் நித்யாவுக்கு செய்தவைகள் சொல்லிலடங்காதது.
 
அக்ஷரா உண்டான பொழுது அவளுடைய குணத்தில் உண்டான மாற்றங்களால் வாசனிடம் புலம்ப வலுக்கட்டாயமாக அழைத்து வந்தான். அந்த நான்கு மாதமும் வாசன் தான் பார்த்துக் கொண்டான். அதன் பின் ஏழாம் மாதமே! வளைகாப்பு செய்து ஊருக்கு வந்து விட்டாள். குழந்தை கிடைத்து இரண்டு மாதம் இருந்துதான் சென்றாள்.
 
அத்தனை மாதமும் எந்த பெண் துணையும் இல்லாமல் வாசன்தான் தன் சகோதரியை அன்னையாக பார்த்துக்கொண்டான். அதனாலயே! அவன் எந்த மாதத்தில் எவ்வாறான கஷ்டங்கள் உண்டாகும் என்று நன்கு அறிந்து வைத்திருந்தான்.
 
சத்யாவின் குழந்தையைத்தான் இப்படி சீராட்ட முடியவில்லையே! என்ற கவலை அவன் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டு இருக்கின்றது. வளைகாப்பு செய்தாலும் சத்யாவை தாய் வீடு அனுப்ப மாட்டேன் என்று ரமேஷ் உறுதியாக சொல்லி விட்டான். வாசன் வாடகை வீட்டில் இருப்பதால்தான் அனுப்ப மறுக்கிறானா? வசதியான வேறு வீடு பார்கவா என்று வாசன் கேட்டுப் பார்க்க,
 
“இங்க பாருங்க மாப்புள, தல பிரசவமாகட்டும், அடுத்து எத்தனை பிரசவமானாலும் ஆகட்டும் என் பொண்டாட்டிக்கும் பிள்ளைக்கும் என்னால் செலவு செய்ய முடியும்” என்று ரமேஷ் பேச
 
புஷ்பாவோ! குதிக்கலானாள். “என்ன டா பேசுற? அது அவங்க கடமை?”
 
“இங்க பாருமா… இது என் வீடு. இங்க நான் என்ன சொல்லுறேனோ! அதுதான் நடக்கும். என் பொண்டாட்டிக்கு நான் செலவு பண்ணுறேன். வாசன் அண்ணனா செலவு செய்ய உரிமை இருக்கு. கடமையா ஒன்னும் செய்ய வேண்டியதில்லை” உறுதியாகவே ரமேஷ் சொல்ல
 
“இல்ல மாப்புள இதெல்லாம் முறை… நாமதான் செய்யணும்” என்று வாசன் சொல்ல
 
“இங்க பாருங்க என் பொண்டாட்டிக்கு பிரசவம் பார்க்கக் கூட வக்கில்லை என்று சொல்ல வாரீங்களா?” என்று ரமேஷ் எகிற வாசன் சத்யாவிடம் நீ பேசு என்று சைகை செய்ய அவளோ! கணவன் சொல்வதுதான் சரி எனும் விதமாக நின்றிருந்தாள்.
 
“ஏன் டா… ஊரு உலகத்துல எல்லாம் பொண்ணு வீட்டுலதான் பிரசவம் பாக்குறாங்க, நீ என்ன இப்படி பண்ணுற? என்று புஷ்பா மீண்டும் பேச ஆரம்பிக்க
 
“நான் சொன்னது சொன்னதுதான். செலவும் நான்தான் செய்வேன். என் பொண்டாட்டியையும் எங்கயும் அனுப்ப மாட்டேன்” முடிவாக சொல்லி விட்டான் ரமேஷ்.
 
அவன் பிடிவாதம் அறிந்த ரமேஷின் தந்தை பாண்டிராஜ் அவனிடம் பேசி புரியவைக்க முடியாது என்று புஷ்பாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
 
பெண் வீட்டார்தான் பிரசவம் பார்க்க வேண்டும் அது அவர்களின் கடமை என்று எண்ணாமல் “உரிமைக்காக நீங்க எது வேணாலும் செய்ங்க கடமை என்று எதுவும் செய்யாதீங்க” என்று ரமேஷ் பேசியது ராமநாதனின் மனத்தில் ரமேஷ் உயர்ந்து நிற்க, மருமகனை நினைத்து பெருமை பட்டுக் கொண்டவர் வாசனோடு வெளியே சென்று பையை வைத்து விட்டு வந்ததாக மீண்டு உள்ளே வர சத்யா ரமேஷோடு பேசுவது காதில் விழுந்தது.
 
“நல்ல வேலைங்க நீங்க என்ன எங்க வீட்டுக்கு அனுப்பல. இல்லனா என்ன கொண்டு போய் கவர்மெண்ட் ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருப்பாங்க, நம்ம பையன் வசதியான ஆஸ்பிடல்ல பொறக்கணும்” சத்யா சொல்ல
 
“தெரியும் சத்யா… நீ எனக்கு சொல்லி புரிய வைக்கலானா நானும் உன்ன அனுப்பி இருப்பேன். அந்த வீட்டுல நீ எப்படி இருந்திருப்பியோ!” என்று முகத்தை சுளித்தான். 
 
ராமநாதனுக்கு என்ன பிறவி இவர்கள் என்றுதான் எண்ணத் தோன்றியது. மேலோட்டமாகப் பார்த்தால் வாசனுக்கு செலவை இழுத்து வைக்கக் கூடாது என்று தான் தோன்றும். ஆனால் குடிசை என்றாலும் எந்த பெண்ணும் தாய் வீட்டுக்கு வர மறுக்க மாட்டாள். வீட்டை விற்க காரணமானவளே! இப்படி பேசுவதைக் கேட்டு அவர் இரத்தம் கொதித்தது. 
 
ரமேஷை அவள் பேச்சில் மயக்கி வைத்திருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. வாசன் வேறு வீடு பார்க்கிறேன் என்று கூறியும் இப்படி பேசுபவளை என்ன செய்வது? சரியாக பார்த்துக்கொள்ள மாட்டான் என்பதை விட வசதி பத்தாது என்ற எண்ணம்தான் சத்யாவின் மனதில் உள்ளது என்பது ராமநாதனுக்கு நன்கு புரியவே! ஏதுவோ பண்ணிக் கொள்ளட்டும். வாசன் நிம்மதியாக இருந்தால் போதும் என்று சத்தம் செய்யாமல் அவ்விடத்தை விட்டு அகன்றவர் வாசனிடமும் இந்த விஷயத்தை பகிரவில்லை.
 
வாசன்தான் நித்யாவை பார்த்துக் கொண்டது போல் சத்யாவை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று புலம்பிக் கொண்டே! வீடு வந்தான். உண்மையில் தனியார் மருத்துவமனையில் சத்யாவை அனுமதித்தால் அதற்குண்டான செலவு எவ்வளவு என்பதுவரை சென்று விசாரித்து விட்டுத்தான் வந்திருந்தான்.
 
நித்யாவின் குழந்தைகளில் ஆதி மற்றும் சஹானா டில்லியில் பிறக்க, அக்ஷரா மட்டும்தான் ஊரில் பிறந்தாள். அந்த நேரத்தில் வாசனுக்கு சொந்தமாக கடை கூட இல்லை. கூலி வேலை செய்பவன் தனியார் மருத்துமனையை பற்றி சிந்தித்தும் பார்த்திருக்க முடியுமா?
 
ஆனால் இப்பொழுது அவனால் செலவு செய்ய முடியும் என்பதனால் ஆசையாக காத்திருந்தான். அவனுக்கு நித்யாவின் குழந்தைகளும் சத்யாவின் குழந்தைகளும் வேறு அல்லவே! அவர்களுக்கு செய்ததை போல் இவர்களுக்கும் செய்ய வேண்டும். ஏன் ஒரு படி மேலையே! செய்ய முடியும் என்றால் செய்ய தயங்காதவன் வாசன்.        
 
மின்னல் போல் நித்யா குளியலறையில் விழுந்திருந்தது மனக் கண்ணில் தோன்ற தலையை உலுக்கிக் கொண்டான் வாசன்.  
 
“சாப்பிடும் பொழுது என்ன யோசிக்கிறீங்க?” தட்டில் கை வைத்தவாறு அளந்து கொண்டிருந்தவனை உலுக்கினாள் வாசுகி.
 
“ஒன்னும் இல்ல. ரொம்ப நாளா கோவிலுக்கு நாமா ஜோடியா போகல இல்ல. அதான் போயிட்டு வரலாமா?” புன்னகை முகமாகவே! இவனும் பதில் சொல்ல
 
“தொரைக்கு கடைய கட்டிகிட்டு அழுகத்தான் டைம் இருக்குனு நினச்சேன். கோவிலுக்கெல்லாம் போக டைம் இருக்கா? பாப்பா வருதுன்னா எல்லா வேலையையும் ஒதுக்கி வச்சி டைம் எடுத்துப்பீங்களே!” கொஞ்சம் கோபமாகவே வாசுகியிடமிருந்து பதில் வந்தது.  
 
“பாத்தியா? பாத்தியா? பாப்பா வர போறா” வாசுகி முறைத்த முறைப்பில் “போறான்.. றான்… அவனுக்காக கோவிலுக்கு போய் வேண்டிக்கலாம் என்று நான் சொன்னேனா? நாம ரெண்டு பேரும் ஜோடியா கோவிலுக்கு போய் ரொம்ப நாளாச்சு இன்னைக்கி நான் வீட்டுல இருக்குறதால போயிட்டு வரலாமான்னு தானே! சொன்னேன். என்ன போய் சந்தேகப்பட்டுட்டியே!” நொந்த குரலில் சொல்லியவாறே மனையாளின் கன்னம் கிள்ள அசடு வழிந்தவள் சிரித்து சமாளித்தாள்.
 
“ராட்சசி. புள்ளய பெத்து என் கைல கொடுக்குறப்போ என் உசுரையும் எடுத்திருப்பா” முணுமுணுத்த வாசன் நன்றாக சிரித்து வைத்தான்.    
 
இந்த ஆறு மாத கல்யாண வாழ்க்கையில் இன்றுதான் தனியாக பகல் உணவை உண்ணுகிறார்கள். ஏதேதோ கதை பேசியவாறே உண்டு முடித்த வாசன் ரகுவை அழைத்து இன்று கடைக்கு வர இரவாகும் என்று கூற அவனும் ஆச்சரியமாக கேள்விக் கணைகளைக் தொடுக்க, வந்து சொல்வதாக அலைபேசியை அனைத்திருந்தான்.
 
வாசன் போன் பேசி விட்டு வருவதற்குள் வாசுகி சமையலறையை சுத்தம் செய்திருந்தாள். கோவிலுக்கு ஐந்து மணி வாக்கில் போலாம் அதுவரை தூங்கி ரெஸ்ட் எடு என்று வாசன் கூற, இவ்வளவு நேரமும் தூங்கி கிட்டுதான் இருந்தேன் என்ற வாசுகி பறித்து வைத்திருந்த பூக்களை தொடுப்பதற்காக அமர்ந்து விட வாசனும் அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு உதவலானான்.
 
வாசுகிக்கி வாசன் என்றுமே! ஆச்சரியக் குறிதான்! இவன் குணம் இப்படித்தான் என்று அவளால் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்திட முடியாது. என்ன எது என்று கேட்காமல் அடித்தவன்தான், இவள் அடித்த பின்பும் சிரித்துக்கொண்டு இருந்தான்.
 
அவள் குடும்பத்தில் உள்ள ஆண்களும் சரி குடும்பத்து பெண்களை மணந்துகொண்டு வந்த ஆண்களும் சரி எது வேண்டுமானாலும் மனைவியின் பெயரை ஏலம் போடுவார்கள். தண்ணீரை கூட எடுத்து குடிக்க மாட்டார்கள். குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு இருந்தாலும் டீவி பார்த்துக் கொண்டு இருக்கும் அவர்களுக்கு தண்ணீரை கொடுத்து விட்டுத்தான் குழந்தையை கவனிக்க வேண்டும். இப்படித்தான் அவள் குழந்தை பருவத்திலிருந்து கண்டு வளர்ந்தது.
 
மனைவி எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும், என்ன நிலைமையில் இருந்தாலும் கணவனுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்பது அவள் குடும்பத்தில் எழுதப் படாத சட்டம். அதுதான் அவளும் கடைபிடிக்கிறாள். வாசனிடம் எதையும் எதிர்பார்க்காமல். அவன் குளிக்க செல்கிறானா துண்டும், கைலியும் கொடியில் இருக்கும். அதை வைப்பது தனது கடமை என்று வைத்து விடுவாள்.
 
ஆனால் அது வாசனுக்கு மனைவியின் அன்பும், பாசமுமாகத்தான் தெரியும். வாசன் வேறு ரகம் என்று வாசுகிக்கு புரிய அவன் வீடு தங்கினாலையே! போதும். ஆனால் அவனுக்கு வீடு தங்கத்தான் நேரமில்லை. அப்படி இருந்தும் ஓரளவுக்கு அவனை புரிந்துகொண்டுதான் இருந்தாள்.
 
கடைக்கு செல்ல நேரமானால் தானே! பரிமாறி சாப்பிடுவான்! ஒழிய வாசுகியின் பெயரை ஏலம் போட மாட்டான். ஏனினின் அவள் வர முன்பு அவன் தனியாகத்தான் எல்லாம் செய்து கொண்டான். யாரையும் எதிர்பார்த்து வாசன் இல்லை என்று சொல்வதற்காக செய்வது அல்ல. அவள் உள்ளே அல்லது வெளியே எதோ ஒரு வேலையாக இருப்பாள் என்று அவனுக்கும் தெரியும்.  அழைத்தால் ஓடி வந்து விடுவாள்தான். பதறிக்கொண்டு அவள் வந்து பரிமாறினால்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்க வாசன் ஒன்றும் குழந்தை இல்லையே! அவளும் காலையில் எழுந்ததிலிருந்து அத்தனை வேலைகளையும் தனியாகத்தான் பார்க்கின்றாள். உணவை பரிமாறவும் அவள் வர வேண்டுமா? என்ற எண்ணம்தான் வாசனுக்கு.   
 
வாசன் தன்னை அழைக்காமல் தனியாக வேலைகளை செய்து கொள்வது கூட வாசுகிக்கி அவன் தன்னை ஒதுக்குகின்றானோ! என்றுதான் தோன்றியது. அதன்பின் அவள் அவன் கடைக்கு செல்லும்வரை வேறு எந்த வேலைகளையும் பார்ப்பதில்லை. அதற்கு பிறகே! அவள் மனது சமன்பட ஆரம்பித்தது.
 
இரவில் சாப்பிட்ட பின் பாத்திரங்களை கழுவி அடுக்குவது, மடித்து வைத்த துணிகளை அடுக்குவது என்று அவர்களுக்கேயான தனிமையில் அவன் செய்யும் உதவிகள் அவர்களின் நெருக்கத்தை அதிகரித்தது. இவன் வித்தியாசமானவன் என்று வாசுகிக்கு புரிந்தது.
 
ரொம்ப நாளைக்கு பிறகு வீட்டில் இருக்கிறான். நீ எதுவேனாலும் செய்துகொள் நான் தூங்குறேன் என்று போய் படுத்துக்கொள்ளாமல் அவள் அருகில் அமர்ந்து பூ கட்ட பூக்களை எடுத்துக் கொடுத்தவாறே! அவளோடு பேசிக்கொண்டிருந்தான் வாசன். கணவனின் அருகாமையை ரசித்துக் கொண்டிருந்தவள் அடிக்கடி அவனை காதல் பார்வை பார்க்கவும் தவறவில்லை.
 
“வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டியா?”
 
கேள்வி என்னவோ! மொட்டையாக கேட்டது போல் இருந்தாலும் அவன் எதை பற்றி கேட்கின்றான் என்று கேட்ட கேள்வியிலும், கேட்ட விதத்திலும், கேட்ட சூழ்நிலையிலும் புரிகிறது. ஆனால் கணவன் சட்டென்று கேட்டதும் வாசுகிக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.
 
இந்த நேரத்தில் நாதன் வீட்டில் இல்லை. அவருக்கு அழைத்து இந்த விடயத்தை சொல்ல கூச்சமாக இருக்க, பூர்ணாவிடம் சொல்லவும் தயக்கமாக இருந்தது. சந்திரா, மந்த்ராவிடம் முதலில் சொல்லக் கூடிய விஷயமும் இல்லை இது. அவளும் சற்று குழம்பித்தான் இருந்தாள்.
 
என்ன செய்வது? எப்படி சொல்வது? என்று மண்டையை குடைந்தவளுக்கு நாதன் வீட்டுக்கு வந்த பிறகு அவர் அலைபேசிக்கு அழைத்து அனைவரிடமும் ஒரேயடியாக சொல்லிவிடலாம் என்ற முடிவில் இருந்தாள் வாசுகி. இப்படி கணவன் திடு திடுப்பென கேட்டதில் பதில் சொல்லாது முழிப்பவளை கேள்வியாக ஏறிட்டான் வாசன்.
 
“என்ன கும்பகர்ணனுக்கு கொள்ளு பேரனோட பொண்டாடி மாதிரி தூங்கிட்டு போன் பண்ண மறந்துட்டியா?” என்று சிரிக்க,
 
“ஆமாம்” எனும் விதமாக வேக வேகமாக தலையசைத்தவள் “என்ன என்ன சொன்னீங்க?” என்று சந்தேகமாக கேக்க
 
“பின்ன கும்பகர்ணனுக்கு கொள்ளு பேத்தின்னு சொல்லி உன் கையாள அடி வாங்க முடியாது போனா போகட்டும்னு டைட்டுல என் பேர்ல போட்டுகிட்டேன்” என்று சொல்ல
 
“உங்கள…” செல்லமாக முறைத்தாள் வாசுகி.
 
“சரி இப்போ போன் பண்ணு” வாசன் சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால் வாசுகிக்கிதான் என்ன செய்வதென்று புரியவில்லை.
 
“இல்ல.. அப்பா..” என்று உளறியவள் “கோவிலுக்கு போயிட்டு வந்து போன் பண்ணலாம்” என்று சட்டென்று சொல்லி விட
 
“அதென்ன கோவிலுக்கு போயிட்டு வந்து போன் பண்னுறன்னு சொல்லுற? சந்தோஷமான விசயத்த உடனே! சொல்லனுமா வேணாமா?” என்றவாறே அலைபேசியை அவளிடம் நீட்ட யாருக்கு அழைப்பதென்று யோகிக்கலானாள் வாசுகி.
 
“முதல்ல உங்க பாட்டிகிட்ட சொல்லு. அவங்க தானே! வீட்டுக்கு பெரியவங்க” என்று வாசன் சொல்ல வாசுகிக்கும் அதுதான் சரி என்று தோன்ற ராஜத்துக்கு அழைத்து விட்டாள். 
 
வாசுகியின் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினையால் ராஜம் அங்குதான் இருந்தார் போலும் வாசுகி அழைத்த உடனே! எடுத்து விட வாசுகியும் நலம் விசாரித்து விட்டு விஷயத்தை சொல்ல மறுபக்கத்தில் பேசிக்கொண்டிருந்த ராஜம் சந்தோசத்தில் கூச்சலிட்டு அனைவருக்கும் வாசுகி உண்டாகி இருக்கும் செய்தியை தெரிவித்திருந்தார்.
 
அதே சந்தோசம் இவர்களையும் தொற்றிக்கொள்ள குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது, என்னென்ன வாங்க வேண்டும், எந்த வயதில் மொட்டை போட்டு காதுகுத்த வேண்டும், பாடசாலை சேர்ப்பதுவரை பேசி சிரித்தவர்கள் மாலையானதும் கோவிலுக்கு கிளம்பினர்.
 
வெள்ளை வேட்டி சட்டையில் கோவிலுக்கு செல்ல தயாராகி நின்றிருந்த கணவனை ஒரு மார்க்கமாகவே பார்த்தாள் வாசுகி. பொதுவாகவே அவன் அணிவது வேட்டி சட்டைதான். கடைக்கு செல்வதால் வெள்ளை சட்டை அணிய மாட்டான். கல்யாணம், திருவிழா இந்த மாதிரி ஏதாவது என்றால் மட்டும்தான் வெள்ளை சட்டை போடுவான். கோவிலுக்கு போட்டது கொஞ்சம் ஆச்சரியம்தான்.  
 
“என்ன டி இந்த லுக்கு விடுற?”
 
“என்ன புது மாப்புள மாதிரி துணியெல்லாம் பளபளக்குது” இவளும் கிண்டல் செய்ய,
 
“என் பொண்டாட்டியோட ஜோடி போட்டு போறேனில்ல அதான்” என்றான் இவனும் இடக்காக
 
வாசுகியும் வெள்ளை சில்க் சாரியில் சிவப்பு பூப்போட்ட புடவையில் தயாராகி வந்தாலும் திருமணமானவள் என்ற அடையாளமாக நெறியில் வீற்றிருந்த குங்குமமும், வட்டப் பொட்டும் அவள் முகத்துக்கே! அழகு சேர்த்திருக்க, தொடுத்திருந்த பூவை வாசன் கையில் கொடுத்து தலையில் வைத்து விடும் படி கூற புன்னகை முகமாகவே! வைத்து விட்டான்.
 
“ஜோடி பொருத்தம் சூப்பர் இல்ல” கண்ணாடியின் முன் வாசுகியை நிற்க வைத்து கண்ணடித்துக் வாசன் கேக்க வாசுகி புன்னகைத்துக்கொண்டாலும் “சுத்தி போடணும்” என்று எண்ணிக்கொண்டாள்.    
 
கோவிலையடைந்தவர்கள் வாசலிலையே! இருந்த கடையில் அர்ச்சனை தட்டை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல வழியில் காண்போரெல்லாம் வாசனைக் கண்டு மரியாதையாக பேசி நலம் விசாரித்தவாறே விடை பெற வாசுகியின் உள்ளம் நிறைந்திருந்தது.
 
திருமணமாகி இந்த ஆறுமாதத்தில் வாரம் தோறும் அவள் இந்த கோவிலுக்கு தனியாகத்தான் வருகிறாள். அவள் வாசனின் மனைவி என்பது அவ்வூரில் உள்ள அனைவருக்கு தெரியும். மரியாதையான ஒரு புன்னையை மட்டும் அவளிடம் செலுத்துவோர் கடந்து விட அவளும்! யாரிடமும் அதிக பேச்சு வார்த்தையென்பது இல்லை.
 
சிறு வயதிலிருந்து யாரிடமும் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பார்காதவள் வாசனிடம் மட்டும் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்வாளா? 
 
ஐயரிடம் அர்ச்சனை தட்டை பூஜைக்கு கொடுத்து அம்மன் பெயரிலையே பூஜை செய்ய கூறியவர்கள் அம்மன் சன்னிதானத்தில் கண் மூடி வணங்கி பிறக்க போகும் குழந்தைக்காக வேண்டி நிற்க அம்மனோ! கண்மூடி அமர்ந்திருந்தாள்.
 
பூஜை முடிந்து ஐயர் அர்ச்சனை தட்டை கொடுக்க, சன்னதியிலிருந்து வெளியே வந்தவர்கள் ஒரு இடத்தில் அமர வாசனுக்கு வாசுகி திருநீர் பூசி விட, வாசனும் வாசுகிக்கி பூசி விட்டான்.
 
அந்த இதமான பொழுது இன்னும் சிறிது நேரம் நீண்டு விடாதா? என்று இருவரின் மனதிலும் ஏக்கம் பிறக்க “இன்னும் கொஞ்சம் நேரம் இங்கயே! உக்காந்துட்டு போலாமா?” என்று இருவருமே! ஒரே நேரத்தில் கேட்டு ஆச்சரியப்பட்டு பின்பு சிரித்தும் கொண்டனர். 
 
நேரம் செல்வதே! தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டிருக்க இருட்ட ஆரம்பித்ததும்தான் வீடு செல்லலாம் என்று எழுந்துகொண்டனர்.
 
ரகுவும் அழைத்து “கடைக்கு வரமாட்டீங்களா?” என்று கேட்க, “வரேன்” என்று வாசன் கூற
 
“நீங்க போங்க நான் இப்படியே! வீட்டுக்கு போறேன்” என்று வாசுகி சொல்ல
 
“இல்ல உன்ன வீட்டுல விட்டுட்டே! போறேன்” என்று வாசன் சொல்ல
 
“எல்லா வாரமும் நான் தனியா தான் போயிட்டு வரேன். இப்போ மாட்டு என்ன அக்கறை? வாரிசு வர்ரதால என்னமா கவனிக்கிறீங்க” சுள்ளென்று அவன் முகத்தில் பாய
 
“சரிதான் போடி” என்றவன் திரும்பி நடக்க வாசுகிக்கி கண்ணீர் முணுக்கென்று எட்டிப் பார்த்தது.  கண்களில் கண்ணீர் நிறைக்க பாதையும் தெளிவில்லாமல் வீடு நோக்கி நடக்கலானாள் வாசுகி.
 
அவள் நாலெட்டு கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள் வாசன் வேகமாக வந்து அவள் கையை கோர்த்துக்கொண்டு நடக்கலானான். வீடுவரை இருவருக்குமிடையில் பேரமைதி நிலவியது. வீட்டுக் கதவை திறந்து கொண்டு வாசுகி உள்ளே சென்றதும்
 
“இப்போ என்ன டி உனக்கு பிரச்சினை?”
 
வாசுகி இப்படி பேசுவது வாசனுக்கு எரிச்சலை கொடுத்திருக்க, “போ..டி” என்று சொன்னாலும் அவள் மனநிலையை உணர்ந்து அவளோடு வந்தவன் அவளோடு பேசி விடலாம் என்றுதான் ஆரம்பித்தான். 
 
“இப்படி எல்லாம் பண்ணாதீங்க. நீங்க இருக்குற மாதிரியே! இருங்க” கண்களில் நீர் நிறைத்து இவள் சொல்ல
 
“நான் எப்படியெல்லாம் இருக்கணும் என்று ஆச படுறேன் என்று உனக்கு தெரியுமா? இதோ இன்னைக்கி மாதிரி எந்த நாளும் இருக்கணும் என்றுதான் ஆச படுறேன். ஆனா என்னால முடியல. வாழ்க்கைல பெருசா எந்த ஆசையோ! எதிர்பார்ப்போ! இருந்ததில்ல. நீ என் வாழ்க்கைல வந்த பிறகு நிறைய இருக்கு வாசு.. உனக்காக, நம் குழந்தைகளுக்காக உழைக்கணும். உங்கள எந்த கஸ்டனும் வராம பாத்துக்கணும். புரிஞ்சிக்க” குரல் கரகரத்த ஒலிக்க வாசுகிதான் விக்கித்து நின்றாள்.

Advertisement