Advertisement

அத்தியாயம் 12

 
வாசுகி வீடு வந்து பத்து நாட்களாகி இருந்தன. வாசன் கடைக்கு கூட செல்லவில்லை. அவள் அருகிலையே! இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான். வீடு வரும் பொழுது டாக்டரிடம் கேட்டு எந்த மாதிரியான உணவுகள் கொடுக்க வேண்டும், என்பதை அறிந்துக் கொண்டவன் அவற்றை தன் கையாலையே! சமைத்து ஊட்டலானான்.
 
கல்யாணமாகி இந்த ஆறு மாத்தில் அவளுக்காக டீ கூட போடாதவன், முதல் முதலாக சமைத்து ஊட்டியும் விட்டது கர்ப்பமாக இருப்பதனால்தான் என்று வாசுகி பேசியதை பொய்யாக்கி,  கரு கலைந்ததை பற்றி ஒரு வார்த்தைக் கூட கேட்காமல், அவளை வசை பாடாமல் அவளுக்காக மட்டும் சமைத்து, கடைக்கும் செல்லாமல் மூணு வேலையும் ஊட்டியும் விடுகிறான். கண்ணீர் சிந்தும் அவள் கண்களை துடைத்து விட்டவாறு இன் முகமாக அவளிடம் ஆறுதல் வார்த்தைகள் பேசிக்கொண்டே! அவனுக்கு வலிக்கவே! இல்லை என்று நடித்துக்கொண்டு இருக்கின்றான். 
 
மாதாந்த ருது வந்தாளையே! பெண்களை எந்த வேலையும் செய்யாமல் அந்த மூன்று நாட்களும் ஓய்வெடுக்கும்படிதான் மதங்களும், மருத்துவமும் அறிவுத்துகிறது. ஆனாலும் இப்போதைய காலகட்டத்தில் லைப் இஸ் எ ரேஸ் என்ற கோட்பாட்டில் அனைவரும் ஓடிக்கொண்டிருக்க ஓய்வென்பதெல்லாம் சிந்தித்து பார்க்கவும் நேரமில்லை.
 
அதற்கே அப்படியென்றால், கருச்சிதைவு, பிள்ளை பேறு போன்றவற்றுக்கு பெண்களை எவ்வாறெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கும். வாசுகியை எந்த வேலையையும் பார்க்க விடாமல் ஓய்வெடுக்க வைத்திருந்தான் வாசன்.
 
என்ன மாதிரியான அன்பு? கோபத்தில் அடித்து விட்டான் என்று என்னவெல்லாம் பேசி விட்டேன். மனதுக்குள் மறுக்கிக் கொண்டிருந்தாள் வாசுகி.    
 
மருத்துவமனையில் இருக்கும் பொழுது ராஜம், மந்த்ரா, நாதன், நாதனின் சகோதரிகள் மற்றும் அவர்களின் வீட்டு ஆண்கள் என்று அனைவரும் வந்து வாசுகியை பார்த்து விட்டுத்தான் சென்றனர். சந்திரா தன்னால்தான் இப்படியானது என்ற குற்ற உணர்ச்சியில் வாசுகியின் முகம் பார்க்க மறுத்து வீட்டுலையே! அடைந்து கிடந்தாள்.
 
வாசுகியை இரத்த வெள்ளத்தில் பார்த்ததும் பாய்ந்து வந்த நாதன் பூர்ணாவை கன்னம் கன்னமாக அறைந்திருந்தார். பூர்ணாவை நாதன் அடித்ததில் முகம் வீங்கிப் போய் இருக்க அவளால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. போதாதற்கு ராஜம் வேறு திட்டி விட அறையை விட்டு வெளியே வராமல் அவளும் அடைந்து கிடக்க மந்த்ராவும் ராஜமும்தான் வந்து போயினர்.
 
வாசன் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருந்தாலும் என்ன? ஏது? என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. எங்கே! சந்திராவும், சித்தியும் வாசுகியை பார்க்க வராமல் இருப்பதை தவறாக நினைத்து விடுவானு என்றெண்ணணி மந்த்ரா வழிய வந்து அவனிடம் வீட்டில் நடப்பதை கூறிச் சென்றாள்.    
 
பணம் கட்ட சென்றால் வாசுகியை அனுமதித்த அன்றுதான் அந்த தனியார் மருத்துவமனை உரிமையாளரின் பிறந்தநாளாம். அன்று அனுமதித்தவர்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கும்படி அவர் உத்தரவாம் என்று கூற, வினோதமாக இருந்தாலும் மூன்று நாட்கள் அறை வாடகை, மருந்து மாத்திரை, ஆபரேஷன் மற்றும் மருத்துவருக்கு என்று எத்தனை ஆயிரம் ரூபாய்களை வருமோ! அன்று எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்? கட்டுப்படியாகுமா? என்று சிந்தித்தவாறே! வாசுகியை அழைத்து வந்தவன் அறியவில்லை அவளுக்கான பணத்தை வேறொருவன் கட்டிவிட்டான் என்பதை.
 
ராஜம் வாசுகியை ஊருக்கு அழைத்து செல்லலாம் என்று கூற நாதன் பதட்டமாக வாசனை நோக்க, அவனோ! அவர் கூறியது காதிலையே!! விழாதவாறு ராமநாதனிடம் “வண்டி வந்தாச்சா? சாமான் எல்லாம் எடுத்துக்கோங்க, நாம நம்ம வீட்டுக்கு போலாம்” என்றவன் அவர்கள் அங்கு இருப்பதையும் பொருட்படுத்தாது வாசுகியை அழைத்துக்கொண்டு செல்ல வாசுகிக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. ராஜத்துக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.
 
நாதன் தான் “மாப்பிள்ளை அவர் கூடயே! கூட்டிட்டு போகட்டும் நாம அப்பப்போ போய் பார்த்துக்கலாம்” என்று விட, ராஜத்துக்கு வீட்டில் நடந்த களோபரம் தெரியுமானதால் அவரும் அமைதியாகி விட்டார்.
 
கை கட்டு பிரித்தாளும் கையை மடக்க முடியாததால் வாசனே! மூணு வேலையும் வாசுகிக்கு உணவூட்டலானான். 
 
“பிசைஞ்சி ஸ்பூன் போட்டு கொடுங்க” என்று இவள் சொல்ல
 
“என் பொண்டாட்டிக்கிதான் டி நான் ஊட்டுறேன். பேசாம சாப்பிடு” என்று குழந்தையை கவனிப்பது போல் வாயையும் துடைத்து தண்ணீரும் புகட்டி விட
 
இடது கையால் தன்னால் செய்துகொள்ள முடியும் என்ற போதிலும் கணவனின் கவனிப்பில் மெய்சிலிர்த்தவள் காதலாக வாசனை பார்த்து வைத்து கன்னத்தில் முத்தமும் கொடுக்க, அவன் செய்கைகள் ஒவ்வொன்றுக்கும் முத்தம் பரிசாக மாற ஆரம்பித்திருந்தது. அதை ரசித்த வாசனும் புன்னகைத்தவாறே! வாசுகியின் நெற்றியில் முட்டி விட்டு சென்று விடுவான்.  
 
இந்த பத்து நாட்களில் நாதன் மூன்று தடவையும், மந்த்ராவும், ராஜமும் நான்கு தடவையும் வந்து பார்த்து விட்டுத்தான் சென்றனர். வந்தவர்களிடம் வாசன் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ள வில்லை. அவர்கள் இருக்கும் நேரத்தில் வாசுகியிடம் சொல்லிக்கொண்டு வெளியே செல்பவன் அவர்கள் சென்ற பின்தான் வீட்டுக்கு வந்தான்.
 
“யார் கண்ணு பட்டதுன்னு தெரியலையே! வாசுகிமா.. இப்படி ஆகிருச்சே!” ராஜம் புலம்ப
 
 “ஆமாக்கா.. முதல்ல உனக்கு சுத்தி போடணும்” மந்த்ரா சொல்ல
 
“எனக்கு மட்டுமல்ல அவருக்கும் சேர்த்துதான் சுத்தி போடணும்” என்றாள் வாசுகி.
 
“அக்கா வீட்டுல நடந்தத மாமா கிட்ட சொன்னேன். எதுவுமே! சொல்லல, எங்களை திட்டவுமில்லை. உன்ன திட்டினாரா?” வாசன் தனக்கு ஒரு கேள்விக்குறி என்றே! மந்த்ரா கேக்க
 
“இல்ல” என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் அவலறியாமையே! உருண்டு விழ,
 
“மாமா நம்ம மேல ரொம்ப கோபமா இருக்காரு. பாப்பா இல்ல எங்குறது ரொம்ப கஷ்டம் தான் இல்ல” விரக்தியான குரலில் மந்த்ரா சொன்னாள்.
 
“குழந்தை இல்லாம போனதுக்கு காரணம் நீதான்னு தெரிஞ்சும் உன்ன ஒதுக்காம கூட்டிட்டு வந்து பாத்துக்கிறாரு. அவருக்கு கோபம் எங்க மேல. உன் மேல இல்ல” ராஜம் சொல்ல
 
“ஆமாக்கா அன்னைக்கி ஆபரேஷன் பண்ண பிறகு உன்ன பாத்துட்டு, இவள கூட்டிட்டு போனது நல்லா பாத்துக்கிறேன்னு சொல்லித்தானே! சாப்பாடு கூட போடலையா? கொல்லவா கூட்டிட்டு  போனீங்கன்னு அப்பாவ பாத்து கேட்டாரு. அப்போ அவர் முகத்தை பாக்கணுமே! அப்பப்பப்பா என்ன கோபம். உன் கிட்டாதான் அமைதியா பேசுறாரு” அன்று நடந்தவைகள் அவளின் கண்களுக்கு காட்ச்சியாக ஓட மிரண்டவளாகத்தான் சொல்லி முடித்தாள் தங்கை.
 
“சரி உடம்ப பாத்துக்க நாங்க கிளம்புறோம். நாங்க இருக்கும்வரை உன் வீட்டுக்காரர் வீட்டுக்கு வர மாட்டாரு” என்று ராஜம் சொல்ல
 
“மன்னிச்சிடுங்க ஆச்சி. கோபத்துல உங்கள ஏதாச்சும் சொல்லிடுவாருனு நெனச்சிதான் அவரு வராம இருக்காரு” வாசுகியின் கண்களில் நீர் நிறைந்தது.
 
அவர்கள் வந்த முதல் இரண்டு நாட்களும் காலை வந்து மாலை வரை இருந்து விட்டுத்தான் சென்றார்கள் அதுவரை வாசன் வீட்டுக்கு வரவில்லை. வெளியே சென்றவன் வாசுகிக்கி அழைத்திருக்க அந்த நேரத்தில் அலைபேசியை எடுத்தது மந்த்ரா என்று அறியாமல் வந்தவர்கள் இன்னும் செல்லவில்லையா? சென்ற பின் தனக்கு தெரிவிக்குமாறு கூறி அலைபேசியை அனைத்திருந்தான். மந்த்ராவுக்கு ஏதோபோல் ஆக போகும் வழியில்லையே! ராஜத்திடம் கூறி விட்டாள். 
 
மூன்றாவது தடவை வந்த போது ராஜமும் கவனித்துப் பார்க்க, அவர்கள் இருக்கும்வரை அவன் வரவில்லை. என்றதும் வாசுகியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி விட்டார்.
 
“நாம ஒன்னு நினச்சா இங்க வேற மாதிரியில்ல இருக்கு” மந்த்ரா தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.
 
ராஜத்துக்கும் வாசனின் கோபமும், வேதனையும் புரியாமலில்லை. எப்படி ஆறுதல் சொல்வதென்றுதான் தெரியவில்லை. காலம்தான் எல்லாவற்றுக்கும் மருந்து என்று அறிந்த அந்த பெரிய மனிசி “நீ சந்தோசமா, நிம்மதியா இருந்தா போதும் வாசுமா…” என்று அவர் கொண்டு வந்த உணவை அவளுக்கு கொடுத்து விட்டு மந்த்ராவை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டார்.
 
வாசுகி கணவனை அழைத்து அவர்கள் ஊர் திரும்பிய செய்தியை கூறிய பின்தான் வீட்டுக்கு வந்தான் வாசன். 
 
சத்யாவும் அழைத்து பேசி இருக்க, நித்யாவும் வாசனை அழைத்து என்ன நடந்தது எனக் கேட்டு, அவள் வாழ்வில் நடந்தவைகளையும் நியாபகப் படுத்தி சீக்கிரம் குழந்தை பிறக்கும் கவலை படாதே! என்று ஆறுதல் கூற, அந்த தருணத்திலும் ஆத்மநாதனை பற்றி விசாரித்தவன்  வாசுகியை அழைத்து அடிக்கடி பேசுமாறு வாசன் கேட்டுக்கொள்ள அவளும் காலை மாலை என வாசுகியிடம் பேசலானாள்.
 
வாசனின் கவனிப்பில் இந்த பத்து நாட்களில் நன்றாகவே! உடம்பு தேறி இருந்தாள் வாசுகி. மனம்தான் சோர்வடைந்திருந்தது. நித்யா தான் “கவலை படாதீங்க அண்ணி கரு கலைஞ்சி கருப்பைய கிளீன் பண்ணினா சீக்கிரம் குழந்தை தங்கிடும். அடுத்த மாசமே! நல்ல செய்தி சொல்ல போறீங்க”
 
“நிஜமாகவே! முடியுமா?” ஆர்வமாக வாசுகி கேக்க
 
“அதுக்கு நல்லா சாப்பிட்டு தெம்பாக இருக்கணும்” என்றவள் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் வாசன் அவளுக்கு துணையாக இருந்ததையும் விலாவரியாக கூற கணவனை நினைத்து பெருமிதம் கொண்டாள்.  
 
அன்றுதான் காலை தான் மருத்துவமனைக்கு சென்று தலை காயத்தின் தையலை பிரித்து விட்டு வந்திருந்தனர். கையாயம் ஆறி இருந்தாலும் தழும்பும், வலியும் இன்னும் முற்றாக நீங்க வில்லை. என்னதான் எல்லாம் சரியாக இருப்பதாக இருவரும் காட்டிக்கொண்டாலும் வாசன் வாசுகிக்கிடையில் பழைய சிரிப்போ! கிண்டல் பேச்சோ! இல்லை. ஒரு வித இறுக்கமான மனநிலையில்தான் இருவருமே! இருந்தனர்.
 
தலையில் கட்டு இருக்கும் வரையில் தலையில் எதோ ஒரு பாரத்தை தூக்கி சுமப்பது போலவே! இருக்க வாசுகியால் எதையும் சிந்திக்க முடியாமல் இருந்ததோ! என்னவோ! மருத்துவமனையிலிருந்து வீடு வரும்வரை கணவனைத்தான் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு வந்தாள்.
 
அவளிடம் மட்டும்தான் இணக்கமான பேச்சுக்கள். ராமநாதனிடம் கூட அளந்துதான் பேசினான். சிரிப்பு மருந்துக்கும் இல்லை. இழுத்து வைத்த புன்னகை மட்டும் உதடுகளில் அவளை பார்த்தால் மலரும். குழந்தை மீது எவ்வளவு ஆசை வைத்திருப்பான். அந்த வேதனையை மறைத்துக்கொண்டு அவளுக்காக அத்தனை வேலைகளையும் பார்க்கின்றான். இதுவே! வேறு யாராவதாக இருந்தால் அவள் மீதும் அவள் குடும்பத்தார் மீது கோபத்தை மட்டும்தான் காட்டி இருப்பான். இத்தனைக்கும் வாசன் பொறுமைசாலியல்லவே! சட்டென்று கோபப்படக் கூடியவன். இந்த விஷயத்தில் இவ்வளவு நிதானத்தை கடைபிடிக்க பக்குவப்பட்ட மனிதனால் மட்டும்தான் முடியும்.
 
வீடு வந்தவன் அவளை வீட்டில் விட்டு கடைக்கு போவதாக கூற “சரிங்க மதியம் நான் கடைக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றவள் புன்னகைக்க, இவள் தான் பேசினாளா? எனும் விதமாக புருவம் உயர்த்தி பார்த்தான் வாசன்.
 
இந்த பத்து நாட்களில் ஒரு மூன்று நாட்களாக கண்ணீர் வடித்தவள்தான், நித்யாவோடு பேச ஆரம்பித்த பின் கொஞ்சம் தெளிந்திருந்தாள். வாசன் ஆயிரம் வார்த்தைகள் பேசினால் வாசுகி ஓரிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்வாள். அப்படி இருந்தவள் திடீர் மாற்றம் அவனுக்கு ஆனந்த அதிர்ச்சிதான்.
 
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ ரெஸ்ட் எடு. இன்னைக்கி ஒரு நாள் மட்டும் தனம் பாட்டி மெஸ்ஸுல வாங்கிக்கலாம்” வாசனும் பட்டென்று சொல்ல
 
“ஐயே…” என்று அவன் முகவாயில் இடித்தவள் வாசன் ஆச்சரியமாக பார்க்கும் பொழுதே! “ஆளப்பாரு ரெஸ்ட் எடு ரெஸ்ட் எடுன்னு என்ன சோம்பேறியாக்கிடலாம்னு பாக்குறீங்களா? அதெல்லாம் முடியாது. அதான் டாக்டர் இப்போ நான் நல்லா இருக்கேன். எல்லா வேலையும் பாக்கலாம்னு சொல்லிட்டாரே! உங்களால என்ன தடுக்க முடியாது. போங்க போய் கடைல ஏதாச்சும் வேல இருந்தா பாருங்க. பொண்டாட்டிய கவனிக்கிறேன்னு வீட்டுலயே! இருக்கலாம்னு ஐடியா பண்ணுறீங்களா? உத்தியோகம்தான் புருஷ லட்சணம். போங்க போங்க எனக்கு வேல இருக்கு” மிரட்டலாகவே! சொல்ல
 
“என்னடா இது? எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன் என்பது போல் வாசுகியின் திடீர் மாற்றம் வாசனை யோசிக்க தூண்டினாலும் அவன் முகத்திலிருந்த இறுக்கம் மறைந்து பெரிதாக புன்னகை மலர்ந்தது. 
 
“சரி உன் இஷ்டப்படி என்னவேனாலும் சமைச்சிடு. ஆனா கடைக்கெல்லாம் எடுத்துட்டு வரேன்னு அலையாத, அப்பா கிட்ட குடுத்தனுப்பு. அவர் வீட்டுல சும்மாதானே! இருக்காரு. இப்போ எங்க போய் இருக்காரோ! வர வர ரொம்ப ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டாரு” சட்டை காலரை இழுத்து விட்டவாறே சொல்ல
 
“அவரே உடம்பு முடியாம இருக்காரு, அவரை போய் வேல வாங்கி கிட்டு. ஏன் நீங்க வந்து சாப்பிட்டுட்டு போக மாட்டீங்களா?” அவன் சட்டை பட்டனை திருக்கியவாறே! அவனை ஏறிட்டு பார்க்க,
 
அந்த பார்வை அவனை அவளுள் இழுத்து செல்ல “இன்னைக்கி ஒரு மார்கமாதாண்டி இருக்க, ஏன்னா கண்ணு டி… அப்படியே! மாமனை முழுங்குற மாதிரியே! பாக்குற” வாசுகி நெருங்கி வந்ததில் இணக்கமானவன் அவள் இடையோடு கைகோர்த்து தண்ணனோடு சேர்த்து அணைத்துக்கொள்ள
 
அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டவள் “ரொம்ப நன்றிங்க என் வாழ்க்கைல நீங்க வர நான் என்ன புண்ணியம் பண்ணி இருக்கேன்னு தெரியல. உண்மையில்லையே! நான் ரொம்ப கொடுத்து வஞ்சவங்க. எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க கணவன் மனைவிக்கி நம்பிக்கையும், புரிதலும் இருந்தா அவங்க வாழ்க சந்தோசமா இருக்கும்னு. நீங்க உங்க மாமா விஷயத்துக்காக என்ன அடிச்சப்போ நீங்க என்ன புரிஞ்சிக்கல உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லனு நெனச்சி கிட்டு இருந்தேன். அப்படி இல்லனு புரியவைக்கத்தான் கடவுள் எங்க பாப்பாவை எடுத்துகிட்டான் போல. நான் எவ்வளவு மன வேதனைல இருக்கேன்னு நீங்க புரிஞ்சிக்கிட்டதாலதான் என் கூடவே! இருந்தீங்க, என் மேல இருந்த நம்பிக்கையாளத்தான் என்கிட்ட இது வரைக்கும் வீட்டுல என்ன நடந்தது? என் என் கிட்ட சொல்லலைனு ஒரு வார்த்த கேக்கல. நான் ரொம்ப அதிஷ்டசாலிங்க. நீங்க எனக்கு கிடைச்சது வரம்” குரல் கமர பேசிக்கொண்டு போனவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவன்.  
 
“நம்ம பாப்பா இன்னைக்கி இல்லனா அதுக்கு நீயோ, உன் வீட்டாளுங்களோ! காரணம் இல்ல வாசு, நான்தான் காரணம் நான் மட்டும்தான் காரணம். அன்னைக்கி சத்யா போன் பண்ணி என் கிட்ட மாமா விஷயமா பேசினப்போ! வீட்டுக்கு வந்து பொறுமையா உன் கிட்ட விசயத்த சொல்லி இருந்தா நீயும் அவ போன் பண்ணலன்னு சொல்லி இருப்ப. நான் உன் மேல கோபத்தை காட்ட போய். நீயும் கோபத்தை இழுத்து பிடிச்சுக்கிட்டே இருந்த அது உன் மனஅழுத்தத்துக்கு காரணமா இருந்துருக்கு. என்னதான் நீ உன் வீட்டுக்கு போகணும்னு அடம் பிடிச்சிருந்தாலும் நான் உன்ன அனுப்பி இருக்கக் கூடாது. என்னாலதான் நம்ம பாப்பா” என்றவன் மேலே பேச முடியாமல் மெளனமாக வாசுகி அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.
 
வெளியே சென்று வரும் கணவன் எந்த மாதிரியான சூழ்நிலைக்கு முகம் கொடுத்து எந்த மாதிரியான மனநிலையில் வீட்டுக்கு வருகிறான் என்று எண்ணாமல் பூர்ணா பேசியதன் தாக்கத்தை அவன் மீது எரிச்சலாக கொட்டி அறைவாங்கியது தன் தவறு.  தவறு அவள் மேல்தான் என்று தெரிந்தும் தன் மேல்தான் தவறு என்று கூறுபவனை எவ்வாறு சமாதானப்ப படுத்துவது என்ற வழி தெரியாமல் அவனை இறுக அணைத்திருந்தாள். வாசுகி.
 
“நீ மனச போட்டு குழப்பிக்காத வாசு. எல்லாம் நல்லபடியாகவே! நடக்கும்”
 
“இல்லைங்க அன்னைக்கி சித்தி போன் பண்ணி கண்டபடி பேசிட்டாங்க நான் ரொம்ப கோவத்துல இருந்தேன். அந்த நேரம் நீங்க வேற இத கேட்டதும் உங்க மேல எறிஞ்சி விழுந்துட்டேன்”
 
“என்ன இருந்தாலும் நான் உன்ன அடிச்சிருக்க கூடாதில்ல” வாசன் வருத்தமாக சொல்ல
 
“அதான் நான் உங்கள திருப்பி அடிச்சிட்டேனே!” அவன் முகம் பார்த்து தீர்க்கமாக வாசுகி சொல்ல வாசனின் முகத்தில் மீண்டும் ஒரு கீற்று புன்னகை.
 
“ஆமா ஆமா உன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்” அன்றைய நாளின் நினைவில் புன்னகை மாறாது அவன் சொல்ல
 
“அது கோபத்துல…” வாசுகி தடுமாற,
 
“ஆகா மொத்தத்துல எங்க ரெண்டு பேருக்குமே! கோபம் கட்டுக்கடங்காமா வருதுன்னு மட்டும் தெரியுது. சரி உன் வீட்டுல என்ன பிரச்சினை? உனக்கும் உன் சித்திக்கும் என்ன பிரச்சினை?”
 
“உங்களுக்கு கடைக்கு நேரமாகல?” என்றவள் அவனை விட்டு விலகி நிற்க
 
“ஆகல” இவனும் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நீ சொல்லித்தான் ஆகா வேண்டும் எனும் விதமாக நின்றிருந்தான்.
  
“இல்லங்க அது வந்து” வாசுகி சொல்லவா? வேண்டாமா? என்று தடுமாற
 
“இங்க பாரு வாசு உன் சித்தி உன் அம்மாவோடு கூடப் பொறந்த தங்க, உனக்காகத்தான் அவங்க உன் அப்பாவை கல்யாணம் பண்ணகிட்டதாக தான் எனக்குத் தெரியும். உன்ன அவங்க நல்லா பாத்துக்கிறாங்கன்னுதான் நான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா அது அப்படி இல்லனு புரியுது. அவங்கள பத்தி குறை சொல்லுறோமோ!னு உனக்கு தோணுறதுனா நீ சொல்லாம இருக்குறது உன் விருப்பம். ஆனா நான் உங்க வீட்டு மாப்புள, இப்போ அங்க ஒரு பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு. அது என்னனு தெரிஞ்சாதான் என்னால என்ன உதவி செய்ய முடியும் எங்குறத பத்தி நான் யோசிக்க முடியும். மந்த்ரா ஏதேதோ சொன்னா, அப்போ நீ இருந்த நிலமைல அதெல்லாம் பத்தி என்னால சிந்திக்க முடியல. சம்பந்தமே! இல்லாத மூணாவது மனிசி வந்து என்கிட்ட சொல்லுறதுக்கும் நீ சொல்லுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. புரியும்னு நினைக்கிறேன்” என்றவன் மறைமுகமாக சொன்னது உன் ஊரில்தான் பத்மா அத்த
இருக்கிறாள். அவள் காதுக்கு விஷயம் போனால் சுற்றி வளைத்து நித்யா மூலம் விஷயம் என் காதுக்கு வந்து சேரும்  என்பதே!   
 
 திடுக்கிட்டவள் கணவன் சொன்னதன் அர்த்தம் புரிய, புரிந்து கொண்டதன் விளைவாக தலையையும் ஆட்டுவித்து “அம்மா அவங்க காலேஜ் படிக்கும் பொழுது யாரையோ! காதலிச்சு, அத வீட்டுல சொல்ல முடியாம வீட்டுல அப்பாவை பார்த்து கட்டி வச்சிட்டாங்க, அன்னைக்கி எனக்கு ஜுரம் வந்ததுன்னு கோவிலுக்கு போறேன்னு சொன்னவங்க அப்படியே அவங்க காதலிச்சவரோட போய்ட்டாங்க. போனவங்க என்னையும் கூட்டிட்டு போய் இருந்திருக்கணும்” வாசுகியின் கண்களில் நீர் பெறுக அவள் கண்களை துடைத்து விட்டவன்
 
“இதுக்கு நான் அப்பொறம் பதில் சொல்லுறேன்” மொதல்ல உக்காரு, கால் வலிக்குது” என்றவாறே கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் ரகுவை அழைத்து கடைக்கு வர தாமதமாகும் என்று கூற
 
“வர வர நல்லாவே! ஐஸ் அடிக்கிறீங்க, அண்ணிய பாத்துக்கிறேன்னு வீட்டுல ஒரே ரொமேன்ஸ் தான் போல” அவனும் கிண்டல் செய்ய
 
“பாத்தியா டவுசர் போட்ட பயலுங்க எல்லாம் கிண்டல் பண்ணுறானுங்க, சீக்கிரம் சொல்லு” என்று வாசன் சொல்ல 
 
ரகு பேசியது வாசுகியின் காதில் விழுந்ததால் அவளுக்கும் சிரிப்பு வந்தது.
 
“சித்திய பாட்டி கட்டாயப்படுத்திதான் அப்பாக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க போல அவங்க அப்பாவை கல்யாணம் பண்ணும் போது எனக்கு நாலு அல்லது அஞ்சு மாசம்தான். அவங்க நெனச்சி இருந்தா அவங்கள அம்மானே! கூப்பிட சொல்லி கொடுத்திருக்கலாம். அவங்கதான் சித்தின்னு கூப்பிட சொல்லி கொடுத்தாங்க, நினைவு தெரிஞ்ச நாள் இருந்து அம்மாவையும் கரிச்சி கொட்டுவாங்க, என்னையும் திட்டிகிட்டே இருப்பாங்க” விரக்தியான குரல்தான்
 
“நமக்கு அம்மாவே! இல்ல இவளுக்கு இருந்தும் இல்லாத நிலைதான்” என்றெண்ணியவன் அவளை ஆறுதல் படுத்த எண்ணவில்லை. அவள் பேச்சில் குறுக்கிடாமல் அவள் சொல்வதை பார்த்திருந்தான் வாசன்.
 
அபர்ணாவின் காதலால் பூர்ணாவின் வாழ்க்கையில் நடந்த மாற்றமும், பாதிப்புகளும் அதனால் வாசுகியின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் அவள் கூற, இத்தனை கஷ்டங்களையும் மனதில் போட்டுக்கொண்டு இத்தனை நாளும் இவள் பொறுமையாக இருந்ததே! பெரிய விஷயம் என்று எண்ணியவன் வாசுகியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு
 
“இத்தனை கஷ்டங்களை அனுபவிச்சிருக்க, வீட்டுல அப்பா, தங்கச்சின்னு மூணு பேர், பக்கத்து வீட்டுல அத்தைங்க, பெரியப்பா குடும்பம்னு ஒரு கூட்டமே! இருந்தும் யாருக்குமே! தெரியலையா?” கொஞ்சம் கோபம் எட்டிப்பார்க்க கேட்டான் வாசன்.
 
 வாசன் கேட்ட பிறகுதான் வாசுகியும் யோசனையாக அவன் முகத்தை பார்த்து “பொம்பள புள்ள எல்லா வீட்டு வேலையையும் கத்துக்கணும்னு சொல்லுவாங்க அதனால அத்தைங்க கேள்வி கேக்க மாட்டாங்க, வீட்டுல என்ன அடச்சீ வைக்கல இல்ல. எப்பவேணாலும், எந்த நேரத்துல வேணாலும் எங்க வேணாலும் போலாம், ஆனா எல்லா வேலையும் செஞ்சிட்டு போகலாம். அதனால யாருக்கும் பெரிசா சந்தேகம் வந்திருக்காது”
 
“நீயும் வீட்டுல இருக்குற அத்தனை வேலையையும் பார்த்துட்டு எந்த கேள்வியையும் கேக்காம அமைதியா இருந்திருக்க, எனக்கென்னமோ! அவங்களுக்கு உன்ன கல்யாணம் பண்ணி கொடுக்கவே! விருப்பம் இருந்திருக்காதுனு தோணுது, கடைசி வாய்க்கும் உன்ன அந்த வீட்டு வேலைக்காரியாகவே! வச்சிருக்கத்தான் பிளான் பண்ணி இருப்பாங்க, உன் தங்கச்சி பசங்களுக்கு ஆயாவா” வாசனின் குரலில் கடுமை இருந்தாலும் அதுதான் உண்மையும் கூட என்று அடித்துத் சொன்னான்.
 
பூர்ணா பேசியவைகள் நியாபகத்தில் வர “இருக்கலாம். எனக்கு கல்யாணம் நடக்காம தங்கச்சிகளுக்கு கல்யாணம் நடக்காதுனு சொன்னதால, அந்த ஐடியாவை விட்டு இருப்பாங்க, ஒருவேளை எனக்கு முப்பது வயசு ஆகி இருந்தா இவளுக்கு கல்யாணமே! ஆகாதுன்னு முடிவும் பண்ணி இருந்திருப்பாங்க” என்று சிரிக்க,
 
“ராஜாகாலத்து கதைகள்ல இளவரசன் வந்து இளவரசியை சூனியக்காரிகிட்ட இருந்து காப்பாத்துறது மாதிரி நான்தான் உன்ன காப்பாத்தி கூட்டிகிட்டு வந்தேன்னு சொல்லுற” வாசனும் சிரிக்க,
 
“இல்லையா பின்ன, மூணு வருசமா எங்க அப்பா எனக்கு மாப்புள தேடிகிட்டே இருந்தாரு. பக்கத்துல ஊருல நீங்க இருந்தும் உங்கள தேட மூணு வருஷமாக்கிருச்சு கண்டு பிடிக்க” அவளும் கிண்ட செய்ய ஆரம்பித்திருக்க,
 
“ஹாஹாஹா இருக்கும் இருக்கும் உனக்கு மூணு வருஷமா மாப்புள பாக்குறாங்க நான் கிட்டத்தட்ட ஒரு வருஷமாத்தான் பொண்ணு தேடினேன் எனக்கு உன்ன மட்டும்தான் பிடிச்சிருந்தது”
 
“என்ன மாமா லவ்வா? உன்ன பல வருஷத்துக்கு முன்னாடி கோவில்ல பாத்தேன். திருவிழால பாத்தேன் என் நெஞ்சுல உன் முகம் தன. எந்த பொண்ண பார்த்தாலும் உன் முகம் தான் நியாபகத்துல வருதுன்னு ஏதாவது கத சொல்ல போறீங்களா?” வாசுகி கேலியாக கேட்டாலும் ஆர்வமானாள்.
 
யோசனையாகவே! “இல்லையே! இந்த முகத்தை எங்கயும் பார்த்ததா எனக்கு நியாபகம் இல்ல” என்னு விட்டான் வாசன்.
  
“ஆனா நாம கண்டிப்பா சந்திச்சு இருக்க வாய்ப்பிருக்கு” என்ற வாசுகி சமயலறைக்குள் நுழைந்தாள்.

Advertisement