Advertisement

நீலகண்டன் “டைமிங் என்ன” என்றான். முதலில் அவன் கேட்ட கேள்வி அவளுக்கு புரியாததால்.. அவனின் தோளின் அருகில் முகத்தை வைத்து கேட்டாள் “என்ன..” என.

கணவன் “இல்ல, டைமிங் என்னான்னு கேட்டேன்” என்றான்.. அவளை பார்த்து லேசாக திரும்பி.. 

ரஞ்சனி அப்படியே அமர்ந்து “இப்போதிக்கு 9 டு 5தான்.” என்றாள். அவளே “நான் வண்டி எடுத்துக்கவா” என்றாள்.

நீலகண்டன் “இல்ல.. கொஞ்சநாள் நான் பிக்கப் ட்ராப் செய்யறேன்.. அப்புறம் வண்டி எடுத்துக்கலாம்..” என்றான்.

ரஞ்சனி “உங்களுக்கு அலைச்சல்தானே” என்றாள்.

நீலகண்டன் திரும்பி அவளை பார்த்தான் “அப்படி ஒன்னும் இல்ல.. நீயே அலையற.. நான் வரமாட்டனா” என்றான்.

ரஞ்சனி “ஓ.. அப்படி” என சிரித்தாள்.

நீலகண்டனும் “ம்.. அப்படிதான்” என்றான் அவளை திரும்பி பார்த்து. 

ரஞ்சனிக்கு இதமாக இருந்தது மனது.. “ஒரு ஜூஸ் வாங்கி கொடுங்களேன்” என்றாள்.

நீலகண்டன் “நீதான் வாங்கி தரனும்.. உங்களுக்குத்தான் வேலை கிடைச்சிருக்கு..” என்றான்.

ரஞ்சனி அமைதியாகிவிட்டாள்.. கணவன் “என்ன என்ன சத்தத்தையே காணோம்..” என்றான்.

ரஞ்சனி ”ம்… சம்பளம் வாங்கிட்டு ஜூஸ் குடிச்சிக்கலாம்ன்னு அமைதியாகிட்டேன்” என்றாள், கிண்டலாக.

நீலகண்டன் “ஓ.. அப்படியா” என்றான்.

ரஞ்சனி “ம்.. அப்படிதான்” என்றாள்.

நீலகண்டன் ஒரு கடையில் வண்டியை நிறுத்தி இருந்தான். 

ரஞ்சனி “என்கிட்டே காசில்ல ப்பா.. நான் வரலை” என்றாள்.

கணவன் “இது எனக்கு.. வா எனக்கு கம்பெனி கொடுக்க” என்றான்.

ரஞ்சனி “உங்களுக்கு, நான் எதுக்கு கம்பெனி கொடுக்கனும்.. நீங்க போய் குடிச்சிட்டு நிம்மதியா வாங்க” என்றாள்.. வண்டிமேல் சாய்ந்து நின்றுக் கொண்டு, பாகிலிருந்து போனை எடுத்துக் கொண்டே நின்றாள்.

கணவனின் முகம் புன்னகைக்கு மாற.. “அஹ.. வாழ்க்கை முழுக்க கம்பெனி கொடுக்க போற.. இங்க கொடுக்கமாட்டியா” என அவளின் கைபிடித்து அவளை நகர்த்தி சென்றான்.

ரஞ்சனிக்கு வெட்கமாகவும் சிரிப்பாகவும் வந்தது.. ‘என்ன இது நீலகண்டனா இது’ என எண்ணிக் கொண்டே “கையை விடுங்க.. வெய்யிலில் வந்ததுல என்னமோ ஆகிடுச்சி போல உங்களுக்கு” என்றாள்.

நீலகண்டன் ஒரு டேபிள் பார்த்து அவளை அமர வைத்து தானும் அவள் அருகிலேயே அமர்ந்தான்.. “ம்.. ஆமாம் அப்படிதான் போல.. கூடவே யட்சி ஒருத்தி இருந்தாள்..” என்றான், எங்கோ பார்த்துக் கொண்டே ஆழமான குரலில் சொன்னான்.

ரஞ்சனிக்கு இதையெல்லாம் நம்பவே முடியவில்லை.. என்னமோ பாராமுகம் காட்டும் கணவன்.. அவனுக்கு கடமைக்குதான் இந்த திருமணம் என எண்ணி இருந்தவற்றை இந்த மூன்றுமணி நேரமாக மாற்றிக் கொண்டிருக்கிறான் என தோன்ற.. அவன் அருகாமையை ரசித்தாள் வாய் பேசவில்லை.

நீலகண்டன் யாரும் வராதது பார்த்து அப்போதுதான் பார்த்தான் “ஸெல்ப் சர்வீஸ்” என்பதை. எனவே, ‘ என்ன வேண்டும்’ மனையாளை என கேட்டு சென்றான்.

ரஞ்சனி ‘என்னமோ ஆகிடுச்சி.. ம்..’ என தோன்ற சுதந்திரமாக கணவன் போன வழியெல்லாம் தொடர்ந்தது அவள் பார்வை. 

நீலகண்டன் இருவருக்கும் பழசாறு வாங்கி வந்தான்.. பேச்சு எழவில்லை இருவருக்கும்.. என்னமோ தங்களின் அருகாமையில் தாங்களே.. தங்கள் நிலை இழப்பதாக இருவருக்கும் தோன்ற.. பொது இடத்தில் பேச கூடாது என எண்ணிக் கொண்டனர். அமைதியாக குடித்து கிளம்பினர்.

மனையாளின் அருகாமை என்னை எப்படி எல்லாம் பேச வைக்கிறது.. என தோன்ற.. பின்னால் திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.. பின் தன் வண்டியின் கண்ணாடியை சரி செய்தான்.. அவளின் கண்கள் அதில் தெரிந்தது. ஒட்டி உரசி மனையாள்.. மெல்லிய அவளின் மணம் தன் நாசியில் படர்வதாக ஒரு ப்ரம்மை.. கண்ணாடியில் தெரிந்த மையிட்ட கண்கள் தன்னையே அடிக்கடி பார்க்க.. கணவன் எதோ ரதம் செலுத்தும் ராஜாவாக உணர்ந்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் அவளை.

பார்க்கிங் ஏரியாவில் அவளை இறக்கிவிட்டான்.. ரஞ்சனி இறங்கி ஒன்றும் சொல்லாமல் கிளம்பினாள். நீலகண்டன் “கடைக்கு போயிட்டு வரேன்.. நீ சாப்பிடு.. வெயிட் பண்ணாத” என்றான்.

ரஞ்சனி “இல்ல, நீங்க வாங்க..” என்றாள்.

நீலகண்டன் முகத்தில் உதடுவிரிய ஒரு புன்னகை.. மனது குறுகுறுவென அவளோடே சென்றது.. முயன்று தன்னை சமன் செய்துக் கொண்டு, அவள் பின்னால் செல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“வெண்ணிலவும் பொன்னிநதியும்..

கன்னியின் துணையின்றி

என்னசுகம் இங்கு படைக்கும்..

பெண் மயில் சுகமன்றி..

சந்தனமும் சங்கத்தமிழும்..

பொங்கிடும் வசந்தமும்..

சிந்திவரும் பொங்கும் அமுதமும்..

தந்திடும் குமுதமும்..” என வாட்ச்மேன் வைத்திருந்த FM பாடிக் கொண்டிருந்தது.

நீலகண்டன் அந்த பாடல் முடியும் வரை நின்றான்.. முதல்முறை ஒரு பாடலை நின்று ரசித்தான். நல்லா இருக்குல்ல என அவனின் மனது சொல்லிக் கொண்டது.. பெண்ணவள் அவனின் ரசனைக்கு இப்போதுதான் தொடக்க புள்ளி வைத்திருக்கிறாள்.

FMமில் வேறு யாரோ பேசவும்.. சுற்றிலும் பார்வையை திருப்பி.. தான் இருந்த இடம் உணர்ந்து, வண்டியை தன் கடை நோக்கி செலுத்தினான்.

ரஞ்சனி வீடு வந்தவள்.. வேலை கிடைத்த சந்தோஷத்தை விட.. கணவன் பேச்சே காதில் விழுந்துக் கொண்டே இருந்தது. அமைதியாக சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.

நான்கு மணிக்குதான் உணவு வந்தான் நீலகண்டன். அதுவரையிலும் உண்ணவில்லை ரஞ்சனி.

நீலகண்டன் “ஏன், சாப்பிட்டிருக்க்லாமில்ல..” என்றபடி கை கழுவி வந்தான்.

ரஞ்சனி “சும்மாதான், இன்னும் இரண்டுநாளில் வேலைக்கு போயிட்டா இப்படி வெயிட் பண்ண முடியாதில்ல அதான்” என்றாள்.

இருவரும் சேர்ந்தே உண்டனர்.

உண்டு முடிக்கவும், ரஞ்சனி போன் அழைக்கவும் சரியாக இருந்தது. கணவனிடம் இயல்பாக “ரகு அண்ணா” என சொல்லிக் கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

ரகு “ரஞ்சிம்மா… மாதவனுக்கு அக்சிடண்ட் டா…” என்றான்.

ரஞ்சனி “அண்ணா, என்ன சொல்ற.. எங்க எப்போ” என பதறினாள்.

ரகு பொறுமையாக “இரு இரு… பதறாத, மாப்பிளைகிட்ட கொடு” என்றான்.

ரஞ்சனி “இல்ல என்கிட்டே சொல்லு..” என்றாள்.

ரகு “கொடு டா..” என்றான்.

நீலகண்டன், மனையாள் போன் பேசவும்.. உணவு மேசையை சுத்தம் செய்ய தொடங்கினான். அவள் பதறவும் அவளின் அருகில் வந்திருந்தான்.  ரஞ்சனியும் கணவனிடம் போனை கொடுத்தாள். 

ரகு “நீலகண்டன்..” என தொடங்கி மாதவனுக்கு நடந்த விபத்து பற்றி சொல்லினான். நேற்று இரவில் நடந்தது.. சென்னயிலிருந்து ஊருக்கும் வந்து கொண்டிருந்தான்.. செங்கல்பட்டு அருகில் லாரி ஒன்று பக்கவாட்டிலிருந்து வந்தது தெரியாமல்.. இவர்களின் கார் அதில் மோதியது என எல்லாம் சொன்னான். சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக சொன்னான்.

நீலகண்டன் “சரிங்க, இப்போது எப்படி இருக்கார்..” என்றான்.

ரகு “தலையில் மட்டும்தான் அடி இல்லை.. மற்றபடி நல்ல அடி.. மதியம்தான் இன்னொரு காலுக்கு ஆபரேஷன் செய்ய போறாங்க..” என்றான்.

நீலகண்டன் தாங்கள் கிளம்பி வருவதாக சொல்லி போனை வைத்தான்.

ரஞ்சனிக்கு கண்ணில் நீர் சேர்ந்துக் கொண்டது.. பயமும் வந்தது.. “என்னை கூட்டி போவீங்கள்ள..” என்றாள்.

நீலகண்டன் “என்ன பேச்சு இது.. போலாம்.. நீ உட்கார்” என சொல்லி கிட்சென் வேலையை கவனித்தான்.

ரஞ்சனிக்கு, மீண்டும் போனில் அழைப்பு வந்தது.. ரகுவின் பெற்றோர் அழைத்தனர். அவர்கள் “அண்ணன் சொன்னானா பாப்பா.. நாங்க கிளம்பிட்டோம்.. நாங்க பார்த்திட்டு சொல்றோம்..” என அவர்களும் பேச.. ரஞ்சனிக்கு பயம் வந்தது.

அவர்களும் நீலகண்டனிடம்தான் பேசினர். பெண்ணுக்கு பயம் எதோ பெரிய அடி போல.. அதான் ரகு அண்ணா சொல்லவில்லை.. இவரும் போலாம்ன்னு சொல்லிட்டார்.. பெரியம்மாவும் என்கிட்டே ஏதும் சொல்லல.. என பயம்தான் ரஞ்சனிக்கு.

நீலகண்டன், கார்த்தியை அழைத்து அவனின் கார் எடுத்து வர சொன்னான். கடைக்கு அழைத்து பேசினான். கார்த்தியை கொஞ்சம் கடையை பார்க்க சொன்னான். இப்படி எல்லாம் செய்து.. இரவு தொடங்கும் நேரத்தில் கிளம்பினர் சென்னை நோக்கி.

பயணம் முழுவதும் ரஞ்சனிக்கு உறக்கமே இல்லை.. ரகுவிற்கு அழைத்து பேசிக் கொண்டே இருந்தாள். ரகு “நல்லா இருக்கான்.. நீதான் பார்க்க போறியே” என சமாதானம் சொல்லிக் கொண்டேதான் இருந்தான்.

நீலகண்டன் எதையும் தடுக்கவில்லை. அமைதியாக அவளை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டே வந்தான்.

விடியலை நெருங்கும் நேரம் வந்துவிட்டனர், மாதவன் இருந்த  மருத்துவமனைக்கு. icu இல் இருந்தான் மாதவன். ரஞ்சனியை சார்ந்தவர்கள் எல்லோரும் நின்றனர் அங்கே.. பெண்ணுக்கு அவர்களின் முகத்தை பார்க்கவும்.. தன் அப்பாவின் நிலைதான் நினைவில் வந்தது. ரகுவிடம்தான் சென்றாள் முதலில் “அண்ணா என்னாச்சு..” என கரகரவென கண்ணில் நீர் இறங்க கேட்டாள்.

ஒன்றாகவே வளர்ந்தவள்.. இந்த திருமணத்தில் அண்ணனுக்கு விருப்பம் இல்லை என்றாலும்.. நீலகண்டன் மேல் கொண்ட ப்ரியம்.. அப்பாவின் அபிப்ராயம் .. அத்தோடு தன் அண்ணன் சரியில்லா போக்கு பிடிக்காமல், நீலகண்டனை மணந்துக் கொண்டாள். அதற்காக ஒன்றாக வளர்ந்த பாசம் இல்லை என்றாகுமா.. அழுகைதான் ரஞ்சனி.

ரகு “இன்னும் கண்விழிக்களை.. அடிதான். ஆனால், அவனின் நினைவுக்கு பாதகமில்லை.. நல்லா இருக்கான்” என்றான்.

நீலகண்டனும் வந்து நின்றான் என்னவென விசாரித்தான். குரலில் சொன்னான்.. “கால்களில் நல்ல அடி.. அத்தோடு, அந்த பிரசாந்த்.. இல்லை, கட்சி.. சீட் கொடுக்கவில்லை. அதனால், அந்த கோவத்தில்.. குடித்திருக்கிறான்.. வண்டியை கோவத்தில் இவனே ஓட்டி இருக்கிறான்.. எதிரில் வந்த லாரியை கவணிக்கவில்லை.. எல்லாம் இவன் தவறுதான்.” என ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ரகு சொல்லிக் கொண்டிருந்தான்.

நீலகண்டன் எல்லாம் கேட்டுக் கொண்டான் என்ன சொல்லுவது என தெரியவில்லை. ரகுவின் பெற்றோரிடம் வந்து இரண்டு வார்த்தை பேசினான். காலையில்தான் சரியாக எல்லாம் தெரியும். எனவே, நீலகண்டன் அமைதியாக மனைவியை ஒரு இடத்தில் அமர வைத்து தானும் அமர்ந்துக் கொண்டான்.

தம்பிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான்.. நான் சென்னை வந்திருக்கிறேன், காலையில் வருகிறேன் என.

Advertisement