Advertisement

அத்தியாயம் 5

 
வாசன் வீடு வரும் பொழுது  இரவு பத்து மணி தாண்டி இருந்தது. ரகுவும் இன்னும் சிலரும் ஊர் திருவிழா என்று விடுமுறை எடுத்து சென்றதால் குமாரை வைத்துக்கொண்டு கடையை தனியாக சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட பகல் உணவை மறந்துதான் போனான்.
 
வாசுகி தூங்கி இருப்பாளோ! விழித்திருப்பாளோ! என்ற சிந்தனையில் வண்டியோட்டிக்கொண்டு வந்தவனின் அலைபேசி அடிக்கவே! யாரென்று பார்க்க நித்தியா என்று வரவும் மனம் அடித்துக்கொள்ள வண்டியை நிறுத்தியவன் இயக்கி காதில் வைத்திருந்தான்.
 
மறுமுனையில் நித்யா பேசுமுன் பதட்டத்தோடு வாசன் பேசினான். “நித்யா ஒன்னும் பிரச்சினை இல்லையே! மாமா வீட்டுக்கு வந்துட்டார் தானே!”
 
வாசனின் பதட்டம் கண்டு “அவர் என்ன வீட்டை விட்டு துரத்தினாலும் துரத்துவாரே ஒழிய அவர் வீட்டிலிருந்து அவர் வெளியேற மாட்டார்” என்று சொல்லத் துடித்த நாவை அடக்கிய நித்யா, 
 
“ஒன்னும் பிரச்சினை இல்ல வாசா… மாமா வீட்டுலதான் இருக்கார். நீ பதறாத. இதுக்குதான் போன் பண்ணேன். சத்யா வேற போன் பண்ணி இருந்தா…. எல்லாம் சரிதானே! ஒன்னும் பிரச்சினை இல்லையே! மாமா நல்லா இருக்காரா? வீட்டுக்கு வரார்தானே!னு துருவித் துருவி கேட்டா… அவ கேக்கும் போதே! புரிஞ்சது போட்டு வாங்குறான்னு. நான் சாதாரணமா பேசி அவ நாத்தனார் கதையை பேசியதும் போன வச்சிட்டா…. நீயும் சூதானமா இரு வாசா…. உனக்கும் போன் பண்ணுவா” என்ற நித்யா தந்தை எப்போ வருவார் என்று விசாரித்து, வாசுகியை கேட்டதாக கூறி விட்டு அலைபேசியை அனைத்திருந்தாள்.
 
“அப்போ வாசுகி சத்யாகிட்ட ஒன்னும் சொல்லலையா? இல்ல நித்தி வாயால கேட்டு உறுதி படுத்திக்கணும்னு போன் போட்டாளா? அவ கதறுறத கேக்கணும்னு இந்த சத்யா வேணுமென்னே போன் பண்ணி இருப்பாளா? அவ புத்தி இப்படித்தான் போகும்” தங்கையை திட்டியவன் வண்டியை கிளப்பினான்.
 
 
தன்னிடமிருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது. காலையிலிருந்து வேர்வையில் குளித்து வேலை பார்த்ததில் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து சாப்பிட்டால்தான் நன்றாக சாப்பிட முடியும் என்று தோன்ற சமயலறைக்குள் நுழைந்தவன் மின்குமிழை எரிய விட்டு பின் பக்க கதவை திறந்துகொண்டு வெளிய செல்ல அவன் துண்டும் கைலியும் கொடியில் இருப்பதைக் கண்டு அதை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்.
 
வழக்கமாக கடையிலிருந்து வந்தால் குளித்து விட்டே உள்ளே வருவதால் வாசுகி வைத்து விடுவாள். ஆனால் இன்று வாசன் காலையில் குளித்த பின் காய விட்டு போன துண்டும் கைலியும் என்பது கூட அவன் கவனத்தில் இல்லை.    
 
அவன் வீட்டுக்கு வந்தால் சில நாட்கள் வாசுகி டீவி பார்த்துக்கொண்டு இருப்பாள், சில நாட்கள் தூங்கிப் போய் இருப்பாள் இன்று தூங்கி இருப்பாள் என்று நினைத்தான். அவள் தனக்காக காத்திருக்க வேண்டும். தன் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு விழித்திருக்க வேண்டும் என்று எண்ணுபவனல்ல வாசன்.
 
ஆம்! அடித்து விட்டான் தான். அவன் மனது கூட அவனை கடையில் நிம்மதியாக வேலை பார்க்க விடாமல் வசை பாடிக்கொண்டுதான் இருந்தது “என்ன நீ சட்டுனு கைய நீட்டிடுற, சத்யா உன் கூட பொறந்தவ புரிஞ்சிப்பா, இவ நேத்து வந்தவ அப்படியே! அதிச்சில உறைஞ்சு நின்னாலே!”
 
“என்ன நேத்து வந்தவ நேத்து வந்தவனு சொல்லிக்கிட்டு வந்து ஆறு மாசமாக போறா, கூட வாழத்தானே வந்திருக்கா, புரிஞ்சிக்க மாட்டாளா?” காலையில் இருந்த மனப்போராட்டம் உடம்பில் குளிர் நீர் பட்டதும்தான் அடங்கியது போலும் மனதை அடக்கியவன், குளித்துவிட்டு வந்து சமையலறை பாத்திரங்களை திறந்து பார்க்க சமைத்தற்கான எந்த அறிகுறியும் இல்லை.
 
“என்ன இவ ஒண்ணுமே! சமைக்கலைனா என்ன சாப்பிட்டிருப்பா?” என்றவாறு பிரிஜ்ஜை திறந்து பார்க்க, காலையில் சமைத்து மீதமானது அனைத்தும் அங்குதான் குடியிருந்தது.
 
“அப்போ இவ மதியம் சமைக்கவுமில்லை சாப்பிடவுமில்லை. ராவைக்கும் பட்டினியா படுத்துகிட்டாளா?” வேகமாக அறைக்குள் நுழைந்து மின் விளக்கை எரியவிட வாசுகி அறையில் இல்லை. எங்கே சென்றிருப்பாள்? என்று சிந்தித்தவனுக்கு அந்த வீட்டில் அவன் நுழைந்தது முதல் பார்க்காத இடம் தந்தையின் அறை என்றதும் “தன்னை படுக்கையிலும் விலக்கி வைத்து விட்டாளா? அப்பா அறையில் எத்தனை நாள் தூங்குவாள். அடுத்த வாரமோ! இன்னும் பத்து நாட்களிலோ! அவர் வந்து விடுவார் அப்பொழுது இவள் எங்கே தூங்குவாளாம்?” கோபமாக முன்னறையை அடைய மின் விளக்கு எரிந்துக்கொண்டுதான் இருந்தது வாசுகி தரையில் பாயை விரித்து படுத்திருந்தாள்.
 
அவளை பார்க்கப் பார்க்க வாசனுக்கு அப்படியொரு கோபம் வந்தது. “எதோ கோபத்தில் அடிச்சிட்டேன். அதுக்காக சாப்பிடாம கொள்ளாம இப்படி படுத்துக்கிடக்கிறாளே! இவளுக்கு இவ்வளவு கோபம் வருமா? இப்படியே விட்டா இவ உடம்ப கெடுத்துகுவா”
 
பாயை விரித்துப் படுத்திருந்தாலும், போர்வை கூட இல்லாமல் அவள் தூங்கிப் போய் இருந்த தோற்றம் வாசனின் மனதை பிசைந்தது. அவர்களின் அறையில் பெரிய கட்டில் அதில் தூங்கக் கூடாதென்று வந்தவள் தந்தையின் கட்டிலில் தூங்காமல் எதற்கு பாயில் தூங்குகிறாள் என்ற கோபம் வேறு தலை தூக்க,  வாசுகியின் அருகில் அமர்ந்து கொண்டவன் அவளை எழுப்பலானான். 
 
பாதி தூக்கத்தில் கண்ணை திறந்தவள் கணவனைக் கண்டு “ப்ளீஸ் இன்னைக்கு தூங்க விடுங்க, நாளைக்கு பாத்துக்கலாம்” என்று திரும்பி படுத்துக்க கொண்டு தூக்கத்தை தொடரலானாள்.
 
கல்யாணமாகியும் இந்த ஆறு மாதங்களில் வாசனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை. காலையில் கடைக்கு போவதும் இரவில் வீட்டுக்கு வருவதும் பழைய வாழ்க்கையையே! தொடரலானான்.
 
வீட்டில் தனக்காக மனைவி என்று ஒருத்தி காத்திருப்பாளே! நேரங்காலத்தோடு வீடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருக்குமோ! வேலை அவனை வீடு செல்ல விட வில்லை. இதனாலயே! அவர்களிடையே! பேச்சும் குறைவு. வாய் மொழிகள்தான் அதிகம் இல்லை. இரவில் பேசும் உடல்மொழிகளுக்கும் குறைவில்லை.
 
சிலநாட்கள் தூங்கிப் போய் இருக்கும் மனைவியை கெஞ்சி கொஞ்சி எழுப்பி கணவனாக தன் உடல் தேவையை அவளிடம் முடித்துக்கொள்வதால் இன்று அவன் எழுப்பியதில் தூக்கக் கலக்கத்தில் உளறி இருந்தாள். 
 
ஏற்கனவே எரிந்துக்கொண்டிருந்தவனுக்கு அவன் அவளை எழுப்பியதற்கான காரணம் இதுதான் என்று தூக்க கலக்கத்தில் சொல்லிக் காட்டியது இன்னும் கோபத்தை மூட்ட “ஆமா டி தினமும் தூங்குற உன்ன எழுப்பி என் தேவைய தீர்த்துகிறேன் பாரு” என்று கத்த ஆரம்பித்திருக்க தூக்கம் களைந்து திருதிருவென முழிக்கலானாள் வாசுகி.
 
இப்படித்தான் யார் வந்து எழுப்பி இருந்தாலும் தங்களுக்குள் இருட்டினில் நடக்கும் விஷயத்தை உளறி இருப்பாளா? தூக்கக் கலக்கமென்றாலகும் இப்படித்தான் கவனக் குறைவாக ஒரு பெண் இருப்பாளா? என்ற கோபமும் சேர்ந்துக்கொள்ள வாசுகியை மன்னிக்க வாசன் தயாராக இல்லை.
 
கணவனின் தொடுகைக்கும், மற்றவர்களின் தொடுகைக்கும் தூக்கத்தில் கூட வித்தியாசத்தை உணர்ந்துக் கொள்பவள்தான் பெண் என்பவள் என்பது வாசனுக்குத்தான் தெரியவில்லை. என்னதான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் குழந்தையின் சிறு முனகளுக்கே! விழித்துக்கொள்பவள் பெண். அப்படிப்பட்ட பெண்ணாக பிறவி எடுத்தால் மட்டுமே! ஆண்களுக்கு இந்த மாதிரியான விஷயங்களை உணர முடியும்.
 
சத்யாவிடம் இவள் சொல்லி இருக்க மாட்டாள் என்று சொன்ன வாசனின் மனம் இப்பொழுது உளறிக் கொட்டியது போல் சத்யா குடைந்து கேட்ட போது உளறி கொட்டி இருக்கும் என்று தருணத்தில் எடுத்துக் கூற கத்தியவாறே மனைவியை உலுக்கி எழுப்பியிருந்தான்.
 
தூக்கம் முற்றாக கலைந்தவளுக்கு தான் என்ன பேசி வைத்தோம் கணவன் எதற்கு முறைத்துக்கொண்டு இருக்கிறான் என்று புரியவில்லை. அவனையே கேள்வியாய் ஏறிட
 
“பசிக்குது என்ன சமைச்ச” கோபமாகவே வார்த்தை வர
 
மணியை பார்த்தவள் அடித்துப்பிடித்து எழுந்து சமயலறைக்குள் நுழைந்து அவசரமாக என்ன சமைப்பது என்று பார்க்க
 
“மதியம் சாப்டியா?” சமையலறையின் வாசலிலிருந்தே கேட்டான் வாசன். 
 
வாசுகிடமிருந்து பதில் தான் வரவில்லை. அறையிலிருந்து சமையலறைக்குள் நுழையும் பொழுதே நேற்று நடந்தது, காலையில் நடந்தது என்று எல்லாம் நியாபகத்தில் வந்திருக்க, புடவை முந்தியை இடுப்பில் சொருகியவள் முறுக்கிக் கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
 
இரண்டே எட்டில் அவளிடம் சென்றவன் “கேக்குறேனில்ல. பதில் சொல்ல மாட்டியா?” அவள் முழங்கைக்கு மேலே பிடித்து இழுத்து திருப்பி அவள் முகத்தையும் மறுகையால் பிடித்து தன் புறம் திருப்ப கணவனை நன்றாக முறைத்தாள் வாசுகி.
 
கல்யாணமாகும் வரை வாசன் என்பவனை வாசுகிக்கு தெரியவே! தெரியாது. கல்யாணம் ஆனது முதல் அவன்தான் எல்லாம் என்று அவனுக்காக பார்த்து பார்த்து செய்யலானாள்.
 
இத்தனைக்கும் அவள் வீட்டில் அண்ணன், தம்பி என்று கூடப்பிறந்தவர்கள் கிடையாது அதற்காக சகோதர்கள் இல்லையென்று இல்லையே! அத்தை பசங்க, பெரியப்பா பசங்க என்று ஒன்றாக வளர்ந்தவள். அவர்களை பார்த்து வளர்ந்தவளுக்கு வாசனை புரிந்துக்கொள்வது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை.
 
“என்ன டி உன் பிரச்சினை? கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டியா? இப்படி என்ன கேட்டாலும் பதில் சொல்லமலையே! என் உசுர வாங்குறதுன்னு ஒரு முடிவோடுதான் இருக்கியா?” உஷ்ணமாகவே! அடுத்த கேள்வியும் வர
 
அவனை தீர்க்கமாக பார்த்தவள் “பசிக்குதுனு சொன்னீங்க, நான் தூங்கிட்டேன். அதனால சமைக்க முடியல, தள்ளுங்க சமைச்சிடுறேன். சாப்பிடலாம்” என்று அவன் கையை தள்ளி விட்டு அரிசி டப்பாவை திறந்து அரிசியை அளந்து எடுத்தவள் கழுவ ஆரம்பித்திருக்க, வாசன்தான் அவள் பேச்சிலும் செயலிலும் திகைத்து புரியாது பாத்திருந்தான்.   
 
“வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு என்னமா பேசுறா? இவள இப்படியே விட்டா… கோபிச்சிகிட்டு அவ அப்பா வீட்டுக்கு போனாலும் போய்டுவா…” வாசனின் மனசாட்ச்சி எகிறிக் குதித்து அவன் முன்னாடி வந்து அவளை சமாதானப் படுத்தும்படி சொல்ல பின்னால் இருந்து அவளை கட்டிக்கொண்டான் வாசன்.
 
“ஏன் டி இப்படி இருக்க? உனக்கு என் மேல கோபம்னா ரெண்டு அடி வேணாலும் அடிச்சிக்க, அதுக்காக பேசமா இருக்காத, சாப்பிடாம இருக்காத ப்ளீஸ்” வாசன் இன்று சொன்ன வார்த்தை வாசுகிக்கு வேதவாக்காகும் என்று எண்ணிப்பார்த்திருந்தால் கூறியிருக்க மாட்டானோ! என்னமோ!   
 
உண்மையில் காலையில் அதிகம் சாப்பிட்டதில் வாசுகிக்கு மதியம் பசிக்கவே இல்லை. கணவன் வேறு மதியம் கடையில் சாப்பிடுவதாக கூறி இருக்க இரவுக்கு சமைத்துக்கொள்ளலாம் என்று இருந்தவள் அவன் வர எப்படியும் பத்து மணியாகும், ஒன்பது மணி போல் சமைத்தால் சுடசுட பரிமாறலாம் என்று எட்டு மணி போல் ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு கட்டிலில் சாயப்போக, இது அவர் கட்டில் இதில் படுக்கக் கூடாது என்று முறிக்கிக் கொண்டவள் மாமனாரின் அறைக்குள் நுழைந்து பாயை போட்டு புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருக்க நேற்றிரவு சரியாக தூங்காதது, மனச்சோர்வு என்று தன்னை அறியாமளையே! தூங்கிப் போய் இருந்தாள். அதனால்தான் வாசன் எழுப்பி பசிக்குது என்றதும் மணியை பார்த்தவள் அடித்துப்பிடித்து எழுந்திருந்தாள்.
 
கணவன் இறுக்கி அணைத்து கெஞ்சியத்தில் கொஞ்சம் கோபம் மட்டுப்பட அவன் கை வளைவுக்குள்ளேவே இருந்தவாறு அவன் புறம் திரும்பி “அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் சாப்பிட்டேன், நல்லா சாப்பிட்டேன், மூக்கு முட்ட சாப்பிட்டேன் போதுமா, இப்போ தள்ளுங்க இப்போ சமாச்சாதான் நைட்டுக்கு சாப்பிட முடியும்” என்று புன்னகைக்க
 
“அப்பாடா ராங்கிக்கு கோபம் போச்சு போல” அவள் மூக்கோடு மூக்கை வைத்து உரசியவாறே அவளை சீண்ட
 
முறைத்தவள் கத்தியை எடுக்கவும் “கொலையும் செய்வாள் பத்தினி” என்று அவள் காத்து மடல் உரச கூறினான் வாசன்.
 
அதை எடுத்து அவன் கையில் கொடுத்து “இந்தாங்க இந்த வெங்காயத்தை நறுக்கிக் கொடுங்க, அப்படியே தக்காளி, பச்சமொளகா எல்லாத்தையும் நறுக்கிக் கொடுங்க” என்று அவனை வேலை வாங்க
 
“என்ன அழ வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்ட” என்றவாறே அவள் கொடுத்தவற்றை நறுக்கலானான்.
 
கைகள்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தனவே தவிர இருவருக்கிடையிலும் வேறெந்த பேச்சு வார்த்தையும் நிகழவில்லை. இதுவே வேறு நாட்களாயின் கடையில் நடந்த ஏதாவதை வாசன் சொல்லிக்கொண்டிருக்க, வாசுகி கேட்டுக்கொண்டு சிரித்தவாறு வேலை செய்திருப்பாள்.
 
வாசனுக்கு இந்த வேலைகள் எல்லாம் பழக்கமானதுதான். நித்யாவுக்கு உதவி செய்தே சமையலை கற்றுக்கொண்டிருதான். சத்யா திருமணம் செய்து சென்ற பின் ராமநாதனுக்கும், அவனுக்கும் அவனே! சமைக்கலானான்.
 
சொன்னதுக்கு போல் வீட்டையும் ஒரு வாரத்தில் கொடுக்க வேண்டி இருந்ததால் வாடகைக்கு இந்த வீட்டை பார்த்து குடியேறி இருந்தான். சத்யா சொன்னது போல் கடைசியில் மிஞ்சியது அவள் வாங்கிய மரச்சாமான்களும் சமையல் செய்யும் பாத்திரங்களும் இன்னும் சில பொருட்களும் மாத்திரமே!
 
இந்த வீட்டுக்கு தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற பொருட்களை விற்க ஏற்பாடு செய்ததில் மரச்சாமான்களை விற்க ராமநாதன் விட வில்லை. இன்று அது வாசன் மற்றும் வாசுகியின் அறையில் குடியிருந்தது.
 
கல்யாணமாகி வந்த புதிதில் வாசுகி சமைக்கும் அழகை ரசித்தவன்தான் வாசன். அப்பொழுது வாசுகி  சமையலெல்லாம் யார் பாத்துக்கிட்டாங்க என்று கேட்டதுதான்.
 
“நித்யா சமைக்கும் பொழுதே கத்துக்கொண்டேன். சத்யா கல்யாணமாகி போனபின் அப்பாகும், எனக்கும் நான்தான் சமைப்பேன். ஒருநாள் என் கையாள நானே சமைச்சி உன்ன உக்கார வச்சி பரிமாறுறேன். சாப்புட்டு பார்த்து எப்படி இருக்குனு சொல்லு” என்றவன்தான் இந்த ஆறு மாதத்தில் அப்படி ஒரு நாள் வந்ததே இல்லை. ஏன் அவளுக்காக டீ கூட அவன் போட்டுக் கொடுத்ததில்லை. இன்று இவளும் சட்டென்று கத்தியை நீட்டி விட அவனும் இவளுக்கு உதவி செய்யலானான்.    
 
ராமநாதன் வீட்டில் இருந்தால் காலை உணவை உண்ட உடன் “வாசுகிமா ஏதாச்சும் வாங்கணுமா?” என்று கேட்பவர் வாசுகி காசு கொடுத்தாலும் வாங்காமல் வாங்கிக் கொண்டு வந்து விடுவார். அவர் கையில் காசு இருக்குமா? இல்லையா? கடனுக்கு வாங்கி வருகிறாரா? கணவனிடம் சொல்லலாமா? வேண்டாமா?  வாசுகிக்கு ஒரே குழப்பம். ஒருவாறு சொல்லிவிட்டாள்.
 
“கடைக்கு வந்து என் கிட்ட காசு வாங்கிட்டுதான் போவார்” என்று வாசன் சொல்லிவிட நிம்மதியடைந்தாள். ராமநாதன் இல்லை என்பதால் வாசுகிதான் காய்கறிகளை வாங்க வேண்டியதாக இருக்க, சில நேரம் வாசன் வாங்கி குமாரின் கையில் கொடுத்து விடுவான்.
 
 
வாசன் இரவில் வீடு வந்தால் சாப்பிட்ட உடன் தூங்கி விடுவான். அல்லது அவன் தேடல்கள் வாசுகிடம் இருக்கு. காலையில் எந்திரித்தால் குளிப்பவன் சாப்பிட்டு விட்டு கடைக்கு சென்று விடுவான்.
 
ஆனால் சுற்றுப்புறத்தில் அத்தனை சொந்தங்களோடும் ஒன்றாக இருந்துவிட்டு வந்த வாசுகியின் வாழக்கையோ தலைகீழாக மாறி இருந்தது.
 
காலையில் எழும்பிய உடன் குளித்து சாமிகும்பிட்டு சமையல்கட்டினுள் நுழைபவள் கணவனுக்கும் மாமனாருக்கும் பரிமாறி, அவனை வழியனுப்பி வைத்து, துணி துவைத்து, வீட்டை சுத்தம் செய்து, கடைக்கு போவதென்றால் போய் காய்கறிகளை வாங்கி, மதியத்துக்கு சமைத்து, கடைக்கு கொண்டு போய் கொடுத்து கணவனுக்கும் கடை பசங்களுக்கும் கொடுப்பதென்றால் கொடுத்து அங்கேயே சாப்பிட்டு, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீடு வந்து சுத்தம் செய்து, காய போட்ட துணிகளை எடுத்து மடித்து வைத்து, விளக்கேத்தி சாமி கும்பிட்டு இரவானதும் சமைத்து கணவனுக்காக காத்திருப்பாள். ஆறு மாதமாக இதுதான் அவள் வாழ்க்கை.
 
ராமநாதன் பூச்செடிகளில் தக்காளி, வெண்டிக்காய். மிளகாய் செடி, கத்திரிக்காய் என்று நட்டு வித்து வீட்டுத் தேவைக்கு பயன் படுத்திக்கொள்ள கூடிய விதத்தில் அவரே பராமரித்து வந்த சிறிய தோட்டம் பின்னாடி இருக்க, மாமனாரோடு சேர்ந்து செடிகளை பராமரிப்பதும், தொலைக்காட்ச்சி பார்ப்பதும், புத்தங்களை படிப்பதும் என்று வாசுகியின் பொழுது போகின்றது.
 
ராமநாதன் வீட்டில் இருந்தால் செடி, கொடிகளை தவிர்த்து அவரின் ஒரே பொழுதுபோக்கு டீவி பார்ப்பது என்பதால் அதில் குறுக்கிடாமல் இவள் அந்த நேரத்தில் புத்தகங்களை வாசிக்க பயன்படுத்திக்கொண்டாள்.
 
இவ்வாறு வாசனின் சிறிய குடும்பத்தில் தன்னை அழகாக பொருத்திக்கொண்டாள் வாசுகி.
 
ஒரு அடுப்பில் சோறு பொங்கிக் கொண்டிருக்க, வெண்டக்காய் கூட்டை மறு அடுப்பில் கூட்டியவள், இரண்டு முட்டைகளை உடைத்து முட்டை பொடிமாஸ் செய்ய தயார் செய்தாள்.
 
எல்லாம் தயாராக பாயை விரித்து அமர்ந்தவர்கள் வாசுகி பரிமாற வாசன் சாப்பிட ஆரம்பித்திருக்க, வாசுகியும் அதே தட்டில் சாப்பிட ஆரம்பித்தாள்.
 
“ஹப்பா டா… உண்மையிலயே! கோபம் போச்சு போல. இல்லனா வேற தட்டுல இல்ல சாப்பிட்டு இருப்பா…” வாசன் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு அமைதியாக சாப்பிடலானான்.
 
காலை சாப்பாடு ராமநாதனோடு, கடை சாப்பாடு ரகு அல்லது குமார் இருப்பான். இரவுதான் தங்களுக்கான நேரம் என்று வாசுகி உணர்ந்துதான் இருந்தாள்.
 
ராமநாதன் மாத்திரை போடுவதால் விழித்திருக்க மாட்டார். நேரங்காலத்தோடு சாப்பிட்டு தூங்க சென்று விட வாசுகி கணவனுக்காக சாப்பிடாமல் காத்திருப்பாள். வாசன் கூட சொல்லிப்பார்த்து விட்டான். அவள் கேட்டபாடில்லை.
 
அவன் குளித்து விட்டும் வரும்வரை எல்லாவற்றையும் சூடாக்கி ஒரு தட்டில் போட்டு, சமைத்த பானைகளை கழுவியும் வைத்து விடுவாள்.
 
“என்ன டி இது?” என்று வாசன் கேட்டால்
 
“தூங்க வேணாமா? என்று கண்ணடித்து சிரிப்பவள் இரட்டை அர்த்தத்தில் கணவனுக்கு அர்த்தம் சொல்ல செல்லமாக அவள் தலையில் கொட்டுபவன்
 
“விட்டா ஊட்டி விடக் கூட சொல்லுவ போல இருக்கே” என்று கிண்ட செய்ய
 
“என் புருஷன் கிட்ட தானே! சொல்லுறேன் அதுல என்ன தப்பு இருக்கு” என்று அமர்த்தலாக சொல்பவள் “நீங்களே! பசில வந்திருப்பீங்க மொதல்ல சாப்பிடுங்க” என்று விடுவாள்.
 
“நீ சத்யாவிடம் நித்யா வீட்டுக்காரரை பற்றி பேசினாயா?” வாசனின் நாக்கு நுனியில் கேள்வி இருந்தாலும் சாப்பிடும் பொழுது எந்த பேச்சும் இருக்கக் கூடாதென்பது அவன் அன்னை அவனுக்கு கற்றுக் கொடுத்த பாடம். கவளத்தோடு கேள்வியையும் முழுங்கியவன் அமைதியாக சாப்பிடலானான்.
 
காலையில் இருந்த கோபம் இப்பொழுது இல்லை. வரும் போதுதான் நித்யாவோடு பேசி இருந்தான். அவள் வாசனுக்கு தைரியம் சொன்ன விதத்தில் அவளே! சமாளித்துக்கொள்வாள் என்று தோன்ற தன் வீட்டில் நடக்கும் பிரச்சினைக்கு என்ன வழி என்ற யோசனையில்தான் வந்தான். வந்தவனை தூக்க கலக்கத்தில் வாசுகி பேசி கடுப்பேற்றி இருக்க,”சத்யாவிடம் யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும் அது இல்லையென்று தனக்கு தெரியாது என்று சொல்லி விடலாம். சொன்னது தன் மனைவியென்றால் குடும்பத்தில் மீண்டும் ஒரு பூகம்பம் வெடிக்கும். அதை தடுக்க வேண்டும். அதற்கு முதலில் வாசுகியிடம் பேசி உண்மையை தெரிந்துக்கொள்ள வேண்டும்” என்ற சிந்தனையிலையே சாப்பிட்டு முடித்தான் வாசன்.
 
சாப்பிட்டு முடித்ததும் வாசுகி சமையலறையை சுத்தம் செய்ய வாசன் அவளுக்கு உதவலானான். தினமும் செய்யா விடினும் சில நேரம் செய்வதால் அது அவளுக்கு சாதாரணமாகத்தான் தெரிந்தது.
 
“என்ன வாசுகி மேடம் எங்க ரூம்ல தூங்குவீங்களா? இல்ல அப்பா ரூம்ல தூங்க ஏதும் ஐடியா இருக்கா?” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு வாசன் கேலியாகக் கேட்க,
 
“நேற்று அடித்ததால் கோபத்தில் கீழே தூங்கினேன். அப்பொழுது கூட மாமா ரூம்ல போய் தூங்க நினைக்களல. இன்னைக்கி புக் படிக்க அந்த ரூம்க்கு போனேன். விட்டா இவரே துரத்தி விடுவார் போல இருக்கு” தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவள் கணவனை முறைத்துவிட்டு அறைக்குள் நுழைந்து கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள்.
 
“எது இல்லாட்டியும் கோபம் மட்டும் வருது” அவள் காது பட கூறியவன் மின் விளக்குகளை அனைத்து விட்டு வந்து அவளருகில் படுத்துக்கொண்டவன் அவளை தன் புறம் திருப்பி
 
“நான் கேக்குற இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நீ சத்யாவுக்கு போன் பண்ணியா? இல்ல சத்யா உனக்கு போன் பண்ணாளா? அவளாகவே! நித்யா வீட்டுக்காரரை பத்தி உன்கிட்ட கேட்டாளா?”
 
எரிவதை அனைத்தால் கொதிப்பது தானாக அடங்கி விடுமாம். அதுபோல் தான் வாசுகியின் மேல் இருந்த வாசனின் கோபமும். நித்யா ஊரில் இருந்தால் இந்த பிரச்சினை எவ்வளவு பெரிது? அவள் இருப்பது டில்லியில் அவளே! பார்த்துக்கொள்வதாக கூறியதில் சத்யா திரும்ப பேசினால் பார்த்துக்கொள்ளலாம் அதற்கு முதலில் மனைவியிடம் தன்மையாக பேச வேண்டும் என்றுதான் பேச்சை ஆரம்பித்த வாசன் பதில் சொல்லு எனும் விதமாக அவளை பாத்திருந்தான். 
 
நாதன் பெண் பிள்ளைகள் மீது கை வைப்பவரல்ல. இரண்டு தடவை சந்திராவை அடித்திருக்கிறார். அது அவர் வேண்டாம் என்று சொன்னதை செய்ததற்காக. மந்த்ராவையோ! வாசுகியையோ! அடித்ததே! இல்லை.
 
பூர்ணா மூவரையும் வெளுத்து வாங்குவாள். அதுவும் சிறு வயதில்தான். வயதுக்கு வந்த பின் கத்துவது மட்டும்தான். கைநீட்ட மாட்டாள். அவள் கைநீட்டி இருந்தால் நாதன் அவள் கையை ஒடித்து அடுப்பில் வைத்திருப்பார் என்பது வேறு கதை.
 
அத்தைகளுக்கும் வாசுகி செல்லம். யாரும் அவளிடத்தில் அதட்டி பேசியதில்லை. அப்படி வளர்ந்தவளிடம் கணவனே! ஆனாலும் செய்யாத குற்றத்துக்காக என்ன? ஏது? என்று கேட்காமல் அடித்தது மனதில் ரணமா பதிந்து போனதை வாள் கொண்டு அறுப்பது போல் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டால்? கணவன் தன்னை நம்பவில்லையே! என்ற கோபம்தான் வாசுகிக்கு வந்தது.
 
“ஆமா எனக்கு வீட்டுல பொழுது போகல பாருங்க, செய்ய வேலையும் இல்ல அதனால உங்க தங்கச்சிக்கு போன போட்டு உங்க அக்கா புருஷன் இந்த மாதிரின்னு உங்க பாஷைல சொல்லனும்னா…. “பத்த வச்சேன்” போதுமா? இப்போ தூங்குங்க” என்றவள் திரும்பிப் படுத்துக்கொள்ள
 
“இவளுக்கு ஒரு அறை பத்தாது செவிட்டுலையே நல்லா போடணும்” சத்தமாகவே முணுமுணுத்தான் வாசன்.
 
வாசுகியின் கண்களிருந்து கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது.
 

Advertisement