பெரிதாகப் பிரச்சனைகளோ சண்டைகளோ இல்லாமல் நாட்கள் மெதுவாக நகர்ந்தது கணவன் ஊருக்குச் சென்ற கவலையிலிருந்து மெல்ல மெல்லத் தேறி நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தாள் செல்லம்மா.
பாரதி ஊருக்குச் சென்ற நான்காம் நாள் காலை உடன் படித்த பெண்ணை பதிவு திருமணம் செய்துகொண்டு வந்துநின்றான் விக்னேஷ், அந்தப் பெண்ணிற்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் நடக்கவிருக்க இவனுடன் வந்துவிட்டாள்.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வாசலில் கூடிவிட்டார்கள் பெண்ணின் சொந்தங்களும் அவளைக் கட்டவிருந்த மாப்பிள்ளையின் சொந்தங்களும். வாய்ச்சண்டை முற்றிக் கைகலப்பாக போலீஸ் வந்துவிட்டது, பெரியவர்கள் காவல் நிலையும் சென்று பஞ்சாயத்து பேச அந்தப் பையனின் வீட்டினர் பெண்ணையும் பெண் வீட்டினரையும் கேவலமாகப் பேசி சென்றனர்.
கூனிக் குறுகி நின்ற நர்மதாவின் தந்தையும் தாயும் இனி தங்களுக்கு இப்படி ஒரு மகளே இல்லையென்று கிளம்பிவிட்டனர். விநாயகமும் வெங்கட்டும் மணமக்களை வீட்டிற்கு அழைத்துவந்தனர், சரளா அவர் பங்குக்கு ஆடி தீர்த்தார்.பெண் சாமர்த்தியமாக அவளுக்குத் தந்தை சேர்த்துவைத்திருந்த நாற்பது சவரன் நகையோடு வந்திருந்தாள் கூடவே வேலையும் இருந்தது அவளுக்கு ஆகையால் சரளாவின் சுருதி குறைந்து மருமகளை ஏற்றுக்கொண்டார்.
அன்றைய நாள் அப்படியே சென்றது பாரதிக்கும் விஷயத்தைத் தெரியப்படுத்தியிருக்க இவர்கள் வீடு வந்தபிறகு விக்னேஷே அண்ணனுக்கு அழைத்துப் பேசினான் அவன் திட்டியதையெல்லாம் வாங்கிக்கொண்டு அமைதியாக நின்றான்.
மறுநாள் பாரதி செல்லம்மா இருந்த அறையை விக்னேஷ் நர்மதாவுக்கு கொடுக்கச் சொன்னார் சரளா. செல்லம்மா அவரை அதிர்ந்து பார்க்க “நீ பாதி நாள் உன் அம்மா வீட்டில்தானே இருக்க அதோட பாரதியும் இங்க இல்லையே இப்போ புதுசா கல்யாணம் ஆனவங்க வேற எங்க போக நீ மாடில தங்கிக்கோ உன் பொருள் எல்லாத்தயும் எடுத்துப்போ” என்றார்.
“இது சரியில்ல சரளா வீடு பாரதியோடது அவன் பொண்டாட்டியை நீ மேல தங்க சொல்ற அவனுக்கு மட்டும் தெரிஞ்சது அவ்ளோதான் சின்னவனையும் அவன் பொண்டாட்டியும் மேல போக சொல்லு” என்றார் விநாயகம்.
“கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க அங்க பாத்ரூம் கூட இல்ல புது பொண்ணு கஷ்டமா இருக்காதா கொஞ்ச நாள்தான் வேற வழி யோசிக்கலாம்” என்று கணவனின் வாயை அடைந்துவிட்டார்.
மனைவி சொல்லாமலே இரண்டு நாட்களில் கண்டுபிடித்துவிட்டான் பாரதி. அப்படி ஒரு கோபம் தாய்க்கு அழைத்தவன் ஆடித்தீர்த்துவிட்டான், தம்பிக்கு அழைத்தவன் “எவ்ளோ சீக்கிரம் முடியுமோ வீட்டு வேலை ஆரம்பி லேட் ஆகும்னா வாடைக்கு போ” என்று காய்ந்தான். இறுதியில் செல்லம்மாவே “நான் எப்படியும் அம்மா வீட்டுக்கு போய்டுவேனே பாத்துக்கலாம்” என்றுவிட்டாள். கணவனுடையது மற்றும் தன்னுடைய உடைகள் தங்களுடைய பொருட்கள் அனைத்தையும் மேலே கொண்டுபோய் வைத்துவிட்டு அங்கேயே இருந்துகொண்டாள்.
அப்படி உங்களை நிம்மதியாக வாழவிடுவேனா என்பதாக விதி விளையாடியது, செல்லம்மாவின் தாத்தா கருப்பசாமி தூக்கத்திலேயே உயிர் நீத்திருந்தார். இங்கிருந்து அனைவரும் சென்றிருந்தனர் பாரதி ஊருக்குச் சென்ற பத்தாம் நாள் அவர் இறந்திருக்க அவனால் வர இயலவில்லை அலைபேசியில் அழைத்து அவன் பேச இவர்களும் புரிந்துகொண்டு பேசினர்.
செல்லம்மா தாயுடன் அங்கேயே பதினாறு நாள் தங்கியிருந்தாள், பதினாறாம் நாள் காரியத்தில் தான் பிரச்சனை வெடித்தது செல்லம்மாவின் பெரியம்மா விசாலம் பிரச்சனையைத் தொடங்கி வைத்தார். செல்லம்மாவின் கல்யாணத்திற்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் தனக்கும் பங்கிருக்கிறது தன்னிடம் சொல்லாமலே அதை மரிக்கொழுந்தும் செல்வமும் பங்கிட்டுக்கொண்டனர் என்று வழக்குப் பதிவு செய்து வந்திருந்தார்.
பதறிப் போய்விட்டார் மரிக்கொழுந்து “என்னக்கா செஞ்சிருக்க நீ!! உனக்கு எல்லாமே குடுத்துதானே கல்யாணம் செஞ்சோம் சின்ன அக்காவுக்குத் தான் ஒண்ணுமே கொடுக்கல அதுக்கு பதிலாதான் செல்லம்மாவுக்கு கொடுத்தோம் அதோட அப்பா முன்னாடியே சொல்லிட்டாரே உனக்கு அந்த இடத்திலயோ இந்த வீட்டிலேயே பங்கில்லைன்னு அப்பறம் என்ன” என்றார் செல்வம் கோபமாக.
“அவர் சொல்லிட்டா நான் போயிடணுமா ஏக்கர் கணக்குல நிலம் சும்மா தூக்கி குடுக்கணுமா” என்றார்.
“உனக்கு நகை போட்டு இடமும் குடுத்திருக்கே இன்னும் என்ன வேணும்” என்க.
அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து தன் பங்கைத் தரவேண்டும் இல்லையேல் வழக்கு நடக்கும் என்றார் அவர் பதினாறாம் நாள் காரியத்திற்கு வந்திருந்த பாரதியின் வீட்டினர் அனைவருக்கும் அதிர்ச்சி ஆளாளுக்கு ஒன்று பேச ஒரே கலவரம்.
செல்லம்மா தாயின் கைகளை அழுந்த பிடித்துக்கொண்டாள், அந்த இடத்தைக் கணவனின் அக்காவுக்குக் கொடுத்திருக்கிறார்கள், அதற்கான பணத்தைத் தருகிறேன் என்று தன் கணவன் கூறியதைத் தாயும் மாமாவும் மறுத்துவிட்டார்கள். ஆகையால் கணவனும் நாத்தனாரும் கொஞ்சம் நகைகளை அவர்கள் சார்பாகத் தனக்குப் போட்டிருக்கிறார்கள் இதுவரைதான் அவளுக்குத் தெரியும். அதன் உள்ளே உள்ள விவரம் ஒன்றும் அவளுக்குத் தெரியாது.
ஏற்கனவே மாமியாருக்குத் தன்னை பிடிக்காது இப்பொழுது என்று யோசிக்கும்போதே அவள் விழிகள் சரளாவின் மீது படிந்தது அவள் பயந்த போலவே செல்லம்மாவை பார்வையாலே எரித்துக்கொண்டிருந்தார் சரளா, அவர் அருகில் நின்று அழுதுகொண்டிருந்த பத்மா அவரிடம் ஏதோ கோபமாகப் பேசுவதும் அவர் அதற்குப் பதில் சொல்லிக்கொண்டே தன்னையும் தன் தாயையும் முறைப்பதையும் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் நடுங்கியது.
“எவன் ஊட்டு சொத்தை எவன் எடுத்துட்டு போறது என் அப்பா சம்பாரிச்ச சொத்து உங்க வீட்டுக்கு பொண்ணுக்கா? ஏக்கர் கணக்குல இடம் கிடைக்குதுன்னு தெரிஞ்சதும் பல்ல காமிச்சிட்டு வந்துட்டீங்க உங்க வீட்டு பொண்ணுக்கு நீங்கதான் சம்பாரிச்சு குடுத்து விடணும் அடுத்தவன் வீட்டுப் பொருளை எடுத்து உன் வீட்டு பொண்ணை வாழவைக்கிறதெல்லாம் என்ன பொழப்பு. உன் வீட்டுப் பையனை வெச்சு வியாபாரம் நடத்துறியா” என்று விசாலம் கண்டமேனிக்கு பேச அங்கே கைகலப்பானது சரளா ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.
விஷயம் பாரதியின் செவிக்கும் சென்று சேர்ந்தது. செல்வதை அழைத்துப் பேசியவன் கொஞ்சம் கோபமாகப் பேசிவிட்டான் “நான் அன்னைக்கே காசு தரேன் சொன்னேன் நீங்க கேக்கல, இல்ல என்கிட்டயாவது இப்படிப் பிரச்சனை இருக்குனு சொல்லியிருக்கணும்” என்று பேச “மாப்ள இதுல அக்காவுக்குப் பங்கில்லை அதுதான் உண்மை அவங்க வேணும்னே பிரச்சனை செய்றாங்க என்றார்” உள்ளே போன குரலில்.
“பங்கில்லைனு நீங்க சொன்னா போதுமா இப்போ இது கேஸாயி கோர்ட் போனா எங்க அக்கா நிலைமை என்ன? அது புகுந்த வீட்டில எவ்ளோ பிரச்சனை அதை யோசிசீங்களா” என்றான் அவருக்கும் புரிந்தது ஆனால் இதில் இவர்கள் பக்கமும் தவறில்லையே.
“இப்போ உடனே அவ்ளோ பணம் ஏற்பாடு செய்யவும் முடியாது” என்றவன் அதே கோபத்தோடு அலைபேசியைத் துண்டித்தான். அவனுக்கு அவன் வீட்டிலிருந்தும் அத்தனை அழுத்தங்கள் “உன் பொண்டாட்டி அமுக்குணி மாதிரி இருந்து காரியம் சாதிச்சிருக்கா இவ்ளோ பெரிய உண்மையை உன்கிட்டயாவது சொன்னாளா, இப்போ என் மக வாழ்க்கைக்கு என்ன பதில்” என்று சரளா அவன் நிம்மதியைப் பறித்தார்.
பத்மா வேறு ஒரு பக்கம் “ராத்திரி பகல் பாக்காம நானும் அவரும் ஓடா தேஞ்சு வேலை பார்த்து இப்போதான் நிலத்தைச் சீர் செஞ்சு வெதச்சோம். எல்லாம் கூடி வர நேரத்துல பிரச்சனை வந்தா எங்களால அறுவடை செய்ய முடியாதே நாங்க கஷ்டப்பட்டது எல்லாம் வீனா போகுமே உன்னை நம்பினேனே” என்று ஒருபக்கம் அவனைக் குற்றவாளி ஆக்கினாள்.
‘நானா கேட்டேன் நீங்கள்தானே உங்கள் சுயலாபத்துக்காக இந்த சம்பந்தத்தைக் கொண்டு வந்தீர்கள்’ என்று காத்த வேண்டும் போல இருந்தது முடியவில்லை அடக்கிக்கொண்டான், மனைவியிடம் பேசவேயில்லை அவளும் என்னிடம் கூறவில்லையே என்ற கோபம். பத்து நாட்களுக்கு பிறகே செல்லம்மாவுக்கு அழைத்தான் “மாமா…” என்றவள் குரலே அவள் கலக்கத்தைக் கூறியது.
இந்தப் பத்து நாட்களும் அவள் உடலில் உயிர் மட்டுமே இருந்தது அலைபேசியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கிடந்தாள் அவன் அழைக்க மாட்டானா என்று, அவளின் அழைப்பையும் அவன் ஏற்கவில்லையே சில நொடிகள் அமைதியாக இருந்தவன் “உனக்குக்கூட என்கிட்டே சொல்லணும்னு தோணல இல்ல” என்க.
“சத்தியமா எனக்கு இதெல்லாம் தெரியாது அம்மா மாமாவுக்கே தெரியாது இதுல இவங்க பிரச்சனை செய்வாங்கன்னு நாங்க நினைக்கல” என்றாள் அழுகையோடே குரலே எழும்பவில்லை அவளுக்குக் கொஞ்ச நஞ்சமா இந்தப் பத்து நாட்களில் அவள் அழுது தீர்த்தது.
“என்ன நினைக்கல? இந்தக் கல்யாணமே அந்த இடத்துக்காகத்தான் நடந்தது அது உன் வீட்டில எல்லார்க்கும் தெரியும்தானே இந்தக் கல்யாணம் நடந்தா விவசாயம் செய்ய எந்த இடம் கிடைக்கும்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டுதான் அக்கா இந்த சம்பந்தத்தையே கொண்டுவந்துச்சு, உங்க வீட்டுலயும் ஒத்துக்கிட்டாங்க எனக்கு உன்னை பிடிச்சு போனதால இடத்தைக் காசு குடுத்தே வாங்கிக்குறேன்னு நான் சொன்னேன் உன் மாமாதான் கேக்கல இப்போ எவ்ளோ பிரச்சனை”.
“ஏற்கனவே அம்மா குத்திட்டே இருக்காங்க இப்போ இதுவும் சேர்ந்தா உன்னால அங்க இருக்க முடியுமா அந்த இடம் என் அக்காவுக்கு வேணும் பிரச்சனை இல்லாம அக்காவுக்கு கிடைக்கணும் இதுல நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன் இப்போ உடனே என்னால காசை புரட்ட முடியாது என்ன செய்ய போறார் உன் மாமா”” என்றான்.
அணைத்து பக்கமிருந்தும் அவனுக்கு அழுத்தம் கூட வார்த்தைகளை விட்டான் அவன் அறியாமலே… அதும் அவன் செல்லம்மாவிடம்! அப்படியே உறைந்து நின்றுவிட்டாள் ‘எனக்கு உன்னை பிடிச்சதால இந்தக் கல்யாணம்’ என்ற வார்த்தைகளை அவள் மூளை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ‘இடத்திற்காக இந்த திருமணம்’ என்றதில் நிலையாக நின்றுவிட செல்லம்மா இறுகி நின்றாள்.
கோபத்தைக் காட்டியவன் அலைபேசியை வைத்துவிடக் கேட்டவள் உலகம் அந்த நொடி அப்படியே நின்றுபோனது. செல்வம் எங்கெல்லாமோ அலைந்தார் அக்காவைச் சமாதானப்படுத்த அவர்கள் வீட்டுக்கு நடையாய் நடந்தார். சரளாவும் விநாயகமும் தினமும் இரு முறை அழைத்து சண்டை போட்டு சாபம் விட்டு என்று நரகமாகக் கழிந்தது நாட்கள்.
செல்லம்மா யோசித்தாள் சாப்பாட்டை மறந்து தூக்கத்தை மறந்து யோசித்தாள், என்ன வழி என்ன வழி ஒரு வாரத்திற்குப் பிறகு அவளுக்கு ஒரு தெளிவு வந்தது மாமனிடம் விசாரித்தாள் “அந்த நிலம் எவ்ளோ போவும் மாமா” என்று.
“நாலு ஏக்கர் டா விவசாய நிலம் ஆனா என்ன ரொம்ப உள்ளுக்கு கிடக்கு அந்தப் பக்கம் எப்படியும் முப்பத்தி மூணுல இருந்து முப்பத்தி அஞ்சு போகும் டா ஒரு ஏக்கருக்கு” என்றார்.
ஆக மொத்தம் ஒரு கோடி நாற்பது லட்சம்!! ஒரு கோடி மதிப்பிலான இடத்தைத் தூக்கிக் கொடுத்திருக்கிறார்கள் தனக்காக…. மாமனைப் பார்த்தாள் விழிகள் நிறைந்தது தன்னை எப்படியும் நன்றாக வாழவைத்துவிடவேண்டும் என்று தனக்கானதையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் எந்தச் சுயநலனும் இல்லாமல்.
“தாயி இங்க பாரு அழுகாத ஏதாவது செய்றேன் உன்னை உன் புருஷன் கூட சேர்த்து வெச்சுடுவேன் சாமி நீ கவலைப்படாத” என்றதும் ஒருநொடி அவள் உடல் விறைத்தது விழிகளைத் துடைத்துக்கொண்டவள் “நாமப் பெரியம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம் மாமா என்கூட வாங்க” என்றவள் “வீடு யார் பேர்ல இருக்கு” என்றாள்.
“என் பேர்லதான் தாயி ஏண்டா” என்றார்.
“அதை நான் எடுத்துக்கவா” என்றவள் குரல் நடுங்கியது, அவள் தலையைக் கோதியவாறு “உனக்கு இல்லாமலா வெச்சுக்கோ சாமி” என்க அவர் கைகளில் தன் முகத்தைப் புதைத்தவள் பெரும் குரலெடுத்துக் கதறி அழுதாள்.
“தாயி செல்லம்மா என்னடா” என்று பதறி அவர் கெஞ்சியபோதும் அவளிடம் மாற்றமில்லை தன்னையே தேற்றிக்கொண்டவள் வீட்டை விற்றால் எவ்வளவு கிட்டும் என்பதையும் தெரிந்துகொண்டு பெரியம்மா வீடு சென்றாள். அங்கு அவர் மிக மிதப்பாக இவர்களைப் பார்த்து நின்றார்.
அவர் அணிந்திருந்த நகைகளின் மீது செல்லம்மாவின் பார்வை அழுத்தமாகப் பதிய அவள் மனதில் ஒரு புதிய வெளிச்சம் பிறந்தது, அதே மிதப்போடே பெரியம்மாவைப் பார்த்தவள் “அந்த இடம் இவ்ளோ விலை போவும் இதுல உங்க பங்கு நாப்பத்தியஞ்சு லட்சம் அதை நாங்க கொடுக்குறோம் அதுக்கு பதிலா நீங்க இனிமே உங்களுக்கும் அந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு பத்திரத்துல கையெழுத்து போட்டு சாட்சி கையெழுத்தோடு குடுக்கணும், நீங்களேதான் எல்லாம் செய்யணும் முறையா பதிஞ்சு என் கைல குடுக்கணும் என்னைக்கு குடுக்குறீங்களோ அன்னைக்கு உங்களுக்குக் காசு தரேன்” என்றுவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை எப்படி இவளிடம் இவ்வளவு பணம் இருக்கும் என்று யோசனையாக நின்றனர் விசாலத்தின் கணவனும் மகனும் எறக்குடி சென்று அங்கு விவசாய நிலம் எவ்வளவு போகிறது என்பதை விசாரித்து வந்தனர்.
வீட்டிற்கு வந்த செல்லம்மாவிடம் தாயும் மாமனும் “எப்படி இவ்ளோ காசு கொடுக்குறது” என்று கேட்டனர்.
“என்ன பேசுற புள்ள நீ அது அவங்க போட்டது அதை அவங்க கிட்ட கேக்காம எப்படி விக்கிறது” என்றார் மரிக்கொழுந்து, அன்னையைத் தீர்க்கமாகப் பார்த்தவள் “உனக்கு புரியுதாமா கோடிக்கணக்குல விலை போற இடத்தை இந்த மஞ்ச கயிருக்காக தூக்கி குடுத்துருக்கீங்க மொத்தக் காசையும் கொஞ்சக் கொஞ்சமா நானே குடுக்குறேன்னுதானே உங்க மாப்ள சொன்னார் நீங்கதான் வேண்டாம்னு சொல்லிடீங்க, சரி போகட்டும் இப்போ உன் பங்கு மாமா பங்கு எனக்கான சீதனமா குடுத்ததாவே இருக்கட்டும்”.
“நாம குடுத்த வாக்கை காப்பாத்திட்டோம்னு ஒரு சின்ன நிம்மதியாவது எனக்கு வேணும்” என்றவள் மாமனைப் பார்த்து “இவ்ளோ ஏமாளியா இருக்காதீங்க மாமா நான்கூட ஒருவேளை உங்களை ஏமாத்தீட்டு தெருல நிறுத்திட்டு போய்ட்டேனா? வீட்டையும் எனக்கு குடுக்குறேன்னு சொல்ரீங்க நீங்க எங்க தங்குவீங்க தெருவுலயா? நான் உங்களுக்கு எவ்ளோ பெரிய பாரமா போய்ட்டேன்” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுத்தவளை இருவரும் வாரி அணைத்துக்கொண்டனர்.
“என்ன தாயி என்னாச்சு ஏன் இபப்டிலாம் பேசுற நீ எங்களுக்கு பாரமா ஏண்டா” என்றார் செல்வம்.
“பெத்த வயிறு கலங்குதுடி ஆத்தா மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க ஏதா இருந்தாலும் சொல்லிடு அம்மா இருக்கேன் உன் மாமன் இருக்கான் மனசுக்குள்ள வெச்சு மறுகாத புள்ள எனக்குப் பயமா இருக்குடி” என்று அழுதார் மரிக்கொழுந்து.
என்னவோ வாழ்வே வெறுத்துவிட்டது அவளுக்கு. உள்ளுக்குள் என்னவோ மாற்றங்கள் சோர்வு, மனதில் வேண்டாத சிந்தனைகள், கோபம், கழிவிரக்கம் என்று உள்ளுக்குள் உடைந்துகொண்டிருந்தாள். அவளின் உள்ளே ஒரு ஜீவன் துடிப்பதை அவள் அறிந்திருக்கவில்லை இந்தக் கலவரத்தில் மரிக்கொழுந்தும் கவனிக்கவில்லை.
மறுநாளே விசாலம் அழைத்து வேலைகள் நடப்பதாகவும் மறுநாள் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு இவர்களையும் வரச் சொன்னார். அதோடு “நான் எழுதிக் கொடுத்த அப்புறம் நீ ஏமாத்திட்டா” என்றார் சந்தேகமாக.
அவளைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை ஒருமாதம் முன்பு பார்த்த பெண்ணா இவள் என்பதாக இருந்தாள் “அவனும் அங்க அப்படிதான் இருக்கான் உன் மாமியாரைப் பத்தி தெரியுமே அவனுக்கு நிம்மதியே குடுக்க மாற்றாங்க அவனும் தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் காசு கேட்டிருக்கான் , நானும் அதுக்காக அலையிறேன் கடன் வாங்கி குடுத்துடலாம் ஆனா அதை அடைக்க இன்னும் எத்தனை வருஷம் அவன் அங்க கஷ்டப்படணும். நீ இங்க அவன் அங்கன்னு உங்க வாழ்க்கையே போயிடும் அது இன்னும் அவனுக்குக் கவலை அவன் குரலிலேயே அவ்ளோ வருத்தம் ரொம்ப மனசொடிஞ்சு இருக்கான்”.
“நீ அவனைத் தப்பா நினைக்காத செல்லம்மா நீதான் அவனை புரிஞ்சுக்கணும், உன்னை விரும்பித்தான் கட்டிட்டு வந்திருக்கான் இந்தத் தடவையோடே இங்கேயே வந்திடணும்னு அவ்ளோ ஆசையா சொல்லிட்டு இருந்தான். இப்போ இன்னும் எவ்ளோ வருஷம் இந்த தனிமைன்னு அவனுக்குள்ள ஒரு கோபம் அதைத்தான் உன்கிட்டக் காட்டியிருப்பான். உன்கிட்டக் கோபமா பேசிட்டு அதைச் சொல்லி பொலம்பிட்டு இருக்கான் நீ கொஞ்சம் பொறுமையா பேசுமா” என்றான்.
அவள் ஒன்றும் கூறவில்லை அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள், யாரும் அவளை வா என்று அழைக்கவில்லை. சரளா அத்தனை பேச்சு செல்வத்தையும் சேர்த்து அவள் அமைதியாக மேலே அறைக்குச் சென்று நகையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு வந்தாள் உடனேயே கிளம்பியும் விட்டாள், ஆட்டோவில்தான் கிளம்பினார்.
சரளா நிறுத்தாமல் தேள் போல கொட்டிக்கொண்டே இருந்தார், தெரிந்தவர் மூலமாக நகைகளை விற்று பணத்தைப் பெற்றுக்கொண்டனர் மறுநாள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அந்த இடத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லையென்று விசாலமும் அவர் கணவரும் கையெழுத்து இடச் சாட்சியாக இருவரும் கையொப்பம் இட்டு முடித்தனர்.
பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தவள் “அன்னைக்கு அவங்க முன்னாடி நீங்கதானே பிரச்சனையை ஆரம்பிசீங்க நீங்களே நேர்ல வந்து இந்தப் பத்திரத்தைக் கொடுத்து சொல்லிட்டு போங்க” என்றாள்.
“சரி” என்று விசாலமும் அவள் கணவரும் அவளின் புகுந்த வீட்டிற்கு வந்தனர். செல்வத்திடம் சொல்லி பத்மினியையும் அவள் கணவனையும் கூட வரச்சொல்லியிருந்தாள் அனைவரும் கூடியிருந்தனர்.
விநாயகம் “எதுக்கு இப்போ எல்லாரையும் வர வெச்சிருக்கீங்க” என்றார் எரிச்சலான குரலில் .செல்லம்மாவால் நிற்கவே முடியவில்லை ஒரு ஓரமாகச் சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
விசாலமே “எங்களுக்கும் இந்தச் சொத்துக்கும் சம்பந்தம் இல்ல நாங்க எழுதிப் பதிவு பண்ணிட்டோம் இனிமே அதுல நாங்க பங்கு கேக்க முடியாது எங்க பங்கு காசை அவங்க கொடுத்துட்டாங்க” என்றவர் தன் கையிலிருந்த பத்திரத்தை பத்மினியிடம் கொடுத்தார், அவள் நம்ப முடியாமல் பார்க்க பத்மினியின் கணவன் தங்கவேலும் விநாயகமும் முதலில் அதை வாங்கி படித்துப்பார்த்தனர்.
பிறகு சகோதரர்கள் வெங்கட் ரமேஷ் சுரேஷ் விக்னேஷ் அனைவரும் பார்த்தனர் சரளாவுக்கு மிதப்பு கூடியது அந்தப் பயம் இருக்கட்டும் என்று. பத்மினி வாயெல்லாம் பல்லாக அதை வாங்கி வைத்துக்கொண்டாள், இப்பொழுது என்ன பேச என்று அனைவரும் தடுமாறி நிற்க விசாலமும் கணவரும் கிளம்பிச் சென்றனர்.