“இப்ப எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்க?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க
“உங்க கொஞ்சலுக்கு தடையா இருக்க கூடாது இல்லையா அதுக்கு தான் “என்றாள் எரிச்சலாக
“ப்ம்ச், ஏய் நான் எவ கிட்டயும் கொஞ்சல…சும்மா சும்மா சந்தேகப்பட்டுக்கிட்டு இருந்தா நான் ஒண்ணும் பண்ண முடியாது, மரியாதையா சீன் போடாம உள்ள வந்து படு “என்று அடிக்குரலில் சீறினான்.
“ஓஓஓ !! இதை நான் நம்பணும் இல்லையா, நம்புறேன் நீங்க எந்த தப்பும் செய்யலைனு நான் நம்புகிறேன். வேற வழி யாருமில்லாதவ தானே நானு உங்களை விட்டா எனக்கு போக வழியும் இல்லை னு நினைச்சு தானே உங்க இஷ்டத்திற்கு ஆடுறீங்க ஆடுங்க நான் என்ன பண்ண முடியும?”என்று பதிலுக்கு சீறி விட்டு சென்றாள்.
“ஸ்ஸ்ஸப்பா, ஓ காட்! நான் எப்படி தான் சொல்லிப் புரிய வைக்கிறதுனு எனக்குத் தெரியலை “என்று அலுத்துக் கொண்டே அவளின் பின்னால் சென்றான் .
“மைத்ரா அப்படி எதுவும் இல்லை டி . நம்பித் தொலையேன், இதோப் பாரு ஷூட்டிங் ஸ்பாட் ல இருந்து தான் ஃபோன் வந்தது , அதை தான் பார்த்தேன். நீ வேணுன்னா செக் பண்ணிக்கோ” என்று கைபேசியை நீட்டினான்.
“நான் இன்னும் அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போயிடலை… உங்களை தப்பா பேசுறதோ இல்லை சங்கடப்படுத்துறதோ என் நோக்கம் கிடையாது…நடு இரவில் மொபைலை நோண்டிட்டு இருக்கிறது திடீர் னு கால் வந்தா அதை பதட்டமா கட் பண்ணிட்டு மெசேஜ் பண்ணிட்டு இருந்தா சந்தேகம் தான் வரும்.சாரி இந்த விஷயத்தில் நான் உங்களை தப்பா நினைக்க காரணம் நீங்க தான் “என்றவள் படுத்துக் கொண்டாள்.
“சரி சாரி ஓகே…! உனக்கென்ன மொபைல் நைட்ல யூஸ் பண்ணக் கூடாது அவ்வளவு தானே!!, இனி பண்ணலை” என்று சமாதானம் சொல்லி அவளை பின்னிருந்து அணைத்தான்.
அடுத்து என்ன நடக்கும் என்பதை அவள் துல்லியமாக அறிவாள். கழுத்தோரம் வாசம் பிடித்தவன் ரோமங்கள் சிலிர்க்க முத்தமொன்றை வைத்து கூடலுக்கு வழி வகுத்தான்.
இசைந்து கொடுத்தவளுக்கு இனிமையாக இல்லை… அவன் மட்டும் இன்புற்று அவளை விலக்கி உறக்கம் தொடர்ந்தான்.
‘மனுஷ் தனக்காக சர்ஷிமனை மிரட்டினான்’ என்பதே அவளுக்கு அவ்வளவு உவகையாக இருந்தது.
அவன் திருமணம் முடிந்து விட்டது என்று கூறியதெல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மெட்டில்டா தான் மனுஷ்யபுத்திரனுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டாளே , வேறு என்ன தொல்லை நமக்கு வரப் போகிறது என்ற மிதப்பு
கனவில் அவனோடு டூயட்டெல்லாம் பாடி விட்டாள் அந்த சந்தன நிறத்தழகி. ஆனால் அவனோ அருகினில் இருந்தாலும் கனவில் வந்து தொல்லை செய்யும் ராட்சசி அகரயாழினியோடு அல்லவா சண்டையிட்டு கொண்டிருக்கிறான்.
ஒருதலைக்காதல் உடையவனிடம் சேருமா !! அல்லது அவளுக்கு உற்ற துணையாக நாயகன் வருவானா அதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.
சர்ஷிமனுக்கோ உறக்கம் எட்டாக் கனியாகியிருந்தது. எப்படி கண்டுபிடித்தான் மனுஷ் ஒரு வேளை நம் நோக்கத்தை ரிபாஷா உணர்ந்திருப்பாளோ அவள் தான் அவனிடம் சொல்லி மிரட்டச் சொல்லியிருப்பாளோ என்றெல்லாம் யோசிக்க அவனுக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது. மனுஷ் இத்தனை சாதாரணமாக எல்லாம் மிரட்ட மாட்டான். அவனே இவ்வாறு மிரட்டுகிறான் என்றால் ரிஃபாஷா அவனுக்கு அத்தனை முக்கியமானவளா… அவன் தானே அவளை அறிமுகம் செய்தது. ஒரு வேளை மனுஷ் மெட்டில்டா பிரிவிற்கு கூட ரிபாஷா தான் காரணியாக இருப்பாளோ என்றெல்லாம் எண்ணியிருந்தான்.
*******
அதே நேரத்தில் நமசிவாயம் ஷகீராவை கன்னம் பழுக்க அடித்திருந்தான்.
“அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து எனக்கெதிரா சதி பண்றிங்களோ இதோப் போட்டு தள்ளிட்டேன் இல்ல ஓ அண்ணங்காரனை. அப்படியும் அவளை கண்டுபிடிக்க முடியலை அவ கையில் கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு அவளுக்கு … “என்று ஷகீராவின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்து சுவற்றில் தள்ளினான் நமச்சிவாயம்.
ஷகீரா எதற்குமே அசரவில்லை எழுந்து நிமிர்ந்து நின்றாள்.
“நீ என்னை கொன்னேப் போட்டாலும் அடுத்தவளை தொட அனுமதிக்க மாட்டேன். அடிச்சா பயந்திடுவேனா?! இன்னொரு தடவை என் மேல உன் கை அடிக்கிறதுக்காக பட்டது அப்புறம் வரதட்சணை கொடுமை பண்றனு சொல்லி உள்ள தூக்கி போட்ருவேன். ஏற்கனவே உன் சைட் ரொம்ப வீக்கான சைடு, பார்த்துக்க “என்றாள் நிமிர்வாக.
நமச்சிவாயம் சற்று அதிர்ந்து தான் போனான்.
நமச்சிவாயத்தை ஷகீரா சிறைக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி விட்டுச் செல்ல,நமசிவாயம் அதிர்ந்து நின்றான்.
‘இத்தனை வருடங்கள் எதுவும் பேசாமல் தன்னோடு குடும்பம் நடத்தியவளா இவள்…?’ எத்தனை ஆத்திரம் பேச்சில்’ என கோபக்கனலுடன் நின்றான்.
“என்னடி இப்படி பேசிட்ட?” நமசிவாயத்தின் முதல் மனைவி ஷகீராவிடம் கேட்க
“இவர் கிட்ட அதட்டினா தான் வேலை நடக்கும் அக்கா, நீ வேடிக்கை மட்டும் பாரு”என்று அடக்கி விட்டாள்.
இருந்தாலும் என்று அமுதா தயங்கிட
“உன்னை உதைச்சா சரியாப் போயிடும். நீ அதட்டி உருட்டி மிரட்டி இருந்தா நான் வந்திருப்பேனா இல்ல அகரா தான் இங்க வந்திருப்பாளா… உனக்கு சாமர்த்தியம் பத்தலை”என அவளையும் காய்ச்சி எடுத்தாள்.
ம்ம்ம் சரிதான் என்ன செய்ய எங்காத்தா அப்பன் பெத்துப் போட்ட நேரம் அப்புடி என அங்கலாய்த்தபடி அவர் போய்விட்டார்.
உண்மையில் அவளுக்கு இந்த வாழ்வு மிகப்பெரிய விஷயம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள் ஏனெனில் அவள் வாழ்ந்த வறுமைவாழ்வு அப்படி அவளும் என் செய்வாள். மூன்று வேளை உணவும் உடுத்த வகைவகையான ஆடையும் கிடைத்து ஊருக்குள் பணக்காரன் மனைவி என்ற பட்டத்தை இழக்க அவளுக்கு விருப்பமில்லை ஆனால் ஷகீரா அதுபோல இல்லையே… செல்வச்செழிப்பும் அழகும் நிறைந்தவள். என்ன முதல் திருமணம் நமசிவாயத்திற்கு நடந்திருப்பதை அறியாமல் போய்விட்டாள். ஆனாலும் கட்டுக்குள் அவனை வைக்க நினைத்தவளுக்கு அகராவை மணமுடித்து அதிர்ச்சியைத் தந்துவிட்டான் அவன்.
**********
அகரயாழினி அதிகாலையில் விழித்தவள் திக் திக் என அமர்ந்திருந்தாள். நேற்றே மனுஷின் அன்னை நாளை திருமணம் என்று கூறியிருந்ததில் மனுஷின் முகம் இறுகிப் போனதை கவனித்தாள். அவளும் இதை எதிர் பார்க்கவில்லை.
‘மனைவி ‘என்று அவர்களே கூறி விட்டதால் எந்த பிரச்சினையும் இருக்காது மனுஷின் காலில் விழுந்தாவது ஏதேனும் ஆசிரமத்தில் சேர்த்து விடச் சொல்லலாம்” என்று இருக்க இப்போது நிலைமைத் தலைகீழாக போனது தான் அந்தோ பரிதாபம்.
இதில் மனுஷ் வேறு என்ன சிந்தனையில் இருக்கிறான் என்றே யூகிக்க முடியவில்லை. நேற்று வேறு காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் இதழோடு இதழ் கோர்த்து விட்டான். இவளும் சும்மாயிராமல் பதிலுக்கு பளீரென்று ஒரு அறையை வேறு விட்டிருந்தாள். என்ன ஆகப் போகிறதோ என்று பயத்தில் தான் இப்படி அமர்ந்திருக்கிறாள். ஆனால் மனுஷோ இன்று தான் கடைசி உறக்கம் இனி உறங்க வாய்ப்பே இல்லை என்பது போல உறங்கிக் கொண்டிருந்தான்.
‘இவர் என்ன இப்படி தூங்கறாரு ?’என முனகியபடி அவனது பள்ளியெழுச்சிக்காக காத்திருந்தாள்.
“அம்மே! ஒரு கட்டன்சாயா” என்றபடி கண்களை கசக்கி விட்டு நெட்டி முறித்தபடி எழுந்தமர்ந்தான்.
“ஸ்ஸ்ஸப்பா எழுந்துட்டாரு என்ன சொல்லப் போறாரோ?” என்று திகிலடித்தாற் போல அமர்ந்திருந்தாள்.
“ஓஓஓ காட் !இவளை எப்படி மறந்தேன்.” என்று முனகியபடி,” நீ இன்னும் போகலையா? அப்போ உனக்கொரு கப்போர்ட் ரெடி பண்ணிட வேண்டியது தான்” என்றான் சாதாரணமாக.
‘அடப்பாவி டைரக்டரே என்னை வச்சு பேய்படம் ஓட்டாமல் விட மாட்டான் போலிருக்கே… ‘என்றெண்ணியபடி,”இல்ல அது வந்து…”எனும் போதே,” இடியட் கெட் அவுட் ஆப் மை ரூம்.” என்று கத்தினான்.
“மோனே எந்தா சத்தம் அது?” என்று மனுஷின் அம்மா கதவை தட்டினார்.
“எதுவும் இல்லை அம்மே … பல்லி ஒண்ணு வந்திடுச்சு அதை துரத்தினேன் “என்றான் அகராவை பார்த்தபடி.
“பல்லிக்கு எல்லாம் பயப்படுறியே சரி சீக்கிரம் ரெடி ஆகி வாங்க ரெண்டு பேரும்…” என்றார்.
********
மகிழனின் அருகில் உறங்கி இருந்தாள் மைத்ரா.
முகம் அமைதியாக இல்லை… புருவம் முடிச்சிட தான் உறக்கத்தை தழுவி இருந்தாள். எப்படி அமைதி இருக்கும் மனைவி அருகில் இருக்கும் போதே அந்நியப் பெண்ணிடம் அக்கறையாக ஆணவன் பேசும் பொழுது…
மகிழனுக்கு அவளது முகபாவம் வைத்து எல்லாம் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கடமைக்கு வாழ்பவனுக்கு கட்டிய மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ள எல்லாம் விருப்பம் இல்லை… அவனுக்குத் தேவை சமூகத்தின் முன்பாக மனைவி என்று காட்ட ஒரு அழகான பெண் தன்னை ஆண் என்று நிருபீக்க அவனது வாரிசு இரண்டும் கிடைத்த பிறகு இனி அவள் வெறும் போகப்பொருள் மட்டுமே… கட்டிலில் இழைந்தால் போதும் காமத்தில் கூடல் நிகழ்த்தினால் போதும். அவளை மகிழ்விக்க அவ்வபோது சில பரிசு இது தான் அவளுக்கான வாழ்வு இதைத் தாண்டி அவள் எதிர்பார்க்க என்ன இருக்கிறது நம்மிடம்… நானாக யாரையும் தேடுவதில்லை அவர்களாக வரும் போது ஒதுக்குவதும் இல்லை ஏனெனில் நான் ஆண் என்ற எண்ணம் இல்லை இல்லை கர்வம் மேலோங்கி இருந்தது மகிழனிடத்தில்.
‘கர்வம் அழியும் நாளும் வரும்’ என்று அவன் உணர்ந்தான் இல்லை. உணரும் போது என்ன ஆவான் என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
அலாரம் மைத்ராவின் உறக்கம் கலைத்தது. கண்கள் கசக்கி எழுந்தவள் தன்னருகில் உறங்கி இருந்தவனை பெருமூச்சுடன் பார்த்து விட்டு குளியலறை நோக்கி சென்றாள்.
தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வெளியே வர அகரயாழினி கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.
அங்கே மனுஷின் தாயார் பூஜையறையில் மாங்கல்யத்தை கடவுளின் முன்பு வைத்து பூஜித்துக் கொண்டிருந்தார்.
மனுஷ்யபுத்திரனோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அகராவைப் பார்த்து அமர்ந்திருந்தான்.
“மோனே மனுஷா!” என்று அவனது தாயார் அழைத்ததும்,” அம்மே இவள் இட்டனக்கும் என்டே பாரியாளே விண்ட்டும் விவாகம்? “என்று தயங்கினான்.(இவள் ஏற்கனவே என் மனைவி தானே பிறகெதற்கு மறுபடியும் கல்யாணம்?)
“அத்தை அவர் சொல்றதும் சரி தானே…!”என மைத்ராவும் மனுஷிற்கு ஆதரவுகரம் நீட்டினாள்.
“புரியுது மோளே ஆனா எனக்கு ஆசையா இருக்கே…!”என்றார்.
மனுஷ் ஒரு நிமிடம் தயங்கியவன் பின்னர் வேகமாக பூஜையறையில் நுழைந்து கடவுளைத் தொழுது அந்த மாங்கல்யத்தை எடுத்து அகராவின் கழுத்தில் அணிவித்தான் . உலகமே ஸ்தம்பித்தது போல இருந்தது அவளுக்கு.