மகளின் பிறந்தநாள் என்பதால் முதல் நாள் செல்லம்மா வேலைக்குச் செல்லவில்லை மதிய உணவைப் பருப்பு சாதத்தோடு எளிமையாக முடித்துக்கொண்டனர்.

 

மாலை ஒரு துண்டு கேக் மட்டும் வாங்கி குழந்தைக்கு ஊட்டிவிட்டாள், புது வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும் மகளுக்கென்று ஒரு சேமிப்பை  தொடங்க வேண்டும் என்று எண்ணங்கள் சுழன்றது.

 

மறுநாள் காலை எப்பொழுதும் போல வேலைக்குக் கிளம்பினாள் “அம்மா இன்னைக்கு நான் வர நேரம் ஆகும் புது வேலைக்குக் கேட்டிருந்தேன்ல அங்க வரச் சொல்லியிருக்காங்க போய்ப் பாத்துட்டுதான் வருவேன்” என்றாள்.

 

“பாத்து சூதனமா இரு புள்ள கூடக் கலாவை கூட்டிட்டு போ” என்றார் மரிக்கொழுந்து.

 

“சரிம்மா” என்றவள் பழையதை பாத்திரத்தில் ஊற்றிக் கூடையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

 

அன்று தில்லை நகரில் ஒரு கட்சி பிரமுகரைக் காண வந்திருந்தான் பாரதி ரீடைல் பிசினெஸ் எனபப்டும் சில்லறை வணிகம் தொடங்க நண்பனின் மூலம் ஒரு இடம் பாத்துவைத்திருந்தான் கிடங்குபோல, வியாபாரம் செய்யக் கடைக்காரர்கள் அறிமுகம் தேவை இவர்மூலம் வியாபாரம் கிடைக்க வாய்ப்புண்டு.

 

என்ன அவர் கேட்கும் கணிசமான தொகையை அவருக்குத் தண்டம்  அழ வேண்டும் அதற்காக வந்து காத்திருந்தான்.

 

குப்பைகளை வாங்கி கொட்டிக்கொண்டிருக்க “ஏன்மா எவ்ளோ நாளா சொல்றேன் பெரிய வண்டி வந்தா சொல்லுங்க உடைஞ்ச சோபா கிடக்கு எடுத்துட்டு போகணும்னு இடத்தை அடைச்சுக்கிட்டு கிடக்குது இன்னைக்காவது எடுப்பீங்களா இல்லையா” என்றார் ஒரு பெண்மணி.

 

“குடுங்க கொண்டு போறோம்” என்ற கலை வீட்டிற்குள் எட்டி பார்த்துவிட்டு “இருங்க ஆளைக் கூப்பிடுறேன்” என்று வெளியில் வந்து பார்க்க வண்டி தெரு மூக்கில் நின்றது.

 

நான்கு வீடுகள் தள்ளிக் குப்பை எடுத்துக்கொண்டிருந்தவளை பார்த்த கலை “ஏய் புள்ள செல்லம்மா அண்ணனைக் கூட்டியா சோபா எடுக்கணும்” என்றாள் சத்தமாக.

 

அந்த அழைப்பில் பாரதியின் மனம் ஆட்டம்கண்டது அந்த வீட்டின்  வெளியே இருந்த காத்திருப்போர் இடத்தில் அமர்ந்திருந்தவன் மெல்ல எழுந்து கேட்டின்  அருகில் வந்தான் தன் மனைவியின் பெயரில் யாரோ ஒருத்தி அந்த நினைப்பில்தான் வந்து நின்றான்.   

 

கொஞ்சம் தள்ளித் துப்புரவு பணியாளர்கள் அணியும் சட்டை அணிந்து ஒரு பெண்ணும் உடன் ஒரு ஆணும் வந்தனர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து சோபாவை எடுத்துக்கொண்டு சென்று வண்டியில் ஏற்றினர் அவர்களின் முகம் இவனுக்குத் தெரியவில்லை.

 

“ஏம்மா செல்லம்மா இந்தா இந்தப் பழைய துணி எல்லாம் எடுத்துவெச்சு ஒரு வாரம் ஆகுது இதையும் எடுத்துப்போட்டு போங்க” என்றார் அடுத்திருந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி.

 

“தோ வரேன்னே” என்றவள் அந்தப் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்து நிற்கப் பார்த்தவன் உயிர் ஒரு நொடி நின்று துடித்தது.

 

“செல்லம்மா… என் செல்லம்மா” என்றவனின் உடல்  நடுங்கியது அவன் அதிர்ந்து அதே இடத்தில் நிற்க அவள் எப்பழுதோ சென்றிருந்தாள்.

 

“பாரதி டேய் பாரதி எவ்ளோ நேரமா கூப்பிடுறேன் வாடா அவர் வந்துட்டார் இப்போ விட்டா அப்புறம் திரும்பப் பாக்க முடியாது சீக்கிரம் வா” என்று நண்பனை இழுத்து சென்றான் சந்துரு.

 

பாரதியின் உலகம் அவளைக் கண்ட நேரத்தோடு நின்று போயிருந்தது சந்துருவே  அனைத்தையும் பேச அங்கே அமர முடியாமல் தத்தளித்தான்  பாரதி.

 

சந்துரு மெல்ல இவனைச் சுரண்ட திரும்பிப் பார்த்தான் “உன்னைத்தான் கேக்குறார்” என்றான்.

 

இவன் அவரை நிமிர்ந்து பார்க்க “என்ன தம்பி வந்ததிலிருந்து என்னமோ மாதிரி இருக்கீங்க  நான் சொன்னது உங்களுக்குச் சம்மதம் இல்லையோ” என்க இவன் திரும்பிச் சந்துருவை பார்த்தான்.

 

அவன் மெதுவாக அவர் கேட்ட தொகையை இவன் செவியில் சொல்ல “செஞ்சிடலாம்ண்ணா” என்றான் அமைதியாக.

 

“அப்போ சரி நீங்க ஆரம்பிங்க” என்றவர் வெளியில் கிளம்பிவிட புயல் வேகத்தில் வெளியேறியவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியின் முன் சென்று நின்றான்.

 

“அண்ணே கொஞ்சம் நேரம் முன்னாடி இங்க துணி எடுத்துட்டு போனாங்களே அந்தப் பொண்ணு அவங்க எங்க போயிருப்பாங்க” என்றிவன் மென்று விழுங்கிக் கேட்க.

 

“குப்பை எடுக்குறவங்களா தம்பி” என்றார் அவர் இவன் விழிகளை இறுக மூடித் திறந்தான்.

 

“அவங்க கிளம்பியிருப்பங்களே தம்பி”.

 

“எங்க போவாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா” என்றான் இவனை ஒருமாதிரி பார்த்தவர்.

 

“ஏதாவது முக்கியமான பொருளைக் குப்பைல போட்டுடீங்களா தம்பி திரும்ப வேணுமா அது கஷ்டமங்கலே போற வழியிலே எடைக்குப் போடவேண்டியது எல்லாத்தயும் போட்டுட்டு அப்புறமா தான் போவாங்க,  பஸ் ஸ்டான்ட் பக்கம் இருக்கலாம் எனக்குச் சரியா தெரியலைங்க” என்றார்.

 

“எந்தப் பஸ்ஸ்டாண்ட் என்றும் தெரியாது” என்றார், அலைந்தான் எங்கெங்கோ தெருத்தெருவாக.

 

இவன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு என்ன செய்ய என்று தெரியாமல் நின்றான்,  அவன் அருகில் நின்றிருந்த சந்துரு “என்னடாச்சு ஏன் அப்படி ஓடி  வந்த எதுக்கு அவங்களை பத்தி கேக்குற” என்றான்.

 

ஒன்றும் பேசாமல் நண்பனைப் பார்த்தவன் “நீ வா உன்ன வீட்டில விட்டுட்டு போறேன்” என்று அவனை அழைத்துச்சென்று அவன் வீட்டில் விட்டுவிட்டு பேருந்து நிலையம் சென்றான் அதன் பின்பக்கம் உள்ளே கொஞ்சம் தாள்ளிதான் அவர்கள் கூடுவது இவன் சென்றபோது அவர்கள் வந்திருக்கவில்லை வெகுநேரம் தேடி அலைந்தான் யாரையும் காணமுடியவில்லை.

 

அங்கிருந்த அலுவலகத்தில் விசாரித்தான் அவர் இடம் சொல்லி “குப்பய கொட்டிட்டு அங்கதான் எல்லாரும் போவாங்க அங்க போய்ப் பாருங்க” என்றார், அங்கேயே காத்திருந்தான் ஆனால் அவள் வரவில்லை அவள் தான் புதிய வேலை தேடி ஸ்ரீரங்கம் அருகில் இருக்கும் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு கலாவுடன் சென்றிருந்தாளே.

 

அங்கும் சுத்தப்படுத்தும் பணிதான் என்ன இங்குப் போல வீடு வீடாகச் சென்று சேகரிக்க வேண்டாம் இருபத்தி ஐந்து ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடைக்கும் பூங்காவில் நடைபாதை மக்கள் கூடம் இடம் அனைத்தையும்  கூட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அந்த வேலைக்குத்தான் சொல்லி வைத்திருந்தாள்.

 

கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வந்து காத்திருந்தாள் “இங்க பாருமா நிரந்தர வேலை எல்லாம் கிடையாது இதுதான் சம்பளம் வேண்டாம்னு தோணினா எப்போவெனா அனுப்பிடுவோம்” என்று முதலிலேயே தெளிவாகப் பேசினர்.

 

சம்பளம் அவளுக்கு நல்ல தொகையாகவே தெரிந்தது அதோடு இந்த அலைச்சலும் மன சுணக்கமும் கொஞ்சம் குறையுமே என்ன பயணம்தான் கொஞ்சம் அதிகம் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை வேலை நேரம்.

 

அப்போ “ஒண்ணாம் தேதில இருந்து வந்திடுமா” என்றார் இன்னும் பத்து நாட்கள் இருந்தது “சரிங்க” என்றவள் கொஞ்சம் மனநிம்மதியுடனே வெளியில் வந்தாள்.

 

கலையின் கணவன் யார் மூலமோ இங்கு வேலைக்கு ஆள் தேவை என்று அறிந்து இவளிடம் கூறி கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடையாக நடந்து பெற்றிருக்கிறாள்.

 

மாலைவரை அங்கே காத்திருந்தும் அவள் வரவில்லை அங்கு வந்து சென்றவர்களில் அவளுடன் இருந்தவர்கள் யார்  என்றும் அவனுக்குத் தெரியவில்லை, சத்திரம் பேருந்து நிலயமா சென்ட்ரல் பேருந்து நிலயமா என்று தெரியாமல் இங்கும் அங்கும் அலைந்தான் மிகவும் சோர்ந்து களைத்து தான் வீடு வந்து சேர்ந்தான்.

 

மாலை மங்கிக்கொண்டிருந்தது வந்தவனை தன் வீட்டு வாசலிலே வழிமறித்து நிறுத்தினான் வெங்கட் “உன்கிட்ட பேசணும்னு சொன்னேனே பாரதி முக்கியமான விஷயம்” என்க தளர்வாக அவர்களின் வீட்டு திண்ணையில் அமர்ந்தான்.

 

தேவி வந்தவள் அவனைப் பார்த்துவிட்டு டீப்போட உள்ளே சென்றாள் “நேத்து சோமு போன் செஞ்சான் செல்லம்மாவை பாத்தானாம்” என்க.

அண்ணனைக் கேள்வியாகப் பார்த்தான் பாரதி “தான் பார்த்த அதே கோலத்திலா? தன் மனைவியை அப்படியொரு நிலையில் அவரும் பார்த்திருப்பாரா ஏன் இன்னும் இந்தப் பூமியில நான் இருக்கேன்” என்று தோன்றிவிட்டது அவனுக்கு.

 

“சத்திரம் பஸ்டாண்ட்ல பாத்திருக்கான் ஒரு குழந்தையும் இருந்துச்சாம்   கைல, எப்படியும் ரெண்டு வயசு இருக்கும்னு சோமு சொன்னான்” என்க சட்டென்று திரும்பித் தேநீரோடு நின்ற தேவியை பார்த்தான்.

 

விழிகளில் அத்தனை பரிதவிப்பு “இருக்குமா” என்பதாக.

 

“இல்லை” என்பதாகத் தலை ஆட்டியவள் விழிகள் கூடக் கலங்கியது,  தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

 

“ஒருவேள வேற யாரோட  குழந்தையா இருக்குமோ” என்றான் வெங்கட்.

“இருக்கும் தனக்குத்தான் அந்த வரம் கிடைக்காமலே போய் விட்டதே கருவறை வரை வந்தும் வேண்டாம் என்று சென்றுவிட்டதே,  அதுவாகச் செல்லவில்லை அவள் தானே உன் பிள்ளையைச் சுமக்கமாட்டேன் என்று கலைத்துவிட்டாள்” என்று குற்றம் சுமத்தியது மனது.

 

இப்பொழுதும் அவனால் அதை நம்ப முடியவில்லை தன் செல்லம்மாவால் அப்படி ஒன்றை செய்ய முடியுமா தன் பிள்ளையை அவளால் வெறுக்க முடியுமா அதை அழிக்கத் துணிவாளா அபப்டி பட்டவள் இல்லையே என் செல்லம்மா பிறகு எப்படி என் பிள்ளை இல்லாமல் போனது.

 

அப்படித்தானே அம்மாவும் அக்காவும் சொன்னார்கள் “உன் மேல இருந்த கோவத்துல கருவை அழிச்சுட்டா உன் பொண்டாட்டி ஒரு  பொட்டச்சிக்கு இத்தனை ஆங்காரம் ஆகுமா தம்பி, என் புள்ளயோட மொத வாரிசை இப்படி அழிச்சுட்டாளே விலங்குவாளா” என்று அவன் தாய் அத்தனை பேசினாரே.

 

அவனால் இப்பொழுதும் நம்பமுடியவில்லை அவள் அதைச் செய்திருப்பாள்  என்று, அவன் திரும்பி அண்ணியை பார்த்தான்.

 

“முட்டாளா மூணு வர்ஷம் இருந்துட்டேன் என்னால இன்னுமுமே அதை நம்ப முடியல செல்லம்மா அப்படி செய்யமாட்டா கருவை உண்மையிலே அவதான்…” என்றவனால் அதற்குமேல் கேட்க முடியவில்லை.

 

“இல்லை” என்றாள் தேவி.

 

“மூணு வருஷமா இந்த உண்மையை உன்கிட்ட சொல்ல முடியாம பாவம் செஞ்சுட்டேன்னு உள்ளேயே வெச்சு தவிச்சுட்டு இருந்தேன்,  அன்னைக்கு ரொம்ப மழை  வேற,  காலைல சாப்பிட்டது அந்தப் பிள்ள அதுக்கு அப்புறம் சாப்பிடல கீழ வரவும் இல்ல”.

 

“ராத்திரி பாத்ரூம் போகக் கீழ வந்திருக்கு வெளில பாசி வழுக்கி… யாருமே கவனிக்கல பிரச்சனை வேற  நடந்து முடிஞ்சிருந்துதே எல்லாரும் ரூம்ல போய் முடங்கிட்டாங்க,  அப்போவே வலி வந்திருக்கு அதுவே எழுந்து ராசு அண்ணா வீட்டுக்குப் போயிருக்கு”.

 

“முடியல ஹாஸ்ப்பிட்டல் போகணும்னு சொல்லியிருக்கு அது முகத்தை வெச்சே ஏதோ சரியில்லைன்னு தெரிஞ்சு அவர்தான் கொண்டுபோயிருக்கார், காலைல நான் டியூட்டிக்கு போனப்போதான் எனக்கே தெரிஞ்சுது”.

 

“ என்கிட்டயும் அவ பேசவேயில்லை அங்க இருந்த வேற நர்ஸ் கிட்ட போன் வாங்கி அவங்க வீட்டுக்கு அவளே தகவல் சொல்லியிருக்கா, நம்ம வீட்டு ஆளுங்களுக்கு அவ வீட்ல இல்லன்றதே தெரியல நான் கூப்பிட்டு இந்தமாதிரின்னு சொன்ன அப்புறம் தான் தெரிஞ்சிருக்கு”.

 

“அதுக்குள்ள அத்த அவளே போய்க் கலைச்சுட்டான்னு எல்லார்க்கும் சொல்லி ஒரே கலவரம் செஞ்சுட்டாங்க நான் சொல்லியும் கேக்கல,  செல்லம்மாவோட மாமா மட்டும்தான் வந்திருந்தார் அவங்க அம்மாகிட்ட விஷயம் சொல்லாம அவர் மட்டும் வந்திருந்தார்”.

 

“அவர பாக்குற வரைக்கும் உன் பொண்டாட்டி ஒத்த வார்த்தை பேசல ஒரு சொட்டு கண்ணீர் விடல அப்படியே கல்லு மாதிரி அசையாம இருந்தா,  அந்த மனுஷன் வந்து தாயின்னு ஒத்த வார்த்தைதான் கூப்பிட்டார் அப்படியொரு அழுகை கதறி தீர்த்திட்டா”.

 

“எங்க அம்மா மாதிரியே என் வாழ்க்கையும் முடிஞ்சு போய்டுச்சே மாமா அதுக்காவது நான் இருந்தேன் எனக்கு என் பிள்ளையும் இல்லாம போய்டுச்சு மாமான்னு அவ கதறினது இன்னும் கேக்குது”.

 

“நான்  அப்போ  கூட இவ்ளோ யோசிக்கல  பாரதி, சரியாயிடும் ஏதோ அப்போதைய கவலை வலி அப்படி பேசுறா வீட்ல சமாதானப்படுத்தி கொண்டு வந்து விடுவாங்கன்னு நினச்சேன், ரெண்டு வாரம் கழிச்சு வந்தா”.

 

“அவங்க மாமா வீட்டுக்கு உள்ளக்கூட வரல அவ நேரா மேலே போனா ஒரு பைலை சில துணிய எடுத்தா கிளம்பிட்டா,  நீயும் பேசினியே யார் சொல்லியும் கேக்கல இவங்க எல்லாருமே உங்க அம்மா சொன்னதை தான் நம்பினாங்க அவளே போய்க் குழந்தையை அழிச்சிட்டான்ன்னு அதுல எல்லார்க்கும் கோவம் எங்க போய்டுவா இங்கதான் வரணும்னு இருந்துட்டாங்க” என்றாள் தேவி.

 

மடார் மடார் என்று தலையில் அடித்துக்கொண்டான் மணி “பாரதி டேய் என்ன பண்ற பாரதி பாரதி” என்று அவன்  கையைப் பிடித்துத் தடுத்தான் வெங்கட்.

 

சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர் “என்னாலே என்னாச்சு பாரதி என்ன செய்ற” என்று அருகில் வந்த தாயை கண்டு “” என்று சீறினான் பாரதி.

 

“எவ்ளோ பொய் உங்களுக்கெல்லாம் என்ன கெடுதல் செஞ்சேன் இவ்ளோ பெரிய பழியை தூக்கி அவ மேல போட எப்படி மனசு வந்துச்சு உங்களுக்கு,  உங்கள எதுக்கு சொல்லணும் என்னய சொல்லணும் முட்டாள் முட்டாள் குடும்பம் குடும்பண்ணு நான் ஓடினேன் கடைசில என்னய குடும்பம் இல்லாமலே நிக்க வெச்சுடீங்க”.

 

“ஏதோ சின்ன சின்ன உள் பூசல் மத்தபடி அவளை நல்லா பாத்துப்பீங்கன்னு நம்பித்தானே விட்டுட்டு போனேன்,  நான்  தான்  வரமா போனேன் நீங்க எல்லாரும் இங்கதான இருந்தீங்க ஒருத்தருக்கு கூடவா அவளைப் போய்ப் பாக்கணும் விசாரிக்கணும்னு தோணல” என்றவன் தந்தையை பார்த்தான்.

 

அவர் அதிர்ந்து நின்றிருந்தார் மகன் இப்படியெல்லாம் கேள்வி கேட்ப்பான் என்று அவர் நினைக்கவில்லை,  மருமகள் மீது கோபமாகத்தான் இருக்கிறான் எப்படியாவது பேசி அவளைப் பிரித்துவிட்டுவிட்டுவிடலாம் என்றுதானே எண்ணியிருந்தார்.

 

அன்றைய கலவரத்துக்குப் பின் அவன் அவளைப் பற்றி எதுவுமே யாரிடமும் பேசியதில்லையே ஆகையால் அவர்களாக அபப்டி  நினைத்துக்கொண்டனர்.

 

“யாரவது ஒருத்தர் போய்க் கொஞ்சம் வர்ஷம் வேலை செஞ்சா நம்ம குடும்பத்தைக் கரை ஏத்திடலாம் பாரதி அண்ணனுங்க போக விரும்பல நீ போறியான்னு என்கிட்டே கேட்டிங்களே உங்களுக்கு ஞாபகம் இருக்கா”.

 

“அன்னைக்கு மறுவார்த்தை பேசாம கிளம்பி போனேன்,  பெரியண்ணன் வேளைக்கு இவ்ளோ பணம் வேணும் கேட்டீங்க அனுப்பினேன் அவர் வீடு பாதில நிக்குது சொன்னீங்க  அனுப்பினேன்”.

 

“ரமேஷ் அண்ணனுக்கு எலக்ட்ரிக் கடை வைக்கக் காசு பத்தலை சொன்னீங்க அனுப்பினேன் அவர் கல்யாணத்துக்கு கேட்டீங்க அனுப்பினேன்,  அக்கா கல்யாணம் சீர்,  சுரேஷ் வீடுமேல் மாடி கட்டறதுக்கு விக்னேஷ் படிப்புச் செலவு இப்படி எல்லாமே செஞ்சேன்”.

 

“என் வீட்டுக்கு ஒரு செங்கல் வாங்கி குடுத்திருக்கீங்களா யாராவது  ஏன் என் கல்யாணமே உங்க மக வாழ்க்கைக்காகத் தானே நடந்துச்சு,  ஆனா அவளை விரும்பித் தான் கட்டினேன் அவளோட நிறைவாத்தான் வாழ்ந்தேன்  இன்னுமும் உசிராத்தான் இருக்கேன் இனிமேலும் அப்படிதான்”.

 

“உங்களுக்குச் செஞ்சதை சொல்லிகாட்டல இதுவரைக்கும் கணக்கு கேட்டதில்லை நான் கஷ்டப்பட்டு உங்களுக்கு ஏன் செய்யணும்னு கேட்டதில்லை,  என்னோட குடும்பம் அப்படி நினைச்சுதான் செஞ்சேன் ஆனா வேற வேறன்னு காட்டிடீங்க”.

 

“இத்தன பேர் இருக்கீங்க கூடப் பொறப்புன்னு  ஒருத்தர் கூட என் வாழ்க்கையை பத்தி யோசிக்கல உங்க குடும்பம் எல்லாம் உங்க கூடவே இருக்கு,  ஒன்னும் தெரியாத சின்னப் பிள்ளையை உங்களை எல்லாரையும் நம்பித்தான் இங்க விட்டுட்டு போனேன் அது என் தப்புனு செருப்பால அடிச்ச மாதிரி காமிச்சிடீங்க” என்கவும்.

 

அண்ணன்களும் தாய் தந்தையும் “பாரதி” என்று பதறி வர “”என்கிட்டே யாரும் வரக் கூடாது என்னை நம்பி வந்தவளை நான் தானே பார்த்திருக்கணும் உங்களை எதுக்கு குறை சொல்லிட்டு நான் பாத்துக்குறேன் என்றவன் வீடு நோக்கி நடந்தான் அனைவரும் ஸ்தம்பித்து அபப்டியே நின்றனர்.

 

அன்று இரவு தூக்கமே இல்லை அவனுக்கு எப்படி அழுது கரைந்தார் அவன் தாய் “தம்பி பாரதி உன் மேல இருந்த கோவத்துல பிள்ளையைக் கொன்னுட்டாடா அந்தப் பாவி ஐயோ ஒன்னும் தெரியாத பச்சை மண்ணுனு நீ சொல்லுவியே அவ செஞ்ச வேலைய பாத்தியா” என்று அப்படியொரு அழுகை.

 

இவர்கள் எல்லோருமே அமைதியாகத்தான் நின்றார்கள் அதுதான் உண்மை  என்பதாக மூன்று வருடங்களாக அவனும் அப்படித்தானே நம்பினான்.

 

“பாப்பா வந்துட்டா என்னய பாக்க வருவீங்களா மாமா “என்று அன்று ஆசையாகக் கேட்டாளே.

 

“பாக்கலாம் செல்லம் முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்றேன்” என்றவன் “நான் இல்லாம சமாளிச்சுடுவியா இங்க கஷ்டமா இருந்தா உங்க அம்மாகிட்ட போய்டு நான் பேசிக்குறேன்” என்றான்.

 

“நான் சாமிகிட்ட வேண்டிக்குறேன் பாப்பா தங்கிடணும் அப்போ நீங்க வருவீங்கதானே பாப்பாவை  பாக்கவாவுது,  எனக்கு உங்களைப் பாத்தா போதும் மாமா” என்றவளை இறுக அனைத்திருந்தான்.

 

மறுநாள் அதிகாலை நான்கரைக்கே சென்றுவிட்டான் இதயம் எகிறி வெளியில் குதித்துவிடும் போல அப்படியொரு படபடப்பு கையெல்லாம் சில்லிட்டது மெல்ல மெல்ல இருள் விலகி ஆதவன் வெளிவர ஆட்கள் நடமாட்டமும் அதிகரித்தது.

 

பார்த்துவிட்டான் அவன் உயிரை மூச்சு வெளிவருவேனா என்று அடித்துக்கொண்டது நெஞ்சை நன்றாக நீவிவிட்டான் அருகில் வர வர அவளும் கண்டுகொண்டாள் அப்படியே நின்றுவிட்டாள் கால்கள் வேரோடியது மயக்கம் வரும்போலச் சட்டென்று திரும்பி நடந்தாள்.

 

“செல்லம்மா” என்றான் வராத குரலை உயர்த்தி அவள் நிற்கவில்லை நடுங்கிய கால்களை இழுத்துக்கொண்டு வேக நடையில் செல்ல முயன்றாள் முடியவில்லை கத்தி அழ வேண்டும் போல இருந்தது.

 

வேக மூச்சுக்களை எடுத்துத் தன்னை தானே திடப்படுத்திக்கொண்டு சென்றாள் புயல் வேகத்தில் அவளை நெருங்கினான் “செல்லம்மா” என்றவன் அவள் கையை அழுத்தமாகப் பிடித்தான்.

“விடுங்க நான் அழுக்கு” என்றவளுக்கு அழுகை முட்டியது அவளை இழுத்து கொண்டு சுவற்றின் பின் பக்கம் சென்றவன் இறுக்கமாக அணைத்தான்.

 

அவளுக்கு இப்பொழுதான் உண்மையில் மூச்சு முட்டியது முகம் எங்கும் முத்தங்கள் பதித்தான்,  பலம் கொண்டமட்டும் அவனைத் தள்ளிவிட்டாள்.

 

“தொடாதீங்க எனக்கு நீங்க வேண்டாம் இப்படித்தானே அந்த… அந்தப் பொண்ணையும் இப்படி இப்படி இங்க இங்க தொட்டு… போ… போ… எனக்கு வேண்டாம் நான் உங்களுக்கு ரெண்டாவது தானே” என்று அங்கேயே மடிந்து அமர்ந்து வெடித்து அழுதவளை இதயம் நொறுங்க பார்த்து நின்றான் மணி பாரதி.