Advertisement

அத்தியாயம் 4

 
 
ஆறு மாதங்களுக்கு முன்
 
பெண் பார்க்க வந்த பொழுதே! வாசுகியிடம் தன்னுடைய பொருளாதார நிலைமையை எடுத்துக் கூறிய வாசன் “எந்த செயற்கை அழகை கொண்டும் அலங்காரம்  பண்ணாம எளிமையாக இருக்க அதனாலே எனக்கு உன்ன பிடிச்சிருக்கு” என்று வெளிப்படையாக கூறியது மட்டுமல்லாது “உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்று கேட்டும் இருந்தான்.
 
உண்மையில் அன்று வெள்ளிக்கிழமை வாசுகி கோவிலுக்கு சென்றிருக்க, வீடு வந்தவளுக்கு இப்பொழுது மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விடுவார்கள் தயாராகு என்று பூர்ணா கூறி விட்டு சென்று விட்டாள்.
 
வழக்கமாக மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருகிறார்கள் என்றால் வாசுகியின் அத்தைகள் வந்து அவளுக்கு பட்டு புடவை கட்டிவிட்டு, அத்தை மகளில் யாராவது ஒருத்தி மேக்கப் என்ற பெயரில் அலங்காரம் செய்து அவளை ஒருவழிப்படுத்தி விடுவார்கள். இன்று யாரையும் காணோம்.
 
கோவிலுக்கு தான் விரும்பியது போல் சாதாரண ஒரு புடவையில் ஒப்பனைகள் எதுவுமின்றி மல்லிகை சரம் மட்டும் சூடி சென்றிருக்க, நெற்றியில் வீற்றிருந்த வட்டப் பொட்டும் அவளை தேவதையாகத்தான் காட்டியது. கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டவள் இதுவே போதும் என்று இருந்து விட்டாள்.   
 
“என்ன இவர் இப்படி பட்டுனு சொல்லிட்டாரு” அவள் முகம் பார்த்து பதில் எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு தலையை பலமாக ஆட்டுவித்திருந்தாள் வாசுகி. அது ஏன் என்று இன்றுவரை வாசுகிக்கு புரியவில்லை. அவளை பொறுத்தமட்டில் வாயிலிருந்து வரும் அதிகமான
வார்த்தையே! “அப்பாகிட்ட சொல்லணும், சித்திகிட்ட கேக்கணும்” என்றிருக்க, வாசன் கேட்ட கேள்விக்கு சுயமாக தலையை ஆட்டுவித்திருந்தாள். வாழ்க்கையில் அவளாக எடுத்த ஒரே முடிவு அவளுடைய கல்யாணம் என்பது கூட அவள் அறிந்திருக்கவில்லை. மனதில் பட்டதை சொல்வதுதான் வாசனின் குணம் என்று போகப்போகத்தான் அவளுக்கே புரிந்தது.
 
வாசனுக்கு திருமணம் செய்துகொள்ள எவ்வளவு அவசரமோ! வாசுகியை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற அவ்வளவு அவசரம் பூர்ணாவுக்கும் இருந்தது. தான் பெத்த இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நந்தி மாதிரி குறுக்கே இருப்பது வாசுகி என்கின்ற கோபம் அவளுக்கு.
 
வாசுகியின் ஜாதகத்தில் அவளுக்கு இருபத்தி ஐந்து வயதுக்கு மேல் திருமணம் செய்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்றிருக்க, இருபத்தியைந்து நிரம்பியதிலிருந்து மாப்பிள்ளை பார்த்தவண்ணம்தான் இருந்தனர். நாதனுக்கு மூன்று அக்கா ஒரு தங்கை இருந்தும் வாசுகியை கட்டிக்கும் வயதில் இரண்டு அத்தை மகன்கள்தான். அதில் ஒருவன் காதல் என்று வந்து நிற்க, மற்றவனின் ஜாதகம் பொருந்தவில்லை. பூர்ணாவுக்கு ஒரு தம்பி அவனுக்கும்  வாசுகிக்கும் பன்னிரண்டு வருடங்கள் வயது வித்தியாசம். வாசுகிக்கு திருமணம் செய்யாமல் அவள் மகள்களுக்கு திருமணம் செய்ய நாதனோ! அவர் அக்காக்களோ! சம்மதிக்கவில்லை.
 
“வாசுகிக்கும் சந்திராவுக்கும் ஒரு வருடம்தான் வித்யாசம் வாசுகியின் ஜாதக தோஷத்தால் எந்த வரனும் அமைய மாட்டேங்குது. சந்திராவின் வயதும் ஏறுது” பூர்ணா புலம்ப
 
அக்கா வாசுகி இருக்க தங்கைக்கு திருமணம் என்றால் அக்காக்கு ஏதாவது நோய்நொடி என்று எந்த வரனும் வராது என்றே பூர்ணாவை அடக்கி வைத்திருந்தனர் இவர்கள்.
 
“அக்காவுக்கு திருமணம் நடக்காமல் தானும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” சந்திரா வேறு ஒரேயடியா மறுத்து விட
 
நாத்தனார்களிடம் பாயமுடியாமல் கோபத்தை மக்களிடம் காட்டியவள் “அக்கா இருக்க தங்கைக்கு இந்த ஊர் உலகத்தில் திருமணமே! நடக்காதா?” என்று அன்னையிடம் புலம்ப
ஆரம்பித்திருந்தாள் பூர்ணா. அந்த மூதாட்டிக்கும் வாசுகியின் வாழ்க்கையை பற்றிய கவலை இருந்துக் கொண்டுதான் இருந்தது.
 
வாசுகி வாசனின் திருமணமும் தரகர் மூலம் வந்த திருமணம் கிடையாது பூர்ணாவின் தம்பி வாசனின் ஊரில்தான் பெண்ணெடுத்துள்ளான். மருமகளோடு வாசனின் கடைக்கு சென்ற பூர்ணாவின் அன்னை ராஜத்துக்கு வாசனை பார்த்த மட்டில் பிடித்து விட மருமகளிடம் விசாரிக்க அதே நேரம் வாசனும் ஊரிலுள்ள அனைத்து பெண்களையும் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று அமர்ந்திருந்த தருணம் அது.
 
என்னதான் அபர்ணா ஓடிப்போய் இருந்தாலும் அவளும் ராஜம் பெற்ற பெண் இல்லையா? அபர்ணா பெற்று வேண்டாம் என்று விட்டுச் சென்ற வாசுகியின் வாழ்க்கையை ஒரு நல்லவன் கையில் பிடித்துக் கொடுக்கும் பொறுப்பு தனக்கும் இருக்கிறது என்ற எண்ணமும், கவலையும்தான் செல்லும் இடமெல்லாம் பார்க்கும் வாலிபர்களையெல்லாம் இவன் வாசுகிக்கு பொருத்தமாக இருப்பானா என்ற கண்ணோட்டத்தில் பார்த்து வாசனை தேர்தெடுத்திருந்தார் அந்த பெரிய மனிசி.
 
சொந்தமாக கடை வைத்திருக்கின்றான். விசாரித்த மட்டில் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. காலையிலையே! கடைக்கு வருபவன் இரவானதும் வீடு செல்கிறான். முக்கியமாக குடிப்பழக்கம் இல்லை. என்ன சொந்தமாக வீடுதான் இல்லை. அதற்காக ரோட்டிலா இருக்கிறான் வாடகைக்கு வீடு எடுத்து நல்லாத்தான் இருக்கிறான். ரெண்டு தங்கையையும் கட்டிக்கொடுத்தாயிற்று. அன்னையும் இல்லை. வாசுகிக்கு மாமியார் தொல்லை இருக்காது. இருக்குறது அப்பா மட்டும்தான் அவர் என்ன பிரச்சினை பண்ணிடப் போகிறார்?   
 
இவரே போய் வாசனிடம் பேச ஆத்மநாதனின் ஊர் என்றதும் மறுத்தவனை எவ்வாறு சம்மதிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு கடவுளே! அனுப்பியது போல் ராமநாதன் கடைக்கு வர அவரிடம் புகார் சொல்வதை போல் ராஜம் கூற, பூர்ணாவின் அன்னையின் வற்புறுத்தலின் பெயரால் ராமநாதனும் “போய் பார்த்து விட்டு வரலாம் வாசா..” என்று வார்த்தையை விட நாளை கடத்தினால் ராமநாதனின் மனதை மாற்றி விடுவானோ! என்றஞ்சியே! உடனே கிளப்பி இருந்தார் பெண்பார்க்க. ராமநாதனை மட்டும் அழைத்துக் கொண்டு ரகுவிடம் கடையை ஒப்படைத்து விட்டு வேண்டா வெறுப்பாகத்தான் பெண் பார்க்க சென்றிருந்தான் வாசன்.
 
ராஜத்துக்கு கைகால் ஓடவில்லை. பூர்ணாவை அழைத்து இப்பொழுதே! மாப்பிள்ளையும் அவர் தந்தையும் வாசுகியை பார்க்க வருவதாக கூறி விட்டு அவர்களுடனே! பஸ் ஏறி இருந்தாள்.
 
“இது என்ன திடிரென்று வருகிறார்கள்” என்று அதற்கும் பூர்ணா பொரும
 
“கடை செய்பவர்கள் அப்படித்தான் நேரம் கிடைத்த உடன் வர வேண்டாமா?” என்ற நாதன் தன் சம்மதத்தை மறைமுகமாகவே! சொல்லி இருந்தார்.
 
வேண்டா வெறுப்பாக வந்ததால் வாசன் கடைக்கு வந்த துணியையே! போட்டு வந்திருந்தான். பஸ் வேகமெடுக்க கண்ணாடியினூடாக வந்து அவனை தொட்டுச்சென்ற காற்றில் அவன் மேல் மசாலா தூளின் வாசனை வேறு அடிக்க தன்னையே! நொந்துகொண்டான்.
 
“நல்லவேளை இன்று கருவாடு லோட் வரும் நாள் அல்லாமல் போனது. இல்லையாயின் வீட்டுக்குள்ளேயே சேர்த்திருக்க மாட்டார்கள்” வேண்டா வெறுப்பாக பஸ் எறியவனின் மனம் சொன்னது அவன் காதை எட்டவில்லை.
 
வாசுகியின் வீட்டின் வாசலில் பெரிய கோலம் போட்டிருக்க, ராமநாதனுக்கு நிறைவாக இருந்தது.
 
“அப்பா ரொம்ப ஓவரா யோசிக்காத பொண்ணோட அம்மா போட்டிருப்பாங்க” ராமநாதனின் மின்னிய கண்களை பார்த்து வாசன் தந்தையின் காதை கடிக்க
 
“இவனுக்கு இப்படி கூட பேச வருமா?” என்று அவர் யோசிக்க
 
“நம்ம வாசுகிதான் போட்டா” என்று ராஜம் சொல்லும் பொழுதே! நாதன் அவர்களை வெளியே வந்து வரவேற்றார்.
 
வாசனுக்கு வாசுகியை பார்த்த உடனே பிடித்து விட, வாசுகிக்கி வாசன் பேசிய விதத்தில் பிடித்து விட ஆக மொத்தத்தில் ஒரு காபி சாப்பிடும் கேப்பில் இருவரும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர்.
 
“எதற்கும் ஒரு தடவ ஜாதகப் பொருத்தம் பார்த்து விடலாம்” என்று நாதன் கூற
 
தங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. உங்கள் நம்பிக்கையில் நாங்கள் குறுக்க வரவில்லை. என்று ராமநாதன் கூறலானார்.
 
ராஜம் இவர்களை அழைத்து வரும் பொழுதே! நாதன் கேப்பார் என்று ராமநாதனிடம் கூறி வாசனின் ஜாதகத்தை கையேடு கொண்டு வந்திருந்திருக்க அதை கொடுக்கவும் முகம் மலர்ந்தார் நாதன்.
 
அபர்ணா அத்தை மகள் என்பதால் நாதன் ஜாதகம் எதுவும் பார்க்காமல் திருமணம் செய்துதான் அவமானப்பட்டுப் போனார். அந்த அடிதான் தன் மகளின் வாழ்க்கையில் எந்த குளறுபடியும் வரக்கூடாதென்று முன்னெச்சரிக்கையாக ஜாதகப் பொருத்தம் பார்கலானார் நாதன்.
 
ராமநாதன் கலாவதியை எல்லா பொருத்தமும் பார்த்துத்தான் மணந்தார். அவர்கள் வாழ்க்கை பாதியிலையே! முடிந்து விட இவருக்கு ஜாதகத்தில் நம்பிக்கையில்லாமல் போனது விதி.
 
உடனே ராஜத்தையும் நாதனின் அக்கா கலைவாணியையும் அனுப்பி இரண்டு தெரு தள்ளி இருக்கும் ஜோசியரிடம் ஜாதகப் பொருத்தம் பார்த்துவிட்டு வருமாறு நாதன் கூற இங்கு பெண்பார்க்க வந்த தந்தை, மகன் இருவருக்கும் விருந்தோம்பல் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
 
ஆக மொத்தத்தில் ஜாதகம் பொருந்தினால்தான் மேற்கொண்டு கல்யாணத்தை பேசுவார்கள் என்று வாசனுக்கு புரிய, பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனின் நிலையில் அமர்ந்திருந்தான். வாசுகியோ கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள்.
 
ஜாதகப் பொருத்தம் பார்க்கப் போனவர்கள் பத்துக்கு எட்டுப் பொருத்தமும் பொருத்துவதாகாக ஜோசியர் சொன்னதாக நல்ல செய்தியோடு வந்துவிட மேற்கொண்டு கல்யாண பேச்சும் தொடர்ந்தது.
 
ராமநாதனுக்கு வாசனின் விருப்பம் முதன்மையானது என்று தோன்ற அவன் வேண்டாம் என்று சொல்லும் வரங்களை கட்டாயப்படுத்தாமல் பெண் பார்த்துக்கொண்டிருந்தவர் வாசுகியை பிடித்து விட்டது என்றதும்தான் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பூ வைக்க, நிச்சயதார்த்தம் என்று நாளைக் கடத்தாமல் கல்யாணத்தையே வைத்துக்கொள்ளலாம் மூத்த மகள் டில்லியில் இருக்கிறாள் அவள் வந்து செல்வது சிரமம் என்று காரணமும் கூறினார்.
 
உண்மையில் ஏற்கனவே! பெண் பார்க்கவென பல மாதங்களை கடத்தியாகிற்று, வாசனுக்கு செலவையும் இழுத்து வைக்கக் கூடாதென்றுதான் ஒரு தந்தையாக இவ்வாறு பேசி வைத்தார். பூர்ணாவும் உடனே முந்திக் கொண்டு தாங்களும் எளிமை விரும்பி என்று பேசி வைத்து கல்யாணத்தை கோவிலில் சிம்பிளாக நடத்தலாம் என்று முடிவு செய்துகொண்டனர். வாசுகிக்காக ஆடம்பரமாக செலவு செய்ய அவள் மனம் இடம் கொடுக்கவில்லை என்பதை சபையில் கூறவா முடியும்? 
 
பெண் பார்த்து அடுத்த முகூர்த்தத்தில் திருமணம். வரதட்சணை எதுவும் வேண்டாம் பெண்ணுக்கு நீங்க என்ன செய்ய விருப்பமோ! அதை செங்க என்று வாசன் சொல்லி விட நாதனுக்கு முழு திருப்தி.
 
அது மட்டுமில்லாமல் ஆவுடையப்பன் குடும்பம் பெண் எடுத்த குடும்பம் என்றால் கண்டிப்பாக நல்ல குடும்பமாகத்தான் இருக்க வேண்டும். தரகர் கூறி இருந்தாலும், கூட்டிக் குறைத்து கூறி இருப்பார். அத்தையே விசாரித்ததால் பையன் சொக்கத்தங்கமாகத்தான் இருப்பான் என்று எண்ணலானார் நாதன். 
 
தன்னை பெண் பார்க்க அழைத்து செல்லவில்லை என்று சத்யா ஒரு ஆட்டம் ஆடித் தீர்க்க, கல்யாணம் அன்றே பார்த்துக்கொள் என்று ராமநாதன்தான் அவள் வாயை அடைத்திருந்தார்.
 
வாசன் அவளிடம் “தனக்கே! தெரியாது அப்பாதான் திடிரென்று வா ஒரு பயணம் போலாம் என்று அழைத்துச் சென்றார். நீ அப்பாகிட்டயே! பேசு” என்று அலைபேசியை ராமநாதனிடம் கொடுத்திருந்தான்.
 
இத்தனை வருடங்கள் குடிபோதையில் உளறியவாறு இருந்த ராமநாதன் இல்லை இவர். கலாவதி இருக்கும் பொழுது இருந்த கம்பீரமான ராமநாதன் இவர். வாழ்க்கையில் சில அடிகள் பாடங்களை கற்பிக்கும், மனதை ராணவேதனைப் படுத்தும். வயதும் அனுபவமும் மனிதர்களை படிக்கவும் கையாளவும் கற்றுக்கொடுக்கும். ராமநாதனும் காலம் கடந்து எல்லாவற்றையும் உணர்ந்துக்கொண்டார்.   
 
சத்யாவை அழைத்தால் அவள் மாமியார் புஷ்பாவை அழைக்க வேண்டும், இந்த பக்கம் நித்யா வர முடியா விட்டாலும் பத்மாவை அழைக்க வேண்டும். ஏதாவது பேசி நடக்க இருக்கும் நல்ல காரியத்தை இந்த மூன்று பேரும் கெடுத்துவிடக் கூடியவர்கள் என்றே! ராமநாதன் தன் மகளையும் அழைக்கவில்லை.  
 
திருமண அழைப்பிதலும் உடனே அச்சிட்டு வழங்கப்பட்டிருக்க, எல்லாம் நல்லபடியாக நடந்துக்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் வேளையில்தான் அந்த போன் கால் நாதனுக்கு வந்தது. அது வாசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன என்ற செய்தியை சுமந்து வந்தது.
 
தம்பிகளையும், தங்கையையும் வளர்க்க தன் வாழ்க்கையை தியாகம் செய்வதெல்லாம் ஊருக்காக, தங்கை திருமணம் செய்யும்வரை காத்திருக்காமல் அவனுடைய இருபத்தி இரண்டாம் வயதிலையே திருட்டுத்தனமாய் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளையும் பெத்து யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வருவதாகவும். இந்த திருமணம் ஊருக்காக செய்வதாகவும் அந்த அலைபேசி சுமந்த செய்தி கூறி இருக்க தலை சுத்திதான் போனார் நாதன்.
 
எது உண்மை? எது பொய்? இந்த வருடத்தோடு வாசுகிக்கு இருபத்தி எட்டு முடிகிறது. அவளுக்கு பார்க்காத மாப்பிளைகளே! இல்லை. மாப்பிள்ளையை பற்றி மட்டும்தான் நாதன் தோண்டித் துருவி விசாரிப்பார். குடும்பத்தில் உள்ள எல்லாரும் குறையில்லாது இருப்பார்கள் என்று சொல்ல முடியாதே! அதனால் மாப்பிள்ளை மட்டும் பெர்பெக்ட்டா இருந்தால் போதும் என்று எண்ணினார். பார்த்த எல்லா மாப்பிள்ளையிடமும் ஏதோ! ஒரு குறை நாதனின் கண்ணுக்கு தென்படும். அப்படியே பிடித்து விட்டால் ஜாதகம் பொருந்தாது.
 
எல்லாம் சரியாக பொருந்தி நிச்சயம் செய்யலாம் என்று நினைத்தால்
 
“இது உங்க மூத்த தாரத்து பொண்ணமே! அவங்க ஓடிப்போய்ட்டாங்களாமே! இந்த பொண்ணும் கல்யாணத்துக்கு பிறகு எங்க பையன விட்டுட்டு ஓடி போக மாட்டான்னு என்ன நிச்சயம்” என்று நாதனை கேள்வி கேக்க 
 
பூர்ணாதான் துள்ளிக் குதித்தாள். வாசுகி இருந்தால் தான் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணமே! ஆகாது என்று அழுது புலம்பினாள்.
 
வீட்டில் நடக்கும் போராட்டத்தை தாங்க முடியாமல் வாசுகியும் தான் எங்கயாவது சென்று விடுவதாக தந்தையிடம் கூற,
 
“அப்படி நீ போனா உன் அம்மா மாதிரி ஓடிப் போய்ட்டதாகத்தான் ஊர் சொல்லும். எங்க போறதாக இருந்தாலும் கல்யாணம் பண்ணி இந்த வீட்டை விட்டு வெளிய போ” என்று கூறி விட அந்த உண்மை அவளை நன்கு பதம் பார்த்திருந்து.
 
வாசனை பற்றி ராஜம் கூறிய உடன் பக்கத்து ஊர் என்றதும் தானே! போய் பார்த்து விசாரித்து விட்டுத்தான் பெண் பார்க்கவே! வரச் சொல்லி இருந்தார் நாதன். அப்படியிருக்க எங்கே! பிழை நேர்ந்தது என்று முற்றாகக் குழம்பிப் போய் அமர்ந்திருந்தார்.
 
“என் அம்மா கொண்டு வந்த மாப்பிள்ளை என்பதால் உங்க அக்கா யாராவதுதான் இப்படி செய்திருப்பாங்க”  என்று பூர்ணா ஆடித்தீர்த்து விட, இந்த விஷயம் பொய்யாயின் இதை கேட்கப் போய் வாசன் கல்யாணத்தையே நிறுத்தி விடுவானே! என்ற அச்சம் வேறு நாதனுக்கு. மகளின் எதிர்கால வாழ்க்கைப் பிரச்சினை அடங்கி இருக்க, என்ன செய்வதென்று குழம்பி தன் சகோதரிகளிடம் ஆலோசனை கேட்க மூவருமே ஆத்மநாதனின் தந்தை ஆவுடையப்பனிடம் விசாரிக்கலாம் என்று விட்டனர்.
 
கல்யாணத்துக்கு சம்மதம் கூறி, கல்யாணத்துக்கு பத்திரிக்கையும் அடித்த பின் சென்று மாப்பிளையை பற்றி விசாரித்தால் அவர் தவறாக எண்ண மாட்டாரா என்று நாதன் கவலையடைய, பெண்ணை பெற்ற அப்பாவின் கவலைய அவர் புரிந்துக்கொள்வார் என்று நாதனை சகோதரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருந்தனர்.
 
மரியாதையாகக் கருதி நாதன் ஆவுடையப்பனை வீட்டில் சென்று சந்தித்து உண்மையை கூறியே! விசாரிக்க, அது பத்மாவின் காதில் விழுந்து தொலைத்தது விதி. 
 
“சொந்தம்னு சொல்லிக்கிட்டா மட்டும் போதாது, மரியாதையும் தெரிஞ்சிருக்கணும். பொண்ணு பார்க்க கூட சம்மந்தி எங்களை கூப்பிடல. கூப்பிட்டிருந்தா இன்னக்கி நீங்க இங்க வந்திருக்க வேண்டிய நிலைமை வந்திருக்குமா?” ஆவுடையப்பனுக்கு மட்டும் குடிக்க தேநீரை கொடுத்தவள் வீட்டுக்கு வந்திருப்பவருக்கு தண்ணீராவது கொடுக்க வேண்டும் என்ற இங்கிதம் கூட இல்லாமல் பேசிக்கொண்டே போனாள். 
 
நாதனின் மனம் அடிக்க ஆரம்பித்தது. “இவங்க என்ன சொல்ல வராங்க? போன்ல சொன்ன செய்தி உண்மையா?” ஒரு கணம் திகைத்து பார்த்தார்.
 
ஆவுடையப்பனுக்கு ஊரில் மரியாதை கொட்டிக் கெடக்க, கடைசி மகன் குடித்து அங்கங்கே! விழுந்து கிடப்பதும், மூன்றாவது மகன் காதல் என்று மாற்று மதத்து பெண்ணின் பின்னால் அலைவதும், மூத்தவன் சொத்தை பிரித்துக் கொடு என்று சண்டை போடுவதும், ஆத்மநாதன் வீட்டுக்கே! அழைத்து பேசுவதில்லை. இதில் பத்மாவும் அவர் பேச்சில் குறுக்கிட்டு மானத்தை காற்றில் பறக்க விட்டுக்கொண்டிருக்க, மனைவியை நாதனின் முன் கடிய முடியாமல் முறைத்துப் பார்க்க, பத்மா கணவனை கண்டுகொண்டாளில்லை.
 
“அது வந்து ராஜம் அத்தைதான் திடிரென்று கூட்டிட்டு வந்தாங்க அதான் அவங்க சொல்லியிருக்க மாட்டாங்க” நாதன் சொல்ல
 
தனக்கு கொடுத்த தேநீரில் சக்கரை இல்லை. இதை நாதனுக்கு கொடுக்கவும் முடியாமல் ஆவுடையப்பன் தடுமாறி நிற்க,
 
“என்ன மசமசன்னு பார்த்துகிட்டு இருக்கீங்க ஆறிட போகுது குடிங்க” என்று கணவனை அதட்டியவள் நாதனின் புறம் திரும்பி “பொண்ணு பார்த்து விட்டு போன பிரகாச்சும் போன் பண்ணி சொன்னாங்களா? உங்க ஊர்ல சம்பந்தம் பேசி முடிச்சிட்டோம்னு? இல்லையே! சொந்தம்னு நாங்க எதுக்கு இருக்காம்? நல்லதுக்கே காலமில்லை அங்க ஒருத்தி என் பையன கைக்குள்ள வச்சிக்கிட்டு வீட்டு பக்கமே அனுப்ப மாட்டேங்குறா” என்னு நித்யாவையும் வசை பாட, என்ன சொல்வதென்று நாதன் நடுமாறி நிற்க,
 
நாதனின் திகைத்த முகத்தைக் கண்ட ஆவுடையப்பன் கையிலிருந்த கப்பை மேசையில் வைத்து விட்டு “முதல்ல சொக்கநாதனுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா” என்று அதட்டியே! உள்ளே அனுப்பியவர் ஆத்மநாதன் ஊருக்கு வருவதில்லை அந்த கோபத்தில் பத்மா கண்டதையும் பேசுவதாகக் சொல்லி, வாசனை பற்றி நல்ல விதமாக கூற, நாதனின் மனசங்கடம் நீங்கி திருமணத்துக்கு நேரங்காலத்தொடு வருமாறு அழைப்பி விடுத்து வீடு சென்றார்.
 
பத்மா மூலம் விஷயமறிந்த நித்யா வாசனை அழைத்து விஷயத்தைக் கூற, வாசனுக்கு கண்மண் தெரியாத கோபம். “ஊருக்குள் எத்தனை பெண்ணை பார்த்து வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். இவர் மகள் ஒன்றும் ரதி இல்லையே! சரியென்று சொன்ன ஒரு காரணத்துக்காக யார் எண்ண சொன்னாலும் நம்பி விடுவாரா? பெண்ணை கொடுக்கும் முன் விசாரிக்க மாட்டாரா? விசாரித்திருந்தால் என்னை பற்றி அறிந்து கொண்டிருப்பாரே! அது என்ன கல்யாணத்துக்கு ஒரு வாரம் கூட இல்லாத போது போய் விசாரிக்கிறது. ஒருவேளை மாமா இல்லாம பத்மா அத்த இருந்து ஆமா அவன் அப்டித்தான்னு சொல்லி இருந்தா? இவரு கல்யாணத்த நிறுத்திடுவாரா? என் கிட்ட வந்து ஒரு வார்த்த கேக்க மாட்டாரா? ” வாசனுக்கு புரியவில்லை. ராமநாதன் முன் நின்று நித்யா, சத்யாவின் திருமணத்தை செய்திருந்தால்
புரிந்துகொண்டிருப்பானோ! நாதனின் அச்சம் புரியவில்லை.
 
போதாதற்கு பத்மா வாசுகி பூர்ணாவின் மகள் இல்லை, அபர்ணாவின் மகள். அதை அவர்கள் சொல்லித்தான் திருமணம் பேசினார்களா? என்று நித்யாவிடம் விசாரித்திருந்தாள்.
 
நித்யாவோ! தன் மாமியாரின் உள்குத்து அறிந்தவளாக “தெரியும் அத்த” என்று விட்டு வாசனிடம் இதை பற்றி விசாரித்தாள்.
 
நாதன் மறைக்க வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. ராஜம் கூறி இருப்பார் என்று நினைக்க, பெண்ணை பிடித்த பின் கூறிக்கொள்ளலாம் என்று ராஜம் நினைக்க கடைசியில் அபர்ணா விஷயம் வாசனுக்கு தெரியாமல் போனது.
 
நித்யா வாசனிடம் கூறிய பொழுது ஏனோ! தனக்கு தெரியாது என்று கூற மனம் வர வில்லை. “சொன்னாங்க” என்ற ஒற்றை வாக்கியத்தில் முடித்து கொண்டவன்
 
“அவர் ரெண்டு கல்யாணம் பண்ணிக்குவாராம். அவரை போல் என்னையும் நினைச்சிட்டாரா?”   அதற்கும் பொருமலானான் இவன்.   
 
கல்யாணம் முடியும்வரை நாதனுடன் சுமூகமான பேச்சு வார்த்தையை வைத்துக்கொள்ளவுமில்லை. வாசுகியின் குடும்பத்தாரிடம் கொஞ்சம் ஒதுங்கியே இருக்கலானான். 
 
வாசனுக்கு கல்யாணம் நடந்தா போதும் என்றிருந்த ராமநாதன் நெருங்கிய சொந்தபந்தங்களை மட்டுமே! திருமணத்துக்கு அழைத்திருந்தார்.
 
சொன்னது போலவே! கோவிலில் திருமணம் எளிமையாகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு பரீட்ச்சை இருப்பதால் நித்யா மட்டும் வந்திருந்தாள். அவள் தனியாக வந்த மற்றுமொரு காரணம் ஆத்மநாதன்.
 
“என்ன நீ உன் அண்ணனோட குடிசைல போய் இருக்கலாம்னு சொல்லுற? நான் வர மாட்டேன்” என்று அடம்பிடிக்க
 
கணவனை வெறுப்பாக பார்த்தவள், ஊரில் ஆவுடையப்பனின் வீடும் பழமையான வீடுதான் ஓட்டை, உடைசல் என்று நிறைய வேலைகள் இருக்க, நாலு ஆண் மக்களில் எவனுக்கும் அந்த வீட்டை திருத்தம் செய்ய ஆசையும் இல்லை. தேவையும் இல்லை. அதை நினைத்துப் பார்த்தவள். அந்த வீட்டை விட வாசனின் வீடு நல்லாத்தான் இருக்கு என்று எண்ணிக் கொண்டு எதுவும் பேசவில்லை. உறவுகள் தேவையென்றால் அவர்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் வர வேண்டியது தானே! என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. கணவனிடம் வாதிடுவதை விட காரியம் பெரிது. மகன் ஆதித்யாவிடம் ஊருக்கு செல்ல ட்ரைன் டிக்கட் போடுமாறு சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் வாசனின் கல்யாணத்தில் கலந்துகொள்ள.
 
கல்யாணத்துக்கு புஷ்பாவோடு வந்த சத்யகலா யாரோ போல் கல்யாணத்தில் கலந்துகொண்டு சென்று விட்டாள்.
 
ஸ்ரீராம் எங்கு எனக் கேட்டவர்களுக்கு ராமநாதன்தான் “வரேன்னுதான் சொன்னான். என்ன பிரச்சினைன்னு தெரியல” என்று சொல்லியே சமாளித்தார். அவர்தான் அவனுக்கு அழைப்பே விடுக்கவில்லையே!
 
வாசன் கூட சொல்லி பார்த்து விட்டான் “எத்தனை நாட்களுக்கு அவனை ஒதுக்கி வைக்க போறீங்க?”
 
“வேண்டாம் வாசா… அவன் வாழ்க்கையை அவன் பாத்துக்கட்டும் அப்பவாச்சும் அவனுக்கு புத்தி வருதான்னு பார்க்கலாம். உறவுகளோடு அருமையும் புரிஞ்சி மன்னிப்பு கேட்கட்டும். அதுவரைக்கும் விலகி இருக்கிறது நமக்கு நல்லது” என்று விட்டார் ராமநாதன்.  
 
ஸ்ரீவத்சனுக்கு அழைப்பிடுத்து ராமநாதனே! பேசி இருந்தார்.
 
“அண்ணன் கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு நீயும் கல்யாணம் பண்ணிக்க ஸ்ரீராமே! கல்யாணம் பண்ணி குழந்தைக்கு அப்பாவாகிட்டான்” என்று இவர் ஒரு அர்த்தத்தில் சொல்ல
 
“அவனுக்கு அவசரம் என்றால் நான் என்ன செய்ய? எதற்கு என் தலையை உருட்டிறீங்க?” என்று அவன் இவரை திட்டி விட்டு அலைபேசியை அனைத்திருந்தான்.  
 
கல்யாணமன்று வாசனின் முகத்தைக் கண்டு “மாமா சரியான சிடுமூஞ்சி, முசடா இருப்பார் போல, எதுக்கும் பார்த்து பேசு அடிச்சிட போறாரு” வாசுகியின் இளைய தங்கை மந்த்ரா அவளை கிண்டல் செய்ய புன்னகையை பதிலாக கொடுத்த வாசுகி எதுவும் பேசவில்லை.
 
‘மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்’
 
{மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் ஆரம்பிக்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக என் சுகதுக்கங்களில் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக}
 
 
என ஐயர் மந்திரம் கூறி மாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, அந்த மந்திரத்தின் அர்த்தம் தெரிந்துதான் எல்லாரும் திருமணம் செய்கிறார்களா? தாலியை கையில் வாங்கிய வாசன் வாசுகியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதியாக்கி இருந்தான்.  
 
முதல் முடிச்சு கணவனுக்கு கட்டுப்பட்டவள்
இரண்டாம் முடிச்சு வீட்டுக்கு கட்டப்பட்டவள்
மூன்றாம் முடிச்சு கடவுளுக்கு கட்டுப்பட்டவள்
இது எத்தனை பேருக்கு தெரியும்?
 
வாசன் தன் கையை வாசுகியின் தலையை சுற்றிக்கொண்டு சென்று வகிட்டில் குங்குமத்திலகமிட்டான். மகாலக்ஷ்மி வாசம் செய்யும் இடத்தில் குங்குமத்திலக்கமிடுவது மணமகள் மணமகனுக்கு உரியவள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. 
 
இவ்வாறு ஒவ்வொரு சடங்கும் அழகா இனிதே நிறைவேற்றப்பட்டிதான் அவர்களின் திருமணம் எந்த குறைவில்லாமல் நடந்தேறியது.
 
அடுத்து அவர்களின் முதலிரவு வாசுகிக்கு அது எப்படிப்பட்ட இரவாக இருந்திருக்குமோ! வாசனுக்கு அது ஒவ்வொரு நொடியையும் சந்தோசத்தை மட்டும் கொடுத்த இரவு.
 
வாசுகி அறைக்குள் காலடி எடுத்து வைத்தது முதல் அவளை அணுவணுவாக ரசித்துப் பார்த்திருந்தவன் அவளை நெருங்கி இதழோடு இதழ் பொருத்தி இருந்தான்.
 
தனது இத்தனை வருட தவத்தை அவளிடம் களைத்தான் என்று சொல்வதா? மனதில் இருந்த ரணத்துக்கு ஆறுதல் தேடினான் என்று கூறுவதா? அல்லது தனது ஆற்றாமைகள், கவலைகள், குழப்பங்கள் அனைத்துக்கும் விடையாக அவளிடம் இளைப்பாறினான் என்று கூறுவதா? அல்லது மொத்தமாக அவளிடம் தஞ்சமடைந்தான் என்று கூறுவதா?
 
அன்று முதல் இது இன்றுவரை கணவனானவை தாங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். அவள் ஆசாபாசங்களை அடக்கிக் கொண்டு, அவன் நிலைமையை உணர்த்தவளாக, அவனை புரிந்துக் கொண்டு நடந்துகொள்கிறாள். அவன் தேவைகளை பூர்த்தி செய்கிறாள். ஆனால் அவனுக்கு அவளை புரிந்துகொள்ளும் எண்ணம் இல்லை. நம்பிக்கை இல்லை என்ற எண்ணமே! வாசுகியின் நெஞ்சம் முழுவதும் கோபமாக பரவிக் எரிமலையாக கணவனிடம் வெடிக்கக் காத்துக் கிடக்கின்றாள்.
 
வாசன் வளமை போல் கடையிலிருந்து வீட்டுக்கு வர வாசுகி அவர்களின் அறையில் இல்லை.

Advertisement