Advertisement

பகுதி.9

சாப்பாட்டு தட்டுடன் படியேறி வந்தவன், அறையின் வாயிலில் நின்றிருந்த தமிழை பார்த்ததுமே புரிந்துவிட்டது. அவள் கீழே நடந்த அத்தனையையும் கேட்டுவிட்டாள் என்று. அவளை கடந்து உள்ளே சென்றவன் தட்டை அங்கிருந்த டீபாயில் வைத்துவிட்டு அவனின் பின்னால் வந்து நின்றவளை பார்த்து, “வா வந்து சாப்பிடு.” என்றான்.

தமிழரசி அவனை பார்த்தவாறே, “என்ர அம்மா உங்ககிட்ட இருக்கப் பணத்தப் பார்த்து என்ன உங்களுக்கு கட்டிக்குடுக்கல.” அமைதியான குரலில் அதே சமயம் அழுத்தமாகவும் கூறினாள்.

சரவணன் பதில் ஏதும் கூறாமல் அவளை நெருங்கி வரவும் அவளும் பின்னோக்கி சென்று சுவரில் மோதி நின்றவள், “ஏன் பக்கத்துல வரிங்க மாமா?” என்று குரலில் தந்தியடிக்கக் கேட்டாள்.

இதழ்கள் லேசாக புன்னகை சிந்தியவாறே அவளை இன்னும் நெருங்கி நின்றவன், “ஏன்  நா உன்ரப் பக்கத்துல வரக்கூடாதா?” அவன் கேட்கவும்,

“நேத்துல இருந்து வித்தியாசமா நடந்துக்குறீங்க என்னாலப்  புரிஞ்சிக்கவே முடியலைங் மாமா.” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் கலைந்த முடியை ஒதுக்கி காதில் சொருகிவிடவும் அதில் மயங்கி நின்றாள்.

அவளின் அந்த நிலையை ரசித்தவாறே விலகி நின்று “தெரியும்.” என்றான்.

அவன் விலகவும் சுயநினைவிற்கு வந்தவள்  ‘எதுக்கு தெரியும்னு சொன்னாங்க’ மனதில் தோன்றிய கேள்வியுடனே அவனை பார்த்தாள்.

அவளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவன், “அத்தை எங்ககிட்ட இருக்க பணத்துக்காக உன்ன கட்டிக்குடுக்கலைனு எனக்குத் தெரியும்.” என்றான்.

“அப்போ ஏன் அப்படி சொன்னீங்க மாமா?” சரவணன் ஊருக்கு போக தேவையான ட்ரஸ்சை எடுத்து வைத்துக்கொண்டே “நா அது மட்டும்தா சொன்னேனா?” என்றான்.

“இல்லை.” அவள் கூறவும்,

“அப்போ அத மட்டும் ஏன் யோசிச்சிட்டு இருக்க? போ போய் வெரசா சாப்புட்டு போட்டு கிளம்பு நாம இப்போ ஊருக்கு போவோணும்.”

“எந்த ஊருக்கு போறோம்?”

அவளை திரும்பி பார்த்தவன் அவள் முகத்தில் தெரிந்தக் கேள்வியில் “அப்போ நீ  கீழ நான் சொன்னத முழுசா கேக்கலையா?”

“இல்லை.” என தலையாட்டியவள் கடைசில நீங்க மாமாகிட்டப் பேச ஆரம்பிச்சப்பத்தான் வெளிய வந்தேன்.” என்றாள்.

“ம்ம்ம்.” என்றவன், “எனக்கு நான் அங்கப்போய் போட்டுக்க துணி எடுத்து வச்சிபோட்டேன். உனக்கு அங்கையே இருக்கும் அதனால தேவை இல்லை சாப்பிட்டு ரெடியாகு நேரமாகுது.  நான் ஒரு போன் மட்டும் பண்ணிபோட்டு வரேன்.” என்றவாறே பால்கனி பக்கம் நகரவும்,

 தமிழ், “எங்க போறோம்னு சொல்லவே இல்லைங் மாமா?” என்றாள்.

“அங்கப்போனதும் நீயே தெரிஞ்சிக்குவ.” என்றவன் கையில் போனுடன் சென்றுவிட்டான்.

அவன் போவதை பார்த்துக் கொண்டிருந்தவள் பின் சாப்பிட்டுவிட்டு ரெடியாக ஆரம்பித்தாள். போன் பேசிவிட்டு வந்தவன்  பிங்க் நிற காட்டன் சேலையில் தன்னவளை பார்த்ததும் அசந்துதான் போனான். அவளை தினமும் சேலையில் பார்த்தாலும் இன்று அவன் கண்களுக்கு இன்னும் அழகாக தெரிந்தாள்.

சிறிதுநேரம் அவளை தன் விழிகளில் ரசித்தவன் ‘பெண்கள் கர்ப்பமா இருக்கும்போது இன்னும் அழகா இருப்பாங்கனு சொல்றது உண்மைத்தான் போல என்ர பொண்டாட்டி எப்பவும் அழகுத்தான். ஆனா, இன்னைக்கு இன்னும் அழகா என்ற கண்ணுக்கு தெரியறாளே!’ மனதிற்குள் அவளின் அழகை ரசித்தவறே சொல்லிக் கொண்டான்.

தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்றவும் திரும்பியவள் அங்கு நின்றிருந்த தன் கணவனின் கண்களில் தெரிந்த ரசனையில் ஆச்சர்ய பட்டவளாய்  அவனை பார்த்தாள்.

அவள் தன்னை பார்க்கவும் சுயநினைவிற்கு வந்தவன்  “நீ எப்பவுமே சேலைதான் கட்டுவியா?” என்றான்.

‘இவர் ஏன் இதலாம் கேக்கறார்?’ என யோசித்தவாறே, “அம்மா வீட்ல இருந்தப்ப சுடிதார், வீட்ல இருக்கப்ப நைட்டி போடுவேன் மாமா.” என்றாள்.

அவள் கூறியதை கேட்டவன் “இனிமே நம்ம வீட்டுலயும் உனக்கு  புடிச்சத  போட்டுக்கோ.” என கூறிவிட்டு குளிக்க சென்றுவிட்டான். அவன் போனதும் தன் கையை கிள்ளி பார்த்தவள் கை வலிக்கவும், “அப்போ நிஜம்தான்.” அவனின் மாற்றத்தை நினைத்து குழம்ப ஆரம்பித்து விட்டாள்.

இருவரும் கிளம்பி காரில் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தனர். காரில் ஏ.ஆர் ரகுமானின் பாடல் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. தமிழ் அமைதியாக வேடிக்கை பார்த்தவாறே வந்தவள் கார் கடைவீதியில் நிற்கவும் அந்த இடத்தை பார்த்துவிட்டு ‘இங்க ஏன் நிறுத்துனாங்க!’ என யோசித்தவாறே அவனை திரும்பி பார்த்தாள்.

அவன் காரை விட்டு இறங்கவும் அவளும் இறங்கி அவனருகில் வந்து நின்றாள்.

வாலட்டில் இருந்து இரண்டாயிரம் நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தவன் எதிரில் இருந்தக் கடையை காட்டி பழங்கள் வாங்கிவரக் கூறினான். அவள் சென்றதும் சரவணன் அங்கிருந்தப் பூக்கடைக்கு சென்று பொண்டாட்டிக்கு பிடித்த முல்லைப்பூ வாங்கி வந்தவன் அவள் வரும்வரை காரின் அருகில் நின்றிருந்தான்.

தமிழ் வந்ததும் காரில் ஏறி உட்கார்ந்திருந்தான். தமிழ் பழத்தை வாங்கிக்கொண்டு வந்து காரில் ஏறி உட்கார்ந்ததும் மீதி காசை அவனிடம் கொடுத்தாள். அவள் குடுத்த காசை வாங்கிக்கொண்டவன்  தான் வாங்கி வைத்திருந்த முல்லைப் பூவை அவளிடம் எடுத்து குடுத்தான்.

அவளுக்கு பிடித்த முல்லைப்பூவை கணவன் கரத்தினில்  பார்த்ததும் அவனை நம்பமுடியாமல் பார்த்தாள். அவள் பூவை வாங்காமல் தன்னையே பார்க்கவும், “உனக்கு பிடிச்சப் பூ தான் வாங்கிருக்கேன் தலைல வச்சிக்கோ.” என்றான்.

உனக்கு பிடிச்ச பூ னு சொன்னதைக்கேட்டு இன்னும் ஆச்சர்யபட்டவளாய் பூவை வாங்கி வைத்துக் கொண்டாளும் நடப்பது எதையும் நம்ப முடியாமல் அவனையே வெறிக்க ஆரம்பித்தாள்.

காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் அவள் தன்னையே ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டு வரவும் அவளை பார்த்து, “எங்கிட்ட எதாவது கேக்கோணுமா தமிழ்?” என்றான்.

சிறிது தயங்கியவள், “இப்போ இருக்கறது எனக்கு தாலிகட்டுன சரவணபாண்டியனானு பார்த்தேன் மாமா!” என்று கூறிவிட்டாள்.

அவள் கூறியதை கேட்டதும் வண்டியை ஓட்டிகொண்டிருந்தவன் காரை சடர்ன் ப்ரேக் போட்டு  நிறுத்தினான்.

அவன் காரை திடிரென நிறுத்தவும் என்னவென்று அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் அவளை நெருங்கி  கையை அவளின் முன்னாள் கொண்டு வரவும் பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.

கையை கொண்டுவந்தவன் ஒற்றை விரலால் அவள் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை வெளியே எடுத்து காட்டியவாறே, “இத உன்ர கழுத்துல கட்டுன சரவணபாண்டியன் நானேதான் வேற எதாவது சந்தேகம் இருக்கா?” என்றான்.

அவனின் குரலை கேட்டதும் தான் கண்களை திறந்து பார்த்தவள் அவன் கையில் இருந்தத் தாலிக்கொடியை பார்த்ததும் ‘ச்சே இத சொல்றதுக்குத்தான் இவ்வளவு கிட்ட வந்தாங்களா? ஒரு செகண்ட் பதறவச்சிட்டாறே!’ என மனதில் நினைத்துக் கொண்டு ‘இல்லை.’ என தலையாட்டினாள்.

தாலிக்கொடியிலிருந்து கையை எடுத்தவன்

“நீ என்ர கிட்ட பேசவே பயப்படுவனு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அது தப்புனு இப்போதா தெரியுது.” என்றான்.

“நான் எதுக்காகவும் பயப்படமாட்டேன். அதுவும் உங்ககிட்ட நான் எதுக்கு பயப்படப்போறேன். நீங்க எங்கிட்ட பேசாம இருந்தீங்க அதனால நானும் பேசம இருந்தேன் அதுக்கு போய் நான் உங்களப் பார்த்து பயந்து போய்தான் பேசாம இருக்கேனு தப்பா நினச்சா நான் என்னப் பண்றது.” என ரோசமாக பதில் கூறினாள்.

அவளின் ரோசத்தைப் பார்த்து சிரித்தவாறே, “நீ பயந்தவ இல்லைங்றது என்ர பேர என்ர முன்னாடியே தைரியமா சொல்லும்போதே தெரிஞ்சிக்கிட்டேன்…” என்றான்.

“அது வந்து… நீங்க ரெண்டு நாளா என்ர கிட்ட நடந்துக்கறதப் பாத்து கேட்டுபோட்டேன் சாரி.” என்றாள்.

“நீதானே என்ர பொண்டாட்டி?”

அவள் தலையாட்டவும், “அப்போ உன்ர கிட்டதான் எனக்கு தோன்றதெல்லாம்  காட்டமுடியும்?”

‘இப்போதா பொண்டாட்டியா தெரியறேனா?’ அவள் மனதில் நினைக்கும்போதே,

“நாங ஆரம்பத்துல இருந்தே என்ர பொண்டாட்டிகிட்டக் காட்டிட்டு தான் இருந்தேன். ஆனா, உனக்குதா அது புரியலை.” என்றான்.

‘நான் மனசுல நினச்சதுக்கெல்லாம் எப்படி பதில் சொல்றாங்க.’ அவள் யோசிக்கும்போதே,

 “நீ இத மனசுல நினச்சிருப்பேனு எனக்கு தெரியும்.” எனக்கூறிக்கொண்டே வந்தவன் காரை ஓர் வீட்டின் முன் நிறுத்தினான்.

‘திரும்பவும் ஏன் நிறுத்தறாங்க?’ என நினைத்தவாறே கார் வந்து நின்ற இடத்தை பார்த்தும் நம்பமுடியாமல் அவனை பார்த்தாள்.

அவன் ‘கண்களாலேயே இறங்கு.’ எனக் கூறிவிட்டு அவனும் கீழே இறங்கினான். அவன் கூடவே இறங்கி வந்தவளின் மனதில் தோன்றிய மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளில்லை.

காரை விட்டு இறங்கி வந்தவள் ஆறுமாதம் கழித்து தன் பிறந்த வீட்டை இன்றுதான் பார்க்கிறாள்.

தோட்டத்திற்கு நடுவில் கட்டப்பட்டிருந்த ஓட்டுவீடு அந்த வீட்டை சுற்றிலும் வயல்களில் அனைத்து வகை காய்கறிகளும் விளைந்திருந்தது. வாரத்தில் ஏழு நாட்களும் பக்கத்து ஊரில் உள்ள சந்தைகளுக்கும் ,காய்கறி கடைகளுக்கும் காய் அனுப்பிக் கொண்டிருக்கிறார் தமிழின் அம்மா. வெயிலுக்கு வேப்பமர நிழலில் ஆறு பசுமாடுகளும் நான்கு கன்று குட்டிகளும் கட்டபட்டு இருந்தன. ஒவ்வொரு மாடும் நேரம் எட்டு, ஒன்பது லிட்டர்க்கு குறையாமல் பால் தரக்கூடிய பசுமாடுகள். தோட்டத்தில் காய்வகைகள் மட்டுமில்லாமல் வாழை மரம், தென்னை மரம், மா மரம், கொய்யா, சப்போட்டா மரம், சீத்தாப்பழமரம் என அனைத்துவித பழமரங்களும் வீட்டின் முன்னால் வளர்ந்து நின்றன. மாடுகளுக்கு தீவனப்பயிர் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்றது. அங்கிருந்த மாடுகளையும்,வயல்களையும் பார்த்தால் தனியாக மூன்று பெண்கள் மட்டும் பார்க்கும் பண்ணையம் என்று யாராலும் கூறமுடியாது.

வயலில் ஆட்களுடன் தக்காளி பறித்துக் கொண்டிருந்த யசோதாவும், தமிழின் அப்பத்தாவும் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தனர்.

வந்திருந்தவர்களை பார்த்ததும் யசோதா நம்பமுடியாமல் தன் விழிகளை தேய்த்துக் கொண்டு திரும்ப பார்த்தார்.

“ஆரு வந்துருக்காங்க புள்ள?” என்று கேட்டார் தமிழின் அப்பத்தா.

“தமிழும், மாப்பிள்ளையும் வந்துருக்காங்க அத்தை.” தன் மாமியாரிடம் கூறியவரின் குரலில் அத்தனை மகிழ்ச்சி. இருக்காதா பின்ன பெண்ணைக் கட்டிக்குடுத்து ஆறு மாதம் கழித்து திரும்ப இப்போதுதான் பார்க்கிறாரே.

“ஆரு என்ரப் பேத்தியா வந்துருக்கா? அடிஆத்தே என்ரத் தங்கத்தப் பாத்து எம்புட்டு நாளாச்சு.” எனக் கூறியவாறே மருமகளின் கையை பிடித்துக்கொண்டு வரப்பில் நடந்து  வந்தார். வயதானதால் அவரால் வயல் வரப்பில் கீழே விழுந்துவிடாமல் இருக்க கம்பை ஊன்றுகோளாக பயன்படுத்துபவர் இன்று பேத்தியை பார்த்த சந்தோசத்தில் அதனை எடுக்கக்கூட தோன்றாமல்  மருமகளின் கையை பிடித்துக்கொண்டு வந்தார்.

தமிழரசி ரொம்ப நாளைக்கு அப்புறம் தன் அம்மாவையும், அப்பத்தாவையும் பார்த்த சந்தோசத்தில் தான் இருக்கும் நிலை மறந்து வேகமாக வரப்பில் ஓடினாள்.

அவள் ஓடிய வேகத்தில் சேலை காலில் மிதிபடவும் தடுமாறி விழுகப்போனவளை அவள் வேகமாக ஓடவும் பின்னால் ஓடிவந்த சரவணன் தாங்கிபிடித்து நிறுத்தினான்.

அவன் பிடித்ததும்தான் தான் செய்ய இருந்த முட்டாள் தனத்தின் வீரியம் புரிந்தது.  தன் மாமியார் கூறிய வார்த்தை நினைவிற்கு வந்து அவளைப் பயமுறுத்தியது. அதில் உடலெல்லாம் வேர்த்துக்கொட்ட  அப்படியே கண்கள் சொருக ஆரம்பித்தது. தான் விழுகாமல் இருக்க அவனின் சட்டை இருகபற்றியவள் அப்படியே அவன் மேலையே சாய்ந்தாள்.

அவளின் முகம் வேர்க்கவுமே பதறியவன், “ஏய் தமிழ் பயப்படாத உனக்கு ஒண்ணுமில்ல.” எனக் கூறிக்கொண்டே அப்படியே கீழே வரப்பில் உட்கார்ந்து அவளை மடியில் தாங்கிக்கொண்டு அவளின் கன்னத்தை தட்டி எழுப்பினான்.

அதற்குள்ளாகவே அவர்களின் அருகில் அவளுடைய அம்மாவும், அப்பத்தாவும் வந்து சேர்ந்தனர்.

யசோதா பதறியவாறே,  “தமிழ் என்னடி ஆச்சு?” என்றார்.

“ஐயோ என்ற பேத்தி இப்படி மயங்கி கிடக்கறாளே.” என புலம்ப ஆரம்பித்துவிட்டார் அப்பத்தா.

தமிழ் மயங்கி விழுகவும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு குடிக்க வைத்திருந்த தண்ணீரை எடுத்து வந்து அவளின் முகத்தில் தெளித்தனர்.

வேலை செய்யவந்த வேலை ஆட்களில் வயதில் மூத்த அப்பத்தா ஒருவர் சந்தேகம் கொண்டு தமிழின் கையை பிடித்து நாடித்துடிப்பை பார்த்தார். அவள் கையில் இரண்டு துடிப்பை உணர்ந்ததும் முகத்தில் சிரிப்புடனே,  “உன்ர மக முழுகாம இருக்கா கண்ணு.” யசோதாவிடம் கூறினார்.

தண்ணீர் தெளித்தம் சிறிது நேரத்திலே மயக்கம் தெளிந்தவள் தன் கணவனின் மடியில் படுத்திருப்பதை உணர்ந்ததும் எழுந்து உட்கார்ந்தாள்.

தமிழ் எழுந்து உட்கார்ந்ததும்  அவளின் அப்பத்தா  கன்னத்தை வழித்து நெற்றி முறித்து, “ரொம்பச் சந்தோஷம்டா தங்கம்.” என்றார்.

யசோதா, “இந்தமாதிரி நேரத்துல இப்படித்தா ஓடிவருவியா தமிழ் எதாவது ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகிருந்தா என்னடி பண்றது?” என அவளை கடிந்துக்கொண்டார்

யசோதா சொன்ன ஒண்ணு கெடக்க ஒண்ணு என்ற சொல் திரும்பவும் மாமியாரின் வார்த்தையை நினைவு படுத்தியதும் அவளின் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது.

அவளின் நடுக்கத்தை பார்த்தவன், “அத்தை அதான் ஒண்ணும் நடக்கலைங்களே அப்புறம் எதுக்கு அவளத் திட்டுறீங்க? பாருங்க நீங்க திட்டவும் இன்னும் பயந்துப் போயிட்டா.” என்றவன் வரப்பிலிருந்து எழுந்து அவளை தன் கைகளில் தூக்கிக்கொண்டான்.

அனைவரின் முன்னிலைலும் அவன் தூக்கவும் சங்கடபட்டவள், “இறக்கி விடுங்க மாமா நானே நடந்து வரேன்.” என்றவள் அவன் கைகளில் நெளிய ஆரம்பித்தாள்.

அவள் சொல்வதை காதிலே வாங்காமல் அவளை தூக்கிக்கொண்டு நடந்தவன் அவள் நெளியவும், “தமிழ் ஆடாம இரு.” என அதட்டிவிட்டு வீட்டிற்கு தூக்கிச்சென்று அங்கிருந்த திண்ணையில் உட்கார வைத்தான்.

சரவணன் தமிழை தூக்கிச்செல்வதை பார்த்த யசோதாவிற்கும், அப்பத்தாவிற்கும் இத்தனை நாள்  தமிழின் வாழ்க்கையை பற்றி இருந்தக் கவலை விலகி மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஒருங்கே தோன்றியது.

வேலைக்கு வந்த மற்றொரு அம்மா, “பரவாலை யசோதா புள்ளைக்கு அவசரக் கண்ணாலம் பண்ணாலும் நல்லப் பையனுக்குதா பொண்ணக் குடுத்துருக்க இனி நீ உன்ர மூத்த மகள நினைச்சி கவலைப்படத் தேவையே இல்லை.” என்றவர், “சரி யசோதா நாங்க போய் காய் அறுக்கறோம் நீ பொண்ணையும் மாப்பிள்ளையையும் கவனி.” என்றார்.

யசோதா, “அக்கா இன்னைக்கு மட்டும் பொழுதுக்கும் வேலை செய்ங்க கூலி சேத்துபோட்டு குடுத்துப்போடறேன்.”

“இத நீ சொல்லோணுமா யசோதா நாங்கப் பாத்துக்கறோம் நீ போ.” என்றார் வேலைக்கு வந்தப் பெண்மணி.

வேலை ஆட்கள் சென்றதும் அப்பத்தா,  “அல்லோரோட கண்ணும் என்ற பேத்தி மேல்தான் இருக்கு இன்னைக்கு ராத்திரி புள்ளைங்களுக்கு சுத்திப்போடோணும் புள்ள” என்றார்.

“சரிங்கத்தை போட்டுடறேன்.” இருவரும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்தனர்.

Advertisement