Advertisement

அத்தியாயம் 1

 
 
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
 
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
 
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
 
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
 
யார் வீட்டில் ரேடியோ! பாடிக்கொண்டிருந்ததோ! இந்த ஆறு மாதமாக இந்த வீட்டில் காலையில் நடைபெறும் பூஜை இன்று இல்லை. பூஜை செய்ய பெரிய பூஜையறை ஒன்றும் இந்த வீட்டில் இல்லையென்றாலும் வாசலில் ஒரு மேசையை போட்டு அதில் சுவாமி படங்களை வைத்து, மாலை சாத்தி, விளக்கேத்தி தினமும் பூஜை செய்து வருவாள் வாசுகி.
 
தூங்கும் மனைவியையே! கண்சிமிட்டாமல் பார்த்திருந்தான் வாசன். அவன் அடித்த அடியில் அவள் கன்னம் வேறு வீங்கிப் போய் இருக்க, கையை தலையணையாய் வைத்து அசந்து தூங்கிக் கொண்டிருப்பவளை எழுப்ப மனம் வரவில்லை. திருமணமாகி இந்த ஆறு மாதத்தில் மரியாதைக் குறைவாக எந்த பேச்சும் பேசியதில்லை. நடந்துகொண்டதுமில்லை. அப்படி இருக்க, ஏன் அப்படி கூறினாள்? அமைதியாக நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் தன்னையே! கோபத்துக்கு உள்ளாக்கும் அளவுக்கு இவள் பேசி இருக்கக் கூடாது.
 
“அங்கே நித்யாவின் வாழ்க்கை கேள்விக் குறியாகிக் கொண்டிருக்க, இவள் சத்யாவிடம் மெனக்கிட்டு போனை போட்டு இதை சொல்லியிருக்கக் கூடாது. இந்த பெண்களுக்கு அப்படி என்ன புறணி பேசுவதில் இன்பமோ! தெரியவில்லை”
 
ஒட்டுமொத்த பெண்களையும் சாடிக்கொண்டிருந்தவனின் மனசாட்ச்சியோ! “நீ பாத்தியா? உன் பொண்டாட்டி பக்கத்து வீட்டிலாவது நின்னு பேசுறத நீ பாத்தியா?” என்று அவனை வசை பாட
 
“நின்னு பேச என்ன இருக்கு அதான் வீட்டுக்கு
அழைத்து பேசட்டும் என்று கல்யாணமான கையோட கைல ஒரு போன வாங்கிக் கொடுத்தேனே! எனக்கிருக்கிறது! ரெண்டு தங்கச்சி அவங்க கூடயும் நல்ல விதமா பழகுமான்னுதானே! சொன்னேன். ஒருத்தியப்பத்தி இன்னொருத்திகிட்ட பேசி இருக்கா” பொருமினான் வாசன்.
 
“கல்யாணமான நாளிருந்து வாய்க்கு ருசியா சாப்பிட்டு பழகிருச்சு இன்னக்கி காபி கூட கிடைக்காது” ஒரு பெருமூச்சுவிட்டுக் கொண்டவன் கடைக்கு செல்ல நேரமாவதால் எழுந்து குளிக்க செல்ல அவன் சிந்தனைகளும் பின்னோக்கி பயணித்தது.
 
ஸ்ரீநிவாசன் இரண்டு தங்கைகள் இரண்டு தம்பிகளுடன் பிறந்த தமையன். அவனுக்கு அடுத்து நித்யகலா, அவளுக்கு ஆறு வருடங்கள் கழித்து சத்யகலா, அவளுக்கு இரண்டு வருடங்கள் கழித்து ஸ்ரீவத்சன் கடைக்குட்டி ஸ்ரீராம். ஸ்ரீநிவாசனுக்கும் ஸ்ரீராமுக்கும் பத்து வருடங்கள் வயது வித்தியாசம். 
 
ஸ்ரீராம் பிறந்த போது அன்னை கலாவதி பிரசவத்தில் இறந்து விட தந்தை ராமநாதன் முழுநேரக் குடிகாரரானார். அதற்காக குடித்து விட்டு பாதையில் விழுந்து கிடக்கும் ரகம் இல்லை. வீட்டிலையே! குடித்து விட்டு படுத்து விடுவார். கலாவதியின் அன்னை செல்லம்மாதான் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டு செலவுக்கும் கொடுக்காமல் மளிகைக் கடையிலிருந்து வரும் வருமானத்துக்கு சரக்கு பாட்டிலை வாங்கி வரும் மருமகனை எரிச்சலோடு பார்த்திருந்தவர் அவர் குடும்பத்தாரை அழைத்துப் பேச, அவர்களோ! இவரின் மறுமணத்தை பற்றி பேசினார்களே! தவிர ஐந்து குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி வாய் திறக்கவில்லை.
 
அவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்துக்கொண்ட அந்த மூதாட்டி மருமகன் குடித்தே அழித்து விடமுன் கடையை விற்று அந்த பணத்தை வங்கியில் போட்டு அதில் வரும் வட்டிப் பணத்தில் வீட்டுச் செலவை சமாளிக்கவும் மருமகனுக்கு குடிக்கவும் செலவழித்தவர் பாற்றா குறையை நிவர்த்தி செய்ய ஊறுகாய். வத்தல் இது போன்றவற்றை பாக்கட் செய்து விற்று வருவதோடு பேரன்களின் பாடசாலைக்கு அருகே! சிறிய ரோட்டுக் கடையொன்றையும் நிறுவி அவர்களோடு பாடசாலை சென்று அவர்களோடு வீடு வந்தாள். வாசனின் பதினைந்தாம் வயத்தில் முதுமையின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
 
பாட்டி இருக்கும்வரை பாட்டியின் இடுப்பில் இருந்த ஸ்ரீராம் பாடசாலை செல்ல ஆரம்பித்திருந்தான்.  நித்யாவும், வாசனும் ஒரு வருடங்களே! வயது வித்தியாசத்தில் இருந்தபடியால் இருவரும் அண்ணன் தங்கை போலல்லாது தோழர்கள் போல் வீட்டு நிலைமையை கலந்தாலோசித்து செயல் படுத்த ஆரம்பித்திருக்க,  தம்பியையும் தங்கையையும் அரவணைத்துக் கொண்டனர்.
 
வாசனும் நித்யாவும் பாடசாலையோடு தங்கள் படிப்பை நிறுத்திக்கொண்டு தம்பி தங்கைகளை படிக்க வைக்க முயன்றனர். நித்யா வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வாசன் மளிகைக் கடையொன்றில் வேலைக்கு சேர்ந்தான். தங்களது சொந்த மளிகைக் கடையில் தந்தையோடு நான்கு வயதிலிருந்தே! சென்று வருவதால் அவனுக்கு அங்கு நடப்பவை அத்துப்படி. அதை தவிர அவனுக்கு வேறு வேலையும் தெரியாது. 
 
படிப்படியாக முன்னேறி தனது இருபத்தி ஏழாவது வயதில்தான் சிறிதாக ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்து நடாத்தி வந்தவன் முப்பத்தி ஐந்தாம் வயதில் வாசுகியை கைப்பிடித்தான். அதுவரை வாழ்க்கையில் எந்த பிடித்தமும் இருக்கவில்லை. தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்றை யோசித்தும் பார்த்திருக்கவில்லை. தனக்காக ஒருத்தி வருவாள் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எனோ தானோ என்று இருந்தவன் தன் சூழ்நிலையின் காரணமாக திருமணம் செய்தே! ஆகவேண்டும் என்று பார்க்காத பெண்ணே! இல்லை. ஏனோ அவனுக்கு யாரையும் பிடிக்கவில்லை.
 
பார்த்த நொடி பிடித்த வாசுகி ஒருத்தி மட்டும்தான். உடனே! சம்மதம் சொல்லியவன் திருமணத்தையும் விரைவில் செய்துகொண்டான்.  அவளோடு அந்நியோன்யமான வாழ்க்கையை வாழ வேண்டும், குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற வாசனின் எண்ணம் சிந்தனை எல்லாம் கடையை விரிவாக்குவதிலில் இருந்தது.
 
வாசன் குளித்துவிட்டு உள்ளே வர வாசுகி எழுந்து கடமை தவறாத மனைவியாக அவனுக்கு தோசை வார்த்துக்கொண்டிருந்தாள்.
 
அவர்கள் இருப்பதோ வாடகை வீட்டில். ஓட்டு வீடுதான். தாழ்வாரத்தோடு இரண்டு படுக்கையறை, சமையலறை. குளியலறை, கழிவறை வெளிப்புறத்தில். முன்னாடியும் பின்னாடியும் சிறிய முற்றம். சுற்றியும் முள்வேலி போடப்பட்டுள்ளதால் யாரும் வர மாட்டார்கள். அக்கம்பக்கத்தில் இதேபோன்ற வீடுகள் வாடகைக்காகவே! கட்டப்பட்டிருக்க, வாடகையும் மிகக்குறைவு. தண்ணீர் பஞ்சம் கிடையாது குழாய் கிணறு {நிலத்தடி நீர்} மூலம் மோட்டார் போடப்பட்டு நீர் வந்துகொண்டு இருக்க, வாசனால் வேறு இடம் யோசிக்க தோன்றவில்லை.
 
“நாம குளிக்க போகும் போது தூங்கிகிட்டு தானே! இருந்தா? எப்போ எந்திரிச்சா?” வாசுகியின் முகம் பார்த்து யோசிக்க அவள் கணவனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவள் கடமை கணவனின் வயிறு வாடாமல் கடைக்கு வழியனுப்பி வைப்பது. அதில் மும்முரமாக ஈடுபடலானாள்.
 
இரவே! சாம்பாருக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி அந்த மினி குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருப்பாள் போலும் அதை குக்கரில் போட்டு வேகவைக்கும் முயற்சியில் இறங்கி இருந்தாள்.
 
“புருஷன் துண்டோடு வந்து நின்னாலும் சைட்டெல்லாம் அடிக்க மாட்டா” கருவியவன் தலையை துவட்டியவாறு அறைக்குள் நுழைய வாசலில் கடைப்பையன் குமார் அமர்ந்திருந்தான்.
 
“ஓஹ் இவன்தான் சாவிய வாங்க வந்து எழுப்பி விட்டுட்டானா? ரகு வேற ஊருக்கு போய்ட்டான். மறந்தே! போய்ட்டேன்” கைலிக்கு மாறியவாறே “இருடா சாப்பிட்டுட்டு போலாம்”
 
“இல்லணா…. வேணாம்” என்றான் அவன். இழுத்துக் கூறி வாசுகி சொல்லவில்லை என்ற சேதியை வாசனுக்கு தெரிவித்தான்.
 
“யார் வந்தாலும் வயிறு வாடாவிடாமல் சாப்பாடு போட்டு அனுப்புவாள் தானே! சொல்லாமலா இருப்பாள்?” என்று யோசித்தவன் “சும்மா அடம்பிடிக்காம சாப்பிட்டுட்டு போடா நானும் உன் கூட வரேன்” என்றான் வாசன்.   
 
 
நேற்று நடந்தது என்ன? வாசுகி எழுந்து அவனுக்காக சமைப்பதே! பெரும் செய்தி என்று எண்ணமால் கடைப்பையனையும் சாப்பிட நிறுத்திக்கொண்டான்.
 
“கொஞ்சமாலும் அறிவிருக்கா? கைதடம் தெரியுமளவுக்கு அடிச்சிருக்காரு அவன் கேட்டா என்ன பதில் சொல்லுறதாம்? அவன் கேட்கட்டும். அவரே பதில் சொல்லட்டும்” சமையலறையிலிருந்து கணவனை மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்தாள் வாசுகி.
 
அவன் அடித்த அடியில் முகம் வீங்கி அவன் கைத்தடம் கன்னத்தில் நன்றாகவே! பதிந்திருக்க, “யாரு இப்போ இவருக்கு மதியத்துக்கு கடைக்கு சாப்பாடு கொண்டு போவாங்கலாம். நான் கொண்டு போக மாட்டேன்” முறுக்கிக் கொண்டவள் இருவரும் அருந்த காபி டம்ளர்களை கொண்டு போய் மேசையில் சத்தம் வர வைத்து விட்டு வந்து மீண்டு வேலையை கவனிக்கலானாள்.
 
குமார் வந்தால் டீவியை போட்டு அமர்ந்து விடுவான். அதில் லயித்தால் உலகமே! மறந்து விடும். அவன் திரும்ப மாட்டான் என்ற தைரியத்தில் தான் வாசலுக்கு சென்று காபி டம்ளர்களை வைத்துவிட்டு வந்தாள் வாசுகி.
 
“இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல. செய்யுறதையும் செஞ்சிட்டு கோபத்தை மட்டும் எல்லாத்துலயும் காட்டுறா” முணுமுணுத்த வாசன் காபியை அருந்தலானான்.
 
 
வாசன் கடைக்கு செல்ல தயாராகி வர பாயை விரித்து சுட்டு முடித்த தோசைகளையும், அரைத்த சட்டினியையும் வைத்து தட்டுக்களை அடுக்கிக்கொண்டிருந்தாள் வாசுகி. 
 
குமாரையும் அழைத்தவாறே வந்தமர்ந்தான் வாசன். “ஐயோ சாம்பார் தாளிக்கவே! இல்லியே! அத சொல்ல கூட முடியாதே! நான் கோபமா இருக்கேன்” முறுக்கிக் கொண்டவள் சாம்பாரை தாளிக்க
 
தாளிக்கும் மணம் வீச “வாய தொறந்து சொல்லுறான்னு பாரு” வாசன் முறைக்க,
 
 
“அண்ணி ஒரு முட்ட தோசை போட்டு கொடுங்க” குமார் உரிமையாக கேட்டு வாங்கி சாப்பிடுபவன்தான். வாசன் வீட்டில் அவனுக்கு எந்த கட்டுப்பாடும் இல்ல. அந்த உயிரிமையில் கேட்டுவிட 
 
 
“இருக்கிறத சாப்பிட்டு எந்திருச்சு போ” இருவரையும் திரும்பியும் பாராது வார்த்தையை கடித்துத் துப்பியவள் தனது வேலையில் கவனமாக இருந்தாள். கைகள் தான் வேலை பார்த்தன உள்ளம் கொதித்தித்துக் கொண்டிருக்க நெருங்கினாள் தோசைக் கரண்டியால் அடித்திவிடுவாள் அவ்வளவு கோபம். 
 
 
அது தனக்கு சொல்லப்பட்டது என்று வாசனுக்கு புரிய உதட்டில் சிறு புன்னகை மலர்ந்தது. “அப்பா மேடம் சாம்பாரை விட சூட இருக்காங்க”
 
 
“அதான் தோசை இருக்கு சட்னி இருக்கில்ல பேசாம சாப்பிடு” குமாரை அதட்டியவன் தானும் கோபமாக இருப்பதாக குரலை உயர்த்தி வாசுகிக்கு தெரிவித்ததோடு, வாசுகி கோபமாக இருப்பதை சைகையால் கூறி புரியவைக்க குமார் அமைதியாக சாப்பிடலானான்.
 
 
சாம்பாரையும் கொண்டு வந்து வைத்த வாசுகி இருவருக்கும் பரிமாற அவள் கன்னத்தில் உள்ள தடத்தை பார்த்து குமார் பதறியவாறு வினவ
 
கணவனை முறைத்தவள் “பதில் சொல்லு” என்ற பார்வையை பார்க்க வாசன் அவளை ஏறிட்டு பார்த்தால் தானே! அவன் தோசையை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.
 
“சொல்லுங்க அண்ணி என்னாச்சு? வாங்க ஆஸ்பிடல் போலாம்” வாசுகிக்கு எதோ ஆகிவிட்டது என்று எண்ணினானே தவிர வாசன் அடித்திருப்பான் என்று எண்ணவில்லை. குமார் கவனித்து வினவும் போதே! வாசுகி எழுந்து வேலை இருப்பதுபோல் நகரத்து விட்டாள்.
 
கணவனை நன்றாக முறைத்தவள் குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி தன்னால் இன்று கடைக்கு சாப்பாடு கொண்டு வர முடியாததையும் கூறி விட்டாள்.
 
நொந்து விட்டான் வாசன். உண்மைதான். அவள் எவ்வாறு இந்த முகத்தோடு தெருவில் நடந்து வருவாள். செல்லும் வழியெல்லாம் அனைவரும் விசாரிக்க மாட்டார்களா? குமார் பதினொரு வயதான சின்ன பையன் அவனுக்கு விவரம் பத்தாது. மற்றவர்களுக்கு பார்த்த உடன் புரிந்து விடும். பார்ப்பவர்கள் என்ன நடந்தது என்று கேட்க மாட்டார்களா?
 
கடைக்குள் நுழைந்துவிட்டால் வெளியே! வரவே! முடியாது. அவன் சொந்தக்கடை அதனால் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் போகலாம் ஆனால் இரவு பத்து மணிவரை அங்குதான் இருக்க வேண்டும். இருந்துதான் ஆகா வேண்டும். வியாபாரத்தை அவன் கவனித்தால்தான் குடும்பத்தை முன்னேற்ற முடியும். அதிக நேரம் பகல் சாப்பாட்டையே! மறந்துதான் போகின்றான். கல்யாணத்துக்கு பிறகு வாசுகி கொண்டு வந்து கொடுப்பதால் நேரத்துக்கு சாப்பிடுகின்றான். இன்று அதற்கும் கோவிந்தாதான்.  
 
வாசுகி வீட்டை பார்த்துக்கொள்கிறாள். வீட்டு பொறுப்பு மொத்தமும் அவள் கையில். பொறுப்பான மனைவி. இதுவரை வீண் செலவு என்று எதுவும் செய்ததில்லை. செலவு செய் என்று பெரிதாக அவளிடம் வாசன் காசும் கொடுத்ததில்லை. அது வேறு கதை. மாசம் ஆரம்பிக்கும் போதே! வீட்டுக்கு மளிகை சாமான்கள் வந்து விடும். அதே! போல் அவள் வீட்டுக்கும் சென்று விடும். அது தவிர தன் பிறந்த வீட்டுக்கென்று அவள்
இதுவரை எதுவும் வாய் திறந்து கேட்டதில்லை. வாசனும் கொடுத்ததில்லை. பண்டிகை, திருவிழா வரும் போது சென்று வருவதோடு பிறந்த வீட்டு உறவு முடிந்து விடும். அப்படிதான் வாசனுக்குத் தெரியும். அவன் தங்கைகளும் அப்படித்தான்.
 
வாசுகியின் குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் முதலில் நித்யாவின் கணவனின் குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இவர்கள் ஒரே ஊர்க்காரர்கள்.
 
பதினைந்து வயது முடியும் முன்பாகவே ஊர் திருவிழாவின் நித்யாவைக் கண்ட பக்கத்து ஊர்காரரான ஆவுடையப்பனின் இரண்டாவது மகன் ஆத்மநாதன் நித்யாவைக் கண்டு அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று வீட்டில் அடம் பிடித்துக் கல்யாணம் செய்துகொண்டான்.
 
ஆவுடையப்பன் மிராசுதார் பரம்பரையில் வந்தவர்கள். இப்பொழுது அந்த அளவு செல்வாக்கு இல்லாவிடினும் நான்கு ஆண் மக்களை பெர்றேடுத்திருந்தமையால் ஊரைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார். ஏகப்பட்ட நிலபுலன்கள் வேறு.
 
வாசனின் குடும்ப நிலையை காரணம் காட்டி ஆத்மநாதனின் அன்னை பத்மா திருமணத்தை விரும்பவில்லை. பிடிவாதத்தை மொத்த உருவமான ஆத்மநாதனோ! தனது சொந்த செலவிலையே! திருமணத்தை நடாத்திக் கொண்டான்.
 
அதற்கு இன்னொரு காரணம் ஆத்மநாதன் தனது சொந்த முயற்சியால் படித்து முன்னேறியவன். ஆவுடையப்பன் காலேஜ் சேர்த்து விட்டதோடு சரி பீஸ் கூட கட்டமாட்டார். இவனது படிக்கும் வெறியால் இரவில் வேலை பார்ப்பதும் பகலில் படிப்பதும் என்று முன்னேறி விட்டான்.
 
வீட்டார் இருந்தும் கவனிக்கவில்லை. அன்னைக்கு என்றும் அண்ணனே! உசத்தி என்று எண்ணுபவன் ஆத்மநாதன். ஊரில் விவசாயம் பார்க்கப் பிடிக்காமல் டில்லியில் ஒரு மென்பொரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ள திருமணமான கையேடு நித்யா அங்கே! குடி சென்று விட இப்பொழுது அவளுக்கு ஒரு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
 
கடவுளின் திருவிளையாடல் ஒரு ஆண் ஒரு பெண் போதும் என்று இருந்தவர்களுக்கு மூன்றாவது பெண் குழந்தை கிடைத்தது. நித்யகலா சத்யகலா போலவே! ஆறுவருட இடைவெளியில்.
 
வாசுகியின் குடும்பமும் அதே ஊர் தான். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். வாசுகியின் தந்தை சொக்கநாதன். அவரோடு பிறந்தவர்கள் பன்னிரண்டு பேர் அதில் இவர் ஒன்பதாவது. சொந்த அத்தை மகள் அபர்ணாவை மணந்தார். வாசுகி கிடைத்த உடன் இவரை விட்டு விட்டு அவள் காதலித்தவனோடு செல்வதாக கடிதம் எழுதிவிட்டு சென்று விட்டாள்.
 
இவருக்கு மூணு அக்கா பேசிப்பேசியே! மருமணத்துக்கு சம்மதம் வாங்கி இருக்க, குழந்தையையும் கருத்தில்கொண்டு இரண்டாவது மணந்தது அபர்ணாவின் தங்கை பூர்ணா.
 
அவளுக்கு மாமனை திருமணம் செய்ய கொஞ்சமாலும் சம்மதம் இல்லை. அன்னை கெஞ்சிப் பார்த்ததில் மசியாதவள் மிஞ்சியத்தில் வேறு வழியில்லாது கழுத்தை நீட்டி இருந்தவளின் மனதில் வஞ்சம்தான் குடிபுகுந்திருந்தது.
 
அபர்ணாவின் மேல் இருந்த கோபத்தை யார் மேல் காட்டுவதென்று நாதனுக்கு தெரியவில்லை. பூர்ணா தனியாக கிடைக்கவும் தினமும் இரவில் தான் ஒரு ஆண் என்பதை நிரூபிக்க ஆரம்பித்திருந்தார். விளைவு திருமணமாகி கொஞ்சம் நாட்களிலையே அவள் கற்பமானதுதான்.
 
தனக்கு நடக்கும் கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் பொறுமை காத்தவளின் வன்மம் எல்லாம் வாசுகியின் மேல்தான் திரும்பியது. குழந்தையை கவனிக்கும் பொறுப்பை முற்றாக கைவிட்டாள். அதற்கு அவள் நிலையும் காரணமாக இருந்தது. ஆனால் அவள் கவனித்து பார்க்கும் அளவுக்கு குழந்தையை யாரும் அங்கு வைத்திருக்கவில்லை. நாதனின் இரண்டு அக்காவும் மூன்று அண்ணன்களும் அதே! தெருவில் குடியிருக்க, குழந்தை ஏதோ ஒரு வீட்டில் உண்டு, குடித்து, உறங்களானது.
 
பூர்ணாவின் அன்னை ராஜம் அவளை காணும் பொழுதெல்லாம் “அக்கா பண்ணது போல் ஏடாகூடமா ஏதாவது பண்ணித் தொலைச்சி எங்க மானத்த வாங்கிடாத” என்று தன் பயத்தை பூர்ணாவின் மீது திணிக்க, அவள் மனதில் மேலும் வன்மம் கூடியது. வாசுகி பேச ஆரம்பிக்கும் பொழுதே தன்னை சித்தி என்று அழைக்குமாறு சொல்லிக் கொடுத்திருந்தாள் பூர்ணா. அந்த பிஞ்சுக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. அவ்வாறே அழைக்கலானாள்.
 
வாசுகி நாதனின் முன் பூர்ணாவை சித்தி என்று அழைக்கவும் “யாரோ அவ்வாறு அழைக்குமாறு சொல்லிக் கொடுத்து இருக்கிறாங்க” என்று வாசுகியை போட்டு அடித்த பூர்ணா “இனிமேல் அப்படி அழைக்க கூடாது” என்று சொல்ல
 
“அவள் குழந்தை தானே! புரியும் போது அவளே! அம்மா என்று அழைப்பாள் விடு” என்று நாதன் கூற அந்த கொடுப்பன பூர்ணாவுக்கு இந்த ஜென்மத்தில் அமையப்போவதில்லை என்று அவள் அறிந்திருக்கவில்லை.  
 
பூர்ணாவுக்கு அடுத்தடுத்து இரண்டும் பெண் குழந்தைகளாகிப் போனது விதி மட்டுமல்ல. யாரும் அறியாமல் வாசுகிக்கு செய்யும் கொடுமையும்தான். கொடுமையென்றால் அது வார்த்தைகளால் அல்லது சேய்களால் செய்தால்தான் கொடுமையா? மனதால் அவளை ஒதுக்குவதே! கொடுமை, அநியாயம், அக்கிரமம், துரோகம் இப்படி எல்லா வார்த்தைகளையும் சொல்லலாம்.
 
தன் சொந்த அக்கா பெண் வாசுகி என்று கனிவாக பார்த்திருக்கலாம். அது இல்லை. எதோ ஒரு அநாதை குழந்தை அல்லது தாயில்லா குழந்தை என்று கூட அரவணைத்து இருக்கலாம். அவளை தன்னிடமிருந்து ஒதுக்கி ஒதுக்கியே! தான் அவள் சித்தியென்று மனதில் பதிய வைத்தவளுக்கு கடவுள் கொடுத்த தண்டனை அவள் பெற்ற மக்களும் அவளை சித்தி என்றே! அழைத்தனர்.
 
  “சரி சரி இன்னைக்கி சாப்பாடு எடுத்து வர வேணாம். நான் கடையிலையே! ஏதாச்சும் சாப்பிடுகிறேன். நான் கடைக்கு போயிட்டு வாறன்” வாசன் சுவத்தை பாத்து கூறியவாறு கைகழுவியவன் வாசலுக்கு விரைந்திருக்க,,
 
வாசுகிக்கு அப்படியொரு கோவம். “இவருக்கு ஆக்கிப்போடவும், சாப்பாடு கொண்டு போகவும்தான் நான் இங்க இருக்கேனா?”
 
ஏனோ கல்யாணமாகி இந்த ஆறு மாதங்களில் தேனிலவு என்று வாசன் அவளை எங்கும் அழைத்து செல்லவில்லை என்பதும் அந்த நேரத்தில் நியாபகம் வந்து தொலைக்க, கோபம் சுறுசுவென ஏற அதை சாப்பாட்டில்தான் காட்டலானாள். அதாவது வேகவேகமாக சாப்பிட்டாள்.
 
வாசுகிக்கு கோபம் அதிகமானால் என்ன செய்வது என்று புரியாமல் அதிகமாக சாப்பிட்டுவிடுவாள் அதானால் உடம்பும் கொஞ்சம் பூசினால்போன்றுதான் இருக்கும். அது அவள் உயரத்துக்கு அழகாகத்தான் இருக்கிறதே! தவிர யாரும் அவளை குண்டு என்று கேலி செய்ததில்லை.
 
வாசன் குமாரை அழைத்துக்குக் கொண்டு கதவையும் சாத்திக்கொண்டு வண்டியில் ஏறி கிளம்பி விட்டான்.
 
வாசுகியின் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது. “அவர் எப்படி என்ன அடிக்கலாம். அதுவும் வீட்டுக்கு வந்ததும் வராததுமா? என்ன நடந்தது? நீ அப்படி பேசினியான்னு ஒரு வார்த்த கேக்கமாட்டாரா? இவரா முடிவு பண்ணிக்குவாரா? இன்னக்கி மாதிரி தனியாத்தான் தூங்கணும் அப்போதான் இந்த மனுசனுக்கு புரியும்” தன்னை அடித்ததில் கணவனை படுக்கையிலிருந்து விலக்கி வைப்பதென்ற முடிவோடு இருந்தாள் வாசுகி.
 
இருக்கறதே! இரண்டு படுக்கையறை ஒன்று ராமநாதனுடையது அவர் சுற்றுலா சென்றிருக்க, அடுத்த வாரம் வந்து விடுவார். நேற்று வாசன் கோபமாக இருந்ததால் அவளை கீழே தூங்க விட்டு விட்டான். மனைவி இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டாள் என்று வாசன் அறிந்துகொண்டால் வாசுகியின் நிலைமை என்னவாகுமோ! 
 
வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த வாசனுக்கும் வாசுகியின் எண்ணங்களே! வாசுகி ரொம்பவே! அமைதியான பெண் இல்லை. அவளோடு நெருங்கி அன்பாக பேசுவோரிடம் கலகலவென்று பேசும் ரகம்தான். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே ஒன்றை பேசுபவளும் இல்லை. உடனடியாக பொய் சொல்ல அவளுக்கு வரவே! வராது மாட்டிக்கொள்வாள். தான் தவறு செய்தால் உடனே! ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டுவிடுவாள். அவள் கோபமாக முறுக்கிக்கொண்டு அமைதியாக இருப்பதை பார்த்தால் சத்யா சொல்வது உண்மையில்லையோ!
 
இல்லையே! நித்யா போன் பண்ணும் போது வாசுகி அருகில் இருந்தாலே! அவள் காதில் நித்யா கதறியது விழத்தானே! செய்தது. வாசன் பார்த்த பார்வைக்கு தீர்க்கமான பார்வையை செலுத்தி விட்டு அகன்றவள் அதை பற்றி யாரிடமும் பேசமாட்டாள் என்று இருந்து விட்டது தப்பாக போய்விட்டது.
 
சொல்லி இருக்க வேண்டுமோ! யாரிடமும் சொல்லாதே! இது நித்யா வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் யாரிடமும் இதை பற்றி பேசாதே! என்று சொல்லி இருக்க வேண்டுமோ! சத்யா சாதாரணமாக போன் செய்யப்போய் இவளும் சாதாரணமாக சொல்லிவிட்டாளா?
 
போட்டு வாங்குவதில் சத்யா கில்லாடி. தன் உறவுகள் இப்படித்தான் என்று வாசுகியிடம் சொல்லி இருக்க வேண்டுமோ!
 
“வாசுகி நேத்து வந்தவ, சத்யா உன் தங்கை” வாசனின் ஒரு மனம் சொல்ல குழம்பித்தான் தவித்தான் வாசன்.
 
 
நித்யாவுக்கு ஒன்றென்றால் அவள் வாசனை தவிர வேறு யாரையும் அழைப்பதில்லை. இந்த மாதிரி பிரச்சினைகள் ஊரில், உலகத்தில் நடக்கிறது என்று கேள்விப்படுவதுதான். ஆனால் வாசனின் குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சினையை அவன் சந்தித்ததில்லை. இதை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் அவனுக்கு புரியவில்லை. முடியாத பட்சத்தில் கிளம்பி வா என்றுவிட்டான். வந்தால் இந்த வீட்டில் அவர்களை எப்படி தங்க வைப்பது என்ற கேள்வி வேறு.
 
“இல்ல வாசா… குழந்தைகளோட படிப்பு கெட்டுடும். நான் விட்டுட்டு வந்துட்டா அவர் ஆட்டம் இன்னும் அதிகமாகும். நான் இங்க இருந்து சமாளிச்சிக்கிறேன்” அண்ணா… என்று என்றுமே! அழைத்ததில்லை. அது ஒருவருட இடைவெளி என்பதினாலையா… அல்லது இருவரும் தோழர்கள் போல் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதினாலையா தெரியவில்லை.
 
மூத்தவன் இன்ஜினியரிங் கல்லூரி, அடுத்தவள் மருத்துவம் சின்னவள் ஸ்கூல் இப்படி குழந்தைகளுக்காகவே! வாழும் அன்னை அவள்.
 
டில்லி போன்ற பெரிய நகரத்தில் குழந்தைகளை வளர்ப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. தன் கைக்குள் வைத்துக்கொண்டிருக்கும் பட்டத்தின் நூலைப்போல்தான் அவர்களை சமுதாய வானில் பறக்க விட்டு வைத்திருக்கிறாள் நித்யா. தேவையான போது நூலை இறுக்குவதும், தேவையின் போது லூசில் விடுவதுமாக அந்த மூன்று பட்டங்களும் அவள் கட்டுப்பாட்டில் எந்த பிரச்சினையுமில்லாமல் வானில் பாதுகாப்பை வளம் வந்து கொண்டிருக்கின்றன.
 
 
ஆனால் அவளை ஆசையாசையாய் மணந்துகொண்டு ஆத்மநாதன்தான் வழிதவறிப் போய் கொண்டிருக்கின்றான். அதுவும் பத்தொன்பது வயதில் மகனையும், பதினெட்டு வயதில் மகளையும் வைத்துக்கொண்டு. தந்தை இந்த வயதில் பிற பெண்களை நாடுவதை அறிந்தால் அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவேன் என்றுதான் நித்யா கதறியதே! இத்தனைக்கும் நித்யா பேரழகி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வயதில் பசங்க இருந்தாலும் நித்யாவுக்கு முப்பத்தி நாலு வயதுதான். உடலை கட்டுப்பாடாக வைத்திருக்கிறாள். அதற்கு காரணம் அவள் வசிப்பது டில்லி என்பது மாத்திரமல்ல கலவாதியை கொண்டு பிறந்ததினாலும்தான். வாசன் நித்யா, ஸ்ரீராம் மூன்று பேருமே! கலாவதியின் தோற்றத்தில், நிறத்தில் பிறந்தவர்கள். ஸ்ரீவத்சன் மற்றும் சத்யா ராமநாதனின் போல் மாநிறத்திற்கும் கொஞ்சம் நிறம் குறைவு. 
 
“ஏன் இந்த மாமாவுக்கு புத்தி இப்படிப் போகிறது”  வாசனால் புலம்ப மட்டும்தான் முடிந்தது.  
 
வாசனால் நித்யாவை ஆறுதல் படுத்தாலமே! ஒழிய ஆத்மநாதனிடம் போய் பேச முடியாது. விட்டுட்டு வா என்றும் சொல்ல முடியாது. யாருக்கும் தெரியாமல் இந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது என்று அவன் மண்டையை உடைத்துக்கொள்ளாத குறைதான். அவன் மனையாள் அதை சத்யாவிடம் சொல்லி அவள் இவனை அழைத்துப் பேசி “மாமா இப்படியாமே!” என்று விலாவரியாக தனக்கும் நித்யாவுக்கும் தன் மனைவிக்கும் மட்டும் தெரிந்த விஷயம் என்று நினைத்திருந்ததை தனக்கும் தெரியும் என்று கூறி விட்டாள் சத்யா. தனக்கு அப்படி எந்த விஷயமும் தெரியாது என்று வாசன் அடித்துக் கூறியது மட்டுமல்லாது, அப்படி ஏதாவது இருந்தால் நித்யா என்னிடம்தான் முதலில் சொல்வாள் என்று வேறு சொல்லி அலைபேசியை அனைத்துவிட்டான்.

Advertisement