அத்தியாயம் – 32

இதோ இன்னும், மூன்று நாட்கள் தான் உள்ளது. அச்சுதனின் ‘ஸ்ரீ நம்பெருமாள்’ நகைமாளிகை திறப்பிற்கு.

அச்சுதனுக்கு வேலை நெட்டி முறித்தது. அவனுக்குத் துணையாய் அவனது தம்பிகள் வந்து நின்றுவிட்டனர். சித்தப்பாக்களும் வந்து நின்றனர் தான். ஆனாலும் சொல்லிவிட்டான் “நீங்க போய் கடையைப் பாருங்க சித்தப்பா..” என்று.

பொதுவில் யாரின் லாபங்களும், யார்னாலும் குறைந்துவிடக் கூடாது.

இதோ அண்ணன் தம்பிகள் அனைவரும் இங்கேதான் இரவும், பகலும். அதிலும் பிரகாஷ் வந்தவனையும் அச்சுதன் அனுப்பிவிட்டான்.

‘உனக்கு இங்க என்னடா வேலை?’ என்று.

அச்சுதன், பிரசாந்த், அர்ஜூன் எல்லாம் நிற்க, பிரகாஷிற்கு தன்னை மட்டும் அண்ணன் போகச் சொல்லவும் அதில் லேசான வருத்தம். முகத்தை சுருக்கிக்கொண்டு கிளம்ப “இப்போ என்னடா உனக்கு?” என்ருவந்தான் அச்சுதன்.

“இல்ல.. எல்லாம் ஒண்ணா நிக்கிறீங்க. என்னை மட்டும் போன்னு சொல்லிட்டீங்க..” என்று சொல்ல,

“டேய், உனக்கு வேலை இருக்குதானே..” எனும்போதே, பிரகாஷிற்கு அழைப்பு வந்துவிட, அலைபேசியை எடுத்தவன் பேசிக்கொண்டே சற்று தள்ளி சென்று நின்றுவிட,

அச்சுதனும் வேலையை கவனிக்க, பிரசாந்தோ “அண்ணா நாளைக்கு எல்லாமே ரெடி பண்ணிடலாம். லைட்டிங் எல்லாம் ரெடி. கடை திறப்புக்கு முதல் நாள் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும் நம்ம. அப்போதாம் திறப்பு அன்னிக்கு நல்லா தெரிவோம்…” என்று பேசியவன் உள்ளே செல்ல,

அர்ஜூனோ “அண்ணா, ப்ளான்ல பார்த்ததை விட, இப்போ நேர்ல பார்க்கும்போது நிஜமா அப்படியே பேலஸ் போலவே இருக்குண்ணா.. சும்மா சொல்லக் கூடாது பெரியண்ணி நல்லாவே வொர்க் பண்ணிருக்காங்க..” என்று பேச, முதல் நாள் அச்சுதனும் கூட இதையே தான் அர்ச்சனாவிடம் சொன்னான்.   

“நான் நினைச்சதை விட செமையா வந்திருக்கு அர்ச்சு…” என்று.

“சிலது எல்லாம் லாஸ்ட் நேரத்து ப்ளான்…” என்றவளுக்குமே, தன்னுடைய முதல் ப்ராஜக்ட் சிறப்பாய் முடிந்தது மட்டுமல்லாமல், அதுவும் அச்சுதனுக்காக அவள் செய்து கொடுத்தது என்பது இன்னமும் தித்திப்பாய் இருந்தது.

“அண்ணா இந்த ஜிம்கி செக்சன்ல டிஸ்ப்ளே டேபிள் எந்த பக்கம் வைக்கிறதுன்னு பாரு..” என்று வந்து அழைக்க,  

“நீயே பாரு பிரசாந்த்.. உனக்கு தெரியாததா..” என்றவன் “அர்ஜூன் டி டைம் ஆச்சு… எப்பவும் சொல்ற கடைல தான் சொல்லிருக்கேன். நம்பர் இருக்குதானே கால் பண்ணி பேசு…” எனும்போதே,

பிரகாஷ் கோபமாய் “ம்ம்ச்.. போன் வை அனிதா.. கொஞ்சம் கூட புரியாம பேசிட்டு இருக்க நீ…” என்று கத்துவது, இவர்களின் செவியில் நன்றாய் விழ,

அர்ஜூனும், அச்சுதனும் திரும்பிப் பார்க்க, பிரகாஷ் முகத்தில் அப்படியொரு கோபமும், குழப்பமும் அப்பட்டமாய் தெரிய, நெற்றியை சுருக்கிய அச்சுதனோ “நான் சொன்னதை பாரு அர்ஜூன்..” என்றவன், பிரகாஷிடம் வந்தான்.

“என்ன பிரகாஷ்?” என்று கேள்வியாய் முகம் பார்க்க,

“நத்திங் ண்ணா.. நீங்க பாருங்க.. நான் கிளம்புறேன்…” என்று கிளம்பப் போக,

“டேய் நில்லு…” என்றவன் “என்ன விஷயம்? அனிதா நிறை மாசமா இருக்கா? அவளோட கத்திட்டு இருக்க…” என்று கேட்க,

“பின்ன வேற என்னை என்ன பண்ற சொல்றண்ணா…” என்றான் ஒருவித இயலாமையில்.

“மறுபடியும் என்னடா உங்களுக்குள்ள?” என்று அச்சுதன் பேச ,

 “பிரச்சனைன்னு இல்லைண்ணா. ஆனா பேசாம ஹோட்டல் கை மாத்தி விடலாமான்னு யோசிக்கிறேன். ரிசார்ட் நல்லாவே போகுது. ஆனா ரிசார்ட்ல வர்றது எல்லாம் லோன் கட்டவும், ஹோட்டல் ரன் பண்ணவும் தான் சரியா இருக்கு.

ஹோட்டல் கை மாத்தி விட்டுட்டா, அந்த பணத்தை வச்சு லோன் பாதி செட்டில் பண்ணிடலாம். ரிசார்ட்ல இருந்து வர்றது வச்சு கொஞ்சம் மெயின்டைன் பண்ணிக்கலாம். அடுத்து பிரசாந்துக்கு கல்யாணம் பாக்கணுமே அண்ணா.. செலவுகள் நிறையவே இருக்குது இல்லையா.. இரண்டையும் வச்சு சமாளிக்க, ஏதாவது ஒன்னு சரியா பண்ணலாம்னு…” என்று பேச,பிரகாஷிற்கு இத்தனை நாளும் இது மனதில் ஓடிக்கொண்டே தான் இருந்தது.

அதுவும் திருமணத்தின் போது, பிரகாஷ் தனியாய் ரிசார்ட் மற்றும் ஹோட்டல் நடத்துகிறான் என்று கார்மேகம் அவரது பழக்க ஆட்களிடம் பெருமையாய் பேசியிருந்தார். இப்போது அதில் ஒன்றை விட்டால், தங்கள் வீட்டிலும் கேள்வி வரும்.

நிச்சயம் மாமனாரும் ஏதேனும் நினைக்கக் கூடும் என்றே அவன் யோசனையில் இருக்க, மனதில் இருப்பதை முதலில் மனம்விட்டு அனிதாவிடம் தான் சொல்லியிருந்தான்.

அதுவும் கூட இரண்டொரு தினங்கள் முன்னர் தான், மனைவியிடம் பேசுகையில் சொன்னான். இப்படி செய்யலாம் என்று யோசிக்கிறேன் என்று. அப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டாள்.

‘இந்த ஹோட்டல் வேண்டாம்னா விடுங்க. அதைவிட்டுட்டு ரெண்டு பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்தவர் ஒன்னு போதும்னு சொன்னா எப்படி? எங்க வீட்ல என்ன நினைப்பாங்க? இதோ இப்போ அச்சுதன் மாமா , அர்ச்சனா கல்யாணம் நடக்கப் போகுது. வீட்டு தொழிலும் பார்த்து, அச்சுதன் மாமா தனக்குன்னு தனியாவும் ஒன்னு ஸ்டார்ட் பண்றார்..’ என்று அவள் பாட்டில் புலம்பத் தொடங்கிவிட்டாள்.

இதனை பிரகாஷ், அச்சுதனிடம் சொல்ல “ஓ!” என்று நெற்றியை நீவியவனுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.

“ஏன் ண்ணா நீயே சொல்லு, நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு?” என்று கேட்க,

“தப்பில்லைடா.. ஆனா அனிதா வீட்டுப் பறவை. நம்ம சொல்றதை வச்சு மட்டும் தான் யோசிப்பா.. அவளுக்கு பிஸ்னஸ் பண்றதுல இருக்க சிக்கல்கள் இன்னும் புரியலைன்னு நினைக்கிறேன். கண்டிப்பா நம்ம வீட்லயே எல்லாம் கேட்பாங்க.. ரெண்டு பார்த்துட்டு இருந்த, இப்போ என்னன்னு..” என்று அச்சுதனும் பேச,

“அதுக்காக எத்தனை நாளைக்கு அண்ணா லாபமே இல்லாம, உழைப்பையும் கொட்டி, ஒரு தொழில்ல வர்ற லாபத்தை கூட இதுல போட்டுட்டு..” என்று பிரகாஷ் சொல்ல, அவன் சொல்வதும் நியாயம் தானே.

“சரிதான் டா.. சித்தப்பாக்கிட்ட பேசு.. அனிதாகிட்ட முக்கியமா பேசி புரியாய் வை..” என்றவன் “வேற எதுவும் ப்ளான் வச்சிருக்கியா?” என்று கேட்க,

“இருக்கு ண்ணா.. இப்போ ட்ரென்ட் ஆகுதே ஆக்ரோ டூரிசம்.. அதுபோல ஒரு செட்டப் ரெடி பண்ணலாம்னு.. நம்ம பண்ணை வீடுகள் எல்லாம் இருக்கில்லையா..” என்று பேச,

“ஹேய்! குட் ஐடியா டா.. எல்லார்கிட்டயும் பேசு.. நல்லா வரும்…” என்று தம்பிக்கு தைரியம் கொடுத்து, அவனை அனுப்பிய அடுத்த சில நிமிடங்களில் அர்ச்சனாவின் கார் அங்கே வந்து நிற்க, அச்சுதனுக்கு அவள் வருவது தெரியாது.

சொல்லவே இல்லை அர்ச்சனா.

அச்சுதன் இரண்டாவது தளத்தில் இருக்க, கீழே பிரசாந்த் தான் இருக்க, அர்ச்சனாவைப் பார்த்ததும் “ஹை லேடி அச்சுதன்…” என்று அவன் வரவேற்க, அவனைப் பார்த்து புன்னகைத்தவள்

“என்ன வொர்க் எல்லாம் டைட்டா போகுதோ..” என்று பேச,

“ஆமா..” என்று சொல்லி சிரித்தான் பிரசாந்த்.

அர்ச்சனாவின் பேச்சு அவனோடு இருந்தாலும், பார்வை அச்சுதனை தேட “அண்ணன் செக்கன்ட் ப்ளோர்ல இருக்கார்…” என்று பிரசாந்த் சொல்ல,

“தேங்க்ஸ்..” என்றவள் “எப்படி இருக்கு?” என்று கட்டிடத்தைக் காட்டி பேச,

“நிஜமா சூப்பரா இருக்கு.. ஈசியா மெயின்டைன் பண்றமாதிரியும் இருக்கு. ஆனா ரசிக்கும்படியும் இருக்கு..” என்று பிரசாந்த் சொல்லும்போதே,

“ஹாய் பெரியண்ணி…” என்று வந்தான் அர்ஜூன்.

“நீ என்ன அர்ஜூன் லீவ் போட்டுட்டியா?” என்று அர்ச்சனா பேச,

“ஆமா அண்ணி.. ஷாப் திறக்கிற வரைக்கும் லீவ் தான்…” என,

“எல்லாம் ஓகே தானே…” என்று அர்ச்சனா திரும்பக் கேட்கையிலே, அச்சுதன் இங்கே வந்துவிட்டான்.

“ஹேய்.. அர்ச்சனா வா… வா…” என்று அவன் பேசும்போதே ஒரு பரபரப்பு.

“இந்த பக்கமா வந்தேன்…” என்று அர்ச்சனா பேசும்போதே,

“நம்பிட்டோம்.. நம்பிட்டோம்…” என்று அர்ஜூன் இழுக்க, பிரசாந்தோ “அப்படியே பார்த்துட்டு போலாம்னு வந்தீங்க. அப்படித்தானே?” என்றும் சொல்ல, அர்ச்சனா சிரித்துக்கொண்டாள்.

அச்சுதன் எதுவும் பேசவில்லை. தம்பிகளும் தன் வருங்கால மனைவியும் பேசுவதைப் பார்த்துக்கொண்டு நின்று இருக்க, பிரசாந்தும் அர்ஜூனும் அடுத்து அப்படியே நகர்ந்துவிட “சொல்லு அர்ச்சனா என்ன இத்தனை தூரம்?” என்று கேட்டான் அச்சுதன்.

“தூரமா?! சார்.. போன வாரம் வரைக்குமே நான் தினமும் வந்து போன இடம்..” என்று அவள் சொல்ல,

“சரி சரி.. வர்றான்னு சொல்லவே இல்லையே அதான் கேட்டேன்…” என்றிட,

“நிஜமா ரீசன் எல்லாம் எதுவும் இல்லை அச்சத்தான். ஜஸ்ட் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..” என்றவளின் பார்வை சுழல,

“நாளன்னைக்கு எல்லாம் செட் பண்ணி முடிச்சிடுவோம்..” என்ற அச்சுதன் “அனிதா எப்படி இருக்கா?” என்று கேட்க,

“ம்ம் நல்லா இருக்கா..” என்று வழக்கம்போல சொன்னவள் “என்ன திடீர்னு?” என்று கேட்டுவிட்டாள், அவன் குரல் மாறிய விதத்திலேயே.

“ம்ம் மறுபடியும் ரெண்டு பேர் குள்ளேயும் பிரச்னை போகுது போல. ஹோட்டல் வேண்டாம் கை மாத்தி விடலாம்னு பிரகாஷ் சொல்றான்..” என்று அச்சுதன் பேச,

“ரன் பண்ண முடியலைன்னா, இது நல்ல முடிவு தான். ரிசார்ட்ல வருமானம் நிக்கும் இல்லையா?” என்று அர்ச்சனா சொல்ல,

“நீ சொல்ற…” என்று இழுத்தவன் “ம்ம்ம்…” என்று அவனது நெற்றி தழும்பை லேசாய் நீவி “அனிதா வேற நினைக்கிறா போல…“ என்றான் கொஞ்சம் தயங்கி.

“ஏன் என்னாச்சு அச்சத்தான்? அங்க அனி எங்கக்கிட்ட எதுவும் சொல்லலையே..” என்ற அர்ச்சனவிற்குமே கொஞ்சம் பதட்டம் தான்.

 ஏனெனில் அனிதா இப்படித்தான் அத்தனை எளிதில் மனத்தில் இருப்பதை வெளியில் சொல்லமாட்டாள். அதுவும் இந்த நேரத்தில், இதெல்லாமே அவளது உடல்நிலையை பாதிக்கும் தானே.

அச்சுதனோ பிரகாஷ் சொன்னதை எல்லாம் சொல்ல ”ஓ! காட்…” என்றவள் “ஹ்ம்ம் பிரகாஷ் மாமா அவளுக்கு புரியுற மாதிரி சொல்லியிருக்கலாம். ஒத்துவரலன்னா விட்டுட்டு வேற பார்க்கலாம் தான். இப்போ அவளுக்கு கொஞ்சம் டெலிவெரி டென்சன் இருக்கும் தானே.. ப்ரீயா விடுங்க.. நான் பேசி பாக்குறேன்…” என்றவள்

“போன் கூட பண்ணல நீங்க?” என்று குறைபட,

“அதுனால தானே நேர்ல வந்து நிக்கிற நீ…” என்றான் ஒரு புன்னகையோடு.

“பின்ன.. நீங்க பிசின்னு தெரியும். இருந்தாலும்…” என்று அவள் இழுக்க,

“நைட் நான் வர்றதுக்கே ரொம்ப லேட் ஆகுது. அதுக்கு மேல உனக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணனுமான்னு தான்…” என்றான் அவனும்.

“புரியுது…” என்றவள் “ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க..” என்றும் சொல்ல,

“ஷாப் ஓப்பன் பண்ணிட்டா, அடுத்து கொஞ்சம் கொஞ்சமா ப்ரீ ஆகிடலாம். அடுத்து அனிதா டெலிவெரி முடிஞ்சா, கல்யாண தேதி முடிவு பண்ணிட்டா, அந்த வேலை எல்லாம் சரியா போகும்…” என்று அச்சுதன் சொல்லவும், அவள் முகத்தில் இன்னுமொரு பளிச்சிடல்.

அதை கவனித்தவனுக்கு புதிதாய் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ள “கல்யாணம்னு பேச்சு வந்தாலே, உனக்கு தனியா ஒரு லைட் முகத்துல எரியுது…” என்று கேலி பேச,

“அப்போ உங்களுக்கு ஒன்னுமில்லையா?” என்றாள்.

“ஒன்னுமில்லைன்னு எல்லாம் சொல்லவே மாட்டேன்..” என்று அச்சுதன் இரு கைகளையும் விரித்து சிரிக்க, மேலும் சில நிமிடங்கள் அர்ச்சனா இருந்துவிட்டே செல்ல, வீடு செல்லவுமே அவளுக்கு அனிதாவுடன் எப்படி பேசுவது என்றுதான் யோசனை.

அதற்கான வாய்ப்பை அனிதாவே கொடுத்துவிட்டாள்.

அனிதா அமைதியாய் அமர்ந்திருக்க “என்ன அனி என்னாச்சு சைலண்டா உக்காந்திருக்க?” என்று அர்ச்சனா கேட்க,

“ஒன்னும் இல்ல அர்ச்சு…” என்றவள், சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

யாருமில்லை என்று தெரியவும் “எனக்கு டென்சனா இருக்கு டி…” என்று சொல்ல,

“ஏன் என்னாச்சு?” என்றாள் அர்ச்சனாவும் எதுவும் அறியாதவள் போல.

“என்ன ஆகணும்? பிரகாஷ் ஹோட்டல்ல கை மாத்தி விடலாம் சொல்றார்..” என,

“ஏன் க்கா?” என்றாள் அப்போதும்.

“ஏன் கேட்டா.. அதுல அவருக்கு எந்த இன்கம் இல்லை. ஸ்டார்ட் பண்ணப்போ நல்லாதான் இருந்தது. இப்போ எந்த இன்கம் அதுல இல்ல. ஆனா ரிசார்ட் நல்லா போகுது..” என்று பேச,

“சரிதானே.. கை மாத்தி விட்டுட்டா.. வர்ற பணத்தை வச்சு பாதி லோன் செட்டில் பண்ணிடலாம் இல்லையா.. அடுத்து ரிசார்ட் பார்த்துட்டு இருந்தா, வேற எதுவுக் கூட க்ளிக் ஆகும் இல்லையா…“ என்று அர்ச்சனா பேச பேச, அனிதாவின் முகம் மேலும் கூம்பி விட்டது.

“என்ன அக்கா?” என்று அர்ச்சனா கேட்க,

“நீயும் இப்படி சொல்ற டி. நம்ம அப்பா, என்ன நினைப்பார்.. அவர் வீட்ல சும்மாவே எங்க மாமா அது இதுன்னு சொல்லிட்டு தான் இருப்பார். இப்போ அச்சுதன் மாமாவும் தனியா தொழில் ஆரம்பிச்சிட்டார்…” என்றவளின் மன நிலை அர்ச்சனாவிற்கு புரியாமல் இல்லை.

“அக்கா இங்க பார்.. அச்சத்தான் தனியா ஸ்டார்ட் பண்றார் அப்படினாலும் அது அவருக்கு பழகின ஒரு தொழில் தான். ஆனா பிரகாஷ் மாமா பண்றது அப்படியில்லை. புதுசா பண்றார். குடும்ப தொழிலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. அப்படியிருக்கப்போ அவருக்கு அதுல நிறைய சவால் இருக்கும். நீதானே அவருக்கு சப்போர்ட்டா நிக்கணும். யார் என்ன நினைச்சா என்ன? சமாளிக்க முடியாத ஒன்னை வச்சு என்ன செய்யப் போறார்…” என்று எடுத்துச் சொல்ல, அனிதாவின் முகம் கொஞ்சம் தெளிவானது.

“அப்பாக்கிட்ட சொன்னாலும், இதைத்தான் சொல்வார் க்கா.. நீ போட்டு மாமாவை ரொம்ப டென்சன் பண்ணிடாத.. பேபி வந்த பிறகு, உங்களோடவும் அவர் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைப்பாரா இருக்கும்..” என்றும் அர்ச்சனா பேச, அது இன்னமும் நன்றாய் வேலை செய்தது.

“அதுவும் சரிதான் அர்ச்சு..” என்றவள் “நான் வேற அவர்கிட்ட ரொம்ப கத்திட்டேன். பேசிட்டு வர்றேன்..” என்று எழுந்து போக, அர்ச்சனா முகத்தில் புன்னகை உறைந்து நின்றது.

இப்படியாக அடுத்தடுத்த நாட்களும் செல்ல, இதோ அன்றைய தினம் அச்சுதனின் நகை மாளிகை திறப்புவிழா, அத்தனை விளம்பரங்கள் அச்சுதன் ஏற்பாடு செய்திருந்தது. ஒரு தொழிலை தொடங்குவது என்பது கூட எளிது தான். ஆனால் அதனை மக்களுக்கு சென்று சேர வைப்பது அத்தனை எளிதல்லவே.

அழைத்திருந்த சிறப்பு விருந்தினர்கள் எல்லாம் வந்திருக்க, குறித்த நேரத்தில், கடை திறப்பு என்பது நிகழ, குடும்பத்தில் இருக்கும் மூன்று பெண்களும் விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, நல்லபடியாகவே அனைத்தும் நடந்தது.

அர்ச்சனாவிற்கு மனதினில் அப்படியொரு சந்தோசம்.

வந்திருந்தவர்கள் அனைவருமே முதலில் சொன்னது “பில்டிங் ப்ளான் சூப்பர்…” என்றுதான்.

பலருக்கும் தெரியாது யார் செய்தார்கள் என்று.

அச்சுதனிடம் கேட்பவர்களிடம் எல்லாம், அவன் பெருமையாகவே “இவங்களோட ப்ளான் தான்…” என்று அர்ச்சனாவை கை காட்டிச் சொல்ல, கார்மேகத்திற்கு மகளை எண்ணி பெருமை பிடிபடவில்லை.

கார்மேகத்தை தெரிந்தவர்களும், ஒருசிலர் வந்திருக்க “சும்மா சொல்லக் கூடாது சார், சம்பந்தி வீடுன்னு அருமையா பண்ணிட்டீங்க போல…” என்று சொல்ல,  அப்படியே அச்சுதன் – அர்ச்சனா திருமண விசயமும் காற்றுவாக்கில் பரவியது.

நீலவேணிக்கு மனது நிறைவாய் இருந்தது.

எங்கே மகன் பிடிவாதமாய் இருந்துவிடுவானோ என்று மனதினுள் அஞ்சி இருந்தார். ஆனால் அவனது இந்த மாற்றம் அவருக்கு மகிழ்வாய் இருக்க, அர்ச்சனாவைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தார்.

“என்ன அக்கா அர்ச்சனாவையே அப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்று சுமிதா கேட்க,

“ஹ்ம்ம்.. ஒருவேளை அர்ச்சனா வந்திருக்கல அப்படின்னா, அச்சுதனை நினைச்சேன் சுமி..” என்று சொல்ல,

“இன்னாருக்கு இன்னாருன்னு இருக்கும்போது, அதை மாத்த முடியாது தானே க்கா…” என்றார் அவரும்.

அர்ச்சனாவின் மனதினுள் இருந்த பெருமிதம், அவள் முகத்தில் தெரிய, சற்று தள்ளி வந்து நின்றுகொண்டாள். இது அச்சுதனுக்கான தினம் இல்லையா. அவன் வேலையை அவன் பார்க்கட்டும் என்று சற்று நேரத்தில் கிளம்பியும் வந்துவிட்டாள்.

முல்லை கூட “பரவாயில்லை அர்ச்சு.. நான் கூட என்னவோன்னு நினைச்சேன். அத்தனை வேலையிலும், உன்னை கவனிக்காம அச்சுதன் இல்லை…” என்று சொல்ல, அர்ச்சனா புன்னகையைத் தவற வேறென்ன பதில் கொடுக்க முடியும்.

அனிதா மட்டும் தான் வரவில்லை. நிறை மாதம். வேண்டாம் என்றுவிட்டார்கள். அதில் அவளுக்கு சின்ன வருத்தம் கூட.

“நாளைக்கு கூட்டிட்டு போறேன்…” என்று பிரகாஷ் சொல்ல,

“என்ன இருந்தாலும் இன்னிக்கு ஸ்பெசல் தான் இல்லையா…” என்று கடிந்துகொண்டாள்.

ஆனாலும் என்னவோ அவளுக்கு அன்றைய தினம் உடலும் சோர்வாய் இருந்தது. ரொம்பவும் எல்லாம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ரோஜாவோ முல்லையிடம் “அனிக்கு வயிறு நல்லா இறங்கிடுச்சு…” என்று சொல்ல,

“இன்னும் இருபது நாளுக்கு மேல இருக்கே க்கா…” என்று முல்லை சொல்ல, ரோஜாவின் கணக்கு தான் சரியாய் போனது.

மறுநாள் காலை விடியலிலேயே அனிதாவிற்கு வலி வந்திட, மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு விட்டாள்.