Advertisement

அத்தியாயம் 7

 
 
ராமநாதனின் கடை ஊரிலிருந்த பெரிய கடை என்றே சொல்லலாம். கடையை விற்கும் பொழுது வாசனுக்கு பத்து வயதுதான். பெரிதாக தாக்கம் எதுவும் இல்லை.
 
டீனேஜில் கஷ்டப்படும் பொழுதுதான் சொந்தமாக கடை இருந்திருந்தால் இப்படி கஷ்டப்பட வேண்டியதில்லையே! என்ற எண்ணம் தோன்றியது. அதன் முதல் முயற்சியாக பணம் சேர்த்து அவனால் தனது இருபத்தி ஏழாம் வயதில் தான் கடையை நிறுவி தனது நீண்ட நாள் கனவை சாத்தியமாக்கிக்கொள்ள முடிந்தது.
 
வாசன் சொந்தமாக கடை வைக்கும் நேரத்தில் ராமநாதன் கடையை வாங்கியவரோ! நகரத்தில் உள்ள சூப்பர்மார்க்கட் போல் அந்த கடையை மாற்றி இருந்தார்.
 
வாசனுக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. ஊரிலையே! பெரிய கடை “நம்ம கடை” பெருமையாக சொல்லிக்கொள்ள வேண்டிய கடை. கடை அமைந்திருக்கும் இடமும் மக்கள் புழங்கும் இடம். வியாபாரம் அமோகமாக இருக்கும். நாமளும் ஒருநாள் இந்த மாதிரி கடை வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
 
ஆனால் அந்த சூப்பர்மார்க்கட்டில் அவர் நினைத்த அளவில் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை என்பதே! உண்மை. போட்ட பணத்தையும் எடுக்க முடியாமல் போய் விடும் போல் இருப்பதாக அவர் புலம்புவதாக அறிந்தான் வாசன்.
 
நகரத்தில் இந்த மாதிரி கடைகளில் எவ்வளவு லாபம் வரும். ஆனால் இவர் ஏன் இவ்வாறு சொல்கிறார்? அப்போ நாமளும் இந்த மாதிரி கடை வச்சா பெருசா சம்பாதிக்க முடியாதா? அவனுமே! குழம்பினான்.
 
அதன் பின்தான் அவன் மக்களின் விருப்பத்தையும் ஊரின் நிலையையும் ஆராயலானான். நகரத்தில் போலல்லாது ஊரில் எல்லாம் பிரெஷா கிடைக்கும். காய்கறி, பழங்கள் அன்றாட சந்தையில் கிடைப்பது போல் கறியும் தினமும் கிடைக்கும், மீனும் வேனில் வந்து கடை போட்டு விற்கிறார்கள்.  
 
சூப்பர்மார்கட்டின் குளிரில் வைக்கப்பட்டிருக்கும் காய்கறி, பழங்கள், கறி, மீன் எல்லாம் பழையவை, அது நகரத்து மக்கள்தான் வாங்குவார்கள் என்ற விம்பம் ஊர் மக்களின் மனதில் பதிந்து போய் இருந்ததை புரிந்துக்கொண்டான்.
 
“என்ன அநியாயம் இது? அவனவன் நாலுகாசு பார்க்க கடைய வச்சா ஊர்க்காரங்க இப்படி பண்ணுறாங்களே!” பொறுமியவன் தனது கடையை எவ்வாறு விரிவாக்குவது? மக்களுக்கு பிடித்தது போல் எப்படி மாற்றியமைப்பது என்ற சிந்தனையில்லையே! வியாபாரத்தை தொடர்ந்தான்.
 
அவன் முதலில் செய்தது அனைத்து உலர் உணவுப்பொருட்கள், பெக்கட் பொருட்கள், மளிகைசாமான்கள் என்று அனைத்தும் அவன் கடையில் கிடைக்கக் கூடிய விதத்தில் பார்த்துக்கொண்டான். கூடவே! வீட்டுப் பாவனையில் இருக்கும் பொருட்கள், சில மருந்துவகைகளையும் அதில் சேர்த்துக்கொள்ள வியாபாரம் சூடு பிடித்தது.
 
அவன் வாங்கி இருந்த கடையோடு சேர்த்து பின்னாடி கொஞ்சம் நிலமும் இருந்ததால் பின்னாடி நிலத்தில் ஒரு அறையை கட்டி குடோன் போல்தான் பாவித்து வந்தான். இப்பொழுது இடம் பத்தாமல் போகவே! அதையும் பாவிக்க வேண்டிய நிலை.
 
அந்த நேரத்தில்தான் ஸ்ரீராம் தொழில் செய்ய பணம் கேட்டு வந்திருந்தான். மாடியை கட்ட வைத்த பணத்தை கொடுக்கலாம் என்று எடுத்துக் கொடுக்கும் பொழுதுதான் ராமநாதன் அவனை தடுத்து வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொடுத்திருந்தார்.
 
“வாசா அன்னைக்கி நான் ஒழுங்கா இருந்திருந்தா நம்ம கடை நம்ம கைய விட்டு போய் இருக்காது. நீ வீட்டை அடமானம் வச்சு. கடைய கட்டு, ஸ்ரீராமுக்கும் பணம் கொடு. லாபம் வரும் போது வீட்டை மீட்டுக்கொள்ளலாம் என்று ராமநாதன் கூறி இருந்தார்.
 
வாசனுக்கு தனது சொந்த உழைப்பில்லையே! கடையை கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்க, வீட்டை அடமானம் வைத்து தம்பிக்கு மட்டும் பணம் வாங்கிக் கொடுத்திருந்தான். ராமநாதனும் வாசனின் உணர்வை புரிந்துக்கொண்டு அவனை பெருமையாகத்தான் பார்த்தார்.
 
வீடு விற்கப்பட்டதும்தான் “வாசா வீட்டை அடமானம் வச்சி அன்னைக்கே! நீ கடைய கட்டி இருக்கணும் டா” என்று ராமநாதன் ஆதங்கப்பட
 
“இல்லப்பா… அப்படி பண்ணி இருந்தா நான் தான் வீட்டை விக்க முதல் காரணம், நான்தான் முதலல்ல பணம் எடுத்ததா பேசி இருப்பாங்க. என் சொந்த உழைப்புல உருவான கடைய வீட்டை வித்து கட்டின கடை என்று முத்திரை குத்தி இருப்பாங்க” வாசன் தந்தைக்கு புரிய வைக்க,
 
அவரும் புரிந்துக்கொண்டவராக “சரி இந்த இருவது லட்சத்தையும் என்ன பண்ண போற?” என்று வீட்டை விற்ற பணத்தில் எஞ்சிய  தொகையை பற்றி விசாரித்தார்.
 
“நித்தியாக்கும் கொஞ்சம்தான் கொடுத்தோம். மாமாகிட்ட பேசிட்டேன். பத்மா அத்த பணம் வாங்கினாலும் அவர் வாங்குறது மானப்பிரச்சினைனு நினைக்கிறவரு. வீடு வித்த காசு அவருக்கு வேணாம்னு சொல்லிட்டாரு. ஸ்ரீவத்சனுக்கு ஒரு பங்கும் கொடுக்கல. இந்த பணத்த அப்படியே! அவனுக்கு அனுப்பிடலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க?”
 
“அவனும் என் பையன்தான். ஆனா இங்க என் கண்ணு முன்னாடி நீ பணத்துக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கும் பொழுது, நாம நல்லா இருக்கோமானு
என்று கூட கேக்காதவனுக்கு பணம் அனுப்பணும்னு நீ நினைக்கிறது எனக்கு பிடிக்கல. ஆனாலும் நீ எது பண்ணாலும் சரியாதான் பண்ணுவ எங்குற நம்பிக்கை எனக்கிருக்கு. அதனால உன் விருப்பப்படியே! பண்ணு” என்று விட்டார் ராமநாதன்.  
 
அதன்படி ஸ்ரீவத்சனை அழைத்தவன் வீடு விற்கப்பட்ட செய்தியை கூறி அவன் பெயரில்
இருவது லட்சம் பணம் வைப்பீடு செய்துள்ளதையும் கூறினான்.
 
ஆத்மநாதனுக்கு அழைத்து பேசும் பொழுதுதான் வீடு விற்கப்பட்ட செய்தியை  அறிந்துகொண்டிருந்தான் ஸ்ரீவத்சன். “எதுவோ பண்ணிக்கோங்க” என்றுதான் இருந்தான். பங்கெல்லாம் கேட்கவில்லை. வாசன் கூறியதும் சரி என்று விட்டானே! ஒழிய வேண்டாம் என்றோ! தந்தையும், நீயும் இப்பொழுது எங்கே! தங்கி இருக்கின்ரீர்கள் என்று ஒருவார்த்தை கேட்கவில்லை. ஒரு பெருமூச்சுவிட்டுக் கொண்ட வாசன். அவன் குணம் இதுதான் என்ற ரீதியில் அலைபேசியை அனைத்திருந்தான். 
 
வாசனின் கடை இப்பொழுது இரண்டு மாடிகளைக் கொண்ட கடை. சூப்பர்மார்க்கட்டுக்கும் அவன் கடைக்கும் சிறு வித்தியாசம்தான்.
 
சூப்பர்மார்க்கட்டில்
இறைச்சி, மீன், மரக்கறி, பழங்கள் என்று வித, விதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இவன் கடையில் அது மட்டும் இல்லை. மற்றபடி குளிர்பானங்கள், ஐஸ் கிரீம், சாக்லட். யோகர்ட், போன்ற குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடிய உணவுப் பொருட்கள் அங்குண்டு.
 
எல்லாவகையான உணப்பொட்களும் கிடைக்கும் இடமாக அவன் கடையை அவன் வைத்துக்கொள்ள வியாபாரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அவனது ஒரே ஆசை மூன்று மாடிகளைக் கட்ட வேண்டும், சமையலறை உபகரணங்கள் அத்தனையும் கிடைக்கும் இடமாக ஒரு
தளம் இருக்க வேண்டும் என்பதே! கட்டிடம் கட்ட பணமும் வேண்டும். அதற்குத்தான் பணம் சேமித்துக் கொண்டிருக்கிறான்.
 
சொந்தமாக வீடு கட்டவோ! அல்லது வாங்கவோ! இன்னும் அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவன் எண்ணமெல்லாம் கடையை விரிவாக்குவது, முன்னேற்றுவது என்பதில் மாத்திரம்தான் இருந்தது.   
 
இதே சிந்தனையில் ரமேஷின் ஊரில் காலடி எடுத்து வைத்தவன், கொஞ்சம் பழங்கள், ஸ்வீட்ஸ் என்று வாங்கிக் கொண்டு சத்யாவின் வீட்டை அடைந்தான்.
  
ரமேஷுக்கு அழைத்து வீட்டுக்கு வருவதாக கூறி விட்டுத்தான் வந்திருந்தான் வாசன். இல்லையென்றால் “அதென்ன சொல்லாமல் கொள்ளாமல் திடிரென்று வந்திறங்கும் பழக்கம். நாம எங்கயாச்சும் போய் இருந்தால்? அல்லது நல்ல காரியத்துக்கு போக வாசல் படிய தாண்டும் போது வந்திறங்கினால் நல்லாவா இருக்கும்” என்று புஷ்பாவை போல் ரமேஷும் சத்யாவிடம் பொரிய
 
பஸ் ஏறும் முன்பாகவே! போனை போட்டு “ஊரில்லையா இருக்கீங்க? இப்போ நான் வந்துகிட்டு இருக்கேன் மாப்ள. ஒரு நல்ல விஷயம் சொல்லணும். நேர்ல வந்து சொல்லுறதுதானே! முறை. அதான் கேக்குறேன்” என்ற வாசன் தனக்கு வேலை இருப்பதாகவும். சாப்பிட எல்லாம் இருக்க முடியாது உடனே! கிளம்ப வேண்டும் அதானால் ஏதும் செய்ய வேண்டாம் என்பதையும் உடனே! கூறிக் கொண்டான்.
 
சத்யா வாசனின் தங்கை அவள் வீட்டில் கை நனைப்பதெல்லாம் அவமானமாக நினைக்க கூடியவனல்ல. திருமணமாகி வாசுகியோடு விருந்துக்கு சென்ற பொழுது புஷ்பா போதும் போதும் என்ற அளவுக்கு பேசி இருக்க, வாசுகியை அங்கு அழைத்து செல்லவே! அவனுக்கு பிடிக்கவில்லை.
 
அவன் கோபமெல்லாம். அது ரமேஷ்-சத்யாவின் வீடு. புஷ்பாவின் மகன் வீடு என்றால் வாசனின் தங்கை வீடு. புஷ்பா வந்து செல்ல எவ்வளவு உரிமை இருக்கிறதோ! அதே உரிமை வாசனுக்கும் உண்டு. ஆனால் புஷ்பா பேசும் பொழுது ரமேஷ் அமைதியாக இருந்தது கூட புஷ்பா வயதில் பெரியவள், அன்னை என்று எடுத்துக்கொண்டாலும், அவள் சென்ற பின் ஒரு ஆறுதலுக்காவது வாசனிடம் “அம்மா பேசியதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். அடிக்கடி வந்துட்டு போங்க” என்று ஒரு வார்த்தையேனும் கூறவில்லை.
 
ரமேஷ்தான் அப்படி என்றால் சத்யாவோ! ஒருபடி மேலே! போய் “அத்தைக்கு பிடிக்கல அண்ணா. நீ வந்தா என் குடும்பத்துல பிரச்சினை வரும் போல இருக்கு” “வராதே” என்று சொல்லாமல் சொல்லி விட்டாள்.
 
 
சத்யாவின் குழந்தைக்கு தாய்மாமனா அவன்தானே! எல்லாம் செய்ய வேண்டும்? இப்படி இவர்கள் உறவு வேண்டாம் என்று ஒதுக்கினால் யார் செய்வதாம்? ஸ்ரீவத்சன் வெளிநாட்டில் இருந்து வந்து செய்யப் போகிறானா? ஸ்ரீராம் தான் ஓடிவந்து செய்யப் போகிறானா?
 
அதன்பின் இன்று தான் போகிறான். அதுவும் ராமநாதன் சொன்னதற்காக, “நான் உனக்கு வேண்டாம் என்றால். நீ எனக்கு வேண்டாம் என்று சொல்ல எவ்வளவு நேரம் எடுக்கும்?” ஆனால் வாசன் உறவை துண்டித்து வாழ விரும்பவில்லை. அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றுதான் விலகி இருக்கின்றான்.
 
வாசன் ரமேஷுக்கு அழைத்து பேசியபின் சத்யாவுக்கு அழைத்து பேசி வீட்டில்தானே! இருக்க என்று கேட்டிருந்தான். அவன் போகும் பொழுது அவள் வீட்டில் அவளுடைய மகனுக்கு சோறுட்டிக் கொண்டிருக்க வாசனைக் கண்டு
 
“வாண்ணா” என்று வரவேற்றவள். குடிக்க மோர் கொண்டு வந்து கொடுக்க, வாங்கி பக்கத்தில் இருந்த மேசையில் வைத்தவன் ரமேஷ் வருவானா என்று விசாரிக்க, கடையில் வேலை அதிகம் அதனால் வர மாட்டான் என்றாள் சத்யா.
 
மருமகனை தூக்கி செல்லம் கொஞ்சியவன் “இவனுக்கு மொட்டையெல்லாம் போட மாட்டியா?” என்று கேட்க 
 
“இப்போ தானே ஒரு வயசு ஆகுது மூணு வயசுல போடலாம்னு அத்த சொல்லுறாங்க” என்றாள் சத்யா
 
தான் கொண்டு வந்த பையை அவள் கையில் கொடுத்தவன் மோரையும் குடித்து விட்டு வாசுகி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூற,
 
“நிஜமாவா அண்ணா! ரொம்ப சந்தோசம். என் பையனுக்கு பொண்ணா பெத்து கொடு…ணா” என்று சந்தோசமாக உருகி கரைவாள் என்று வாசன் எதிர் பார்க்க, சத்யாவோ! “அப்படியாணா… சந்தோசம்” என்று முடித்துக்கொண்டாள்.
 
என்னதான் நித்யா மீதுதான் வாசன் பாசம் வைத்திருக்கிறான் என்று சத்யா புகார் வாசித்தாலும் அவளுக்கும் தெரியும் வாசனின் செல்ல தங்கை அவள்தான் என்று. நித்யாவின் குழந்தைகள் எல்லாம் வளர்ந்தவர்கள். அதிலும் பெண் குழந்தைகளை வாசனின் குழந்தைகளுக்கு கட்ட முடியாது. வாசன் பெண் குழந்தையை பெற்றாலும் ஆதிக்கும் அந்த குழந்தைக்கும் நிறைய வருடங்கள் வயது வித்தியாசப்படும். அதனால் அண்ணனோடு தனக்கு மட்டும்தான் சம்பந்தம் வைத்துக்கொள்ள முடியும் என்று பெருமை பாடிக்கொண்டிருந்தவள் கல்யாணமான கையேடு மாறிப்போய் இருந்ததை வாசனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
 
வாசனுக்கு பிறக்கப் போவது ஆணோ! பெண்ணோ! பிள்ளைகள் வளர்ந்தால் அவர்கள் ஆசைகள் என்னவாக இருக்குமோ! அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அண்ணன், தங்கை என்ற பாச பிணைப்புக்கு இப்படி பட்ட பேச்சுக்கள் சகஜம். புஷ்பா ஏதும் கூறி இருப்பாளோ! என்று வாசன் பார்த்தாலும், இங்கு இந்த நேரத்தில் புஷ்பாவோ! ரமேஷோ! இல்லை. சத்யா மனம் விட்டு வாசனிடம் பேசி இருக்கலாம். கல்யாணமானால் அண்ணன், தங்கை பாசம் கூட இல்லாமல் போய்   விடுமா? என்று வாசன் சத்யாவையே! பாத்திருந்தான். வாசன் சந்தோசமான சேதி கூற சத்யா அதை ஒரு தகவலாக எடுத்துக்கொண்டது அவனுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்தது.
 
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
 
சாப்பிட்டு விட்டு செல்லும்படி சத்யா கூற, தானும் இன்று கடைக்கு செல்லாமல்தான் இங்கு வந்ததாக கூறிய வாசன், இப்பொழுது சென்றால்தான் கடைக்கு செல்ல முடியும் என்று எழுந்துக்கொள்ள சத்யா அந்த பேச்சை ஆரம்பித்தாள்.
 
“ஆமா ஆத்மா மாமாக்கு ஏன் இப்படி புத்தி போகுது?” மாமா என்று கேட்டிருந்தாலே!  வாசன் புரிந்துக் கொண்டிருப்பான். கல்யாணமான பின் ரமேஷின் அண்ணன்களும் இருப்பதால் நித்யா வீட்டுக்காரரை பெயர் சொல்லி மாமா என்று அழைக்க பழகி இருந்தாள்
சத்யா.
 
“எப்படி?” வாசன் கண்களை இடுக்கி சத்யாவை பார்க்க,
 
“அதான் அக்காவை விட்டுட்டு?” அண்ணனின் பார்வையில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள்
 
 
“யாரு சொன்னா உன்கிட்ட? நித்யா அப்படி ஏதும் என்கிட்ட சொல்லல” எக்காரணத்தைக் கொண்டும் வாசன் வாய் திறப்பதில்லை என்ற முடிவோடுதான் இருந்தான்.
 
“ஒருவேளை அக்காக்கு தெரியலையோ! என்னவோ!” சத்யா புதிர் போட 
 
சத்யா சொன்னதை வைத்து “இவ சொல்லுறத பார்த்தா நித்யா எனக்கு போன் பண்ண விஷயம் இவளுக்கு தெரியாது போல இருக்கே” என்று யோசித்தவன் “நீ சொன்னதை வச்சி நானும் தினமும் நித்திக்கு போன் போட்டு மாமா தினமும் வீட்டு வாராருனு கேக்க ஆரம்பிச்சிட்டேன். அவ வேற என்ன திட்ட ஆரம்பிச்சிட்டா, அவரு வீட்டுக்கு வராம வேற எங்க போக போறாரு என்று. இது எனக்கு தேவையா?” என்று வாசன் சொல்ல
 
“ஓஹ்… அப்போ ப்ரியங்கா சொன்னது பொய்யா?” சத்யா தனக்குள் முணுமுணுக்க
 
“யாரு ப்ரியங்கா?” யோசனையாகவே! கேட்டான் வாசன்
 
“அதான் ரமேஷோட மூத்த அண்ணியோட தம்பி பொண்டாட்டி அவங்க டெல்லி இல்ல. அவங்கதான் சொன்னாங்க ஆத்மா மாமாவை ஒரு பொண்ணு கூட ஹோட்டல்ல பார்த்தேன்னு”
 
“அவங்களுக்கு எப்படி நம்ம மாமாவ தெரியும்? அப்படியே தெரிஞ்சாலும் ஒரு பொண்ணு கூட பேசினா? தப்பா சொல்லுறதா?” வாசன் தங்கையை முறைக்க,
 
“அன்னைக்கி வந்திருந்தாங்க அப்போ எங்க கல்யாண ஆல்பம் எல்லாம் பார்த்தாங்க, அப்பொறம் டில்லி போனப்போ போன் பண்ணி சொன்னன்னாக” என்று சத்யா சொல்ல
 
“கடவுளே! எனக்கு இருக்குற பிரச்சினை போதாதுன்னு எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல வேற பிரச்சினை உண்டு பண்ண இப்படி ஒரு வேல பார்த்திருக்குற, நித்யா போன் பண்ணி என் கிட்ட சொல்லுறப்போ, இந்த பக்கம் சத்யாக்கு சொல்ல ஆள் அனுப்பி இருக்க, இது தெரியாம அவ போன் பண்ணி என் கிட்ட கேட்டதும் நான் என் பொண்டாட்டிய அடிச்சிட்டேன். அவ முறைச்சிகிட்டு திரிஞ்சதுல தப்பே இல்லை” தன்னையே நொந்துகொண்டவன்
 
“என்ன சொல்லுற? கல்யாண ஆல்பத்துல எல்லோரும்தான் இருந்தோம். அவங்களுக்கு மாமாவைத்தான் பார்த்தேன்னு எப்படி சரியா? சொன்னாங்க? அவங்க வேறுயாரையாவது பார்த்திருப்பாங்க இல்லையா? அவங்க யாரையோ பார்த்து மாமான்னு நினைச்சி இருக்கலாம். அவரு உன் அக்கா வீட்டுக்காரர் தானே! யாரோ! என்னமோ சொல்லுறாங்கனு நீயும் கேட்டுகிட்டு கைகொட்டி சிரிச்சியா? எங்க மாமா அப்படியெல்லாம் பண்ண மாட்டருனு சொல்ல மாட்டியா” வாசன் உருமாளோடு சொல்ல
 
“இல்ல நான் தான் ஆல்பத்துல இருந்த போட்டோவை படம் புடிச்சி வாட்சாப்ப்புல அனுப்பி வச்சி இவரைத்தான் பாத்தீங்களானு கேட்டேன். அவங்களும் இவர்தான்னு அடிச்சி சொன்னாங்க…” சத்யாவின் குரல் சுதி இறங்கி உள்ளே சென்றிருந்தது.
 
“ஆகா நித்தி வாழ்க்கைல எந்த பிரச்சினையும் இல்ல. நீயா போட்டோவையும் அனுப்பி கண்போர்ம் பண்ணி இருக்க, இப்போ இந்த விஷயம் ரமேஷ் குடும்பத்துல இருக்குறவங்க பேசுவாங்க, எப்படி பேசுவாங்க தெரியுமா? சத்யா அக்கா புருஷன்னு உன்ன வச்சுதான் பேசுவாங்க, நீதான் பேச இடமாளிச்சி கொடுத்திருக்க, உனக்கும் அசிங்கம். அன்னைக்கே! எங்க மாமா அப்படியெல்லாம் பண்ணுற ஆளில்லனு சொல்லி போன வச்சிருந்தா.. அவங்க திரும்ப பேசி இருக்க மாட்டாங்க. கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு? இந்த விஷயம் மாமா காதுக்கு போனா இல்லைன்னா பத்மா அத்தையோட காதுக்கு போனா உன் வீட்டு வாசல்ல வந்து நின்னு சண்டை போடுவாங்க. ஊரே பார்க்கும். அப்பொறம் புஷ்பா அத்த குதிப்பாங்க. நீ ஒன்னும் குழந்தை இல்ல. புரிஞ்சி நடந்துக்க” என்றவன் காலில் செருப்பை மாட்டிக்கொண்டு விறு விறுவென்று நடக்கலானான்.
 
அன்று நடந்தது இன்றும் வாசனின் மனதுக்குள் படமாக ஓடிக்கொண்டிருந்தது. அன்று காலையில் தான் ராமநாதன் சுற்றுலாக்காக கிளம்பி சென்றிருந்தார். ஊரிலுள்ள வயதானவர்கள். அனைத்து பேரும் சேர்ந்து செல்லும் சுற்றுலா அது. ஒரு பஸ்ஸை ஏற்பாடு செய்து தென்னிந்தியா முழுக்க சுற்றிப்பார்த்து விட்டு வரலாம் என்றுதான் இவர்களின் திட்டம். இதில் சில கோவில்கள், சில சுற்றுலா தளங்களும் அடக்கம்.
 
தந்தையை தனியே! அனுப்ப வேண்டுமா என்று வாசன் முதலில் யோசிக்க, “ஊரிலுள்ள எல்லா கிழடுகளும் போறாங்க வாசா… இது ஆன்மீக பயணம் மட்டுமில்ல, சுற்றலா பயனும் கூட, மருந்தெல்லாம் நான் கரெக்ட்டா போடுறேன்” குழந்தையாக மாறி கெஞ்ச சரி என்று பஸ் ஏத்தி விட்டு வந்தவன், அன்று வங்கிக்கு செல்ல வேண்டி இருந்ததால் வங்கிப் புத்தகத்தை எடுக்கத்தான் வீடு வந்தான்.
 
அதனால் தான் நித்யா அழைத்த போது வாசுகியும் அவர்களின் பேச்சை கேட்க நேர்ந்தது. இல்லையென்றால் வாசன் அந்த நேரத்தில் வெளியே இருந்திருப்பான். நித்யா பேசியது வாசுகிக்கு தெரிந்தும் இருக்காது. சத்யா பேசி “மாமா இப்படியாமே!” என்று சொன்னதும் வேற டென்ஷனில் வீடு வந்த வாசன் வாசுகியை அடித்திருக்கவும் மாட்டான். விதி இப்படித்தான் நடக்கணும் என்று இருந்தால் நடந்து தானே! ஆகணும். 
 
கோபமாக வீட்டுக்கு வந்த வாசன் “நித்யா விஷயம்” என்று ஆரம்பிக்கும் பொழுதே! வாசுகியும் என்ன பிரச்சினை என்று தன்மையாகக் கேட்டிருக்கலாம்.
 
அவளும் யார் மீது கோபமாக இருந்தாளோ! தெரியவில்லை. கடுப்பில் உச்சத்தில் இருந்ததால் “அதுக்கு என்ன இப்போ?” என்று எரிந்து விழ யோசிக்காமல் வாசனும் அறைந்திருந்தான். அதன்பின் கிளம்பிச் சென்றவன் வீடு வர இரவானது. வரும் பொழுது வாசுகி கீழே தூங்கி இருந்தாள்.
 
தொழில் ஏற்படும் பிரச்சனைகளை அவளிடம் பகிர்வதில்லைதான். பகிர்ந்தாலும் அவளுக்கு புரியாது. அவளிடம் பதிலும் இல்லை. அதற்காக அந்த டென்ஷனையெல்லாம் அவள் மேல் காட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? மனசாட்ச்சி அவனை தூற்ற பஸ்ஸில் ஏறி அமர்ந்தவனுக்கு முதலில் வீட்டுக்கு சென்று வாசுகியிடம் மனம் விட்டு பேசினால்தான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்ற கண்ணை மூடிக்கொண்டு சீட்டில் தலை சாய்ந்துக்கொள்ள ஜன்னலினூடாக வீசிய காற்று முகத்தில் படவும் சற்று ஆறுதலாக தோன்றியது.
 
ஊருக்கு சென்ற உடன் கடைக்கு செல்ல வேண்டும். வாசுகிக்கு சாப்பிட குமாரின் கையில் ஏதாவது கொடுத்து விடலாம் என்ற முடிவில்தான் இருந்தான் வாசன். ஆனால் மனைவியோடு பேசாமல் அவனுக்கு எந்த வேலையும் ஓடாது என்று தோன்றவே! ரகுவை அழைத்து தான் வர மாலையாகும் என்று கூறியவன் சாப்பாடும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.
 
ரகு அவன் கடை ஆரம்பித்ததிலிருந்தே இருப்பவன். அதனால் கடையை திறக்க ஒரு சாவியை அவனிடம் கொடுத்து வைத்திருந்தான். குமார் பாடசாலை இல்லாத நாட்கள் மட்டும் வேலைக்கு வருவான் அல்லது பாடசாலை விட்டு வந்து கடையில் வேலை பார்ப்பான். அவன் அண்ணியே! வாசனிடம் வந்து பேசி சேர்த்து விட்டிருந்தாள்.
 
அவர்கள் இவர்களோடு எட்டு பேர் கடையில் வேலை பார்க்கின்றார்கள் இருந்தாலும் இந்த இரண்டு பேரும் வாசனுக்கு கூடப் பிறக்காத தம்பிகள் போலத்தான்.
 
வாசன் வீட்டு வரும் பொழுது வாசுகி குளியலறையில் இருந்தாள். “இவ்வளவு நேரமா தூங்கினாளா? இவள் சாப்பிடாம கொள்ளாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகிறது. நேரத்துக்கு சாப்பிட்டு டாக்டர் தந்த மாத்திரை மருந்தை சாப்பிட்டா தானே! பாப்பா ஆரோக்கியமா பொறக்கும்” உள்ளுக்குள் குமைந்தவன் வாசுகி வெளியே வரும் வரை காத்திருக்கலானான்.
 
குளித்து விட்டு தலையில் நீர் சொட்ட சொட்ட புடவை முந்திய இடுப்பில் சொருகியவாறு உள்ளே வருபவளை ஆசையாக கண்களால் பருகிக் கொண்டான் வாசன்.
 
கணவனை கண்டு முகம் மலர்ந்தவள் “என்ன திருடன் போல சத்தம் போடாம வந்து உக்காந்து இருக்கீங்க? சாப்டீங்களா? இருங்க டக்குனு சமைச்சிடுறேன்” என்று சொல்ல
 
அவன் என்ன பேச வேண்டும் என்று வீட்டுக்கு வந்தானோ! அதை மறந்தவன் “முதல்ல நீ காலைல சாப்டியா? மாத்திரை போட்டியா?” குரலில் கடினத்தை கொண்டு கேட்டாலும் அக்கறை கொட்டிக் கிடந்தது.
 
“ஆ.. நான் அப்போவே சாப்பிட்டேன்!” அவன் முகம் பார்த்தே பதில் சொன்னாள் வாசுகி
 
“எப்போ? நீ இப்போதான் எந்திரிச்சி குளிச்சிட்டு வர, நீ இப்படி இருந்தா பாப்பா எப்படி ஆரோக்கியமா பொறுப்பா?” என்கிட்டயே! பொய் சொல்லுறியா? எனும் விதமாக வாசன் முறைக்க,
 
ஆறு மாதத்துக்கு முன் என் கையால் சமைத்து தருகிறேன் என்றவன் இன்றுதான் சமைத்து விட்டு சென்று இருக்கின்றான். அந்த சந்தோசம் நீடிக்கவில்லை. “அப்போ பொண்டாட்டி பசில இருப்பான்னு சமைச்சி வைக்கல, உங்க புள்ள பசில இருப்பான்னு சமைச்சி வச்சிட்டு போய் இருக்கீங்க? அப்படி தானே!” மூக்கு நுனி சிவக்க கணவனை கண்களை சுருக்கி பார்த்தாள்.
 
“என்ன டி நீ புரியாம பேசுற? நீ இல்லாம பாப்பா மட்டும் எப்படி வருவா? அவளை இழுத்து அணைத்தவன் கன்னத்தில் முத்தம் வைக்க,
 
அதில் சமாதானமடைந்தவள் ஹாட் பேக்கை திறந்து காட்டி “எனக்காக முதல் முதலா சமைச்சி வச்சிட்டு போய் இருக்கீங்க சாப்பிடாம இருப்பேனா? எல்லாத்தையும் சாப்பிட்டேன், மாத்திரையும் போட்டேன்” என்று சிரித்தவள் “என்ன கேப்பில பொறுப்பா? வருவான்னு சொல்லுறீங்க? எனக்கு பையன்தான் வேணும்”
 
“இல்ல… உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ண பெத்துக்கலாம் டி” வாசன் அவள் கன்னங்களை பிடித்து ஆட்ட
 
“முடியாது” முறைத்தவாறே ஒரேயடியாக மறுத்தாள் வாசுகி.
 
அவள் செய்கை வாசனுக்கு சிரிப்பைத்தான் மூட்டியது. “பிறக்க போகும் குழந்தை ஆணோ! பெண்ணோ! ஏற்றுக்கொள்ளத்தானே! வேண்டும். வேண்டாம் என்று விட்டு விடவா போகிறோம்” என்று நினைத்தவன் சிரித்தவாறே “சரி சரி உன் விருப்பப்படியே! பையன பெத்துக்குவோம். பொண்ணு பொறந்தா.. உடனடியா பையனுக்கு ஏற்பாடு பண்ணிடுவோம் என்ன சொல்லுற?” என்று கண்ணடிக்க,
 
கணவன் சொன்னதில் வெட்கம் வர  அவன் நெஞ்சிலையே சாய்ந்து கொண்டாள் வாசுகி.
 
அந்த இதமான சூழ்நிலையை வாசன் அப்படியே அனுபவித்து இருக்கலாம். “வாசுகி…” என்று மெதுவாக அழைத்தவன் அவள் என்னவென்று ஏறிட்டு அவன் முகம் பார்க்க,
 
“என்ன மன்னிச்சுடு டி… அன்னைக்கி சத்யா கிட்ட நீதான் நித்யா வீட்டுக்காரரை பத்தி சொல்லி இருப்பான்னு நெனச்சி உன்ன அடிச்சிட்டேன்” வாசன் சொல்லி முடிக்க வில்லை வாசுகி அவன் கன்னத்தில் சட்டென்று அறைந்திருந்தாள்.

Advertisement